மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ஸ்டாலின் சரவணன்

“ந
னவிலிருந்து நனவிலிக்கான பயணத்தின் ஒரு புள்ளியில் துளிர்க்கின்றன எனது கவிதைகள். கடந்துவந்த காட்சிகளில் ஏதேனுமொன்று கால் முளைத்துக் கிளம்பிவந்து என் கதவைத் தட்டக்கூடும். புற உலகிலிருந்து பெறத் தவறவிட்ட அனுபவங்களை வாசிப்பின் வழியே ஈடுசெய்வதென்பது ஆனந்த அனுபவம். இச்சிறு பிறப்பில் நிறைந்திருப்பவைக்கும் வெற்றிடத்திற்குமிடையே வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டேயிருக்கும் என் கவிதைகள்...”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியைச் சேர்ந்த ஸ்டாலின் சரவணன், மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘தேவதைகளின் வீடு’, ‘ஆரஞ்சு மணக்கும் பசி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பு  என்ற ஓர் அமைப்பையும் நடத்துகிறார். விரைவில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

பவா சமத்துவன்

“என் நிலமும் மொழியுமே என் பிறப்புக்கான அடையாளம். வழித்தோன்றல்களுக்கு என் பங்காக விட்டுச்செல்லவேணும், அவற்றைக் காக்கும் போரில் நான் பங்களித்தாக வேண்டும். என் ஆயுதம் எழுத்து. அழிவையும் ஆக்கத்தையும் வரலாறாக்கி காலத்தின் மேனியில் பதிவேற்றுவதே என் கடன். என் பார்வையில் புனைவென்பது உண்மையின் அழகியல் வடிவம். என் எழுத்து, காலத்தின் சாட்சி. என் நிலத்தின், மொழியின் எஞ்சிய சிதைவுகளில் விதையாகக் கிடந்து, என்றேனும் அது கிளைபரப்பும். ஆதிப் பெருமைகளுக்கு அடையாளமாக இருக்கும்.”    

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஏகனாபுரத்தைச் சேர்ந்த பவா சமத்துவன், ‘ஒரு தேசத்தின் டைரி’, ‘நேற்று போல் இல்லாமல்’, ‘முட்களின் மூலம் நட்சத்திரத்துக்கு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘தலைமுறைகள்’ என்ற நாடக நூல்,  ‘தொலைக்காட்சி உலகம்’ என்ற ஊடகம் சார்ந்த நூல் ஒன்றினையும் எழுதியிருக்கிறார். ஈழம் தொடர்பாக   நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் மகளிருக்கான தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது இயற்பெயர் சரவண பவா. பயண ஆர்வலர். ‘வடகிழக்கு இந்தியா- ஒரு வழிப்போக்கனின் பயணக்குறிப்புகள்’ என்ற நூலை விரைவில் வெளியிட இருக்கிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கவி.கண்மணி

“உ
ப்புத் தெரிக்கும் நெய்தல் நிலத்தில் மீன்களைக் கூவிக்கூவி விற்கும் கடல் பிள்ளை நான். என் வாழ்வாதாரம் கடல். எனக்குள்ளும் கடலே நிறைந்திருக்கிறது. அதனால்தான், என் கவிதைகளில் உவர்ப்பின் மொழிக்கட்டு பொதிந்திருக்கிறது. ஒவ்வொருமுறை வலைசுமந்து சென்று திரும்பும்போதும் மனது கடலுக்குள்ளிருந்து கவிதைகளை அள்ளிக்கொண்டு வருகிறது. கடலோர உப்புக் காற்றில் மிதக்கும் என் இளங்காலத்துக் காதல்களும், எதற்கும் ஆகாதவன் என்று சுருட்டி எரியப்பட்ட என் சுயத்தின் வலியும், தலைமேல் இருந்து அழுத்தும் குடும்பத்தின் சுமையுமே என் கவிதைகளின் மூலாதாரங்கள்.”

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியைச் சேர்ந்த கவி.கண்மணி, மீன் வியாபாரம் செய்கிறார். ‘சின்னச்சின்னத் தூறல்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட மீனவ மக்களுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான பிணக்குகளை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதி வருகிறார். இவரது இயற்பெயர் சிவபாலன்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ஆன்மன்

“பொ
ருளாதாரத் தேடலுக்கான ஓட்டமாக மட்டுமே வாழ்க்கை சுருங்கிவிட்டதை உணர்ந்த தருணத்தில் எழுதத் தொடங்கினேன். மானுடப் படுகொலைகளையும், அவமதித்தல்களையும், புறக்கணிப்புகளையும் கண்டு கொதித்துக் கிளம்பும் மனசாட்சியின் குரலாகவே என் கவிதைகள் முளைக்கின்றன. சமகால சமூகத்தில் நிகழும் அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும், காதலையும், துரோகத்தையும், உயிர்ப்போடு ஒன்றியிருக்கிற இயற்கையையும் உள்ளடக்கியதே என் கவிதைகளின் பிரபஞ்சம்.”

சென்னையைச் சேர்ந்த ஆன்மன், பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை நடத்துகிறார்.  ‘லெமுரியக் கண்டத்து மீன்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். தற்போது, எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களையும் வெளியேற்றப்பட்ட சென்னையின்  பூர்வகுடிகளையும் பற்றி ‘ஐஸ்ஹவுஸ்’ என்கிற நாவலை எழுதி வருகிறார். இவரது இயற்பெயர் செய்யது இப்ராஹிம்.