சினிமா
பேட்டி - கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ந்த இதழுடன் இரண்டு பாகங்கள் முடிந்து   மூன்றாம் பாகம் பாரி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. இதுவரை பாரியைப்  பின்தொடர முடியாமல் போனவர்களுக்காக இந்த முன்கதைச் சுருக்கம்.

யானையின் பிளிறல் கரும்பாறையிற் பட்டு எதிரொலிக்கையில் அமைதி கொண்டிருந்த பறவைகள் கூவிக்குரலெழுப்பு கின்றன. பறவைகள் அலகு திறக்கும்பொழுதே சிறகசைக்கத் தொடங்கிவிடுகின்றன. அவை படபடத்துப் பறக்க, காட்டின் ஆழ்ந்த அமைதி கலைகிறது. கலைந்தெழும் ஓசையோடு ஒவ்வோர் உயிரினத்தின் ஓசையும் இணைகின்றன.

உச்சியிலிருந்து உருளும் பந்தைப்போலத்தான் காட்டில் உருவாகும் ஓசை; உருள உருள அதற்கு விசை கூடுகிறது. கண்காணாத்தொலைவு வரை பயணப்பட்டு மறைந்துபோனதா அல்லது திசை திரும்பிப்போனதா என்பதை அறிய முடியாமலே சென்றுசேருகிறது. மலைத்தொடர்களுக்கிடையில் தொட்டில் கட்டித் தொங்கும் அடர்கானகத்தின் குணம் இதுதான்.

வடக்கும் தெற்குமாக நீண்டுகிடக்கும் பச்சைமலைத்தொடரில் பரவிக்கிடக்கும் அடர்கானகம்தான் பறம்புநாடு. அந்நாட்டின் தலைவன் பாரி. வேளிர் குலத்தின் வம்சாவளி யாதலால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டான். மலைமனிதர்கள் பசி அறியமாட்டார்கள். கொடுங்கோடையிலும் ஏழுவகைக் கிழங்குகளை அவர்களுக்காக உள்ளங்கையில் வைத்துக் காத்திருக்கிறது காடு. உணவை விளைய வைப்பதோ, அறுப்பதோ அல்ல; சேகரிப்பது மட்டுமே வேலை. அதுவும் சேமிப்பு என்ற சிந்தனையும் சொல்லும் உருவாகாத வாழ்நிலை.

பறம்பின் தலைவன் பாரி இருக்குமிடம் எவ்வியூர். பச்சைமலைத்தொடரில் மூன்று மலைகளைக் கடந்து உச்சியிலிருக்கும் அவ்வூரிலே வசிக்கிறான் பாரி. அவனது புகழ் நிலமெங்கும் பரவிக்கிடக்கிறது. அவன் வள்ளல்தன்மையைப் பாணர்கள் காலம் முழுவதும் பாடுகிறார்கள்.

பெரும்புலவன் கபிலன், சிற்றரசன் ஒருவனின் மாளிகையில் இரவு கள்ளுண்டு மகிழ்ந்திருக்கிறான். தன்னைக் காணவந்த பாணர்களின் செயல்பற்றி அவ்வரசன் கபிலரிடம் கூறுகிறான். எல்லா மன்னர்களிடமும் பரிசில்பெற்றுத் திரும்பும் பாணர்கள் பாரியிடம் மட்டுந்தான் கருணையைப்பெற்றுத் திரும்புகின்றனர். இந்த உண்மையைத்தான் அவர்கள் பாடுகின்றனர் என்கிறான்.

இது கபிலருக்கு ஏற்புடையதாக இல்லை. பாரி விருந்தினரை நிர்வகிப்பதில் சிறந்தவனாக இருக்கலாம். ஆனால், வள்ளல்தன்மை என்பது நிர்வாகத்திறமையல்ல; அது குழந்தையின் குரல் கேட்டகணத்தில் பால்கசியும் தாயின் மார்பைப் போன்றது என்று வாதிடுகிறார். ஆனால், அந்தச் சிற்றரசன் அதனை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் நாளையே பறம்பு நாடு சென்று பார்க்கிறேன் என்று புறப்படுகிறார் கபிலர்.

