
ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி
முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க வரும் காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்ந்து விசாரணைக்காக பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, புலிக்குகை மடாலயத்துக்குச் செல்கிறார்கள். பல புத்தர் சிலைகளைப் பார்க்கிறார்கள். தலைமை லாமாவைச் சந்தித்து, அவரிடம் ஒரு படத்தைக்காட்டி விசாரிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து வெளியேறி, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். மிலரேபாவின் கதையை நரேந்திர பிஸ்வாஸ் சொல்கிறார். அன்றிரவு ராணுவமுகாமில் தங்குகிறார்கள். பனிச்சிகரங்களில் மறைந்திருக்கும் குகைகளை ட்ரோன்களின்மூலம் கண்டுபிடித்து ஒரு குகைக்குள் செல்கிறார்கள். அந்தக் குகையின் சுவர் முழுவதும் எலும்புகள் சுண்ணாம்பு பாறையோடு பாறையாக இறுகியிருந்தன. அவர்கள் அதைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது குகைக்கு வெளியே காலடியோசை கேட்டது...
நாக்போ குரைத்தபடி ஓடியது. பாண்டியன் தன் துப்பாக்கியை உருவியபடி, “அதை நிறுத்தச்சொல். இவ்வேளையில் இங்கே வருபவர்கள் எதிரிகளாகவே இருக்கமுடியும்” என்றான்.
‘‘நாக்போ” என்று நோர்பா அழைத்தான்.
நாக்போ அதற்குள், “எதிரிகள்… கெட்டவர்கள்” என்றது.
“எதிரிகள் என்கிறது” என்றான் நோர்பா.
அதற்குள், நாக்போவை அவர்கள் சுட்டார்கள். குண்டு ஓசை எதிரொலித்து ரீங்காரம் போல சென்றுகொண்டே இருந்தது.
நாக்போ அலறியபடி ஓடிவந்தது. “அதற்கு குண்டுபடவில்லை…” என்றான் நோர்பா.
“டாக்டர், அவர்கள் நமக்காகத்தான் வருகிறார்கள்” என்றான் பாண்டியன்.
டாக்டர் ஓடிவந்து, “என்ன செய்வது... நாம் சிக்கிக்கொண்டோம்” என்றான்.
“முதலில் அவர்களை நிறுத்த வேண்டும். அதற்குள் நாம் வழி யோசிப்போம்” என்றான் பாண்டியன். ஓடிச்சென்று குகைச்சுவரில் மறைந்துகொண்டு இருமுறை சுட்டான். பல்லாயிரம் குளவிகள் பறப்பதுபோல, எதிரொலி அவர்களைச் சூழ்ந்தது.

பாண்டியன் ஓடிவந்து, “நாம் உள்ளே செல்வோம்” என்றான்.
“எவ்வளவு தொலைவு செல்லமுடியும்?” என்றார் டாக்டர். “வெளியேற இங்குதானே வரவேண்டும்?”
“இல்லை. நாம் உள்ளே நுழைந்தபோதே பார்த்தேன். இங்கே சற்று காற்றுச்சுழற்சி இருந்தது. இப்போது எதிரொலியும் அதையே காட்டுகிறது. இந்தக் குகைக்கு மறுபக்கம் ஏதோ திறப்பு உள்ளது” என்றான் பாண்டியன்.
அவர்கள் குகைக்குள் சென்றார்கள். வெளியே இருந்தவர்கள் ஏதோ பேசிக்கொள்வது கேட்டது.
“சீனமொழியில் பேசிக்கொள்கிறார்கள்” என்றார் டாக்டர்.
“நினைத்தேன்” என்று பாண்டியன் சொன்னான். “நம்மை அவர்கள் ஏன் விட்டுவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். நம்மை அவர்கள் கண்காணித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களின் உளவுப்படை மிகப்பெரியது. நமக்கு என்ன தெரியும் என்று பார்ப்பதற்காக, அவர்கள் நம்மைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் தேடியதை நாம் கண்டுபிடித்துக்கொடுத்துவிட்டோம்.”
