Published:Updated:

வெள்ளி நிலம் - 22

வெள்ளி நிலம் - 22
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 22

ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க வரும் காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்ந்து விசாரணைக்காக பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். பனிச்சிகரங்களில் மறைந்திருக்கும் குகைகளை ட்ரோன்களின்மூலம் கண்டுபிடித்து ஒரு குகைக்குள் செல்கிறார்கள். அந்தக் குகையின் சுவர் முழுவதும் எலும்புகள் சுண்ணாம்புப் பாறையோடு பாறையாக இறுகியிருந்தன. அவர்கள் அதைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது குகைக்கு வெளியே எதிரிகளின் காலடியோசை கேட்டது. அவர்களிடமிருந்து தப்பிக்கக் குகையின் உள்ளேயே ஓடிச்சென்று, தங்களை அழைத்துச்செல்ல வரும் ஹெலிகாப்டருக்காகக் காத்திருந்தார்கள்...

வர்கள் செல்வதற்கான ஹெலிகாப்டர் சற்றுநேரத்தில் வந்தது. பாண்டியன் தன்னிடமிருந்த மஞ்சள் துணியை ஆட்டிக்காட்டினான். ஹெலிகாப்டர் தாழ்ந்து வந்தது. தட்டாம்பூச்சி போலக் காற்றிலேயே ஆடியபடி நின்றது. அதிலிருந்து இறங்கிவந்த அலுமினியவடத்திலிருந்த கொக்கியை இடுப்பில் மாட்டிக்கொண்டார்கள். அது அவர்களை மேலே தூக்கியது.

வெள்ளி நிலம் - 22

ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தபோது டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் ஒன்றும் பேசாமல் சிந்தனையில் மூழ்கியிருந்தார். பாண்டியன் “என்ன நினைக்கிறீர்கள் டாக்டர்?” என்றான்.

“ஒன்றுமில்லை” என்று டாக்டர் வருத்தமாகச் சொன்னார்.

 “சொல்லுங்கள்” என்றான் பாண்டியன்.

“கிட்டத்தட்ட கதை முடிந்துவிட்டது…” என்று சொல்லி டாக்டர் புன்னகை செய்தார்.

“இந்தக்கதை அப்படி எளிதாக முடியாது டாக்டர்…” என்றான் பாண்டியன். “என் உள்ளுணர்வு சொல்கிறது ஏதோ ஒரு செய்தி வரப்போகிறது என்று.”

அவர்கள் ராணுவ முகாமுக்குச் சென்றிறங்கும்போதே அங்கே முகாமின் காப்டன் அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தார். ஓடி அருகே வந்து “பாண்டியன் உங்களுக்குச் செய்தி வந்திருக்கிறது’’ என்றார்.

“என்னசெய்தி?” என்றான் பாண்டியன்.

“ராணுவ உளவுத்துறையிலிருந்து கர்னல் மகேந்திரன் அழைத்தார்.”

பாண்டியன் செய்தியறைக்கு ஓடினான். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் ஆர்வத்துடன் பின்னால் வந்தார். “என்ன செய்தி… அது நீங்கள் சொன்ன புதிய திறப்பாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

அவர் செய்தியறைக்குள் நுழைய அனுமதி இல்லை. ஏனென்றால் அவர் ராணுவ ஊழியர் அல்ல. ஆகவே வாசலிலேயே நின்றார்.

நாக்போ “அப்படியென்றால் நாம் இன்றைக்கும் நிம்மதியாகப் பன்றியிறைச்சி சாப்பிடமாட்டோமா?” என்றது.

நோர்பா “பேசாமலிரு” என்றான்.

”முட்டாள்கள்” என நாக்போ முனகிக்கொண்டு மூலையில் சுருண்டு படுத்தது. முனகியபடி மூக்கை வயிற்றுக்குள் செருகிக்கொண்டது.

கர்னல் மகேந்திரன் உடனே தொடர்புக்கு வந்தார். “பாண்டியன் ஒரு செய்தி. லடாக்கில் உள்ள திக்ஸே மடாலயத்திலிருந்து ஒரு ரகசியச்செய்தி சீனாவுக்குச் சென்றிருக்கிறது. அதைப் பதிவுசெய்துவிட்டோம். அது குறியீட்டு மொழியில் இருக்கிறது.”

“அதை உடனே அனுப்புங்கள்…’’ என்றான் பாண்டியன்.