முன்பின் போகாத அடர்காட்டுக்குள் தன்னந்தனியாக நுழைகிறார். உள்ளே நுழைந்த சிறிதுதொலைவிலேயே நீலன் என்ற வீரன் கபிலரோடு இணைகிறான். அவன் கபிலரை முதலில் தனது ஊருக்கு அழைத்துச்செல்கிறான். அங்கிருந்து காரமலை, நடுமலை, ஆதிமலை ஆகிய மூன்று மலைகளைக் கடந்து பாரியிருக்கும் எவ்வியூருக்குக் கொண்டு சேர்க்கிறான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

இந்த வழிப்பயணம் கபிலரின் பல எண்ணங்களைத் தலைகீழாக மாற்றுகிறது. காடு பற்றியும் இயற்கை பற்றியும் மலைமக்கள் பற்றியும், பாரி பற்றியும் அவரின் பார்வைகளில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

கபிலர் வந்துகொண்டிருக்கிறார் என அறிந்த பாரி எதிர்வந்து வணங்கி, கபிலரைத் தன் தோளிலே எவ்வியூருக்குத் தூக்கிச் செல்கிறான். கபிலரின் வரவு எவ்வியூரின் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

எவ்வியூரின் மாணவர்களைக் காடறிய அழைத்துச்செல்லும் ஆசானான தேக்கன், பாரியின் மனைவி ஆதினி, பாரியின் இரு மகள்களான அங்கவை, சங்கவை, நீலனின் காதலியான மயிலா என எல்லோரும் கபிலரின் வரவைக் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

அடுத்த சில நாள்களில் பறம்பின் பெரு விழாவான கொற்றவைக்கூத்து தொடங்குகிறது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் எத்தனையோ இனக்குழுக்களை அழித்து தங்களது ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தி யுள்ளனர். அவ்வாறு அழித்தொழிக்கப் பட்டவர்களில் சிலர் பறம்பில் அடைக்கலம் அடைந்தனர். பறம்பு நாடு அவர்களைத் தங்களின் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது. அழித்தொழிக்கப்பட்ட குலங்களின் வம்சாவளிகள் போர்த்தெய்வமான கொற்றவையின் முன்னால் தங்களின் குலத்தின் வரலாற்றைச் சொல்லி, அதனை அழித்தொழித்த வேந்தனின் மீது வெஞ்சினம் உரைத்துப்பாடுவர்.

பதினேழு நாள் பெருவிழா இது. கொற்றவை இருக்கும் பெரும் மரப்புதருக்குள் தெய்வவாக்கு விலங்கிருக்கிறது. அது இறங்கிவந்து முன் இலையில் வைக்கப்பட்ட பலவகையான கனிகளில் ஏதாவது ஒன்றை முதலில் எடுக்கிறது. அப்படி எடுக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இனக்குழுக்கள் கொற்றவையின் முன் தாங்கள் அழிக்கப்பட்ட கதைகளைச் சொல்லி அருளிறங்கி ஆடுவர். கடைசியாக, பதினேழாவது நாள் பறம்பின் சார்பில் பாரி களமிறங்கி ஆடுவான். இத்தனை இனக் குழுக்களை அழித்தொழித்த மூவேந்தர்களின் பகைமுடிக்க வஞ்சினம் உரைப்பான்.

கொற்றவைக்கூத்தில் பாண்டியனால் அழிக்கப்பட்ட அகுதையின் கதை, சோழனால் அழிக்கப்பட்ட செம்பாதேவியின் கதை, சேரனால் அழிக்கப்பட்ட நாகர்குடியின் கதை என்று ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதையைக் கேட்ட கபிலரால் அவலத்தைத் தாங்கமுடியவில்லை. அழிக்கப்பட்ட இனக்குழுக்களின் வம்சாவளிகள் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்ற உண்மையே அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. அக்கதையைப் பாடும் மனிதர்கள் வரலாற்றிலிருந்து இறங்கிவந்து பாடுவதுபோல் இருந்தனர். உண்மையின் வெக்கை தாங்காமல் நிலைகுலைந்து படுத்தார் கபிலர்.