அவர்கள் இருமுறை சுட்டனர். பின்னர் உள்ளே வந்தனர். பாண்டியன், “நமக்கு இருக்கும் ஒரே நன்மை, நாம் இருட்டில் இருக்கிறோம்; அவர்கள் வெளிச்சத்தில் இருக்கிறார்கள் என்பதுதான். நோர்பா, நாக்போவை முன்னால் அனுப்பி, மறுபக்கம் இருக்கும் வழியைக் கண்டடையச்சொல். டாக்டர், நீங்களும் உடன் செல்லுங்கள். நான் பின்னால் வருகிறேன். இவர்களில் ஒருவனைச் சுட்டுவிட்டேன் என்றால், அவர்கள் கொஞ்சம் பிந்துவார்கள்.”
டாக்டர் தலையசைத்தார். நோர்பா “நாக்போ முன்னால் போய் வழி இருக்கிறதா என்று பார்” என்றான்.
நாக்போ “இத்தனை எலும்புகளையும் விட்டுவிட்டா போகப்போகிறோம்?” என்றது.
“சொல்வதைக் கேள்” என்றான் நோர்பா.
‘‘மனிதர்களுக்கு அறிவே இல்லை” என்றபடி நாக்போ முன்னால் ஓடியது.
பாண்டியன் சுவரோடு சுவராக ஒட்டியபடி பல்லிபோலச் செல்வதை நோர்பா கண்டான். டாக்டர் “செல்வோம்” என்று மெள்ளச் சொன்னார்.
நாக்போ முன்னால் ஓடி “வழி இருக்கிறது” என்றது. அவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினார்கள்.
“மூச்சு விட ஆக்ஸிஜன் இருக்கிறதா என்று பார்க்கவெல்லாம் நேரமில்லை” என்றான் நோர்பா.
“இந்தப் பக்கம் நன்றாகத் திறந்துவிட்டதல்லவா? காற்று ஓடிச்செல்வதனால் ஆக்ஸிஜன் இருக்கும்” என்றார் டாக்டர்.
பாண்டியன் சுவரோடு பதுங்கிச்சென்று சுட்டான். ஒருவன் அலறியபடி விழும் ஓசை கேட்டது. மற்றவர்கள் கூச்சலிட்டபடி ஒதுங்கினர். பல வகையான குரல்கள் கேட்டன. ஆனால், அவையெல்லாம் எதிரொலியுடன் கலந்து முழக்கமாகவே ஒலித்தன.
பாண்டியன் சுட்டுக்கொண்டே வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டான். “இங்கிருந்து சுட்டால் குண்டு செல்லுமா?” என்றான் நோர்பா.
“செல்லாது. ஆனால், எதிரொலியுடன் குண்டின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். எத்தனை குண்டுகள் என்றே தெரியாது. அவர்கள் நாம் மூவருமே சுடுவதாக நினைப்பார்கள். ஆகவே, துரத்தி வர மாட்டார்கள்.”
அவர்கள் மூச்சிரைக்க ஓடினர். “நல்லவேளை ஆக்ஸிஜன் இருக்கிறது இங்கே” என்றான் பாண்டியன்.
“ஆனால் மிகக்குறைவாக இருக்கிறது” என்றான் நோர்பா.

“கார்பன் டை ஆக்ஸைட் தரையில்தான் தேங்கியிருக்கும். நாக்போவுக்குத்தான் ஆபத்து. அது தளர்வதுபோலத் தெரிந்தால், நாம் அதைத் தலைக்குமேல் தூக்கிக்கொள்ள வேண்டும்” என்றார் டாக்டர்.
குகைப்பாதை மிகக் குறுகலாகியது. அதிலிருந்து பல கிளைகள் விரிந்து சென்றன. குகைக்கு மேலிருந்து கூம்புவடிவில் பாறைகள் தொங்கியவைபோல நீட்டி நின்றன. சில பாறைகள் கோன் ஐஸ்கிரீமைத் தலைகீழாகப் பார்ப்பதுபோல இருந்தன.
“தலைக்குமேல் விழுந்துவிடப்போகின்றன” என்றான் நோர்பா.
