மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 78 - “என்னிடமிருந்து ஜெயலலிதாவை பிரிக்கமுடியாது” - நடராசன் வாய்ஸ்!

சசிகலா ஜாதகம் - 78 - “என்னிடமிருந்து ஜெயலலிதாவை பிரிக்கமுடியாது” - நடராசன் வாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 78 - “என்னிடமிருந்து ஜெயலலிதாவை பிரிக்கமுடியாது” - நடராசன் வாய்ஸ்!

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள தனி வார்டில்தான், நடராசனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட  பிறகுதான் கொஞ்சம் நிம்மதியடைந்தார் நடராசன். அ.தி.மு.க அரசியலோடு நடராசனை முடிச்சுப் போடப்பட்ட பிறகு, முதல்முறையாக பத்திரிகையாளர்களின் முன்தோன்றி அவர் பேசினார்.

“மார்ச் 18-ம் தேதி, என் வீட்டில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே நுழைந்த போலீஸார், என்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அறை ஒன்றில் அமரவைத்தார்கள். ‘ஜெயலலிதாவின் அறிக்கையையும், கடிதத்தையும் வெளியிட வேண்டும்’ எனச் சில போலீஸ் அதிகாரிகள் என்னை வற்புறுத்தினார்கள். ‘அந்த ஆவணங்களை வெளியிட்டால், அரசின் வெகுமதிகள் கிடைக்கும். உங்களை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்துவார்கள்’ என அவர்கள் ஆசை வார்த்தை கூறினார்கள்.

சசிகலா ஜாதகம் - 78 - “என்னிடமிருந்து ஜெயலலிதாவை பிரிக்கமுடியாது” - நடராசன் வாய்ஸ்!

தமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த நான், சென்ற ஆண்டே (1988) எனது பதவி விலகல் கடிதத்தை அளித்துவிட்டேன். ஆனாலும் அரசு, என் ராஜினாமாவை ஏற்கவில்லை. அதனால்தான் எனக்கு, ‘பதவி தருவோம்’ என்றார்கள். அரசியலிலிருந்து விலகுவதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையையும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தையும் வெளியிடுமாறு போலீஸார் என்னைத் திரும்பத் திரும்பக் கேட்டனர். அதை நான் ஏற்க மறுத்ததால்தான், என்னைக் கைது செய்தார்கள்.

அரசியலிலிருந்து விலகும் அறிக்கையையும், ராஜினாமா கடிதத்தையும் அழித்துவிடும்படி, ஜெயலலிதா என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். ஆனால், அதை நான் அழிக்கவில்லை. இதனை ஜெயலலிதா மற்றும் என் மனைவியும் ஜெயலலிதாவின் உதவியாளருமான சசிகலா முன்னிலையில் அழிக்க விரும்பினேன். என் டெலிபோனையும், ஜெயலலிதா போனையும் போலீஸ் ஒட்டுக்கேட்கிறார்கள். என்னிடம் ஜெயலலிதாவின் அறிக்கையும், கடிதமும் இருந்ததை அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

சீலிடப்பட்ட உறையில் அறிக்கையையும், கடிதத்தையும் ஜெயலலிதா என்னிடம் கொடுத்திருந்தார். ‘எங்கள் கோரிக்கைக்கு இணங்க மறுத்தால், உங்கள் மீது இன்னும் பல வழக்குகள் தொடரப்படும்’ என போலீஸார் மிரட்டினார்கள். ‘கொலைக் குற்றம் சாட்டிக்கூட என்னைக் கைது செய்துகொள்ளுங்கள். நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், ஜெயலலிதாவின் பதவி விலகல் கடிதத்தை வெளியிட மாட்டேன்’ என போலீஸாரிடம் உறுதியாகத் தெரிவித்தேன். ஆனாலும், ஜெயலலிதாவின் கடிதம் மற்றும் அறிக்கையின் மூலப் பிரதிகளை போலீஸார் என்னிடமிருந்து கைப்பற்றினார்கள்.

