
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
பொழுது நள்ளிரவைக் கடந்தது. துறைமுகம் மிகப்பரபரப்பாய் இருந்தது. யவனர்களின் கோட்டையிலிருந்து எழும்பிய இசைக்கருவிகளின் ஓசை திசையெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. விருந்தின் கூச்சல் கோட்டைச்சுவர் தாண்டி வெளியெங்கும் வழிந்தது. உச்சத்தை அடைந்த யவனர்களின் இசையோசை முடிந்ததும் கூத்துப்பறையின் ஓசை தொடங்கியது. பாண்டிய அழகிகள் ஆட்டத்தில் இறங்கி விட்டனர் என்பது புரிந்தது. விருந்தில் விடைபெறும் தருணம்தான் வெறிகூட்டும் ஆட்டம் நிகழும் அல்லது அப்பொழுதுதான் மனம் புதியதாய் ஒன்றை அடைய முன்னிலும் அதிகமாய் ஏங்கி நிற்கும். அதனால்தான் விருந்துகள் பின்னிரவுக்குப் பின்னர் சூடுபிடிக்கின்றன. இரவும் இசையும் மதுவும் ஒற்றைக்கோட்டில் வடம்பிடித்து நிற்க, ஆண்களும் பெண்களும் வெளவாலென அதைப்பற்றித் தொங்கிக்கொண்டிருக்கின்றனர். மோகம் எதுவொன்றையும் தலைகீழாக மாற்றுவதில்லை. தலைகீழாக மாறும் பொழுதுதான் அது இயல்புகொள்கிறது.
ஹிப்பாலஸின் நாவாய், துறைமுகத்தில் பெருவீரனைப்போல் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. மீகான் நின்றுபார்க்கும் அதன் கூம்புமாடத்தின் கீழே திரையர்கள் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். அவர் களிடமிருந்து சற்று தள்ளி யவனக் காவல்வீரன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். காவல்வீரர்களின் கவனமெல்லாம் நாவாயில் பொருள்களை ஏற்றும் பணியாளர்களின் மீதே இருந்தது. கைகளில் பெருந்தடிகொண்டு பிணைக்கப்பட்டுள்ள திரையர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையெதுவும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.

குத்தவைத்தபடி உட்கார்ந்திருந்த நீலன் சற்றே தலைதூக்கிப் பார்த்தான். அவனுக்கு நேரெதிரே வானில் மெல்லிய மூன்றாம்பிறை நிலவு கண்சிமிட்டியது. பறம்பின் செய்தியை அது ஒளிசிந்தி அவனுக்குச் சொல்லுவதுபோல் இருந்தது. பிறைநிலவைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். நினைவுகள் எங்கெங்கோ ஓடிமறைந்தன. பிற விண்மீன்களையும் பார்த்தான். ‘எல்லோரும் இங்கே வந்து விட்டீர்களா?’ என்று மனம் கேட்டபொழுது உதட்டோரம் சிரிப்பொன்று மேலெழுந்தது.
காலம்பன் நீலனையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்றாம்பிறை நிலவைப் பார்த்தபடி எழுந்தான் நீலன். காவல்வீரர்கள் வெகுதொலைவில் பொருள்கள் ஏற்றப்படு வதையே பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்த நீலனின் கண்ணில் முதலிற்பட்டது வைகையின் நடுவில் அசைந்தபடி கடல்நோக்கிப் போகும் கப்பல் ஒன்று. அதைச் சற்றே கூர்ந்துபார்த்தான். விளக்கொளியால் கப்பலின் மேல்தளத்தில் இருப்பனவற்றை அவனால் துல்லியமாகப் பார்க்க முடிந்தது.
வேலையாள் ஒருவன் மீகான் நிற்கும் கூம்புமாடத்தின் மேல் கூண்டு ஒன்றினை வைத்துவிட்டுக் கீழிறங்கிக்கொண்டிருந்தான். நீலன் அதை உற்றுக் கவனித்தான். தேவவாக்கு விலங்கைக் கொண்டுசெல்ல வடிவமைக்கப் பட்ட கூண்டுதான் அது என்பது பார்த்ததும் புலப்பட்டது.
இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்தபடி கீழே அமர்ந்தான். அமர்ந்த வேகத்தில் அவனது நாக்குக் குழன்று சிற்றொலியை எழுப்பியது. அணில் எழுப்பும் ஒலிபோல் அது இருந்தது. திரையர்கள் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தனர். காலம்பன் நீலனின் செயலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்திருந்த பறம்பின் வீரர்கள் இருவருக்கான ஒலிக்குறிப்பு அது. அவர்கள் தங்களுக்கான உத்தரவு கிடைத்ததும் வேலையைத் தொடங்கினர். அவர்கள் கழுத்தை ஒட்டி வேர்க்கொடி ஒன்றினைக் கட்டியிருந்தனர். கீழ்த்தாடையைக் கழுத்தோடு தாழ்த்தி நாக்கை நீட்டி அவ்வேர்க்கொடியைப் பற்ற நினைத்தான் பறம்பின் வீரன். அது உள்கழுத்தில் பதிந்திருந்ததால் எளிதில் நாக்கின் நுனிக்குச் சிக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றான். சிறிதுநேரத்தில் நாக்கின் நுனியில் வேர்க்கொடி சிக்கியது. மெல்ல அதனை நுனிநாக்கிலேந்தி உள்வாய்க்குக் கொண்டுவந்தான்.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று திரையர்களுக்குப் புரியவில்லை. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பறம்பின் வீரர்கள் இருவரும் கழுத்தில் சுற்றியிருந்த கொடியைப் பல்லால் கடிக்கத்தொடங்கினர். அது நத்தைச்சூரியின் காய்ந்த இலைகளைக்கொண்டு திருகிக் கட்டப்பட்ட கொடி. நத்தைச்சூரியை வாயிலிட்டு மென்ற ஒருவன் கல்லைக்கூடக் கடித்து நொறுக்கிவிடுவான். அதன் சாறு உருவாக்கும் வீரியத்துக்கு இணையில்லை.
நத்தைச்சூரியின் இலைகளை மென்று அதன் சாறு பல்லிடுக்கில் இறங்கத்தொடங்கியதும் மாற்றங்கள் தெரியத்தொடங்கின. பல் ஈறுகளில் கங்கினைக் கொட்டியதுபோல அவர்கள் துடிக்கத் தொடங்கினர். எலியின் வீறுகொண்ட வகையான செம்மூக்கனைப்போல அவர்கள் மாறினர். மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களை நறநறவெனக் கடித்து நொறுக்கி விடுவதுபோல் இருந்தன. கடவாய்ப் பற்கள் இலையின் கடைசிச்சாறு இறங்கும் வரை அரைத்துக்கொண்டே இருந்தன.
எந்தக்கணம் அது தொடங்கப்போகிறது என்பதைக் காண நீலனின் கண்கள் ஆர்வத் தோடு காத்திருந்தன. ஒரு கணப்பொழுதில் அது தொடங்கியது. அவன் முதலில் தன் கைகளில் பூட்டப்பட்டிருந்த மரக்கட்டையைக் கடிக்கத் தொடங்கினான். மிகக்கடினமான மரங்களைச் சோளத்தட்டையைக் கடித்துத் துப்புவதுபோலத் துப்பினான். நிகழ்வதைக் காலம்பன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
செம்மூக்கனின் வேகம் கடிக்கத் தொடங்கிய பிறகுதான் பலமடங்கு அதிகமாகும். மற்ற எலிகள் மண்ணின் மேலே எவ்வளவு வேகமாக ஓடுமோ அதேபோல செம்மூக்கன் மண்ணுக்குள் கரகரவெனக் கடித்துத் துளையிட்டுக் கொண்டே ஓடும் என்பார்கள். கப்பலின் மேலே இருந்த இரு செம்மூக்கன்களும் தமக்கு விலங்காய் இடப்பட்ட கைக் கட்டைகளைக் கடித்துத் துப்பத் தொடங்கியதும் வேகம் பலமடங்கு அதிகமானது. தனது கைக்கட்டையைக் கடித்து இரு துண்டாக்கியதும் நீலனை நோக்கிப் பாய்ந்து வந்தான் ஒருவன். நீலனோ காலம்பனைக் கைகாட்டினான். வந்தவன் திரும்புவதற்குள் மற்றொருவன் காலம்பனின் கைக்கட்டையைக் கடித்துக் கொண்டிருந்தான். அவன் முடிப்பதற்குள் நீலனின் கைக்கட்டையைக் கரகரவெனக் கடித்துத் துப்பி இருகூறாக்கி முடித்தான். அடுத்தடுத்து ஒவ்வொரு வீரனின் கைக் கட்டையையும் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தனர். நத்தைச்சூரியின் வீரியம் குறையும் முன் கடித்தாக வேண்டும். நேரமாக ஆக அதன் வீரியம் குறையத்தொடங்கும். அவ்வாறு குறைந்துவிட்டால் கடிப்பவனின் பல்வலி தாங்க முடியாததாகிவிடும்.
