நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அசர வைக்கும் ஆப்பிள் ஐபோன்கள்!

அசர வைக்கும் ஆப்பிள் ஐபோன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அசர வைக்கும் ஆப்பிள் ஐபோன்கள்!

அசர வைக்கும் ஆப்பிள் ஐபோன்கள்!

ந்த வருடத்துக்கான ஐபோன் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி முடித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். புதிய ஐபோனில் என்னென்ன வசதிகள் இருக்கும், என்னென்ன இருக்காது, என்ன விலை என ஒவ்வோர் ஆண்டுமே ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும். சில நாள்களுக்கு முன் ஐபோன் அறிமுகமானபோதும், இந்தப் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை.  

அசர வைக்கும் ஆப்பிள் ஐபோன்கள்!


இந்த முறை ஐபோனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, ஆப்பிளின் புதிய அலுவலகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடந்தது.  இதனால் அறிமுக உரையை ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவலைகளோடு தொடங்கினார் ஆப்பிளின் சி.இ.ஓ. டிம் குக். அதைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3, ஆப்பிள் 4K டிவி, ஐபோன் 8, ஐபோன் X என பல அறிவிப்புகள் வெளியாகின.

4.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 12 எம்.பி ரியர் கேமரா, 7 எம்.பி ஃபேஸ்டைம் கேமராவோடு ஐபோன் 8 வெளியாகியிருக்கிறது. 5.5 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, வைட் ஆங்கிள் கேமரா மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் உடன் கூடிய 12 எம்.பி டூயல் கேமரா போன்றவை ஐபோன் 8 ப்ளஸின் ஸ்பெஷல். இவற்றுடன், நியூரல் இன்ஜினுடன்கூடிய A11 பயோனிக் சிப், வாட்டர் மற்றும் ஸ்ப்லாஷ் ரெசிஸ்டன்ட், ஐபோன் 7-ல் இருக்கும் அதே பேட்டரி போன்றவை இரண்டு மாடல்களிலும் பொதுவாக இடம்பிடித்துள்ளன. 

அசர வைக்கும் ஆப்பிள் ஐபோன்கள்!பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியை இந்த ஆண்டும் தவறவிடாமல் அறிமுகம் செய்திருக்கிறது ஆப்பிள். இதற்காக பிரத்யேக Qi சார்ஜர்களும் தயார். ஆனால், இவற்றை ஏர் பாட்ஸ் போல, தனியாகவே பணம் தந்து வாங்கவேண்டும். இது தவிர, ஆப்பிள் வாட்ச், ஐபோன், ஏர் பாட்ஸ் ஆகியவற்றை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்காக ‘ஏர் பவர்’ என்னும் புதிய ஹார்டுவேர் ஒன்றையும்  அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது ஆப்பிள்.

இது ஐபோன் நிறுவனத்துக்குப் பத்தாவது ஆண்டு என்பதால், ஸ்பெஷலாக ‘ஐபோன் X’ என்ற மாடலையும் வெளியிட்டது ஆப்பிள். ஐபோன் 9 இல்லாமலே, நேரடியாக ஐபோன் 10-க்குத் தாவியிருக்கிறது ஆப்பிள். இதில் பல புத்தம் புது வசதிகள் பளிச்சிடுகின்றன. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு 5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே, DIOS-யுடன் கூடிய 12 எம்.பி டூயல் ரியர் கேமராக்கள், 7 எம்பி ஃபேஸ்டைம் கேமரா, ஐபோன் 7-ஐவிடவும் இரண்டு மணி நேரம் அதிகமாக நீடிக்கும் பேட்டரி எனக் கலக்கல் வசதிகளோடு களமிறங்கியிருக்கிறது ஐபோன் X.

படங்களை மெருகூட்ட உதவும் போர்ட்ரைட் லைட்டிங் மோட், டச் ID-க்குப் பதிலாகப் புதிதாக வந்திருக்கும் ஃபேஸ் ஐ.டி, எமோஜிக்களுடன் நம் ரியாக் ஷன் களைக் கலந்து பேச செய்ய உதவும் அனிமோஜி போன்றவை ஐபோன் X-ன் ஹைலைட்ஸ். இந்த வசதிகள் ஐபோன் 8-ல் இல்லை; ஐபோன் X-ல் மட்டும்தான்.

இதுவரை விரல்ரேகைகள் மூலம் ‘அன்லாக்’ செய்த ஐபோன்களை இனி முகம் மூலமாகவே ‘அன்லாக்’ செய்யலாம். இதற்காக வந்திருப்பதுதான் இந்த ஃபேஸ் ID. இதற்காக முதலிலேயே நம் முகத்தை மிகத் துல்லியமாக ஸ்கேன் செய்து, A11 பயோனிக் சிப்பில் பதிவு செய்துவிடு கின்றன ஐபோன் X-ன் சென்சார்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் போனை அன்லாக் செய்ய நினைத்தால், இந்தத் தகவல்களோடு ஒப்பிட்டு மொபைல் அன்லாக் செய்யப் படும். இதனை மற்ற ஆப்பிள் ஆப்களுக்கும் பாஸ்வேர்டாகப் பயன்படுத்த முடியும். இது, டச் ID-யைவிடவும் பல மடங்கு பாதுகாப்பானதாம். 

32GB மற்றும் 128GB வேரியன்ட்களுக்குப் பதிலாக, ஐபோன் 8, 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் X ஆகிய மூன்றிலும் 64GB மற்றும் 256GB என இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோனில் 8-ல் சில ஏமாற்றங்கள் இருந்தாலும், ஐபோன் X மூலம் சரிசெய்துவிட்டது ஆப்பிள்.

- ஞா.சுதாகர்

என்ன விலை?

எப்போதும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரத்துக்குள் இருக்கும் ஐபோனின் விலை, இந்த முறை முதன்முறையாக லட்சத்தைத் தொட்டிருக்கிறது.

ஐபோன் 8 : ரூ 64,000 (64 GB), ரூ 77,000 (256 GB)

ஐபோன் 8 ப்ளஸ் : ரூ.73,000 (64 GB), ரூ 86,000 (256 GB)

ஐபோன் X  : ரூ 89,000 (64 GB),  ரூ.1,02,000 (256 GB)