
amuttu@gmail.com - தமிழ்மகன்
இதுவரை நேரில் பார்த்ததில்லை; பாசத்தோடு கைகுலுக்கிப் பேசியதில்லை; சென்னைக்கும் கனடாவுக்கும் 13,368 கிலோமீட்டர் தூரம் காட்டுகிறது கூகுள் மேப். ஆனாலும் என்ன... அ.முத்துலிங்கம் எழுத்துகளுடன் உருண்டு புரண்டவன் நான். ஒரு மனிதரை, ஒரு காட்சியை அவர் எப்படி எழுத்துகளாகச் சித்திரிக்கிறார் என்பதில் எனக்கிருக்கும் கவனமும் ஆர்வமும் அலாதியானவை.


எழுத்துகளாக மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனவர் அ.மு. அவருடைய ‘ரி’ என்ற கதையைத்தான் முதலில் படித்தேன். ‘ஆரோகணத் தில் ரி இருந்தது. அவரோகணத்தில் ரி இல்லை’ என அந்தக் கதை முடியும். இசையையும் ஆசையாய் வளர்த்த எருதையும் இணைத்து அந்தக் கதையை உருவாக்கியிருப்பார். அப்போது என்னை ஆள ஆரம்பித்தது அவரது எழுத்து.
எனக்கு முத்துலிங்கத்தைத் தொடர்புகொள்ள, @gmail.com என்ற யாவருக்கும் பொதுவான முகவரி இணைப்புக்கு முன்பாகப் பதிய ஆறெழுத்து மந்திரம் ஒன்று கிடைத்தது. amuttu எனப் பதிந்தால் போதும். நான் அவருக்குத் தெரிவிக்க வேண்டியவை ஒரு நொடியில் அவருக்குச் சென்று சேர்ந்துவிடும். அவரும் உடனே என்னைத் தொடர்புகொள்வார். இமெயில் என்கிற இந்தச் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதன் முழு அர்த்தமும் எனக்கு விளங்கிப்போனது. நான்
கி.பி. 2000-ல் மெயில் பயன்படுத்த ஆரம்பித்தேன். என்னுடைய மெயில் முகவரியில் என் பெயரோடு 2000-த்தை நினைவுக்காகச் சேர்த்துவைத்தேன். அப்போது hot mail, yahoo mail இரண்டும் பிரபலம். அ.மு. ஜிமெயிலில் இருக்கிறார் என நானும் ஜிமெயிலுக்கு மாறினேன். ‘வியத்தலும் இலமே’ என்ற புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்து, அதிலுள்ள வியப்பளிக்கும் வரிகளை மார்க்கர் கொண்டு அடையாளப்படுத்திக்கொண்டே வந்தேன். சரிபாதி புத்தகம் அளவுக்கு அந்த வரிகள் சேர்ந்துவிட்டன. வியந்து வியந்து போற்றிய அந்த நூலுக்கு, ‘வியத்தலுக்கு ஒன்றுமில்லை’ என ஒரு தலைப்பு வைத்திருந்தார். பல பிரபலமான எழுத்தாளர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்கள் அவை. ஒருமுறை அந்த நூல் பற்றி நான் எழுதியதன் சில வரிகளை இங்கே நினைவூட்டலாம் எனக் கருதுகிறேன்.
இவர் நேர்காணல் செய்திருக்கும் பலர், நம்மில் பலருக்கு அவர்களின் ஒரு சில படைப்புகள் மூலமாகவோ அல்லது பெயரளவிலோதான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால், முத்துலிங்கமோ அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து அவர்களின் இலக்கியக் கொள்கைகள், கோட்பாடுகள், அவர்களுடைய வாசிப்பு ரசனை, எழுத்துப் பாணி, வாழ்வியல் நம்பிக்கைகள் என்று மிக விரிவாகவும் அதேநேரம் ஆத்மார்த்தமாகவும் உரையாடலை நிகழ்த்தியிருப்பார்.
