
படங்கள்: ப.சரவணகுமார்
வாசிப்பின் உலகத்தை என் அம்மாவிடமிருந்து கண்டுகொண்டேன். வாரந்தோறும் குமுதம் படிக்காவிட்டால் அவர்களுக்கு நிலைகொள்ளாது. அதுபோன்றே, ராணியும் ஆனந்த விகடனும் அவர்களை வசீகரித்திருந்தன. நானும் என் அண்ணனும் அண்டை வீடுகளிலிருந்து இந்த இதழ்களை இரவல் வாங்கிக் கொடுப்போம். வார இதழ்களில் தொடராக வெளிவந்து பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதை நூல்களும் கிடைக்கும். அம்மா அவற்றைப் படித்து முடித்த பிறகு, நானும் அண்ணனும் படிப்போம். இந்த இதழ்களை வாசிப்பது ஒருவித சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. அந்தக் காலகட்டம் எனக்கு ஆறாம் வகுப்புப் பருவம். அதன் தொடர்ச்சியாகத்தான் இலக்கிய உலகம், சிறுகச் சிறுகப் புலனாகிவந்தது. அம்மாவின் அண்ணன் அமரர் மாயூரம் பாலசுப்பிரமணியம் கர்நாடக இசைக் கலைஞர்; ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவருக்கு மூத்தவர் அமரர் மாயூரம் கல்யாணசுந்தரம் கவிஞர், நாடகாசிரியர். அம்மாவுக்கு இவரிடமிருந்துதான் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும் (சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது அம்மா, “காந்தி இறந்த நாளன்று நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு கதை எழுதித் தருகிறேன். பிரசுரம் செய்கிறாயா?” என்று கேட்டார்கள். உடனே எழுதித் தரும்படிச் சொன்னேன். ஐந்து பக்கங்களுக்கு நுணுக்கி நுணுக்கி எழுதிக் கொடுத்தார்கள்.)

அந்த வயதில் நான், தொடர்கதைகளும் மாயாஜாலக் கதைப்புத்தகங்களும் படக்கதைகளும் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களும் சாண்டில்யன், கல்கி நாவல்களும் சுஜாதாவின் புத்தகங்களும் வாசித்திருக்கிறேன். தமிழ்வாணன் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட என் அண்ணன் மாதவன், சில நண்பர்களுடன் ‘வாணன் வாசகர் வட்டம்’ எனும் பெயரில் குழு ஏற்படுத்தினார். அந்தக் குழுவினர் தமிழ்வாணனின் புத்தகங்களை நிறைய வாங்கிப் படித்தார்கள். அவற்றை நானும் படித்தேன். அந்தச் சிறு வயதில் இரவு நேரங்களில் தமிழ்வாணன் நாவல்கள் படிப்பது பெரிய கிளர்ச்சியூட்டும் அனுபவம். துப்பறிவாளர் சங்கர்லால் மனங்கவர்ந்த நாயகராயிருந்தார். அவருக்கு இருப்பதைப் போன்று நெற்றியில் முடி சுருண்டு கிடக்க வேண்டும் என்பதற்காக, தலைமுடியை அடிக்கடி திருகிவிட்டுக்கொண்டது உண்டு. அப்புறம் சுஜாதா புத்தகங்களை நினைத்தாலே நாவில் நீர் ஊறும் காலம். மு.வ-வின் `கரித்துண்டை’யும் வெகுவாக ரசித்திருக்கிறேன். ஆயினும், எனக்குள் முதன்முதலாக வலுவான பாதிப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்திய கதை, ஜெயகாந்தனின் ‘நந்தனவத்தில் ஓர் ஆண்டி.’ அதுதான் எனக்கு இலக்கியம் குறித்தான ஒரு விழிப்பு. அந்தக் கதையின் தடம் பற்றி, புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கு.ப.ரா., தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கி.ரா. என்றெல்லாம் பயணப்பட ஆரம்பித்தேன்.
