
படங்கள்: எல்.ராஜேந்திரன்
1973-ம் ஆண்டில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். பாளையங்கோட்டையில் கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தின் பகல் காட்சியைப் பார்த்துவிட்டு, திருநெல்வேலி ரத்னா – பார்வதி தியேட்டரிலிருந்து வெளியே வந்தேன். “வணக்கம், நான் ஷேக் அப்துல் காதர். ஆசிரியராக இருக்கிறேன். சொந்த ஊர் கழுநீர்குளம்” என்று என்னிடம் அறிமுகமானார் அவர். அன்று தொடங்கிய நட்பு, கழனியூரன் மறையும் வரை தொடர்ந்தது. தமிழகத்தில் முதன்முதலாக வட்டார இலக்கியமான ‘கரிசல்’ இலக்கியத்தையும், ‘வட்டார வழக்குச் சொல்லகராதி’யையும் உருவாக்கிய கி.ரா-வின் உண்மையான சீடராக விளங்கினார் அவர். தி.க.சி-க்கும் அணுக்கமான தொண்டராக இருந்தார் கழனியூரன்.

நெல்லை மாவட்டத்தில் ஐவகை நிலங்களும் உண்டு. அனைத்துப் பகுதிகளுக்கும் அலைந்து திரிந்து நாட்டுப்புறத் தரவுகளைத் திரட்டி, மறைந்த, மறந்த பழக்கவழக்கங்களையும் கலைகளையும் சேகரித்துத் தந்தவர், கழனியூரன். இந்தப் பணிகளில் கி.ரா-வுக்கு மிகவும் உதவியாக இருந்தார். செவக்காட்டு இலக்கியத்துக்கும், கரிசல் இலக்கியத்துக்கும் கழனியூரன் ஆற்றிய பணி அளப்பரியது.
கி.ரா., தி.க.சி போன்றோருடன் மட்டுமல்லாமல், வல்லிக்கண்ணனுக்கும் நெருக்கமாக இருந்தார். அவர்களைக் குறித்தான தகவல்களைத் திரட்டி நூலாகத் தந்தவர் கழனியூரன். ‘லானா சானா’ என்றழைக்கப்பட்டலா.சண்முகசுந்தரத்திற்குப் பிறகு, ரசிகமணி டி.கே.சி-யின் வட்டத்தொட்டியில் அங்கம்பெற்ற, நம்மிடையே வாழ்ந்த கடைசி ஆளுமை கழனியூரன்.

வேலைநாளில் ஆசிரியர் பணி. சனி, ஞாயிறுகளிலோ கிராமங்களிலும் வயல் வெளிகளிலும் திரிந்து ஆண், பெண் என்ற பேதமில்லாமல் பேசிப் பழகிக் கதைகளைத் திரட்டுதல், அங்குள்ள மரபுகளைத் தெரிந்துகொள்ளுதல் எனக் கழனியூரன் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கால்போனபோக்கில் அலைந்து திரிந்து தரவுகளைச் சேகரித்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நேரத்தில்தான், எங்களைப்போன்ற நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் தன்னுடைய மகன் கழனீர் ஷா வீட்டில் தங்கிச் சிகிச்சை பெற்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், தன்னுடைய இலக்கியப் பணிகளைச் சிரமமெடுத்து அவர் செய்துவந்தார். கி.ரா-வை ஆசிரியராகக்கொண்டு நான் வெளியிடும் ‘கதைசொல்லி’யின் இணையாசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். அவ்வளவு ஏன், அவர் மறைந்த 27-06-2017 அன்று முன்தினம் இரவுகூட, புதுவையில் `கி.ரா-95’ விழா நிகழ்வு குறித்து எங்களிடம் விவாதித்துக்கொண்டிருந்தார்.
என்னோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருப்பார் கழனியூரன். பிரபாகரனுக்கு அவருடைய பேச்சு ரொம்பப் பிடிக்கும். இப்படி நட்பு பாராட்டுவதிலும் பெருந்தகையாளர் கழனியூரன். தன்னுடைய கவலையையோ கோபத்தையோ பெரிதும் காட்டாத பெருமகனாகவே வாழ்ந்தார்.
அரசியலில் இருப்பதைப்போல இலக்கியத்திலும் புறக்கணிப்புகள் உள்ளன. அவருக்கான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் முழுமையாகத் தமிழகம் வழங்கவில்லை. யாரும் இலக்கியம் படித்துவிடலாம். ஆனால், நாட்டுப்புற மாண்புகளைச் சொல்லும் இலக்கியத்தைப் படைப்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஆங்கில ஆக்ஸ்ஃபோர்டு அகராதியைத் தயாரித்த சாமுவேல் ஜான்சன், எந்தக் கல்லூரியிலும் படிக்காதவர். அவரைப் பலரும் பரிகாசம் செய்தார்கள். அந்தப் படிக்காத மேதைக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் தந்தது. இன்று கண்டுகொள்ளப்படாத கழனியூரனை நாளை நிச்சயமாக அவர் படைப்புகளுக்காக அவசியம் அங்கீகரிக்கப்படவேண்டிய நிலை வரும்.