உடல்நலம் குன்றிய கபிலரால் கொற்றவைக் கூத்தில் பாதிநாள்கள்கூடக் கலந்துகொள்ள முடியவில்லை. கூத்து முடிந்த பின்னும் கபிலரால் பலநாள்கள் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.

இதே காலத்தில் பாண்டியப்பெருவேந்தன் குலசேகரப்பாண்டியன் மகன் பொதியவெற்பனுக்குத் திருமண ஏற்பாடு நடக்கத்தொடங்கியது. யவனத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் கடல்வணிகம் மிகவும் செழிப்புற்றிருந்த அந்தக் காலத்தில் வணிகர்களின் செல்வமும் செல்வாக்கும் வேந்தர்களுக்கு இணையாக வலிமை பெற்றிருந்தன. கடல்வணிகர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட சாத்துக்கள் என்ற அமைப்பின் தலைவனாக இருந்தான் பெருவணிகன் சூழ்கடல் முதுவன். அவன் மகள் பொற்சுவையைப் பொதியவெற்பனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். மாமதுரை திருமண விழாவுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அப்பேரழகியின் காதல் கண்ணீரால் கரைக்கமுடியாத ஒன்றாக ஆழ்மனதில் நிலைகொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

பறம்பு நாட்டின் மலையடிவாரத்தில் இருப்பது வெங்கல் நாடு. அந்நாட்டை ஆளும் சிற்றரசர் மையூர்க்கிழார். பாண்டிய வேந்தனுக்கு மிகவும் விசுவாசமாக நடந்து கொள்பவர். உலகமே போற்றி வியக்கப்போகும் பாண்டிய இளவரசனின் திருமணத்துக்கு யாரும் தராத சிறந்த பரிசொன்றைத் தரவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்நிலையில் மழைவெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஒரு அரிய வகையான உயிரினத்தை உழவன் ஒருவன்  மையூர்க்கிழாரிடம் காட்டுகிறான்.

பார்க்கவே சற்று அருவருப்பாக இருக்கும் இது என்னவகையான உயிரினம் எனச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், அங்கிருந்த பாணர் கூட்டத்தலைவன் சொல்லுகிறான். “இதுதான் பாரியின் கொற்றவைக்கூத்தில் குறிசொல்லும் தேவவாக்கு விலங்கு.” 

மையூர்க்கிழார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இதற்கிடையில் மதுரையில் திருமணத்துக்காகக் கட்டப்பட்டுவரும் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க கொத்தர்களை அனுப்பச்சொல்லி பேரரசரிடமிருந்து உத்தரவு வந்தது. உத்தரவை ஏற்று, புதிய கொத்தர்களை அழைத்துச்செல்லுமாறு தன் மகன் இளமருதனிடம் சொல்லுகிறார்.

இளமருதன் புறப்படுகையில் அவனது கையில் பாரிக்குக் குறிசொல்லும் தேவவாக்கு விலங்கினைக் கொடுத்து அனுப்புகிறார் மையூர்க்கிழார். “பேரரசரிடம் கொடு. இது அவருக்கு மிகப்பெரிய மகிழ்வைக் கொடுக்கும்.”

இளமருதன் தேவவாக்கு விலங்கினை எடுத்துக்கொண்டு, கொத்தர்களையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குள் நுழைகிறான். அது என்ன விலங்கு என்று பலரும் கேட்க, தேவவாக்கு விலங்கென்றும் தேவாங்கு விலங்கென்றும்  அழைக்கின்றனர்.

திருமணத்துக்காக மூன்று பெரும் மாளிகைகள் கட்டப்பட்டு வந்தன. கார்காலப் பள்ளியறை, வேனிற்காலப் பள்ளியறை, அரச குடும்பத்தினர் மட்டும் ஆடிப்பாடி மகிழும் பாண்டரங்கம். இம்மூன்று மாளிகையின் மேற்கூரைகளிலும் வானியல் அமைப்புகள் ஓவியமாக வரையப்பட்டன.

