மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

பொதியவெற்பனுக்குப் பெண்பார்க்கும் நிகழ்வு இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடந்தது. பாண்டியநாட்டுக்கு இளவரசியாகவும் பின்னாளில் பேரரசியாகவும் முடிசூட்டப்படப் போகிறவளைத் தேர்வுசெய்ய எத்தனையோ வழிமுறைகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. சேர, சோழப் பேரரசுகளிலிருந்து பெண்ணெடுக்கும் அளவிற்கு மூவருக்குமிடையே இனிய உறவு இல்லை. அதேநேரம் சிற்றரசர்களிடமிருந்து பெண்ணெடுப்பது பேரரசுக்கு அழகன்று. முன்புபோல இருந்தாற்கூட அதனைச் சிலர் ஏற்பர். ஆனால், குலசேகரபாண்டியன் காலத்தில் பாண்டியநாடு முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. அந்த நிலை இத்திருமணத்திலும் எதிரொலிக்க வேண்டும் எனப் பேரரசர் விரும்புகிறார்.

வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இளவரசிகளைப் போய் பார்த்துத் திரும்பியது பாண்டிய நாட்டுக்குழு. அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை அரண்மனைவாசிகள் ஏற்க மறுத்தனர். செல்வச்செழிப்பான நாட்டின் இளவரசியையும் பார்த்த கணமே ஆண்கள் மயங்கும் பேரழகிகளையும் அவர்கள் நிராகரிக்கத்தான் செய்தார்கள். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

எதனால் இப்படிச் செய்கிறார்கள் என்பது முதலில் விளங்காமல் இருந்தது. பின்னர்தான் செய்தி மெல்லக் கசியத் தொடங்கியது. பொதியவெற்பன் உயரத்தில் சற்றே குறைந்தவன். அவனைவிட உயரமான பெண் எவ்வளவு அழகியாக இருந்தாலும், பொதியவெற்பன் ஏற்பதில்லை; நிராகரித்துவிடுகிறான். ஆனால், அவனது உயரத்துக்கோ அல்லது அவனைவிட உயரத்தில் சற்றே குறைவான உயரமுள்ள பெண்ணையோ தேர்வுசெய்தால் பேரரசர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் நிராகரித்துவிடுகிறார்.

இளவரசர்  நிராகரிக்கக் காரணமிருப்பதைப்போல பேரரசர் நிராகரிப்பதற்கும் காரணமிருக்கத்தான் செய்தது. வணிகம் தொடங்கிப் பாதுகாப்பு வரை ஒருநாட்டில் அளவைகள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன. பேரரசின் நிர்வாகத்துக்கு மிக முக்கியமானவை கணக்குகளே. நிலவியல் சார்ந்த கணக்குகளுக்கு அடிப்படையாக நீட்டல் அளவைகள் இருக்கின்றன.

நீட்டல் அளவையின் அடிப்படையாகக் கோல் அளவு இருக்கிறது. கோல் அளவினைக்கொண்ட குறிப்புகளே அரசின் கணக்குகளாகப் பாதுகாக்கப் படுகின்றன. ஒரு கோல் எவ்வளவு நீளமுடையதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி வந்தபொழுது நாட்டினை ஆளும் பேரரசரின் கை முழ அளவே கோலின் அளவு என்று முடிவாகியுள்ளது. பலநாடுகளிலும் இதுவே வழக்கமாகவும் இருக்கிறது.

பேரரசர் குலசேகரபாண்டியனைவிட பொதியவெற்பன் குள்ளமானவனாக இருப்பதால், கை முழ அளவும் குறைவானதாகவே இருக்கிறது. இது எதிர்காலத்தில் பல மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாக அமையப்போகிறது என்பதை அரண்மனையில் பலரும் பலகாலமாக ரகசியக் குரலில் பேசிக்கொள்கின்றனர். இது அவ்வப்போது பேரரசரின் காதுக்கும் போய்ச் சேருகிறது.

இந்நிலையில் பெண்பார்க்கும்பொழுது அவனது உயரத்துக்குச் சற்றே மேலான பெண்ணாக இருந்தால், பிறக்கப்போகும் குழந்தை நல்ல உயரத்துடன் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் குழந்தை இவனைவிடக் குள்ளமாகப் பிறந்துவிடும். அது நாட்டின் எதிர்காலத்தில் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கும். எனவே, உயரமான பெண்ணாகப் பார்க்க வேண்டும் என்பது பேரரசரின் உத்தரவு. இந்த உத்தரவு இளவரசருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அவரோ தன்னைவிட உயரமான பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால் தேர்வு செய்யும்  எந்தப் பெண்ணும் முடிவாகாமலே போகிறாள்.