கரிசல் வட்டார வழக்குகள், நாட்டார் கதைகள், வசவுச் சொற்கள், விடுகதைகள், தமிழ்-தெலுங்குச் சொலவடைகள், சிறுவர் கதைகள், பாலியல் கதைகள், என ஒரு தேனீயைப்போல தேடித் தேடிச் சேகரித்தவர் கழனியூரன். அவரது சொந்தப் பெயர் எம்.எஸ்.அப்துல் காதர். எழுத்துக்காக, தான் பிறந்த ஊரான கழுநீர்குளத்துக்காரராக (கழனியூரன்) மாறியவர். சிறுவயதில், கண்பார்வையற்ற தன் அண்ணனுக்காக அவர் கொடுத்த புத்தகங்களைச் சத்தமாக வாசிக்கத் தொடங்கியதுதான் கழனியூரனின் முதல் இலக்கிய அறிமுகம். பிறகு, தென்காசி, காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் நடக்கும் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்ளத் தொடங்கினார். அங்கேதான் ‘லானா சானா’ என்று அழைக்கப்படும் லா.சண்முகசுந்தரத்தின் அறிமுகம் கழனியூரனுக்குக் கிடைத்தது.
திருநெல்வேலியில் வட்டத்தொட்டி இலக்கியக் குழுமமும், ரசிகமணி டி.கே.சி-யின் பிறந்த நாள் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ராஜாஜியில் தொடங்கி, ரா.பி.சேதுப்பிள்ளை, கல்கி, அ.சீனிவாச ராகவன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், வையாபுரிப் பிள்ளை, மீ.ப. சோமு, கி.ரா., ஜெயகாந்தன் என்று பலரும் வட்டத்தொட்டியின் நெடுநாளைய உறுப்பினர்கள். டி.கே.சி-யின் மறைவுக்குப் பிறகு, அவரது பேரன் தீப.சிதம்பரநாதன் முயற்சியில், டி.கே.சி அன்பர்கள் அனைவரும்கூடி, அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கினார்கள்.
அந்த நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆசான்களும் கலந்துகொள்வார்கள். அங்குதான் முதன்முறையாக கி.ராஜநாராயணனைச் சந்தித்தார் கழனியூரன். நிகழ்ச்சி முடிந்து ஊருக்குப் போன கி.ரா-விடமிருந்து சில நாள்களில் கழனியூரனுக்குக் கடிதம் வந்தது. “நீங்கள் ஒரு நல்ல வாத்தியார், அதே நேரம் கிராமம் கிராமமாக அலைந்து வேலைபார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது. இப்படி, நாட்டார் வழக்காற்றியல் தொடர்புடைய கதைகளைத் தேடிச் சேகரியுங்களேன்” என்று முதல் தடவையாக கி.ரா., கழனியூரனைத் தூண்டிவிட்டார். இப்படித்தான் தொடங்கியது கழனியூரனின் நாட்டாரியல் வேட்டை. முதல் தடவை கழனியூரன் கிராமங்களுக்குப் போய் கதைகள் சேகரிப்பதற்காகக் கிராமத்தினரை அணுகியபோது, வெட்கத்தின் காரணமாகவும், வேலைப்பளுவைக் காரணம் காட்டியும், மக்கள் கதை சொல்ல மறுத்திருக்கிறார்கள். அதை கி.ரா-விடம் சொன்னதும், “பொம்பளையாளு சோறு ஆக்கணும்பா. நீங்க போய்ப் பக்கத்துல உக்காந்து அடுப்புல தீயைத் தள்ளுங்க. அவங்களோட ஒண்ணுமண்ணா பழகிப் பேச்சுக்கொடுத்து, கதையைச் சொல்லவிட்டுக் கேளுங்க” என்றாராம் கி.ரா. அப்படி மனிதர்களோடு நெருங்கிப் பழகி கழனியூரன் கதைகள் சேகரித்த சம்பவங்களையே தனித்தொகுப்பாக எழுதலாம்.

கரிசல் நிலம், செவக்காட்டு நிலம் முழுக்க அலைந்து கழனியூரன் திரட்டிக் கொண்டுவந்து குவித்த கதைகளில், தான் ஏற்கெனவே பதிவு செய்தவற்றை, அரிசியில் கல் எடுப்பதுபோல எடுத்துவிட்டு, மற்றவற்றைச் சேர்த்துப் புத்தகமாக்கினார் கி.ரா. அப்படித் தொகுக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் கழனியூரன் பெயரையும் சேர்த்துப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருந்தார். ஒரு சீடனுக்குக் கிடைக்கிற உச்சபட்ச மரியாதையை கி.ரா எப்போதும் கழனியூரனுக்குத் தந்தார். அவர்கள் இரண்டு பேருக்குமிடையே வெளியில் சொல்லாத ஒரு தந்தை மகன் உறவு நிலைகொண்டிருந்தது. கிராம மக்களின் பேச்சில் நடமாடும் வசவுச்சொற்களை எல்லாம் விசாரித்து அவற்றில் இருக்கும் பூர்வாங்க மனித உணர்வுகளைப் படிக்க வேண்டும் என்று தனது 92-வது வயதில் யாருக்காவது ஆசை வருமா? கி.ரா-வுக்கு வந்தது. உடனே வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கினார் கழனியூரன். இத்தனைக்கும் அப்போதுதான் அவர் புற்றுநோய் பாதிப்பை உணரத் தொடங்கியிருந்தார்.
ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கழனியூரனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக மகள் வீட்டிலும், ஓய்வுக்காகச் சொந்த ஊரிலுமாக நாள்களைப் பங்குபோட்டுக்கொண்டார். தனக்கு மிச்சமாகக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் அதுவரையிலான தன் நாட்டுப்புறச் சேமிப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளுக்காகக் கவனத்தோடு செலவிடத் தொடங்கினார். தன்னுடையவை மட்டுமல்லாமல் கி.ரா-வின் கதைகள், கடிதங்கள், கட்டுரைகள், முன்னுரைகள், ‘கதைச்சொல்லி’ இதழ் வெளியீடுகள், கி.ரா பிற சஞ்சிகைகளில் எழுதியவை, வல்லிக்கண்ணன் - தி.க.சி கடிதங்கள் என்று யாவற்றையும் தொகுத்துப் பத்திரப்படுத்தி நூலாக்கினார். ‘கதைசொல்லி’ இதழில் கடைசிவரைக்கும் பொறுப்பாசிரியர் பணிகளைக் கழனியூரன் கவனித்தார். கி.ரா-வின் வாழ்க்கையைத் திரும்ப அவருக்கே படம்போட்டுக் காட்டுவதுபோல, அவருடனான தன் அனுபவங்களைத் தொடராக எழுதிக்கொண்டிருந்தார் கழனியூரன்.
இந்த ஆண்டு 95 வயதைப் பூர்த்திசெய்யும் தன் குருநாதர் கி.ரா-வுக்குக் காணிக்கையாக, அவர் பற்றிய பிற படைப்பாளர்களின் எழுத்துகள் அடங்கிய தொகுதி ஒன்றை நூலாக ஆவணப்படுத்தும் பணியைக் கழனியூரன் என்னிடம் ஒப்புவித்திருந்தார். நூல் வேலைகள் முடிவடையும் நிலையில் புற்றுநோய் அவரை முற்றிலுமாகப் பறித்துக் கொண்டது. கழனியூரன் தன் குருவுக்கான காணிக்கையைக் கையளிக்கும் முன்பாகக் காலமாகிவிட்டார்.
கி.ரா சொல்வார், “ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்நாளில் பேசினதை, எழுதினதையெல்லாம் பத்திரப்படுத்திக் கொடுத்த மகேந்திரநாத் மாதிரி, ரசிகமணி டி.கே.சி-க்கும் ஒரு ‘சுடுகுஞ்சு’ கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று. டி.கே.சி-க்கு அப்படி ஓர் ஆள் வாய்த்தாரோ இல்லையோ! கி.ரா-வின் ‘சுடுகுஞ்சாக’ வாழ்ந்தவர் கழனியூரன். கரிசல் மண்ணில் கி.ரா-வின் பங்களிப்பு பூரண நிலவென்றால், அதே வானத்தின் விடிவெள்ளியாக மின்னியவர் கழனியூரன். ஒருமுறை அவரிடம் ‘உங்கள் காலம்போல எங்களுடைய காலம் அவ்வளவு நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கவில்லையே” என்றேன்.
அதற்கு அவர் சொன்ன பதில்... “எங்க தாத்தா வாழ்ந்த காலத்தை நான் பார்க்கும்போது அது பிரமாண்டமா இருந்துச்சு. அதிலே அவ்வளவு விஷயங்கள் இருந்துச்சு. என் காலத்து வாழ்க்கை, என் பேரனுக்கு வித்தியாசமா இருக்கும். அவன் பேரன் வரும்போது, இங்கே இன்னும் நிறைய மாறியிருக்கலாம். நவீனத்துக்கான மாற்றங்கள் வந்துகிட்டேதான் இருக்கும். அவரவருக்கான காலத்தின் கண்ணாடியை அணிஞ்சுக்கிட்டுப் போக வேண்டியதுதான். நம் பார்வைகள் நாளுக்குநாள் மாறும், உடலும் உயிரும் வந்து வந்து போய்க்கிட்டே இருப்பது மாதிரி. ஆனா, அதோட ஆன்மா அப்படியே இருக்கும். ஆன்மா அழியாது” என்றார்.
கழனியூரனின் ஆன்மா என்பது அவரது எழுத்துகள்தான்.