மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ளைகட்டியது கூத்து. திசையெங்குமிருந்து பறம்புமலையை நோக்கி அணியணியாய் மேலேறினர் பாணர்கள். கூத்துத் தொடங்கும்முன் தங்களின் பறைகளை நெருப்பிலே சூடேற்றினர். சூடேற்றிய பறையை இழுத்தடித்ததும் ஓசையின் வழி நெருப்பே பரவியது. வைப்பூரை எரித்த நெருப்பு, அருகன்குடியை அழித்த நெருப்பு, யவன நாவாய்களை விழுங்கிய நெருப்பு, கலங்தோறும் கனன்ற நெருப்பு. அந்நெருப்பே பாடலாய் மாறியது. நெருப்பின் பாடலே இரவெங்கும் ஒலித்தது.

பறம்பின் வீரர்கள் நால்வரின் வாயிலிருந்து உமிழப்பட்ட பொறித்துகளை இப்பொழுது நிலமெங்கும் பாணர்கள் உமிழ்ந்துகொண்டிருந்தனர். பாய்மரங்களைவிட உயரத்தில் பறந்துகொண்டிருந்த பாண்டியனின் புகழ்மீது பற்றியெறிந்தது நெருப்பு. கருகி உதிரும் புகழின் சாம்பலேந்தி வழியெங்கும் பாட்டிசைத்தனர் அகவன் மக்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

நீரின்மீது ஆடிய நெருப்பின் நடனத்தை நிலமெங்கும் ஆடிக்களித்தனர் கூத்தர்கள். வணிகர்களின் அச்சு ஒடிவது ஏதோ ஒரு வகையில் மக்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதனாலேயே இச்செய்தி மக்களின் செய்தியாக மாறியது. சேரனும் சோழனுங்கூட இக்கதைப்பாடலை அவையில் பாடச்சொல்லிக் கேட்டனர். வேந்தர்களில் முதல்நிலையை அடைந்துவிட்டதாகச் செருக்கிக்கொண்ட பாண்டியன் எரிந்த கதை இன்பத்தைச் சுரந்தது. 

பாண்டிய இளவரசனின் மணவிழாவில் நிகழ்ந்த கூத்துகளெல்லாம் இப்பொழுது நிலமெங்கும் கேலிக்கூத்தாய் நிகழ்ந்து கொண்டிருந்தன. செல்வத்தின் கருநிழலில் கால்மிதித்து ஆடினர் கலைஞர்கள். ஓடோடிகளும் நாடோடிகளும் தமக்கான பாடலை தமது நரம்பெடுத்து மீட்டனர்.
ஆக்கத்தில் கிடைக்கும் இன்பம் அழிவிலும் கிடைக்கும். இவ்வழிவு தற்செயல் என்றுதான் எல்லோரும் நம்பினர். ஆனால், முற்றிலும் எரிந்த தீயிலிருந்து எரியாமல் வெளிவந்தது உண்மை. இது தற்செயல் அல்ல, தாக்குதல் எனத் தெரியவந்தது. தாக்கியது திரையர் கூட்டம் என்பது அறியவந்தது. உடனிருந்தது பறம்பு மக்கள் என்பதும் புரியவந்தது. அவ்வளவு காலமும் பரவிய நெருப்பைப் பற்றிய கதை, இப்பொழுதுதான் நெருப்பாய்ப் பரவத் தொடங்கியது. வேள்பாரியின் சீற்றம் கடல்தொட்டுத் திரும்பியதெனத் தென்பறை முழங்கினர் பாணர்கள்.

நெருப்பைவிட வேகமாகப் பரவக்கூடியது கதை. நெருப்பைவிட அதிகமாகச் சுடக்கூடியது கதை. நெருப்புகொண்டும் எரிக்கமுடியாதது கதை. எனவே இக்கதை பரவுவதைத் தடுக்கவோ, எரிவதை நிறுத்தவோ, சுடுவதை மறைக்கவோ யாராலும் முடியவில்லை. இந்நெருப்பை நீர்கொண்டு அணைக்க முடியாது. ஏனென்றால் இந்நெருப்பே நீரின் மீதுதான் எரியத்தொடங்கியது. கடைசிவரை நீரின் சாட்சியாகவே எரிந்து தணிந்தது.

