
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
‘‘ஜெயலலிதாவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது’’ என நடராசன் அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காக்கிகளும் ஆளும்கட்சியான தி.மு.க-வும் கொதித்தன. ‘‘நடராசன் சொன்ன விஷயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை’’ என்றது போலீஸ். ‘‘நடராசன் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தப் புகாரையும்,குற்றச்சாட்டையும் மாஜிஸ்திரேட்டிடம் சொல்லவில்லை. அவருடைய வழக்கறிஞர்களும் நடராசன் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறவில்லை. ஆனால், ஜாமீனில் விடுதலையான பிறகு போலீஸ்மீதும் அரசின்மீதும் களங்கத்தைச் சுமத்த, கற்பனையான புகார்களைச் சொல்கிறார். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லும் புகார்கள் கிஞ்சிற்றும் ஆதாரமில்லாதவை’’ எனச் சொன்னது போலீஸ்.

நடராசன் Vs போலீஸ் மோதல் ஒரு செய்தியை விளக்கியது. நடராசன் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசின் மீதும் போலீஸின்மீதும் புகார்கள் வாசித்தாலும்கூட, ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க-வினருக்கும் நான் நெருக்கமானவன் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார். அதன்மூலமாக ஜெயலலிதாவுடனான தன் பிடியை இன்னும் இறுக்கமாக்கிக்கொண்டார்.
ஜெயலலிதா ராஜினாமா, நடராசன் அரெஸ்ட் போன்றவை அரங்கேறிய நேரத்தில் தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்தவர் ஆர்.நாகராஜன். இந்தச் சம்பவம் பற்றி என்ன சொல்கிறார்? ‘தூசியும் தூறலும்’ என்ற தலைப்பில் நாகராஜன், ஜூ.வி-யில் எழுதிய தொடரில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘‘ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம், எதிர்பாராத ஒரு விபத்து! அதில் முதலில் சிக்கியது நான்தான். 1989 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட அதிகம் பேர் முன்பணம் கட்டினார்கள். இவர்களில் பலருக்குத் தேர்தலில் டிக்கெட் கிடைக்கவில்லை. செலுத்திய முன்பணத்தைத் தலைமையிடமிருந்து திருப்பிக் கேட்டார்கள். இதில் தேனி ஸ்ரீதரனும் ஒருவர். பணம் கொடுத்ததற்குச் சான்றாக பத்திரிகைச் செய்தியையும் படத்தையும் வைத்துக்கொண்டு அலைந்தார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, நடராசன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக போலீஸ் கமிஷனர் துரையிடம் புகார் கொடுத்தார் ஸ்ரீதர். கமிஷனர் நடவடிக்கை எடுக்காததால் கோட்டையில் என்னைச் சந்தித்தார். அப்போது அவருடன் ஒரு முன்னாள் அ.தி.மு.க எம்.பி-யும் இருந்தார். ‘என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன். ‘என் பணத்தைத் திருப்பி வாங்கித் தாருங்கள் என்று உங்களைக் கேட்கவில்லை. கொடுத்த பணத்தைக் கேட்க போயஸ் கார்டன் சென்றபோது, நடராசன் என்னைச் சுடப்போவதாகத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதற்கு நடவடிக்கை தேவை’ என்றார். ‘இதுபற்றி கமிஷனரிடம் விவாதித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’ என்றேன்.