அதைப் பதிவுசெய்ததுமே பாண்டியன் வெளியே ஓடிவந்தான். அவனிடமிருந்து டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் அந்தச்செய்தியைப் பிடுங்கினார். உடனே வாசித்தார்.

‘‘என்ன நடந்தது?” என்றான் நோர்பா.

வெள்ளி நிலம் - 22

“நாம் லடாக்கில் திக்ஸே மடாலயத்தில் தெரிந்தே ஒருவனை விட்டுவந்தோம் அல்லவா? அவன் சீனாவுக்குச் செய்தியை அனுப்பியிருக்கிறான். அதை நாம் மறித்துக்கேட்டுவிட்டோம்” என்றான் பாண்டியன்.
டாக்டர் “நாம் உடனே கிளம்பவேண்டும்…’’ என்றார்.

“என்ன சொல்கிறது இந்தச்செய்தி?” என்றான் பாண்டியன்.

“போகும்போது சொல்கிறேன்… நாம் உடனே திபெத்துக்குச் செல்லவேண்டும்.”

“திபெத்துக்கா? அது சீனாவின் ஒரு பகுதியாக இன்று உள்ளது… சட்டபூர்வமாக நம்மை உள்ளே விடமாட்டார்கள்.”

“அப்படியென்றால் சட்டவிரோதமாகச் செல்வோம்… சென்றே ஆகவேண்டும்…”

“நான் கர்னல் மகேந்திரனிடம் பேசிப்பார்க்கிறேன்...” என்று பாண்டியன் மீண்டும் செய்தியறைக்குள் சென்றான்.

‘‘சாப்பிடப்போகிறோமா இல்லையா?” என்று நாக்போ எரிச்சலுடன் கேட்டது.

“வாயைமூடு” என்றான் நோர்பா.

“நீங்கள் வாயைமூடுங்கள்… ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது நீங்கள்தான்” என்றது நாக்போ.

டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் பெட்டியையும் பொருட்களையும் கட்டிவைப்பதற்குள் பாண்டியன் வந்தான். “டாக்டர், நாம் உடனே திம்புவிலிருந்து பயணிகள் விமானத்தில் காட்மண்டு கிளம்புகிறோம். காட்மண்டுவிலிருந்து திபெத்தின் தலைநகர் லாசா செல்கிறோம். காட்மண்டுவில் நமக்குப் போலி பாஸ்போட் விசா எல்லாமே தயாராக இருக்கும்.” என்றான்.

செல்லும் வழியில் காரிலேயே அவர்கள் சாண்ட்விச் சாப்பிட்டார்கள். நாக்போ “சாண்ட்விச்சைக் கண்டுபிடித்தவன் மடையன். இறைச்சியை ரொட்டிக்குள் வைத்துச் சாப்பிடுவது ஏன்? இறைச்சிக்குள் ஒரு துண்டு ரொட்டியை வைத்தால் என்ன?” என்றது.

திம்பு விமானநிலையம் ஒரு சிறிய பேருந்துநிலையம் அளவுக்கே இருந்தது. அவர்கள் செல்வதற்கான சிறிய பீச்கிராஃப்ட் பிரிமியம் வகை ஜெட் விமானம் நின்றிருந்தது. சிறிய அலுமினியப்பறவைபோலச் சிறகு விரித்து நின்றது. அதன் உடலிலும் சிறகிலும் பனிபொழிந்து படர்ந்திருந்தது.

“இதில் எத்தனைபேர் ஏறமுடியும்?” என்றான் நோர்பா.

‘‘இது ஹாக்கர் பீச்கிராஃப்ட் பிரிமியம் வகை விமானம். நாற்பதுபேர் ஏறமுடியும்… ஜெட் எஞ்சின் உள்ளது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

மொத்தம் பதினெட்டுபேர் மட்டுமே லாசாவுக்கு அந்தப் பனிக்காலத்தில் பயணம் செய்தார்கள். ஆகவே வரிசையில் நிற்காமலேயே அவர்கள் உள்ளே செல்லமுடிந்தது.

விமானநிலையக் காவலர்கள் ‘‘வளர்ப்புமிருகங்களை உள்ளே கொண்டுசெல்லமுடியாது. அவற்றை உள்ளே சரக்குப்பெட்டியில் கொண்டுசெல்லவேண்டும்” என்றார்கள்.

நாக்போ கோபமாக “நான் சரக்கா?” என்றது.

