மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 49

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ரு வாரத்துக்குப் பின்னர் புறப்பட்டனர். நஞ்சுத்தாக்குதலிருந்து விடுபடத் தொடர்ந்து சிகிச்சைத் தேவைப்படுபவர்களும் மிகக் கடுமையாகக் காயம்பட்டவர்களும் எவ்வியூரிலேயே தங்க வைக்கப்பட்டனர். ஓரளவு சமாளிக்கக்கூடிய காயங்களோடு இருக்கும் பதினாறு பேர் புறப்பட்டனர். அவர்களின் தோளிலே நாற்பது தேவவாக்கு விலங்குகள் அடைக்கப்பட்ட இரண்டு கூடைகள் கட்டப்பட்டன. திரையர்களின் இக்கூட்டத்துக்குள் பறம்பின் வீரர்கள் அறுவர் இணைந்தனர். நீலன் உள்ளிட்ட அவர்கள் ஆறு பேரும் நல்ல உடல்வாகுகொண்டவர்கள்தான். அப்படிப்பட்டவர்களைத் தேர்வு செய்துதான் இக்கூட்டத்தோடு இணைத்தான் பாரி. ஆனாலும், திரையர்களுக்கும் இவர்களுக்குமிடையே இருக்கும் வேறுபாடு எளிதில் தெரியக்கூடியதுதான்.

“இவர்களுக்கு இன்னல் ஏதும் வந்துவிடாதா?” என்று காலம்பன் பதறியபொழுது பாரி சொன்னான். “எதிரிகளின் கவனம் முழுவதும் தேவவாக்கு விலங்குகளின் மீதுதான் இருக்கும். வெற்றிக்களிப்பில் இருக்கும் அவர்களின் கண்களுக்கு இந்த வேறுபாடு எதுவும் தெரியாது. கைகால்களில் அடிபட்டு உடல் நெளிந்து குறுகி நிற்கும் பலருக்கு இடையேதான் இவர்கள் இருக்கப்போகிறார்கள். எனவே கவலை வேண்டாம்” என்று சொல்லிய பாரி சற்றே  நிறுத்திவிட்டுச் சொன்னான், “ஒருவேளை இவர்கள் கண்டறியப்பட்டால் எப்படி மீள்வது என்று அவர்களுக்குத் தெரியும். இந்த அறுவரில் நீலன் மட்டுமே சிறந்த வீரன். மற்றவர்களும் திறன்மிக்கவர்கள்தான். ஆனால், போரிடுவதில் அல்ல; அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே” என்று சொல்லி வழியனுப்பினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 49

எவ்வியூரிலிருந்து அவர்கள் புறப்பட்டனர். நாள்கள் அதிகமானதால் ஐயம் வந்துவிடக் கூடாது எனக் கருதி எங்கும் தங்கவில்லை. ஓர் இரவு இரு பகல்களில் மூன்று மலைகளையும் கடந்து அடிவாரம் வந்தனர். பறம்பின் எல்லையைவிட்டு அகன்று சமதளக்காட்டின் உட்பகுதியிலிருந்த கல்மண்டபத்துக்குத் தன் கூட்டத்தோடு வந்து சேர்ந்தான் காலம்பன். அவனது வரவை எதிர்நோக்கியிருந்தனர் பாண்டியநாட்டு வீரர்கள். காலம்பன் இரு கூடைகளில் எண்ணற்ற தேவாங்குகளோடு வந்தது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அனைவரையும் தேரிலே ஏற்றி உடனடியாக மதுரை நோக்கிப் புறப்பட்டனர்.

ணவிழா முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருந்தன. தனது வாழ்வில் காணாத பெருவிழாவினைக் கண்டுமுடித்த மதுரை இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. பெரும்பாலான விருந்தினர்கள் விழா முடித்துப் புறப்பட்டுவிட்டனர். மிகச் சிலர் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.
பொற்சுவை இப்போது பாண்டியகுல இளவரசி. இப்பேரரசின் குலவழக்கமும் அரசவிதிகளும் எளிதிற் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. ஒரு பேரியக்கத்துக்கு நடுவில் சிக்கி நகரும் சிற்றுயிராகத் தன்னை உணர்ந்தாள். தனது போக்கில் எல்லாம் போய்க்கொண்டிருந்தன. யாரால் எங்கு, எது முடிவுசெய்யப்படுகிறது என்பதை அவளால் எளிதில் கண்டறிய முடியவில்லை.