ஆனால், இப்பொழுது இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இக்கப்பலையே கடித்து இருகூறாக்கிவிடுவார்கள். அவர்களின் உடலில் ஏறியிருந்த வன்மம் நத்தைச்சூரியையும் விஞ்சுவதாக இருந்தது. செம்மூக்கனின் வேகம் உச்சத்தில் இருந்தது. காலம்பன் ஓர் அதிசயத்தைக் கண்முன்னால் பார்த்துக் கொண்டிருந்தான். வேலைமுடிந்தும் செம்மூக்கன்களின் வேகம் குறைய வில்லை. அவர்கள் நாவாயின் விளிம்பைக் கடித்துத் தங்களை ஆசுவாசப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.
ஆனால், வேலை இனிமேல்தான் தொடங்கப்போகிறது. இப்பொழுது உடலில் ஏறிநிற்கும் வீரியத்தை எதுகொண்டும் குறைக்க முடியாது. பறம்பின் மற்ற மூன்று வீரர்களும் இடுப்புத்துணியோடு இணைத்துக் கட்டப் பட்டிருந்த நார்க்கொடியை உருவி எடுத்தனர். அவையெல்லாம் பால்கொறண்டியின் காய்ந்த சக்கைகளைக் கயிறாகத் திரித்துக் கட்டப் பட்டவை. கயிறுகள் எல்லாம் சிறு சிறு அளவாகப் பிய்க்கப்பட்டு ஆளுக்கு ஒரு பகுதி கொடுக்கப்பட்டன. ஒருவன் அருகிலிருந்த விளக்கில் ஒரு கொடியைப் பற்ற வைத்தான்.

தீப்பற்றிப் பிடித்ததும் எல்லோர் கைப்பிடிக்கும் நெருப்பு பரவியது. நாவாயின் விளிம்புக்கட்டையைத் தாண்டி இருபது பேரும் நீருக்குள் குதித்தபொழுது எல்லோரின் கையிலும் பற்றியெரியும் பால்கொறண்டி இருந்தது. பொருள்கள் ஏற்றப்படுவதிலேயே கவனம்கொண்டிருந்த காவல் வீரர்கள் ஓசைகேட்டுத் திரும்பினர். கைக்கட்டையோடு நீரிலே குதிக்கும் அடிமைகளை நினைத்து பரிதாபத் தோடு எட்டிப்பார்க்க வந்தனர்.
குதிக்கும்பொழுது கையில் இருந்த பால்கொறண்டியை விட்டுவிட்டு நீரில் மூழ்கியவர்கள், மீண்டும் எழுந்தபொழுது எரிந்தபடி மிதந்துகொண்டிருந்த பால் கொறண்டியைக் கையிலேந்தினர். மற்ற மூன்று பறம்புவீரர்களும் கழுத்தில் இருந்த தாயத்தைப் பிய்த்தெடுத்து வாயில்போட்டு மென்றனர். தாயத்துக்குள் இருந்தவை எல்லாம் பொறித்துகள்கள்.
நன்றாக மென்ற பின் பால்கொறண்டியில் எரியும் நெருப்போடு சேர்த்து மூச்சிழுத்து பொறித்துகளை நாவாய்களின் மீது உமிழ்ந்தனர். பொறித்துகளில் நெருப்புப்பட்டால் போதும் அது ஒருபொழுதும் அணையாது. கங்குகளை உருக்கிவைத்துள்ள மணல்துகள்கள் போன்றவை அவை. அது நெருப்பை எளிதில் அணையவிடாது கனன்றுகொண்டே இருக்கும். நீரில் மிதந்து ஊறிய கட்டைகள் முழுமையும் பற்றிப்பரவும் வரைகூடப் பொறித்துகளின் தழல் அணையாது. ஒருவன் மாற்றி ஒருவன் ஊதித்தள்ள, பால்கொறண்டியின் நெருப்பு கலம்தோறும் பற்ற, நீரில் ஊறிக்கிடக்கும் அடிமரங்களைத் தீயின் நாவுகள் தேடித் துழாவின. வைகையில் மிதந்த இளங்காற்று துழாவும் தழலுக்குத் தோள்கொடுத்து உள்நுழைத்தது. எல்லாக் கலங்களின் பின்புற அடிவாரங்களிலும் தீவைக்கும் பணி படுவேகமாக நடந்துகொண்டிருந்தது.
