Published:Updated:

வெள்ளி நிலம் - 20

வெள்ளி நிலம் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 20

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க வரும் காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்ந்து விசாரணைக்காக பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, புலிக்குகை மடாலயத்துக்குச் செல்கிறார்கள். பல புத்தர் சிலைகளைப் பார்க்கிறார்கள். தலைமை லாமாவைச் சந்தித்து, அவரிடம் ஒரு படத்தைக்காட்டி விசாரிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து வெளியேறி, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். மிலரேபாவின் கதையை நரேந்திர பிஸ்வாஸ் சொல்கிறார். அன்றிரவு ராணுவமுகாமில் தங்குகிறார்கள். பனிச்சிகரங்களில் மறைந்திருக்கும் குகைகளை ட்ரோன்களின்மூலம் கண்டுபிடித்து ஒரு குகைக்குள் செல்கிறார்கள். அங்கு டோர்ஜே லெக்பாவின் சிற்பத்தைப் பார்க்கிறார்கள்.

குகைக்குள் இருந்து வந்த காற்று கெட்ட வாடை கொண்டிருந்தது. ‘‘நெடுநாட்களாகத் திறக்காமலிருந்த குகை. காற்றில் கார்பன் டையாக்ஸைடும் அம்மோனியாவும் கலந்திருக்கிறது” என்றார் டாக்டர். “இப்போது உள்ளே செல்வது ஆபத்து. இருங்கள்..” 

அவர், தன் தோள்பையிலிருந்து ஒரு சிறிய மெழுகுவத்தியை எடுத்துப் பற்றவைத்தார். அதை ஊன்றி நடப்பதற்குரிய அலுமினியக் கழியில் கட்டி, உள்ளே நீட்டினார். அது ஊதப்பட்டதுபோல அணைந்தது. “உள்ளே சென்றால் மூச்சுவிடமுடியாமல் இறப்போம்” என்றார் டாக்டர்.

“என்ன செய்வது?” என்றான் பாண்டியன்.

“இது, கிணறு என்றால் ஒன்றும் செய்யமுடியாது. கார்பன் டை ஆக்ஸைடும் அம்மோனியாவும் எடை மிக்கவை. தண்ணீரைப்போலவே அவையும் தேங்கி நிற்கும் தன்மைகொண்டவை. ஆனால் இது குகை. காற்று வீசினால், இந்த வாயுக்கள் கரைந்துவிடும்.”

வெள்ளி நிலம் - 20

‘‘என்ன செய்வது?” என்று கேட்ட பாண்டியன் சுற்றுமுற்றும் பார்த்தான். டாக்டர், “காற்று திசைமாறி வீசும். அதுவரை காத்திருப்போம். காற்று இக்குகைக்குள் சென்றால் போதும்” என்றார்.

‘‘ஏன் காத்திருக்கிறார்கள்? உள்ளே சென்றால் நிறைய எலும்புகள் கிடைக்குமே?” என்றது நாக்போ. “சும்மா இரு” என்றான் நோர்பா.

காற்று திசைமாறத்தொடங்கியது. “திசைமாறுகிறது” என்றான் பாண்டியன்.

அவர்களுக்குப் பின்னாலிருந்து காற்று வீசியது. அது, குகைக்குள் சென்றதும் உள்ளே விசில் போல ஓசை கேட்டது.

குகைக்குள் இருந்த வாயுக்கள் கரைந்து பரவி வாடை எழுந்தது. ‘‘இன்னும் சற்று நேரம் பொறுப்போம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

அவர்கள் மீண்டும் மெழுகுவத்தியை நீட்டியபோது, அது அணையாமல் எரிந்தது. “செல்வோம்” என்று டாக்டர் சொன்னார். “ஆனால், நம் முன்னால் எப்போதும் இந்தச் சுடர் இருக்க வேண்டும். இது அணைந்தால், நாம் உடனே பின்னால் வந்துவிடவேண்டும்.”

அவர்கள், நெற்றியில் இருந்த நோக்கு விளக்கின் ஒளியில் கவனமாக நடந்தனர். “இந்த வாயுக்கள் எப்படி இங்கே வந்தன?” என்று பாண்டியன் கேட்டான்.

