
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
ராஜினாமாக் கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் வெளியிட்ட தி.மு.க ஆட்சியைக் கண்டித்துக் கண்டனப் பேரணியை, மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடத்தினார் ஜெயலலிதா. இந்தப் போராட்டம் தி.மு.க-வுக்கு எதிரானது என்றபோதும், ‘அரசியலிலிருந்து நான் விலகவில்லை; லைம்லைட்டில்தான் இருக்கிறேன்’ என்பதைச் சமூகத்துக்குச் சொல்லவே அதைக் கையிலெடுத்தார் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள், தமிழக சட்டசபையில் பிரளயம் நடக்கப்போவதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
ஜெயலலிதா அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், சசிகலா குடும்பமும் ஓய்வெடுக்க வேண்டியதுதான். ஆனால், அதை நடராசன் விரும்பவில்லை. ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், மீண்டும் ‘ஆலோசகர்’ ஆனார். ஆலோசனையின் அடுத்த நகர்வு சட்டமன்றத்தை நோக்கி இருந்தது. 1988 ஜனவரியில் ஜானகி ஆட்சிக் கவிழ, முக்கியக் காரணமாக இருந்தது சட்டசபையில் நடைபெற்றக் கலவரம். ஜானகி ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த தகராறு, அடிதடி, சோடா பாட்டில்கள் வீச்சு, போலீஸ் தடியடி எனச் சட்டசபை, சத்தசபை ஆனது. இதனால் ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி வந்தது. இந்தச் சம்பவம் நடந்து ஓர் ஆண்டுதான் ஆகியிருந்தது. தி.மு.க-வும் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின. சட்டமன்றத்தில் மீண்டும் அப்படியான சம்பவம் நடந்தால், தி.மு.க ஆட்சிக் கவிழும் என்பதுதான் நடராசன் போட்ட கணக்கு!

1989, மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமை. பட்ஜெட் கூட்டத் தொடருக்காகக் கூடியது சட்டசபை. கருணாநிதி பட்ஜெட்டைப் படிக்க ஆரம்பித்தபோது ஜெயலலிதா எழுந்து, ‘‘முதல்வர்மீது உரிமை மீறல் பிரச்னை கொடுத்திருக்கிறேன். அதை முதலில் எடுக்க வேண்டும்’’ என்றார். முதல்வர் கருணாநிதி, சென்னை போலீஸ் கமிஷனர் துரை ஆகியோரைக் கடுமையாகப் பேசினார் ஜெயலலிதா. அவர் பேசிய எதுவும் அவைக்குறிப்பில் ஏறவில்லை. ஜெயலலிதா பேச ஆரம்பித்ததும் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் தகராறு செய்தார்கள். ஜானகி அணி எம்.எல்.ஏ பி.ஹெச்.பாண்டியன் பேசியபோது, அ.தி.மு.க-வினர் அவரைக் கடுமையாக திட்டினார்கள். அவையில் அமளி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.
உடனே ஜெயலலிதா, குமரி அனந்தன் கொடுத்த தீர்மானங்களைத் திங்கட்கிழமை எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் தமிழ்க்குடிமகன் சொன்னார். ஆனால், ஜெயலலிதா, கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசர், உகம்சந்த், எஸ்.ஆர்.ராதா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆக்ரோஷமாகப் பேசினார்கள். அ.தி.மு.க உறுப்பினர்களின் கூச்சலுக்கிடையே கருணாநிதி, பட்ஜெட் உரையைச் சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். இரண்டு வரிகள்கூட படித்திருக்கமாட்டார். எதிர்க்கட்சிகள் வரிசையிலிருந்து, ‘‘குத்துங்கடா’’ எனக் குரல்கள் வந்தன. பட்ஜெட் படிப்பதற்கு வசதியாக, டேபிளின்மீது இன்னொரு சிறிய டேபிள் போடப்பட்டிருந்தது. அதில் பட்ஜெட் புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. அ.தி.மு.க உறுப்பினர்கள் கருணாநிதியை நோக்கிப்பாய்ந்தனர். செங்கோட்டையனும் மற்றவர்களும் சிறிய மேஜையைத் தட்டிவிட்டு, கருணாநிதியிடமிருந்து பட்ஜெட் புத்தகத்தைப் பிடுங்கிக் கிழித்து வீசினார்கள். கருணாநிதியின் முகத்தை நோக்கி குத்துவிழ, அவர் நிலை தடுமாறினார். கண்ணாடி உடைந்தது. மேஜை அவர் கையில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு தி.மு.க உறுப்பினர்களும் அமைச்சர்களும் பாய்ந்து வந்து, அ.தி.மு.க-வினரைத் தாக்கினார்கள். அரண் அமைத்து, கருணாநிதியைப் பாதுகாப்பாக சபாநாயகர் அறைக்கு அழைத்துப் போனார்கள்.
