
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலிகளைக் கழற்றாமலேயே திரையர்களை வண்டியில் ஏற்றினர். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. வாக்குறுதி அளித்த கருங்கைவாணனை அதன்பின் அவர்களால் காணமுடியவில்லை. கோட்டைத்தளபதி சாகலைவன் மட்டும் வந்தான். சிறிதுநேரத்தில் தலைமை அமைச்சர் முசுகுந்தர் வந்தார்.
உட்கார்ந்திருந்த அனைவரும் எழுப்பி நிற்கவைக்கப்பட்டனர். இருவரால் எழுந்து நிற்க முடியவில்லை. முசுகுந்தர் சொன்னார், “உங்கள் குடும்பங்கள் அனைத்தையும் விடுதலை செய்யுமாறு பேரரசர் உத்தரவிட்டுள்ளார். உங்களை யவனர்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.”
அனைவரும் உறைந்து நின்றனர். ‘கொடுத்த வாக்கினை மதிக்கத் தவறும் மனிதர்களிடம் பேச என்ன இருக்கிறது’ என்று காலம்பனுக்குத் தோன்றியது. “எழுந்திருக்க முடியாமல் காயங்களோடு கிடக்கும் இருவரை யவனர்களுக்குப் பரிசளிப்பது இழிவு. அவர்களை விடுதலைசெய்யப்படுபவர்களோடு சேர்த்து அனுப்பிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் முசுகுந்தர்.
அந்த இருவரும் தனியே பிரிக்கப்பட்டனர். “விடுதலையானவர்களைப் பறம்புமலைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள். எங்களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்” என அவர்களிடம் காலம்பன் செய்தி சொல்லியனுப்பினான்.

வண்டிகள் வைகைக்கரையோரமாகவே கீழ்க்கடல் நோக்கிப் பயணப்பட்டன. நீலனின் கண்கள் வைகையைப் பார்த்தபடி வந்தன. ஆற்றில்தழும்பி ஓடியது நீர். இருகரைகளிலும் நாணற்புதர் மண்டிக்கிடந்தது. வண்டிச்சக்கரங்கள் மண்ணில் புதைந்து உருண்டன. நெடும்பயணமாதலால் திரையர்களை நெருக்கி அடைக்காமல், அதிகப்படியான வண்டிகளில் அழைத்துச் சென்றனர். காளைகள் உன்னி இழுத்தன.
கட்டப்பட்ட இரும்புச்சங்கிலிகளைப் பார்த்தபடியே இருந்தான் காலம்பன். அடுத்து என்ன நடக்கப்போகிறது, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எந்தத் திட்டமிடலும் அவன் மனதில் இல்லை. தங்களது குலம் விடுவிக்கப்பட்டு பறம்புமலைக்குச் செல்லப் போவது மனதுக்குள் அளவற்ற மகிழ்வை ஏற்படுத்தியது. குலத்தின் தலைவனாக எனது வேலை முடிந்தது, இனி அவர்களைப் பாரி பாதுகாப்பான் என்ற மகிழ்வு உடலெங்கும் பரவியது. பாரம் இறக்கப்பட்டவனாய் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் காலம்பன்.
நீலனும் பதற்றம் ஏதுமின்றியே இருந்தான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வண்டியில் இருந்து வைகையைப் பார்த்தபடியே வந்தான். அது அவனுக்கு எவ்வளவோ சொன்னது. கரைபுரளும் அதன் சிற்றலைகள் அவனை அழைத்துக்கொண்டே இருந்தன. சட்டென ஒரு கணம் மொத்த வைகையும் நீண்டு நகரும் செம்மூதாயாய்க் காட்சிதந்தது. பொங்கி நகரும் குருதிகண்டு திடுக்கிட்டு அமர்ந்தான்.
அவர்களின் பயணம் அறுபட்ட காட்சிகளுடனும் குருதிபடிந்த கனவுகளுடனும் தொடர்ந்துகொண்டிருந்தது. எல்லோரின் அமைதிக்குள்ளிருந்தும் பீறிட்டுத் தெறிக்கக் காத்திருந்தது சினம்.
