மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’
பிரீமியம் ஸ்டோரி
News
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

திகார மையத்துடன் ஒரு எக்ஸ் நெருங்கிப் பழகி, பின் அந்த எக்ஸே மறைமுக அதிகார மையம் ஆகும்போது, எக்ஸின் குடும்பமும் எங்கெங்கும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும். இதுவே வாடிக்கை. நாமும் பார்த்திருக்கிறோம்.

சீனாவின் சாங் பேரரசின் அந்தப்புரத்துக்குள் சாதாரணப் பெண்ணாக நுழைந்து, தலைமை ஆசைநாயகியாக உயர்ந்து, பேரரசியையே வீழ்த்தி, தானே பேரரசியாக அரியணை ஏறிய வூ ஸெடியான், மேற்படி விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தாள். ‘நானே சர்வ அதிகாரமும் கொண்டவள். எனக்கு ஆபத்தாக யார் தெரிந்தாலும் அவர்களை அழிப்பேன். அவர்கள் என் ரத்தச் சொந்தம் என்றாலும்கூட.’

வூவின் குடும்பத்தினரும் அரண்மனைக்குள்ளும் அந்தப்புரத்திலும் அதிகாரத்துடன் வலம் வரத் தொடங்கினர். ஆனால், வூ அதனை ரசிக்கவில்லை. அவளின் சகோதரியின் மகள், இன்னும் சில உறவுக்காரப் பெண்களெல்லாம் அந்தப்புரத்துக்குள் அழகிகளாகத் திரிந்தனர். ‘என் வழியிலேயே இவர்களும் எனக்கே எதிரிகளாக வந்துவிட்டால்?’

‘அக்கா என்னடி, தங்கை என்னடி, அரசியல் சூழ்ந்த உலகத்திலே!’ அந்த இளம் பெண்கள் வூவின் கட்டளைப்படி கொல்லப்பட்டனர். குடும்பத்தினரும் ஒடுக்கப்பட்டனர். ‘எல்லை மீறிப் போகிறாளே...’ - ஆபத்தை உணர்ந்த பேரரசரும் சில சமயங்களில் வூவை அடக்க முயற்சி செய்தார். சான்ஸிலர் ஷாங்குவான் என்பவர் பேரரசரின் கட்டளைப்படி வூவைப் பதவியிறக்கம் செய்யும் அரசாணையைத் தயாரித்தார். விஷயமறிந்த வூ, பத்ரகாளியாக மாற, பேரரசர் பம்மினார். ஷாங்குவானுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு நெருங்கிய ஒரு பெண்ணின் மகளுக்கு அந்தப்புரத்தில் பதவி உயர்வு வழங்க பேரரசர் சபலப்பட்டார். இருந்தாலும் வூவை நினைத்து நடுங்கினார். அந்தப் பெண்ணின் உணவில் விஷம் கலக்கப்பட்டது. அந்தப் பழி, வேண்டாத இரு நபர்கள்மீது சுமத்தப்பட்டது. வூ, ஒரே பந்தில் ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்தாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

கி.பி. 660. பேரரசர் காவ்ஸோங்குக்கு திடீரென உடல்நலக் குறைபாடு உண்டானது. பக்கவாதம். பார்வைத்திறனும் குறைந்துபோனது. அடுத்தவரை அண்டியே வாழ வேண்டிய நிலை. பேரரசி வூ அரியணையில் கூடுதல் அதிகாரத்துடன் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். வூவால் கொல்லப்பட்ட முன்னாள் பேரரசி வாங்கும் ஸியோவாவும் அடிக்கடி அவள் கனவில் வந்து கழுத்தை நெரிப்பது தொடர்ந்தது. ஆகவே, ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதி நகரமான லியோயாங்குக்குப் பேரரசருடன் ஜாகையை மாற்றிக்கொண்டாள் வூ.

