Published:Updated:

``கலைஞர் முன்னாடி, `கிழி கிழி கிழி'னு சொன்னேன்... பதிலுக்கு அவரோட கவுன்டர்..?" கலா மாஸ்டர்

``கலைஞர் முன்னாடி, `கிழி கிழி கிழி'னு சொன்னேன்... பதிலுக்கு அவரோட கவுன்டர்..?" கலா மாஸ்டர்

``கலைஞர்தான் `மானாட மயிலாட' எனப் பெயர் வெச்சார். `ரொம்ப தமிழ்ப் பெயரா இருக்கே. ரீச் ஆகுமா?'னு தயங்கினேன். அதனால, `நீதானே நான் வெச்ச டைட்டிலை நல்லா இல்லைனு சொன்னே. இப்போ என்ன சொல்றே?'னு சிரிப்பார்."

Published:Updated:

``கலைஞர் முன்னாடி, `கிழி கிழி கிழி'னு சொன்னேன்... பதிலுக்கு அவரோட கவுன்டர்..?" கலா மாஸ்டர்

``கலைஞர்தான் `மானாட மயிலாட' எனப் பெயர் வெச்சார். `ரொம்ப தமிழ்ப் பெயரா இருக்கே. ரீச் ஆகுமா?'னு தயங்கினேன். அதனால, `நீதானே நான் வெச்ச டைட்டிலை நல்லா இல்லைனு சொன்னே. இப்போ என்ன சொல்றே?'னு சிரிப்பார்."

``கலைஞர் முன்னாடி, `கிழி கிழி கிழி'னு சொன்னேன்... பதிலுக்கு அவரோட கவுன்டர்..?" கலா மாஸ்டர்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, பலரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். தற்போது கனடாவில் இருக்கும் சினிமா நடன இயக்குநர் கலா, கருணாநிதி மீதான அன்பை நெகிழ்வுடன் பகிர்கிறார்.

``கலைஞர் அப்பாவின் இழப்பு, எனக்குப் பேரிழப்பு. கலைஞர் என்றாலே தமிழ்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கப் போகும்போது, `வாம்மா கலா!'னு வாய் நிறைய அழைப்பார். அழகுத் தமிழில் உரையாடுவார். இனி அந்தக் கரகர குரலைக் கேட்க முடியாதுனு நினைக்கிறப்போ ரொம்ப வேதனையா இருக்கு. என் இளம் வயசுல சிலமுறை அவரைச் சந்திச்சிருக்கேன். பிறகு, சினிமாவில் நீண்ட காலம் வொர்க் பண்ணியிருந்தாலும், அப்போது நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கலை. 

மலையாளத்தில் சில நிகழ்ச்சிகள், தமிழில் `ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சிக்கு நடுவரா இருந்தேன். அப்போ, கலைஞர் டிவி ஆரம்பிக்க இருந்தாங்க. எனக்கு அழைப்பு வந்துச்சு. `புதுசா நடன நிகழ்ச்சி ஆரம்பிக்கிறோம். நீங்கதான் பண்ணணும்'னு உறுதியா சொல்லிட்டாங்க. போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் எல்லோரையும் தேர்வுசெஞ்சு, நிகழ்ச்சியை ஆரம்பிச்சேன். நிகழ்ச்சிக்குப் பல பெயர்களை யோசிச்சோம். கலைஞர்தான் `மானாட மயிலாட' எனப் பெயர் வெச்சார். `ரொம்ப தமிழ்ப் பெயரா இருக்கே. ரீச் ஆகுமா?'னு தயங்கினேன். `எல்லாம் சரியா வரும்'னு அமிர்தம் சார் சொன்னார். அந்தப் பெயர் இன்னைக்கும் இருக்கு. அதுதான் கலைஞரின் திறன்.

2007 செப்டம்பர் 9-ம் தேதி, முதல் நாள் ஷூட்டிங். மூணே நாளில் எல்லா வேலைகளையும் முடிச்சுக்கொடுத்துட்டேன். செப்டம்பர் 15-ம் தேதி, கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டது. அன்றைக்கே, `மானாட மயிலாட' நிகழ்ச்சியை ஒளிப்பரப்பினாங்க. மூணாவது எபிசோடு ஷூட்டிங் நேரம், `முரசொலி' ஆபீஸிலிருந்துதான் கலைஞர் டிவி செயல்பட்டுச்சு. ஷூட்டிங் முடிச்சுட்டு வெளியே வந்தேன். அப்போ, முரசொலி ஆபீஸ் வந்திருந்த கலைஞரிடம், அமிர்தம் சார் என்னை அறிமுகப்படுத்தினார். `ரொம்ப நல்லா பண்ணிட்டிருக்கே. தொடர்ந்து நல்லபடியா பண்ணு'னு வாழ்த்தினார். எல்லோரும் தொடர்ந்து முழுச் சுதந்திரம் கொடுத்து, ஒத்துழைச்சாங்க" என்கிற கலா, கருணாநிதியுடன் பழகிய நினைவுகளைக் கூறுகிறார்.