கார்காலப் பள்ளியறையில் பொதியவெற்பன் பிறந்தபொழுதிருந்த வானியல் அமைப்பும் வேனிற்காலப் பள்ளியறையில் பொற்சுவை பிறந்தபொழுதிருந்த வானியல் அமைப்பும் பாண்டரங்கத்தில் வைகையில் வெள்ளப் பெருக்கெடுக்கும் காலத்தைக் குறிக்கும் வானியல் அமைப்பும் வரையப்பட்டன. அப்பணியினை அரண்மனையின் தலைமை வானியல் நிபுணன் அந்துவன் மேற்பார்வை செய்துவந்தான்.

வானியல் அறிவின் பேராசான் திசைவேழர் பொதிகைமலையிலிருந்து திருமண விழாவுக்காக மதுரைக்கு வருகை தந்தார். அவரின் மாணவர்களில் ஒருவன்தான் அந்துவன். அவனது மேற்பார்வையில் வரையப்பட்ட வானியல் அமைப்புகளைப் பார்வையிட்ட திசைவேழர் அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, கடுங்கோபத்தை வெளிப்படுத்தினார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

அத்தவறுகளைச் சரிசெய்து வரைந்து முடிக்கும் வரை அந்துவன் அம்மாளிகையை விட்டு வெளியேறவில்லை. அந்தக்காலம் முழுவதும் இளமருதன் கொண்டுவந்த தேவாங்கினைத் தனது அருகிலே வைத்துக்கொண்டான். திருமணப்பரிசாகக் கொடுக்கும்வரை இது இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான். மேற்கூரையில் புதிய ஓவியத்தை ஓவியர்கள் திரும்ப வரைந்து முடிக்கும் வரை அந்துவனின் பொழுதுபோக்காக கூண்டில் அடைக்கப்பட்ட அந்தத் தேவாங்கு விலங்கே இருந்தது.

பணி நிறைவுபெறும் பொழுதுதான் அந்தத் தேவாங்கு விலங்கின் சிறப்புத்தன்மையை அவன் கண்டறிந்தான். அவன் கண்டறிந்த உண்மையைத் தன் ஆசான் திசைவேழரிடம் சொன்னபொழுது அவர் நம்பவே இல்லை. அவரும் சோதித்து அது உண்மைதான் என்பதை அறிந்தார். அந்தத் தேவாங்கு எல்லாதிசைகளிலும் நடக்கிறது. ஆனால், உட்காரும்பொழுது மட்டும் வடதிசை நோக்கியே உட்காருகிறது. எத்தனை முறை உட்கார்ந்தாலும் வடதிசை நோக்கியே உட்காருகிறது. இது இயற்கையின் அதிசயத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

செய்தி பேரரசருக்குத் தெரிவிக்கப்பட்டது. தேவாங்கின் அதிசய ஆற்றல் கண்டு பேரரசர் திகைத்துப்போனார். குறிப்பாக கடற்பயணத்தில் திசை அறியமுடியாத சூழலில்தான் பல கலங்களை நாம் இழக்கிறோம். இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு விலங்கு கடல் பயணத்துக் கான அடிப்படைத் தடைகளைத் தகர்த்துவிடும். திசையை ஆள்பவனே கடலை ஆளமுடியும். இவ்விலங்கு திசையின் அறிவிப்பாளனாக இருக்கிறது எனச்சொல்லி, பெரும் மகிழ்வை வெளிப்படுத்தினார் சூழ்கடல் முதுவன்.