சாங்கானை நிர்வகிக்கும் பொறுப்பு, இளவரசன் லி ஹாங்குக்கு வழங்கப்பட்டது. வூவின் வயிற்றில் பிறந்திருந்தாலும் லி ஹாங், கருணைமிக்கவனாக இருந்தான். அப்போது அந்தப் பிரதேசத்தில் பஞ்சம் சூழ்ந்தது. மக்களும் வீரர்களும் மரப்பட்டைகளை உண்டு வாழ்வதைக் கண்டு மனமிளகி, அரசின் கிடங்கிலிருந்து அரிசியை அள்ளிக்கொடுத்தான். இப்படியாக இன்னும் சில விஷயங்கள். ‘இவன் நிர்வாகத்துக்கே லாயக்கற்றவன்’ – வூ கடுப்பானாள். தாய்க்கும் மகனுக்கும் தகராறு வலுத்தது. ‘வூ அரசாங்க விஷயங்களில் தலையிடவே கூடாது என்று உத்தரவிடுங்கள்.’ லி ஹாங், பேரரசரை வற்புறுத்தியபடியே இருந்தான். கி.பி.675-ல் திடீரென இறந்துபோனான். ‘கொஞ்சி வளர்ந்த மகனுக்கான உணவிலேயே நஞ்சைக் கலக்கச் சொன்னது வூதான்’ என்று அரண்மனை வட்டாரத்தில் ‘உச்’ கொட்டினார்கள்.

வூவின் இரண்டாவது மகன் லி ஸியான், பட்டத்து இளவரசனாக அறிவிக்கப்பட்டான். அதேசமயம், பட்டத்து இளவரசர் போட்டிக்குத் தகுதியுள்ள, காவ்ஸோங்குக்கும் பிற பெண்களுக்கும் பிறந்த ஆண் வாரிசுகளை, காவ்ஸோங்கின் சகோதர, சகோதரி மகன்களையெல்லாம் கட்டம் கட்டி கல்லறைக்கு அனுப்பும் வேலையைத் தெளிவாகச் செய்தாள் வூ. கி.பி 675-ல் பேரரசரின் உடல்நிலை மேலும் பலவீனமடைந்தது. பேரரசி வூவை, தன் சார்பாக ‘ஆளும் பிரதிநிதி’ என்று அறிவித்தார் காவ்ஸோங்.

நிர்வாகத் திறமைமிக்க லி ஸியானுக்கும் தாயுடன் மனஸ்தாபம் வந்தது. ‘உன்னைப் பெற்ற தாய் வூ அல்ல. அவளின் சகோதரி. வூ உன்னையும் தூக்கியெறிவாள்!’ என்று லி ஸியானைச் சிலர் நம்ப வைத்தனர். ஆகவே, அவனது நடவடிக்கைகளில் மாற்றம் உண்டானது. உஷாரான வூ, அரசியல் கொலையொன்றில் லி ஸியான்மீது குற்றம் சுமத்தி, பட்டம், பதவியைப் பிடுங்கினாள். அவனை ஒரு மாளிகையில் சிறைவைத்தாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

காவ்ஸோங்குக்கும் வூக்கும் பிறந்த மூன்றாவது மகன் ஸோங்ஸோங் (என்ற லி ஷியான்) பட்டத்து இளவரசனாக அறிவிக்கப்பட்டான். கி.பி. 683-ல் பேரரசர் காவ்ஸோங் தனது இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருந்தார். ‘பேரரசரின் உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து அவரை முடக்கியதே வூதான்’ என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த டிசம்பர் 27-ல் பேரரசர் காவ்ஸோங் இறந்தார்.

தாங் பேரரசின் அடுத்த பேரரசராக ஸோங்ஸோங், கம்பீரமாக அரியணையில் அமர்ந்தான். தன் மனைவியைப் பேரரசியாக அறிவித்தான். தன் மாமனாருக்கு பிரதம மந்திரி பதவி கொடுத்தான். இவை அனைத்தையும் சில நாள்கள் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த வூ, உக்கிரமானாள். ‘அவன் ஆட்சி செய்து கிழித்தது போதும். அவனை நான் பதவிநீக்கம் செய்கிறேன்.’ வூவின் படைகள் ஸோங்ஸோங்கைத் தூக்கியெறிந்தன. நேற்றைய பேரரசன், இன்றைக்குச் சாதாரணனாக ஒதுக்கி, ஒடுக்கிவைக்கப்பட்டான். வூவின் நான்காவது மகன் ரைஸோங் அடுத்த பேரரசனாகப் பெயரளவுக்கு அறிவிக்கப்பட்டான்.