வெஸ்பானியனின் உடலிற்படர்ந்த தீயை அணைக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. நதியிலே தள்ளிவிட்டுக் காப்பாற்றிவிடலாம் என நினைத்து நெருப்போடு நீருக்குள் தள்ளினர். அவன் நீரில் விழுந்த சில கணங்களில்தான் எரிந்துகொண்டிருந்த ஹிப்பால்ஸ்ஸின் நாவாய் வெடித்துச் சரிந்தது. வெஸ்பானியன் எரிந்து மூழ்கினானா, மூழ்கி எரிந்தானா என்பது தெரியாமலே போய்விட்டது.

எண்ணிலடங்காத முத்துப்பெட்டிகள் ஏற்றப்பட்ட நாவாய் அது. ஒவ்வொரு வணிகனும் பெரும்மகிழ்வோடு கணக்கிலாத பொருள்களை வாங்கிக் கலம் நிறைத்துப் புறப்படும் வேளையில் நெருப்புநடனம் நிகழ்ந்ததால், கலத்திலிருந்த பொருள்களின் அளவு கணக்கிட முடியாததாக இருந்தது.
சந்தை அழிந்த கதையை வழித்தடங்கள் மறக்காமல் எடுத்துச்சென்றுவிடுகின்றன என்பார்கள். இப்பொழுதும் அதுவே நடந்தது. ஒரு துறைமுகம் முழுமுற்றாக அழிந்த கதையை கடல்வழி பயணித்த கலங்கள் எல்லாம் எடுத்துச்சென்றன. நாவாய்கள் ஒதுங்கும் துறைமுகமெங்கும் வைப்பூரின் கரிக்கட்டைகள் கரையொதுங்கின.

கடலிருக்கும் வரை இக்கதை இருக்கும். பாம்பின் தலையை நசுக்குவதைப்போல வைகையின் தலையில் இருந்த துறைமுகத்தை நசுக்கி அழித்தான் வேள்பாரி என்ற வரலாறு நிற்கும்.

வரலாறெங்கும் கேட்டிராத கதையாக இது இருந்ததற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது, உலகம் இதுவரை கேட்டிராத செய்தி. நீரின் மீது நெருப்பு மூன்று நாள்கள் நின்று எரிந்தது என்னும் செய்தி. எனவே அது பாணர்களின் கற்பனையைத் தாண்டிய கருப்பொருளாக இருந்தது. எரிபொருளே கருப்பொருளானதால் நிற்காமல் எரிந்தது. சுடும்சொற்கள் பற்றியெரிய, எரியும் நெருப்பு சொல்லெனச் சுட்டது.

பாடும் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கதையைப் பாடுகிறான். உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிய அளவற்ற ஆர்வத்தோடு இருந்தான் பாரி. மழைக்காலம் முடிந்ததும் நிலமெங்குமிருந்து பாணர்கள் பறம்பிற்கு மலையேறத்தொடங்குவது வழக்கம். இவ்வாண்டும் அப்படியே.

பறம்பின் தாக்குதலை எழும் அலைகளும் வீசும் காற்றும் எங்கும் பேசிக்கொண்டிருக்க, துள்ளிக்குதித்து மலையேறினர் பாணர்கள். நாள்தவறாமல் எவ்வியூரில் கூத்து நிகழ்ந்தது. கிணைகொண்டு பாடும் கிணையர் கூட்டம்தான் வைப்பூரின் கதையை எவ்வியூருக்கு வந்து முதலில் பாடியது. இத்தாக்குதல் இவ்வளவு பெரிதாக நிகழ்ந்துள்ளது என்பதை பாரி உள்ளிட்ட அனைவரும் அன்றுதான் அறிந்தார்கள். 

கிணையர் குலத்துக் கிழவன்தான் வைப்பூரின் பெருமையை சங்கூதும் குரலில் இழுத்துப் பாடினான். வைகையின் வாய்முகப்பகுதி, கடலை முத்தமிட்டு முத்தமிட்டுப் பின்வாங்கும் அதன் அழகு, கலங்கள் வந்து நிற்கும் வரிசையை ஒருபோதும் சேதப்படுத்தாத காற்று, பாண்டியனின் மகுடத்தில் ஒளிரும் பொன்நிறக் கல் அது என்று அதன் பெருமையைச் சொல்லி முடித்ததும் இளங்கிணையன் களம் இறங்கினான்.