“ஏன் நாய் குரைக்கிறது?” என்றான் விமானநிலைய ஊழியன்.

‘‘நான் குரைக்கவில்லை. பேசுகிறேன்” என்றது நாக்போ.

‘‘நாக்போ உன்னை ஒரு கம்பிக்கூண்டில் வைப்பார்கள். ஒருமணிநேரம்தான்… பேசாமல் உள்ளே இரு” என்றான் நோர்பா.

‘‘சரி உனக்காக” என்றது நாக்போ.

நாக்போ கூண்டுக்குள் செல்ல அவர்கள் உள்ளே சென்றார்கள்.

விமானத்தின் இயந்திரங்கள் ஓடத்தொடங்கின. அதன்மேல் படிந்திருந்த பனிப்படலம் அதிர்ந்து உதிர்ந்தது. அதன்பின்னரே ஜன்னல் வழியாக வெளியே பார்க்கமுடிந்தது. ஆனால் ஒன்றுமே தெரியவில்லை. வெறும் வெள்ளை நிறம்.

வெயில் இல்லை. சூரியன் பனியில் மறைந்திருந்தது. ஆனால் கண்கள் கூசும் ஒளி.

“இந்த ஒளியில் அகச்சிவப்புக் கதிர்கள் அதிகம். இதைப் பார்ப்பவர்களுக்கு எளிதில் கண்புரை நோய் வரும்” என்றார் டாக்டர். “கண்களின் விழித்திரையில் புரோட்டீன் படலம் உருவாவதுதான் கண்புரைநோய். அதனால் பார்வை குறைந்தபடியே வரும். ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது அதிகம் வருவதில்லை. இடுங்கலான சிறிய கண்கள்தான் அவர்களுக்குப் பெரிய பாதுகாப்பு.”

‘‘சொல்லுங்கள் டாக்டர் அந்தச்செய்தியின் அர்த்தம் என்ன?” என்று பாண்டியன் கேட்டான்.

“மொத்தம் ஏழுவரிகள் அச்செய்தியில் இருந்தன. அதை இதோ எழுதியிருக்கிறேன்.” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் காட்டினார். பாண்டியன் அதை வாசித்தான்.

“இறந்தவர்கள் இனி உறங்கமாட்டார்கள்,
அமர்ந்திருப்பவர்கள் எழுவது எளிது,
கழுகுகள் சிறகுவிரித்துவிட்டன,
கோட்டைவாயில் திறக்கும்,
மண் இறந்தவர்களுக்குப் போர்வை,
சினம்கொண்டவர்களுக்குக் கவசம்,
சுவான் பானில் மணிகள் உருள்கின்றன...”

பாண்டியன் திகைப்புடன் “என்ன அர்த்தம் இதற்கு?” என்றான்.

“அவர்கள் தேடிவந்தது கிடைத்துவிட்டது. சீனாவுக்குத் திரும்பிச்செல்லப்போகிறார்கள். அதைத்தான் கழுகுகள் சிறகுவிரிக்கின்றன என்பது குறிக்கிறது. அங்கே அவர்கள் எதையோ திறக்கப்போகிறார்கள். அதைத்தான் கோட்டைவாயில் திறக்கும் என்ற வரி காட்டுகிறது.”

‘‘மிச்சமுள்ள வரிகளுக்கு என்ன அர்த்தம்? என்றான் பாண்டியன்.

“தெரியவில்லை. ஆனால் இறந்தவர்கள் எழுந்துவருவார்கள் என்று அவர்கள் சொல்வதுபோலத் தோன்றுகிறது” என்று டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் சொன்னார். “மண்ணில் புதைந்த எதுவோ இருக்கிறது. மண் இறந்தவர்களுக்குப் போர்வை. சினம்கொண்டவர்களுக்கு கவசம் என்பது அதைத்தான் காட்டுகிறது.”

‘‘சுவான்பான் என்றால் சீனாவில் நாட்களைக் காட்டும் சிறிய இயந்திரம். சுவான்பானில் மணிகள் உருள்கின்றன என்றால் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அர்த்தம்” என்றான் நோர்பா.

 “கூடவே மூன்று சொற்கள் இருந்தன. ஜோக்காங், சம்யே, இன்னொரு வார்த்தை...அது எனக்குப்புரியவில்லை. ஜோக்காங் என்பது திபெத்திலுள்ள பெரிய மடாலயம். சம்யே என்பது திபெத்திலுள்ள மிகப்பழைமையான மடாலயம். முதலில் இந்த மடாலயங்களுக்குச் சென்றுபார்ப்போம். எதாவது தகவல் கிடைக்கலாம்.”