தந்தையின் முடிவும் மகனின் முடிவும் இருவேறுவிதமாக இருப்பதால் பெண்பார்க்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பெருங்குழப்பத்தில் சிக்கித்தவித்தனர். இந்நிலையில்தான் ‘சூல்கடல் முதுவனின் மகள் பொற்சுவையை நமது இளவரசருக்கு மணமுடித்தால் என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. இதே கேள்வி சோழநாட்டு அரண்மனையிலும் பேசப்படும் செய்தியும் வந்து சேர்ந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

சூல்கடல் முதுவனின் செல்வச்செழிப்பும் யவன அரசாட்சியுடனும் யவன வணிகர் களுடனும் அவருக்கு இருக்கும் தொடர்பும் சாத்துக்களின் தலைவன் என்ற பெரும்பதவியும் யாரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, இதில் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று பேரரசர் நினைத்தார். இளவரசன் பொதியவெற்பனோ, அப்பெண்ணைப் பற்றிய எந்த விபரத்தையும் கேட்கக்கூட ஆயத்தமாக இல்லை. வணிகமே அரசாட்சியின் அச்சாணியாக இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவனாக இருந்தான் அவன். சேரநாட்டினர் யவன வணிகத்தின் மூலமே உச்சத்தை அடைந்தனர் என்பதை யாவரும் அறிவர். எனவே, அவன் உடனடியாகச் சம்மதித்தான்.

பாண்டியநாட்டு சம்மதம் தெரிவிக்கப் பட்டவுடன் அடுத்தகட்டப் பணிகள் தொடங்கின. சிறிதுகாலத்திலே பேரரசருக்கு மற்றுமொரு மகிழ்வான செய்தியும்  வந்து சேர்ந்தது. அவர் எதிர்பார்த்ததுபோலவே பொதியவெற்பனைவிட பொற்சுவை சற்றே உயரமானவள் என்று. அவர் அன்று அடைந்த மகிழ்வுக்கு அளவில்லை. பொதியவெற்பனுக்கு இப்பொழுது இதுவெல்லாம் ஒரு பொருட்டே அன்று. சூழ்கடல் முதுவனின் மகள் அரண்மனைக்கு வந்துசேரும்பொழுது, பறவைகள் எல்லாம் மரத்தில் வந்து அடைவதைப்போல, கடலில் மிதக்கும் கப்பல்கள் எல்லாம் பாண்டியநாட்டுத் துறையில் வந்து அடையப்போகின்றன. அது கடல் மேலாதிக்கத்துக்கான வாசலைத் திறக்கும்.

வணிகம் சூழ்ச்சியை அடி உரமாகக் கொண்டது. அது கொடுத்து, வாங்கும் இரு கைகளுக்குள்ளும் குருதியைப்போல் ஓடுவது. சாத்துக்களின் பெருந்தலைவன் பலநாடுகளின் அரசியல் அறிந்தவனாக இருப்பான். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களையும் அவனால் எளிதில் அறிந்து சொல்ல முடியும்.

சாத்துக்கள் என்ற இவ்வமைப்பின் கீழுள்ள பெருவணிகர்கள் பலரும் சிற்றரசர்கள் பலருக்குப் பெண்கொடுத்துப் பெண்ணெடுத்தவர்கள். அவ்வணிகக் கூட்டத்தின் தலைவனின் மகளைப் பெண்ணெடுப்பதன் மூலம் பாண்டியநாட்டு எல்லைக்கு அப்பால் இருக்கும் பல அரசர்களினும் மேல்நிலையை இயல்பிலே பாண்டியநாடு அடைந்துவிடுகிறது.

பொதியவெற்பனின் எண்ண ஓட்டங்கள் மிகத்தீவிரமாக இருந்தன. அவ்வெண்ண ஓட்டங்களுக்கு இடையில் மணமகளின் உயரமோ, அழகோ மட்டுமல்ல; மணமகள் என்ற பெண்ணே தெரியவில்லை. கொடுத்து வாங்கும் கைகளான குலசேகரபாண்டியனின் கையிலும் சூல்கடல் முதுவனின் கையிலும் ஒரே ரத்தம்தான் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் மிகுந்த மகிழ்வோடு மணமுடிப்புக்கு ஒப்புக்கொண்டு மணவிழாவுக்கான ஏற்பாடுகளைப்பற்றிப் பேசத்தொடங்கினர்.