இது பாரியின் பறம்புநாட்டில் உள்ள கொற்றவைக் குறிசொல்லும் விலங்கு என்பது தெரியவந்தது. இவ்விலங்கின் முக்கியத்துவம் கடலில்தான் இருக்கிறது என்பதை பாரியிடம் பேசிப் புரியவைத்துப் பெறமுடியுமா என்று ஆலோசனை நடத்தினர். என்ன விலை கொடுத்தேனும் இதனைப் பெறவேண்டும் என்று துடித்தனர். ஆனால், பாரியிடம் வணிகம் பேசமுடியாது. பறம்பின் இலைதழைகளைக்கூட எடுத்துச்செல்ல பறம்பின் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியிருக்க கொற்றவைக் குறிசொல்லும் தேவவாக்கு விலங்கை எப்படிக் கொடுப்பார்கள். இதனைக் கொண்டுவர வாய்ப்புள்ள அனைத்து வழியையும் சிந்தித்து, கடைசியில் ஒரு வழியைக் கண்டறிகின்றனர்.

திருமணவிழாவின் தொடக்கக்கட்டத்தில் சூல்கடல் முதுவனுக்கு மிகச்சிறந்த பரிசொன்றைத் தரவேண்டுமெனப் பேரரசர் விரும்பினார். உலகம் முழுவதும் வணிகம் செய்யும் வணிகர்குலத்தலைவனுக்குக் கொடுக்கும் பரிசு ஆகச்சிறந்ததாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தபொழுது பாண்டிய நாட்டின் தலைமைத்தளபதி கருங்கைவாணன் ஓர் ஆலோசனை சொன்னான். சூல்கடல் முதுவனிடம் மிகச்சிறந்த கப்பல் ஒன்று இருக்கிறது. அக்கப்பலைப் பிற கப்பல்களைப் போல எல்லாத் துறைமுகத்திலும் நிறுத்தி அடிமைகளை மாற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. யவனர்கள் பயன்படுத்தும் கருங் கொள்ளையர் களைப்போன்ற ஒப்பிட முடியாத தடந்தோள் அடிமைகள் கிடைத்தால் அவர் கப்பலை எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டுசெலுத்த முடியும். அவ்வளவு வலிமைகொண்டவர்கள் வடக்குத்திசை மலையில் இருக்கிற திரையர்கள்; அவர்களை வென்று அடிமையாக்கி சூழ்கடல் முதுவனுக்குப் பரிசாக வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. கருங்கைவாணன் தந்திரமிக்க பெரும்போரை நடத்தி, திரையர்களை அடிமையாக்கி மதுரைக்குக் கொண்டுவந்து சேர்த்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

இந்நிலையில்தான் தேவாங்கினைப் பாரியின் பறம்பிலிருந்து கொண்டுவர என்ன வழி என்று ஆராய்ந்து ஒருவழியைக் கண்டடைந்தனர். அடிமையாக்கப்பட்ட திரையர்களின் குலத்தலைவன் காலம்பனிடம் பேரம்பேசினர். பறம்புமலையிலுள்ள தேவாங்கு விலங்கினை எடுத்துவந்தால் உன் குலத்தையும் உன்னையும் விடுதலை செய்வோம் என்றனர்.

திரையர்களும் பறம்புமலை வேளிர்களும் பல தலைமுறைக்கு முன்னர் மணவுறவு கொண்டவர்கள். ஆனால், இந்த மணவுறவு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடரவில்லை. காரணம், இவ்விரு மலைப்பகுதிகளும் பெருந்தொலைவு இடைவெளியோடு இருந்தன. காலம்பன் பறம்புநாட்டைக் கண்கொண்டுகூடப் பார்த்ததில்லை. ஆனாலும் ‘எம்முன்னோர் மணவுறவு கொண்டிருந்த பறம்புக்கு எதிராக நாங்கள் எதனையும் செய்யமாட்டோம்; எங்களின் உயிரே போனாலும் கவலையில்லை’ என்று உறுதியாக மறுத்தபொழுது, அந்தக் குலத்தின் பெரியமனிதர் ஒருவர் காலம்பனை சமாதானப்படுத்தினார்.

பறம்பின்மக்கள் யாரையும் தாக்கச் சொல்லவில்லை. அந்தச் சிறுவிலங்கைத்தான் எடுத்துவரச் சொல்லுகிறார்கள். அதனால் நமது குலமே விடுவிக்கப்படும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை என்கிறார். வேறுவழியில்லாமல் காலம்பன் முப்பது வீரர்களை அழைத்துக்கொண்டு பறம்பின் மலைக்குள் நுழைகிறான்.