அவளது கண்கள் எப்போதும் தேடிக்கொண்டிருப்பது சக்கரவாகப் பறவைகளையும் சுகமதியையும்தான். நாள்தோறும் பார்க்க ஆசைப்பட்டும் சுகமதி, பொற்சுவையின் கண்களில் படவேயில்லை. அவளால், தான் இருக்கும் இடத்திற்குள்ளே எளிதில் நுழைய முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள் பொற்சுவை. இருவாரங்களுக்கு மேல் காத்திருந்த அவள், பொருத்தமான நேரத்தில் அரண்மனைக்கான மொழியில் பேசத் தொடங்கினாள்.

துறைமுகம் நோக்கிச் செல்ல இருந்த வணிகக் குடும்பங்களோடு புறப்பட ஆயத்தமாக இருந்தாள் சுகமதி. அரண்மனையிலிருந்து  `விரைந்து வா’ என அழைப்பு வந்தது. மூன்று வாரங்களுக்குப் பின் பொற்சுவையைப் பார்க்கப் புறப்பட்டாள் சுகமதி. மனதுக்குள் எண்ணங்கள் பேரலைகளாய் எழுந்து வந்தன. பார்க்கப்போகும் அந்தக் கணத்தை நெருங்க முடியாமலும் விலக்க முடியாமலும் தவித்தபடி அந்தப்புரத்துக்குள் நுழைந்தாள்.

ஒவ்வொரு நெடுங்கதவைத் தாண்டும்பொழுதும் விசாரிக்கப் பட்டாள். எல்லாம் நடுத்தர வயதுப் பெண்கள். பார்வையின் இறுக்கமே விருப்பமற்ற அனுமதியைச் சொன்னது. எல்லாவற்றையும் கடந்து உள்நுழைந்தாள்.

பொற்சுவையைப் பார்க்கும் அந்த முதற்கணத்தில் தனது முகம் வெளிப்படுத்தப்போகும் உணர்வு என்னவாக இருக்கப்போகிறது, கவலையின் கோடு படியாத, அதே நேரம் அவளின் கவலையை அதிகப்படுத்தாத ஓர் உணர்வுநிலையில் இருக்கத் தன்னை ஆயத்தப்படுத்தியவாறே அறைக்குள் நுழைந்தாள்.

சுகமதிக்காகக் காத்திருந்த பொற்சுவை மலர்ந்த முகத்தோடு அணைத்து வரவேற்றாள். மதுரைக்கு வந்ததிலிருந்து பொற்சுவையின் முகம் இவ்வளவு மலர்ந்து யாரும் பார்த்ததில்லை. சுகமதி திகைத்துப் போனாள். ‘எளிதில் மயங்கி மகிழும் பெண்ணல்ல பொற்சுவை, அப்படியிருக்க அவளின் முகத்திலிருக்கும் இந்த மகிழ்வின் காரணமென்ன?’ சுகமதிக்குப் பிடிபடவில்லை.

மனம் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது. முகத்தின் குறிப்பை எளிதில் கண்டறிவாள் பொற்சுவை என்பதறிந்து அவளை நேர்கொண்டு பார்க்காமல் சக்கரவாகப் பறவைக்கூண்டு இருந்த மேடைநோக்கி இயல்பாய்த் திரும்பினாள். திரும்பிய கணம் அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டிற்குள் பறவைகளில்லை. “அவை..?”

சுகமதி வினாவை முடிக்கும் முன்னே பொற்சுவை சொன்னாள், “ஆம் சுகமதி. பறந்துவிட்டன.”

சட்டென வந்த பொற்சுவையின் மறுமொழிக்குள் இழப்பின் கவலை எதுவுமில்லை. மணவாழ்வு எல்லாவற்றையும் மறக்கவைத்து புத்துலகைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட சுகமதி, தனது கவலை வெளிவராத தன்மையோடு உடனே கேட்டாள், “எப்பொழுது பறந்தன இளவரசி?”

“எனது திருமணம் முடிந்த ஏழாம்நாள் இரவு அவை பறந்துவிட்டன.”

”நீங்கள் பார்த்தீர்களா?”

