
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் நடராசன் வீட்டிலிருந்து கைப்பற்றியபிறகு, ஜெயலலிதாவின் ஆலோசகர் நடராசனை 1989 மார்ச் 18-ம் தேதி சனிக்கிழமை அன்று சிறையில் அடைத்தது போலீஸ்.
‘அரசியலிலிருந்து விலகுகிறேன்’ என ஜெயலலிதா முடிவெடுக்க முக்கியக் காரணமே, கட்சியின் பண விவகாரம்தான். ‘நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்’ என்ற நெருக்கடிதான், ராஜினாமா முடிவை நோக்கி ஜெயலலிதாவைத் தள்ளியது. ஜானகி, ஜெயலலிதா அணிகள் இணைந்த பிறகு, ‘‘கட்சிக்கு நிறைய பணமும் நிதியும் கிடைக்கும்’’ என சீனியர்கள் சிலர், ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். ஆனால், அப்படி எந்த நிதியும் வரவில்லை. பொருளாதார நெருக்கடி யோடு சீட் கேட்டவர்களிடமிருந்து வாங்கிய டெபாசிட் தொகையைத் திருப்பித் தர முடியாத அழுத்தமும் சேர்ந்துகொண்டது. சீட்டுக்காகப் பணத்தைக் கொடுத்த பலர், போலீஸில் புகார் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இப்படியான காலகட்டத்தில்தான் ‘அரசியல் விலகல்’ முடிவை எடுத்தார் ஜெயலலிதா.
கட்சியின் பண விவகாரம்தான் நடராசன் கைதுக்கு அடிப்படைக் காரணம். ‘அ.தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.தனகோபாலைத் துப்பாக்கி யைக் காட்டிக் கொலை செய்துவிடுவதாக நடராசன் மிரட்டினார்’ என்பதுதான் புகார். ஜாமீனில் வெளியில் வர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது. நடராசனின் உதவியாளர் சேகரையும் அதே வழக்குப் பிரிவுகளில் கைது செய்தார்கள்.

பி.டி.தனகோபால் கொடுத்த புகார்தான் என்ன? ‘‘சட்டசபைத் தேர்தலில் (1989) சேலம் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்குக் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தேன். ‘போட்டியிட விரும்புகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும்’ என நடராசனும் மற்ற சிலரும் சொன்னார்கள். ‘சீட் கிடைத்ததும், அந்தப் பணம் திருப்பித் தரப்படும்’ என உறுதியளித்தார்கள். அதன்படி கடந்த ஆண்டு (1988) டிசம்பர் 20-ம் தேதி 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அதற்கான ரசீதும் கொடுத்தனர். என்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்காததால் பணத்தைத் திருப்பித் தரும்படிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எஸ்.டி.சோமசுந்தரத்திடம் கேட்டேன். ‘இதுபற்றி நடராசனிடம்தான் கேட்க வேண்டும்’ என அவர் சொன்னார். 1989 மார்ச் 1-ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா வீட்டுக்குச் சென்றேன். சேகர் உட்பட நடராசனின் உதவியாளர்கள் என்னை நடராசனிடம் அழைத்துச் சென்றார்கள். உடனே அறைக் கதவுகளை நடராசன் மூடச் சொன்னார். அவர் பாக்கெட்டில் இருந்து கைத் துப்பாக்கியை எடுத்து என்னைச் சுட்டுவிடுவதாக மிரட்டினார். என் பாக்கெட்டில் இருந்த ரசீதையும் பிடுங்கிக் கொண்டார். உயிருக்குப் பயந்து அறையைவிட்டு நான் வெளியே ஓடி வந்துவிட்டேன்.’’
இந்தப் புகாரை பி.டி.தனகோபால் கொடுத்து பல நாள்கள் ஆகிவிட்டன. கிடப்பில் போட்டிருந்த இந்தப் புகாரைத்தான், நடராசன் வீட்டில் சோதனை போடுவதற்காகப் பயன்படுத்தினார்கள். இதுபற்றி அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த துரையிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘கட்சியின் தலைவர்களிடம் பி.டி.தனகோபால் இதுபற்றிப் பேசி எந்தப் பலனும் ஏற்படாததால்தான் கடைசியாக போலீஸில் அவர் புகார் செய்தார். அதன்பேரில்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’’ என்றார்.
நடராசன் சிறைக்குப் போனதுமே ‘அரசியலில் இருந்தும் விலகவில்லை.
எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யவில்லை’ என ஜெயலலிதா பல்டி அடித்தார். நடராசன் கைதுக்கு அடுத்த நாளே அதிரடியாக அறிக்கை விட்டார். அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஃபேக்ஸ் அல்லது மெசஞ்சர் மூலம்தான் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். வரலாற்று(!) முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை 1989 மார்ச் 19-ம் தேதி நிருபர்களை அழைத்து தனது போயஸ் கார்டன் வீட்டில் அவர் வெளியிட்டதுதான் ஆச்சர்யம்.
