மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

‘‘நடராசனின் பிடியில் இருந்து தப்பிக்க ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் முயன்றார். ஆனால், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் நடராசனின் பிடிதான் இறுகியது. செயற்கையான சிக்கலை நடராசன் ஏற்படுத்துவார். ஒவ்வொரு முறையும் ஆபத்துகளைக் காட்டி, அடிமைப் பெண் ஜெயலலிதாவை நிரந்தரக் கைதியாகவே ஆக்கிவிட்டார். இப்படி நடக்கும் போராட்டத்தில் இறுதி வெற்றி நடராசனுக்குதான் கிடைக்கும்.’’ - வலம்புரி ஜானின் இந்த தீர்க்கத் தரிசனம் ஜெயலலிதாவின் அரசியல் விலகலிலும் அரங்கேறியது. அரசியல் விலகல் அறிவிப்பை, அடுத்த 24 மணி நேரத்தில் ஜெயலலிதா வாபஸ் வாங்கினார்.

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

ஜெயலலிதாவின் அரசியல் விலகல் அறிக்கையும், எம்.எல்.ஏ ராஜினாமா கடிதமும் நடராசனால் பதுக்கப்பட்ட நிலையில், அவை எப்படி முறையே பத்திரிகை அலுவலகங்களுக்கும் சபாநாயகருக்கும் போய்ச் சேர்ந்தன? அதற்குப் பின்னால் இருக்கிறது ஜேம்ஸ்பாண்ட் கதை! ‘தேர்தலில் சீட் தருவதாகச் சொல்லிப் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்கள்’ என தேனி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு, நடராசன் வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ். காக்கிகளுக்கு வழக்கு முக்கியமல்ல, நடராசனை வீடு தேடிவந்து ஜெயலலிதா திட்டிவிட்டு ‘‘மை பிராப்பர்ட்டி’’ எனக் கத்தினாரே... அப்படியென்ன ஜெயலலிதாவின் ‘பிராப்பர்ட்டி’ நடராசன் வீட்டில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதுதான் முக்கியம். சர்ச் வாரன்ட்டோடு நடராசனின் ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெரு வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ் படை. வீட்டை சல்லடை போட்டபோதுதான் ஜெயலலிதாவின் அரசியல் விலகல் அறிக்கையும் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதமும் கிடைத்தது. ஜெயலலிதா சொன்ன ‘பிராப்பர்ட்டி’ இதுதான் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறது போலீஸ். ஜெயலலிதாவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த நினைத்த தி.மு.க-வுக்கு இது முக்கியமான கடிதம். அதை அப்படியே தங்கள் எஜமானர்களான ஆட்சியாளர்கள் கையில் கொடுக்க... ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தமிழ்க்குடிமகன் ரிலீஸ் செய்கிறார். அரசியல் விலகல் அறிக்கைகளை மீடியாவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். சோதனை நடந்தபோது நடராசனின் நண்பர் சார்லஸ் உடனிருந்தார். வீட்டைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போட்டுவிட்டு, விசாரணைக்காக நடராசனை போலீஸார் கமிஷனர் ஆபீஸ் அழைத்துச் சென்றனர்.

நடராசன் வீட்டில் நடந்த ரெய்டு தகவல் ஜெயலலிதாவுக்குத் தெரியவர... அவர் பதற்றமாகிறார். உடனே, தனது வழக்கறிஞர் கே.சுப்பிரமணியத்துக்கு போன் போட்டார். நடராசன் வீட்டுக்கு சுப்பிரமணியம் போகிறார். அங்கே ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தைப் பார்த்த கே.சுப்பிரமணியம், சார்லஸிடம், ‘‘போலீஸ் கைப்பற்றிய ஆவணங்களை சீசர் மகஜர் (சோதனைப் பட்டியல்) போட்டுத்தான் போலீஸ் எடுத்துப் போக அனுமதிக்க வேண்டும்’’ என சொன்னார். அதன்படி சார்லஸும் சொல்ல... போலீஸும் சீசர் மகஜர் போட்டுத் தருகிறது. அந்த சீசர் மகஜரில் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதமும் இடம்பெற்றுவிடுகிறது. 

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

இதற்கிடையே ஜெயலலிதாவின் அரசியல் விலகல் அறிக்கையும் ராஜினாமா கடிதமும் மீடியாவில் வெளியாகிறது. உடனே எஸ்.டி.சோமசுந்தரம், ஜெயலலிதாவின் அரசியல் விலகலை மறுத்தார். ‘‘சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தனது போடிநாயக்கனூர் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என கடிதத்தை அனுப்பியிருக்கிறார்’’ என அன்றைய சபாநாயகர் தமிழ்க்குடிமகன், பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ‘‘ஜெயலலிதா நேரில் வந்து விலகல் கடிதத்தைக் கொடுத்தாரா?’’ என நிருபர்கள் கேட்டபோது, ‘‘ஒரு நபர் வசம் அந்தக் கடிதத்தை கொடுத்தனுப்பினார்’’ என்றார் தமிழ்க்குடிமகன்.

ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தின் மீது சம்பிரதாயப்படி நடவடிக்கை எடுப்பதற்காக, அந்தக் கடிதத்தை சட்டசபை செயலாளர் சி.கே.ராமசாமிக்கு அனுப்பி வைத்திருந்தார் தமிழ்க்குடிமகன். ‘‘எம்.எல்.ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தால், அந்தக் கடிதம் அவரது கைப்பட எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி எழுதப்பட்ட கடிதம் இது. மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கையை சட்டப்படியும் மரபுபடியும் சட்டசபை செயலாளர் சி.கே.ராமசாமி மேற்கொள்வார்’’ என்றார்.

(தொடரும்)

‘‘சீசர் மகஜர் போடாமல் போயிருந்தால்’’

டராசன் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது என்னதான் நடந்தது? அன்றைய நேரடி சாட்சியான கே.சுப்பிரமணியத்திடம் பேசினோம். ‘‘ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டில்தான் என் வீடு இருக்கிறது. ஜெயலலிதா போனில் பேசியதும், பக்கத்திலேயே இருந்த பீமண்ண கார்டன் தெருவுக்கு உடனே வந்துவிட்டேன். நடராசன் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் என்பதால் என்னை உள்ளே அனுமதித்தார்கள். சார்லஸிடம் விசாரித்தபோது, ‘சோதனைப் போட்டு இந்தப் பேடுகளை மட்டும் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள்’ என்றார். அதை எடுத்துப் பார்த்தேன். பேடில் சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதமும், அரசியல் விலகல் அறிக்கையும் இருந்தன.

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

சார்லஸுக்கு சட்டம் தெரியாது. அதனால் அவரிடம், ‘சீசர் மகஜர் போடாமல் டாக்குமென்ட் எதையும் கொடுத்துவிடாதீர்கள். இந்தப் பேடில் இருக்கிற ஆவணங்கள் சீசர் மகஜரில் நிச்சயம் இடம்பெற வேண்டும். அப்படியில்லாமல் ஆவணங்களை எடுத்துப் போக அனுமதிக்காதீர்கள்’ எனச் சொல்லிவிட்டு ஜெயலலிதாவைப் பார்க்க போனேன்.

விசாரணைக்கு அழைத்துப் போன நடராசனை வீட்டுக்கு அழைத்து வந்தது போலீஸ். அப்போது நடராசனிடம் நான் வந்து போன விஷயத்தை சார்லஸ் சொல்ல... நடராசனும் ‘சீசர் மகஜர் போடாமல் நான் கைதாக மாட்டேன்’ என முரண்டுப் பிடித்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதாவின் ராஜினாமாக் கடித விவரம் தெரியாது. அவரும் சீசர் மகஜரை ரெடி செய்து தந்துவிட்டார். உடனே அது சார்லஸ் மூலமாக எனக்குக் கிடைத்தது. சீசர் மகஜர் போட்டது அன்றைய முதல்வர் கலைஞருக்கும் தெரியாது. அவர் தன்னிடம் தகவல் சொல்ல வந்த போலீஸ் உயர் அதிகாரியிடம், ‘கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துவிடுங்கள்’ என்றார். உயர் போலீஸ் அதிகாரி கருணாநிதி வீட்டுக்குப் போன நேரத்தில்தான், நான் நடராசன் வீட்டுக்குப் போனேன். சீசர் மகஜர் போட்ட விஷயம் அந்த உயர் அதிகாரிக்கும் தெரியாது. தமிழ்க்குடிமகனிடம் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை உயர் போலீஸ் அதிகாரி கொடுத்துவிடுகிறார். அதன்பிறகுதான் அது பத்திரிகைகளில் செய்தியாகிறது.
 
ஜெயலலிதாவை சந்தித்தபோது ‘ராஜினாமா கடிதம் எழுதினீர்களா?’ என கேட்டேன். ‘ஆமாம்’ என்றார். ‘அதை எடுக்கத்தான் போலீஸ், நடராசன் வீட்டுக்கு வந்திருக்கிறது’ என்று அவரிடம் சொன்னேன். சீசர் மகஜர் போடாமல் போயிருந்தால் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை நடராசன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதற்கு ஆதாரமே இல்லாமல் போயிருக்கும். சபாநாயகர் அறிவித்தது சட்டப்படி செல்லுபடி ஆகியிருக்கும். நீதிமன்றத்துக்குப் போக வேண்டிய டாக்குமென்ட்டை சபாநாயகரிடம் போலீஸ் கொடுத்ததுதான் தப்பாகிவிட்டது. அன்றைக்கு நான் தலையிடாமல் போயிருந்தால் தலையெழுத்தே மாறியிருக்கும். ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகியிருப்பார். அவருடைய எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ பதவிகள் பறி போயிருக்கும். தமிழக அரசியலில் இந்த சம்பவம் முக்கியமான திருப்பம். அதன்பின் ஜெயலலிதா மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். இல்லையென்றால் அரசியலைவிட்டு போகும் நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்’’ என்றார் கே.சுப்பிரமணியம்.