மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

சுகானா

“வருடம் முழுக்க மழை பொய்த்து வெடித்த மண்ணிலிருந்து நேற்றிரவு ஆசுவாசப்படுத்திய உயிர்நீரில் துளிர்விடும் செடி போன்றது வாசிப்பு. மனித மேன்மைகளை, அறத்தை, தன்னம்பிக்கையை வளர்த்து வக்கிரங்களை, அநீதிகளை, பொய்மைகளைத் தட்டிக்கேட்கும் திராணி வாசிப்புக்கு மட்டுமே இருக்கிறது. சிக்கலான,சவாலான மொழிபெயர்ப்புக் கலை என் பதின்வயதுகளிலேயே என்னை சுவீகரித்துக்கொண்டதற்கு நான் வளர்ந்த இலக்கியக் குடும்பம் காரணமாகயிருக்கலாம். மொழிபெயர்ப்பின் மூலம் என்னுள் பொதிந்திருக்கும் பால்யகால, பசுமை மாறாத கேரள மலைகளையும் அருவிகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறேன்...”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்



திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகானா, சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் கட்டடவியல் பொறியாளராகப் பணிபுரிகிறார். பதின்மூன்று வயதில் ‘எதிர்பாராமல் பெய்த மழை’ எனும் முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து ‘சிச்சுப்புறா’ எனும் குழந்தைகளுக்கான குறுநாவலும் ‘இரண்டு புத்தகங்கள்’ எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவர், மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயின் மகள்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

துரை.நந்தகுமார்

“எழுத்திலிருந்து என்னைப் பிரித்தால் ஏதுமற்றவனாகி நிற்பேன் நான். என் அடையாளத்தைச் சிறு கீறலாகவேணும் இப்புவிப்பந்தில் பொறித்துவிட்டுப் போக வேண்டும் என்ற என் பேரவாவின் விளைவாகவே இயங்குகிறேன். எழுதப்படாதவை என்று ஏதுமிருக்கவில்லை. என் மூத்தோனும்,  பாட்டனும், தாத்தனும் எல்லா அறங்களையும் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றைக் காலத்தின் முதுகேறி வாசித்து, என் தன்மை கலந்து சமகால மொழிக்கு மாற்றும் பெயர்ப்பாளன் நான். என் முடிவுக்குள்ளாக நான் முடிக்க வேண்டியவை ஏராளம். அதை நோக்கி அதிவேக ஓட்டமெடுக்கும் பிரயத்தனத்தில் தொடங்கிப் பிரயத்தனத்திலேயே நிறைவுறுகின்றன நாள்கள்!”


திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டையைப் பூர்வீகமாகக்கொண்ட துரை.நந்தகுமார், ‘நிலவொளியில் சில பனித்துளிகள்’, ‘இதைவிட வேறில்லை’ உள்பட  நான்கு கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ‘எனை நீ மறவாதே’ என்ற நாவலும் வெளிவந்துள்ளது. இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவர உள்ளன. இவர், ஒரு பிளைவுட் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கலைச்செல்வி

“வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திகொண்டாலும் எனக்கென ஒரு தேடலை நான் உணர்ந்துகொண்டிருந்தேன். இளமையிலிருந்தே வாசிப்பிற்குத் தோதான வாழ்க்கையமைப்பு அமைந்தது. தேடலை வாசிப்பிற்குள் நுழைத்து, எழுத்தைப் பதிலாக்கினேன். பொதுவெளியில் என்னை இம்சிக்கும் அகம் சார்ந்த சிக்கல்களையும் புறவெளி நிகழ்வுகளையும் எழுத விழைவதில் தேடலின் அழுத்தம் குறைகிறது. பால் சார்ந்த எழுத்துகளில் ஒடுக்குவதும், பால் சார்ந்து என் எழுத்துகளை அணுகுவதும் சற்று நெருடலாகத் தோன்றுகிறது.”


திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி, பொதுப்பணித்துறையில் நேர்முக உதவியாளராகப் பணிபுரிகிறார். ‘வலி’, ‘இரவு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், ‘அற்றைத் திங்கள்’, ‘புனிதம்’, ‘சக்கை’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

பூர்ணா

“வாசிப்பின் நீட்சிதான் எழுத்து. அக, புறத் திணைகளில் உள்ள முரண்களும், சமூகத்தில் நான் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளுமே என் சிந்தனையைக் கூர்மையாக்கின. விளிம்பு நிலை மக்களின் ஓலத்திலிருந்தும், நிலம் சார்ந்த சிந்தனையிலிருந்துமே என் எழுத்து கர்ப்பம் தரிக்கிறது. வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் விட்டுச்செல்ல வேண்டும். அது மக்களுக்கானதாக இருக்க விழைகிறேன்.”


திண்டுக்கல் மாவட்டம் குடவதி நகரைச் சேர்ந்த பூர்ணா, திண்டுக்கல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகிறார். ‘கண்ணீர் வாசனை’, ‘முளைகட்டிய சொற்கள்’, ‘இரவென்னும் நல்லாள்’, ‘பூக்களின் காயங்கள்’, ‘ஆகாயத் தோட்டிகள்’ ,  ‘வைக்கோல் கன்று பசுவானது’ ஆகிய கவிதை நூல்களை எழுதியிருக்கிறார். திண்டுக்கல் பற்றிய ஆய்வு நூல்கள் இரண்டும் வெளிவந்துள்ளன. ‘நிலம் அற்ற தானியம்’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. பூர்ணாவின் இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ்.