
படங்கள்: எம்.விஜயகுமார்
பூச்சு நிறைவுறாத வீடு. முன்னறையில் பாதி இடத்தை மறைத்து ஒரு நாற்காலி, பெரிய மேசை, அதன்மேல் சு.தமிழ்ச்செல்வியும், சோலை சுந்தரபெருமாளும் நிறைந்திருக்கிறார்கள். கட்டியும் கட்டாமலும் இருக்கிற பரணில் குவியல் குவியலாகக் கிடக்கின்றன புத்தகங்கள்.

நீள, அகலமான தஞ்சைப்புறத்து வீடு. தானியங்களை இருப்பு வைத்துக்கொள்ள ஏதுவாக வலதும் இடதுமாக அறைகள். ஆங்காங்கே, சகதி நிறம் மாறாத வேளாண் கருவிகள். பின்புற வெளியில் ஐம்பதாண்டுக் கால புளியமரத்தின் கிளையில் நின்றபடி புளி உலுப்பிக்கொண்டிருக்கிறார் கோவணம் உடுத்திய ஓர் இளைஞர்.
“டேய்.. கிழக்கா கிளையிலயே நின்னு பொழுத ஓட்டாம தெக்காப்புல இருக்கிற கொலையையும் உலுப்புடா...” - தையல் பிரிந்த பட்டுச்சரிகை வேட்டியை மடித்து, தொடைக்கு மேல் கட்டியவாறு கீழே உதிர்ந்துவிழும் புளியம்பழங்களைச் சேகரித்தபடிக் குரல் கொடுக்கிறார் சி.எம்.முத்து. தஞ்சை மண்ணின் அசல் மொழிக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத்தந்த முன்னோடி எழுத்தாளர்.
தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் சாலியமங்கலத்தை ஒட்டியிருக்கும் இடையிருப்பு கிராமத்தில் வசிக்கிறார் முத்து. 10-க்கும் மேற்பட்ட நாவல்கள், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி, தமிழின் மூத்த ஆளுமைகளெல்லாம் கொண்டாடும் இடத்திலிருக்கும் முத்துவுக்கு ஊரிலுள்ள அடையாளம், குச்சிராயர், சின்னய்யா, மைனர், பெரிய வீட்டுக்காரர். “எழுத்தாளர் முத்து வீடு எது?” என்று கேட்டால், “அப்படி யாரும் ஊர்ல இருக்கிற மாதிரித் தெரியலையே...” என்று விழிக்கிறார் பெட்டிக்கடைக்காரர்.
“ஊருக்காட்டுல தெரியாததெல்லாம் பிரச்னையில்லே. எம் வீட்டுக்காரம்மாவுக்கே நான் என்ன எழுதுறேன், என்ன படிக்கிறேன்னு தெரியாது. ‘மிராசு’ நாவல்ல, தஞ்சாவூர் விவசாயம் அழிஞ்ச கதையை எழுதிக்கிட்டிருந்தேன். ‘புளி உலுப்ப ஆளு வந்துட்டான், போயிப் பெறக்கிப்போடு’னு எழுப்பி உட்டுட்டா, 50 வருஷ வாழ்க்கை இப்படித்தான் இந்த வூட்டுக்குள்ள ஓடிக்கிட்டிருக்கு”- வெற்றிலை எச்சில் தெறிக்கச் சிரிக்கிறார் முத்து.

சி.எம்.முத்துவின் கதைக்களங்கள் ஆய்வுப்பூர்வமானவை. தஞ்சை மண்ணின் நிலவுடமைப் பின்புலத்தில், சாதிய வரைகோடுகளைச் சுமக்கும் இயல்பான வாழ்க்கைமுறைகளைக் காட்சிப் படுத்துபவை. தமிழில் அற்றுப்போன அல்லது அபூர்வமாக வரும் இனவரைவியல் நாவல்களின் முன்னோடி என்று முத்துவின் நாவல்களை மதிப்பிடுகிறார்கள் விமர்சகர்கள். எண்பதுகளின் மத்தியில் முத்து எழுதிய ‘நெஞ்சின் நடுவே’, `கறிச்சோறு’ நாவல்கள் மண் சார்ந்த வட்டார எழுத்தின் அடையாளமாகவும், இனவரைவியல் தன்மைக்காகவும் கொண்டாடப்பட்டவை.