கமிஷனர் துரையை அழைத்து ஸ்ரீதரன் கோரிக்கையைப் பற்றி விவாதித்தேன். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, நடராசனிடம் துப்பாக்கி இருப்பது உண்மையா... அதற்குரிய ‘லைசென்ஸ்’ இருக்கிறதா என்பதைக் கண்டறிவதாக கமிஷனர் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். சில நாள்கள் கழித்து, தன்னுடையப் புகார் மனுவின் மீது கமிஷனர் பதினைந்து நாட்களுக்குள் மேல் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றத்தின் உதவியை நாடி கமிஷனரின் மவுனத்துக்குக் காரணம் கேட்கப்போவதாக ஸ்ரீதரன் கூறியதாக கமிஷனர் தெரிவித்தார். அதன் பின்புதான் நடராசனிடம் துப்பாக்கி இருக்கிறதா என்பதைச் சோதனைசெய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வரின் ஒப்புதலைப் பெற்று, நடராசன் வீட்டை, போலீஸ் சோதனை போட அனுமதி அளித்தேன். துப்பாக்கியே இல்லாமல் இருந்தால், துப்பாக்கியைக் காட்டி நடராசன் மிரட்டியதாக ஸ்ரீதரன் கூறியது எப்படி உண்மையாக முடியும்? அப்படி ஒரு துப்பாக்கி இருந்துவிட்டால், ஸ்ரீதரன் வாக்குமூலத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாதே! துப்பாக்கி இருந்தால் அதற்கான ‘லைசென்ஸ்’ இருக்க வேண்டும். அப்படி ‘லைசென்ஸ்’ இல்லையென்றால் நடராசன் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவராகிவிடுகிறார். இந்த விவரங்களைக் கண்டறியத்தான் சோதனைக்கு அனுமதி தரப்பட்டது.
போலீஸ் கமிஷனரை முதல்வர் வீட்டில் பார்த்ததும் ஏதோ ஒரு விவகாரம் காத்திருப்பதுபோலத் தோன்றியது. சோதனையின்போது அதிகாரிகளிடம் நடராசன் மிகவும் தடாலடியாக நடந்துகொண்டதாக கமிஷனர் தெரிவித்தார். ‘துப்பாக்கி என்ன ஆயிற்று?’ என்பதுதான் என் கேள்வி. ‘துப்பாக்கி கிடைக்கவில்லை. ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் கிடைத்தது’ என்றார் கமிஷனர். முயல் வேட்டைக்குப் போனவர்கள், காட்டுக்குள்ளே கிடந்த மூட்டை ஒன்றைத் தலையிலே தூக்கிவந்த கதையாக இருந்தது அந்த ராஜினாமா கடித விவகாரம்!
நடராசன் வீட்டைச் சோதனை போட்டதில் எள்ளளவும் அரசியல் இல்லை. குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் சோதனை நடந்தது. நடராசன் சட்டங்களை மதித்து நடக்கக்கூடியவரா அல்லது அடாவடிப் பேர்வழிதானா என்பது வேறு விஷயம். ஆனால், அங்கே ஜெயலலிதா கடிதத்தின் உண்மை நகல் இருந்தது என்பது போலீஸ் சோதனையின் கண்டுபிடிப்பு. இந்தக் கடிதம் நடராசன் கைக்கு எப்படி வந்தது என்பது சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் வெளிச்சம். இந்தக் கடிதம் நடராசன் பொறுப்பில் இருப்பது தெரிந்துதான் போலீஸ் சோதனை போட்டது என்பது ஒரு வளமான கற்பனை. ஆனால், நடராசன் வீட்டில் எடுக்கப்பட்ட கடித நகலின் பிரதிகள் பத்திரிகை அலுவலகங்களை நாடி ஓடியதுதான் அரசியல்!

எதிர்பாராதவிதமாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடிதத்தைக் கையாண்டதில் அரசியல் இருந்தது! அப்படி ஒரு ராஜினாமா கடிதம் மறுநாளே சபாநாயகர் கைக்கு எப்படி வந்தது என்பதும் அதிகாரிகளுக்குத் தெரியாது. ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் உண்மையிலேயே அரசியலுக்கு முழுக்குப்போட நடந்த முயற்சியா அல்லது ஜெயலலிதா - சசிகலா உறவில் ஏற்பட்ட நெருக்கடிக்குத் தீர்வுகாண ஒரு கருவியா என்பதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. இந்தக் கடிதத்தை போலீஸ் அலட்சியப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம், கடிதம் ஒரு சுவையான அரசியல் பிரச்னையைக் கொண்டது. அதை போலீஸ்தான் முதலில் கண்டது என்பதை நிலைநிறுத்த போலீஸ் வழக்கம்போல முனைந்தது. அந்தக் கடிதத்தைச் சாதகமாக்க பின்பு அரசியல் புகுந்துகொண்டது. இதனால் ஏற்பட்ட குழப்பங்களும் விளைவுகளும் வீட்டைச் சோதனையிட அனுமதி தந்த என்னைப் பாதித்தது.
ராஜினாமா கடிதம் சபாநாயகரால் நிராகரிக்கப்படுகிற வரைக்கும் பிரச்னையைப் பெரிதாக்காத அ.தி.மு.க பின்பு, பிரச்னையை முழுக்க முழுக்க அரசியலாக்கியது. இதில் ஏமாற்றப்பட்டவர்கள் அன்றைய ஆளுங்கட்சியினர்தான். ஏமாற்றியவர்கள் அ.தி.மு.க-வினர். சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியானவர்கள் காவல்துறையினர். காரியம் கைகூடாமல் போனபின்பு வழக்கம்போல பழி விழுந்தது என் தலையில்.
ஜெயலலிதா ராஜினாமா கடித விவகாரம் முரசொலி மாறனைக் கோபமடைய வைத்தது. ‘சோதனை போடச் சென்ற காவல்துறையினர், துப்பாக்கி இல்லையென்றால் சும்மா திரும்பி வரவேண்டியதுதானே. ராஜினாமா கடிதத்தை ஏன் தொடவேண்டும்?’ என்பதுதான் மாறனின் கேள்வி!’’ என எழுதியிருந்தார் நாகராஜன்.
(தொடரும்)
படம்: கே.ராஜசேகரன்