பிறகு புத்தகங்களின் மீது அதீதப் பித்து ஏற்படத் தொடங்கியது. நூலகங்களில் பார்த்துப் பார்த்து, அதுபோன்ற ஓர் அமைப்பை எனக்கும் உருவாக்கிக்கொள்ள விரும்பினேன். வீட்டில் ஒரு பெரிய முக்காலியின் மீது டிரங்குப்பெட்டி வைத்திருப்பார்கள். அந்த முக்காலியின் கீழ் புறத்தின் நான்கு சட்டங்களின் மீது காலண்டர் அட்டைகளை வைத்துத் தளம் உருவாக்கி, அதன் மேல் புத்தகங்களை வைத்து அழகுபார்ப்பேன். அந்த முக்காலியின் கீழ்ப் பகுதிதான் என் நூலகம். அவற்றில் சி.என்.அண்ணாதுரை, தமிழ்வாணன், சாண்டில்யன், சுஜாதா நூல்கள் வைத்திருந்தேன். எல்லாம் சேர்ந்து அதிகபட்சம் பதினைந்து இருபது புத்தகங்கள் இருக்கும்.

அந்தப் புத்தகங்கள் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று செலவுக்குச் சில்லறைக் காசுகள் தேவைப்படும்போது விற்றுவிடுவேன். என் பள்ளிக்கூடத்துக்கு எதிரில் ஒருவர் வண்டிக் கடை வைத்திருப்பார். ஏராளமான படக்கதை நூல்களையும் மாயாஜாலக் கதைகளையும் வண்டி முழுவதும் பரப்பி வைத்திருப்பார்; விற்பதற்காகவும் வாடகைக்குக் கொடுப்பதற்காகவும். அவரிடம்தான் என் புத்தகங்களை விற்பேன். மிகக் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்வார். பெரும்பாடுபட்டு சேகரித்த அவற்றை எதிர்பாரா நேரத்தில் அற்ப விலைக்கு விற்க நேரும். சிறிது காலத்துக்குப் பிறகு, காலியான என் முக்காலி நூலகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் புத்தகங்கள் கூடடையத் தொடங்கும். நல்ல நல்ல புத்தகங்கள் அறிமுகமாயின. பிரயாசைப்பட்டு சேகரித்தேன். எனக்குத் தெரிந்த அளவிலும், மற்றவர்கள் தெரிவித்த வகையிலும் தேர்வு செய்தேன். அப்படி இன்று என்னிடம் பட்டுக்கோட்டையிலும் இங்குமாக, ஏறத்தாழ இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்கும்.
என் புத்தகச் சேகரிப்புப் பற்றி எனக்கு பெரிய திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டு. இன்றளவும் என் சொத்து சம்பாத்தியம் என்பது இதுதான்.
வாழ்க்கையில் அடித்துச் செல்லப்பட்டு சென்னையில் கரை ஒதுங்கி, தனி அறைகள் பலவற்றில் தங்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு இடத்துக்கும் மாறிச் செல்லும்போது அந்தப் புத்தகங்களைக் கொண்டுசேர்ப்பது, விரக்திதரும் சவால். மிகு துன்பக் காரியம். சில நேரங்களில் அறைக்கு வாடகை கொடுக்காமல் நீண்ட நாள்கள் வெளியூர் சென்று திரும்பும்போது, வீட்டுக்காரர் என் புத்தகங்களையெல்லாம் அள்ளிக் கொல்லைக் கொட்டகையின் ஈர மண் தரையில் கொட்டியிருப்பார். வெளியூரில் இருக்கும்போது யோசிப்பேன்: ‘அங்கே ஓரிடத்தில் என் புத்தகங்கள் பாதுகாப்பாக வசிக்கின்றன. அவற்றில் அதி அற்புதமான கதைப்புத்தகங்கள் இருக்கின்றன. நல்ல கவிதைத் தொகுதிகள் அதிகம் உண்டு. மிகச் சிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஓவியம் குறித்தும் ஒளிப்படம் குறித்துமான நூல்கள், மிகப் பழைய மொழிபெயர்ப்பு புத்தகங்கள், பழங்காலத்து அரிய தமிழ் நூல்களெல்லாம் ஒன்றாக இருக்கின்றன. எனவே, நமக்கு எது குறித்தும் கவலை இல்லை’ என்று பூமியில் கால் பதித்து மேகத்தில் முகமுரசி நடக்கும் பெருமிதம். ஆனால், திரும்பிவந்து பார்க்கும்போது அந்தப் புத்தகங்களெல்லாம் குப்பையில் கொட்டி வைத்திருப்பதுபோன்று, சிதைந்து சிதறிய உடல்கள்போன்று, மண் தரையில் நாசகார வன்மத்துடன் கொட்டப்பட்டிருக்கும். பக்கங்கள் கட்டுவிட்டுக் கொத்தாகப் பிதுங்கிக் கிடக்கும்; அட்டைகள் மடங்கிக் கிழிந்திருக்கும்; சேறு படிந்திருக்கும்; ஈரத்தில் ஊறித் துவண்டு ஒட்டிக்கிடக்கும். உறைவிடத்துக்கும் உணவுக்கும் உத்தரவாதமற்ற பாழ் வாழ்க்கை பலிகொண்ட நூல்கள் மிக அதிகம். குடந்தை ஓவியக் கல்லூரியில் படிக்கும்போதான மூன்று கல்விச் சுற்றுலாவில் சிம்லா வரை சென்று ஒளிப்படம் எடுத்த ஏராளமான நெகட்டிவ்களும் இப்படித்தான் முற்றாக அழிந்தன. அவற்றில் மிகச் சிறப்பான ஐந்து ஒளிப்படக் காட்சிகள் நடத்தும் அளவுக்காவது தேர்ந்த படங்கள் இருக்கும். இன்று நினைக்கும்போதும் ஏக்கம் பிடரியழுத்தித் தலைகுனியச் செய்யும் இழப்புகள்.
குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் சில அறைகள் மிக மோசமானதாக அமைவதும் உண்டு. பழவந்தாங்கல் காந்திசாலையில் தங்கியிருந்த ஓர் அறை இப்படியானதுதான். அறையின் மேற்தளத்தில் பெரிதாக வீறல் விட்டிருந்தது. அதன் வழியே மழை நீர் புத்தகங்களின் மீது கொட்டும். சில நாள்களுக்குப் பிறகு புத்தகங்கள் மக்கிப்போய் அவற்றின் மீது கருநிறப் பூஞ்சை படரும். அந்தப் பூஞ்சையிலிருந்து ஒளிர்வெண் நிறத்தில் கடும் நெடியுடன் மெல்லிய காளான் தோன்றும். திணறச் செய்யும் நெடி. அப்படியான சந்தர்ப்பங்களில் அறையில் இராத் தங்க முடியாது. புத்தகங்களின் மீதான கரும்பூஞ்சைப் பரப்பும் அதன்மீது விளைந்திருக்கும் வெண் காளான் கொடிகளும்.
அப்புறம் அப்புறம், புத்தகங்களின் இடையே ஆயிரக்கணக்கான கட்டெறும்புகள் வந்து வந்து வசிக்கத் தொடங்கின. அவை எங்கிருந்தோ அரிசிகளையும் உணவுத்துகள்களையும் கொண்டுவந்து சேமித்தன. பாச்சை, கரப்பான், சிறிய மற்றும் பெரிய பல்லிகள், சிலந்திகள் ஆகியவையெல்லாம் வந்து புத்தகங்களின் இடுக்குவெளிகளைத் தங்கள் சாம்ராஜ்ஜியமாக்கிக்கொண்டன. நண்பர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் பூச்சி மருந்தும் அடித்தேன்; வேறு வழியில்லை. இரவு நேரம். புத்தகங்களைச் சுற்றிலும் இடுக்குகளிலும் பீச்சாங்குழலால் மருந்து அடித்துப் படுத்துவிட்டேன். அது காற்றோட்டமற்ற அறை. சிலமணி நேரத்துக்குப் பிறகு தொடர் வாந்தி, மயக்கம். மறுநாள் முழுதும் கடும் தலைவலி, கிறுகிறுப்பு.