கொண்டாட்டங்களின் பேரிரைச்சலும் வேலைகளின் மும்முரமுமாக துறைமுகம் ஆட்களின் நெரிசல் தாளாமல் இருந்தபொழுது, கலங்களின் பின்புற அடிவாரங்களைக் கங்குகள் பற்றி மேலேறப் பொறித்துகள்கள் வழிசெய்து கொண்டிருந்தன. கடல் காற்று வைகை யாற்றோடு உள்நுழைந்து வீசிச்சென்ற பொழுது கலங்களின் உள்கட்டைகளில் தீயின் வேர்கள் ஆழப்பதியத் தொடங்கின.
பெரியது, சிறியது, யவனர்களுடையது, தமிழ் வணிகர்களுடையது என எந்த வேறுபாட்டுக்கும் இடமில்லை. எல்லாவற்றின் அடிக்கட்டைகளையும் பால்கொறண்டிகள் முத்தமிட்டுத் தழுவிச்சென்றன.
இழுத்தணைத்து முத்தம் மட்டும் இட்டுவிட்டு மீள முடிவதில்லை, மீளமுடியாத காமம் உள்வாங்கி இழுத்துக்கொண்டிருந்தது. இன்றிரவு கப்பல் ஏறினால் கரைகாண மாதங்கள் பல ஆகும். எனவே யவனக் கடலோடிகள் முழுவிசையோடு இரவு முழுவதும் இயங்கினர். பாண்டியநாட்டு அழகிகள் ஆடும் இருமுகப்பறையின் அதிர்வாட்டத்தைப் பார்க்க வாய்ப்பது எளிதல்ல; ஒரு கட்டத்தில் முசுகுந்தரே மயங்கிக் கிறங்கிக் களம் புகுந்தார். மகிழ்ச்சியை வேரோடு பிய்த்தெடுக்கும் வெறிகொண்டு நிகழ்ந்தது விருந்து.
விருந்தென்பது இசையும் ஒளியும் வண்ணமும் மட்டும் கொண்டதன்று; இவை எல்லாவற்றையும் மகிழ்ந்து ரசிக்க முடியாத மயக்கமும் கொண்டது. இருமாதங்களுக்கு மேலாக நடந்து முடிந்த பேரரசின் மணவிழாவின் நிறைவை இவ்வளவு சிறப்பாக உலகில் வேறுயாரும் கொண்டாட முடியுமா என்ற ஐயம் ஹிப்பாலஸ்ஸுக்கே உருவானது. அதற்குக் காரணம், கோட்டைக்குள்ளிருந்த வெளிச்சத்தையும் ஓசையையும்விடக் கோட்டைக்கு வெளியே அதிக வெளிச்சமும் ஓசையுமாக அவ்விரவு இருந்தது. வியப்பு எல்லையற்றதானது.
நிலைகொள்ளமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் தங்கள் தலைவர்களிடம் செய்தியைச் சொல்ல வீரர்கள் அஞ்சினர். கோட்டைக் கதவினை முழுமையாகத் திறந்துவிட்டபொழுதுதான் நிலைமையின் விபரீதம் புரியத்தொடங்கியது.
கேட்கும் ஓசைக்குள் கதறும் குரல் மேலெழுந்தது. ஹிப்பாலஸ்ஸின் கண்ணிற்பட்ட வெளிச்சத்துக்குக் காரணம், இணையில்லாத உயரங் கொண்ட அவனது கப்பலின் பாய்மரம் சுழன்று எரிந்ததுதான். ஏறிய மயக்கம் கணப்பொழுதில் கீழிறங்கியது. பேரதிர்ச்சி கொண்டு துறைமுக மேடையை நோக்கி ஓடினான் ஹிப்பாலஸ். அப்பொழுதும் நிலைமையின் விபரீதம் முசுகுந்தருக்குப் புரியவில்லை. தேறலின் மயக்கம் எளிதில் மீளவிடாது. அதையும் மீறி ஹிப்பாலஸ் மீண்டதற்குக் காரணம் எரிந்துகொண்டிருந்தது கப்பலன்று; அவனது இன்னோர் உயிர்.

