மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 48

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

திரையர் கூட்டத்தை வென்று, அவர்களை மதுரைக்குக் கொண்டுவந்து சேர்த்தான் கருங்கைவாணன். மதுரை மணவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தது. யவனர்கள் அளவிட முடியாத பரிசுப் பொருள்களோடு வந்திருந்தனர். அவர்களை மகிழ்விக்க நூறுகால் மண்டபத்தில் பெரும் நாட்டிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. நள்ளிரவுக்குப் பின்தான் வென்றவர்களோடு கோட்டைக்குள் நுழைந்தான் கருங்கைவாணன்.

மற்றொரு காலத்தில் இது நிகழ்ந்திருந்தால், இவ்வெற்றியே பெருங்கொண்டாட்டமாக மாறியிருந்திருக்கும். ஆனால், மணவிழாவில் நகரமே திளைத்துக்கொண்டிருக்க, இவ்வெற்றி வெளித்தெரியாமல் மூழ்கியது. யவனர்கள் இவ்விழாவின் பொருட்டுப் பாண்டிய நாட்டினைச் சிறப்பிக்க `மீனாள்’ என்ற நாணயத்தை வெளியிட்டனர். மாமன்னர் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த அன்றைய நள்ளிரவுதான் கருங்கைவாணன் வந்துசேர்ந்த செய்தி சொல்லப்பட்டது.

அதிகாலையிலையே கருங்கைவாணனை அழைத்து ஆரத்தழுவினார் பேரரசர். சூல்கடல் முதுவனை வியக்கவைக்கும் பரிசுப்பொருளினைத் தர வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றினான் தளபதி. அவனது இச்செயலுக்காக எண்ணற்ற பரிசுகளை அள்ளி வழங்கினார். இப்போரில் துணைநின்ற திதியனுக்கும் மாமன்னர் பரிசுகளை வழங்கினார். பெரும் உற்சாகத்தோடு அன்று மாலையிலிருந்து மணவிழா விருந்தில் பங்கெடுக்கத் தொடங்கினான் கருங்கைவாணன்.

திருமணக்கொண்டாட்டம் எண்ணிலடங்காத நிகழ்வுகளாக மதுரை எங்கும் நிகழ்ந்துகொண்டிருந்தது. வைகை ததும்பி ஓட, கரையெங்கும் ஊன்றப்பட்ட எண்ணாயிரம் விளக்குகள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. பார்க்கும் கண்கள் பரவசத்தில் திளைத்தன. இவ்வுலகின் வியத்தகு நகரமாக மதுரை ஒளிவீசிக்கொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 48

வைகையின் அலைகள் சுடரொலியை ஏந்தியபடி நகர்ந்துகொண்டிருந்தன. நதியின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஓடத்தில் பொற்சுவை போய்க்கொண்டிருந்தாள். கரையின் இருபுறமும் விளக்கொளி மின்ன, எண்ணிலடங்காத மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.

கரையெங்கும் யாராலும் பிடிக்கப்படாமலேயே இத்தனை ஆயிரம் விளக்குகள் எப்படி நிற்கின்றன என்பதே காண்போருக்குப் பெரும் வியப்பாக இருந்தது. விளக்கின் கீழ்ப்பகுதி ஈட்டியின் முனைபோல் கூர்முனைகொண்டிருக்க, அதனை மண்ணில் குத்தி அதன் மேற்பகுதியில் அழகிய அகல் விரிந்திருக்க, அதில் இடப்பட்டிருந்த திரியில் இருந்து சுடர் எரிந்துகொண்டிருந்தது. இதன் பெயர் குத்துவிளக்கென்றும் இத்திருமணத்தின் பொருட்டு வைகைக்கரையில் இதுபோல எண்ணாயிரம் விளக்குகளை ஏற்ற வேண்டியுள்ளதால், அவற்றைப் பொருத்தமான தன்மையோடு வடிவமையுங்கள் என்றும் பேரரசர் சொன்னதனால் பாண்டியநாட்டுக் கலைஞர்கள் இக்குத்துவிளக்குகளை வடிவமைத்தனர்.