”இல்லை.அன்றிரவுதான் அயர்ந்து தூங்கினேன்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 49

“ஆறு நாள்களும் தூங்காமலா இருந்தீர்கள்?” என்ற கேள்விக்குள் நக்கல் ஓடி மறைந்தது. “புது மணப்பெண்ணுக்கு தூக்கம் எப்படி வரும்?” என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தபடி கார்காலத்துப் பள்ளியறையின் வியப்புக்குள் மூழ்கினாள். பள்ளியறையின் மேற்கூரை முழுவதிலும் விண்மீன்கள் வரையப்பட்டிருந்தன. சுவர் முழுவதிலும் அழகிய ஓவியம் இடம்பெற்றிருந்தது. கண்களை எங்கும் ஓடவிட்டுக்கொண்டிருந்தாள்.

படுக்கையின்மேல், பட்டு இழைகளால் நெய்யப்பட்ட எலிமயிர்ப் போர்வை கிடந்தது. அதன் வண்ணங்கள் கண்களைப் பறித்தன. பார்த்தபடி நின்றாள்.

”எதைப் பார்த்து வியந்து நிற்கிறாய் சுகமதி?”

“வெண்பட்டால் ஒளிமிதக்கும் இவ்வளவு அகலமான படுக்கையை நான் பார்த்ததேயில்லை இளவரசி.”

“அப்படியா?”

“ஆம், இளவரசி.”

“உனக்கு மணமாகும்பொழுது சின்னஞ்சிறு கட்டிலில் படுக்கையை அமைத்துக்கொள்.”

சரியென்பதுபோலத் தலையாட்டினாள். ஆனால், அவளது கண்கள் காரணத்தைக் கோரின. பொற்சுவை சொன்னாள், “கணவன் மனைவிக்கான அகவாழ்வுக்கு அகன்ற படுக்கையைப்போல் இடையூறான இன்னொரு பொருள் எதுவுமில்லை.”

சொல்லியபடி நடந்தாள் பொற்சுவை. அவள் கண்டறிந்து சொல்லும் உண்மை காட்சியாய் சுகமதியின் மனதுக்குள் விரிந்துகொண்டிருந்தது.

“காதலுக்குத் தேவை கட்டிலின் அகலமல்ல; இது பறக்க வேண்டிய இடமல்ல; புதைய வேண்டிய இடம். அது தெரியாத மூடர்களே அறையில் பாதியைக் கட்டிலாகச் செய்கின்றனர்.”

பொற்சுவையின் விளக்கம் சுகமதியை மயக்கியது. கட்டில் செய்த கலைஞனின் மீதான அவளது கோபத்தை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தாள் சுகமதி. வாழ்வின் இன்னொரு வாசலின் வழியே உள் நுழைந்துவிட்டாள் என்பது பொற்சுவை உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. அதனை நினைத்து மகிழ்ந்தபடியே அவளைப் பின்தொடர்ந்தாள் சுகமதி.

அறையைவிட்டு வெளியில் வந்தாள் பொற்சுவை. சக்கரவாகப் பறவைக் கூண்டருகில் நின்றபடி சொன்னாள், “மழையோடு வந்த பறவைகள், மழை நிற்கும்போது மழைபெய்யும் பகுதிக்கு மழையோடு சேர்ந்து போய்விடுகின்றன. அவற்றின் இறகுகள் எப்பொழுதும் ஈரத்துடனே இருக்கின்றன. அவற்றின் அலகைவிட்டு மழையின் வாசனை மறைவதேயில்லை. மழைநீர் மட்டுமே அருந்துகின்றன. மற்ற பறவைகளைப்போல இவையும் முட்டையிட்டு அடைகாத்துத்தான் குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் மழைத் துளிப்பட்டே முட்டையோடு உடைந்து குஞ்சு வெளிவரும் நிகழ்வு இவற்றுக்குத்தான் நிகழ்கிறது.”

பொற்சுவை சொல்லி முடிக்கும்முன் சுகமதி கேட்டாள், “மழைக்காலம் இன்னும் முடியவில்லையே,  அதற்குள் ஏன் பறந்துவிட்டன?’’

``அவை காதல் பறவைகளல்லவா? அதனால்தான் பறந்துவிட்டன.”

”காதல்கொள்வதற்கும் மழைக்காலம் முடிவதற்குள் பறப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது?”

சுகமதியின் வினாவைத் தனது அசட்டுச் சிரிப்பால் எதிர்கொண்ட பொற்சுவை சொன்னாள், ”படுக்கையில் தனித்திருக்கும் ஒருத்தியை எத்தனை இரவுகள்தான் அவற்றால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?”