இந்நிலையில்தான் சூல்கடல் முதுவனின் செல்லச்செழிப்பைப் பற்றிய பல்வேறு செய்திகள் பேரரசருக்குத் தெரியவந்தன. உலகின் பல தீவுகளில் கிடைக்கும் மிக உயர்ந்த மணிக்கற்கள் எண்ணற்றவை அவரிடம் உண்டு. அதுமட்டுமல்ல, வணிகர்கள் பலரும் திருமணப்பரிசாகத் தர உள்ள பொருள்களைப்பற்றி பல்வேறு வகையான செய்திகள் வந்து சேர்ந்த வண்ணமே இருந்தன.

ஒருநாள் பேரரசர், “இத்திருமணத்தை முன்னிட்டு சாத்துக்களின் தலைவன் என்ற முறையில் சூல்கடல் முதுவனுக்கு நான் மிக உயர்ந்த பரிசுப்பொருள் ஒன்றினைத் தர விரும்புகிறேன்” என்றார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

அவையோர் அனைவரும், “கட்டாயம் தர வேண்டும் பேரரசே’’ என்றனர்.

“என்ன தருவது?”

“விலை உயர்ந்த முத்துக்கள் எண்ணற்றவை நம்மிடம் உண்டு. ஆனால், வணிகர்குலத் தலைவனுக்கு அவற்றை வழங்குதல் வியப்பை ஏற்படுத்தாது.”

“வேறென்ன வழங்குவது?”

“யவனம் மட்டுமன்று; உலகின் பல இடங்களில் செய்யப்பட்ட அழகுப்பொருள்களைப் பார்த்து மகிழ்ந்தவராகவே அவர் இருப்பார். அவரிடம் பாண்டியநாட்டு அழகுப்பொருளைக் கொடுப்பதும் பொருட்டாக இருக்காது.”

“வேறென்னதான் தருவது?”

அவையோர் சளைக்காமல் ஆலோசனை வழங்கினர். வணிகர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட பொருள்களைப் பற்றிய ஆலோசனைகளாகவே அவைகள் இருந்தன. எனவே, எந்தப் பொருளைக் கொடுப்பது என்பது தெரியாமல் திகைத்தனர். வியப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரிசுப்பொருள் பற்றிய ஆலோசனையை யாராலும் வழங்க முடியவில்லை.

பேரரசருக்கு சோர்வே மிஞ்சியது. அவையின் நடவடிக்கையை நன்கு அறிந்தவர்கள் பேரரசரின் சோர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்நேரம்தான் அவர்கள் பேசத் தொடங்குவார்கள். சோர்வோடு இருக்கும் பேரரசர் அவர்கள் சொல்லும் கருத்தை இயல்பிலே பற்ற நினைப்பார் என்பது அவர்களது எண்ணம். ஆனால், அவர்கள்கூட இன்று எழுந்து பேசவில்லை. ஏனென்றால், எல்லா கருத்துகளும் சொல்லப்பட்டாகிவிட்டது. இனிச் சொல்ல ஒன்றும் இல்லை என்ற நிலையில் தளபதி கருங்கைவாணன் எழுந்தான்.

யாரும் எதிர்பார்க்காமல்தான் இருந்தது கருங்கைவாணன் முன்வந்தது. பேரரசரை வணங்கிவிட்டுச் சொன்னான். “பேரரசர் அனுமதித்தால் சூல்கடல் முதுவன் வியக்கும் பரிசுப்பொருள் பற்றி என்னால் கூற முடியும்?”

“என்ன அது?”

“சூல்கடல் முதுவன் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் செய்துள்ள மிகச்சிறந்த கப்பல் ஒன்றுண்டு. அதன் பெயர் `கடற்கோதை’. அந்தக் கப்பலைக்கண்டு யவன அரச குடும்பமே வியந்ததாம். அதன் வேலைப்பாடுகள் அப்படி.