காடு பற்றிய பேரறிவுகொண்ட திரையர் கூட்டம் மூன்று மலைகளைக் கடந்து கொற்றவைக்கூத்து நடக்கும் களத்துக்குப்போய், ஐந்துகூடை நிறைய தேவாங்கு விலங்கைப் பிடிக்கின்றனர்.

காடறியச் செய்வதற்காகப் பதினொரு மாணவர்களை அழைத்துக்கொண்டு கொற்றவையை வணங்க அவ்விடம் வருகிறான் பறம்பின் ஆசான் தேக்கன். மாணவர்களின் கூருணர்வு மரக்கூட்டத்துக்குள் இருப்பவர் களைக் கண்டறிகிறது. அவர்களை விரட்டத் தொடங்குகிறான் தேக்கன். சின்னஞ்சிறு மாணவர்களை வைத்துக்கொண்டு மிகவலிமையான எதிரிகளை விரட்டி ஓடுகிறான். அவர்கள் தேக்கனை அடித்து வீழ்த்திவிட்டு ஓடுகின்றனர். தேக்கன் விடவில்லை, ஆறு மாணவர்களை எவ்வியூருக்கு அனுப்பி, பாரியை வரச்சொல்லிவிட்டு, மீதம் இருப்பவர்களை வைத்துக்கொண்டு எதிரிகளை விடாது விரட்டிச்செல்கிறான். மாணவர்கள் காடறியும் பயிற்சிக்கான கசப்புச்சாற்றினை உண்டிருப்பதால் பேசமுடியாத நிலையில் இருந்தனர். பாரியிடம் நிலைமையை விலக்கிச்சொல்ல முடியவில்லை. தேக்கன் அழைத்துவரச் சொன்னதாக நள்ளிரவு வந்துசொல்கின்றனர்.

நிலைமையைப் பாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனாலும் மாணவர்களோடு சேர்ந்து அவன் தன்னந்தனியாகப் புறப்படுகிறான். மாணவர்கள் விடாது ஓடுகின்றனர். பாரி, ஆதிமலையைக் கடந்து இரண்டாங்குன்றை அடையும்பொழுது தேக்கனும் மற்ற மாணவர்களும் கடுந்தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளது தெரியவருகிறது. யாரோ தேவவாக்கு விலங்கினைத் தூக்கிக் கொண்டு போவதும் தெரிகிறது. அதே மாணவர்களை வைத்துக்கொண்டு காட்டுக்குள் விரட்டி ஓடுகிறான் பாரி.

பறம்புமலையில் செடி, கொடி, பறவை, விலங்கு என அத்தனையையும் பயன்படுத்தி, முப்பது பேர் கொண்ட வலிமைமிகுந்த எதிரிகளை வீழ்த்திமுடிக்கிறான் வேள்பாரி. இறுதியில் எதிரிகளின் தலைவன் காலம்பனும் பாரியும் தனித்து மோதுகின்றனர். இருவரும் நெறிபிறழா அறத்தோடு நின்று மோதுகின்றனர். அப்பொழுது அங்கு வந்துசேரும் தேக்கன் பாரியின் பெயரைச் சொல்லி சத்தமிட்டு ஓசை எழுப்புகிறான்.

அப்பொழுதுதான் காலம்பனுக்குத் தெரியவருகிறது, நாம் இவ்வளவு நேரமும் பாரியெனும் மாமனிதனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் என்று. பாரி என்ற சொல்கேட்ட கணம் தாக்குதலைக் கைவிட்டு, வணங்கி மண்டியிட்டான் காலம்பன்.

தனது குலம் காக்க தவறான முடிவெடுத்து விட்டேன் எனத் தன்னையே மாய்த்துக் கொள்ளத் துணிகிறான் காலம்பன். இல்லை, நாங்கள்தான் உங்களைக் கணிக்கத் தவறிவிட்டோம் என்று அவனிடம் மன்னிப்பு கோருகிறான் பாரி. இருவரும் வேதனையால் உழன்று மீள்கின்றனர். வீழ்த்தப்பட்ட வீரர்களை உயிர்பிழைக்கச்செய்யும் ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யத் தொடங்கினர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன?