“விழாது. அவை மிக உறுதியான பாறைகள்” என்றார் டாக்டர் “அவற்றை ஸ்டால்கமைட்ஸ் என்று அழைக்கிறார்கள். குகைக்குள் சிறிய விரிசல்கள் வழியாக வரும் நீர், சுண்ணாம்பைக் கரைத்துக்கொண்டு சொட்டுகிறது. அந்தச் சுண்ணாம்பின் ஒருபகுதி அங்கேயே உறைந்து, பல்லாயிரம் ஆண்டுகளில் அந்தப் பாறைக்கூம்புகள் அமைகின்றன.”
சில கூம்புகள் பல அடுக்குகள்கொண்டிருந்தன. வெண்ணிறமான துணியால் அலங்காரம் செய்ததைப்போலத் தோன்றின. சில கூம்புகள் குத்துவிளக்குகள் போலிருந்தன குகையின் சுவர்களில் நீர் வழிந்துகொண்டிருந்ததனால், கடும் குளிராக இருந்தது .அவர்களின் தலைமேலும் நீர்த்துளிகள் சொட்டின.
“இது குளிர்காலம். ஆகவே, மேலே நீர் உறைந்துவிட்டது. கோடைக்காலத்தில் மழைபோல நீர்த்துளிகள் சொட்டும் என நினைக்கிறேன்” என்றார் டாக்டர்.
அவர்கள் சென்ற பாதை குறுகலாகியபடியே வந்தது. ஒரு கட்டத்தில், அவர்கள் தவழ்ந்து செல்லவேண்டியிருந்தது
“இது மிக ஆபத்து. நாம் சுடுவதை நிறுத்திவிட்டோம். அவர்கள் தொடர்ந்து வருவார்கள். ஒரு நல்ல விளக்கு இருந்தால் நம்மைப் பார்த்துவிடலாம். சுடுவதற்கு வசதியாகப் படுத்திருக்கிறோம்” என்றான் பாண்டியன்.
நாக்போ மெள்ளக் குரைத்தது.
‘‘மறுபக்கம் வழியைக் கண்டுபிடித்துவிட்டது” என்றான் நோர்பா.
அப்போது, அவர்கள் மேல் வெளிச்சம் பாய்ந்தது. குண்டு ஒன்று வந்து அவர்கள் அருகே குகைச்சுவரில் பட்டது. ஓசை பலமுறை முழங்கியது.
“வேகம்… சீக்கிரம் செல்லுங்கள்” என்றான் பாண்டியன்.
அவர்கள் மூச்சுவாங்கியபடி கைகளாலும் கால்களாலும் தவழ்ந்தனர். இரண்டு குண்டுகள், அவர்கள் அருகே வந்து குகைச்சுவரைப் பெயர்த்தன.
பாண்டியன், திரும்பி இருமுறை சுட்டான். அவர்கள் உடனே திருப்பிச் சுட்டார்கள்.
“நான் மட்டும்தான் சுடுகிறேன் என்று தெரிந்துவிட்டது அவர்களுக்கு” என்றான் பாண்டியன்.
நோர்பா, மறுபக்கம் எழுந்து நின்றான். ‘‘இங்கே நிமிர்ந்து நிற்க இடமிருக்கிறது… இனிமேல் குகை கொஞ்சம் பெரிதாகிறது” என்றான்.
டாக்டரை பாண்டியன் உந்தி, மறுபக்கம் தள்ளினான். பின்னர், அவன் எழுந்து நின்றான். டாக்டர், “என் கண்ணில் சுண்ணாம்புப்பாறையின் தூள்பட்டுவிட்டது” என்றார்.
“குண்டு படுவதற்கு இதுமேல் அல்லவா?” என்றான் பாண்டியன்.
“இந்த நகைச்சுவையும் நன்றாக இல்லை” என்றார் டாக்டர்.

பாண்டியன் தன் இடையிலிருந்து ஒரு சிறிய குழாயை எடுத்து, அதன் மூடியைப் பல்லால் கடித்து இழுத்தான். அதை அவர்கள் வந்த குறுகலான பாதையில் வீசினான்.