தஞ்சையை ஆண்ட சோழர்களின் படைகளில் நம்பகமான வீரர்களாக இருந்து, அதன் பலனாக நிலதானங்களைப் பெற்று பிற்காலத்தில் வேளாண்மையைத் தழுவிக்கொண்ட குச்சிராயர் மற்றும் அதன் கிளைப் பிரிவுகளின் மாந்தர்களே முத்துவின் கதைகளில் நிறைந்திருக்கிறார்கள். தான் சார்ந்த சமூகத்தின் மேலாதிக்க மனோபாவத்தையும், அவர்களால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் எளிய மக்களின் துயரத்தையும் விமர்சனப்பூர்வமாக அணுகும் முத்து, முக்குலத்து மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள் என முழுமையாக உறுத்தலில்லாமல் காட்சிப்படுத்துகிறார்.

“சாதி இல்லே... மதம் இல்லேங்கிறதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்கிறது என்னோட எண்ணம். சாதி இல்லாமப்போகணும், மதம் இல்லாமப்போகணும்னு நினைக்கிறது நல்லதுதான். ஆனா, எழுத்தாளன் உண்மையைத்தானே எழுதணும். புனைவுங்கிறது பொய்யை உருவாக்குறது இல்லே. உண்மைக்கு வலு சேர்க்கிறது. ஒருங்கிணைஞ்ச தஞ்சை ஜில்லாவ ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வா... சாதிக்கு மேலதான்யா தஞ்சாவூரே நிக்குது. எல்லாரோட வாழ்க்கையிலயும் ஆணிவேரா ஊடாடிக்கிடக்கு சாதி. இனவரைவியல், மண் மணம் இப்படி ஏதேதோ சொல்றாங்க. நமக்கு அதுபத்தியெல்லாம் தெரியாது. நான் எழுதுறது என் வாழ்க்கை. என் மக்களுடைய கதை. எதையும் பிரசாரம் பண்றதோ, நீதி சொல்றதோ, வலிஞ்சு திணிக்கிறதோ என் வேலையில்லே. அதையெல்லாம் விமர்சகருங்க பாத்துக்கிடுவாங்க. களை எடுக்கிறது, நாத்துப் பறிக்கிறது, நடவு நடுறது எப்படி வாழ்க்கையோட ஒரு பகுதியோ, அது மாதிரி எனக்கு எழுத்து. சாதி இல்லேன்னு எழுதிப் பேரெடுக்க, யாராவது முற்போக்கு ஆசாமிங்க வருவாங்க. அதுக்கு நான் ஆளில்லே...” - பேசிக்கொண்டே புளியம்பழங்களைச் சாக்குகளில் கொட்டி, கட்டி அடுக்குகிறார்.
முத்து, ஆகச்சிறந்த கதைசொல்லி. தஞ்சை மண்ணில் ரத்தநாளங்களைப்போல ஊடாடியோடும் வாய்க்கால்களையும், வயல்களில் பாயும் மடைத்தண்ணீரின் சிலுசிலுப்பையும், அவற்றில் குதியாட்டம் போட்டுத் துள்ளும் மீன்களின் குதூகலத்தையும், வானம் கம்மி மழைவாசம் பரவியதும் கத்திக் கும்மாளமிடும் தவளைகளின் சந்தோஷத்தையும், நாற்றுக்கட்டை ரோட்டில் வைத்து போவோர் வருவோரிடம் காசு போடச் சொல்லிக் கேட்கும் நடவுப் பெண்களின் கேலி, கிண்டல்களையும் அவ்வளவு பசுமையாகக் காட்சிப்படுத்துகிறவர். தஞ்சை மொழியின் அடையாளங்களாக இருக்கும் அடைமொழிகளை, சொலவடைகளை, வேடிக்கை விளையாட்டுகளை, உணவுப் பழக்கங்களைக் கதையின் போக்கில் உள் நுழைத்து முற்றுமுழுதான வட்டார வரலாற்றுத்தன்மையோடு எழுதுவது முத்துவுக்கேயான தனித்தன்மை.