எங்கும் கூக்குரல் மேலெழுந்தது. உள்ளும் புறமுமாக வீரர்கள் பதைபதைக்க ஓடினர். துறைமுகத்தின் மேடைப்பகுதியை நெருங்க முடியாதபடி தீயின்சுடர் வாரிச்சுழற்றிக் கொண்டிருந்தது. எல்லா நாவாய்களிலும் முழு அளவு பொருள்கள் ஏற்றப்பட்டுவிட்டதால் நெருப்பு இணைசொல்ல முடியாத வீச்சோடு மேலேறிப் படர்ந்தது. கடல்காற்றில் பற்றிய பாய்மரம் நெருப்போடு அசைந்தாடியது. ஒன்றினைத்தொட்டு ஒன்றாக, கிழக்கிலிருந்து மேற்குவரை எல்லாக் கலங்களிலும் தீப் பற்றிப் பரவியது.
பெரும்மரத்தின் அடிவாரத்தில் கறையான் புற்று சென்னிறச் சிறுகோடுபோலப் பற்றி மேலேறுமே, அப்படித்தான் கலங்களின் அடிவாரத்திலிருந்து ஏதோ ஒரு முனையில் தீயின் நாவுகள் மேலேறிக்கொண்டிருந்தன. மேல்தளத்துக்கு அவை வந்து சேர்ந்ததும் காற்றோடு போட்டியிட்டுப் புரண்டு எழுந்தன.
மேல்தளமெங்கும் பெருவடக் கயிறுகள் கிடப்பதால் தீயின் அடர்வேகம் வலிமை கொண்டு உள்ளிறங்கியது. கலங்களின் ஓரப்பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி வந்த தீ, இப்பொழுது மையப்பகுதியில் மேலிருந்து கீழே செல்லத் தொடங்கியது. தீ சுழலத் தொடங்கியது. மண்ணுக்குள் நீர் இருப்பதுபோல, மரத்துக்குள் தீ இருக்கும். மரம் தீயாய் மாறும் ஆவேசம் அளவிட முடியாதது. அது காலகாலமாக அடக்கிவைக்கப்பட்ட ஒன்றின் வெளிப்பாடு. அளவிட முடியாத சீற்றத்துடனே இருக்கும்.
ஹிப்பாலஸ் தன் கண்முன்னால் தனது நாவாய் பற்றியெரிவதைப் பார்த்தபடி நின்றிருந்தான். யவனவீரர்கள் தங்கள் தளபதியின் நாவாயையாவது காப்பாற்றிவிடலாமெனப் பெருமுயற்சி செய்தார்கள். எதுவும் நடக்கவில்லை. கலங்களை நெருங்க முடியாமல் தவித்தவர் களுக்கு, நேரம் செல்லச்செல்ல கரையையே நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேல்மரங்கள் வெடிக்கத் தொடங்கின. கொடிமரங்கள் சரிந்து வீழ்ந்தன. பாய்மரத்துணி காற்றெங்கும் சாம்பலாய்ப் பறந்து கொண்டிருந்தது.
மற்றவர் அறியாவண்ணம் முன்னிரவே இரு கப்பல்களில் தேவாங்கினை ஏற்றி அனுப்பி வைத்த சூழ்கடல் முதுவன் நள்ளிரவுக்குப் பின்னர்தான் விருந்துக்கு வந்துசேர்ந்தான். கடைசியாக வந்து தேறலுக்குள் ஆழப் புதைந்தான். அவனது மகிழ்வு எல்லோரையும் விட எல்லையற்றதாக இருந்தது. அருந்தும் குவளைக்கு விளிம்புண்டு. ஆனால், தேறலுக்கு அதுவுமில்லை என நம்புபவன் அவன்.
தேவாங்குகள் இருக்கும் பிற கலங்கள் துறைமுகத்தில்தான் நிற்கின்றன. யவனர்களின் நாவாய்கள் எல்லாம் புறப்பட்ட பின் இறுதியாக அதனை நகர்த்துவோம் என்று முடிவுசெய்த சூழ்கடல் முதுவன் ஆடல் அழகிகளோடு உள்ளறைக்குப் போனான். வெளியெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்த பெருங்கூச்சல் எதுவும் அவனை எட்டவில்லை.