வைகை கடலில் கலக்கும் இடத்தில் இருப்பது வைப்பூர்த் துறைமுகம். வைகை கடல்புகும் ஊராதலால் இப்பெயர் உருவாயிற்று. அதன் அருகில்தான் அருகன்குடி என்ற சிற்றூரும் இருக்கிறது. பாண்டிய நாட்டின் முதற்பெரும் துறைமுகமாக வைப்பூர்த் துறைமுகத்தையே சொல்லலாம். காரணம் அதன் அமைவிடம்.
வைகை கடலில் முட்டும் அதன் நெற்றிப்பகுதி வில்போல் வளைந்தது. வளைந்த அந்தக்கரை சற்றே கடினமான மண்ணடுக்குகளைக் கொண்டது. வந்து சேரும் கப்பல் கடலிலிருந்து வைகைக்குள் நுழைந்து ஆற்றின் உள்ளடுக்கினில் இருக்கும் வைப்பூர்த் துறைமுகத்தை அடையும். கடலலைகள் வளைவுகள் கடந்து உள்ளேறிவராது. பெருங்காற்றும் கடற்கொந்தளிப்புங்கூட வைப்பூர்த் துறைமுகத்தைச் சேதப் படுத்தியதில்லை. இதன் பாதுகாப்பிற்கு வேறு எந்தத் துறைமுகத்தையும் இணைசொல்ல முடியாது.
வைப்பூர்த் துறைமுகம் பொருள்களை ஏற்றி இறக்கவும் கப்பல்கள் வந்து தங்கிச்செல்லவும் இயற்கையே அரணமைத்திருந்ததால்தான் யவனர்கள் எங்கும் இல்லாத அளவு பெருங்கோட்டையை இங்கு கட்டியுள்ளனர். தங்களுடைய பொருள்களைக் கொண்டு வந்து இறக்கவும் ஏற்றவும் பொருத்தமான ஏற்பாட்டினை நீண்டகாலத்துக்கு முன்பே செய்துவிட்டனர். பாண்டிய அரசும் வணிகப் பொருளினைப் பாதுகாக்கவும் வரி வாங்கவும் வசதியாகக் கோட்டை எழுப்பியுள்ளது.
வைப்பூர்த் துறைமுகத்தில் இருபெரும் கோட்டைகள் நின்றுகொண்டிருக்கின்றன. இத்திருமணத்துக்காக யவனப் பெருவணிகன் வெஸ்பானியன் தலைமையில் பலரும் அணிதிரண்டு வந்தனர். அரசபிரதிநிதிகள், வணிகர்கள், துறைமுகப் பொறுப்பாளர்கள், எண்ணற்றோர்களின் கூட்டமது. குறிப்பாக கடல்பயணத்தின் சாகசத்தளபதி ஹிப்பாலஸ் இத்திருமணத்துக்கு வந்ததுதான் வணிகர்கள் மத்தியில் பெரும்பேச்சாக இருந்தது.

வந்திறங்கும்பொழுது பொருநையாற்றின் கழிமுகத்திலுள்ள கொற்கைத் துறையில் இறங்கி மதுரைக்கு வந்தார்கள். புறப்படும்பொழுது வைகையின் கழிமுகத்திலுள்ள வைப்பூர்த் துறையிலிருந்து பயணப்படத் திட்டமிட்டிருந்தனர். வளங்கொழிக்கும் பாண்டிய நாட்டின் இருபெரும் துறைமுகங் களையும் அவற்றின் உள்வாயில்களையும் நேரில் பார்த்தறியும் வாய்ப்பாக இதை அமைத்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்து மதுரை விட்டுப் புறப்பட்டவர்கள் வைகைக்கரையின் வழியே பயணப்பட்டு வைப்பூர்த் துறைமுகக் கோட்டையை அடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பெருவிருந்தும் வழியனுப்பும் நிகழ்வும் ஏற்பாடாயிருந்தன.
