மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை

சசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ஜெயலலிதா ராஜினாமா முடிவின் அதிர்ச்சியிலிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் மீள்வதற்குள், நடராசனின் கைது அரங்கேறியது. அதுவரையில் கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களுக்கு மட்டுமே அறிந்திருந்த நடராசனின் பெயர், முதன்முறையாக வெளியே தெரிய ஆரம்பித்தது. ‘நடராசன்’ என்கிற கேரக்டர் போயஸ் கார்டனை ஆட்டிப் படைக்கும் விஷயத்தை அப்போதுதான் தமிழகம் அறிய ஆரம்பித்திருந்தது.

‘நால்வர் அணி’ ஏற்பட காரணகர்த்தா நடராசன். அவரைப் பற்றி பகிரங்கமாகப் புகார் சொன்னவர் திருநாவுக்கரசர். ஆனால் சில நாட்களிலேயே ‘நடராசதாசன்’ ஆனார் திருநாவுக்கரசர். மோசடி வழக்கில் நடராசன் கைதாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரையில் கூடவே இருந்தவர் திருநாவுக்கரசர். நடராசனின் மீதான கறையைத் துடைக்க ஜெயலலிதாவைவிட திருநாவுக்கரசர் ரொம்பவே பாடுபட்டார்.

‘தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களிடம் பணத்தைத் திருப்பித் தருவதாகச் சொல்லவில்லை’ என நடராசனுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார் திருநாவுக்கரசர். அப்போது சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த அவர், பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசினார்.

சசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை

‘‘அ.தி.மு.க சார்பில் நிற்க விரும்பியவர்கள் அளித்த பணத்தைத் ‘திருப்பித் தருவோம்’ என எந்த உறுதியும் அளிக்கவில்லை. அது நன்கொடையாகக்கூட கருதப்படலாம். கட்சியின் உள்விவகாரத்தில் போலீஸ் தலையிடுவது தவறு. ஜெயலலிதாவின் உதவியாளர் நடராசன் இல்லத்தில் சோதனை போட்டு, அவரைக் கைது செய்து, அவசரம் அவசரமாக வழக்குத் தொடுத்ததன் மூலம் போலீஸ் துறைக்குக் கரும்புள்ளி ஏற்பட்டுவிட்டது. வங்கியில் இருக்கும் கட்சியின் பணத்தை முடக்குவதும் போலீஸுக்குச் சம்பந்தமில்லாதது. இந்தப் பிரச்னையில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட வேண்டும். அடக்குமுறையை போலீஸ் தொடர்ந்தால், அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபடும். இதனால் சட்டம் ஒழுங்குக்கு ஊறு ஏற்படும். நடராசன் மீதான வழக்கும் அ.தி.மு.க-வினர் மீதான மிரட்டல்களும் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க ஆளும் தி.மு.க மேற்கொள்ளும் அணுகுமுறையும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேதிகூட குறிப்பிடாமல் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் அவசரக் கோலத்தில் நடராசன் மீது வழக்குப் போட்டிருக்கிறது. முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் இந்த நடவடிக்கையை போலீஸ் எடுத்திருக்க முடியாது’’ என நடராசனை ரொம்பவே தூக்கிப் பிடித்தார் திருநாவுக்கரசர்.

ஜெயலலிதாவும் தன் பங்குக்கு நடரானுக்கு வெண்சாமரம் வீசினார். நடராசன் கைதை கவர்னர், பிரதமர் ஆகியோரின் பார்வைக்குக் கொண்டு போனார். அப்போது கவர்னராக இருந்த அலெக்ஸாண்டரை 1989 மார்ச் 20-ம் தேதி சந்தித்த ஜெயலலிதா, தனது ராஜினாமா கடிதம் லீக் ஆனது முதல் நடராசன் கைது வரையிலான விஷயங்களைத் தொகுத்து மனுவாக அளித்தார். நடந்த விஷயங்களை அலெக்ஸாண்டரிடம் விளக்கினார். ‘பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்காக ஆளும்கட்சியின் துண்டுதலில், போலீஸ் செயல்படுகிறது. ஒருதலைபட்சமான காவல் துறையின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். குறிப்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் துரை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். ‘‘போலீஸின் அதிகார அத்துமீறல்களைப் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கையாக நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும்’’ எனவும் அலெக்ஸாண்டரிடம் கேட்டுக் கொண்டார். ‘‘கட்சிப் பணத்தை முடக்க போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. உட்கட்சி நிர்வாகத்திலோ கட்சியின் நிதி விவகாரத்திலோ தலையிட போலீஸுக்கு எந்தவிதமான அருகதையோ அதிகாரமோ கிடையாது’’ எனவும் தெரிவித்தார்.