‘மகனே ரைஸோங், உனக்கான அரண்மனையில் சௌகரியமாக இருக்குமிடம் தெரியாமல் இரு. உனக்கும் பேரரசின் நிர்வாகத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன். புரிகிறதா?’

ஆட்சி, அதிகாரத்தை மீண்டும் தொடர்ந்தாள் பேரரசி வூ. இதற்கிடையில், இரண்டாவது மகன் லி ஸியான் ஆயுதங்கள் திரட்டி, சதி செய்வதாக செய்தி வந்தது. வூ, தளபதி ஒருவரை அனுப்பினாள். ‘அவன் கதையை முடித்துவிடு.’ தளபதியும், லி ஸியானைத் தேடிச் சென்றார். மிரட்டியே அவனைத் தற்கொலை செய்துகொள்ள வைத்தார். ‘முடித்துவிட்டேன் பேரரசி’ என்று வூவிடம் வந்து பணிவன்புடன் சொன்னார். ‘என்னது! என் மகனைக் கொன்றுவிட்டாயா? பாவி!’ - கதறல் நடிப்பைக் கடைவிரித்த வூ, தளபதிக்கு மரணதண்டனையை நிறைவேற்றினாள்.

‘இனி இது தாங் பேரரசு அல்ல. பேரரசி வூவாகிய நான் ஆளும் ஸோவ் (Zhou) பேரரசு!’ - ராஜ்ஜியத்தின் பெயரை மாற்றினாள். ஸோவ் பேரரசின் முதல் ஆட்சியாளராக (ஒரே ஒரு ஆட்சியாளரும்கூட), ஸோவ் அரச மரபைத் தோற்றுவித்த பெருமைக்குரியவளாகத் தன் பெயரைச் சரித்திரத்தில் பதிவு செய்துகொண்டாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

வூ, ‘ரகசியக் காவல் படை’ ஒன்றை அமைத்தாள். யார் யாரெல்லாம் தனக்கு எதிராகப் பேசுகிறார்களோ, ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்களோ, அந்நபர்களைக் குடும்பத்தோடு கருவறுக்கும் அதிகாரம், அந்த ரகசியக் காவல் படைக்கு அளிக்கப்பட்டிருந்தது. அரசாங்கக் கட்டடங்களில் தாமிரத்தாலான அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டன. ‘யாரெல்லாம் என்ன குற்றம் செய்கிறார்கள் என்று அரசுக்கு மொட்டைக்கடிதம் எழுதிப் போடலாம்’ என்று மக்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டோர் காவல் படையால் கைது செய்யப்பட்டனர். விசாரணை. விதவிதமான சித்ரவதை. சிறைத்தண்டனை. பெரும்பாலும் மரணதண்டனை. இப்படியாகத் தன்னை எதிர்க்க நினைத்தோரையெல்லாம், பலம் பெறவிடாமலேயே பஸ்பம் ஆக்கினாள் வூ. விழுந்த பிணங்களுக்குக் கணக்குவழக்கு கிடையாது.

சரி, மிதமிஞ்சிய அரசியல் கொலைகளைத் தவிர்த்து, வூவின் ராஜ்ஜியத்தில் நிர்வாகம், பொருளாதாரம், மக்கள் நலன் இவையெல்லாம் எப்படி இருந்தன? வலதுகைப் பெருவிரலை உயர்த்தலாம்.

வூ, வாழ்ந்ததும் ஆண்டதும் ஆறாம் நூற்றாண்டில். அதுவும் ஆணாதிக்கம் மிகுந்த சீன சமூகத்தில். அப்பேர்ப்பட்ட சூழலில், அதிகாரத்தை ஒரு சாதாரண பெண் கைப்பற்றி, ராஜ்ஜியத்தை நிர்வகிப்பது என்பது மாபெரும் செயல். அதற்கு இரக்கமும், கருணையும், மனிதமும் கிஞ்சித்தும் உதவாது என்பதே நிதர்சனம். அறமற்ற அரசியல், நயவஞ்சக நெஞ்சம், திணறடிக்கும் திமிர், அசரடிக்கும் ஆணவம் - இவையே தேவை என்று முடிவுசெய்து பலருக்கும் முடிவுரை எழுதினாள் வூ. ‘பாசத்தில் வழுக்கி விழுந்தால் பாசக்கயிறுதான். மோசம் செய்து மூர்க்கம் காட்டினால் ராஜ்ஜியத்தின் மூக்கணாங்கயிறே என் கையில்தான்.’ வூவின் பாணி அதுவாகத்தான் இருந்தது.

