மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 77 - உறவுகள் தொடர்கதை!

சசிகலா ஜாதகம் - 77 - உறவுகள் தொடர்கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 77 - உறவுகள் தொடர்கதை!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

டராசன் கைதுக்கு ஜெயலலிதா காட்டிய ரியாக்‌ஷனுக்கு, கருணாநிதி பதிலடி கொடுத்தார். ‘‘அ.தி.மு.க மீது தி.மு.க புகார் கொடுத்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அரசியல். ஆனால் அ.தி.மு.க-வைப் பற்றி அ.தி.மு.க-வினரே புகார் சொல்லியிருக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்ய முடியும்? வாங்கிய பணத்தைத் திருப்பித் தராத சீட்டுக் கம்பெனி மீது புகார் வந்தால், போலீஸார் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ, அதைப் போலதான் நடராசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல்வாதி அல்லாத ‘குடும்ப நண்பர்’ என்று கூறப்படுபவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தாலே குறை கூறுகின்றனர்’’ என்றார். ‘நடராசன் அரசியல்வாதி அல்ல. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் ஏன் ஜெயலலிதா கொதிக்கிறார்?’ என்பதுதான் கருணாநிதி சொன்ன விளக்கத்துக்கு அர்த்தம். தன் கட்சியின் சீனியர்களைவிட ஜெயலலிதாவுக்கு, நடராசன் முக்கியமானவராக அப்போது மாறியிருந்தார்.

பதவி விலகல் பற்றி சபாநாயகர் தமிழ்க்குடிமகன் கேட்ட விளக்கத்துக்கு ஜெயலலிதா பதில் அனுப்பியிருந்தார். ‘‘நான் அனுப்பிய கடிதம் பற்றி நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகர் விரும்பினாலும், பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்’’ என ஜெயலலிதா சொன்னார். இந்த அளவுக்கு ஜெயலலிதா இறங்கி வந்ததற்குக் காரணமே, சசிகலா குடும்பம்தான். ‘ஜெயலலிதா அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடக் கூடாது’ என்பதில், அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதனால்தான், சபாநாயகர் கேட்ட விளக்கத்துக்கு உடனடியாக பதில் அனுப்பியதுடன் நேரில் செல்லவும் ஜெயலலிதா தயாராக இருந்தார். ‘‘உடல்நிலைக் காரணமாக பதவி விலகல் கடிதத்தை எழுதினேன். கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் முடிவை மாற்றிக் கொண்டு கடிதத்தை அனுப்பவில்லை’’ என ஜெயலலிதா விளக்கம் சொல்லியிருந்தார். இதற்கு இன்னோர் அர்த்தமும் உண்டு. ஜெயலலிதாவின் உடல்நிலை மீது 1989-ம் ஆண்டே, சசிகலா குடும்பத்துக்கு அக்கறை இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியலில் அறுவடை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே அவர்களுக்குப் பிரதானமாக இருந்தது. ஜெயலலிதாவின் விளக்கத்தை ஏற்று,
“எம்.எல்.ஏ பதவியில் ஜெயலலிதா நீடிப்பார்’’ என 1989 மார்ச் 22-ம் தேதி சபாநாயகர் தமிழ்க்குடிமகன் அறிவித்த பிறகுதான் சசிகலா குடும்பம் நிம்மதி அடைந்தது.

சசிகலா ஜாதகம் - 77 - உறவுகள் தொடர்கதை!

ஜெயலலிதாவை, சசிகலா குடும்பம் அப்போதே பகடைக் காயாகப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. அரசியல் விலகல்... பிறகு பல்டி அடித்தது ஆகியவற்றால் ஜெயலலிதாவின் இமேஜ் சரிந்துவிடக் கூடாது என்பதற்காக களத்தில் இறங்கியது சசிகலா குடும்பம். ‘‘ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு போலீஸ் அனுப்பியது தவறு. இந்தக் குற்றத்தைச் செய்த சென்னை போலீஸ் கமிஷனர் துரை மீது வழக்குப் போடுவேன்’’ என ஜெயலலிதாவைச் சொல்ல வைத்தார்கள்.

போலீஸ் கமிஷனர் துரையைக் குறிவைத்து, ஜெயலலிதா குற்றச்சாட்டுகளைப் படித்ததால், தன் தரப்பு விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார் துரை. ‘‘நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கவர், சீல் வைக்கப்பட்டிருக்கவில்லை. குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது. சபாநாயகருக்கு உரிய முறையில் முகவரி இடப்படாத கவரில், கடிதத்தின் புகைப்பட நகல் மட்டுமே இருந்தது. ‘அனுப்புநர்’ என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்தில்லை. கடித உறையைச் சாட்சியத்தின் முன்புதான் பிரித்தோம். சோதனையில் தொடர்புடைய பொருள்களை, போலீஸார் கைப்பற்றுவது முறையானதுதான். விசாரணைக்குத் தேவையான பொருள்கள் இருக்கின்றனவா என்பது கடிதத்தின் உறையைப் பிரித்தால்தானே தெரியும்’’ என்றார் துரை. 