அவன் இறங்கியதும் கிணையர்குல ஆடுவன் கூட்டம் உள்ளிறங்கியது. ஆண்களும் பெண்களும் சூழ வலம்வந்தனர். கிணைப்பறையின் ஒலிக்குறிப்பு அவர்களுக்கான நுணுக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தது. காலம்பன், பாரியின் இடப்புறம் அமர்ந்திருந்தான். ஏதோ ஒரு கூத்தினைப் பார்க்கிறோம் என்ற எண்ணத்தில்தான் அவன் அமர்ந்திருந்தான். அந்தக் கூத்தின் நாயகன் அவன்தான் என்பது தொடக்கத்தில் புலப்படவில்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

நெருப்பின் அகன்றவாய் கலங்களை மென்றுதின்றபொழுது பல்லுக்குள் சிக்கிக்கொண்ட பாய்மரத்தினை ஒடித்து உள்ளே தள்ளினான் காலம்பன் என்றான் கிணையன். கேட்டுக் கொண்டிருந்த காலம்பன் அதிர்ந்து உட்கார்ந்தான். கூட்டம் எழுப்பிய உற்சாக ஒலி விண்ணைத் தொட்டது. தாங்கள் பாடும் கதையின் நாயகன் தங்களின் கண்முன்னால் உட்கார்ந்திருக்கிறான் என்பது கிணையர்களுக்குத் தெரியாது. வீரனின் வாள் கலைஞனின் சொல்லாக மாறினால் என்னவாகும் என்பதை முதன்முறையாகப் பார்த்துக்கொண்டிருந்தான் காலம்பன்.

எறியுளியால் எண்ணற்ற வீரர்களின் உடல்களைச் செருகியபடி தோளிலே தூக்கிவந்த காலம்பனின் உடல்வாகினை இளங்கிணையன் பாடியபொழுது கூத்தரங்கு அதிர்ந்தது. எழுந்த பேரோசை கிணைப்பறையின் ஓசையை விஞ்சியது. அகலவிரித்த கையால் ஒருமுகப்பறையை ஓங்கியடித்துப் பேரொலி எழுப்புவதைப்போல தனது தொடையிலடித்து ஒலியெழுப்பினான் பாரி.  

ஆடுவன் கூட்டம் தாக்குதலின் வலிமையை வர்ணிக்கத் தொடங்கியபொழுது பாரியால் இருக்கையில் உட்கார முடியவில்லை. காலம்பனின் வீரச்செயல் பறம்புக்குடிகளுக்கே பாடம் சொன்னது. இசையும் கூத்தும் உச்சியில் ஏறிநிற்க, பரிமாறப்படும் தாக்குதலின் விபரங்கள் கூத்துக்களத்தைப் போர்க்களமாக்கின. சீறியெழும் சினங்கொண்டு பகைமுடிக்கும் ஒற்றைச் சொல்லோடு பாடலை முடித்தான் இளங்கிணையன்.

கூத்துக் கேட்டவர்களின் ஆவேச உணர்ச்சி எல்லையற்றதாக இருந்தது. கூட்டத்தில் உட்கார்ந்திருந்த திரையர்கள் கண்ணீர்பெருகப் பார்த்திருந்தனர். தங்கள் குலத்தலைவனைப் பற்றிப் பாடப்படும் முதற்பாடல் அது. காலம்பன் உறைந்து நின்றபொழுது எதிரில்வந்து வணங்கி நின்றான் பாரி.

பாடிய கிணையர்களுக்கு, தங்களது கதையின் நாயகன் இவன்தான் என்று அப்பொழுதுதான் புரியத்தொடங்கியது. காலம்பனைக் கண்கொண்டு பார்த்ததும் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்தனர். காலம்பனை “விரிந்த மார்பன்” என்று தவறாகப் பாடிவிட்டோம். இவன் விரிந்த மார்பனல்லன், எதிரி தன் இருகையை எவ்வளவு விரித்து வந்தாலும் “அடங்காமார்பன்” என்று சொல்லி மறுபாடலைத் தொடங்கினான் இளங்கிணையன். 

இப்படித்தான் தொடங்கிய கூத்து எதுவும் விடியும் வரை முடிவதில்லை. மறுநாள் இன்னொரு பாணர்குழு வந்து சேரும். மீண்டும் வைப்பூர் பற்றியெரியும். கடலில் கலந்த நாவாய்களின் சாம்பல் கதையெங்கும் மிதக்கும். இடுக்கையும் உடுக்கையும் அந்தரியும் ஆகுளியும் உறுமியும் முழவுமாக கருவிகளின் முழக்கத்துக்கு ஏற்ப வைகையின் நெருப்பு வடிவுகொள்ளும்.