ஆற்றங்கரையில் யாரும் தொடாமலேயே ஆளுயரத்துக்கு நின்று ஒளிவீசும் இவ்விளக்கு களைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வைகையில் பேரலங்காரத்தோடு நகரும்  சிற்றோடத்தின் மீதிருந்து இருகரைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள் பொற்சுவை. சற்றுப் பின்தள்ளி அமர்ந்திருந்தாள் சுகமதி. அன்னகர்கள் இருவர் ஓடத்தை நீர்வலித்து ஓட்டிக்கொண்டிருந்தனர்

“ஈட்டிகளைத் தலைகீழாக மண்ணிற்குத்தி அதன் மேற்புறத்தில் அகலமைத்து விளக்காக்கி இருக்கிறார்கள். அதனால்தான் யாரும் பிடிக்காமலேயே நின்று ஒளிவீசுகின்றன” என்று புதுமையான குத்துவிளக்கைப் பற்றிச் சொன்னாள் சுகமதி.

வழக்கம்போல் சற்றே அசட்டையான குரலில் பொற்சுவை சொன்னாள், “இத்திருமணத்தில் எத்தனை  நிகழ்வுகள் தலைகீழாக இருக்கின்றன பார்த்தாயா?”

தாக்குதலுக்கு உள்ளாதல் சுகமதிக்குப் புதிதன்று. ஆனாலும், இம்முறை அதனை எதிர்கொள்வது என முடிவெடுத்தாள். மணநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் கடந்தகாலத்திலேயே மூழ்கி இருப்பது பொருத்தமல்ல என்றுபட்டது. “தலைகீழாக மண்ணில் புதைந்ததைப் பற்றியே ஏன் நினைவைச் செலுத்த வேண்டும். புதிதாய் ஒளிவீசும் எண்ணற்ற சுடர்களும் நமது கண்களுக்குத் தெரியத்தானே செய்கின்றன” சற்றே மெல்லிய குரலில் ஆனால், உறுதியோடு சொன்னாள் சுகமதி.

மறுமொழியெதுவும் இல்லை. முதன்முறை பொற்சுவை அமைதியானாள்.

ஓடம் நகர்ந்துகொண்டே இருந்தது. பேச்சொலி எதுவும் இல்லை. சிறிது நேரங்கழித்து சுகமதி அன்னகர்களைப் பார்த்துச் சொன்னாள். “ஓடத்தைப் படித்துறைக்குக் கொண்டு செல்லுங்கள். மலரணியும் சடங்கிற்குச் செல்ல வேண்டும்.”

அன்னகர்கள் ஓடத்தைக் கரை நோக்கித் திருப்பினர். பொற்சுவை எதுவும் பேசாமல் இருந்தாள். சுகமதியின் மனதுக்குள் அச்சம் வளரத்தொடங்கியது. ஓடம் கரைநோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பொற்சுவையின் அமைதியைப் பொறுக்க முடியாமல் சுகமதி சொன்னாள், “மலரணியும் சடங்கிற்குப் பொழுதாகிவிட்டது, நாம் அலங்காரம் முடித்து அவைக்குச் சென்றாக வேண்டும், பேரரசரும் இளவரசரும் வந்துவிடுவார்கள். அதனால்தான் சொன்னேன்” என்றாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 48

வைகையின் மெல்லிய அலைகளைப் பார்த்தபடியே பொற்சுவை சொன்னாள், “எனது ஓடம் எப்பொழுதோ திருப்பப்பட்டுவிட்டது சுகமதி. இப்பொழுது உனது பங்கிற்கு நீயும் திருப்புகிறாய்; அவ்வளவுதான்.”

பேரரசரின் தனிமாளிகையில் நடந்த உரையாடல் பெருங்கலக்கத்தையே உருவாக்கியது. தேவாங்கு விலங்கைக் கைப்பற்றப் போர்தொடுக்கலாம் என்று கருங்கைவாணனும் இளவரசரும் சொன்ன  கருத்தை மையூர்கிழார் ஒரு மதயானையின் கதையைச் சொல்லித் தகர்த்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மாமன்னர் எழுந்து மலரணியும் சடங்கிற்கு வந்துவிட்டார். இளவரசனும் சூழ்கடல் முதுவனும் அதற்கு முன்பே விரைந்து வந்தனர். எல்லோரின் ஓடங்களும் திசைமாறித்தான் சடங்கு நடக்கும் அவைக்கு வந்து சேர்ந்தன.