தஞ்சையைப் பற்றித் திகட்டத்திகட்ட எழுதியவர் என்று தி.ஜானகிராமனைக் குறிப்பிடுவார்கள். அந்த ஜானகிராமனே, “தஞ்சாவூர் மாவட்டத்தைப் பற்றி நான் எழுதியதைக் காட்டிலும் முத்து அதிகமாகவே எழுதிவிட்டார்” என்று குறிப்பிட்டார். ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு போன்ற மூத்த ஆளுமைகளுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், எந்த இலக்கியபீடத்தையும் சுமக்காதவர் முத்து. எந்த விமர்சனங்களையும் காதில் வாங்காத கறார் மனிதர். எவ்வித அரசியலிலும் இடைநுழையாமல் தன் போக்கில், ஏற்ற இறக்கம் கடந்து எழுந்தோடிக்கொண்டிருக்கும் நதிபோல எழுதிக்கொண்டே இருக்கிறார்.
“நம்ம தலைமுறைக்கே எழுத்து புதுசு. குச்சிராயர் குடும்பம்னா, தஞ்சையில அவ்வளவு மரியாதை. சிங்கம் மாதிரி திரிஞ்சவரு எங்க அய்யா. சுத்துப்பட்டுல எல்லாப் பஞ்சாயத்தும் அவரு தலைமையிலதான் நடக்கும். பரிசுத்தம் நாடார், பூண்டி வாண்டையார், மூப்பனார்னு நிறைய பெரிய மனுஷங்க சினேகிதம் வேற. ஊர்ல நிலக்கிழார். பச்சை எல்லாக் காலமும் ஏதோவொரு நிலத்துல கிடக்கும். எப்பவும் பத்துப்பேரு அய்யாவைச் சுத்தி இருப்பாங்க. மம்பட்டி இல்லேன்னா அருவாள்னு திரிஞ்ச குடும்பத்துல முதல்ல பேனா மேல பித்துக்கொண்டு திசை மாறினது நான் மட்டும்தான்” - கும்பகோணம் சீவலைக் கொத்தாக அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, ஆவூர் வெற்றிலையின் நடுநரம்பைக் கிள்ளி எறிந்துவிட்டு, அய்யம்பேட்டை சுண்ணாம்பை வழித்துத் தடவி சுவாரஸ்யமாக மடித்துச் சுவைத்துக்கொண்டே பேசுகிறார் இடையிருப்பு முத்து.
“எழுத்தை நான் தனிப்பட்ட ஒரு விஷயமா பாத்ததில்லை. எழுபது வருஷமா இந்த மண்ணுக்குள்ள வேரோடிக்கிடக்குறேன். அதைத்தான் எழுதுறேன். ஜட்கா வண்டி, வேலையாளு, பெரியவீட்டுக்காரப் புள்ளைனு ஏக மரியாதை. வீட்டுக்குள்ள கால்வைக்க இடமில்லாத அளவுக்கு நெல்லு, கடலைனு கொட்டிக் குவிஞ்சிருக்கும். எங்க அய்யா பேரு சந்திரஹாசன். அவருக்கு எம்மேல ரொம்பப் பிரியம். ஒரு அண்ணன், பேரு திருநாவுக்கரசு. பெரிய படிப்பாளி. ஆனா, நமக்குப் படிப்பு ஏறல. வம்பு, வழக்குன்னு திரிஞ்ச ஆளு நான். வாத்தியாருங்கக்கிட்டகூட வம்புதான். பெரிய இடத்துப் பய... நமக்கேன் வம்புனு எல்லா வாத்தியாரும் கை விட்டுட்டாங்க.