பேரரசின் சார்பில் இவ்வழியனுப்பும் நிகழ்வுக்கு தலைமையமைச்சர் முசுகுந்தர் வருகை தரவிருந்தார். அவர் வருவதற்கு முன் இரண்டாம்நிலைத் தளபதிகள் வந்துசேர்ந்தனர். இத்திருமணவிழாவின் பெருமகிழ்வுக்குக் காரணமாயிருந்தது வெங்கல்நாடு. அதைப் பாராட்டி மரியாதை செய்யும் பொருட்டு இளமாறனை இரண்டாம்நிலைத் தளபதிகளில் ஒருவனாக பேரரசர் நியமித்தார். மையூர்கிழார் அளவற்ற மகிழ்வில் திளைத்தார். மிக இளம்வயதில் பேரரசரின் நம்பிகையைப் பெற்று இவ்விடத்தை அடைவது எளிதல்ல. மையூர்கிழார் தனது வாழ்வு முழுக்க பாண்டிய நாட்டின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். ஆனாலும் அரண்மனைக்குள் நுழையும்பொழுது ஆயுதம் வைத்துக்கொள்ளும் தகுதி இன்றளவும் அவருக்கு வழங்கப்படவில்லை. இக்கவலையை அவர் மகன் அகற்றிவிட்டான். இனி உறைவாளோடு அவன் அரண்மனையில் காட்சியளிப்பதை அவர் பார்க்கலாம். ஆனால், அரசரின் அவையில் வாளோடு செல்லும் உரிமை இளவரசன் உள்ளிட்ட யாருக்கும் இல்லை.
பாண்டிய நாட்டின் சட்டவிதிகள் மிகக்கடுமை யானவை. பட்டத்து யானையின் மீது போர்த்தப்படும் துணியின் வண்ணம் முதல் படுக்கை அறையில் நாள்களுக்குத் தகுந்தவாறு மலரவேண்டிய நறுமணப்புகையின் வாசம் வரை எல்லாவற்றிற்கும் விதிசெய்யப்பட்டுள்ளது. விதியால் வார்க்கப்பட்டதுதான் அரசாட்சி. அதன் உறுதிக்கு மட்டுமல்ல, இரக்கமற்ற குணத்திற்கும் அதுவே அடிப்படை.
விதிகளின் படிக்கட்டுகளில் கால்பதிக்கத் தொடங்கியவனை அதுவே அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். அதன்பிறகு அவனுக்குத் தகுந்ததாக விதி தன்னை மாற்றிக்கொள்ளும். இணைமீன்கள் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டு அரசமுத்திரை யுடனான கவசத்தை இளமாறன் முன்மார்பில் அணிந்ததைப் பார்த்தபொழுது மையூர்கிழாரின் கண்கள் மகிழ்வில் கரைந்தன.
அவர் வெங்கல்நாட்டுக்குப் புறப்படும் நாளன்றுதான் அவன் வைப்பூர்க்கோட்டைக்குத் தனது ஆலாவின் மேலேறிப் பயணப்படத் தொடங்கினான். உடன்வந்த வீரர்களின் குதிரைகளால் ஆலாவின் வேகத்துக்குச் சிறிதும் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் புகழ்மாலைகள் முழுவதையும் ஆலாவே சூடிக்கொண்டது.
வைப்பூர்க் கோட்டையை இளமாறன் அடைந்தபொழுது திரையர்கள் அங்கு வந்துசேர்ந்து ஒரு வாரமாகியிருந்தது. முன்புபோல் இல்லாமல் திரையர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டது. யவனர்களுக்குப் பரிசாகக் கொடுக்கும்பொழுது அவர்களின் காயங்கள் ஆறி, தெளிச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக.
கோட்டையின் இடதுமூலையில் இருந்த அறையில் தனித்தனிச் சங்கிலிகளால் அவர்கள் கட்டப்பட்டிருந்தனர். கப்பலிலிருந்து இறக்கிய பொருள்கள் எங்கும் குவிக்கப்பட்டிருந்தன. இளமாறன் கோட்டைக்கு வந்ததிலிருந்து அவனைப் பற்றிய பேச்சைவிட அவனது குதிரையைப் பற்றித்தான் பாண்டிய வீரர்கள் அதிகம் பேசினர். குதிரையின் பெயர் ஆலா என்று அறிந்ததிலிருந்து அதன் ஒவ்வோர் அசைவையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான் நீலன்.
சிலநாள்களுக்குப்பின் படைவீரர்களின் பெரும் அணிவகுப்பொன்று கோட்டைக்குள் வந்தது. தலைமை அமைச்சர் முசுகுந்தர் வரும் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால், வந்தது அவர் மட்டுமல்லர்; பாண்டியப் பேரரசனின் பெருங்செல்வமாகக் கருதப்படும் இருபது தேவாங்குகளும் உடன் கொண்டுவரப்பட்டன.