இருமுகப்பறையின் இன்பத்தைத் தனித்து அவன் அனுபவித்துக்கொண்டிருந்தான். பெருங்கலங்கள் வெடிப்புற்றுத் தெறிக்கும் ஓசைகூட அவனைச் சென்றுசேரவில்லை. எழும் கரும்புகையால் மூச்சடைத்த பொழுதுதான் வெளிவரத் துணிந்தான். அப்பொழுது அவனது கலமான கடற்கோதையை நெருப்பு முழுமையாக அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. நீரில் அசையும் கலத்தின் மீது நின்று ஆடியது நெருப்பின் சுடர்.
கிழக்கு முனையிலிருந்து ஒருவர்பின் ஒருவராக எல்லோரும் கரையேறினர். கைகளில் இருகூறாகத் தொங்கிக் கொண்டிருந்த கைக்கட்டைகளைக் காலம்பன் பிய்த்து எறிந்தான். பூட்டப்பட்ட கட்டைகளிலிருந்து விடுதலையான எல்லோரும் கைகளை வீசியபடி கரையோரத்தில் நடக்கத் தொடங்கினர். எழும் புகையால் வான்மண்டலம் மறைந்தது. மூன்றாம்பிறை நிலவினை நீலனால் பார்க்க முடியவில்லை. ஆனால், காலைக்கதிரவனின் ஒளித்தகிப்பை நீருக்குள் பார்த்துக்கொண்டிருந்தான். வைகை செம்மூதாயாய்க் கனன்றுகொண்டிருந்தது. கதைகளை மறக்காமல் காலம் அவன் கண்ணுக்குக் காட்டிக்கொண்டிருந்தது.

துறைமுகம் ஒன்று முழுமுற்றாக எரிவதை உலகின் பெரும்வணிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடிப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், அதனினும் வீரியத்தோடு எரிந்துகொண்டிருந்தது காலம்பனின் சினம். எரியூட்டிய வேலையைச் செய்ததெல்லாம் பறம்பின் வீரர்கள்தாம். தாங்கள் எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில், மிதந்தபடி எரிந்துகொண்டிருந்த கலங்களை ஒருபுறமாகச் சாய்த்துத் தலைகுப்புறக் கவிழ்த்தலாமா என்று கேட்டபடி மீண்டும் கடலுக்குள் இறங்கினர் திரையர்கள்.
நீலன் தடுத்து மேலேற்றினான். தேவாங்கினை மீட்டுச்செல்வதே நமது நோக்கம் என்பதை நினைவுபடுத்தி அழைத்துச்சென்றான். காலம்பனின் கண்கள் கருங்கைவாணனையும், திதியனையும் விடாது தேடின. அவர்கள் இங்கு வரவில்லை. பாண்டியனின் இணைமீன் கவசத்தை மார்பில் அணிந்தபடி எவன் எதிரில் வந்தாலும் அவன் காற்றிலே வீசப்பட்டுக் கொண்டிருந்தான். காலம்பனின் கைப்பிடிக்கு நதி சிக்கினால் அதையும் சுழற்றி எறிந்துவிடுவான் என்றுதான் தோன்றியது. எரியும் நதியின் எதிர்திசை நோக்கி அவர்கள் நடந்தனர்.
எங்கும் கூக்குரல்களும் வெடித்து உமிழும் நெருப்பின் குரலுமாக இருந்தது. அருகிலிருந்த அருகன்குடியிலிருந்து மக்கள் சாரிசாரியாக ஓடிக் கொண்டிருந்தனர். திரையர்கள் மட்டும் நெருப்பைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாண்டியனின் கோட்டையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். வழியில் இருந்த பெருஞ்சுவரின் ஓரத்தில் எறியுளிகள் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. விலகிப் போய்க் கொண்டிருந்த காலம்பனின் கண்களில் அவை பட்டன. ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் பெருஞ்சுறாக்களை எறியுளியால் எறிந்தே பிடிப்பர். இணையற்ற நீளமும் கூர்முனையுங் கொண்ட எறியுளிகளைக் கைகளில் அள்ளினான் காலம்பன்.