எட்டாவது படிக்கும்போது புடிச்ச கிறுக்கு இது. என் வகுப்புல கருணாநிதின்னு ஒரு பையன் இருந்தான். கதை, கவிதையெல்லாம் எழுதுவான். வாத்தியாருங்க எல்லாத்துக்கும் அவனைத்தான் கூப்பிடுவாங்க. ‘என்னடா இந்தப் பய... எல்லாத்துக்கும் முன்னாடி நிக்குறானே’னு எரிச்சலா இருக்கும். ‘அவனை முந்தணும்... வாத்தியாருங்க நம்ம பேரையும் நல்லவிதமாச் சொல்லணும்’ங்கிற எண்ணத்துல அந்தப் பயலைப் பின் தொடர்ந்தேன். லைப்ரரிக்குப் போயி, ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படிச்சான். அவன் போன பின்னாடி நானும் அதை எடுத்துப் படிச்சேன். அந்தப் புத்தகத்தோட பேரு ‘கண்ணாயிரத்தின் கதை’.
ஒரு 40 பக்க நோட்டை வாங்கியாந்து வாத்தியார் வர்ற நேரமாப் பாத்து, கண்ணாயிரத்தின் கதை மாதிரி ஒரு கதையை எழுத ஆரம்பிச்சுட்டேன். நமச்சிவாயம்னு ஒரு வாத்தியாரு... ‘பாடம் நடத்துற நேரத்துல என்னத்தடா எழுதிக்கிட்டிருக்கே...’ன்னு கேட்டார். ‘கதை எழுதுறேன்யா’ன்னு சொன்னேன். நோட்டை வாங்கிப் பாத்தார். ‘டேய் முத்து... பெரிய எழுத்தாளரா வருவே போலிருக்கே... நல்லா எழுதியிருக்கேடா’ன்னு பாராட்டினார். அதுவரைக்கும் பாராட்டே வாங்காத ஆளு நான். மிதக்க ஆரம்பிச்சுட்டேன்.
படிப்படியா பள்ளிக்கூடம் போறதையும் நிறுத்திட்டேன். ‘என்ன சின்னய்யா... பள்ளிக்கூடம் போகலயா’னு அய்யா கேட்டார். ‘இல்லய்யா... நான் கதையெழுதப் போறேன்... இனி பள்ளிக்கூடம் போகப் போறதில்லை’னு சொன்னேன். திட்டினாரு... அடிச்சாரு... போகவே மாட்டேன்னு சாதிச்சுட்டேன். ‘சரி... ஒரு பய படிக்கிறான்... ஒருத்தன் வீட்டுல இருந்து விவசாயத்தைப் பாத்துக்கிடட்டும்’னு விட்டுட்டார்.
அதுக்கப்புறம் நோட்டும் கையுமாவே திரிஞ்சேன். காலையில எழுந்து வயக்காட்டுக்குப் போயிருவேன். வரப்புல உட்கார்ந்து எதையாவது எழுதுவேன். அய்யா வர்றப்போ நோட்டை ஒளிச்சு வெச்சுட்டு, நாத்து அள்ளிப் போடுறது, ஏர் ஓட்டுறதுனு போக்குக் காட்டுவேன். எம்.எஸ்.மணியனோட கற்பூரம் பத்திரிகையிலதான் என் முதல் கதை வந்துச்சு. கண்ணதாசன், தீபம் இதழ்கள்லயும் எழுத ஆரம்பிச்சேன்...”
முத்துவின் வாழ்க்கையே ஒரு நாவல். அவரின் அண்ணன் படித்துப் பொறியாளராகித் தலைமைச் செயலகத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். முத்து, ஊரில் எழுத்தாள மைனராகச் சுற்றித் திரிந்திருக்கிறார். ஆனால், யாரும் இவரை அப்போது எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. ‘சென்னைக்குப் போனால், எழுத்தாளருக்குப் பெரும் மரியாதை’ என்று ஊரில் யாரோ சொல்லப்போக, அய்யாவுக்குத் தெரியாமல் கிளம்பிப் போய்விட்டார். கிடைத்த சிறுசிறு தொடர்புகள் மூலம் இலங்கையைச் சேர்ந்த சரோஜினி வரதப்ப கைலாசப் பிள்ளை நடத்திய ‘மாணிக்கம்’ என்ற பத்திரிகையின் சென்னைப் பிரதிநிதியாக வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 450 ரூபாய்.