சூல்கடல் முதுவனுக்குக் கொடுக்கப்பட்ட இருபது தேவாங்குகள் போக மீதமுள்ள இருபதினை நாம் வைத்துக்கொள்வோம் என பேரரசர் முடிவுசெய்தார். அவற்றை எங்கு வைத்திருப்பது என ஆலோசித்தபொழுது வைப்பூர்க் கோட்டையில் வைப்பதே பொருத்தம். கடல்காற்றும் கடல் உணவும் அவற்றிற்குப் பழக்கப்படவேண்டும் என்று அவையோர் கூறினர். எனவே மிகுந்த பாதுகாப்போடு அவை இங்கு எடுத்துவரப்பட்டன.
அவற்றிற்கென வடிவமைக்கப்பட்ட கலைவேலைப்பாடுகளுடனான கூண்டுகளில் அடைக்கப்பட்டு கோட்டைக்குள் வைக்கப்பட்டன. எண்ணற்ற வீரர்கள் உடன் வந்திருந்ததால் முதலில் அவற்றைக் கவனிக்க முடியவில்லை. அன்று மாலைதான் அந்தக் கூண்டுகளுக்குள் அவை இருப்பது தெரியவந்தது. தொலைவிலிருந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காலம்பனின் முகத்தில் தன்னையும் அறியாமல் புன்னகை பூத்தது. ‘உங்களைத்தேடி சிறுபடையோடு நான் வந்தேன், என்னைத்தேடி பெரும்படையோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள்” என மனதில் எண்ணிக் கொண்டே நீலனைப் பார்த்தான். நீலனோ அவற்றை நேர்கொண்டு பார்க்கமுடியாமல் தலைகவிழ்ந்து அவற்றிடம் மன்னிப்பு கோரிக்கொண்டிருந்தான். மலையுச்சியிலிருந்து வான்பார்த்துக் கொண்டிருந்த அவை கடலின் விளிம்புக்கு வந்து சேர்ந்ததற்கு ஏதோவொரு வகையில் தானும் காரணமாகிவிட்டோம் என்ற குற்றவுணர்வின் வழியே கலங்கிப்போய் இருந்தன அவன் கண்கள்.

இரவு யவனர்களின் கோட்டையில் பெரும்விருந்து நடக்கவுள்ளது. அதில் பங்கெடுத்து, மணவிழாவுக்காக வந்தவர்களுக்கு நன்றிசொல்லி வழியனுப்பத்தான் முசுகுந்தர் வந்திருக்கிறார். நாளை காலைப்பொழுதில் யவனக்கப்பல்கள் புறப்படவுள்ளன. எனவே, இன்றிரவே திரையர்களை அவர்களிடம் அளிக்க ஏற்பாடாகிக்கொண்டிருந்தது.
யவனர்களை நேரில் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவிக்க சூல்கடல் முதுவனும் வந்து சேர்ந்துள்ளார். எல்லோரும் இரவு சந்திக்கவுள்ளனர். அதற்கு முன் சூல்கடல்முதுவன் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.
தனக்கு வழங்கப்பட்ட இருபது தேவாங்கு களைப் பத்துக் கூண்டுகளில் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடற்பயணத்துக்கு ஏற்ப அக்கூண்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மிகமுக்கியமாக எந்தெந்தக் கப்பல்களில் இவற்றை அனுப்பிவைப்பது என்பதை முடிவு செய்வதில்தான் சூல்கடல் முதுவனுக்குப் பெரும்நெருக்கடி இருந்தது.