எரியும் நெருப்பினை விஞ்சிக்கேட்டன சில மனிதக்குரல்கள். நீலன் திரும்பிப் பார்த்தான் கடைசியாய் நின்றிருந்த கலம் ஒன்றின் மீதிருந்து கதறிய அடிமைகளின் குரல்கள் அவை. எல்லோரின் கவனமும் அப்பக்கம் திரும்பியது. கைகால்களில் விலங்கிடப்பட்டதால் யாராலும் தப்பிக்க முடியவில்லை. நெருப்பு சுற்றியபடி அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தது. கலங்களின் மேல்விளிம்பை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திரையர்கள் விலங்கினைப் பிய்த்தெறிந்து அவர்களை வெளியில் தூக்கி வீசினர்.
வீசப்பட்டவர்கள் யாரும் தப்பித்து ஓடாமல் மீண்டும் கலம்நோக்கியே கதறியபடி நெருங்கினர். காரணம் புரியாமல் நீலன் நின்றபொழுது, மீகான் நிற்கும் கூம்புமேடையில் ஒருவன் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. “எம் தலைவனைக் காப்பாற்றுங்கள்” என்று அவர்கள் கதறினர். துணிந்து மேலேறிய திரையர்கள் மரம்பிளந்து அவனைத் தூக்கிவந்தனர். உடலெங்கும் செதில்செதிலாகப் பிளவுற்று இருந்த அவன் அரைமயக்கத்தில் இருந்தான். விடுவிக்கப்பட்ட அடிமைகள் அவனை உயிரெனத் தாங்கிக்கொண்டனர்.
பாண்டிய வீரர்கள் பெருங்கலங்கள் எரியும் இடத்தில் கூச்சலிட்டுக்கொண்டு கிடந்ததால் ஓரத்திலிருந்து பற்றியெரிந்த இச்சிறுகலத்தைப் பார்க்க யாருமில்லை. ஆனால், நீலனின் மனதில் இக்காட்சி நெகிழ்வை ஏற்படுத்தியது. விடுவிக்கப்பட்ட அடிமைகள் தாங்கள் உயிர்பிழைத்தால் போதுமென ஓடுவதற்கு மாறாக தம் தலைவனைக் காப்பாற்றும் வரை அந்நெருப்பை விட்டு அகலாமல் இருந்தது அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட அவர்கள் உடன் வந்துகொண்டிருந்தனர்.
பற்றியெரியும் கலங்கள் நோக்கிக் கோட்டை யிலிருந்த வீரர்கள் எல்லோரும் பாய்ந்து ஓடியதால் திறந்துகிடந்த கோட்டைக்குள் பறம்பின் வீரர்கள் நுழையும்பொழுது கேட்க யாருமில்லை. தேவவாக்கு விலங்கின் கூண்டருகே வந்து நின்றான் நீலன். நான்கு பெருங்கூண்டுகளுக்குள் இருந்தனவற்றை யெல்லாம் கூண்டோடு தூக்கினர் திரையர்கள். எண்ணிலடங்காத குதிரைகள் கட்டுத்தறியில் நின்று கொண்டிருந்தன.
கட்டுத்தறியில் வரிசையாய் குதிரைகள் நிற்பது போலத்தான் துறைமுகத்தில் கலங்கள் நிற்கின்றன. பின்னிரவு கழிந்ததும் துருத்தியில் ஊதுவதைப்போல இடைவிடாது வீசியது கடற்காற்று. காற்றின் வேகம் தழலை வெளியெங்கும் வீசி விளையாடியது. நெருங்க முடியாமல் போராடிக்கொண்டிருந்தனர் பாண்டிய வீரர்கள். இளமருதன் தன்னால் முடிந்ததனைத்தும் செய்துபார்த்தான். எதுவும் ஆகவில்லை. அப்பொழுதுதான் ஓடிவந்தவொரு வீரன் செய்தி சொன்னான்.

நெருப்பினும் கொடுஞ்செய்தியாக அது இருந்தது. தன் வீரர்களோடு அருகிருந்த யவனக்கோட்டைக்குள் ஓடினான். அங்கு கட்டப்பட்டிருந்த குதிரைகளில் ஏறி மேற்திசையில் இருந்த பாண்டியக்கோட்டையை நோக்கி விரைந்தான். வழக்கம்போல அவனது ஆலா காற்றைக்கிழித்து சீறிப்பாய்ந்தது. மற்ற வீரர்கள் அவனைப் பின்தொடர்ந்து விரைவதற்கு நீண்ட நேரமானது.
