மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்

சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஜெயலலிதாவின் அரசியல் விலகலும் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவும் அ.தி.மு.க-வுக்குள் சலசலப்பை உண்டாக்கிய அதே நேரத்தில், ஆளும் தி.மு.க மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதா, நடராசன், பண மோசடி, சிறை, கட்சிக்குள் கொந்தளிப்பு என விவகாரம் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

‘‘யாரையும் முறைகேடாக எம்.எல்.ஏ பதவியிலிருந்து துரத்த வேண்டும் என்ற மனப்பான்மை எனக்குக் கிடையாது’’ என அன்றைய முதல்வர் கருணாநிதி விளக்கம் கொடுத்தார். ‘‘யார் யார் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள் என்று பார்த்து, அவர்களின் கடிதங்களைக் கொண்டுப் போய் சபாநாயகரிடம் கொடுக்க வேண்டிய வேலை என்னுடையது கிடையாது. அது அவர்கள் கட்சிக்குள்ளேயே நடக்கிற தகராறு. அந்த அம்மாவே, தன் கைப்பட ராஜினாமா கடிதமும் அறிக்கையும் எழுதியது உண்மை என ஒப்புக்கொண்டிருக்கிறார். அரசியல் சட்டப்படி ஜெயலலிதாவிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டிருக்கிறார். மொழிப்போரில் ஈடுபட்டதற்காக ஒன்பது தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறித்தார்களே... அதுபோன்ற மனப்பான்மை எனக்கு  இருந்ததில்லை’’ எனப் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருணாநிதி, முக்கியமான ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.

சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்

‘‘இப்படி பதவி விலகல் கடிதத்தையும் அரசியலிலிருந்து விலகுகிறேன் என அறிக்கையும் எழுதுகிற சூழ்நிலை 15-ம் தேதியன்று ஏன் ஏற்பட்டது என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்’’ என்றார். அந்த 15-ம் தேதி என்ன நடந்தது? அதற்கு முந்தைய தினங்களில்தான் கட்சிப் பண விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினருடன் ஜெயலலிதா சண்டை போட்டதாகவும், அதனால் சசிகலா கோபித்துக் கொண்டு தஞ்சாவூர் கிளம்பிப் போனதாகவும் அப்போது பேச்சுகள் கிளம்பின. அதனால்தான் ‘அரசியல் விலகல்’ முடிவை ஜெயலலிதா எடுத்திருந்தார்.

‘‘நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதை விளக்கி, சபாநாயகருக்குக் கடிதம் அனுப்புவேன்’’ என ஜெயலலிதா சொல்லியிருந்தாலும், அந்த ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டால் என்னாவது? ஜெயலலிதாவைவிட அதிகம் கவலைப்பட்டது சசிகலா குடும்பம்தான். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி வரையில் இந்தப் பிரச்னையைக் கொண்டு போனார்கள். ‘சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்காக சதி நடைபெறுகிறது’ என ராஜீவ் காந்திக்குத் தந்தி அடித்தார் ஜெயலலிதா. தந்தியின் நகலை ஜனாதிபதிக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் தமிழக கவர்னருக்கும் அனுப்பினார்கள். ஜெயலலிதா அனுப்பிய தந்தியின் வாசகத்தைப் படித்தாலே சிரிப்பு வரும்.

‘எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகுவதாக எனக்குத் தெரியாமலேயே (!) சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செய்தித்தாள்கள் மூலம்தான் இந்த விஷயமே எனக்குத் தெரியும். நடராசன் வீட்டில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கடிதங்களை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டுமே தவிர, சபாநாயகரிடம் தருவதற்கு போலீஸுக்கு சட்டப்படி அதிகாரமில்லை’ எனத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார். ‘தனக்குத் தெரியா மலேயே’ என்கிற வார்த்தைப்பதத்தை உருவாக்கியதே சசிகலா குடும்பம்தான். இப்படித்தான் ‘தனக்குத் தெரியாமலே 2007 ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஓட்டுப் போட சென்றுவிட்டார்கள்’ என்றார் ஜெயலலிதா. 2011 சட்டசபைத் தேர்தலில் ‘தனக்குத் தெரியாமலேயே வேட்பாளர் பட்டியல் வெளியானது’ என அறிவித்தார் ஜெயலலிதா. இப்படி ‘தனக்குத் தெரியாமலேயே’ என்கிற டயலாக்கை எழுதிக் கொடுத்து அதை ஜெயலலிதா வாயாலேயே கடைசிக் காலம் வரையில் சொல்லவைத்துக் கொண்டிருந்தது சசிகலா குடும்பம்.

சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்

ராஜீவ் காந்திக்குத் தந்தி அனுப்பிய கையோடு, ‘எம்.எல்.ஏ பதவியில் நீடிக்கிறேன்’ என சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. ‘சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட விரும்புவதாக நான் நேரிலோ, உதவியாளர் மூலமோ, அஞ்சல் மூலமாகவோ கடிதம் எதுவும் அனுப்பவில்லை. நான் ராஜினாமா செய்திருப்பதாக பத்திரிகைகளில் வந்த செய்தி முற்றிலும் தவறானது’ என அதில் குறிப்பிட்டிருந்தார். பதிலுக்கு, ‘தனது சொந்த விருப்பத்தின்பேரில்தான் கடிதம் அனுப்பினாரா’ என ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தமிழ்குடிமகன் கடிதம் அனுப்பினார்.

நடராசன் கைதுக்குப் பிறகு அரசின் நடவடிக்கைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. அ.தி.மு.க-வின் கட்சிப் பணத்தை முடக்க நடவடிக்கை எடுத்தது போலீஸ். ‘சட்டசபைத் தேர்தலில் (1989) அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பியவர்கள் சார்பில் குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அப்படி டெபாசிட் செய்தும் சீட் கிடைக்காதவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஜெயலலிதா பெயரில் இருக்கும் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும்’ என வங்கி அதிகாரிகளை போலீஸ் கேட்டுக் கொண்டது. அதன்பிறகு புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. தேனியைச் சேர்ந்த ஸ்ரீதர், ‘நகை, சொத்து ஆகியவற்றை விற்று சுமார் எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தைத் திருப்பி தரவில்லை’ என மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இதற்கிடையே, நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக போலீஸ் அளித்த சீசர் மகஜர் பிரச்னையை உண்டாக்கியது. ‘‘எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அடங்கிய சீல் வைத்த உறையை போலீஸார் பிரித்துப் பார்த்திருக்கிறார்கள்’’ என அன்றைய அ.தி.மு.க பொருளாளர் எஸ்.மாதவன் அதிரடி கிளப்பினார். அவர் அப்படிச் சொன்னதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. ஜெயலலிதாவின் அறிக்கை, சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதம் அடங்கிய சீல் வைத்த உறை ஆகியவை பற்றி சீசர் மகஜரில் 6 மற்றும் 7-வது பத்திகளில் போலீஸார் எழுதியிருக்கிறார்கள். 6-வது பத்தியில், ‘நீல நிற பேடில் 15.3.89 தேதியிட்ட அறிக்கைகள் 10’ எனக் கூறப்பட்டிருந்தது. ‘சபாநாயகருக்கு விலாசம் இடப்பட்ட கவரைப் பிரித்துப் பார்த்ததில், ‘ஜெ.ஜெயலலிதா எம்.எல்.ஏ தேதி 15.3.89’ என்ற கடிதம் இருந்தது’ என 7-வது பத்தியில் போலீஸாரே எழுதியிருந்தார்கள். இதில் பிரச்னையே, சீல் வைத்த கவரை போலீஸாரே பிரித்தனர் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுதான்.

சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்

ஆனாலும், ‘‘எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக ஜெயலலிதா எழுதிய கடிதத்தைப் பத்திரிகைகளுக்கு போலீஸார்தான் கொடுத்தார்கள் என அ.தி.மு.க தலைவர்கள் சொல்வது உண்மையல்ல. ஜெயலலிதா எழுதிய இரண்டு ஆவணங்களின் போட்டோ நகல்கள் நடராசன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது உண்மைதான். ஆனால், அவற்றின் உண்மையான பிரதிகள் எங்கே இருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியாது’’ என போலீஸ் கமிஷனர் துரை சொன்னது முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. 

 சீல் வைத்த கவரை போலீஸ் பிரிப்பதற்கு முன்பு நடராசன் பிரித்து படித்திருந்தார் என்பது எடுபடாமல் போனது. நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மற்ற பொருள்கள் பற்றியும் சீசர் மகஜரில் குறிப்பிட்டிருந்தார்கள். கோட்டையில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நடராசன் பெயரில் வழங்கப்பட்ட பாஸ் புத்தகம். அ.தி.மு.க தேர்தல் டெபாசிட் பணம் சம்பந்தமாக 10 தாள்களில் எழுதப்பட்ட விவரம். நடராசன் பெயரில் இருந்த பாஸ்போர்ட்... இவை அனைத்தும் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக அந்த சீசர் மகஜரில் எழுதப்பட்டிருந்தது.

(தொடரும்...)