அது மஞ்சள் நிறமான வெளிச்சத்துடன் பெரிய ஓசையுடன் வெடித்தது. குகையின் பல இடங்களில் எதிரொலி எழுந்தது. அந்த ஓசையில் செவிகள் மூடிக்கொண்டன.
குகைப் பரப்பு உடைந்துவிழுந்து, அந்தக் குறுகிய பாதை மூடிக்கொண்டது. ஒரு பகுதி உடைந்ததும் மீண்டும் மீண்டும் பாறை உடைந்துவிழுந்து, முழுமையாகவே மூடியது அந்த வழி.
“இனி பயமில்லை. நாம் நிதானமாக நடந்தே போகலாம்” என்றான் பாண்டியன்.
“நம்மிடம் சாப்பிட ஒன்றுமில்லை. குடிக்க நீர் இல்லை. அதைவிட இந்தக் குகை எங்கே போகும் என்றே தெரியவில்லை” என்றார் டாக்டர்.
“உயிர் இருக்கிறதே” என்றான் பாண்டியன்.
“இதுவும் நல்ல நகைச்சுவை இல்லை” என்றார் டாக்டர்.
நாக்போ ஓடிவந்து. “அங்கே வழி திறந்திருக்கிறது. ஆனால் வானம் தெரிகிறது” என்றான்.
அவர்கள் குகையின் மறுவாயிலைச் சென்றடைந்தனர். அது ஒரு சிறிய ஓட்டைதான். அதன் வழியாக வெளியே இருந்து வெளிச்சம் வந்து சரிந்து விழுந்திருந்தது.
பாண்டியன் சென்று அந்த ஓட்டை வழியாக ஏறி மறுபக்கம் பார்த்தான்.
“செங்குத்தான சரிவா?” என்றான் நோர்பா.
“சற்று செங்குத்தாகவே உள்ளது. ஆனால், நாம் இறங்கிவிடமுடியும்…” என்றான் பாண்டியன்.
“நம்மை எவரேனும் கண்டுபிடிக்க முடியுமா?” என்றார் டாக்டர்.
“நம் உடல்களில் சிக்னலர் உள்ளது. குறிப்பிட்ட நேரம் கழித்தும் நாம் திரும்பவில்லை என்றால், ஹெலிகாப்டர் தேடிவரும்” என்றான் பாண்டியன். “ஆனால், அதற்கு நாம் ஹெலிகாப்டர் இறங்குமிடத்துக்குச் சென்றுவிட வேண்டும்.”
பாண்டியன் மறுபக்கம் சென்று நின்றான். குகை, மலைச்சரிவில் திறந்திருந்தது. அங்கே விளிம்பில் நிற்க இடமிருந்தது.
‘‘நம் ஆடைகளைக் கிழித்து ஒரு நாடா செய்வோம். என்னிடம் கத்தி இருக்கிறது” என்றான் பாண்டியன். “நைலான்சட்டை நன்றாக எடைதாங்கும்.”
அவர்கள், தங்களின் கெட்டியான மேல்சட்டைகளைக் கழற்றிக்கொடுத்தனர். அவன் அதைக் கிழித்து, நாடாக்களாக ஆக்கினான். சேர்த்துக் கட்டினான். ஒருமுனையை குகையிலிருந்த சுண்ணாம்புக்கூம்பில் கட்டினான். மறுமுனையைத் தொங்க விட்டான்.
‘‘முதலில் நாக்போ செல்லட்டும்” என்றான் பாண்டியன்.
“நானா? நான் நாடாவில் செல்வதா?” என்று நாக்போ சீறியது.
நாக்போவை நோர்பா பிடித்துக்கொள்ள பாண்டியன் அதைக் கட்டினான். நாடாவை மெள்ள இறக்கினான். அது கீழே இறங்கியதும், நாடாவை இழுக்க, கட்டுகள் அவிழ்ந்தன. நாடாவை மேலே இழுத்தான்.
“நான் என்ன உதவி செய்யவேண்டும்?” என்றது நாக்போ.
“நீ வாயை வைத்துக்கொண்டு சும்மா நில்” என்றான் நோர்பா.
“மனிதர்கள் நன்றியற்றவர்கள்” என்றது நாக்போ.