இரண்டு தரப்பும் இருக்கைகள், மேஜைகள் மீது ஏறி நின்றுகொண்டு மல்லுக்கட்டினார்கள். பட்ஜெட் புத்தகக்கட்டுகள் தூக்கிவீசப்பட்டன. மைக்குள் ஆயுதங்களாகின. அவற்றைப் பிடுங்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். செருப்புகள் இரண்டு பக்கமும் மாறிமாறிப் பறந்தன. தூக்கி வீசப்பட்ட கட்டைகள், புத்தகங்கள் ஜெயலலிதா தலையிலும் தோள் பட்டையிலும் விழுந்தன. பறந்துவந்த மைக், வீரபாண்டி ஆறுமுகத்தின் நெற்றியைப் பதம்பார்த்தது. காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் தப்பவில்லை. செருப்புகள், அட்டைகள், புத்தகங்கள் அவர்மீது வீசப்பட்டன. இதுபற்றி பிறகு சொன்ன மூப்பனார், ‘‘விழுந்த செருப்புகளைச் சேகரித்து வைத்தால் ஒரு செருப்புக் கடையே வைக்கலாம்’’ என்றார். பரணி பாடிக் கொண்டிருந்த சட்டசபை, கலிங்கத்துப் போர்ப்பரணி ஆனது. வேறுவழியில்லாமல் போலீஸை உள்ளே அழைத்தார் சபாநாயகர். ஆனாலும், கலாட்டா அடங்கவில்லை. சபை ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தள்ளாடியபடியே, கட்சியினர் பாதுகாப்போடு காரில் ஏறிச் சென்றார்.
பட்ஜெட் தாக்கல் என்பதால், கருணாநிதி பட்ஜெட் படிக்கும் காட்சியைப் படமெடுக்க பத்திரிகை போட்டோகிராபர்கள் சட்டசபைக்கு வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் கலவரம் ஏற்பட்டுவிட, அதையும் சிலர் பதிவு செய்தார்கள். ஆனால், ‘‘சட்டசபையில் எடுக்கப்பட்ட எந்தப் படத்தையும் என் அனுமதியின்றி பத்திரிகைகள் வெளியிடக் கூடாது’’ என சபாநாயகர் தமிழ்க்குடிமகன் உத்தரவிட்டார். ஜெயலலிதாவும் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் 27 பேரும் மார்ச் 31-ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
சட்டசபையில் என்ன நடந்தது என்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் பத்திரிகையாளர்களை அழைத்துச் சொன்னார்கள். ‘‘என்னை, ‘கிரிமினல் குற்றவாளி’ என ஜெயலலிதா சொன்னபோதுகூட தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். செங்கோட்டையன் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தபோது, ஜெயலலிதா, அவரைப் பார்த்து, ‘குத்துடா அவனை’ என ஆக்ரோஷமாகச் சொன்னார். செங்கோட்டையன் என்னைக் குத்தியதும் மூக்குக் கண்ணாடி உடைந்தது. பட்ஜெட் புத்தகத்தைக் கிழித்து என் முகத்தில் அடித்தார்’’ என்றார் கருணாநிதி.
கவர்னர் அலெக்ஸாண்டரிடம் புகார் கொடுத்துவிட்டு, போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ‘‘தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் என்னைக் குறிவைத்துத் தாக்கி, கொல்ல முயன்றார்கள். மைக்குகளைப் பிடுங்கி அடித்தார்கள். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து செருப்புகள் வீசப்பட்டன. அமைச்சர்கள் மோசமான வார்த்தைகளில் திட்டியதுடன், கிடைத்த பொருள்களையெல்லாம் என் மீது வீசினார்கள். இதில் நான் மயக்கமடைந்தேன். துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் தாக்கினார்கள். மைக்கை ஆப் செய்துவிட்டு என்னைப் பார்த்து, கேவலமான வார்த்தையில் கருணாநிதி திட்டினார். என் நடத்தையையும் மோசமாக விமர்சித்தார். அமைச்சர் துரைமுருகன், என் சேலையைப் பிடித்து இழுத்து உருவியதில் சேலை கிழிந்ததோடு நான் கீழே விழுந்தேன். தலையில் உள்காயம் ஏற்பட்டது. முதுகு, கால், முட்டிகளில் கடுமையான வலி’’ என்றார்.
வீரபாண்டி ஆறுமுகம் அரசு மருத்துவமனையிலும் ஜெயலலிதா மயிலாப்பூர் தேவகி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சட்டசபைக் கலவரத்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஆனாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளைச் சளைக்காமல் நடராசன் செய்தார். பிரதமர் சந்திரசேகருடன் நடந்த சந்திப்புகள், ராஜீவ் காந்திக்குத் தரப்பட்ட பிரஷர்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பின. ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்த நடந்த சதிகள், சதிராட்டங்கள் தனி எபிசோடு. ஜெயலலிதா அரியணையில் அமர்ந்தால்தான் ‘அறுவடை’ செழிக்கும் என சசிகலா குடும்பம் நினைத்தது. அதுவும் நடந்தது. சசிகலா ஜாதகத்தின் சாம்ராஜ்ஜியம் இன்னும் விரிய ஆரம்பித்தது. அது இன்னும் விரியும்.
ஜூவி-யில் முடிந்தது. விகடன் இணையதளத்தில் சந்திப்போம்!