சபாநாயகருக்கு தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா எழுதிய, சீலிடப்பட்ட கடிதத்தை போலீஸார் பிரித்துப் பார்த்தது சட்டவிரோதம். என் மீதான வழக்குக்கும், அந்தக் கடிதத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. அப்படி சம்பந்தமில்லாத விஷயத்தை, என் மூலம் வெளிக் கொண்டுவர வேண்டும் என போலீஸார் முயன்றார்கள். என்னுடன் கைதுசெய்யப்பட்ட என் உதவியாளர் சுந்தரமூர்த்தியின் பெயரை, கைது செய்ததாக போலீஸ் ஆவணங்களில் காட்டவில்லை. ஆனால், சபாநாயகருக்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் சுந்தரமூர்த்தியே ஜெயலலிதாவின் கடிதத்தையும் ராஜினாமா அறிக்கையையும் கொண்டு சென்று கொடுத்தாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும், என்னால் பேசவும் எழுதவும் முடியும். ஆனால், என் கைப்பட எழுத போலீஸ் அனுமதிக்காமல், அவர்களே ஒரு வாக்குமூலத்தை டைப் செய்து கொண்டுவந்தனர். அதற்கு முன்பு, ‘ஸ்பெசிமன் சிக்னேச்சர்’ (மாதிரிக் கையெழுத்து) எனச் சொல்லி சுமார் பத்து காகிதங்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். அந்தக் கையெழுத்தை வெட்டி, போலீஸாரே டைப் செய்த காகிதத்தில் ஒட்டி, நான் வாக்குமூலம் கொடுத்ததாக, ஜோடனை செய்திருக்கிறார்கள். ‘ஸ்பெசிமன் சிக்னேச்சர்’ என்ற பெயரில் வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியது மோசமான நடவடிக்கை.

என் வீட்டுக்குப் போகிறவர்களையெல்லாம் மறித்துக் கைதுசெய்கிறார்கள். என்னைப் பார்க்க ஊரிலிருந்து வந்த என் உறவினர்களெல்லாம் பயந்து ஓட்டலில் தங்கினார்கள். என்னைக் கைது செய்தபோது, நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்கச் செயின் போட்ட கடிகாரம் ஆகியவற்றை போலீஸ் எடுத்துக்கொண்டது. என் வீட்டில் இருந்த மனைவியின் நகைகள்கூட காணவில்லை.

சசிகலா ஜாதகம் - 78 - “என்னிடமிருந்து ஜெயலலிதாவை பிரிக்கமுடியாது” - நடராசன் வாய்ஸ்!

எனக்கு ஜாமீன் கிடைத்த பிறகும்கூட, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை விட்டு வெளியேற முடியவில்லை. எனக்குக் குடல்புண் நோயும் மூல நோயும் உள்ளது. ‘சிகிச்சை முடிந்த பிறகுதான் செல்ல வேண்டும்’ என டாக்டர்கள் சொன்னார்கள். ‘அப்படியே நீங்கள் மருத்துவமனையை விட்டுச் செல்லவேண்டுமானால், உங்கள் சொந்தப் பொறுப்பில் விளைவுகள் பற்றிக் கவலையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள்’ எனக் கூறி, டிஸ்சார்ஜ் செய்ய மறுத்தார்கள்.

என் மீதான குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை; அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை பொய்யானவை என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் அபரிமிதமாகவே என்னிடம் இருக்கின்றன. அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன். இந்த நாடகத்தை அரங்கேற்றிய பெரியவர்களுக்குத் தெரியும் இது பொய் என்பது. பொய் வழக்குகளை ஜோடித்து, அதைக் காட்டி மிரட்டி ஜெயலலிதாவிடமிருந்து என்னையோ, என்னிடமிருந்து ஜெயலலிதாவையோ பிரிக்க முடியாது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னது போல, ‘விநாசகாலே விபரீதப் புத்தி’தான் இது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், என்னை தி.மு.க என முத்திரை குத்தினார்கள். நான் தி.மு.க-காரன் அல்ல. இப்போது அ.தி.மு.க-காரன் எனச் சொல்கிறார்கள். நான் அ.தி.மு.க-விலும் இல்லை. ஜெயலலிதாவின் உண்மையான குடும்ப நண்பன். அதனால் எத்தனை சோதனை வந்தாலும் என் பணிகள் தொடரும்’’ என நடராசன் நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார்.

இந்தப் பேட்டியின் மூலம் நடராசன் சொல்ல வருவது என்ன? “எந்த நிலையிலும் எவ்வளவு பிரஷரிலும் ஜெயலலிதாவை நான் காட்டிக் கொடுக்கவில்லை’’ என்பதை ஜெயலலிதாவுக்கு உணர்த்தினார் நடராசன். “பதவிகள் கொடுத்து என்னை இழுக்க நினைத்தது தி.மு.க அரசு. ஆனால் நான் விலை போகவில்லை” என்பதையும் ஜெயலலிதாவுக்கு மறைமுகமாகச் சொன்னார். அதாவது, ‘ஜெயலலிதாவின் பிடி நடராசனிடம் இருக்கிறது’ என்பதுதான் அவர் சொல்லவந்த செய்தி. ‘‘என்னிடமிருந்து ஜெயலலிதாவைப் பிரிக்க முடியாது’’ எனச் சொல்லி ஜெயலலிதாவின் குட் புக்கில் நான் இருக்கிறேன் என்பதையும் சொன்னார். ‘‘ஜெயலலிதாவின் உதவியாளராக என் மனைவிதான் இருக்கிறார்’’ என்பதையும் இதன்மூலம் உலகுக்கு அறிவித்தார்.

- தொடரும்