அவர் வணிக உலகின் நியதியை அறிந்தவர். எந்தக் கணத்திலும் அது என்னவாக மாறும் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர். அதுவும் திசைகாட்டும் ஒரு விலங்கு என்பது கடற்பயணத்துக்கு அச்சாணிபோன்றது. இதனை அறிந்து, பயன்படுத்திப் பழக்கியபின் உறுதியாகத் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். எனவே, தன்னிடம் அளவற்ற நம்பிக்கையோடு இருப்பவர்களிடம் மட்டுமே கொடுக்கவேண்டும். அதே நேரத்தில் எல்லாத் திசைகளிலும் செல்லும் கப்பல்களில் இவ்விலங்குகள் சென்றாக வேண்டும். சிறிய கலங்கள், பெரிய கலங்கள், நாவாய்கள், சீறிப்பாயும் தன்மைகொண்ட வங்கம் எனப் பலவைக்கப்பட்ட கப்பல்களில் அவற்றை அனுப்பவேண்டும். அப்பொழுதுதான் இதனை முழுமையாக நம்மால் கணிக்க முடியும். மிகத்தொலைவில் உள்ள தீவுகளுக்குப் பெருங்கலங்களே போகின்றன. ஆனால், பெருங்கலங்களை உடைய வணிகர்கள் ஏதோவொரு வகையில் தன்னுடைய போட்டி யாளராக வரும் வாய்ப்பினைக் கொண்டவர்களாக உள்ளனர். எந்த நாட்டின் மன்னன் எந்த வணிகனை எப்பொழுது ஆதரிப்பான் என்பதனைக் கணிக்க இயலாது. அரசியல்நிலை எப்பொழுதும் கடலைவிடக் கொந்தளிப்பு மிக்கது, வணிகத்தைவிடச் சூழ்ச்சி நிறைந்தது. எனவே, எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சூல்கடல் முதுவன் திட்டமிட்டான்.
இறலித்தீவுக்கும், தெங்கின்தீவுக்கும் செல்லவிருந்த பெரிய கலங்களில் தேவாங்கின் கூண்டினை ஏற்றினான். குசையின் தீவுக்குப் பயணம் செல்ல இது பொருத்தமான காலமல்ல. அக்கடலில் அவ்வப்பொழுது வீசிச்செல்லும் காற்று கலங்களை எளிதில் திசைமாற்றம் செய்துவிடும். அதன்பின் கலங்களால் நிலைதிரும்ப முடியாது. ஆனால், இப்பொழுது தேவாங்கு இருப்பதால் அக்கவலையில்லை. காற்றால் திசை மாறினாலும் மீண்டும் திசை அறிந்துகொள்வது எளிது. எனவே நம்பிக்கையோடு பயணம் செல்லலாம் என்று சொல்லி, தன் தம்பியை அதற்குப் பொறுப்பாக்கி னான். இருப்பதிலே பெரிய வங்கத்தை எடுத்துக்கொண்டு போ என்றும் அனுமதி கொடுத்தான்.
வணிகம் எவ்வளவு சூழ்ச்சி நிறைந்தது என்பதை குலசேகரபாண்டியன் சூல்கடல் முதுவனை வைத்து சோதிப்பதும், சூல்கடல்முதுவன் தன் தம்பியை வைத்து சோதிப்பதுமாக நடந்தேறியது.
தான் பயணப்படவுள்ள நாவலந்தீவுக்கு திசையறிய எந்த வித உதவியும் தேவையில்லை. எல்லாக்காலத்திலும் கலங்கள் சென்று திரும்பும் எளிய வழிப்பயணம் அது. ஆனால், அப்பயணத்துக்கு நான்கு தேவாங்கினை எடுத்து வைத்துக்கொண்டான் சூல்கடல் முதுவன்.
யவனர்களுக்காக இன்றிரவு நடைபெறவுள்ள விருந்தில் வணிகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வு முடிந்தபின் நாளை காலையிலிருந்து கலங்கள் எல்லாம் வைப்பூர்த் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வெளி யேறவுள்ளன. சூல்கடல் முதுவன் விருந்தில் கவனங்கொண்டிருந்த அதேநேரத்தில் இன்னொன்றிலும் மிகக்கவனமாக இருந்தான்.
தேவாங்கினை எடுத்துச்செல்லத் தேர்வு செய்யப்பட்ட கப்பல்கள் இன்று நள்ளிரவிலேயே புறப்படுவதற்கான ஏற்பாட்டினையும் செய்திருந்தான். பேரரசர் விதித்த கட்டளைகள் மிகமுக்கியமானவையாக இருந்தன. முதற்கட்டப் பயணம் முடியும் வரை இவை பிற வணிகர்களுக்குத் தெரியாமலிருப்பது முக்கியம் என்று கூறியிருந்தார்.
இரவு நெருங்கியது. வைப்பூர்த் துறைமுகம் கணக்கில்லாத கலங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. யவனர்களின் நாவாய்கள் நாளை புறப்படுவதற்காக ஏற்பாடாகிக் கொண்டிருந்தன. பெரும்வடிவத்தில் அசைந்தாடும் யவன நாவாய்களைப் பார்ப்பதே பேரழகு. துறையின் கரையில் பாதித்தொலைவுக்கு மேல் யவன நாவாய்களே நின்றிருந்தன. அவற்றின் அகலமும் உயரமும் கரையிலிருந்து பார்ப்பவரைத் திகைக்கச் செய்யக்கூடியது. நெடுந்தொலைவு செல்லவேண்டிய பயணமாதலால், இரண்டு, மூன்று பாய்மரங்களைக் கொண்டதாக இருக்கும்.