அதிர்ந்தாள் சுகமதி. அதுவரை பொற்சுவை பேசிய சொற்களுக்கும், மலர்ந்திருக்கும் அவளது முகத்துக்கும் காரணம் அறியவந்தபொழுது நடுங்கி நின்றாள்.

வர்களின் தேர், மாலைக்குள் கோட்டையின் மேற்குவாசலுக்குள் நுழையும் என்று முன்வந்த வீரன் செய்தி சொன்னான். அச்சொல்லில் இருந்து பரவியது பரபரப்பு. நம்ப முடியாதவற்றை நம்பப்போகும் பொழுதுக்காக ஆயத்தமாயினர். இளவரசன் பொதியவெற்பன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். வெற்றிச்செருக்கோடு இருந்த கருங்கைவாணன் அவர்களின் நுழைவை எதிர்பார்த்து மேற்குவாசல் மாடத்திலே காத்திருந்தான்.

பேரரசர் குலசேகரபாண்டியனை இவ்வளவு மகிழ்வோடு யாரும் பார்த்ததில்லை. முசுகுந்தர் போன்று நெடுங்காலம் அவருக்கு அருகிலே இருக்கும் மனிதர்களுக்கே அது வியப்பாக இருந்தது. மகிழ்வோ, துக்கமோ உணர்ச்சியை எளிதில் காட்டிக்கொள்ளாதவர் பேரரசர். அவரது முகக்குறிப்பிலிருந்து அவரை கணித்துவிட முடியாதென்பது பலரும் அறிந்த உண்மை. ஆனால், இன்று பேரரசரின் உடலும் மனமும் பூரிப்பில் திளைத்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 49



அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உலகமே வியக்குமளவிற்கு மிகச் சிறப்பாக நடந்து முடிந்த திருமணம், அத்திருமணத்தை முன்னிட்டு கடல்வணிகத்துக்கு அச்சாணி போன்று திசைகாட்டும் விலங்கொன்றைக் கண்டறிந்தது, அதனை எடுத்துவர எந்த வாய்ப்புமில்லை என்று கவலைப்பட்டபொழுது மிகச் சிறப்பான திட்டமிட்டு அதனை எடுத்து வந்தது என எண்ணற்ற காரணங்கள் ஒன்று சேர்ந்துகொண்டன. அதனால்தான் பேரரசர் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கிறார் என வெள்ளிகொண்டார் நினைத்தார். ஆனால், முசுகுந்தர்தான் இன்னும் ஆழத்துக்குப்போய்ச் சிந்தித்தார். யாரும் உள்நுழைய முடியா இடமெனக் கருதப்பட்ட பறம்பிக்குள் செல்லும் ஆற்றலை நாம் மெய்ப்பித்துள்ளோம். இன்றுவரை பிற பேரரசுகளால் நினைத்துப் பார்க்க முடியாத செயல் அது. 

கடற்பரப்பில் பாண்டிய நாட்டின் ஆற்றல் பன்மடங்கு உயரப்போகிறது. வணிகத்திலும் அரசியலிலும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம் அளவிட முடியாததாக இருக்கும். இத்திருமணம் எந்த நோக்கத்தை உள்ளீடாகக்கொண்டிருந்ததோ, அந்த நோக்கம் கனிந்து பழுக்கத் தொடங்கியுள்ளது. முசுகுந்தரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஒன்றுடன் மற்றொன்று சேரும்பொழுது இரண்டாகும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி நடப்பதில்லை. இரண்டு ஆற்றல்கள் இணையும்பொழுது அவை பலவாகத்தான் மாறுகின்றன. நாம் எண்ணிப்பார்க்க முடியாத மடங்குகளாக அவை பரிணமிக்கின்றன.
தனது இருக்கையிலிருந்து எழுந்த பேரரசர் மாளிகையின் மேன்மாடம் நோக்கிச் சென்றார். அவரின் முகக்குறிப்பறிந்து முசுகுந்தர் பின்சென்றார். தேவாங்கினைக் கொண்டு வருகிறவர்கள் வந்துசேரும் நேரம் வரை பொழுதைக் கடப்பது கடினமாகவே இருந்தது. இட்டுநிரப்ப முடியாத காலத்தைக் கையில் வைத்துக்கொண்டு தத்தளித்தனர் இருவரும். மனம் அதனை எவ்வளவு எதிர்பார்த்திருக்கிறது என்பதை எதிர்படும் ஒவ்வொரு கணமும் சொல்லியது.