``வேலைக்குச் சேர்ந்து நாலு மாசத்தில் அய்யாவிடமிருந்து ஒரு கடிதம். ‘நம்ம ஊருக்குப் போஸ்ட் ஆபீஸ் வந்திருக்கு. நீதான் போஸ்ட் மாஸ்டர்... உடனே புறப்பட்டு வா’ன்னு இருந்துச்சி. ‘நல்ல வேலை கிடைச்சிருக்கு... கதை எழுதவும் வசதியா இருக்கு. வர முடியாது’ன்னு பதில் போட்டேன். அய்யா, கிளம்பி நேரே வந்துட்டார். `இவனுங்க குடுக்குற சம்பளம் என் வீட்டு வரப்புல விளைஞ்சிடும். எனக்கு வயசாயிருச்சு. வந்து பக்கத்துல இருந்து விவசாயத்தைப் பாத்துக்கோ’னு கையோடு அழைச்சிட்டு வந்துட்டார். அப்போ போஸ்ட் ஆபீஸில் மாதச் சம்பளம் வெறும் 94 ரூபாய். நமக்கு எந்த வேலையும் ஒட்டலே... போஸ்ட் ஆபீஸ்லேயும் உட்கார்ந்து எழுதிக்கிட்டே இருந்தேன். அதிகாரி பார்த்துக்கிட்டிருப்பாரா? ‘நீ கிழிச்சது போதும் வீட்டுக்குப் போ’ன்னு அனுப்பி வெச்சுட்டாரு. ‘பய, தறுதலையாப் போயிட்டானே... கல்யாணம் பண்ணி வெச்சா சரியாயிடும்’னு அய்யா நினைச்சாரு. பொண்டாட்டி பேரு பானுமதி. எழுத்துன்னா என்னன்னு கேட்கிறவ. இதோ... புளி பெறக்க விட்டுட்டா பாத்தியா... ஆனா ஒண்ணு... என்னைய எம்போக்குல விட்டிருந்தா, இருந்த மொத்த நிலத்தையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டுக் கூலிக்காரனா தெருவுல நின்னிருப்பேன். ‘இவன் போக்கு வேற’ன்னு புரிஞ்சுக்கிட்டு நிர்வாகத்தைக் கையில எடுத்துக்கிட்டா. இதோ இந்த வீடு, அதோ அந்தத் தோப்புக்காடு... எல்லாம் அவளாலதான். பெரிய பெரிய எழுத்தாளரெல்லாம் வீட்டுக்கு வருவாங்க. அவங்ககூட வெளியே போனா, ‘என்ன போதை போடப் போறீங்களா’னு வைவா. வந்த மனுஷன் எவ்ளோ பெரிய ஆளுன்னெல்லாம் அவளுக்குத் தெரியாது” - திரும்பவும் அதே வெள்ளந்திச் சிரிப்பு.
வேலை பறிபோனதும், முழுநேர எழுத்தாளராகவும் பகுதிநேர விவசாயியாகவும் ஆகிவிட்டார் முத்து. 1982-ல் முத்துவின் முதல் நாவல் ‘நெஞ்சின் நடுவே’ வெளிவந்தது. 1960-காலகட்டத்தை கதைக்காலமாகக் கொண்ட இந்த நாவலை, தான் சார்ந்த சமூகத்திலிருந்தே கையாண்டார் முத்து. தங்கள் நிலங்களில் கூலிகளாக வேலை செய்பவர்களைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தும் உயர்சாதியினர், அப்பெண்களை எவ்விதக் குற்றஉணர்வும் இல்லாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதைத் தங்கள் மேலாதிக்க வாழ்க்கைக்குப் பொருத்தமான செயலாகக் கருதுவதைத் தோலுரித்தது அந்த நாவல்.

‘நெஞ்சின் நடுவே’ வந்து, ஏழாண்டுகள் கழித்து, 1989-ல் ‘கறிச்சோறு’ நாவல் வெளியானது. தஞ்சை டெல்டாவில் உறைந்துகிடக்கும் சாதியத்தின் முகத்தை அம்பலப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருந்தது ‘கறிச்சோறு’. தான் சார்ந்த சமூகத்தின் பிரிவுகளிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள், கௌரவங்கள், கொலைகள், பிரிவினைகள் எனச் சகலத்தையும் ஒரு காதலின் பின்னணியில் வெகு எளிமையான எழுத்தோட்டத்தில் பதிவுசெய்தார் முத்து. விசுவராயர், நாட்டார், குச்சிராயர், குருக்கொண்டார், மாங்கொண்டார், தென்னம்பிரியார் என அந்த நாவலில் முத்து உருவாக்கிய கதைமாந்தர்களின் பட்டங்களே அவர்களின் முகங்களை நம் முன் நிழலாடச் செய்கின்றன.