எவ்வியூர் மக்களுக்கும் வந்துசேர்ந்த திரையர் கூட்டத்துக்கும் பெருந்துன்பத்திலிருந்து மேலேற வேண்டிய தேவையிருந்தது. அந்தத் தேவையைக் கூத்துகளே இட்டு நிரப்பின.

நாள்கள் நகர்ந்தன. திரையர்குடி பறம்புக்குடியானது. திரையர்குலத்தின் மூத்த பெண்ணொருத்தி கூடை நிறைய பழங்களைக் கொண்டுவந்து கொற்றவையின் முன்னால் பரப்பினாள். வழிபாடு தொடங்கப்போகும்முன் நடக்கும் சடங்கிது. வைக்கப்பட்ட பழங்களுக் கெல்லாம் குலநாகினி கண்திறக்க முயன்றபொழுது தேக்கன் தடுத்தான். “கண்திறக்காத பழங்களே திரையர்களைக் கொண்டுவந்து சேர்த்தது” என்றான். குலநாகினிக்குப் புரிந்தது. கூட்டத்துக் குள்ளிருந்த அலவனை அருகில் வரச்சொன்னாள். ஏனென்று அவனுக்குப் புரியவில்லை. தயங்கியபடி அருகில் வந்தான். அள்ளி முத்த மிட்டாள் குலநாகினி. ஏனென்று திரையர்களுக்குப் புரியவில்லை. அலவனின் கண்ணில் நீலவளையம் பூத்து அடங்கியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

கொற்றவையை வணங்கி மண்ணெடுத்து காலம்பனின் நெற்றியில் பூசினாள் குலநாகினி. குலவையொலி பெருகி மேலேறியது. பறவைகளின் படபடப்பையும்மீறி வெளிக்கேட்டது தேவவாக்கு விலங்கின் குரல்.

ஓசைகள் அடங்கியதும் பறம்பின் ஆசான் அறிவித்தான், “வழக்கமாக பதினாறு குலங்களுக்காக நடைபெறும் கொற்றவைக்கூத்து அடுத்தமுறை பதினேழு குலங்களுக்காக நடைபெறும். ஆனால் தேவவாக்கு விலங்கு பழமெடுத்துக் கொடுத்துத் தொடங்கும் கதையல்ல திரையர்களின் கதை. தேவவாக்கு விலங்கையே எடுத்துக்கொடுத்துத் தொடங்கும் கதை” என்றான்.

கூட்டத்தின் குலவையொலி காட்டைக் கிட்டித்தது. திரையர்குலப் பெண்ணொருத்தி உடல்சிலிர்த்து ஆடத்தொடங்கினாள். தூதுவையின் நினைவோடு அருளாட்டம் தொடங்கியது. உருமிகள் நரம்பினை முறுக்கின. அவள் ஆடும் பரப்புக்கேற்ப கூட்டம் விலகிக்கொடுத்தது. நேரமாக ஆக ஆட்டத்தின் ஆவேசம் உச்சங்கொண்டது. கைகளைத் திருகி, முறுக்கி தலைசுற்றி நிமிரும் அவளின் முகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. பொழுதாவதை உணர்ந்து ஆடுபவளை நிலைகொள்ளச்செய்ய குலநாகினி களமிறங்கினாள்.

திரையர்குலப் பெண்களின் உடல்வாகு எளிதில் அடக்கமுடியாதது. உயரத்திற்கும் உறுதிக்கும் இணையற்றது. அதுவும் அருளிறங்கி ஆடும் பெண்ணை அணைத்து நிறுத்த எவரால் முடியும்? எவ்வளவு முயன்றும் குலநாகினியால் எதுவும் செய்ய முடியவில்லை. 

கொற்றவைக் கூத்தின்பொழுது மற்ற குலப்பெண்கள் இரண்டு, மூன்று பேர் அருளிறங்கி ஆடினாலும் இறுதியில் அடக்கி நிறுத்துபவள் குலநாகினி. தோற்றத்திலும் உடல்வலுவிலும் இணையற்றவளான பறம்பின் மூதாய் குலநாகினி. திரையர்குலத்தின் ஒற்றைப்பெண்ணை எதுசெய்தும் நிறுத்த முடியவில்லை. பார்த்துக் கொண்டிருந்த வேளிர்குலப் பெண்களுக்கு வேர்த்தது.