ஸோவ் பேரரசியாக கி.பி 705 வரை வூ ஆட்சி செய்தாள். அவள் ஆட்சியில் அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க ‘தகுதித்தேர்வு முறை’ இருந்தது. அதில் தேறினால்தான் வேலையும் பதவியும். படித்த, திறமையான நபர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக, நிர்வாகத்தில் பெண்கள் இடம்பெற்றனர். ஆக, அரசு எந்திரம் ‘முதுகெலும்புடன்’ இயங்கியது. ராஜ்ஜியத்தின் பொருளாதாரம் நிமிர்ந்தது. விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டது. முறைகேடுகளுக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. ராணுவ பலம் பெருக்கப்பட்டு ராஜ்ஜியத்தின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. போர்களிலும் வெற்றி கிடைத்தது. போரின்றி, தூது அனுப்பி அண்டை ராஜ்ஜியங்களுடன் நல்லுறவு வளர்ப்பதிலும் வூ திறம்பட விளங்கினாள்.

‘பெண் என்பதாலேயே வூ கொடும் அரக்கியாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளது வெற்றியை ஏற்றுக்கொள்ள இயலாத ஆணாதிக்கச் சமூகம், அவளது ஆட்சியை இருண்ட காலமாகச் சித்தரிக்கிறது’ என்ற வலுவான எதிர் வாதங்களும் உண்டு. அது உண்மையே. நிர்வாகத்தைப் பொறுத்தவரை வூ கில்லாடி. அதிகாரத்தைத் தக்க வைக்க கையாண்ட முறைகளில் ‘கில்’லேடி!

பேரரசருக்குத்தான் அந்தப்புரம் இருக்க வேண்டுமா என்ன? வூவுக்கும் பல காதலர்கள் இருந்தனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு புத்தத் துறவி, அரண்மனை மருத்துவர், ஸாங் சகோதரர்கள் என்ற இரண்டு பாடகர்கள். இவர்கள் எல்லோருமே பேரரசியின் பிற்காலக் காதலர்களாக வாழ்ந்து, பதவியும் சுகமும் அனுபவித்து, பிறகு சூழ்ச்சிகளில் கொல்லப்பட்டவர்கள். தவிர, பேரிளம்பெண் வூவின் அந்தப்புரத்தில் இளைஞர்கள் பலர் ஆசைநாயகர்களாகவும் சேவை செய்தனர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 17 - ‘நானே வருங்கால புத்தர்!’

கி.பி 705-ல் வூ நோய்வாய்ப்பட்டு தளர்ந்துபோனாள். அவளின் மூன்றாவது மகன் ஸோங்ஸோங் மீண்டும் தலையெடுத்துவந்து, ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றினான். பேரரசி வூவைத் தகுதிநீக்கம் செய்து வேறொரு மாளிகைக்கு அனுப்பிவைத்து விட்டு, அப்பாடாவென அரியணையில் அமர்ந்தான். ‘ஸோவ் அரசமரபு முடிவுக்கு வந்தது. தாங் அரச மரபு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது’ என்று அறிவித்தான்.

அதே ஆண்டில் வூ இயற்கையாகவே இறந்துபோனாள். ரத்தக்கறை படிந்த கரங்களுடையவள் என்றாலும், அவள் தன் வாழ்நாளில் புத்தருக்கு ஏகப்பட்ட சிலைகளை உருவாக்கினாள். கூடவே இன்னொன்றையும் சொல்லிக் கொண்டாள். ‘நானே மைத்ரேயா! வருங்காலப் புத்தர்!’

பொதுவாக சீனப் பேரரசர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களில், அவர்களின் அருமை பெருமைகளை விலாவாரியாகச் செதுக்கியிருப்பார்கள். ஆனால், பேரரரசி வூ-க்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூணில் எதுவுமே எழுதப்படவில்லை. அதனால்தான் அவள் இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

(வருவார்கள்...)