மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!

சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

‘‘யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்.
யாரும் பொய்யைச் சொன்னாலும்
நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள்’’


- ‘என்னைப் போல் ஒருவன்’ படத்தில் சிவாஜி பாடிய பாடல் வரிகள் இவை. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பொருந்தும். நடராசன் தனக்குத் தீமை செய்தாலும் அவருக்கு நன்மையே செய்தார் ஜெயலலிதா.

சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!

நடராசன் கைதைக் கண்டித்தும், தன் மீது வழக்கு போட்டதற்கு எதிராகவும் சீற ஆரம்பித்திருந்தார் ஜெயலலிதா. ‘‘தேர்தல் செலவுக்கு முன்பணமாக பலர் அளித்த மொத்த தொகை 3 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 59 ரூபாய். அவர்களுக்கு 3 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய் பணம், வங்கிகள் மூலம் திருப்பி தரப்பட்டுவிட்டது. மீதி ரூ.13 லட்சம் மட்டுமே தரப்பட வேண்டும். பணம் கட்டியவர்கள் வந்து கேட்ட உடன், தொடர்ந்து பணத்தைத் திருப்பி அளித்து வருகிறோம். நேரில் வந்து கேட்காதவர்களுக்குத் தந்தி கொடுத்து வரச் சொல்லியிருக்கிறோம். இந்த நிலையில்தான் சிலரை ஏற்பாடு செய்து, பொய் புகார்களைத் தயாரித்து என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். பணத்தைத் திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொய் வழக்குகள் போடப்படுகின்றன.

மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகுதான், எனக்கு இப்படி தொல்லைகள் தருகிறார்கள். கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தது போல ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதற்காக நடராசனைக் கைது செய்திருக்கிறார்கள். அவரை கொடுமைப்படுத்தி, அவரிடம் எனக்கு எதிராக வாக்குமூலம் வாங்க முயல்கிறார்கள். நடராசனின் உதவியாளர் சுந்தரமூர்த்தியை போலீஸார் அழைத்துச்சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சித்ரவதைப்படுத்தி அவரிடமும் எனக்கு எதிரான வாக்குமூலம் வாங்க நினைக்கிறார்கள். என் டிரைவர் அண்ணாதுரை, உதவியாளர் செந்தில் இருவரும் என்னுடைய வேலை தொடர்பாக, ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடராசன் வீட்டுக்குப் போனார்கள். அவர்கள் சென்ற ஸ்கூட்டர் நடுரோட்டில் கிடக்கிறது. அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று வாக்குமூலம் வாங்க போலீஸ் நினைக்கிறது. அவர்கள் அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக அறிந்து, அங்கே என் வழக்கறிஞரை அனுப்பினேன். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. இதுபற்றி போலீஸ் கமிஷனர் துரைக்குக் கடிதம் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.

 என் வீட்டில் பெயின்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணி, வெளியே சென்றபோது அவரையும் பிடித்துச் சென்று கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தார்கள். என் வீட்டில் சமையல் செய்ய காய்கறிகள் வாங்கக்கூட யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. என் வீட்டில் உள்ளவர்களைக் கைது செய்து, மிரட்டி என்னை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு என்னைக் கொலை செய்திட திட்டமிட்டிருக்கிறார்கள். என் மீது தனிப்பட்ட முறையில் நிதி மோசடி என்ற பொய் வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன’’ என மீடியாவிடம் ரொம்பவே சீறினார் ஜெயலலிதா.

சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!

தனது வீட்டில் வேலை பார்க்கிறவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பாகச் சொல்லி, கைது செய்ய பார்க்கிறார்கள்;கொல்ல திட்டமிடுகிறார்கள் என ஜெயலலிதா பேசியதற்கு என்ன காரணம்? வலம்புரி ஜான் சொன்னதுதான் இங்கே பொருத்தமாக இருக்கும். ‘‘நடராசனின் பிடியில் இருந்து தப்பிக்க ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் முயன்றார். ஆனால், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் நடராசனின் பிடிதான் இறுகியது. செயற்கையான சிக்கலை நடராசன் ஏற்படுத்துவார். ஒவ்வொரு முறையும் ஆபத்துகளைக் காட்டி, அடிமைப் பெண் ஜெயலலிதாவை நிரந்தரக் கைதியாகவே ஆக்கிவிட்டார். இப்படி நடக்கும் போராட்டத்தில் இறுதி வெற்றி நடராசனுக்குத்தான் கிடைக்கும்” எனச் சொன்னவர் வலம்புரி ஜான். தனக்கு எதிராக நடராசன் வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ, அதன் மூலம் தான் கைதாகக்கூடுமோ என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருந்ததால்தான் பத்திரிகையாளர்களை அழைத்து நடராசனுக்கு ஆதரவாகப் பேசினார் ஜெயலலிதா. ‘‘குடும்ப நண்பர் நடராசனைக் கொடுமைப்படுத்துகிறார்கள்’’ எனக் கதறினார். 