பேரரசர் மேலேறி வரவும் காவல்வீரர்கள் அகன்று விலகினர். மாடத்திலிருந்த புறாக்கள் படபடத்து வெளியேறின. அவற்றைப் பார்த்தபடி பேரரசர் கேட்டார், “புதிய வரவு அறிந்து, ஏற்கெனவே நிலைகொண்டவை விலக வேண்டியது விதிதானே?”

முசுகுந்தர் சற்றே திகைத்தார். மகிழ்வின் ஆழத்துக்குள் இருந்தபடியே அடுத்த கட்டத்திற்கு பேரரசர் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. எப்பொழுதும்போல் முகம் பார்த்துக் கணிக்க முடியாத இடத்தில்தான் இப்பொழுதும் அவர் இருக்கிறார் என்பதை முசுகுந்தர் உணர்ந்தார்.

“என்ன அமைதியாய் இருக்கிறாய்?”

“தாங்கள் சொன்னதைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் பேரரசே. வீரர்களைப்போல தள்ளி நிறுத்த வேண்டியது யாரை? புறாக்களைப்போல தொலைவிற்கு விரட்ட வேண்டியது யாரை?”

சொல்லிவிட்டு அமைதியானார் முசுகுந்தர். ‘தான் சொல்லைச் சிதறவிட்டுவிட்டோம். இனி அதனை நிரப்புவது எளிதல்ல’ எனத் தோன்றியது. யவனர்கள், சூல்கடல் முதுவன் ஆகிய இருபெரும் ஆற்றல்கொண்டோரோடு விளையாட வேண்டிய விளையாட்டிது. இதில் யாரை அருகில் வைப்பது? யாரைத் தொலைவில் வைப்பது? பேரரசர் என்ன நினைக்கிறார்? அதனை அறியாமல் எதுவும் சொல்லிவிடக் கூடாது’ என மனம் திணறியது.

உலகில் எங்கும் இல்லாத  முத்துக்களையுடையது பாண்டிய நாடு. என்ன விலை கொடுத்தேனும் அம்முத்துக்களை வாங்கி மகிழும் யவனர்கள். இவை இரண்டுக்கும் இடையில் பரவியிருக்கும் பெருங்கடலை விடாது கடக்கும் வணிகர்கள். இம்மூன்றின் வரிசைப்படிநிலையில் மாற்றம் வரும் சூழல் உருவாகப்போகிறது. இதில் யாரை எங்கு நகர்த்துவது என்பதே தலையாய முடிவு. நாம் கண்டறிந்து கைப்பற்றியுள்ளதோ, வணிகர்களையும் யவனர்களையும் ஒருசேரத் திகைக்கவைக்கப் போகிறது.

கடலை வெல்லும் கண்டுபிடிப்பு இது. இதன் மதிப்பு எல்லையற்றது. காலம் கடந்தாலும் மதிப்பிழக்காதது. அதனை முழுமையாகப் புரிந்துகொண்டு நாம் முடிவெடுக்க வேண்டும். பதட்டத்தில் எதனையும் செய்துவிடக் கூடாது.”

பேரரசர் உச்சரிக்கும் சொற்கள் மிகக் கவனமானவை என்பதை முசுகுந்தர் உணர்வார். பதற்றத்தில் ஏதோவொரு முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அதனால்தான் இச்சொல்லை அவர் பயன்படுத்துகிறார் என்று முசுகுந்தரால் கணிக்க முடிந்தது. என்ன நடந்திருக்கும் என நினைவுகூர்ந்தபொழுது அவரது சிந்தனைக்கு எட்டியவர் சூல்கடல் முதுவன்.தேவாங்கினைக் கொண்டுவந்துகொண்டிருக்கும் செய்தி பேரரசருக்குச் சொல்லப்பட்டவுடனேயே அவருக்கும் சொல்லப்பட்டுவிட்டது. சூல்கடல் முதுவனும் அரங்கிற்கு வந்துவிட்டார். ஏதோ ஒருவகையில் அது தவறு என்று பேரரசர் கருதுகிறார் என்பதை முசுகுந்தர் உணர்ந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 49

அன்பு, உறவு, ஆசை, மகிழ்வு என உணர்வுகளால் நெருங்க முடியாததாக இருக்க வேண்டும் அரசாட்சி. அதன் விதிகள் எதன் பொருட்டும் கீழிறங்கக் கூடாது. நாட்டின் விதியை எழுதுகிறவனுக்கு வேறு எவையும் பொருட்டல்ல. பேரரசர் குலசேகரபாண்டியன் மாடத்திலிருந்து கீழிறங்க முனைந்தபோது தள்ளி நிறுத்த வேண்டியவர்களையும் தொலைவிற்கு விலக்க வேண்டியவர்களையும் பற்றிய கணிப்புக்கு வந்தார் முசுகுந்தர். அதில், தான் நிற்கவேண்டிய இடம் எது என்பது மட்டும் அவருக்குப் பிடிபடவில்லை.