கப்பலின் வலப்புறம் துறைமுகப்பகுதி. அதாவது துறைமுக மேடையை ஒட்டி நிறுத்த வேண்டிய பகுதி, இடப்புறம் மீகான் மேலேறி நின்று பார்க்கக்கூடிய கூம்பு வடிவ மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதி. பெருங்கப்பல்களில் இம்மேடையின் உயரம் பாய்மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். அது சிறுகலங்களில் ஏற்றப்படும் பாய்மரத்தின் உயரத்துக்கு நிகரானது. கலங்களின் முன்புறம் இருக்கும் சுக்கானின் மேடையும் அதேபோன்ற தன்மையுடையதுதான். பாய்மரத்தின் மேலிருந்து எங்கும் இழுபட்டு விடைத்திருக்கும் கயிறுகள் ஒரு கோணத்தில் மீட்டத்தயாராக இருக்கும் யாழ்நரம்புகள் போன்றே காட்சியளிக்கும். கடலும் காற்றும் மீட்டியபடி மிதக்குமொரு பயணம் தொடங்க ஏற்பாடாகிக்கொண்டிருந்தது.

யவனக்கப்பல்களைத் தொடர்ந்து சாத்துக்களின் கலங்கள் அதாவது தமிழ்பேசும் வணிகர்களின் எண்ணற்ற கலங்கள் நின்றுகொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடையவை. கலங்களின் முகப்பில் பொறிக்கப்பட்ட வடிவத்தைவைத்து அவற்றிற்கான பெயர்கள் அமைந்திருந்தன. யானை, சிங்கம், குதிரை போன்ற எண்ணற்ற வடிவங்களைத் தாங்கியதாக அவற்றின் முகப்புகள் இருந்தன.
வனப்பேறிய இவ்விலங்குகள் எல்லாம் சீறும் கடலலைக்குள் தலைநுழைத்து மேலெழக் காத்திருந்தன. வைப்பூர்த் துறைமுகத்தில் இவ்வளவு கலங்கள் வந்து நிற்பது இதுவரை யாரும் காணாத காட்சி. அதுவும் அவையெல்லாம் அடுத்த ஓரிரு நாள்களில் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. கலங்கள் புறப்படப்போவதாக இருந்தால் அதற்கு முன் செய்யவேண்டிய வேலைகள் எண்ணற்றன.
அருகிலிருக்கும் அருகன்குடி மக்கள்தாம் இப்பணிகளை முழுமையும் செய்பவர்கள். ஆனால், ஒரே நேரத்தில் இவ்வளவு கலங்களை அவர்கள் யாரும் பார்த்ததில்லை. பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக அது இருந்தது. கலங்களைச் சரிசெய்யும் திறன்வாய்ந்த தச்சர்களின் பணிகள் முடிந்தபின் பொருள்களை ஏற்றும்பணி தொடங்கியது. கலங்களின் தன்மைக்கு ஏற்ப ஓரிரு நாள்களோ, வாரமோகூட பொருள்கள் ஏற்றப்படும். கரையெங்கும் மனிதக்கூட்டமும் வண்டியிழுக்கும் விலங்குகளும் நெரிசலில் சிக்கித் திணறின.
கரையைவிட நெரிசல் அதிகமான பகுதியாக நீர்ப்பகுதி இருந்தது. கலங்களைச் சுற்றிச் சிறு சிறு தோணிகளும் ஓடங்களும் திறளிமரப் படகுகளும் மொய்த்துக்கிடந்தன. பட்டத்து யானைக்கு நடக்கும் ஒப்பனையைப் போன்றதுதான் பயணப்படும் முன் கலங்களை ஆயத்தம் செய்வது.
