
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ஓவியம்: ராமமூர்த்தி
திறந்தவெளி உணவகங்கள் உஷார்... உஷார்!
நாங்கள் தொலைவிலுள்ள ஓர் ஊருக்குக் காரில் சென்றுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது இரவு ஒரு மணி. வழியில் ஓரிடத்தில் மரத்தடியில் மேஜை நாற்காலிகள், ட்யூப் லைட் போட்டு டிபன், டீக்கடை வைத்திருந்தனர். நாங்கள் இறங்கி, சேர்களில் உட்கார்ந்துகொண்டு, டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ஒரு மேஜை மேலே பெரிய பாத்திரத்தில் இட்லி மாவு வைத்திருந்தனர். அது மூடப்படாமல் இருந்தது. அருகில் அடுப்பில் தோசை சுட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மரத்தின் மேலிருந்து என்னவோ வெள்ளையாக அந்த இட்லி மாவு பாத்திரத்தில் விழுந்தது. மேலே பார்த்தோம். அங்கே நிறைய காகங்கள் அமர்ந்திருந்தன. அவற்றின் எச்சங்கள்தாம் அந்த மாவு பாத்திரத்தில் விழுந்தன. யாரும் அதைக் கவனிக்கவில்லை. அந்த மாவில்தான் இட்லி, தோசை சுட்டுக்கொண்டிருந்தனர். எங்களுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. `இப்படிப்பட்ட திறந்த வெளி டிபன் கடைகளில், அதுவும் இரவு நேரத்தில் சாப்பிடுவது மிகமிக கெடுதல்’ என்பதை உணர்ந்தோம். நீங்களும் உஷாராக இருங்கள் தோழிகளே!
- பி.பார்வதி பாலகிருஷ்ணன், நாமக்கல்

மலைக்க வைத்த மனசாட்சி!
என் உறவினரின் பெண்ணுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு வரனைப் பற்றி விசாரித்ததில் பலரும் நல்லவிதமாகக் கூறியதால், உறவினர் நேரில் சென்று பையனைப் பார்த்தார். அவர் வீட்டாரை முறைப்படி நிச்சயம் செய்ய வருமாறு அழைத்துவிட்டு வந்தார். நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் அந்தப் பையனே வந்து, என் உறவினர் குடும்பத்தினருடன் பேசினான். `ஒரு பெண்ணால் நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். அந்தச் சோகத்தில் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு பெண்ணால் நான் பாதிக்கப்பட்டாலும், என்னால் ஒரு பெண் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. சிரமத்துக்கு என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் அமைய என் வாழ்த்துகள்’ என்று கூறிவிட்டு விறுவிறுவென்று எழுந்து போய்விட்டான்.
`பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது’ என்று நினைத்துச் செயல்பட்ட அவன் எங்கள் மதிப்பில் இமயமென உயர்ந்துவிட்டான்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி
வாயில்லா ஜீவனை வதைக்காதீர்கள்!
பண்டிகை, விழாக்காலங்களில் நுழைவாயிலில் தோரணம் கட்டுவதற்கு மாவிலைகளை `ஸ்டேப்ளர் பின்’ கொண்டு கயிற்றுடன் இணைக்கிறோம். நமக்கு எளிதாக இருக்கிறது என்பதற்காக இவ்வாறு செய்வதில் தவறில்லை. ஆனால், அந்தத் தோரணங் களைக் கழற்றி அப்படியே குப்பையில் போட்டு விடுகிறோம். மா விலையுடன் பின்களையும் சேர்த்துச் சாப்பிடும் ஆடு மாடுகளின் வாயையும் வயிற்றையும் பதம்பார்த்து எத்தகைய உடல்நலக் குறைவை இது ஏற்படுத்தும் என்பதை யோசித்திருக்கிறோமா..?
இனியாவது மாவிலைத் தோரணங்களிலிருந்து பின்களை எடுத்துவிட்டு குப்பையில் போடலாமே... ப்ளீஸ்!
- விஜயலட்சுமி, பெங்களூரு
ஆன்லைன் ஆபத்தை முறியடிக்க வேண்டுமா..?
தினமும் தன் மகள் பள்ளிவிட்டு வந்ததும், என் தோழி, `பள்ளியில் இன்று என்ன நடந்தது?’ என்று அன்பாக விசாரிப்பாளாம். அப்படிக் கேட்கும்போதுதான், அவள் மகள் `ப்ளூவேல்’ விளையாட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. உடனே அக்குழந்தைக்கு கவுன்சலிங் தரப்பட்டு, விபரீதம் ஏதும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறாள்.
பெற்றோர் தினமும் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதோடு, அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். அதிகாலை, நள்ளிரவு என வெளியே போனுடன் நடமாடுகிறார்களா எனவும், ரத்தக் காயங்கள் உள்ளதா எனவும் பார்க்க வேண்டும். ஷட்டில் காக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்ல வேண்டும். இதையெல்லாம் செய்தால், ஆன்லைன் ஆபத்து எதையும் அசராமல் சமாளிக்கலாம்.
- பா.ரமணி, சேலம்