‘பொறுப்பு’ நாவல் 2000-த்தில் வந்தது. தமிழின் சிறந்த இனவரைவியல் நாவல் என்று இதை வகைப்படுத்த முடியும். கள்ளர் சமூகத்தின் திருமண உறவு முறைகளையும், சடங்குகளையும், உறவுகளுக்குள்ளான உரிமைகளையும் பின்னணியாகக்கொண்டு உருவான நாவல் இது.
2003-ல் வெளிவந்த ‘வேரடி மண்’ நாவல், ஒரு வரலாற்றைப் பின்புலமாகக்கொண்டது. கீழ்வெண்மணி சம்பவத்தின் அடிவேரைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நாவலைப் படிக்க வேண்டும். பிள்ளைப் பூச்சிகளைப்போல பணிவும் குனிவுமாக வேலைசெய்துகொண்டிருந்த தலித் தொழிலாளர்கள், ஒருங்கிணைந்து தங்களுக்கான உரிமைக்குக் குரல் கொடுத்ததையும், அதைப் பொறுத்துக்கொள்ளாத ஆதிக்கவாதிகள் வன்முறையைக் கையிலெடுத்து ஒடுக்கியதையும், வெண்மணி சம்பவத்துக்குப் பிறகு தலித் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பாரபட்சமில்லாமல் பேசுகிறது இந்த நாவல்.
1990-களுக்குப் பிறகு உலகமயமாக்கலின் தாக்கம் காவிரிப்படுகையை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது. சிறுவணிகத்தன்மை, சுய உற்பத்தி வாழ்க்கைமுறை மாறி, வணிகம் பெரு வடிவெடுக்கத் தொடங்கிய காலகட்டம். அந்த வலையில் இந்தியா வசமாகச் சிக்கிக்கொண்டது.
உலகின் ஆகப்பெரிய உணவுச் சந்தையைக் கொண்ட இந்தியா, பன்னாட்டு நிறுவனங்களால் குறிவைக்கப்பட்டது. வல்லாதிக்கச் சக்திகளாக இருக்கும் அந்த நிறுவனங்களுக்கு வழியமைத்துத் தருவதற்காக உள்நாட்டு உற்பத்தி மீதான ஆதரவுகளை அரசுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளத் தொடங்கிவிட்டன. கொள்முதல் குறைக்கப்பட்டது. மானியங்கள் பறிக்கப்பட்டன. ஆதரவுவிலை கைவிடப்பட்டது. இன்னொருபுறம் நீர்நிலைகள் மறிக்கப்பட்டன. குறிப்பாகக் காவிரி. முற்காலச் சோழர் முதல் பிற்கால ராஜேந்திரசோழன் வரை பார்த்துப் பார்த்து வடிவமைத்து உருவாக்கிய காவிரிப்படுகை எதிர்பாராத ஒரு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. விவசாயத்தை நம்பிய, பெரு நிலக்கிழார்கள் முதல், வேளாண் தொழிலாளர்கள் வரை அத்தனை பேரும் நிலைகுலைந்து நின்றார்கள். 2010-ல் முத்து எழுதிய ‘அப்பா என்றொரு மனிதர்’ நாவல், காவிரிப்படுகை எதிர்கொண்ட இந்தத் தொடக்ககாலச் சிக்கலை ஆவணப்படுத்துகிறது.