‘‘எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிவிடுவதாக எவ்விதமான கடிதத்தையும் சபாநாயகருக்கு நான் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, உதவியாளர் மூலமாகவோ அனுப்பவில்லை. ‘அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன்’ என எந்த அறிக்கையையும் செய்தித்தாள்களுக்கு அனுப்பவில்லை. என்னுடைய உடல்நிலை 1987-ம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ளும் எண்ணத்தில், இம்மாதம் (மார்ச்) 15-ம் தேதி ஓர் அறிக்கையும் சபாநாயகருக்கு ஒரு கடிதமும் தயாரித்தேன். இவை இரண்டையும் என்னுடைய குடும்ப நண்பர் நடராசனிடம் கொடுத்திருந்தேன். ஆனால், கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘இந்தக் கடிதத்தையும் அறிக்கையையும் சபாநாயகருக்கு அனுப்பவோ, செய்தித்தாளில் வெளியிடவோ வேண்டாம்’ என்று நடராசனிடம் தெரிவித்து விட்டேன். இவை யாவும் 15-ம் தேதியே முடிந்துவிட்டன. ஆனால் 18-ம் தேதியன்று நடராசன்மீது போலீஸார் பல பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர் வீட்டில் திடீர் சோதனையிட்டு, அந்த வழக்குக்குத் தொடர்பில்லாத பல ஆவணங்களைச் சட்ட விரோதமாக எடுத்துச் சென்றனர். அப்படி எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களில் 15-ம் தேதியிட்ட கடிதமும் அறிக்கையும் அடங்கும்.

நடராசன் வீட்டிலிருந்து இவற்றை எடுத்துச் சென்றதற்கு போலீஸார் எழுத்துமூலமாக ஒப்புதல் ரசீது (சீசர் மகஜர்) கொடுத்துள்ளனர். அ.தி.மு.க-வின் வளர்ச்சியை மறைத்திடவும், என்னைத் தனிமைப்படுத்தி அழித்திடும் தீய நோக்கத்தோடும் போலீஸாரைக் கருணாநிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்தக் கடிதங்களைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார். நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதை விளக்கி, சபாநாயகருக்குக் கடிதம் அனுப்புவேன்’’ என அறிக்கையில் விரிவாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.
நடராசன் வீட்டில் சோதனை போட்டதற்காக போலீஸ் கொடுத்திருந்த சீசர் மகஜரின் நகலையும் நிருபர்களிடம் ஜெயலலிதா கொடுத்தார். அப்போது அவர் சோர்வுடன்தான் இருந்தார். ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாததால் மேலும் கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம்’’ என்றார் ஜெயலலிதா. வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தார்கள். அவர்களிடம், ‘‘நான் ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான செய்தியை நம்ப வேண்டாம். அமைதியாகக் கலைந்து செல்லுங்கள்’’ எனச் சொல்லிவிட்டு மாடிக்குக் கிளம்பினார்.
ராஜினாமா செய்தி வெளியானதும் போயஸ் கார்டனுக்குச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் ஜெயலலிதாவிடம், ‘‘ராஜினாமா முடிவை வாபஸ் பெறுங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘ராஜினாமா செய்தது செய்ததுதான்!’’ என முதலில் அடித்துச்சொன்ன ஜெயலலிதாவை, பெரும் போராட்டத்துக்குப் பிறகே வாபஸ் வாங்க வைத்தார்கள். கடைசியில் ஒரு அறிக்கை ரெடி செய்து கொடுத்தார் ஜெயலலிதா. ‘‘இதை நீங்களே நிருபர்களிடம் கொடுத்தால்தான் நம்புவார்கள்’’ எனத் தலைவர்கள் கெஞ்சியபிறகுதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிக்கைகளைக் கொடுத்தார்.
இதற்கு சசிகலாவும் ஒருவகையில் காரணம். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நடராசன் பறித்து வைத்துக்கொண்டார் எனத் தெரிந்து, ஆத்திரத்தில் அவர் வீட்டுக்குப் போய் சண்டை போட்டார் ஜெயலலிதா. ‘‘சசிகலாவிடம்தான் அவை இருக்கின்றன. அவள் கூத்தாநல்லூர் போயிருக்கிறாள்’’ என அந்த நேரத்தில் பொய் சொல்லிச் சமாளித்தார் நடராசன். உடனே சசிகலாவை ஜெயலலிதா தொடர்புகொண்டபோது ‘‘நான் எடுத்து வரவில்லை’’ எனச் சொல்லியிருக்கிறார். நடராசன் பொய் சொன்ன விஷயம் தெரிந்ததும் ஜெயலலிதா வுக்குக் கோபம் அதிகமானது. உடனே சசிகலாவைப் புறப்பட்டு வரச் சொன்னார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் கோபித்துக்கொண்டு ஊருக்குப் போன சசிகலா, கார்டன் திரும்பியபிறகுதான் ஜெயலலிதாவின் ‘அரசியலிலிருந்து விலகவில்லை. எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யவில்லை’ என்கிற அறிக்கை வெளியானது.
சசிகலாவிடம் ஜெயலலிதா சரணாகதி ஆவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது!
(தொடரும்...)