``சினிமாவில் எத்தனையோ டான்ஸ் மாஸ்டர்கள் இருக்காங்க. அதில், நடிகர்களான ஒரு சிலரை தவிர, தேசிய விருதே வாங்கிய நான் உட்பட வேறு யாருமே மக்களிடம் பெரிசா ரீச் ஆகாமல் ஆஃப் ஸ்கிரீன்லதான் இருந்தோம். `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நடுவராகி கிடைச்ச பெயரும் புகழும் ரொம்பப் பெரிசு. செட்டுக்குள்ளே செட் போடறது, வித்தியாசமான சுற்றுகள் என அந்த நிகழ்ச்சி, டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிச்சது. அப்போ, கலைஞரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவர் சொன்ன நிறைய ஆலோசனைகளைச் செயல்படுத்தினேன். அவரைச் சந்திக்கும்போதெல்லாம், `நீதானே நான் வெச்ச டைட்டிலை நல்லா இல்லைனு சொன்னே. இப்போ என்ன சொல்றே?'னு சிரிப்பார். உடனே அவர் கையைப் பிடிச்சுட்டு, `நான் சின்னப் பொண்ணு. உங்களோட பவர் இப்போ புரிஞ்சுடுச்சு. மன்னிச்சுக்கோங்க'னு சொல்வேன். `என் நம்பிக்கையைக் காப்பாத்தின சிலரில் நீயும் ஒருத்தி'னு அவர் சொன்னது, என் வாழ்நாளின் மறக்கமுடியாத பாராட்டு.

ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டின்போதும், அவரைச் சந்திச்சு ஆசீர்வாதம் வாங்குவேன். எனக்குப் பரிசு கொடுப்பார். ஒருமுறை ஆங்கிலப் புத்தாண்டு நேரத்தில் அவரைச் சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினேன். `உங்க காலாண்டர் ஒண்ணு வேணும்பா'னு கேட்டேன். `எதுக்கு?'னு கேட்டார். `உங்களால் பல குடும்பங்கள் பிழைக்குது. `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் வொர்க் பண்ற நிறைய கலைஞர்கள் குடும்பத்துடன் நல்லா சாப்பிடுறதே உங்களால்தான். அதில், நானும் ஒருத்தி. அதனால், தினமும் உங்க உருவத்தைப் பார்க்கணும்'னு சொன்னேன். `ஆனா, என்னால்தான் நல்லா சாப்பிட முடியறதில்லை. வயசாகிட்டதால் கொஞ்சமாதான் சாப்பிட முடியுது'னு சிரிச்சுகிட்டே சொன்னார். எல்லா விஷயத்திலும் அவரிடம் ஹியூமர் இருக்கும். அவர் முன்னாடியே `கிழி கிழி கிழி'னு வெட்கத்தோடு சொல்லியிருக்கேன். அதைக் கேட்டு, `நிகழ்ச்சியைப் பெரிய அளவில் கிழிச்சுட்டே!'னு சிரிச்சுப் பாராட்டினார்.

ஒருமுறை, `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை செய்தோம். சரியான தூக்கம் இல்லாமல், சாப்பாடு இல்லாமல், ஆறு மாத உழைப்புக்குக் கிடைச்ச வெற்றி. `நடக்குமா நடக்காதா?'னு பேச்சு இருந்துச்சு. நம்பிக்கையோடு நிகழ்த்தினோம். அன்னிக்கு மாலையே கலைஞரைச் சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினேன். `உண்மையான உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இன்னும் பெரிசா சாதிக்கணும்'னு வாழ்த்தினார். அப்போ, என் முகத்தில் சின்ன சோர்வு இருந்ததை உணர்ந்தவர், `என் டைட்டிலை ஏன் முதல்ல வேண்டாம் எனச் சொன்னே'னு மறுபடியும் ஆரம்பிச்சதும் சிரிச்சுட்டேன். இந்த அன்பை இனி யார்கிட்ட எதிர்பார்க்க முடியும்" எனக் கலங்குகிறார் கலா.