பணிசெய்ய அருகன்குடியிலிருக்கும் மக்கள் போதாததால் பக்கத்திலுள்ள பல ஊர்களிலிருந்து வந்து பணியாளர்கள் வேலைபார்த்தனர். இனிப்பு சாப்பிடும் குழந்தையின் வாய் முழுவதும் ஈக்கள் மொய்ப்பதைப்போல வைகையின் வாய் முழுவதும் கலங்கள் மொய்த்துக்கிடந்தன. இதைப் பார்க்கவே கூட்டம் நிரம்பியிருந்தது. எங்கும் தின்பண்டங்கள் விற்பதும் உற்சாகக் கொண்டாட்டமுமாக இருந்தது. அலை ஓசையும், பறவைகளின் ஓசையும், கூவி விற்கும் மக்களின் ஓசையும் ஒன்றினை ஒன்று விஞ்சிக் கொண்டிருந்தன. வீசுங்காற்றின் உப்பஞ்சாரல் மேனிதழுவியபடி விடாது வீசியது.
யவனத்தேறல்கள் எளிய மனிதருக்கும் கிடைக்கும் வாய்ப்பு துறைமுகத்தில்தான் ஏற்படும். புறப்படப்போகும்பொழுது தமக்குச் சிறப்பாகப் பணிவிடை செய்தவர்களுக்குத் தேறல் குடுவைகளை அள்ளிவழங்கும் யவன வணிகர்கள் உள்ளனர். இருமாதம் நீண்ட மதுரையின் மணநாள் கொண்டாட்டம் தனது கடைசி விழாவை வைப்பூரில் வைத்து நிகழ்த்திக்கொண்டிருந்தது.
திருமணவிழாவில் பங்கெடுத்த வணிகர்கள் பலருக்கும் நன்மைகள் பல கிட்டின. புதிய அறிமுகங்களும் தொடர்புகளும் அவர்களின் கலங்களை அதிகத் தொலைவிற்குப் பயணப்பட அழைத்திருந்தன. எல்லாக் கலங்களும் ஏரா எனும் அடிமரத்தின் மீதே விலாவெலும்புபோல இருபுறமும் மேல்நோக்கிக் கட்டப்படும். அக்கட்டுமானத்தை வாங்குகால் என அழைப்பார்கள். வணிகம் தன்னை இணையில்லா வேகத்துடன் பெருகிக்கொள்ளும் குணத்தையே அடிமரமாகக்கொண்டது. அவ்வடிமரத்தின் மீது வைத்துக் கட்டப்படும் எண்ணிலடங்காத வாங்குகால்கள்தான் மீதமுள்ள எல்லா நடவடிக்கைகளும்.
இத்திருமணம் பங்கெடுத்த வணிகர்களின் அடிமரத்துக்கு வலுச்சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது என்று மகிழ்ச்சியடையாதவர்கள் யாருமில்லை. வாங்குகால்கள் செழிப்பாக அமைந்ததை விருந்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் முகமும் சொல்லிக் கொண்டிருந்தது.
விருந்து தொடங்கியிருக்க வேண்டும். யவனக்கோட்டையிலிருந்து கேட்கும் ஓசை அதனைத்தான் சொல்லுகிறது. அவ்வோசை கேட்கத் தொடங்கியவுடன் துறைமுக மேடையிலிருக்கும் கலங்களின் பொறுப்பாளர்கள் தங்களை இறுதிக்கட்டத்துக்கு ஆயத்தப்படுத்தத் தொடங்கினர். ஏனென்றால், விருந்திலிருந்து எந்தக் கணமும் தங்களின் உரிமையாளர் புறப்பட்டு வரக்கூடும். அவர் வந்தவுடன் கலங்களை நகர்த்தியாக வேண்டும். பணிகள் பெரும் விறுவிறுப்போடு நடந்து கொண்டிருக்கையில் வரிசை வரிசையாகக் கொண்டுவரப்பட்ட அடிமைகள் கலங்களில் ஏற்றப்பட்டனர்.

அடிமைகளின் கைகால்களில் இதுநாள் வரை இருந்த இரும்புச் சங்கிலிகள் அகற்றப்பட்டு, துளையிடப்பட்ட கட்டைகளில் இருகைகளும் செருகப்பட்டிருந்தன, துடுப்புகளை இழுக்கத் தோதான வடிவமாக இதுவே இருக்கும் என்பதால். அடிமைகள் வரிசையாகக் கலங்களுக்குள்ளே அனுப்பப்பட்டனர். அவர்களை வழிநடத்தும் பொறுப்பாளர்கள் துறைமுகந்தோறும் புதுச்சாட்டைகளை மாற்றுவது வழக்கம். தோளும் விலங்கின் நரம்பும் மரத்தின் நரம்பும் பின்னியபடி நீள்சாட்டை செய்யும் தச்சுக்கூடம் அருகன்குடியில் மூன்று இருக்கின்றன. ஆனால், இப்பொழுது அங்கு ஒரு சாட்டைகூட இல்லை, எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன எனப் பேசிக்கொள்கின்றனர்.
