மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 74 - “நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர்!”

சசிகலா ஜாதகம் - 74 - “நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 74 - “நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர்!”

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் மீடியாவுக்குக் கிடைக்க விடாமல், தடுத்துப் பறித்துக் கொண்ட நடராசனை, வீடேறிப் போய் திட்டித் தீர்த்த ஜெயலலிதாவின் கோபம் 24 மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா ‘அணி’ தாவினார். சசிகலா அவரை ‘தடம்’ மாற்றினார்.

‘‘நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதி இந்த அளவுக்குக் கீழே இறங்கிச் செயல்படுவார் என்று நடராசனோ, நானோ எதிர்பார்க்கவில்லை’’ என நடராசன் மீதான கோபத்தைக் கருணாநிதி மீது மடைமாற்றினார் ஜெயலலிதா. நடராசன் மட்டும் சும்மா இருப்பாரா? ‘‘தனது ராஜினாமா பற்றிய கடிதத்தையும் அறிக்கையையும் என்னிடம் கொடுத்த பிறகு, டெலிபோன் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு அவற்றைக் கிழித்துப் போட்டுவிடும்படி ஜெயலலிதா கூறினார். ஆனால், அவற்றை ஜெயலலிதா மற்றும் என் மனைவி சசிகலா ஆகியோர் முன்னிலையில்தான் கிழித்துப் போட வேண்டும் என விரும்பினேன். அதனால்தான் அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தேன்’’ எனப் பொழிப்புரை சொன்னார் நடராசன்.

சசிகலா ஜாதகம் - 74 - “நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர்!”

இதுமட்டுமா சொன்னார். ‘‘என்னைக் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஜெயலலிதா ராஜினாமா கடிதம் மற்றும் அரசியல் விலகல் அறிக்கை விவரங்களை வெளியிட்டால் எனக்குத் தகுந்த சன்மானம் தருவதாகவும், என்னை மீண்டும் அரசு வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை காட்டினார்கள். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர்” என்றெல்லாம் கதை விட்டார் நடராசன். ஜெயலலிதாவின் கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் நடராசன் வீட்டில் போலீஸ் கைப்பற்றிவிட்ட பிறகு, நடராசனிடம் போலீஸ் ஏன் கெஞ்ச வேண்டும். அரசியலுக்காக நடராசன் அடித்த ஸ்டன்ட்டுகளில் இது அப்பர் டைவ்.
ஜெயலலிதாவும் நடராசனும் போட்ட நாடகத்தைப் பார்த்து, அன்றைக்கு அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த  ஆலடி அருணா அடித்த கமென்ட் இது. ‘‘ஜெயலலிதா எதிலும் சுயமாக முடிவெடுக்க முடியாதவர். ராஜினாமா கடிதம் எழுதியது உண்மை. ஆனால், அதை அனுப்பி வைக்கவில்லை என்று வெட்கமின்றி வாதிடுகிறார். ‘கடிதத்தை அனுப்பி வைக்கவில்லை’ என இப்போது மறுக்கிறாரே... இதுதான் கட்சிக்காரர்களின் நிர்பந்தத்தால், ஒப்பாரியால் புரிந்திடும் செயல்! உண்மையில் அவராக மனம் மாறியிருந்தால் அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும் அல்லது நடராசனிடம் இருந்து திரும்பி வாங்கியிருக்க வேண்டும்.’’ என்றார். அன்றைய முதல்வர் கருணாநிதியும் தன் பாணியில் பதிலடி கொடுத்தார். ‘‘சிட்பண்ட் நடத்துகிறார்கள். பத்துப் பேரிடம் பணம் வாங்குகிறார்கள். தர வேண்டிய பணத்தை ஒழுங்காகத் தராவிட்டால், ஏமாந்தவன் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதா, இல்லையா?’’ எனக் கேட்டார்.

அரசியல் சண்டைகள் இருக்கட்டும். நடராசன் கைதுக்கு வருவோம். நடராசனைக் கைது செய்து, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை 11-வது பெருநகர மாஜிஸ்திரேட் ராமசந்திர ராவ் முன்பு ஆஜர்படுத்தியது போலீஸ். ‘‘இந்தக் கைதில் உள்நோக்கம் உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் மறுக்கப்பட்டால் போலீஸ் காவல் தரக் கூடாது’’ என நடராசனின் வழக்கறிஞர்கள் கே.சுப்பிரமணியம், பட்டாபிராமன், என்.டி.வானமாமலை ஆகியோர் வாதிட்டார்கள். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், ‘‘இந்த வழக்கில் ஐந்து பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நடராசனிடமும் அவரின் உதவியாளர் சேகரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் தரும் தகவலை வைத்து மேலும் மூன்று பேரைக் கைது செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் போலீஸ் காவலுக்கு அனுமதி வேண்டும்’’ என்றார்.