கடற்கோதையை மற்ற எல்லா கப்பலையும்போல ஒவ்வொரு துறைமுகத்திலும் நிறுத்தி, அடிமைகளை மாற்றி அல்லது ஓய்வெடுக்கவைத்து மீண்டும் கொண்டு செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை. தொலைதூரம்  வரை கப்பலை நிறுத்தாமல் கொண்டுசெல்லும் ஆற்றல்கொண்ட அடிமைகள் யவனர்களிடமே உண்டு. சிறைபிடிக்கப்பட்ட கருங் கொள்ளை யர்களையே அவர்கள் கப்பல் அடிமைகளாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வடிமைகளின் தோள்கள் சோர்வின்றி நெடுந் தொலைவுக்குக் கப்பலைக் கொண்டுசேர்க்கும். எனவே, யவனர்களிடம் எவ்விலையும் கொடுக்கிறேன், அவ்வகை அடிமைகளை எனக்குத் தாருங்கள் எனக் கேட்டுள்ளார். அவரின் வேண்டுதலை மறுக்கவில்லை; ஆனால், இன்னும் கொடுக்கவில்லை” என்று சொல்லி நிறுத்தினான் கருங்கைவாணன். 

பேரரசர் உள்ளிட்ட அவையோர் அனைவரும் கருங்கைவாணன் அடுத்துச் சொல்லப் போவதை உற்றுக் கவனித்தனர். “கருங்கொள்ளையர்களுக்கு இணையான திறள் தோளும் பேருடல் வலிமையுங்கொண்டவர்கள் இம்மண்ணிலும் உண்டு.”

எல்லோரும் வாய்பிளந்து கேட்டனர். “யார் அவர்கள்?” என்று பேரரசர் கேட்கும்படி எண்ணத்தைத்தூண்டி. ஆனால், அவர் கேட்பதற்கு முன் பணிந்து சொல்வது அரசவை வித்தைகளில் ஒன்று. கருங்கைவாணன் பணிந்து சொன்னான். “திரையர் கூட்டம் ஒன்றிருக்கிறது. மேற்குமலையின் ஆதிப்பழங்குடிக் கூட்டம். அவர்களை வென்று அடிமைகளாக்கினால், சூல்கடல் முதுவனை வியப்பிலே திகைக்கச் செய்யும் பரிசுப்பொருளை வழங்கலாம்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

குலசேகரபாண்டியனின் முகத்தில் மகிழ்வு பூத்தது. அரசவை வித்தைகளில் நம் எல்லோரையும் விஞ்சிக்கொண்டிருக்கிறான் கருங்கைவாணன் என்ற பேச்சு அவையில் கேட்டுக் கொண்டிருந்தபொழுது சிலரின் மனதில் மட்டும் எண்ணங்கள் வேறுவிதமாக இருந்தன. ‘கருங்கைவாணன் வலியப்போய் தலையைக் கொடுத்துவிட்டான். திரையர்கள் உள்காடுகளில் இருக்கும் மாவீரர்கள். அம்மலையடிவாரத்தில் இருக்கும் சோழன் பெரும்படை திரட்டி மாதக்கணக்கில் போரிட்டு அவர்களை வெல்ல முடியாமல் திரும்பிவிட்டான். நாம் மிகத்தொலைவில் இருப்பவர்கள். இங்கிருந்து படைதிரட்டிப் போய் அவர்களை வெல்வதெல்லாம் ஒருபோதும் நிகழாத செயல். கருங்கைவாணன் தன்பெயரைத் தானே கெடுத்துக்கொள்ள வழியமைத்துக்கொள்கிறான்’ என்று கருதினர்.

கருங்கைவாணனை நன்கு அறிந்த சிலர்தான் உண்மையான காரணத்தைச் சிந்திக்க முடிந்தது. போரினை அரசகடமையாக நினைப்பவன் அல்ல கருங்கைவாணன். அவனுக்கு அதுதான் செயல், சிந்தனை, வாழ்வு எல்லாம். போரின் அனைத்து முகத்தையும் அறியும் அவனது ஆவல் ஒருபோதும் குறைந்ததில்லை. தனது வீரர்களுக்கு எதிரியை வைத்துப் போரினைப் பயிற்றுவிக்கும் வேலையை ஒவ்வொரு போர்க்களத்திலும் செய்பவன். மிகச்சிறந்த எதிரிகளைத்தேடி களம் அமைத்துக்கொண்டே இருப்பவன்.

திரையர்களின் வீரம் பற்றி எண்ணற்ற கதைகளைக் கேட்டு வளர்ந்தவன்தான் கருங்கைவாணன். இன்று உலகம்போற்றும் பாண்டிநாட்டுத் தளபதி. ஆனாலும், கதைகள் உருவாக்கி வைத்திருக்கும் பகை ஒருபோதும் அழியாது. பகை மட்டுமே வீரத்தின் விசையைக் கூட்டவல்லது. பகையின்றி ஒருவன் வீரனாக உயிர் வாழ்ந்துவிட முடிவதில்லை. கருங்கைவாணன் எல்லா போரிலும் வெற்றியைத் தழுவினான். ஒருநிலைக்குப்பின் வெற்றி ஏற்படுத்தும் சுவை பழக்கப்பட்டதாக மாறிவிடுகிறது. அது இன்னொரு செய்தியாகத் தன்னைத்தானே கீழிறக்கிக்கொள்கிறது.