ழக்கம்போல் நாழிகையின் மணியோசை கோட்டையின் நடுவிலிருந்து ஒலித்தது. கோட்டையின் நெடுங்கதவுகளை மூடச்சொல்லும் உத்தரவது. மேற்குவாசலின் மேல்மாடத்தில் தளபதி கருங்கைவாணன் நின்றுகொண்டிருந்தான். அவனோடு கோட்டைத்தளபதி சாகலைவன் நின்றான். இளமாறனும் செவியனும் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தனர்.

கீழ்நின்றுகொண்டிருந்த காவல்வீரர்களுக்கு நெடுங்கதவை மூடலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியவில்லை. முக்கியமானவர்களின் வரவை எதிர்பார்த்துத் தளபதி உள்ளிட்டவர்கள் மேலே நின்றுகொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க நாம் கதவினை மூடினால் என்னவாகும் என நினைத்துக் குழம்பிப்போய் நின்றனர். கட்டுத்தறியில் இருந்து யானை வந்து சேர்ந்தது. கோட்டைக்கதவின் குறுக்குத்தடியை யானையைக்கொண்டே தூக்கிச்செருக வேண்டும். காவல் வீரர்கள் யானைப்பாகனைப் பொறுத்திருக்கச் சொன்னார்கள். அவனுக்குக் காரணம் புரியவில்லை. சரி நிற்போம் என முடிவெடுத்து நின்றான்.

மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்த இளமாறனுக்கும் செவியனுக்கும் கோட்டைவாசல் தளபதி மாரையனின் நினைவு வந்துபோனது. அன்று இரு தேவாங்குகளோடு நாம் வந்தபோது நெடுநேரம் கோட்டையின் வெளிப்புறம் நின்றோம். ஆனால், இன்று அதே தேவாங்கு வரவிருப்பதற்காகக் கோட்டையின் மேலே தளபதி நிற்கிறார்; கோட்டைக்குள்ளே யானை வந்து நின்றுகொண்டிருக்கிறது.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் குதிரைகள் பாய்ந்து வந்துகொண்டிருந்தன. திரையர்களையும் தேவாங்குகளையும் கொண்டுவரும் வண்டிகள் வேகம் குறையாமல் கோட்டைக்குள்ளே நுழைந்தன. குதிரைகளின் பாய்ச்சல்கண்டு நிறுத்தப்பட்டிருந்த யானை பிளிறியது.

இளமருதனும் செவியனும் கோட்டையின் உட்பக்கமாகப் பார்க்க, நான்கு வண்டிகள் வரிசையாகக் கோட்டைக்குள் நுழைந்தன. வண்டியின் முன்னும் பின்னும் குதிரையில் ஆயுதம் தாங்கிய காவல்வீரர்கள் வந்தனர். வண்டிக்குள் இருந்தவர்கள் அனைவரும் சங்கிலி கொண்டு பூட்டப்பட்டிருந்தனர். கோட்டையை நெருங்கும்பொழுது அனைவரையும் சங்கிலி கொண்டு பூட்டியுள்ளனர். மூன்று வண்டிகளில் திரையர்கள் இருந்தனர். ஒரு வண்டியில் தேவாங்கு விலங்குகள் இருக்கும் இரண்டு கூடைகளை வைத்துக்கொண்டு மதுரை வீரர்கள் அமர்ந்திருந்தனர்.