‘‘குடல் புண் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடராசன், சிகிச்சை பெற வேண்டும். அதனால் அவரை ஜாமீனில் விட வேண்டும்’’ என வானமாமலை வற்புறுத்தினார். விசாரணையைத் தள்ளி வைத்த மாஜிஸ்திரேட், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் நடராசனைப் பரிசோதனை செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார். மருத்துவமனை சிறப்பு வார்டில் நடராசன் தங்கி சிகிச்சை பெற வசதி செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார். ‘‘குடல்புண் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால்தான் அரசு வேலையை ராஜினாமா செய்தேன்’’ என மாஜிஸ்திரேட்டிடம் சொன்னார் நடராசன்.

இப்படி கோர்ட் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திருநாவுக்கரசர், எஸ்.டி.சோமசுந்தரம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் நடராசனுக்கு ஆதரவாக வந்திருந்தார்கள். இந்த மூன்று பேருமே நடராசனை, அதற்கு சில காலம் முன்பு வரையில் திட்டியவர்கள். என்ன மாயமோ... என்ன மந்திரமோ..!

(தொடரும்...)
படம்: சு.குமரேசன்

நடராசன் கைதும் ரியாக்‌ஷனும்!

நடராசன் கைது செய்யப்பட்டபோது அன்றைய அரசியல் தலைகள் சொன்ன கருத்துகளின் ரீவைண்ட் இங்கே...

‘‘ராஜினாமா கடிதத்தை நடராசன் கிழித்துப் போடுவது சரியல்ல; ஜெயலலிதாதான் கிழிக்க வேண்டும். எனவே, அவரிடமே கொடுத்துவிடலாம் என்றுதான் பத்திரமாக நடராசன் வைத்திருந்தார். அதற்குள் போலீஸ் கைப்பற்றிவிட்டது.’’  - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

‘‘ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பதவி விலக முடிவு செய்தது உண்மை. ‘நான் இல்லாவிட்டால்கூட மற்றவர்களால் அ.தி.மு.க-வை வழிநடத்திச் செல்ல முடியும்’ என ஜெயலலிதா நம்பி, விலக விருப்பம் தெரிவித்திருக்கலாம்.’’ - முத்துசாமி

‘‘கே.கே.எஸ்.எஸ்.ஆர். எங்களிடம், ‘அந்த அம்மா கோவமா இருக்காங்க. ராஜினாமா செய்யப்போவதாகச் சொல்கிறார்கள்’ என்றார். உடனே நாங்கள் அவரைச் சந்தித்துப் பேசிய பிறகு ராஜினாமா முடிவை வாபஸ் வாங்கிக் கொண்டார். ஆனால், கடிதம் எழுதிய விவரம் எங்களுக்குத் தெரியாது.’’ - மாதவன்

‘‘ ‘எங்கேயோ, என்னமோ நடக்கிறது. பெல்ட்டால் அடித்துக் கொள்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். நமக்கென்ன வந்தது?’ என்று நாம் சாதாரண பொறுப்பிலே இருந்தால் சொல்லி விடலாம். கட்சி வைத்திருக்கிறோம்... கேட்கக் கூடாது என்றால் கட்சி வைத்திருப்பது ஏமாற்றுவதற்காகவா? ஏராளமான பணத்தைக் கட்சியினருக்குத் திருப்பித் தரவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்தால் ஏன் எரிச்சலடைகிறார்கள்?’’ - கருணாநிதி

‘‘இந்தக் கொடுமைகளைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. சிறைக் கொடுமைகளைச் சந்தித்து, எனது உயிரையே தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன்.’’ - ஜெயலலிதா

‘‘தேர்தலில் நிதியாகவும், நன்கொடையாகவும் வாங்கப்பட்ட மொத்தத் தொகை 3 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய். இதில் 3 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி இருப்பது 13 லட்சம் ரூபாய்தான். இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், திருப்பிக் கொடுத்து வருகிறோம்.’’  - திருநாவுக்கரசர்

‘‘போட்டியிட விரும்பியவர்களிடம் மூன்றரை கோடி ரூபாய்வரை வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் திருப்பித் தரப்படவில்லை. செலவு செய்யப்பட்டுவிட்டது. பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிய ஜெயலலிதாவுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து மூன்றரை கோடி ரூபாய் வந்தது?’’ - ஆலடி அருணா

‘‘தமிழ்நாடு முழுவதிலும் எத்தனையோ பேரிடம் கொடுக்கல், வாங்கல் நடக்கிறது. இந்த சிவில் தகராறுகள் பற்றிப் புகார் கொடுத்தால் கமிஷனர் துரை உடனடியாகத் தீர்வு செய்து வைப்பாரா?’’ - திருநாவுக்கரசர்

‘‘ஒரு பெண் என்றுகூடப் பார்க்காமல் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். என் வீட்டுக்குக் காய்கறி வாங்கக்கூட யாரும் வெளியே போக முடியவில்லை. வீட்டு வேலைக்காரர்களை மிரட்டி, எனக்கு எதிராக வாக்குமூலம் வாங்க போலீஸார் முயற்சி செய்கின்றனர்.’’ - ஜெயலலிதா