உறுமியின் நீளோசையும் உருண்டோடும் குலவையொலியும் சூழலின் ஆவேசத்தை அதிகமாக்கிக்கொண்டே இருந்தன. நிலைமையை எப்படிக் கைக்கொள்வதென்று யாருக்கும் புரியவில்லை.

பாரியின் எண்ணங்கள் எங்கெங்கோ போய்த் திரும்பிக்கொண்டிருந்தன. குலங்கள் தாங்கள் அழிந்த கதைகளோடு களமிறங்கிவிட்டால் அவர்களை ஒருபோதும் ஆற்றல்கொண்டு நிறுத்த முடியாது. அவர்களை நிறுத்துவதற்கான வழியைக் கதைகளுக்குள்தான் கண்டறிய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது அருகிருந்த ஆதினி சொன்னாள், “சூலிவேளினை வணங்கி ஆண்வெற்றிலையைக் கொண்டுவந்து அரங்கில் வையுங்கள். ஆவேசம் தணிந்து அமைதியடைவாள் தூதுவை.”

குரல்கேட்டு அதிர்ந்தான் பாரி. செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்த அரங்கம் ஆதினியின் குரலை இறுக்கிப்பற்றியது. சிறிதுநேரத்திலே ஆண்வெற்றிலையைக் கொண்டுவந்து பாரியின் கையில் கொடுத்தனர்.

சூலிவேலினை நினைத்தபடி அரங்கின் நடுவே ஆண்வெற்றிலையை வைத்து வணங்கி நின்றான் பாரி. கொற்றவையின் முன்னால் அடங்கி அமர்ந்தாள் தூதுவை.

புதிய மரபுகள் உருவாகிக்கொண்டு தானிருக்கின்றன. குலங்கள் அழிபட்டு பறம்புக்கு வந்துசேர்ந்தபொழுது இப்படித்தானே தம் முன்னோர்கள் மரபுகளை உருவாக்கியிருப்பார்கள் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.

“மலைமக்களின் எந்தவொரு குடியும் இனி தனித்து வாழமுடியாது. குடிகளை இணைத்து நாடாக்காமல் விட்டுவிட்டோம். நாட்டின் அமைப்புகளை உருவாக்காமல் இனி எக்குடியும் தப்பிப்பிழைக்காது என்ற எண்ணங்கள் உருவானபொழுது தப்பிப்பிழைத்த குடிகள் எதுவுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. பறம்பு மட்டுமே நமக்கு மிஞ்சியுள்ள ஒரே இடம். இதனை என்றென்றும் காத்து நிற்பர்  எம் குலவழியினர்” என்று ஆவேசங்கொண்டு சூளுரைத்தான் காலம்பன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

சேரனின் அவையிலும் வைப்பூர் எரிந்த கதை பாடப்பட்டது. உதியஞ்சேரலின் கன்னங்கள் பூரிப்பில் சிவக்கும் அளவிற்கு வைப்பூர் நெருப்பு சுகங்கொடுத்தது. குளிருக்காக நெருப்பை அணைத்து மகிழ்வதைப்போல, மகிழ்வுக்காக நெருப்பை இடைவிடாது அணைத்துக்கிடந்தான் உதியன்.

குரல்வாய்ப் பாணர்களின் போட்டிப் பாடல்கள் நாள்தோறும் நடந்தன. “கூலங்கள் எரிவதைப்போல கலங்கள் எரிந்தன” என்றான் ஒருவன், “நீரிலே மூழ்கும் வேழத்தின் கருமையேறிய முதுகினைப்போல கருகிய நாவாயின் அடிமரங்கள் ஆற்றிலே புதைந்தன” என்றான் மற்றொருவன். “பாண்டியனின் பதாகையில் பறந்துகொண்டிருந்த மீன்கள், எரிந்த நெருப்பின் சூடு தாங்காமல் ஆற்றுநீரிலே செத்து மிதந்துகொண்டிருந்தன” என்றான் இன்னொருவன். கடைசி ஆள் கவிதையை முடித்தான், “பாண்டியன் இனி சுடப்பட்ட மீன்”