காட்மண்டுவில் அவர்கள் இறங்கியபோது அவர்களை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்த இருவர் வந்து வரவேற்றனர். பாண்டியனின் செல்பேசிக்கு ஒரு ரகசிய எண் வந்தது. அந்த எண் அவர்களுக்கும் வந்தது. அந்த எண்ணை இருசாராரும் பரிமாறிக்கொண்டனர். அதன்பின் அவர்களை அழைத்துச்சென்றனர். செல்லும்வழியில் அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை.

அவர்களை காட்மண்டுவின் குறுகலான சந்துகள் வழியாக ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். மரத்தால் கட்டப்பட்ட அந்த வீடு களிமண் சுவர்களின் மீது தூக்கி வைக்கப்பட்ட பெட்டிபோல் இருந்தது. அதனருகே நிறைய கோவேறு கழுதைகள் நின்றன. அப்பகுதியே சாணவாடையுடன் இருந்தது.

நாக்போ “சாணியைப்போட்டு அதிலேயே மிதித்தபடி நிற்கின்றன. அறிவில்லாத கழுதைகள்” என்று சொன்னது.

அவர்களை உள்ளே அழைத்துச்சென்று ஓர் அறையில் அமரச்செய்தார்கள். பத்து நிமிடங்களில் அவர்களுக்குப் போலியான ஶ்ரீலங்கா நாட்டுப் பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. விக்ரம் சமரநாயகே என்று பாண்டியனுக்கும் எட்வர்ட் பால் சேனாநாயகே என்று டாக்டருக்கும் அதில் பெயர் இருந்தது.

நோர்பாவின் முகம் மஞ்சள் இனத்தைச் சேர்ந்தது என்பதனால் அவனுக்கு மியான்மார் (பர்மா) நாட்டின் போலி பாஸ்போர்ட் அளிக்கப்பட்டது. அவன் பெயர் மௌங் ஸா டிங் என்று இருந்தது. சீனாவுக்கான சுற்றுலாப் பயண அனுமதியும் (விசா)பதிக்கப்பட்டிருந்தது. அந்த பாஸ்போர்ட் பழையதாக இருந்தது. பலநாட்டு நுழைவு அனுமதிகள் அதில் இருந்தன.

காதுகளைத் தூக்கியபடி நாக்போ, நோர்பாவின் பாஸ்போர்ட்டை எட்டிப்பார்த்து வாலைச்சுழற்றி முனகியது. “பெட்ரோல் மணம் அடிக்கிறது இதில்” என்றது ‘‘இது என்ன?”

“பாஸ்போர்ட்” என்றான் நோர்பா.

“எனக்கு பாஸ்போர்ட்?” என்று நாக்போ கேட்டது.

“நீ மிருகம் அல்லவா?”

“நீ?” என்று நாக்போ கேட்டது “நீ மிருகம் இல்லையா?”

“நான் வேறுவகையான மிருகம்” என்றான் நோர்பா.

அவர்கள் காரில் காட்மண்டு விமானநிலையத்துக்குச் சென்றார்கள். செல்லும் வழியெல்லாம் அவர்கள் பயந்துகொண்டே இருந்தார்கள்.

“இப்போது பாஸ்போர்ட்களுடன் கண்ரேகைகளும் கைரேகைகளும் பதிவுசெய்யப்படுகின்றன. ஏமாற்றுவது கடினம்” என்றார் டாக்டர் “நம்முடைய பாஸ்போர்ட்டில் இருக்கும் தகவல்கள் அவர்களின் கணிப்பொறியிலும் இருக்கவேண்டும்”

“ஆம், மாட்டிக்கொண்டால் நேராகச் சித்திரவதைக்கூடம்தான்” என்றான் பாண்டியன்.

பதற்றத்தை மறைத்தபடி அவர்கள் சீனாவின் நுழைவு அனுமதிக்கான பரிசோதனைச் சாவடி முன்னால் நின்றனர். அங்கிருந்தவன் அவர்களைக் கூர்ந்து நோக்கினான். கணிப்பொறித் திரையை அவன் பார்க்கையில் நோர்பாவின் மனம் படபடத்தது. ஆனால் அவன் தட் தட் என்று முத்திரைகளைக் குத்தி மூவரையும் உள்ளே விட்டுவிட்டான்.