``நினைச்ச நேரத்தில் அவருக்கு போன் பண்ணிப் பேசுவேன். எப்போ வேணும்னாலும் நேரில் சந்திச்சுப் பேசும் மகள் உரிமையைக் கொடுத்திருந்தார். `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் முடியுற நேரம். அந்த நிகழ்ச்சி நடத்தறதில் சில சிக்கல். அவரைச் சந்திச்சு, மனம்விட்டுப் பேசி கண் கலங்கினேன். `நீ என் பொண்ணு மாதிரி. அழாதே'னு ஆறுதல் சொல்லி பிரச்னையைத் தீர்த்துவெச்சார். `ஓடி விளையாடு பாப்பா', `கானா குயில்', `பாசப் பறவைகள்', `ஆட்டம் பாட்டம்' எனப் பல நிகழ்ச்சிகளுக்கான டைட்டில்களை கலைஞர்தான் தேர்வுசெய்தார். அந்த நிகழ்ச்சிகள் ஹிட். அவருக்கு நிறைய பரிசுகள் கொடுத்திருக்கிறேன். அதில், பழைய காலத்து நாணயங்கள் இருக்கும் பெரிய கடிகாரம், கலைஞருக்கு சென்டிமென்ட். கோபாலபுரம் வீட்டுலதான் அது இருக்கு. பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா, தமிழக அரசின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த தமிழறிஞர்கள் நிகழ்ச்சிகள் எனப் பல நிகழ்ச்சிகளுக்கு கோரியோகிராபி பண்ணியிருக்கேன்.

சில மாசங்களுக்கு முன்னாடி, அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபோது சந்திச்சேன். என்னைப் பார்த்து சிரிச்சார். அவரால் பேச முடியலை. ஆனால், `உன்னை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு' எனச் சொல்ற மாதிரி இருந்துச்சு. எனக்கு அழுகையே வந்துருச்சு. பிறகும் சிலமுறை நேரில் சந்திச்சேன். செல்வி அக்கா, நித்யா மற்றும் சண்முகநாதன் சார் (கருணாநிதியின் உதவியாளர்கள்) போன்றவர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ரொம்ப உடல்நிலை சரியில்லைனு தகவல் வந்துச்சு. கனடாவிலிருந்து பதற்றத்துடன் சென்னையில் இருந்த கணவரிடம் விசாரிச்சேன். பிறகு, செல்வி அக்காவுக்கு போன் பண்ணினேன். `அப்பா நல்லா இருக்கார். கவலைப்படாதீங்க'னு சொன்னாங்க. அதனால்தான் கனடாவிலேயே என் வேலைகளை கவனிச்சுட்டிருந்தேன். திடீர்னு கலைஞரின் இறப்புச் செய்தியைக் கேட்டதும் துடிச்சுட்டேன். கடைசி நேரத்தில் அவர் முகத்தைப் பார்க்க முடியலைனு ரொம்பக் கலங்கி, ஒரு வீடியோ பதிவு போட்டேன். அவரைத் தாய், தந்தைக்கும் மேலான இடத்தில் வெச்சிருக்கேன். 10 வருஷம் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சுது. இனிமே...'' என மனம் உடைந்து அழுகிறார் கலா.

``கலைஞர் குடும்பத்தாரிடம் போனில் ஆறுதல் சொல்றது நல்லா இருக்காது. ஆனாலும், மனசு கேட்காமல் நித்யாவுக்கு மட்டும் போன் பண்ணி ஆறுதல் சொன்னேன். வரும் 18-ம் தேதி சென்னை வந்துடுவேன். முதல் வேலையா, கலைஞர் நினைவிடத்துக்குப் போய் அஞ்சலி செலுத்தணும்; மனம்விட்டு அழணும். கலைஞர் வீட்டுக்குப் போகணும்; அவர் குடும்பத்தினர் எல்லோரையும் சந்திச்சு ஆறுதல் சொல்லணும். அவர் நினைவா ஒரு சர்ப்ரைஸ் நிகழ்வு ஒண்ணு பண்ணப்போறேன். அதைச் சென்னைக்கு வந்து சொல்றேன்" என்கிறார் கலா.