அவன் பாண்டியர் கோட்டைக்குள் நுழைந்தபொழுது தேவாங்கினைத் தூக்கிக் கொண்டு அந்தக் கூட்டம் போய்விட்டது. இவ்விரவில் நெடுந்தொலைவு போயிருக்க முடியாது என முடிவுசெய்த இளமருதன் தனது படையோடு அவர்களை நோக்கி விரைந்தான்.
திரையர்களைச் சுமந்து செல்லும் குதிரைகளால் ஒருபொழுதும் பாய்ந்து செல்ல முடியாது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதை நீலன் உணர்ந்தான். எனவே தானும் மெதுவாகவே குதிரையைச் செலுத்தினான். விடுவிக்கப் பட்ட அடிமைகளும் குதிரையேறி இவர்களோடு வந்துகொண்டிருந்தனர். அவர்களை விலகிப்போகச் சொல்ல நீலனுக்கு மனமில்லை. தங்கள் தலைவனை ஒரு குதிரையில் தாங்கிப் பிடித்தபடி மற்றவர்கள் சூழ வந்தனர்.
அப்பொழுதுதான் எதிர்பாராமல் இருளுக்குள்ளிருந்து பாய்ந்து வந்திறங்கின ஈட்டிகள். குதிரைகள் சிதறி விலகின. மெதுவாகப் போய்க்கொண்டிருந்த தனது குதிரையை இழுத்து நிறுத்தினான் காலம்பன். கையிலேந்திய எறியுளிகொண்டு சுறாவேட்டையைத் தொடங்கினான். இருளெனும் பெருங்கடலுக்குள் காலம்பன் வீசிய எறியுளிகள், வந்துகொண்டிருந்தவர்களின் உடல்களை இடைவிடாது துளைத்து வெளியேறிக்கொண்டிருந்தன.
தாக்குதலின் கூக்குரலுக்கு நடுவே தங்கள் தலைவனைப் பாதுகாப்பாய்க் கொண்டுசெல்வதிலேயே கவனமாய் இருந்தனர் மீட்கப்பட்ட அடிமைகள். வேகமற்று நடக்கும் திரையர்களின் குதிரைகளை இடைவிடாது வந்து சூழ்ந்தவண்ணம் இருந்தனர் பாண்டிய வீரர்கள். எந்தவோர் ஆயுதத்தையும்விட மிக நீளமானவை எறியுளிகள். எனவே, புழுக்களைக் கோத்துத் தூக்கும் கீற்றோலைபோல அது மனித உடல்களைக் கோத்தெடுத்துக் கொண்டிருந்தது.
இச்சிறு படையை அழிக்க தன் வீரன் ஒருவனே போதும் எனக் காலம்பன் நினைத்தபொழுதுதான் சற்றும் எதிர்பாராதது நடந்தது. முன்னால் போய்க்கொண்டிருந்த நீலனை மறிக்க மின்னல் வேகத்தில் ஒரு குதிரை பாய்ந்து சென்றது. காலம்பன் அதை நோக்கி விரைந்து செல்ல குதிரையை இயக்கிப் பார்த்தான். ஆனால், இவனது குதிரையின் வேகம் கூடவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்றது ஆலா. உருவிய வாளோடு இளமருதன் முன்னால் விரைந்ததற்குக் காரணம். நீலனின் முதுகில் கட்டப்பட்டிருந்த தேவாங்கின் கூடை. எக்காரணங் கொண்டும் அதனை எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்று வெறிகொண்டு தாக்கினான் இளமருதன்.
ஆலா பாய்ந்து சென்ற வேகம் காலம்பனை சற்றே உலுக்கியது. நீலனை நோக்கி விரைந்து செல்லத் துடித்தான். இருளுக்குள் நிகழும் மோதலில் உருவங்கள் புலப்படவில்லை. எனவே எறியுளியை வீசியெறிய முடியாத நிலை. கணநேரங்கூட காலம்பனால் தாங்கமுடியாமல் குதிரை விட்டிறங்கிப் பாய்ந்து ஓடினான்.
சற்றும் எதிர்பாராமல் வெட்டிவீசப்பட்ட தலையொன்று அவனைக் கடந்துபோய் இருளுக்குள் உருண்டது. காலம்பன் அதிர்ந்து நின்றான். இருளுக்குள்ளிருந்து சீறி வெளியேறியது ஆலா.
ஆலாவின் முதுகில் அமர்ந்திருந்தான் நீலன்.