‘‘எத்தனை தடவை வேண்டுமானாலும் திருத்தி எழுதத் தயங்க மாட்டேன். நீங்கள் பார்ப்பது செதுக்கப்பட்ட சிலையின் இறுதி வடிவம்தான்’’ என்கிறார் டேவிட் செடாரீஸ். இவர் துப்புரவுப் பணியாளராக வேலை செய்தவர். எதற்காகப் பிரபலமான பிறகும்கூட வேலை செய்தீர்கள் என்ற அ.மு-வின் கேள்விக்கு, ‘‘நான் இரவில்தான் எழுதுகிறேன். பகலில் செய்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அதனால் வேலைக்குப் போனேன்’’ என்கிறார். ‘‘ஒருமுறை எழுதிவிட்டால் எழுதியதுதான், திருத்தி எழுதுகிற பேச்சுக்கே இடமில்லை’’ என்கிறார் டெவிட் பெஸ்மாஸ்கிஸ். ஒரு எழுத்தாளரை இவ்வளவு நேசிக்க, மதிக்க முடியுமா என்று யோசிக்க வைக்கிற ஒருவர் எழுத்தாளர் டேவிட் செடாரிஸ். இவர் போற்றுவது டோபையாஸ் வுல்ஃப் அவர்களை. “நான் இன்னும் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பதற்குக் காரணமே, நான் இறந்த பிறகு டோபையாஸ் எழுதும் கதையைப் படிக்க முடியாமல் போய்விடுமே என்பதால்தான்’’ என்கிறார் செடாரிஸ்.
இந்த நேர்காணல்களில் (சற்றே) விலகி ‘ஓடுவது’ மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை ஜெனிவீவ் கெல்லியுடனான உரையாடல். அந்தப் பெண்ணே ஓர் ஓடும் இலக்கியமாக இவருக்குத் தெரிந்திருக்கலாம். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர். முத்துலிங்கத்தின் வீட்டுக்கு விருந்தினராக வந்து தங்குகிறார். ‘அவளுடைய ஆங்கில உச்சரிப்பு தேனில் கலந்ததுபோல மிருதுவாக இருந்தது’ என்று வர்ணிக்கிறார் முத்துலிங்கம். கனடாவை மூன்று நாள்களில் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். உலகின் மூன்று மகா சமுத்திரத்தால் சூழப்பட்ட கனடாவை மூன்று நாள்களில் சுற்றிப் பார்க்க நினைப்பது அவளுடைய அறியாமையா, பேராசையா என்று விளங்கவில்லை என்கிறார். விடைபெறும்போது ஏர்போர்ட்டில் முத்துலிங்கத்துக்கு கெல்லி ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். ஏதோ முத்தம் கொடுப்பதற்கு நாளை முதல் தடை விதித்துவிட்டதுபோல் அந்த முத்தம் மிக நீண்டதாக இருந்தது என்கிறார் அ.மு. எழுத்தைத் தாண்டியும் இப்படிப் பலவிதங்களில் நம்மைப் பொறாமைப்படுத்துகிறார் அ.மு.

ஒரு நல்ல எழுத்தாளர் எதையும் படிக்கவைக்கும்படி எழுத முடியும். அவருடைய கனடா தேச அனுபவங்களைச் சொல்லும் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ கிட்டத்தட்ட அவருடைய டைரிக் குறிப்புகள்போல. அவர் கடனட்டை வாங்கியது, சூப்பர் மார்க்கெட் போனது எல்லாம் இருக்கும். நாமும்தானே அதையெல்லாம் செய்கிறோம். அவற்றை ஏன் இப்படி எழுத முடியவில்லை என்று நம்மைக் கேட்கத் தூண்டுபவைதான் அவரது எழுத்துச் சுவாரஸ்யம்; சூட்சுமம். ஒரு நடன அரங்கத்துக்குச் செல்வார். அங்கு கண்டதை இப்படி விவரிக்கிறார்... அந்த நடன மங்கை அரங்கின் முன்னே வந்ததும் கலை பின்னே போய்விட்டது. உடலிலிருந்து கையையும் காலையும் கழற்றி எறிந்துவிடும் உத்தேசத்துடன் குதிக்க ஆரம்பித்தார்.