என்ன செய்யலாம் என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்தான் கருங்கைவாணன், ‘நாம் படையெடுத்துச் செல்வதைப் பேரரசர் அனுமதிக்கப் போவதில்லை. வேறு என்னதான் வழி? எப்படியாவது தேவாங்கு விலங்கைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். திரையர் போன்ற மாவீரர்களையே வென்று கொண்டுவர முடிந்த நம்மால் இதனைச் செய்ய முடியாதா’ என்று எண்ணிய கணத்தில்தான் இச்சிந்தனை தோன்றியது. தோன்றிய கணத்திலே முடிவு செய்தான்; `திரையர்களே இதற்குப் பொருத்தமானவர்கள்.’

மலரணியும் சடங்கு முடித்துப் பள்ளியறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பேரரசரைக் காணக் காத்திருந்தான் கருங்கைவாணன். இரவு நெடுநேரமாகியிருந்தது. இப்பொழுதே சொல்ல வேண்டிய அளவுக்கு என்ன முக்கியச் செய்தி எனக் கேட்ட பேரரசரிடம் விளக்கிச் சொன்னான் கருங்கைவாணன்.

சமவெளி மனிதர்கள் யாராக இருந்தாலும் காட்டுக்குள் ஊடறுத்து உள் நுழைய முடியாது. பெரும்வீரன்கூட காட்டின் சிறு பூச்சிக்கடிக்கு எளிதில் பலியாவான். பாதையற்ற பாதைகளைக்கொண்ட மலைத்தொடர்களைத் தாண்டிச்செல்ல காடுபற்றிய அளவற்ற அறிவும் இயல்பிலேயே அதற்கான உடல்வாகும் வாழ்வெல்லாம் காட்டில் உடல் வளர்த்த மனிதனாகவும் இருத்தல் வேண்டும். மலைமக்கள் எல்லோரையுங்கூட இதில் ஈடுபடுத்திவிட முடியாது. பாரியின் ஆற்றலும் பறம்பு மக்களின் வீரமும் யாவரும் அறிந்தது. அவற்றை எதிர்கொண்டு மீண்டு வர வேண்டுமென்றால், அவர்களைவிடப் பெரும் வீரர்களால்தான் முடியும். அதற்கு இம்மண்ணில் பொருத்தமானவர்கள் திரையர்கள் மட்டுமே. எனவே, அவர்களை இதில் ஈடுபடுத்தலாம் என்று சொல்லி அதற்கான திட்டத்தையும் சொன்னான் கருங்கைவாணன்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தேவாங்கைக் கொண்டுவர, அரசவையில் எண்ணற்ற வழிமுறைகள் சொல்லப்பட்டன. அதில் ஒன்றுகூட பொருத்தமானதாகப் பேரரசருக்குப் படவில்லை. பறம்பின் தன்மையும் பாரியின் ஆற்றலும் அறியாமல் இவர்கள் பேசுகின்றனர் என்றே அவருக்குத் தோன்றியது. மாற்றுவழியைக் கண்டறிய முடியாத மனநிலையோடு மலரணியும் சடங்கிற்குச் சென்ற பேரரசர், அன்றிரவே இவ்வளவு சிறப்பானதொரு வழி கண்டறியப்படும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

“இன்று அரசவையில் நடந்த முக்கியமான உரையாடலால் வைகைக்கரையில் எண்ணாயிரம் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்ட காட்சியைக் காண முடியாமல் போய்விட்டதே என்று மனம் மிகுந்த கவலைகொண்டிருந்தது. ஆனால், உனது ஆலோசனை அளவற்ற மகிழ்வோடு என்னைப் பள்ளியறைக்கு அனுப்புகிறது” எனச் சொல்லி கருங்கைவாணனைப் பாராட்டி அனுப்பி வைத்தார் பேரரசர்.

இரவோடு இரவாக சிறைக்கொட்டடிக்குள் நுழைந்தான் கருங்கைவாணன். இரும்புக் கம்பிகளால் இறுகப் பிணைக்கப்பட்ட காலம்பனிடம் பேசத் தொடங்கினான். சென்ற போரில் திதியன் ஆற்றிய பணியை இப்பொழுது காலம்பனுக்கு வழங்குவதுதான் அவனது திட்டம். ஆனால், அது அவ்வளவு எளிதானதன்று.