கவர்னர் சந்திப்பு காலையில் நடந்தது. இரவு திடீரென பத்திரிகை யாளர்களை அழைத்தார் ஜெயலலிதா. அதற்குக் காரணமிருந்தது. ஜெயலலிதா கவர்னரைச் சந்தித்த கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் கமிஷனர் துரை மீடியாவிடம் பேசினார். துரையின் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் காரண காரியம் இருந்தது. அது ஸ்ரீதர் விவகாரம். 

தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டி ஏமாந்த ஸ்ரீதர் விஷயம் வெடிக்க ஆரம்பித்தது. ‘அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டபோது, அதற்குப் பணம் தர வேண்டும் எனச் சொல்லி வாங்கினார்கள். ஆனால், அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. திருப்பிக் கேட்கச் சென்றபோது, நடராசனும் அவரது உதவியாளரும் என்னைத்   தாக்க முயன்றார்கள். மிரட்டி விரட்டியடித்தார்கள்’ என போலீஸில் புகார் அளித்தார் ஸ்ரீதர். இதுபற்றி சொல்லத்தான் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் துரை.

சசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை

‘‘ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலலிதா, அவரின் உதவியாளர் நடராசன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயற்சி செய்தல், அத்துமீறி நுழைந்து தாக்க முயற்சி செய்தல், கொலை முயற்சி, மோசடி ஆகிய குற்றங்கள் புரிந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது’’ எனச் சொன்னார் துரை. ‘‘ஜெயலலிதா கைது செய்யப்படுவாரா?’’ எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது விசாரணைக்கு உதவுவதாக இருக்கும். சில வழக்குகளில் கைது செய்யத் தேவையில்லை’’ என்றார்.

துரையின் ரியாக்‌ஷனுக்கு உடனடியாக ஆக்‌ஷன் காட்டினார் ஜெயலலிதா. அவர் கூட்டிய அவரச பிரஸ் மீட்டில், ‘‘என் வீட்டில் வேலை பார்ப்பவர்களை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கொடுமைப்படுத்தி, எனக்கு எதிராக வாக்குமூலம் வாங்குகிறார்கள். இதனால் நான் கைது செய்யப்படலாம்’’ என அதிர்ச்சியைக் கிளப்பினார் ஜெயலலிதா. ‘‘தனித்து வாழும் பெண் என்றுகூடப் பாராமல், கொலை செய்ய முயற்சி செய்ததாக என் மீது குற்றம்சாட்டி, அழித்துவிட நினைக்கிறார்கள். என் வீட்டில் இருக்கிறவர்கள் மீதும் வழக்குகள் போட்டு, என்னைக் கொடுமைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். பொய் வழக்குப் போட்டு மிரட்டி, அரசியலை விட்டே என்னை விரட்டியடிக்க கருணாநிதி திட்டமிட்டு செயல்படுகிறார். 

ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் அ.தி.மு.க-வுக்கு நன்கொடை கொடுத்த பணத்தையும், தேர்தலுக்காக முன்பணமாக கொடுத்த பணத்தையும், மோசடி செய்ததாக கற்பனையான வழக்குகளை ஜோடித்து வருகிறார்கள். என் குடும்ப நண்பர் நடராசனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். அவரிடம் எனக்கு எதிரான வாக்குமூலங்களை வாங்க முயற்சி செய்கிறார்கள்’’ என்றார்.

நடராசன்... திருநாவுக்கரசருக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கும் அரசன் ஆனார்!

(தொடரும்)