கூட்டுவண்டியின் சட்டகங்களின் இடைவெளியின் வழியே மதுரையைப் பார்த்தான் நீலன். கோட்டையின் உயரமும் பெருங் கட்டடங்களும் விரிந்து நீண்ட வீதிகளும் பெரும்வியப்பை ஏற்படுத்துவனதான்; ஆனால், நீலனின் கண்களுக்கு அவைப் பொருட்டாகப் படவில்லை. அவனது கண்கள் பிளிறிய யானையைப் பார்த்தன. அதன்மீது அகுதை வீற்றிருப்பதுபோலத் தெரிந்தது. இசைகேட்டு மகிழும் அசுனமாக்கள் நினைவில் வந்து முட்டிக்கொண்டிருந்தன. காலங்காலமாய் கதைகளின் வழியே அவன் அறிந்த மதுரையைக் கண்களின் வழியே அறிந்துகொண்டிருந்தான். மதுரை அவனுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது. ஒரு கணம் உடல் சிலிர்த்து அடங்கியது.

அவனது கண்கள் வைகையைத் தேடின. வண்டிகள் நகரின் நெடுவீதியின் வழியே நுழைந்து சென்றன. உடன் வந்தவர்களின் கண்களில் அடுத்து நடக்கப்போவதன் பதற்றம் தெரியத் தொடங்கியது. நீலனின் கண்கள் பரிதவித்தன. அருகிலிருந்த காலம்பனிடம் கேட்டான், “வைகை எங்கே இருக்கிறது?”

`ஏதோவொரு திசையைச் சொன்னார்களே’ என்று காலம்பன்  சிந்தித்துக்கொண்டிருக்கையில் வண்டிகள் நின்றன.

அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். மதுரையின் வீரர்கள் தேவாங்குகள் இருந்த கூடைகளைச் சுமந்தபடி அரண்மனைக்குள் சென்றனர். சிறிதுநேரம் கழித்துத் திரையர்களைக் கவசவீரர்கள் சூழ்ந்தபடி வண்டியிலிருந்து இறக்கித் தொலைவில் இருந்த மாளிகை ஒன்றில் நிறுத்தினர்.

பேரரசரின் தனித்த மாளிகை. அலங்கார வேலைப்பாடுகளில் இதற்கு இணைசொல்ல எதுவுமில்லை. குலசேகரபாண்டியன் தனது இருக்கையில் அமர்ந்திருக்க, அவரின் கண்முன்னால் பறம்புநாட்டின் தேவவாக்கு விலங்குகளைக் கொண்டுவந்து இறக்கினர் வீரர்கள். இக்காட்சியைப் பார்க்கும் யாவரும் மெய்சிலிர்த்து உறைந்தனர். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 49

இது நடந்துவிட்டது என்பதை மனம் இன்னும் நம்ப மறுத்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், கண்களுக்கு முன்னால் நாற்பது தேவாங்குகள் இருந்தன. இரண்டின் இடுப்பில் தோல்கொண்டு கட்டி மாமன்னரின் கைதொடத் தாங்கி நின்றனர் வீரர்கள். தனது வலக்கையின் நடுவிரலால் அவற்றின் தலைதொட்டுத் தடவினார் பேரரசர். வடதிசை நோக்கிச் சரியும் காலக்கோடு அவரின் விரல்வழியே நகர்ந்தது இறங்கியது.

அரசவை மகிழ்வில் திளைத்தது. கருங்கைவாணனை வானளாவப் பாராட்டினார் பேரரசர். இளமருதனும் செவியனுங்கூட பாராட்டப்பட்டனர். மையூர்கிழார் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். பொதியவெற்பனின் கண்கள் அந்த விலங்குகளைவிட்டு அகலவேயில்லை. பாண்டியப்பேரரசின் வளமிக்க எதிர்காலத்தை அவற்றின் வட்டவடிவ கண்களுக்குள் பார்த்துக்கொண்டிருந்தான். 

அந்துவன் மிக அடக்கமாகத் திசைவேழருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான். தன் தலைமாணாக்கனை நினைத்து, பேரறிவின் செருக்கோடு வீற்றிருந்தார் திசைவேழர். கூடையிலிருந்த ஒரு தேவாங்கைப் பிடித்துவந்து அவரின் கைகளில் ஒப்படைத்தான் மாணவன் ஒருவன். அதனை வாங்கியபடி உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார் திசைவேழர். கைகளுக்குள் அடங்கும் ஒரு சின்னஞ்சிறு உயிரினம் காலப்பெருவெளியின் ஆதி ரகசியத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாகத் தனது உண்மைகளை மறைத்துவைத்து விளையாடுகிறது. இவற்றையெல்லாம் கண்டறிவதும், இணைப்பதும், புரிந்துகொள்வதும் எவ்வளவு சுவையூட்டக்கூடிய ஒன்று.