மறுநாள் கூத்துக்கலைஞர்கள் உள்ளே நுழைந்தனர். பொருள்கள் ஏற்றப்பட்ட கலங்களில் பற்றிய நெருப்பு என்ன வாசனைகொண்டிருந்தது என்பதை ஒரு பாணன் விளக்கிப் பாடினான். கலங்களின் வடிவத்தையும் நெருப்பின் வேகத்தையும் பாடுவதைவிடுத்து எரிந்தபொருள்களை நினைவுபடுத்தியதற்காக பெரும்பொருளைப் பரிசாகக்கொடுத்தான் உதியஞ்சேரல். அதன்பின் வைப்பூரில் எரிந்த நெருப்பின் வாசனை சேரனின் அவையில்  நாள்தோறும் மணக்கத் தொடங்கியது.

சந்தனமும் அகிலும் எண்ணற்ற வாசனைப் பொருள்களும் இருந்த பிற கலங்கள் எரியும்பொழுது எழுந்த வாசனையை விவரித்துக் கூறின பல பாடல்கள். மிளகும் பாக்கும் கருகிய வாசனையைப் பாடிய கூத்தனுக்கு அள்ளிவழங்கினான் சேரன். அரிசந்தனமும் இலவங்கமும் பாதியெரிந்து மூழ்கியபொழுது எழுந்த வாசனை பற்றி மிகநுட்பமான குறிப்பை  பாடினி ஒருத்தி பாடினாள். அவளுக்கு உதியஞ்சேரல் கொடுத்த பரிசுப்பொருள்கள் பற்றித் தனிப்பாடலே உருவாயிற்று.

சேரனின் தலைநகரான வஞ்சி முழுக்க வைப்பூரின் வாசனையே மிதந்தது. ஆனாலும் உதியஞ்சேரலுக்கு ஆசை அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கூத்தர்களின் வாய்மொழி சலிக்கவே, வணிகர்களின் நேரடிக்கதறல் அவனுக்குக் கூடுதல் மகிழ்வைக் கொடுத்தது. துறைமுகத்தில் வந்திறங்கும் ஒவ்வொரு வணிகனும் ஒவ்வொரு கதையோடு வந்திறங்கினான். பெருவணிகன் என்று இறுமாப்புக்கொண்ட பலரின் கதை வைப்பூரோடு முடிவுக்கு வந்தது. சாத்துக்களின் தலைவன் சூல்கடல் முதுவன் இனி எந்தத் துறையிலும் தலைநிமிர்ந்து நுழையமுடியாது. அதுமட்டுமல்ல, பாண்டியனுக்குப் பெண்கொடுத்ததால் சாத்துக்களின் தலைவனுக்கே இந்தக் கதி என்பது கடல்போல் நிலைகொண்டுவிட்டது.

அழிந்த நாவாய்களுக்கும் கலங்களுக்கும் உரிமையாளர்கள் இழப்பைப்பற்றித் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இழப்பு அளவிடமுடியாததாக இருந்தது. எல்லாம் அழிந்தது என்று பல வணிகர்கள் கதறியபடி கடலுக்குள் சென்றனர். ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு உள்ளுக்குள் மகிழ்வோடு அரண்மனை திரும்பினான் உதியஞ்சேரல்.

துறைமுகம் வந்திறங்கிய வணிகர்கள் எல்லோரும் அழிந்த கதையைத்தான் சொன்னார்கள். யவனக்கப்பலில் பயணஞ்செய்த மொழிபெயர்ப்பாளன் ஒருவன், அழிந்த கதையை மட்டுமல்லாமல் அழித்தவர்களின் கதையையும் சேர்த்துச் சொன்னான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

அவன் ஹிப்பாலஸ்ஸின் நாவாயில் பணியாற்றியவன். பாண்டிய மன்னனின் பரிசாக முசுகுந்தர் கொடுத்த புதிய அடிமைகளைக் கப்பலின் மேல்தளத்தில் ஏற்றியதிலிருந்து அவன் கதையைத் தொடங்கினான். நடந்தவை எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். கதைகேட்ட உதியஞ்சேரலின் செவிகளில் பொறித்துகளை உமிழ்ந்தவன் அவன்தான்.