விமானம் மேலேறியதும்தான் நோர்பா பெருமூச்சுவிட்டான். ஆனால் பாண்டியன் “இன்னும் ஆபத்து நீங்கவில்லை. நாம் லாசாவுக்குள் இறங்குமிடத்தில்தான் கூர்மையான சோதனை இருக்கும்” என்றான்.
அவர்கள் ஒன்றரை மணிநேரத்திலேயே லாசாவிற்குச் சென்றுவிட்டனர். கடுமையான பனிப்பொழிவு இருந்ததனால் விமானத்தின் ஓடுபாதை மூடியிருந்தது. அதை நீக்கம்செய்ய மேலும் ஒருமணிநேரம் ஆகியது.

அவர்கள் மீண்டும் சீன அதிகாரிகளின்முன் நின்றனர். நோர்பாவுக்கு இம்முறை கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் முன்னரே ஒருமுறை பாஸ்போர்ட் விசா இரண்டும் சரிபார்க்கப்பட்டிருந்தது
அவர்களைக் கூர்ந்து பரிசோதனை செய்தார்கள். கைரேகைகளும் கண்ரேகைகளும் கூடப் பதிவுசெய்து ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டன.அதன்பின்னர் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

“நம் உளவுத்துறை மிகச்சரியாகப் போலி பாஸ்போர்ட்களைத் தயாரிக்கிறது. இதேபோல அவர்கள் அசல் பாஸ்போர்ட்களையும் தயாரித்தால் நாடு முன்னேறிவிடும்” என்றார் டாக்டர்.

பாண்டியன் சிரித்தான்.

கூண்டிலிருந்து வெளியே வந்த நாக்போ வாலைச்சுழற்றியபடி பாய்ந்து வந்து “நான் பயப்படவே இல்லை. குரைக்காமல் இருந்தேன்” என்றது.

“ஆனால் உன் உடலில் சிறுநீர் வாடை வீசுகிறதே” என்றான் நோர்பா.

“மேலே செல்லும்போது மட்டும்தான் கொஞ்சம் பயந்தேன்” என்று நாக்போ தலையைக் குனிந்துகொண்டு சொன்னது.

விமானநிலையத்தில் இருவர் அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தார்கள். ஜம்பா என்றும் கல்ஸா என்றும் அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். ஜம்பா வாடகைக்கார் ஓட்டுநர். கல்ஸா சுற்றுலா வழிகாட்டி.

அவர்கள் காரில் ஏறிக்கொண்டார்கள். கார் கிளம்பியது. அவர்களிடம் சில எண்களைப் பரிமாறியபின் பாண்டியன் டாக்டரிடம் “இவர்கள் இந்திய உளவாளிகள்” என்றான்.

அவர்கள் டாக்டருக்கு திபெத்தியமுறைப்படி வணக்கம் சொன்னார்கள்.

“நாம் ஜோக்கோங் மடாலயம் செல்கிறோம்… அங்கேயே நாம் தங்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 22

சுவான்பான்

அபாக்கஸ் என்ற கருவி மிகப்பழைய காலத்திலேயே உலகமெங்கும் கணக்குகளைப்போட பயன்படுத்தப்படுகிறது. ஒரு மரச்சட்டத்தில் இருக்கும் கம்பிகளில் மணிகள் இருக்கும். அதை நகர்த்தி எண்ணிக்கை கணக்கிடுவார்கள்.

அபாக்கஸைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். 2,200 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் அபாக்கஸ் கருவி இருந்தது. க்ஸு யே (Xu Yue) என்ற கணிதமேதை அவருடைய நூலில் அதைப்பற்றிச் சொல்கிறார்.

அபாக்கஸுக்கு சீனமொழியில் சுவான்பான் என்று பெயர். சீன வணிகர்களிடமிருந்து அந்தக்கருவியைப் பயன்படுத்த கிரேக்கர்கள் கற்றுக்கொண்டார்கள். இரண்டாயிரம் வருடம் உலகமெங்கும் அக்கருவி பயன்படுத்தப்பட்டது. நாம் நினைப்பதைப்போல இது எளிமையான கருவி அல்ல. இதைக்கொண்டு மிகமிகச்சிக்கலான கணக்குகளைக்கூட போடமுடியும்.