‘‘இது, சுண்ணாம்புக்கல் குகை. கால்சிய கார்பனைட் வேதிப்பொருள். அதிலிருக்கும் கார்பன் ஆக்ஸிஜனுடன் வேதிவினைபுரிந்து, கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது. உலகிலுள்ள மிகப் பெரிய குகைகள் பெரும்பாலும் சுண்ணாம்புப் பாறைகளினால் ஆனவை. அவற்றுக்குள் செல்வது மிக ஆபத்து. உள்ளே கார்பன் டை ஆக்ஸைட் குளம்போல தேங்கிக்கிடக்கும். அதில் மூழ்கினால் தப்பவே முடியாது.”

‘‘ஆம் நீரில் என்றால் நீந்தலாம்... வாயுவில் எப்படி நீந்துவது?” என்றான் பாண்டியன்.

‘‘இது சிரிக்கும்படியான நகைச்சுவை இல்லை” என்றார் டாக்டர்.

‘‘ஆனால், அம்மோனியா எப்படி வந்தது?” என்றான் பாண்டியன் சமாளித்துக்கொண்டு.

“அம்மோனியா உயிர்ப் பொருள்களிலிருந்து வருவது. புரோட்டீன் சிதைந்தால், அம்மோனியா வரும். ஆனால், அதற்கு நெடுங்காலமாகும்” என்று டாக்டர் சொன்னார். “உயிர்ப் பொருள்கள் அனைத்துமே அடிப்படையில் புரோட்டீனால் ஆனவை. புரோட்டீனில் முக்கியமாக உள்ள ரசாயனம், நைட்ரஜன். உயிர்ப் பொருள்கள் மட்கினால், நைட்ரஜன் வெளியாகும். அது காற்றில் உள்ள ஹைட்ரஜனுடன் இணைந்து அம்மோனியா ஆகிறது.”

அவர்களின் விளக்கொளி, குகையின் உட்சுவரில் பட்டது. “ஆ!” என்றார் டாக்டர்.

‘‘என்ன?” என்று பாண்டியன் கேட்டான். உடனே அவனும் கண்டுகொண்டான். “ஆ... ஓர் ஓவியம்!” என்றான்.

அந்த ஓவியம், நிறங்கள் இல்லாமல் வெறும் கோடுகளாகத் தெரிந்தது. விளக்கை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திருப்பினால்தான் அதைப் பார்க்க முடிந்தது.

“ஆம், அது ஷென்ராப் மிவோச்சேயின் ஓவியம்தான். ஐயமே இல்லை.”

“நான் சிலை இருக்கும் என நினைத்தேன்” என்றான் பாண்டியன்.

“இல்லை. மானுட வரலாற்றில் சிலையைத் தெய்வமாக வழிபடுவது மிகப் பிற்காலத்தில்தான் வந்தது. ஆரம்பத்தில் சாதாரணமான கற்களையே தெய்வமாக நிறுவி வழிபட்டார்கள். மரங்களையும் வழிபட்டிருக்கிறார்கள். அதன்பின்னர், மனிதர்கள் தெய்வங்களாக வேடமிட்டு நின்றிருக்க, அவர்களை வழிபட்டனர். அதன்பின்னர், அந்த வடிவங்களை அப்படியே குகைகளின் சுவர்களில் வரைந்து வழிபட்டார்கள்.”

“அப்படியா?” என்று பாண்டியன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

“உங்கள் தமிழ்நாட்டில் மிகப் பழைய காலத்தில் குகைகளில் வரையப்பட்ட ஓவியங்களைத்தான் வழிபட்டார்கள். அதைப் பற்றிய நிறைய குறிப்புகள் சங்க காலப் பாடல்களில் உள்ளன” என்றார் டாக்டர்.

“ஆம், நான் சிலப்பதிகாரத் தில்கூட ஒரு காட்சியை வாசித்திருக்கிறேன். அதில் ஒரு பெண்ணை கொற்றவை வேடமிடச்செய்து வணங்குகிறார்கள். அவளுக்குப் புலித்தோலை அணிவிக்கிறார்கள். தலையில் பன்றியின் பல்லை பிறைநிலவுபோல சூட்டுகிறார்கள். அவளுக்குப் பலிகொடுத்துப் பூசை செய்கிறார்கள்.”