பழக்கப்பட்டதை மீறி புதிய சுவைக்கான விருப்பத்துடனே போர்க்களத்தில் அலைந்து திரிபவன் கருங்கைவாணன். அவனது மனதில் சிறுகுழந்தையாக இருந்தபொழுது விதைக்கப்பட்ட ஆதிவிதையாகத் திரையர்களின் வீரம் இருந்தது. அவர்களை வெல்லும் அவனது ஆவேசம் பெருகிக்கொண்டேதான் இருந்தது. ஆனால், எந்த ஓர் அரசும் விலையில்லா இழப்பைத் தளபதியின் விருப்பத்தின் பொருட்டுச் சந்திப்பதில்லை. அதுவும் குலசேகரபாண்டியன் போன்றதோர் அறிவுக்கூர்மையுள்ள பேரரசனிடம் எளிதில் ஒப்புதலைப் பெற்றுவிட முடியாது. ஏனென்றால், எவ்வித நிலவியல் தொடர்பும் அரசியல் தொடர்பும் இல்லாத காட்டுப்பகுதிக்குள் திரையர்கள் இருக்கிறார்கள். 

காத்திருந்த கருங்கைவாணன் சரியான வாய்ப்பைப் பயன்படுத்தினான். சூல்கடல்முதுவனின் பொருட்டு பாண்டியப்படையின் பெரும் அணிவகுப்பு வடதிசை நோக்கி நகரத்தொடங்கியது. கதையும் பகையும் வனம்நோக்கி நகர்ந்தன.

பெரும் யானைப்படையோடு புறப்பட்டுப்போனான் கருங்கைவாணன். திரையர்களைப் போரிட்டு வீழ்த்துவது எளிதான காரியமல்ல. அவர்களிடம் போரிட்டு சோழன் தோல்வியைத் தழுவினான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அப்போரின் மூலம் கற்றவைகளே மிக முக்கியமானவை. திரையர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைந்த கூட்டம். அவர்களை நேர்போரில் தோற்கடிக்க முடியாது.

அப்போரில் பங்கெடுத்த இரண்டாம்நிலை தளபதியான திதியனை விலைக்கு வாங்கினான் கருங்கைவாணன். அவனிடமிருந்து பல செய்திகள் கிடைத்தன. சோழர்படை போரிலே தோற்றது. ஆனால், திரையர்களின் எண்ணிக்கையில் சரிபாதியை அது அழித்தது. எனவே, மிக விரைவாக இன்னொரு தாக்குதலுக்குத் திட்டமிடுவோம் என்று அவன் மன்னனுக்குத் தெரிவித்துள்ளான். சோழமன்னன் செங்கனச்சோழனோ அதனை ஏற்கவில்லை. திரையர்களை வீழ்த்த முனைவது வீண்வேலை என்று மறுத்துவிட்டான்.

திதியன் வழங்கிய ஆலோசனையின் படிதான் கருங்கைவாணன் படை நடத்திச்செல்கிறான். கார்காலத்தின் முன்மழை கொட்டத்தொடங்கியது. திரையர்கள் வசிக்கும் மலைப்பகுதியில் மழையின் கால அளவு சற்றுமுன்னதாகவே வேகம்கொள்வதாக இருந்தது. அதனைக் கணித்துத்தான் திதியன் கூட்டிச்சென்றான்.

ஆற்றுவழிப்பாதையில் கவசவீரர்கள் அணிவகுக்க, யானைப்படை மேலேறிச்சென்றது. சரிபாதித்தொலைவு ஆற்றுவழிப்பாதையில் மேலேறிச் சென்றதும் அடைமழை தொடங்கியது. அதற்காகத்தான் திதியன் காத்திருந்தான். அடைமழை தொடங்கியவுடன் ஆற்றுவழியில் இருந்து கரையேறினான். எந்தக் கணமும் வெள்ளம் பெருகி வரலாம் என்பது மட்டுமல்ல காரணம். அடைமழையின்பொழுது யானைப்படையைக் காடறுத்து வேகமாக உள்ளே கொண்டுசெல்ல முடியும். மழையோசைக்குள் இச்செயலின் தன்மை வெளியே தெரியாது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

திதியன் கணித்ததைப்போலவே அடைமழை காடு கரைவதைப்போல கொட்டியது. முதல் நாளினைவிட இரண்டாம் நாளும் இரண்டாம் நாளினைவிட மூன்றாம் நாளும் அதன் தன்மை அதிகரிக்கவே செய்தது. அடைமழையின் தன்மை மிகக்கடினமாக இருந்ததால், திரையர்கள் குடில்விட்டு வெளிவராமலே இருந்தனர். சிலர் மலைக்குகைக்குள் அடைந்துகிடந்தனர்.