குடல்புண் நோயால் பாதிக்கப்பட்ட நடராசன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்று வந்தார். தனகோபாலை மிரட்டிய வழக்கில், நடராசனுக்கு ஜாமீன் கேட்கப்பட்டது. மனு விசாரணைக்கு வந்தபோது, நடராசனின் வழக்கறிஞர் வானமாமலை, ‘‘சபாநாயகருக்கு எழுதப்பட்ட கவரை போலீஸார் பிரித்துப் பார்த்தார்கள். அதிலிருந்த  ஜெயலலிதாவின் உண்மையான கடிதத்தைத்தான் கைப்பற்றினார்கள். அது புகைப்பட நகல் அல்ல. உண்மையான கடிதத்தைத்தான் சபாநாயகருக்கு போலீஸார் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்றார். உடனே, அரசு வழக்கறிஞர் சலாவுதின் பாஷா, ‘‘வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றிப் பிரித்துப் பார்க்கலாம். பிரதமர் உள்பட முக்கியப் பிரமுகர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாக இருந்தாலும், போலீஸார் பிரித்துப் பார்க்க முடியும். நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம், புகைப்பட நகல்தான்’’ என்றார்.
  
நடராசனின் ஜாமீன்மனு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தள்ளுபடியானதால், முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். நீதிபதி பி.கிருஷ்ணசாமி, நடராசனுக்கும் அவருடைய உதவியாளர் சேகருக்கும் ஜாமீன் வழங்கினார். நடராசனுக்கு ஜாமீன் கிடைத்தது பெரிய விஷயமில்லை. இன்னும் நான்கு பேர் முன்ஜாமீன் கேட்டதுதான் முக்கியம். நடராசனின் மனைவி சசிகலா, நடராசனின் மைத்துனர் விநோதகன், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதாவின் உதவியாளர் முரளி ஆகியோர்தான் அந்த நான்கு பேர். ‘நடராசன் கைதான வழக்கில் நாங்களும் கைது செய்யப்படலாம் எனக் கருதுகிறோம். அதனால், ஜாமீன் வழங்க வேண்டும்’ என அவர்கள் மனு செய்தனர். சசிகலா, நடராசன் தாண்டி, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விநோதகன், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி கேரக்டர்கள் அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தன.

சசிகலா ஜாதகம் - 77 - உறவுகள் தொடர்கதை!

தனகோபாலை நடராசன் மிரட்டிய வழக்கில் தாங்களும் கைதாகலாம் என்கிற அச்சம் இந்த நான்கு பேருக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கு, நீதிபதி டி.எஸ்.அருணாசலம் ஜாமீன் அளித்தார். ‘‘ஜெயலலிதாவுக்கு உதவியாக பணிபுரியும் சசிகலாவை, போயஸ் கார்டன் வீட்டில் வைத்தே போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்’’ எனச் சொல்லிதான் சசிகலாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. “ஜெயலலிதா வீட்டில் வைத்து விசாரித்தால் அரசியல் நோக்கம் கற்பிக்கப்படும். அதனால், போலீஸ் ஸ்டேஷனில் சசிகலாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என அரசு வழக்கறிஞர் கேட்டபோது, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. “இது நீதிமன்ற உத்தரவு. இதில் அரசியல் நோக்கம் கற்பிக்க இடமில்லை’’ என்றார் நீதிபதி.

தேனி ஸ்ரீதர் கொடுத்த வழக்கும் நடராசன் மீது போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, வி.தினகரன், முரளி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ‘தேனி ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில், எங்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 342, 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் கைது செய்யப்படலாம்’ எனச் சொல்லி, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டனர். அவர்களுக்கு நீதிபதி அருணாசலம் ஜாமீன் வழங்கினார்.

ஜெயலலிதா அலுவலகத்தில் உதவியாளர்களாக பணிபுரியும் கே.சங்கர் குமார், எஸ்.வீரேந்திரன், எஸ்.மோகன், வி.ஜெயராமன், வி.தினகரன்,    எஸ்.நடராஜன், வி.மாறன் ஆகிய ஏழு பேரும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்தனர். ‘இந்திய குற்றவியல் சட்டம் 420, 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழும், ஆயுதச் சட்டம் 25-வது பிரிவின் கீழும் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், முதல் தகவல் அறிக்கையில் எங்கள் பெயர்கள் இல்லாவிட்டாலும் நாங்கள் கைது செய்யப்படுவோம் என அஞ்சுகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இவர்களுக்கும் நீதிபதி அருணாசலம் ஜாமீன் அளித்தார்.

வி.ஜெயராமன், வி.தினகரன் ஆகியோரும் சசிகலா குடும்பத்தின் உறவுகள்தான்.

உறவுகள் தொடர்கதை ஆனது!

(தொடரும்)