“கடற்பயணத்துக்கு வலிமை மிகுந்த அடிமைகள் தேவை என்பதற்காகத்தான் உங்களைச் சிறைபிடித்தோம். ஆனால், எதிர்பாராத காரணத்தால் நாங்களே உங்களுக்கு உதவிசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று பேச்சைத் தொடங்கினான் கருங்கைவாணன். சுற்றிக் கவசவீரர்கள் நின்றிருந்தாலும் இக்கணம்கூட அவனைக் கொன்றுவிட காலம்பனால் முடியும். ஆனால், தன் குலம் முழுவதும் சிறைப்பட்டிருப்பதால் அமைதி காப்பதே முறை என்று எண்ணிக்கொண்டிருந்தான். கருங்கைவாணன் என்ன சொன்னான் என்பது அவனது காதிலே விழவில்லை.

வெறியேறிக் கிடக்கும் ஒருவனிடம் ஆசையைத் தூண்டுவது எளிதல்ல, தனது குலமும் குடியும் சூறையாடப்பட்டிருக்கும் நிலையில் அவனை ஆற்றுப்படுத்த யாராலும் இயலாது. அரச வாழ்வை அனுபவித்தவனின் மனம் ஆசையின் வழியே சிந்தித்துப் பழகியிருக்கும். தனக்கான உடைமையை, பொன்னை, பொருளைச் சேர்த்துச் சிறப்பாக வாழநினைக்கும் குடிகளுக்கு இவ்வாசைகள் எண்ணற்றனவாக இருக்கின்றன. ஆனால், மலைமக்களின் கனவில் இவை எவையும் இடம்பெறுவதில்லை. திதியனைப்போல காலம்பனை விலைபேசிவிட முடியாது என்பதை பல முயற்சிகளுக்குப் பின்னால்தான் அவர்கள் உணர்ந்தனர்.

பறம்பின் மக்கள் திரையர்களோடு இரத்த உறவுகொண்டவர்கள். அவர்களுக்கு எதிரான எந்தவொரு சிறு செயலையும் செய்வதைவிட தாம் மரணிப்பதே மேல் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். குலச்சமூகத்தில் முன்னோர்களின் வாக்கிற்கு இருக்கும் இடத்தை சமவெளி மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. தம் கூட்டம் முழுமையும் அழிந்தாலும் குலத்தின் நம்பிக்கைக்குத் தீங்கிழைக்க மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 48

‘என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்த கருங்கைவாணனுக்கு  இணையற்ற பெரும்வீரனான காலம்பன் அவனாக வந்து கைதான அந்தக் கணம் நினைவுக்கு வந்தது. மூன்று குழந்தைகளை வைத்து அதனைத் திதியனால் செய்ய முடிந்ததை மொத்தக்கூட்டத்தையும் வைத்து நாம் செய்தால் என்ன என்று தோன்றியது. கருங்கைவாணன் உறுதியான குரலில் தனது திட்டத்தை அறிவித்தான்.

“எமது பேரரசுக்கு இப்பொழுது தேவாங்கு விலங்கு மிகவும் தேவை. உங்களில் எத்தனை பேர் போக வேண்டும் என்று சொல்லுங்கள் அவர்களை அனுப்புகிறோம். நாங்கள் விரும்பியபடி அவற்றை நீங்கள் கொண்டு வந்துவிட்டால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் விடுவிக்கப் பேரரசர் இசைவு தெரிவித்துள்ளார். இப்பணியைச் செய்ய மறுத்தால், ஆண்கள் எல்லோரும் கப்பலில் அடிமைகளாகச் செல்லத் தொடங்குவீர்கள். ஆனால், மற்றவர்கள் என்னாவார்கள் என்று தெரியாது. ஓர் உத்தரவில் எல்லாம் முடிந்துவிடும். நாளைக் காலைக்குள் முடிவினைச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான் கருங்கைவாணன்.

கூட்டத்தில் இருந்த எல்லோர்க்கும் இச்செய்தி சொல்லப்பட்டது. காலம்பன் கடைசிவரை மறுத்தான். ஆனால், திரையர்குலக் கிழவன் சொன்னான், “உயிர் ஒரு பொருட்டல்ல, ஆனால், கருங்கைவாணனைக் கொல்லும் ஒரு வாய்ப்புக்காக அதனைப் பயன்படுத்தினால் எவ்வளவு  பொருளுள்ளதாக மாறும்?”