நோர்பா கீழே இறங்கிய பின், டாக்டர் மெள்ள இறங்கினார். கடைசியாக பாண்டியன் இறங்கி வந்தான்.
“ஒருவனைக் கொன்றுவிட்டீர்களா?” என்றான் நோர்பா.
“ஆம், இன்னொருவனையும் கொன்றிருக்கலாம். குறிதவறிவிட்டது… எதிர்ப்பக்கமிருந்து வந்த வெளிச்சத்தில், கண்கொஞ்சம் கூசியது. அதோடு, அவர்கள் நன்கு பயிற்சிபெற்றவர்கள்” என்றான் பாண்டியன்.
மேலே, ஒரு ஹெலிகாப்டர் பறந்து செல்வது தெரிந்தது. அவர்கள், பாறைகளுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார்கள்.
“அவர்களுக்குத் தெரியும் நம்மைத் தேடி ராணுவம் வரும் என்று. ஆகவே, அதிக நேரம் நிற்க மாட்டார்கள்” என்றான் பாண்டியன்.
“அவர்கள் தேடிவந்தது கிடைத்துவிட்டது” என்றார் டாக்டர். “இப்போதே அனைவரும் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். இனி அவர்களை நாம் பார்க்க முடியாமல் போகலாம்.”
‘‘நீங்கள் அந்த எழுத்துகளைப் பார்த்துவிட்டீர்களா டாக்டர்?” என்றான் பாண்டியன்.
“புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். ஆனால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை” என்றார் டாக்டர்.
“ஏன்?” என்றான் பாண்டியன்.
“அது ஒரு பாடல்… அந்தப் பாடல் ஏதோ ஒரு விஷயத்தை விளக்குகிறது. அனேகமாக ஏதோ ஒரு வழி அதில் உள்ளது. அல்லது ஏதோ ஒரு வழிமுறை. என்னவென்றே தெரியவில்லை” என்றார் டாக்டர்.
“ஆனால், அவர்களுக்கு அது புரிந்துவிட்டது அல்லவா?” என்றான் பாண்டியன்.
“ஆம், ஒருவேளை நம்முடைய தேடல் இங்கேயே முடியவும் முடியலாம். கடைசியில், இந்தப் பொருள் புரியாத பாட்டுதான் நமக்கு மிச்சம் என நினைக்கிறேன்” என்றார் டாக்டர்.
“அந்த எலும்புகளையாவது சாப்பிட்டிருக்கலாம்” என்றது நாக்போ.
“வாயை மூடு” என்றான் நோர்பா.
“நீ வாயை மூடு. எனக்கு மீண்டும் இங்கே வர வழி தெரியும். நான் இங்கே வந்து வாழ்வேன்.”
“தனியாகவா?” என்றான் நார்போ.
“வேறு நாய்களை நான் கூட்டி வருவேன்” என்றது நாக்போ.
“இங்கே புலி உண்டு” என்று நார்போ சொன்னான்.
நாக்போ “புலியா?” என்றது. பீதியுடன் சுற்றுமுற்றும் பார்த்தபின், “பொய்” என்றது.
“உண்மை… நீ பத்மசம்பவரின் குகைக்குள் புலியின் படத்தைப் பார்த்தாய் அல்லவா? அந்தப் புலி இங்கே இருந்ததுதான். அதன் பிள்ளைகள் இப்போது இருக்கிறார்கள்.”
“எனக்குப் புலியைப் பார்த்து பயமில்லை” என்று சொன்ன நாக்போ, எழுந்துவந்து நோர்பாவின் அருகே அவன் உடலை ஒட்டியபடி அமர்ந்துகொண்டது.
“நீ எப்போது வருவாய் இங்கே?” என்று நோர்பா கேட்டான்.
“இந்த இடம் நன்றாக இல்லை. ஒரே குளிர். நான் வர மாட்டேன்” என்றது நாக்போ.
“நம்மை அழைத்துச்செல்லும் ஹெலிகாப்டர் கிளம்பிவிட்டிருக்கும்” என்று பாண்டியன் சொன்னான்.
(தொடரும்...)