‘உண்மை கலந்த நாட்குறிப்பு...’ அது அவருடைய சுயசரிதக் குறிப்புகள். உலகமெல்லாம் பயணித்த ஒரு தமிழ் எழுத்தாளரின் அனுபவங்களைப் படிக்க நமக்குக் கிடைத்த வாய்ப்பு. வரிக்கு வரி சிரிக்கலாம்; ரசிக்கலாம்; வியக்கலாம் என ஒரு நடை. ‘வேகவைத்த கோழி முட்டையின் வெள்ளைக்கருபோல அவளுடைய கன்னங்கள் இருந்தன’ என்பார். நான் ஒரு கணம், நான் படித்த கன்ன வர்ணனைகளை எல்லாம் யோசித்துப் பார்ப்பேன். ஆப்பிள் கன்னம், சந்தனக் கிண்ணம், பட்டுக் கன்னம் என ஓடி அடங்கும். எழுதுவதற்கு முன் வரிசையாக யார் யாரை எப்படி வர்ணிப்பது என ஒரு நோட்டுப் புத்தகம் முழுவதும் பட்டியல் போட்டுவிட்டு எழுதுவாரா?
அவருடைய கதைகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடும், நிறைய தகவல்கள் இருக்கும், புதிய விவரணைகள், புதிய சொல்லாடல்கள், புதிய நகரங்கள் எல்லாம் இருக்கும். புதிய மனிதர்களும் இருப்பார்கள். இதுவரை தமிழில் படித்தே இல்லாத உவமைகள் அவருடைய கதைகளில் இருக்கும். பெண்களைப் புத்தம் புதிதாக வர்ணிப்பார். உலகில் வேறு யாரும் அப்படி வர்ணித்திருப்பார்களா என யோசிக்க வேண்டியிருக்கும். நேர்காணல்கள், கட்டுரைகள் எல்லாவற்றிலும் கண்கள் பிரகாசிக்க வைக்கிற பல இடங்கள் இருக்கும். மெல்லிய புன்முறுவலோடு இறுதியில் இருக்கும் முற்றுப்புள்ளி வரை கடந்து செல்லவைப்பார். சில உணர்ச்சிவசப்பட்ட மனிதர்கள் படிக்க ஆரம்பித்தால், வெடித்துச் சிரிக்கவும் செய்வார்கள். யாரையும் துன்புறுத்தாத எழுத்து அவருடையது. சிரிக்கவைப்பதும் சிந்திக்க வைப்பதும்தான் அவருடைய பணி.
‘புதிதாய் பிறந்த மான்குட்டி தரையில் கால் வைக்க முடியாமல் தவிப்பதுபோல, அவள் ஓரிடத்தில் நிற்காமல் தவித்தாள்’ என்பது போன்ற புதிய உவமானங்கள் என்னை அவருக்கு நெருக்கமாக்கின. முதன்முதலாக அவருக்கு எழுதிய கடிதத்தில் “நீங்கள் பழந்தமிழ் ஆர்வம்கொண்ட ஓர் ஆங்கிலேயரைப்போல சிந்திக்கிறீர்கள்’ என்று எழுதியிருந்தேன். ‘‘எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள்; எனக்கு சிரிப்புதான் வருகிறது’’ என்று பதில் அனுப்பியிருந்தார். அதன் பிறகு, அவருக்கு 200 முறையாவது மின்னஞ்சல் அனுப்பியிருப்பேன். பதிலோ 200-ஐத் தாண்டும்.
ஆரம்பத்தில் என்னுடைய எல்லா சிறுகதையையும் அவருக்கு மின்னஞ்சல் செய்து கருத்து கேட்பேன். அது மிகச் சுமாரான சிறுகதையாக இருந்தாலும் உடனே ஒரு பதில் வரும். அந்தக் கதையினுள் பாராட்ட வேண்டிய ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துவிடுவார். ‘கன்று’ என ஒரு கதை எழுதி அனுப்பியிருந்தேன். அதில், பிச்சை எடுக்கும் சிறுமி ஒருத்தி தன் கையில் இருக்கும் எவர்சில்வர் தட்டில் தெரியும் தனது முகத்தைப் பார்த்து பொட்டுவைத்துக்கொள்வதாக எழுதியிருந்ததை ‘அருமை’ எனக் குறிப்பிட்டிருந்தார். எழுதுவதில் மட்டுமல்ல, படிப்பதிலும் அவருடைய பாணி புதிதாக இருந்தது. விகடனுக்கு வந்த பிறகு அவருடனான நெருக்கம், அலுவலகரீதியாக இன்னும் பெருகியது. ஆனந்த விகடனில் வெளியான ‘கடவுள் தொடங்கிய இடம்’ தொடர்கதை, தடம் இதழுக்கான கட்டுரைகள் என அவரிடம் கேட்டுப் பெறுவது எனக்குப் பெருமிதமான பணிகள். அலுவலகத்தில் கரும்பு தின்னக் கூலி கொடுத்தார்கள். ஏனென்றால், கனடாவிலிருந்து தமிழகம் வந்து சேர்ந்ததும் அதைப் படிக்கும் முதல் வாசகன் பெரும்பாலும் நான்தான். வேறு என்ன கொடுப்பினை வேண்டும்?