“வாழ்க்கை தான் இலக்கியம். புனைவுங்கிறது தொட்டுக்கிற ஊறுகாய் மாதிரி. உண்மைதான் எழுத்தோட உயிர்நாடி. தஞ்சாவூரைப் பத்தி எத்தனையோ பேரு எழுதுறாங்க. ஆனா, அதெல்லாம் உண்மையான தஞ்சாவூரு ஆகாது. தமிழ்ச்செல்வியும், சுந்தரபெருமாளும் ஓரளவுக்கு எழுதுறாங்க. பிரகாஷ் கொஞ்சம் முயன்றார். மற்றபடி பெரிசா எதுவும் எழுதப்படலே. இப்போ நான் எழுதியிருக்கிற ‘மிராசு’ நாவல்தான், சுதந்திரத்துக்குப் பிறகு இன்னைக்கு வரைக்குமான தஞ்சையோட வரலாற்று ஆவணமா இருக்கப்போகுது.
காவிரிப்படுகையில என்ன நடந்துக்கிட்டிருக்குனு ரொம்பப் பேருக்குத் தெரியாது. ஏதோ விவசாயிங்க கஷ்டப்படுறாங்கனு மட்டும்தான் எல்லோரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஒட்டுமொத்தமா ஒரு பூர்வீக இனக்குழு அழிஞ்சிக்கிட்டிருக்கு. தண்டகாரண்யாவுல நடந்தது இங்கே வேறு வடிவத்துல நடக்குது. தஞ்சாவூர்ல மட்டுமில்லே... இயற்கையா உருவான நதிப்படுகைகள்ல பாரம்பர்யமா நடந்துக்கிட்டிருக்கிற மொத்த விவசாயத்தையும் அழிச்சுட்டு பெரு நிறுவனங்களோட கையில உணவு உற்பத்தியை ஒப்படைக்கிறது, ஒரு நூற்றாண்டுத் திட்டம். அந்தத் திட்டத்துக்கு எல்லா அரசுகளும் துணைபோயிருக்கு. கிட்டத்தட்ட விவசாயிகளோட விவசாயத்தை முடிவுக்குக் கொண்டுவந்துட்டு பெரிய பெரிய முதலாளிகளோட விளைச்சலை விப்பாங்க. இல்லேன்னா இறக்குமதி செய்வாங்க. ‘விவசாயிங்கள்லாம் விவசாயத்தை விட்டுட்டுப் போயிடுங்க’னு நம்ம பிரதமரே சொல்லிப் பாத்தாரு. யாரும் போகலே. அதனால காவிரியை மறிச்சுத் தண்ணி வராமப் பண்ணிட்டாங்க.
விவசாயம் மூணுல ஒரு பங்கா குறைஞ்சிடுச்சு. இன்னும் அதிகபட்சம் அஞ்சு வருஷம். ஒட்டுமொத்த விவசாயமும் முடிவுக்கு வந்திடும். அதுக்குப் பிறகு, நிலக்கரி எடுத்தாலோ, மீத்தேன் எடுத்தாலோ, எண்ணெய் எடுத்தாலோ கேட்க ஆளிருக்காது. காவிரிப்படுகை மக்களுக்கு விவசாயம் என்பது தொழில் மட்டுமில்லே... வாழ்க்கையே அதுதான். இவங்க வாழ்க்கையில இருந்து விவசாயத்தை கழிச்சிட்டா ஒண்ணும் மிஞ்சாது. வேற தொழிலும் தெரியாது. அய்யம்பேட்டை, கும்பகோணம் பக்கமெல்லாம் விவசாயக் குடும்பத்துப் பொண்ணுங்க, கட்டட வேலைக்குப் போகத் தொடங்கிட்டாங்க. பல குடும்பங்கள்ல நிலத்தை ரியல் எஸ்டேட்காரனுக்கு வித்துட்டுப் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சிட்டாங்க.
எங்க பகுதிகள்ல மனுஷாளுங்க செத்தா, இறுதி ஊர்வலம் பெரிசா நடக்கும். அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அதுதான் மரியாதை. சுடுகாடு ரெண்டு மூணு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும். இளவட்டப் பசங்க தோள்ல பாடையைத் தூக்கிக்கிட்டு ‘நங்கு நங்கு’னு நடந்து போவானுங்க... இப்போ பொணம் தூக்கக்கூட கிராமத்துல பசங்க இல்லே. இருக்கிற பசங்களும் டாஸ்மாக்குல விழுந்து கிடக்குறானுவ. ஆம்புலன்ஸ்ல பொணம் போற கொடுமை நடந்துக்கிட்டிருக்கு.