இவ்வினா காலம்பனுக்குப் புதிய திசைவழியைக் காட்டத் தொடங்கியது. கிழவன் மேலும் சொன்னான், “பறம்பின் மக்களைப் பிடித்துவரச் சொல்லவில்லை. அவ்விலங்கைத்தான் கொண்டுவரச் சொல்லுகிறார்கள். நம் கூட்டமே அதனால் உயிர்வாழும் என்றால், அதனைத் துணிந்து செய்யலாம். நம் மூதாதையர்களே அதற்குத் துணைநிற்பார்கள். நம்மிடத்தில் வைத்து நம்மைச் சிறைப்பிடித்த அவர்களே, அவர்களின் இடத்தில் வைத்து நம்மை விடுவிக்கும் சூழல் வந்துள்ளது. இதனை முதலில் பயன்படுத்துவோம். நாளை இதுவும் மாறும்.”

கிழவனின் சொல் இரவு முழுவதும் காலம்பனின் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை காலம்பன் உள்ளிட்ட முப்பது பேரைப் பிணைத்திருந்த கூர்முனை இரும்புச் சங்கிலி கழற்றப்பட்டது.

காலம்பன் நடந்ததைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுதே பாரியின் கால்கள் நடுங்கத்தொடங்கின. அவனது சொற்கள் உள்ளெலும்புகளை நொறுக்கிக்கொண்டிருந்தன. அவர்கள் திரையர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்த கணம் பாரியின் மூச்சுக்காற்று உறைந்தது. 

காலம்பனின் பாறை போன்ற தாக்குதலை எதிர்கொண்ட பாரியால், முணங்கியபடி சொல்லும் அவனது சொற்களை எதிர்கொள்ள முடியவில்லை. துயரத்தின் கொடூரத்தை செவியினில் வாங்க முடியாத பாரி “அய்யோ…” வென வெடித்துச் சிதறினான்.  “என் மூதாதையர்களையா கொன்றழித்தேன்? பெரியாத்தா தூதுவையின் பிள்ளைகளையா மாய்த்தேன்?” பாரியின் குரல்வளையிலிருந்து பீறிடும் சொற்கள் அவனைச் சரித்து மண்ணில் வீழ்த்தின.

அதனையும் மீறிப் பீறிட்டது காலம்பனின் கதறல். “நாங்கள்தான் தவறிழைத்தோம். எம் குலம்காக்கும் எண்ணத்துக்காகத் தெரிந்தே தவறிழைத்தோம். சூலிவேளின் குலத்தைக் கொன்றழித்த கொடியவன் நான். இனியும் நான் உயிரோடு இருக்கக் கூடாது” எனச் சொல்லிக் கொண்டே இடுப்பில் இருந்த குத்துக்கோலை உருவித் தனது கழுத்தில் செருகத்துணிந்தான் காலம்பன். கணநேரத்தில் பாய்ந்து தடுத்தான் தேக்கன்.

இடக்கை ஒடிந்து கட்டுப்போடப்பட்ட நிலையில் ஒருகைகொண்டு காலம்பனைத் தேக்கன் தடுத்தபொழுது, அவனது முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் காலில் விழுந்து மன்றாடினான் காலம்பன். “நீங்கள் எங்களின் தாயாதிகள். உங்களைக் கொன்று குவித்த கொலைகாரர்கள் நாங்கள்…” சொல்லிக் கதறும் அவனது கையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சூழலின் அவலம் தாங்க முடியாததாக இருந்தது. நெஞ்சு வெடிப்பதைப்போல கதறும் பாரியின் கதறலைப் பறம்பு முதன்முறையாகக் கேட்டது. காலம்பனைத் தனது மார்போடு அணைத்துப் பிடித்த தேக்கன் பாரியைப் பார்த்துக் கைக்குவித்து வேண்டினான். “கதறாதே, நீ பறம்பின் தலைவன்.  உனது கண்ணீரை இம்மண் அறியக் கூடாது. கதறாதே பாரி” சொல்லிக் கதறினான் தேக்கன்.

பாரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “நம்மால் எப்படிக் கண்டறிய முடியாமற் போனது. ஓடுவது நம்குல மாந்தர்கள் என்று நாம் எப்படி அறியாமற் போனோம். எல்லா குலங்களையும் அழியவிடாமற்காத்த நாம், நம் குலத்தை நமது மண்ணில் வைத்தே அழிக்கத்   துணிந்துவிட்டோமே” என்று அவன் கதறியபொழுது, “இல்லை பாரி, இல்லை. நாங்கள் உம் குலத்தவரல்லர்,  அச்சொல்லிற்கான தகுதியை இழந்துவிட்டோம். எம்மைக் கொன்றழித்துவிடு. நாங்கள் செய்த இழிச்செயலுக்கு அதுதான் கைமாறு” சொற்களின் வழியே சாவின் கதவினை வெறிகொண்டு முட்டினான் காலம்பன்.

எந்தக் கையைக்கொண்டு காலம்பன் தனது காலடியைப் பற்றி வணங்கினானோ, அந்தக் கையை ஏந்தி தனது முகத்தில் அறைந்துகொண்டு துடித்தான் பாரி. “மூதாதை தூதுவை எம்மை மன்னிப்பாளா?” என்று கதறும் பாரியின் குரல்கேட்டு தேக்கன் நிலைகுலைந்து மண்ணிற் சரிந்தான். 

``தம் குலத்தைக் காக்கப் பாரியெனும் மாமனிதனையே கொல்லத் துணிந்தேனே” எனச் சொல்லி முகத்தில் அறைந்துகொண்டு துடித்தான் காலம்பன். இணையற்ற வீரர்கள் இருவர் உதிர்க்கும் கண்ணீர் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

வேட்டூர் பழையனும் வந்து சேர்ந்தான். அவலத்தைக் கண்கொண்டு பார்க்க  முடியவில்லை. யாராலும் ஆற்றுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. உணர்வின் பேரலையால் கிழிபட்டுக்கொண்டிருந்தனர் அனைவரும். நிலைமையை மாற்ற வேண்டும் என்று சிந்தித்த கணத்தில் பெருங்குரலெடுத்துக் கத்தினான் பழையன். “பாரி... அழுவதற்குப் பொழுதில்லை. வீழ்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும். அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்திப்பாயாக.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 48

ஒற்றைச்சொல்கொண்டு சூழலையே புரட்டினான் பழையன். மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம். சிக்கலுக்குள் தன்வயப்பட்டுவிட்ட தேக்கனால் அதனைச் செய்ய முடியவில்லை. நிலைமையைப் பழையன் கையிலெடுத்துக்கொண்டான்.

அவனது சொற்கேட்ட கணம் பாரியின் கதறல் உருமாறத் தொடங்கியது. “ஒருவரையும் சாகவிடக் கூடாது. நம்மால் வீழ்த்தப்பட்ட திரையர் குல வீரர்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும்” பதறினான் பாரி. கண்ணீரும் அவலமும் மரணத்தை வெல்லும் வெறியாக மாறியது.

பழையனோடு வந்த வீரர்கள் காடெங்கும் நுழைந்தனர். யார் யார் எங்கெங்கு வீழ்ந்தனர் என்பது பாரிக்கும் தேக்கனுக்கும் துல்லியமாகத் தெரியும். குறிப்புகள் சொல்லி எல்லா இடங்களுக்கும் வீரர்களை அனுப்பினர். ஊர்களில் இருந்த வயதான மருத்துவர்களைத் தோளிலே தூக்கிக்கொண்டு காடெங்கும் ஓடினர் பறம்பின் மக்கள்.

கொம்பேறிமூக்கனின் நஞ்சென்றால் பிழைக்கவைக்க எம்முயற்சியும் எடுக்க முடியாது. ஆனால், கொடிமூக்கனின் நஞ்சு என்பதால் மருத்துவர்கள்   நம்பிக்கையை வெளிப்படுத்தினர். உறுதியாகப் பலரையும் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் சொன்ன சொல்லே பாரியின் துயரத்தைக் கட்டுப்படுத்தியது.

அவனும் வீழ்ந்தவர்களை நோக்கி ஓடத்தலைப்பட்டான். காலம்பனால் காலெடுத்து வைக்க முடியவில்லை. குற்றவுணர்வு அவனது முழு ஆற்றலையும் விழுங்கிவிட்டது.  `இம்மண்ணில் நடக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன் பாரி’  என்று மனம் மன்றாடியபடி இருந்தது. தாங்க முடியாத அவலத்தால் நிலைதடுமாறும் திரையர்குலத் தலைவனைத் தனித்துவிட, பாரி ஆயத்தமாக இல்லை. அவனைத் தாங்கிப்பிடிக்க தனது இருகை ஏந்தினான்.