பாண்டியனால் சிறைப்பிடிக்கப்பட்ட திரையர் குலம் தங்களுடன் இரத்த உறவுகொண்ட குலம். எனவே அவர்களை மீட்பதைத் தனது கடமையாகக் கருதினான் பாரி. காலம்பனோடு வந்தவர்களில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகாத வர்களோடு பறம்பின் வீரன் நீலனையும், அவனோடு ஆறு வீரர்களையும் இணைத்து, தேவவாக்கு விலங்கினைக் கொடுத்தனுப்பு கிறான்.

காலம்பன் தலைமையிலான குழு தேவவாக்கு விலங்கோடு அரண்மனை திரும்பியதும் மகிழ்வு கரைபுரண்டு ஓடுகிறது. அவ்விலங்கினை எப்படிப் பயன்படுத்துவது என்று தீவிரமாகத் திட்டமிட்டனர். காலம்பனின் குலத்தை விடுதலை செய்து உத்தரவிடும் வேந்தன், பெரும்வீரர்களான காலம்பன் உள்ளிட்டவர் களை யவனர்களுக்கு அடிமைகளாகக் கொடுக்கிறான்.

விடுதலையானவர்களைப் பறம்புநாட்டுக்குப் போகச்சொல்கிறான் காலம்பன். திரையர் கூட்டத்தினர், வைகையாறு கடல்புகும் இடத்திலிருக்கும் வைப்பூர்த் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்படுகின்றனர். தேவாங்கு விலங்கும் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. மூன்று மாதத்துக்கும் மேலாக நீடித்த திருமண விழாவினை முடித்துக்கொண்டு யவன வணிகர்கள் நாடு திரும்ப வைப்பூர்த் துறைமுகத்தில் குழுமியிருந்தனர். பெரும் வணிகர்கள் பலரும் அங்கிருந்தனர். வைப்பூர்த் துறைமுகத்தில் நிற்க இடமின்றித் தத்தளித்துக்கொண்டிருந்தன கலங்கள்.

நெடும்பயணத்துக்குத் தயாராகும் யவனக்கப்பலின் மீது அடிமைகளாக்கப்பட்ட திரையர்கள் மேலேற்றப்பட்டனர். பொருத்தமான நேரத்தில் பறம்பின் வீரர்கள் தங்களின் அபார ஆற்றலால் கைவிலங்குகளை உடைத்தெறிகின்றனர். தங்களின் கைவசமிருந்த மாபெரும் ஆயுதங்களான செடிகொடிகளைக் கொண்டு கலங்களுக்குத் தீயிடத் தொடங்கினர்.

யவன வணிகர்களும் தமிழ் பெரும் வணிகர்களும் விடைபெறப்போகும் பெரும் விருந்தில் இருந்தபொழுது அவர்களின் கலங்கள் பற்றியெறியத் தொடங்கின. ஒன்றினைத்தொட்டு ஒன்றாகத் தீப்படர்ந்து மேலேறியது. ஒரு துறைமுகம் முழுமுற்றாக எரிவதை உலகின் பெருவணிகர்கள் எல்லாம் ஒன்றுகூடிப் பார்த்தனர்.

தப்பித்த திரையர் கூட்டம், தேவாங்கு விலங்கினையும் மீட்டுக்கொண்டு பறம்பு நோக்கிப் புறப்பட்டது. கலங்களில் பற்றிய நெருப்பு வானுச்சியைத் தொட்டபொழுது வெளியெங்கும் பரவிய சுடரின் ஒளிக்குள்ளிருந்து காலம்பனும் நீலனும் சீறிப்பாய்ந்து வெளியேறினர்.

தன் மைந்தர்களைக் கரம் நீட்டி அழைத்துக்கொண்டது பாரியின் பறம்பு.