முதன்முதலில் நான் நீண்ட பயணம் மேற்கொண்டு வாங்கிய புத்தகம், சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு, க்ரியா வெளியீடு). அப்போது நான் பட்டுக்கோட்டையில் இருந்தேன். தஞ்சையில் அது கிடைக்கவில்லை. கோயமுத்தூர் விஜயா பதிப்பகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். இரவு புறப்பட்டு மறுநாள் காலை கோவை சென்று அந்தப் புத்தகத்தைக் கைப்பற்றி வெற்றி வீரனானேன். இப்போது புத்தகங்களுக்கான பயணம் என்பது சாதாரணமாகிவிட்டது. வருடத்தில் சிலமுறை கேரளத்துக்கும் சென்று நிறைய புத்தகங்கள் வாங்கி வருகிறேன். என் வீட்டுக்கு வரும் உறவினர்கள் சிலர் என் புத்தகங்களைப் பார்த்து வியந்து, “இந்தப் புத்தகமெல்லாம் எவ்ளோ இருக்கும்?” என்று தவறாமல் கேட்பார்கள். நான் அந்தக் கேள்வியைத் தவிர்க்க நினைத்தாலும் மீண்டும் மீண்டும் முகத்துக்கு நேராக அந்தக் கேள்வியை நிறுத்துவார்கள். உபசரிப்பாளருக்கான நாகரிகம் பேண வேண்டிய கட்டாயத்தில் நான் ஏதேனும் ஒரு தொகையைச் சொல்வேன். ஏளனமும் பரிதாபமும் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்து, புத்தகங்களுக்குச் செலவான பணத்தைக்கொண்டு என்னென்ன காரியங்களைச் செய்திருக்கலாம் என்று பட்டியலிடுவார்கள். என் முட்டாள்தனத்தை ‘சரிப்படுத்து’ம்படி என் மனைவிக்கு உபதேசம் செய்வார்கள்.

புத்தகங்கள் கணிசமாகப் பெருக ஆரம்பித்துவிட்டன. இப்போது குடும்பஸ்தன். சென்னையில் வீடு மாறும்போதெல்லாம் மிகவும் துன்பப்பட்டு புதிய இடங்களுக்குப் புத்தகங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன். கடந்தமுறை வீடு மாற்றும்போது நானும் என் மனைவியும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுருண்டு கிடந்தோம். தெருவின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைக்குக் குடிமாற்றம். என் மனைவியின் தங்கைகள் இருவர் மிகப் பொறுப்புடன் என் புத்தகங்களையெல்லாம் இடம் மாற்றினர்.
புதிதாகச் சென்ற வீட்டில், கடந்த மழை வெள்ளக் காலத்தில் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்தது. எல்லாம் கழிவு நீர். முதன்முறை தண்ணீர் வந்து அது வடிந்து, தரையைக் கழுவி, இயல்புக்கு வந்து, உயரத்தில் வைத்த புத்தகங்களையும் பொருள்களையும் அதனதன் இடத்தில் வைத்தால், திடீரென்று மழை கனத்து மீண்டும் வீட்டுக்குள் தண்ணீர் புகும். இப்படி மூன்று முறை. இதில் இழப்பான புத்தகங்களில், மக்கியப் பக்கங்களுடைய மிகப் பழைய தமிழ்ப் புத்தகங்களும் அடக்கம்.
புத்தகங்களில் வந்தடையும் தூசியும் ஒட்டடையும் என்னுடன் இருப்பவர்களையும் பாதிக்குமோ என்று அஞ்சுகிறேன். எல்லாப் புத்தகங்களையும் அடிக்கடித் துடைத்து சுத்தப்படுத்தவோ, முறையாகப் பராமரிக்கவோ முடியவில்லை. புத்தகங்கள் வைத்துக்கொள்வது என் தகுதிக்கு மீறிய காரியமாகத்தான், பெரிய பிரச்னையாகத்தான் இருக்கிறது. ஆயினும் என் அன்பிற்கும், போற்றுதலுக்கும், வேதனைக்கும், துயரத்துக்கும், பெருமகிழ்ச்சிக்கும், பெருந்தனிமைக்கும் உரிய இந்தப் புத்தகங்கள் இல்லையென்றால், என் உயிரின் மகத்துவ உணர்கொம்பு ஒன்று துண்டிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன்.