பெரிசா நிலபுலன்களை வெச்சுக்கிட்டு மைனரா திரிஞ்ச ஆள்களும் சரி, அஞ்சு குழி, பத்து குழினு சின்னதா விவசாயம் பண்ணிக்கிட்டுத் திரிஞ்சவங்களும் சரி, விவசாய வேலையே வாழ்வாதாரமாக் கொண்டிருந்த தொழிலாளிங்களும் சரி... எல்லாரோட நிலைமையும் இன்னிக்கு ஒண்ணுதான். தேய்ஞ்சுக்கிட்டேதான் போகுது. யாரெல்லாம் அரசியல்ல இருக்கானோ, அவன் மட்டும்தான் வளர்ந்துக்கிட்டே போறான். இதுதான் இன்னைக்குக் காவிரிப்படுகையோட நிலை. இதைத்தான் ‘மிராசு’ நாவல் பேசப்போகுது...”
சிறுகதைகளிலும் முத்துவுக்குத் தனி இடம் உண்டு. ‘ஏழு முனிக்கும் இளைய முனி’, ‘மழை’, ‘அந்திமம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. கதா, இலக்கிய சிந்தனை எனச் சிறுகதைகளுக்கான அங்கீகாரங்களுக்கும் குறைவில்லை.
“எப்பவுமே நான் அங்கீகாரத்துக்காக ஏங்கினதில்லை. நாவலோ, சிறுகதையோ, எழுதி முடிச்சுட்டா, அதை அப்படியே மறந்துட்டு இன்னொரு களத்துக்கு நகர்ந்துடுவேன். அந்தப் படைப்பு, தானாவே அதுக்கான இடத்தைத் தேடிக்கும்னு நம்புறவன் நான். யாருக்கிட்டயும் சிபாரிசுக்காகப் போய் நின்னதில்லை. எழுதி முடிச்சதுக்கு அப்புறம் அந்தப் படைப்பைப் பத்தி நான் பேசுறதும் இல்லை. நாவல், சிறுகதைனு 15-க்கும் மேல புத்தகங்கள் வந்தாச்சு. அய்யா சேத்து வெச்சதுல பாதி நிலம் கையவிட்டுப் போயாச்சு. புள்ளைகளுக்கு விவசாயத்துல பெரிசா ஆர்வமில்லை. எங்க காலத்துக்குள்ள மிச்சமிருக்கிற இதுவும் ரியல் எஸ்டேட்காரன் கைக்குப் போக வாய்ப்பிருக்கு. 40 வருஷமா எழுத்தும் இலக்கியமுமா வாழ்ந்திருக்கேன். இன்னைக்கும்கூட 10 பக்கம் எழுதிட்டுதான் புளி பெறக்க வந்தேன். இன்னமும்கூட இந்த ஊருக்குள்ள என்னை எழுத்தாளர்னு யாரும் கூப்பிடுறதில்லை. அதே குச்சிராயர், சின்னையா, மைனர்தான். ஆனா, நாஞ்சில் நாடனுக்கு, கல்யாண்ஜிக்கு,
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, ஜெயமோகனுக்கு என்னையும் என் எழுத்தையும் தெரியும். அதுக்கு மேல என்ன வேணும்.’’
மென்ற வெற்றிலைக்குள் ஒரு கொத்துப் புகையிலையை அள்ளித் திணித்து லயித்தபடி, மாடுகளைத் தண்ணிக்கு அவிழ்த்துவிடுகிறார் முத்து.
ஒரு தேசத்தின் வரலாறு என்பது வட்டார வரலாறுகளின் தொகுப்பு. அதிலும் இந்தியா போன்ற பல்வேறு பூர்வீகக் குழுக்கள் இணைந்து வாழும் தேசத்தில் வட்டார வரலாறுகளின் தேவை முக்கியமானது. அதனால்தான், இங்கே முத்து போன்ற நாடோடித்தன்மையுடைய எழுத்து நடுகைகொண்ட மண்ணின் கலைஞர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். கொண்டாடுவோம்!