“ஆம், இன்றைக்கும்கூட கேரளத்தில் தெய்யம் என்னும் வழிபாடு உள்ளது. அதில், மனிதர்கள் தெய்வங்களாக வேடமிட்டுவருவார்கள். அவர்களைத் தெய்வமாக வழிபாடுசெய்வார்கள்” என்றார் டாக்டர்.
அவர்கள், அந்த ஓவியத்தின் அருகே சென்றார்கள். “ஆச்சர்யமான ஓவியம்” என்றான். பாண்டியன். அந்த ஓவியம், சுண்ணாம்புப் பாறைப் பரப்பில் குழியாகக் கோடுகளை அழுத்திக் கீறி வரையப்பட்டிருந்தது. ஓர் ஆள் அளவுக்கு இருந்தது அது.

“எனக்கு எதுவுமே தெரியவில்லை” என்றான் நோர்பா.

வெள்ளி நிலம் - 20

“இதோ, இது ஷென்ராப் மிவோச்சேயின் தலை. இது மூக்கு. இவை நீண்ட காதுகள்...” என்றார் டாக்டர்.

அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, “ஆ ! தெரிகிறது” என்று நோர்பா கூச்சலிட்டான்.

“ஆமாம், தெரிகிறது!” என்றது நாக்போ. “உனக்கு என்ன தெரிகிறது?” என்றான் நோர்பா எரிச்சலுடன்.

“நிறைய பாறைகள்…” என்று சொன்னது நாக்போ. பின்னர் தலையைத் தாழ்த்தி விலகி நின்று, “அதற்காக நீ என்னைக் கோபிக்கவேண்டியதில்லை” என்றது.

‘‘இதை எப்படி வரைந்தார்கள் தெரியுமா?” என்று டாக்டர் கேட்டார்.

நோர்பா, ‘இல்லை’ எனத் தலையசைத்தான்.

“இது வரையப்பட்ட காலகட்டத்தில் எந்த உலோகமும் மனிதர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே, கூர்மையான கல்லால் பாறையை அறைந்து அறைந்து பள்ளமான கோடுகளை உருவாக்கி, இதை வரைந்திருக்கிறார்கள். இதைப்போன்ற பல ஓவியங்கள், உலகம் எங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அனைத்துமே பெருங்கற்கால காலகட்டத்தைச் சேர்ந்தவை” என்றார் டாக்டர்.

“பெருங்கற்காலமா? அப்படியென்றால் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால்!” என்றான் பாண்டியன்.

“50,000ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கற்காலம் தொடங்குகிறது. 30,000 ஆண்டுகளுக்கு முன்பு அது முடிகிறது. அதன்பின், மனிதர்கள் உலோகங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர்களின் வாழ்க்கையே மாறிவிட்டது” என்று டாக்டர் சொன்னார்.

“அப்போதே, ஷென்ராப் மிவோச்சே தெய்வத்தை வழிபட்டார்களா?” என்று பாண்டியன் வியப்புடன் கேட்டான்.

“இந்தப் பூமியின் மானுடர் வணங்கும் முக்கியமான எல்லா தெய்வங்களும் மனிதன் உருவானபோதே தோன்றியவைதாம். அவை, காலந்தோறும் உருமாறிக்கொண்டேவருகின்றன. புதிய பெயர்கள் பெறுகின்றன. புதிய மதங்களில் சென்று சேர்கின்றன” என்றார் டாக்டர். “ஷென்ரப் மிவோச்சேக்கு சமமான இந்து தெய்வம், சிவன். மிகப் பழைமையான வேதங்களில் அவர் ருத்ரன் எனப்படுகிறார். அதற்கு முன்பு, அவர் பழங்குடிகளால் வழிபடப்பட்டிருப்பார்” என்றார் டாக்டர்.