கவசவீரர்களைக்கொண்ட கருங்கைவாணனின் யானைப்படையைத் திரையர்களின் குடிக்குக் கொண்டுவந்து சேர்த்தான் திதியன். குடிலின் அருகில் யானையின் பிளிறல் கேட்டபொழுது ஒரு கிழவன் மட்டும் வேய்ந்த கூரையை விலக்கிப்பார்த்தான். யானைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தன. கொட்டும் மழையின் சத்தத்தோடு காற்றும் சேர்ந்துகொண்டது. பயிற்சி பெற்ற யானைகள் அவ்வெளிய குடிலைச் சுழற்றி எறிந்தன. உள்ளுக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியும் முன்னே இரும்புவலைப் பின்னல்களைக்கொண்டு வீசிப்பிடிக்கப் பட்டனர்.  குடிலுக்குப் பதில் கூர்முனைகொண்ட இரும்பு வலைப் பின்னல்களால் போர்த்தப்பட்டனர். உள்ளுக்குள் இருந்த யாரும், துளியளவு அசைந்தாலும் இரும்பின் கூர்முனைக் கிழித்து உள்ளிறங்கிக்கொண்டிருந்தது.

குடில்கள் ஒவ்வொன்றாகத் தாக்கப்பட்டன. திரையர்குடி வீரன் நான்குபேர்கூட எந்தக் கணமும் ஒன்றுசேர முடியவில்லை. குடிலுக்குள்ளிருக்கும் ஆண்களைக் கவசம் அணிந்த இருபது வீரர்கள் ஒன்று சேர்ந்து தனியே பிரித்தனர். அவ்வாறு பிரிக்கும்போதுதான் மோதல் உக்கிரங்கொண்டது. கவசவீரர்கள் நாலாபுறமும் சிதறியபடியே இருந்தனர். ஆனால், அவர்களின் கண்முன்னே குடும்பத்தினரின் மேலெல்லாம் இரும்பின் கூர்முனை குத்திக் கிழித்தபடியிருக்க, காணச்சகிக்காதுப் போரிட்டு வீழ்ந்தனர்.

வெட்டி வீசப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. வீறுகொண்டு தாக்கிய சிலர்தான் கொன்றழிக்கப் பட்டனர். மற்ற எல்லோரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். கதறல் ஓலம் மேலெழ எக்கட்டத்திலும் அடைமழை வாய்ப்புக்கொடுக்கவில்லை. சரியான திட்டமிடலோடு வந்த திதியன் மிகத்துல்லியமாகத் தாக்குதலை நிறைவேற்றினான். அதற்கு அடிப்படையாக இருந்தது கருங்கைவாணனின் துணிவு.

இக்காட்டின் உச்சியில் இருக்கும் திரையர்களைப் பிடித்துவிட முடியும் என்று தளபதிக்குத் துணிவு வருதல் எளிதல்ல. சோழன் அத்தனை ஆயிரம் படைவீரர்களைத் திரட்டிவந்து தாக்குதல் நடத்தித் தோற்றான். அவனின் தாக்குதல் நிகழாமல் இருந்திருந்தால், இவ்வெற்றி சாத்தியமில்லை. திரையர்களின் எண்ணிக்கை சரிபாதி குறைந்திருக்காது. அவர்களின் இருப்பிடம், வழித்தடம் பற்றிய  செய்திகள் எவையும் கிடைத்திருக்காது. சோழனின் படையெடுப்பே இவ்வெற்றிக்குக் காரணம். ஆனால், வெற்றியை அறுவடை செய்தது பாண்டியப்படை.