நான் எப்போதும் என்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிற புத்தகங்களில் ஒன்று ‘குட்டி இளவரசன்.’ அந்தக் கற்பனையின் கவித்துவ சாத்தியங்கள், அது நம் பிரக்ஞையில் நடத்தும் முடிவற்ற பயணம், மொத்தத் தாய்மையிலிருந்து கசியும் முலைப்பால் துளிகளான அதன் நிகழ்வுகளெல்லாம் என்னை அந்தப் புத்தகத்துடன் இணைபிரியாது இருக்கச் செய்கின்றன. சமீபகாலத்தில் வெளிவந்த சி.மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ தமிழில் மிகப் புதிய முயற்சி. விந்தைக் கலைஞனான ஓவியனின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பை, ஓவியார்த்தமாகவே நிறைவேற்றியிருக்கிறார் மோகன். ஓவியனைப் பற்றிய, அதே தன்மையான ஒரு சிறந்த நாவல் என்பது (`கரித்துண்டு’, `காலவெளி’க்கு அப்பாற்பட்டு) தமிழில் இது மட்டும்தான் என்று நினைக்கிறேன். சுஜாதா, தமிழுக்கு ஒரு புதிய, வெகுஜன உரைநடையை உருவாக்கிக் கொடுத்தவர் என்றால், பிரான்சிஸ் கிருபா ‘கன்னி’நாவலில் கவித்துவ உரைநடையொன்றைக் கையளித்திருக்கிறார். அவரது எளிமையின் காரணமாக அவர் மீது பாராமுகம் பிரயோகிக்கப்படுகிறது. பதவி அதிகாரங்களும் பணபலமும் கொண்ட, சராசரிக்கும் கீழான எழுத்துத் தரம் கொண்டவர்களுக்குக் கிடைக்கும் தகுதியற்ற அங்கீகாரத்தையும் நியாயமற்ற புகழையும் முறையற்ற விருதுகளையும், அவர்கள் விரைவிலேயே ‘தீர்மானிக்கும் சக்தி’யாக மாறிவிடுவதையும் நான் பல நேரங்களில் பிரான்சிஸ் கிருபாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது உண்டு. மலையாளத்தின் இலக்கியப் பேராசான் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’ எனும் நூலை மொழிபெயர்த்திருக்கிறேன். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்புவந்த நாவல். இப்போதும் அதே நவீனத்துடன், முற்றிலும் மாறுபட்ட தொனியுடனும் மிகத் தேர்ந்த மொழிப் பிரயோகத்துடனும் இருக்கிறது. நாவலின் மொழிநடையும், களமும், பாத்திரங்களும், சூழலும் யதார்த்தப் போர்வையில் நவீன காவியமாக ஒருங்கிணைந்திருக்கின்றன.
ஏதாவது ஒரு புத்தகம் என் சிந்தனையில் பளிச்சென்று மின்னும். சற்றும் தாமதமின்றி அப்போதே அந்தப் புத்தகத்தைக் கையிலேந்த வேண்டும் எனும் பரவசம் பீறிடும். நான் பரபரப்பாகத் தேடத் தொடங்குவேன். வீட்டின் பல இடத்திலிருக்கும் புத்தகங்களிலிருந்து அந்த ஒரு புத்தகத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அப்போதைக்கு முடியாமலும் போகும். அப்போது வரும் பெருங்கவலையும் இழப்பு உணர்வும் இப்போதே இக்கணமே அந்தப் புத்தகத்துடன் என் உறவைப் புதுப்பிக்க வேண்டும் எனும் மகா உந்துதலால் பீடிக்கப்படுவேன். தேடத் தேடத் தோல்வியுற்று ஏக்கமே மிஞ்சும். அந்த இயலாமை, அழுகையைக் கொண்டுவந்துவிடுமோ எனும் அச்சம் துடிக்கும். அப்போது நான் மனதில், அந்தப் புத்தகத்தை நினைத்து மிகவும் மன்றாடுவேன், தாழ்ந்து பணிந்து இறைஞ்சுவேன். `என் அன்பிற்குரிய புத்தகமே, என் அருமையே, கண்மணியே, நீ எங்கே இருக்கிறாய் அன்பே, என்னிடம் வந்துவிடேன். நான் உன்னைக் காணாமல் மிகவும் தவித்திருக்கிறேன், தயவுசெய்து என் கைகளில் சேர்ந்துவிடு’ என்று பிதற்றிக்கொண்டிருப்பேன்.
அதிசயம்போல அது நடக்கும். அது நிகழும்போது பெரிய வியப்பாக இருக்கும். குறுகிய பொழுதில் அந்தப் புத்தகம் எங்கிருந்தாலும் வந்து என்னை அணைத்துக்கொள்ளும். தொலைவே சென்று, நீண்ட நெடுநேரமாகியும் வீடு திரும்பாத பிள்ளைகளை அம்மா மனம் நொந்து அழைப்பதுபோல, என் கண் மறைந்த புத்தகங்களிடம் மனம் உருகிப் பிரார்த்தனை செய்திருக்கிறேன். அந்தப் புத்தகங்கள் ஒருபோதும் என் அழைப்பை மறுத்ததில்லை.