பாண்டியன் அந்த ஓவியத்தைக் கூர்ந்து பார்த்தான். “டாக்டர், இந்த ஓவியத்துக்கும் வழக்கமான ஷென்ரப் மிவோச்சேயின் சிலைகளுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” என்றான்.

“ஓர் ஒற்றுமை உள்ளது” என்றான் நோர்பா.

“என்ன?” என்று பாண்டியன் கேட்டான். உடனே அவனும் கண்டுபிடித்துவிட்டான். “ஆம், இந்தத் தெய்வம், காலை மடித்து அமர்ந்திருக்கும் முறை… இதைப் போலத்தான் அந்த மம்மியும் அமர்ந்திருந்தது.”

நோர்பா, “இதைத்தான் பல இடங்களில் பார்த்தோம். அந்த முதிய பிட்சு வழிபட்ட புத்தரும் இப்படித்தான் அமர்ந்திருந்தார்” என்றான்.

“30,000 ஆண்டுகளாக இந்த ஓர் அம்சம் மட்டும் அழியாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஆச்சர்யம்தான்” என்றான் பாண்டியன்.

‘‘மனிதகுலத்தில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. மாறாதவை தெய்வங்கள் மட்டும்தாம். ஆகவே , வரலாற்றை அறிய வேண்டும் என்றால், மதங்களை அறிய வேண்டும்” என்றார் டாக்டர்.
“உண்மைதான்” என்றான் பாண்டியன்.

‘‘இந்த ஓவியத்தை வடித்தவர்கள், இதற்கு என்ன பெயரிட்டிருந்தார்கள் என நமக்குத் தெரியாது. அவர்கள் பேசிய மொழிகள், இன்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அன்றுமுதல் இந்த தெய்வத்தைத் தொடர்ந்து வணங்கியிருக்கிறார்கள்.”

டாக்டர் அந்த ஓவியத்தின் மேல் வெளிச்சத்தைப்பாய்ச்சி, அதை நன்கு ஆராய்ந்தார். அது, விரிந்த தலையணி ஒன்றை அணிந்திருந்தது. இரு கைகளையும் மடிமேல் வைத்திருந்தது. “இந்தத் தலையணி, மரத்தால் ஆனது.  இதைப் பெரும்பாலான குகை ஓவியங்களில் காணலாம்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

‘‘இவர் உண்மையில் வாழ்ந்த மனிதரா?” என்று பாண்டியன் கேட்டான்.

“இருக்கலாம். இறந்துபோன குலத் தலைவனாக இருக்கலாம். வயதான தந்தையாக இருக்கலாம். அல்லது தெய்வம் என அவர்கள் எண்ணிய வடிவமாகவும் இருக்கலாம். இந்த வடிவம், அவர்களின் கனவில் வந்திருக்கலாம். ஏனென்றால், இந்த வகையான குகை ஓவியங்களில், அந்தக் கால மக்கள் தங்கள் கனவுகளைத்தான் வரைந்திருக்கிறார்கள் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.”

டாக்டர் குனிந்து, அந்த ஓவியத்தின் கீழே நோக்கினார். “ஆ” என வியப்பொலி எழுப்பி அமர்ந்துகொண்டார்.

“என்ன?” என்றான் பாண்டியன்.

“எழுத்துகள்…” என்றார் டாக்டர்.

“குகை மனிதர்கள் எழுத்துகளைக் கண்டுபிடித்திருந்தார்களா?” என்றான் பாண்டியன்.

“இவை, பிற்காலத்தில் எழுதப்பட்டவை. நான் தேடிக்கொண்டிருந்த எழுத்துகள்தாம் இவை. இதைச் சேர்த்து வாசித்தால், இதற்கு முன்பு நான் வாசித்த அனைத்து வரிகளையும் முழுமையாக்கிப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.”

வெள்ளி நிலம் - 20

அவர் அதை வாசிக்கத் தொடங்கியபோது, பாண்டியனும் நோர்பாவும் குகைக்குள் சென்றார்கள். நாக்போ, “எலும்புகள்” என்றது.

“எங்கே?” என்றான் நோர்பா.

“இதோ, நீகூட ஓர் எலும்பின்மேல்தான் சாய்ந்து நிற்கிறாய்.”