குடில்கள் எல்லாம் அழிக்கப்பட்டு ஆண், பெண் குழந்தைகள் எல்லாம் சிறைப்பிடிக்கப் பட்டுவிட்டனர். பிடிபட்ட ஆண்களின் கழுத்தில் இரும்பு வளையங்கள் தொங்கக் கைகால்களுடன் அவை பிணைக்கப்பட்டன. வீரர்கள் அறுவர் அறுவராக இணைக்கப்பட்டு யானையின் மேல்வாரச் சங்கிலிகளுடன் இறுகக்கட்டப்பட்டனர். மற்றவர்களை மொத்தமொத்தமாக அடைக்கப் பட்டதைப்போல் சுற்றுவட்டத்தில் கட்டி யாரும் துளியும் பிசுற முடியாமல் இறுக்கப்பட்டனர்.

கருங்கைவாணனின் கீழ்நிலையில் இருக்கும் தளபதிகள் மூவரும் புறப்படலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது திதியன் மட்டும் பதில் சொல்லாமல் இருந்தான். மழைகொட்டிக் கொண்டிருந்தது. அழுகையும் ஓலமும் ஆவேசமுமாக இருந்தது. எல்லாவற்றையும் மழையின் ஓசை விழுங்கியபடி இருந்தது. யார் பேசினாலும் காதருகே போய் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது.

“எல்லோரையும் பிடித்துவிட்டோம். உடனே இவ்விடம்விட்டு நகர்ந்து விடுவோம்” என்ற பொழுது திதியன் சொன்னான். “இல்லை. இவர்களின் தலைவனைக் காணவில்லை. அவனைத்தான் அப்பொழுதிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று பிடிபட்ட ஒவ்வொருவனின் முகத்தையும் அருகில்போய் பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருந்தான்.

கொட்டும் மழையில் கைகால்களில் எல்லாம் குருதி வழிய நின்றிருந்த வீரர்களை மீண்டும் மீண்டும் பார்த்தான். அவன் தேடிய தலைவன் இல்லை.

“அவன் இல்லையென்றால் என்ன? கிடைத்தவர்கள் போதுமே, நாம் புறப்படலாம்” என்று மற்றவர்கள் சொன்னபொழுது திதியன் சொன்னான், “அவனை இவ்விடம் வைத்துக் கைதுசெய்ய வேண்டும் அல்லது கொன்று முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் புறப்பட்டால் காட்டினைவிட்டுக் கீழிறங்கும்போது நம்மில் ஒருவர்கூட உயிரோடு இருக்க மாட்டோம்.” 

திதியன் சொன்னபின்புதான் ஆபத்தின் அளவு புரிந்தது. “இது அவனது காடு. அவனோடு ஐந்து வீரர்கள் இருந்தால் போதும், நமது மொத்தப்படையையும் அழித்துவிடு வான். மலைச்சரிவுகளில் ஆடுகளைப் போல நமது யானைகள் உருண்டு செல்வதைப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?” எனக் கேட்டான்.

அனைவரும் விக்கித்து நின்றனர்.

“எனது படையின் ஐநூறு வீரர்களையும் அழித்தவன் அவன்.”

கேட்பவர்களின் நெஞ்சில் அச்சம் பரவிக்கொண்டிருந்தது. “அவனைப் பிடிக்க இதுவே ஏற்ற இடம். அவனை இவ்விடம் வரவைத்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும். இவ்விடம்விட்டு நகர்ந்தால் அவனது தாக்குதலை நம்மால் சந்திக்க முடியாது.”

மழை கொட்டிக்கொண்டிருந்தது. பிடிபட்ட வீரர்கள் ஆவேசங்கொண்டு கத்தியபடி பிணைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளை வளைத்து நொறுக்க முயன்றுகொண்டிருந்தனர். திதியனின் மனதில் பகை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. எப்படியும் இன்று அவனைச் சிறைபிடிக்காமல் இவ்விடம்விட்டு நகரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். பல்வேறு வகையில் சிந்தித்த அவன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

அவனுக்குக் குழந்தைகள் உண்டு என்று கேள்விப்பட்டுள்ளான். அது நினைவுக்கு வந்த கணம் ஆவேசங்கொண்டு கத்தினான். அவனது குழந்தை எதுவென சொல்லவில்லையென்றால் எல்லா குழந்தையையும் வெட்டி வீசுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அது நிகழ்ந்துகொண்டும் இருந்தது. யாரும் சிந்திப்பதற்குக் கணப்பொழுதுகூட அவன் நேரம் வழங்கவில்லை. வார்த்தைகள் முடியும்முன் செயல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவனது சினம் கண்டு கருங்கைவாணனே அதிர்ந்தான்.