மீன்கள் துள்ளியெழக்கூட இடைவெளியற்று கலங்கள் நின்றுகொண்டிருந்தன. ஆனால் எல்லோரின் பார்வையும் குவிந்துகிடந்தது ஒற்றைக்கலத்தின் மீதுதான். அதன் உயரமும் அகலமும் துறைமுகத்தை ஆண்டுகொண்டிருந்தன. அதற்கான வேலைகளைச் செய்ய மட்டுமே எண்ணற்ற பணியாளர்கள் இருந்தனர். அதுதான் கடல்பயணத்தின் சாகசத்தளபதியான ஹிப்பாலஸின் நாவாய். அக்கப்பல் இத்துறைக்கு வந்து பலநாள் ஆகிவிட்டன, ஆனால் இத்தனை நாள்களும் இரவில் ஒருசில விளக்குகள்தான் அதில் ஏற்றப்பட்டிருந்தன. ஆனால், இன்று இரவு எந்தக் கணத்திலும் சாகசத்தளபதி ஹிப்பாலஸ் கப்பலுக்கு வந்துசேருவான் என்பதால் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன. அந்தக் காட்சியைக் காண்பவர் யாராலும் கண்களை விலக்க முடியவில்லை. அலைகளுக்கு நடுவே ஓர் அரண்மனை மிதந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. வைகை தனது மேனியெல்லாம் ஒளியைக் கொண்டு வந்து கடலில் கலப்பதுபோல் தோன்றியது.
ஹிப்பாலஸின் கப்பலில் அடிமைகள் எல்லோரும் ஏற்றப்பட்டவுடன் அக்கதவைப் பொறுப்பாளன் மூடத்தொடங்கினான். அது அடிமைகளை ஏற்றுவதற்கான கதவு. இனி அடுத்த துறைமுகத்தில்தான் அதைத் திறப்பார்கள். கதவைப் பொறுப்பாளன் மூடியபொழுது ஒருவன் வேகமாக ஓடிவந்து சொன்னான், “இப்புதிய அடிமைகளையும் உள்ளே அனுப்பு.”
அவன் திரும்பிப் பார்த்தான், கருங் கொள்ளை யர்களுக்கு இணையான உடல்வாகு கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். வந்தவன் சொன்னான், “பாண்டிய நாட்டின் பரிசுப்பொருளாக நம் தளபதிக்கு இவ்வடிமைகளைத் தந்துள்ளனர்.”
அவன் மேலும் கீழும் பார்த்தான். கைகளில் இருந்த இரும்புச்சங்கிலி கழற்றப்பட்டு, துளை யிடப்பட்ட மரக்கட்டைகள் செருகப்பட்டிருந்தன. “போதுமான அடிமைகளை உள்ளே அனுப்பி முடித்துவிட்டேன். சரி இவர்களை மேல்தளத்துக்குக் கொண்டு போ” என்றான்.
வந்தவன் அவர்களை மேல்தளத்துக்கு அழைத்துச்சென்றான். புதிதாக வந்துள்ள அடிமைகளைச் சோதனை செய்ய எத்தனையோ வழிமுறைகள் உண்டு. கப்பல் பயணிக்கும் போது பேரலைகளுக்கு நடுவே அவர்களை மேலிருந்து தூக்கியெறிவது அதில் ஒருவகை. வீசப்பட்டவன் கடலில் மூழ்காமல் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறான் என்பதைப் பொறுத்து அவனை மீண்டும் கப்பலில் ஏற்றலாமா அல்லது அப்படியே கடலுக்குள் விட்டுவிடலாமா என்பதை, கூம்புவடிவக் கூண்டின் மேலிருந்து மீகான் முடிவுசெய்வான்.
திரையர்கூட்டம் நாவாயின் மேல்தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீகானின் மேடை அருகே நிறுத்தப்பட்டனர்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...