நோர்பா திகைத்து, கூர்ந்து பார்த்தான். குகையின் சுவரில் எலும்புக்கூடு போன்ற வடிவம் தென்பட்டது.

“விளக்கைக் காட்டுங்கள்” என்றான் நோர்பா.

பாண்டியன் விளக்கைக் காட்ட, சுவர் நன்றாகத் தெரிந்தது. சிற்பங்கள் போல எலும்புக்கூடுகள். அவை அனைத்துமே இரு உள்ளங்கால்களையும் சேர்த்து அந்த மம்மிபோலவே அமர்ந்திருந்தன.

‘‘சிற்பங்களா?” என்றான் பாண்டியன்.

“இல்லை… இவை உண்மையான எலும்புக்கூடுகள்” என்றான் நோர்பா. “சுவரில் ஒரு தடத்தைச் செதுக்கி, அதில் மனித உடல்களைப் பதித்திருக்கிறார்கள். அவை, மட்கி எலும்பாகி சுண்ணாம்புக்கல்லுடன் அப்படியே சேர்ந்து இறுகிவிட்டன.”

“எலும்புகளும் சுண்ணாம்பால் ஆனவை. ஆகவே, ஒன்றாக மாறிவிட்டன” என்றான் பாண்டியன்.

“நூற்றுக்கணக்கில் இருக்கும்போலிருக்கிறதே” என்றான் நோர்பா.

குகையின் சுவர்கள் முழுக்க எலும்புக்கூடுகள். அவை வரிசையாகவும் நெருக்கமாகவும் இருந்தன.

“ஒன்று கவனித்தீர்களா?” என்றான் நோர்பா. “இந்தக் குகை அப்படியே பௌத்த ஆலயம் போலிருக்கிறது.”

“ஆமாம்” என்று பாண்டியன் வியப்புடன் கூவினான். “நடுவே புத்தரின் சிலை இருக்கும். அங்கே அந்த ஓவியம் இருக்கிறது. சுற்றிலும் சுவர் முழுக்க போதிசத்வர்களின் உருவங்களை அடுக்கியிருப்பார்கள்.”

“இங்கிருந்துதான் அந்தக் கோயிலின் வடிவமே வந்திருக்கிறது” என்றான் நோர்பா.

“ஆகா! நிறைய எலும்புகள்… நான் இங்கேயே தங்கிவிடுகிறேன். நீங்கள் வேண்டுமென்றால் செல்லுங்கள்” என்றது நாக்போ. அவர்கள் அந்த எலும்புக்கூடுகளைப் பார்த்துக்கொண்டு சுற்றிவந்தபோது, பாண்டியன் நின்று, “என்ன ஓசை அது?” என்றான்.

“என்ன ஓசை?” என்றான் நோர்பா.

நாக்போ, “ஆம், காலடியோசை...” என்றது. குரைத்தபடி வாசலை நோக்கி ஓடியது.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 20

இடைக்கல் செதுக்கு ஓவியம்!

கேரள மாநிலம் மானந்தவாடிக்கு அருகே உள்ள இடைக்கல் என்னும் குகையில், தொன்மையான கற்செதுக்கு ஓவியங்கள் உள்ளன.  . சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு பெரிய பாறை பிளந்து உருவானது இடைக்கல் என்னும் குகை. புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த குகை இது.

இங்கே, கூரிய கற்களால் பாறையைத் தோண்டி கோடுகள் அமைத்து வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தொல்லியலில் இவை Petroglyphs என அழைக்கப்படுகின்றன. போலீஸ் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஃப்ரெட் பாசெட் (Fred Fawcett) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குகை இது.

இங்குள்ள ஓவியங்களில் முக்கியமானது ஒரு ஆணின் சிலை. அவருடைய முன்பக்கமும் பின்பக்கமும் அருகருகே தனித்தனியாக வரையப்பட்டுள்ளன. அவர் தலையில் பெரிய தலையணியைச் சூடியிருக்கிறார். இது தெய்வமா குலத் தலைவனா எனத் தெரியவில்லை