முன்னால் நின்றிருந்த ஒரு சிலரால்தான் அவன் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடிந்ததது. மற்ற எல்லோரும் அவனது செயலைக்கண்டு வெறியேறியபடி கத்தியபொழுது முன்னால் நின்றிருந்த பெண்ணொருத்தி தலைவனின் மூன்று குழந்தைகளையும் அடையாளம் காட்டினாள்.
அம்மூன்று குழந்தைகளின் இடதுகால்களையும் ஒன்றாய்க் கட்டி மரத்தின் உச்சிக்குத் தூக்கினான் திதியன். கைதானவர்களின் கதறல் மழையோசையையும் தாண்டி காட்டை உலுக்கியது. மழையின் வேகம் குறையத் தொடங்கியது.  திதியன் கடைசி வாய்ப்பை வழங்குவதாகச் சொல்லி பெரும் ஓசையை எழுப்பினான்.

அவனது வீரர்கள் மர உச்சியில் தொங்கவிடப் பட்ட குழந்தைகளை நோக்கி அம்பெய்ய ஆயத்தமாயினர். கைதான வீரர்களின் ஆவேசம் அடக்க முடியாதபடி இருந்தது. யானையோடு கட்டப்பட்ட அறுவரும் இழுத்து நகர்த்திய பொழுது நிலைகொள்ள முடியாத யானைகள் பிளிறத்தொடங்கின. அவற்றின் கால்கள் நீரோடும் ஈரமண்ணில் வழுக்க ஆரம்பித்தன. முன்புற யானைகள் நிலைகொள்ளத் திணறியபொழுது பின்புற யானையொன்று சரிந்து உட்கார்ந்தது.

திரையர்கள் யானையை நகர்த்தும் ஆவேசங்கண்டு பாண்டியப்படை உறைநிலை கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ஆனால், திதியன் எதற்கும் கலங்கவில்லை. அவனது வெறி கருங்கைவாணனையே அஞ்சச்செய்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 47

திதியனோ, கருங்கைவாணன் உள்ளிட்ட யார் முகத்தையும் பார்க்கவில்லை. யார் உத்தரவையும் கேட்கும் நிலையிலும் இல்லை. இந்தக் கணத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். வில்லேந்திய வீரன் ஒருவனை மட்டும் தனியாக நிறுத்தி ஆயத்தமாகச் சொன்னான். கயிற்றில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்த மூவரில் ஒருவனை நோக்கி அவன் குறி பார்த்தான்.

அதனைக் கவனித்த  திதியன் ஆவேசங்கொண்டு அவனது முகத்தில் தாக்க முற்பட்டான். “நான் ஒரு குழந்தைக்குக் குறிவைக்கச் சொல்லவில்லை. கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கயிற்றுக்குக் குறி வை. உனது ஒற்றை அம்பு அக்கயிற்றை அறுத்துச்செல்ல வேண்டும். மூவரும் கீழே விழுந்து சிதறிச் சாகவேண்டும்.”

பதறிய கவசவீரன் அம்பின் நுனியை சற்றே மேலே உயர்த்தி ஆடியபடி இருக்கும் கயிற்றுக்குக் குறிபார்த்தான். பெண்கள் கதறித்துடித்தனர். அடுத்து நிகழப்போவதை எண்ணுவதற்குள் நிகழ்த்தி முடிப்பான் என்பதை அவர்கள் அறிந்ததால் விபரீதத்தால் உயிர் கலங்கினர்.

அப்பொழுது என்ன ஓசை கேட்டதென கருங்கைவாணனுக்கோ, திதியனுக்கோ புரியவில்லை. ஆனால், கதறும் பெண்கள் தங்களின் அழுகையை நிறுத்தினர். யானையை இழுத்து நகர்த்திக்கொண்டிருந்த திரையர்குல ஆண்கள் தங்களின் ஆவேசம் அடக்கினர்.

கணநேரத்தில் முழு ஓசையும் அடங்கியது. கயிற்றில் தொங்கும் மூன்று சிறுவர்களின் ஓசை மட்டுமே கேட்டது. அம்பினை இழுத்தபடி நின்ற கவசவீரன் அப்படியே நிறுத்தினான். திதியனும் கருங்கைவாணனும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கிருந்து என்ன  குறிப்பு வந்தது என்பது தெரியாமல் விழித்தனர். ஆனாலும் திதியன் தினவோடு நின்றான்.

தனது குலமே சிறைப்பட்டு நிற்கும் கொடுமையைக் காணச்சகிக்காது, கையறு நிலையில், வேறுவழியேயின்றி புதர் விலக்கி வெளிவந்தான் திரையர் குலத்தலைவன் காலம்பன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...