திசைவேழர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் `கண்டறியப்பட்ட திசைகாட்டும் தேவாங்கை எவற்றோடு இணைக்க வேண்டும், யாரும் புரிந்துகொள்ள முடியாத விளையாட்டை எப்படி விளையாட வேண்டும்’ என மனதுக்குள் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தார் பேரரசர்.

சூல்கடல் முதுவனைப் பார்த்துப் பெருமகிழ்வோடு பேரரசர் கூறினார், “இருபது தேவாங்குகளைப் பத்துக் கப்பல்களிலேற்றி முதல் பயணத்தைத் தொடங்குங்கள். காற்றையும் கடலையும் வெல்லும் பயணமாக அது அமையட்டும். நாடுகளையும் கடலோடிகளையும் வணிகர்களையும் பெருவியப்பில் ஆழ்த்துங்கள். நடுக்கடலில்கூட இயல்பாய் திசை திரும்பிப் பயணிக்கும் துணிச்சலைக்கண்டு யவனர்களே வியந்து நிற்கட்டும்.”

பேரரசரின் அறிவிப்பால் அவை மகிழ்வில் திளைத்தது. சூல்கடல் முதுவன் மீண்டும் மீண்டும் வணங்கித் தனது நன்றியறிதலைத் தெரிவித்தான். முசுகுந்தர் மட்டும் ஆழ்ந்து சிந்தித்து நடப்பதைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தார். இது தேவாங்கோடு சேர்த்து சூல்கடல் முதுவனையும் சோதித்துப்பார்க்கும் திட்டம் என்று அவருக்குத் தோன்றியது.

மறுகணம் அறிவித்தார், “திறன்மிகு தோளும் பாறை மார்பும்கொண்ட இத்திரையர்களை நான் யவனர்களுக்குப் பரிசாக வழங்குகிறேன்.”

அவை திகைத்து நின்றது. “அவர்களின் குடும்பங்கள் அனைத்தையும் விடுதலை செய்கிறேன்” என்றும் கூறினார்.

திருமணத்தை முன்னிட்டு சூல்கடல் முதுவனுக்குப் பரிசாக வழங்கத்தான் திரையர்கள் சிறைபிடித்து வரப்பட்டனர். ஆனால், முற்றிலும் மாறுபட்டு யவனர்களுக்கு ஏன் பரிசாக வழங்குகிறார் என்று கருங்கைவாணனுக்கு விளங்கவில்லை, பொதியவெற்பனுக்கும் விளங்கவில்லை. ஆனால், முசுகுந்தரால் ஓரளவு விளங்கிக்கொள்ள முடிந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 49

பேராற்றல்கொண்ட கருங்கொள்ளையர் களுக்கு இணையானவர்கள் எங்களிடமும் உண்டு.  அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்துகிறோம் என்றால், பாண்டியநாட்டின் ஆற்றல் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை யவனர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் ஏற்பாடு இது.

நடந்து முடிந்துள்ள திருமணம் பாண்டியநாட்டின் செல்வ வளத்தைப் பறைசாற்றியுள்ளது. அதேநேரத்தில் தேவாங்கின் மூலம் கடற்பயணத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தையும் அது பற்றிய செய்தியையும் யவனர்கள் அறியப்போகின்றனர். அதற்கு முன்பே பாண்டியநாட்டின் வலிமையை அவர்கள் அறிவது அவசியம்.

சிதறும் பரல்போல அரங்கு முழுவதும் மகிழ்வின் ஒளி பரவிக்கிடந்தது. பேரரசர் இருக்கையைவிட்டு அகன்றார். கொண்டுவந்ததில் மீதமுள்ள தேவாங்குகள் அரசின் பாதுகாப்பில் இருக்கட்டும் என்று முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கியது.

தனித்த மாளிகையில் நிறுத்தப்பட்டிருந்த திரையர்களைக் கவசவீரர்கள் வெளிப்புறமாக அழைத்துச்சென்றனர். உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. காலம்பனால் நிலைமையைக் கணிக்க முடியவில்லை என்பதை அவனது முகக்குறி சொன்னது. நீலன், காலம்பனை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தான்.

கடினமான இரும்புச்சங்கிலிகள் பட்டியக்கல்லை உரசி நகர, அவர்கள் கவச வீரர்களின் பின்னால் நடந்துகொண்டிருந்தனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...