காலம்பனின் வீரத்தை எதிர்கொள்ள முடிந்த பாரியால் அவனது வேதனையை எதிர்கொள்ள முடியவில்லை. தான் செய்த தவறைக் காலம்பன் மன்னிப்பானா என்று பாரி ஏங்கிய பொழுதெல்லாம், “மன்னிக்கக் கூடாத கொடியவன் நான். என்னைக் கொன்று அழித்துவிடு பாரி” என்று மன்றாடினான் காலம்பன்.

வெல்ல முடியாத தோள்வலிமைகொண்ட இருவரும் ஒருவரின் அரவணைப்பில் மற்றவர் நிலைகொண்டனர்.

ழுத்திலே அம்பு பாய்ந்தவனைக் காப்பாற்ற முடியவில்லை. உடலின் பிற இடங்களில் அம்பு பாய்ந்தவர்களையெல்லாம் காப்பாற்றிவிட முடியும் என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். பொருத்தமான மூலிகைகள்கொண்டு சிகிச்சை மிகத்தீவிரமாக நடந்தது. உயிர்மீட்கும் களத்தில் மூலிகைகளை ஏந்தி நிற்கும் பறம்பின் மருத்துவன் எளிதில் தோற்பதில்லை. சுண்டாப்பூனையாலும் இரத்தச் சிலந்தியாலும் கொல்லப்பட்டவர்கள்போக மீதமுள்ள அனைவரையும் காப்பாற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. மருத்துவக் குடில்விட்டு நகரவில்லை பாரி.

கண்ணிலே கருஞ்சுரைக்காய் எறிந்து அடிபட்டு வீழ்ந்தவருக்கும் சுண்டாப்பூனையின் தாக்குதலால் கைகால்களை இழந்த மூவருக்கும் சிகிச்சை தீவிரமாக நடந்தது. அவர்களை உயிர்பிழைக்க வைத்துவிட முடியும். ஆனால், உடலுறுப்புகள் இழந்தது இழந்ததுதான்.

பாரியோடு இணைந்து போரிட்ட இரண்டு வீரர்களையும், கீதானியையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈட்டி நெஞ்சுக்கூட்டைப் பிளந்து வெளியேறியிருந்தது. அவ்விரு வீரர்களின் உடல்களும் அவர்களின் ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டுப் புதைக்கப்பட்டது. கீதானியை எவ்வியூருக்கு தூக்கி வந்தனர்.

தாய்மார்களின் அழுகை ஊரையே உலுக்கியது. கீதானியின் வேகமும் துடிப்பும், பாரியின் கண்களைவிட்டு அகலவில்லை. பெருகும் கண்ணீரைக் காலம்பன் பார்த்துவிடக் கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான்; முடியவில்லை.

கீதானியை நோக்கி ஈட்டியெறிந்த தனது கையை வெட்டி எறிய வேண்டும்போல் இருந்தது காலம்பனுக்கு, ஆனால், அக்கையை இப்போது தனது நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தான் பாரி.

இறந்துபோன திரையர்களோடு கீதானியையும் ஒன்றாய்ச் சேர்த்துப் புதைத்தனர். கொன்ற எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொல்லப்பட்டவர் களுக்காக அழுது புலம்பினர். குலச்சமூகத்தில் மரணங்களைக் கண்ணீர்கொண்டு கடப்பது மரபன்று. ஆனால், இப்பொழுது அதைத்தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.

புதைகுழிகளை மண்மூடுதலைக் காண முடியாமல் முதலில் அவ்விடம்விட்டு நகர்ந்தது தேக்கன்தான். ‘தவறிழைத்தது நான்தான்’ என்பது தேக்கனின் மனதில் மிக உறுதியாக நிலைபெற்றுவிட்டது. ‘மூன்று மலைகளைக் கடந்து கொற்றவையின் கூத்துக்களத்துக்கு வந்துள்ளார்கள் என்றால், அது யாரால் முடியும் என்று கணிக்காமல் விட்டுவிட்டேன். பதற்றத்தில் முதலில் தவறிழைத்தது நான்தான். அதுவே அடுத்தடுத்த தவறுகளுக்குக் காரணமாகிவிட்டது.’