நான் ‘ஆபரேஷன் நோவா’ எழுதியபோது ஒரு வாரம்கூட விடாமல் படித்து வந்தவர்களில் அவரும் ஒருவர். ஏறத்தாழ வாரம்தோறும் மெயிலில் ஒரு பாராட்டும் வந்துவிடும். ‘‘முழு நாவலையும் எழுதிக் கொடுத்துவிட்டீர்களா? அந்தந்த வாரம் எழுதித் தருகிறீர்களா?’’ இந்த ஒரு கேள்வியை மட்டும் பலமுறை கேட்டார். ‘‘வாரா வாரம்தான் எழுதித் தருகிறேன்’’ என்று பதில் அனுப்பினேன். ஏனோ அதை அவரால் நம்பவே முடியவில்லை.
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சம் அல்ல. உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைந்தால், எவ்வளவு நன்மைகள் நம் மொழிக்குக் கிடைக்கும் என எல்லோருக்கும் எழுதினார். விக்கிபீடியாவில் ஒரு லட்சம் தமிழ்ப் பக்கங்களை உருவாக்கிய மயூரநாதன் அவர்களைப் பற்றி, சங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த வைதேகி ஹெர்பட் பற்றி விகடனில் அறிமுகம் வெளிவரக் காரணமாக இருந்தார்.
நல்ல நூல்களை, நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு எழுதுவதில் அவர் ஒரு தேர்ந்த பத்திரிகையாளரும்கூட. எழுதக் கேட்கும்போதெல்லாம் எத்தனை சொற்கள் இருக்க வேண்டும் என்பதையும் மறக்காமல் கேட்டுக்கொள்வார். அந்தக் கட்டுப்பாட்டை மீற மாட்டார். ஒரு பக்கத்துக்குள் வேண்டும் என்றாலும் பத்து பக்கங்களுக்கு வேண்டும் என்றாலும் அதே சுவாரஸ்யத்தை அவரால் கொண்டுவர முடியும்.
பிசிராந்தையார், கோப்பெரும் சோழன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளாத இலக்கிய ரசிகர்கள்; நண்பர்கள். ஒரு மெயிலில் அதை நினைவுபடுத்தினேன். அவரிடமிருந்து அடுத்த மெயில் ‘வணக்கம் கோப்பெரும் சோழன்’ என வந்தது. எங்கள் இலக்கிய நட்பு கோப்பெரும் சோழன் - பிசிராந்தையார் அளவுக்குப் பரிதாபகரமானது அல்ல. நாங்கள் போனில் பேசிக்கொள்ள முடிகிறது. என்னுடைய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் அவர் விடியோவில் தோன்றிப் பேசினார். கனடாவுக்குச் சென்று அவரைக் காண்பேன்.
சாமுவேல் ஜான்சனை நேரில் பார்த்துவிட அவருடைய சீடனான பாஸ்வெல் துடித்த கதையை என் அப்பா அடிக்கடிச் சொல்வார். ஜான்சன் அடிக்கடி வருகிற புத்தகக் கடை அது. அந்தப் புத்தகக் கடைக்காரரின் தயவில்தான் ஜான்சனைச் சந்திக்க பாஸ்வெல் திட்டமிட்டிருப்பார். தூரத்தில் ஜான்சன் வருவார். புத்தகக் கடைக்காரர் சொல்வார். `It’s comes!’ ஆங்கில அகராதி படைத்த மேதையைப் பிழையாக விளித்ததில் இருக்கிறது ஒரு பரவசம். அது எனக்கும் நிகழும்!