ஜெயலலிதா மட்டுமல்ல அ.தி.மு.க. தலைவர்களும் நடராசனுக்கு ஆதரவாக கச்சைக் கட்ட ஆரம்பித்தார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பொருளாளர் மாதவன், எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசர், முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜாராம் ஆகியோர், ‘‘சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதம் அடங்கிய ‘சீல்’ வைத்த கவரின் உறையைப் பிரித்துப் பார்க்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது. போலீஸார் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா எழுதிய ஆவணங்களின் போட்டோ காப்பி நடராசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கமிஷனர் துரை சொல்வது பொய். ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதத்தை யாரோ ஒருவர் தம்மிடம் கொடுத்தாக சபாநாயகர் சொல்கிறார். அப்படி கடிதம் தந்தவர் யார் என்பதை சபாநாயகர் சொல்ல வேண்டும்” என்றார்கள்.

சசிகலா ஜாதகம் - 76 - நடராசனுக்காக களமிறங்கிய ஜெயலலிதா!

‘‘சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் நகல் கிடைத்த ஒரு மணி நேரத்திலேயே அது பத்திரிகைகளுக்குக் கிடைத்தது எப்படி? அவ்வளவு ஆத்திர அவசரம் ஏன்” எனக் கேள்வி எழுப்பினார் ராகவானந்தம். ‘‘தேர்தல் நிதி வசூலிக்கப்படுவது எம்.ஜி.ஆர் காலத்து வழக்கம். அதைத் திருப்பி தரும்போது, சம்மந்தப்பட்டவர் தேர்தல் சமயத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துள்ளாரா என ஆராய்ந்து பார்த்து திருப்பித் தரப்படும். பணத்துக்கு ரசீது தரப்பட்டுள்ளது. மோசடி என்ற குற்றச்சாட்டே எழவில்லை’’ என்றார் திருநாவுக்கரசர். இவ்வளவும் நடராசன் மீதான கறையைப் போக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்கிற விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. சபாநாயர் தமிழ்க்குடிமகனின் நடவடிக்கையை விமர்சித்து அப்போது அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம், ‘‘சபாநாயகர் தமிழ்க்குடிமகனாக நடந்து கொள்ளவில்லை. கருணாநிதி குடிமகனாக நடந்து கொள்கிறார்’’ என்றார். ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவிடம் தமிழ்குடிமகன் விளக்கம் கேட்டிருந்தார். இதுபற்றி அப்போது பேசிய தமிழ்குடிமகன், ‘‘ ‘1989 மார்ச் 15 தேதியிட்டு நான் எழுதியதாக ஒரு கடிதம் உங்களுக்கு வரலாம். அந்தக் கடிதத்தை ஏற்க வேண்டாம்’ என ஜெயலலிதா எனக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தால் பிரச்னை இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்காது. எனக்கு அனுப்பப்பட்ட கடிதம், ஜெயலலிதா எழுதியதுதான். அது நிர்பந்தத்தால் எழுதப்பட்டதா? என அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். ‘நான் பதவி விலகவில்லை. அதை ஏற்க வேண்டாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் சொன்னால் போதும், விவகாரம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், ‘‘ஜெயலலிதா எழுதிய விலகல் கடிதம் உங்கள் கைக்குக் கிடைத்தது பற்றி சர்சை கிளம்பியிருக்கிறது. போலீஸ் சோதனையின் போது, உங்கள் பெயருக்கு விலாசமிடப்பட்ட கடிதம் போலீஸாரால் பிரிக்கப்பட்டிருக்கிறது’’ எனக் கேட்டார். அதற்கு தமிழ்குடிமகன், ‘‘கருத்து சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

(தொடரும்)