வீரயுக நாயகன் வேள்பாரி - 48

`வேந்தர்களின் வீரர்களுக்கு இவ்வளவு ஆற்றல் இருக்காது, அதனினும் உயர்ந்த காரணத்துக்காகவே இது நடக்கிறது என்று பாரி மிகச்சரியாக கணித்துச் சொன்னானே... அப்பொழுதுகூட எனக்குப் புரியாமற் போய்விட்டதே’ தனியே புலம்பித் தவித்து ஆற்றாது அழுதுவடியும் கண்ணீர் நிற்கவே இல்லை. தேக்கனா இது என்று காண்போர் நம்ப முடியாத அளவு மனமொடிந்து இருந்தான் தேக்கன். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட கபிலர் நிலைகுலைந்து போனார். ‘குலசேகர பாண்டியன் ஏன் இந்த முடிவெடுத்தான். தேவவாக்கு விலங்கை எடுத்துவர வேண்டிய தேவையென்ன? இம்முயற்சிக்கு வேறென்னென்ன காரணங்கள் இருக்க முடியும்?’ என்று சிந்தித்தபடி இருந்தார்.

பழையன்தான் வேலைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறான். தேக்கனால் எதுவும் செய்ய முடியவில்லை. பாரியோ முழுமுற்றாக உடைந்து போயிருந்தான். புதைக்கப்பட்ட இடத்தில் மறுநாள் நீரெடுத்து ஊற்றிச் செடிநட்டனர். மாணவர்களைக் கசப்பில் இருந்து மீட்கும் வழிமுறைகளைச் செய்யவேண்டியிருந்தது. மாணவர்களில் காயம்படாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், கடைசியாகப் பெரும்பள்ளத்தில் உருண்டதால் அலவன் மிகக்கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தான்.

காலம்பனைத் தனது மாளிகையிலே தங்கவைத்துக்கொண்டான் பாரி. தனது மொத்தக்குலமும் அடிமையாகி, இழுத்துச் செல்லப்பட்டு, அதனை மீட்கும் ஒரு வாய்ப்பு வந்தபொழுது அதனைச் செய்வோமா வேண்டாமா என்று பெருங்குழப்பத்துக்கு உள்ளாகி, பின் செய்யத்துணிந்து அதுவும் கைகூடாமற்போன நிலையில் இருக்கும் காலம்பனைப் பற்றிய சிந்தனையிலே இருந்தான் பாரி.

செய்தி அறிந்து தென்திசைக் காவலன் கூழையனும் வடதிசை சென்றிருந்த முடியனும் எவ்வியூர் வந்தடைந்தனர். சேரனின் முயற்சிகளிலே கவனம் குவித்திருந்த அவர்களுக்குப் பாண்டியனின் எதிர்பாராத இந்தத் திட்டம் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. உண்மையில் பாண்டியனின் நோக்கம்தான் என்ன என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை.

இவற்றைப்பற்றிப் பேச வேண்டும் என நினைத்த தேக்கன், பாரியைத் தேடி வந்தான். அவனோ எவ்வியூரின் உச்சிப்பாறையின் மீதிருப்பதாக வீரர்கள் சொன்னார்கள். உச்சிப்பாறை நோக்கிச் சென்றான் தேக்கன்.

மாலைநேரக் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். தனித்து உட்கார்ந்திருந்த பாரியின் மீது பெருங்கவலை கவிந்திருந்தது. காலம்பனோடு தாக்குதல் நடந்த அந்தப் பொழுதுக்குப்பின் இருவரும் பேசிக்கொள்ள வில்லை. தாங்கள் கவனிக்கத் தவறிய பிழைகளை நினைத்து இருவருமே மனமொடிந்து இருந்தனர்.

பாரியின் அருகில் தேக்கன் வந்ததும், அதற்காகக் காத்திருந்தவனைப்போல பேச்சைத் தொடங்கினான் பாரி. “தன் குலத்தைக் காப்பாற்றத்தானே காலம்பன் இம்முயற்சியில் ஈடுபட்டான். தூதுவையின் குலக்கொடிகள் நமக்கும் ரத்த உறவுதானே, அதுவும் நம் குலம்தானே. அதனை மீட்க வேண்டிய பொறுப்பு நம்முடையதுதானே.”

பாரியின் சொற்கள் சடசடவென இறங்கின. அதைவிட வேகமாக அச்சொற்களைச் சுமந்து கீழிறங்கிக்கொண்டிருந்தான் தேக்கன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...