வாய்பிளந்து கேட்டுமகிழ்ந்த உதியஞ்சேரல் வாய்மூடி அமைதியானான். பாரிதான் இவ்வளவையும் செய்தான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அதன்பின் உதியஞ்சேரல் யாரிடமும் கதை கேட்கவேயில்லை. ஆனாலும் அதுவரை அவன் கேட்ட கதைகள் எல்லாம் அவனைச் சும்மா விடவில்லை. வைப்பூரில் எரிந்த நெருப்பின் சூடு வஞ்சிமாநகருக்கும் பரவியது.

நெருப்பு சுடத் தொடங்கியது. பறம்புமலை இருக்குமிடத்துக்கும் வைப்பூர் இருக்குமிடத்துக்கும் எந்தத்  தொடர்புமில்லை. நிலப்பரப்பால் தொடர்பே ஏற்படுத்திக்கொள்ள முடியாத பகுதியையே முற்றிலும் அழித்துள்ளான் வேள்பாரி. அதுவும் சின்னஞ்சிறு படையை மட்டுமே அனுப்பி. நாள்தோறும் சேரன் கேட்ட கதைகள் புதிய புதிய  சான்றுகளை அவனுக்குள் இருந்தே எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் தனக்குத்தானே எரியத் தொடங்கினான்.

பதற்றம் கூடியது. பறம்புமலை நோக்கிப் பாதையை உருவாக்கும் திட்டம் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது.  ஒன்றிரண்டல்ல, பல முனைகளிலிருந்தும் அடர்காட்டைக் கிழித்து சேரவீரர்கள் உள்நுழைந்துள்ளனர். ஏற்கெனவே வகுத்த திட்டப்படி படைகள் புறப்படவேண்டிய நாள் மிக அருகில் இருக்கிறது. ஆனால், படுக்கையிற்கிடந்த உதியஞ்சேரலின் உடற்சூடு அளவிட முடியாததாக இருந்தது.

தைகேட்டு மகிழ்ந்தபடி இருந்தான் செங்கனச்சோழன். பேரரசர் சோழவேழனின் மகன். முதலில் அவனுக்குத்தான் பொற்சுவையைப் பெண்கேட்டனர். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று சோழவேழன் நம்பியிருந்த பொழுதுதான், குலசேகர பாண்டியன் முத்துக்களை உருட்டிவிட்டு விளையாடத் தொடங்கினான். சூல்கடல் முதுவனின் சொற்கள் உருளும் முத்துக்களை மிதித்துச் சரிவுகண்டது. மண ஒப்பந்தம் பாண்டியர்களோடு என்று ஆனது.

உள்ளுக்குள் அவமானத்தை உணர்ந்தபடி இருந்த சோழவேழன் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இயல்பிலேயே தங்களைவிட சேரர்களும் பாண்டியர்களும் வலிமையோடு இருக்கின்றனர் என்று அவனுக்குத் தெரியும். அந்த வலிமைக்கு முக்கியக் காரணமாக வணிகமும் இருந்தது. எனவேதான் வணிகர்குலம் நோக்கி அவன் பெண்பார்க்கத் தொடங்கினான். ஆனால், நிலைமை கைமீறிப் போய்விட்டது.

திருமணச்செய்தி வந்துகொண்டே இருந்தது. அவமானங்களைக் கடக்க பெரும் பாடுபடவேண்டியிருந்தது. மாதக்கணக்கிற்பட்ட அவமானத்தை வந்துசேர்ந்த ஒற்றைச்செய்தி துடைத்தெறிந்தது. நினைத்து நினைத்து மகிழ்ந்தான். “ஒரு துறைமுகமே அழிந்ததா?” மீண்டும் மீண்டும் கேட்டான். கேட்டுக் கேட்டு மகிழ்ந்தான். 

தந்தையின் அறைக்குள் நுழைந்தான் செங்கனச்சோழன். உடனிருந்தவர்கள் விலகி வெளியேறினர். மகிழ்ந்துகிடக்கும் தந்தையைப் பார்த்து மகன் கேட்டான், “பாண்டியன் எரிந்ததற்கே இவ்வளவு மகிழ்கிறாயே! பறம்பு எரிந்தால் எவ்வளவு மகிழ்வாய்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 52

அதிர்ந்தான் சோழவேழன். மகனின் ஆற்றல் அவனுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இவ்வளவு இளம்வயதில் முடிசூட்ட வேண்டுமா என்று பலரும் தயக்கம் காட்டியபொழுதும் துணிந்து செங்கனனுக்குப் பட்டம் சூட்டினான். அதிர்ச்சியிலிருந்து மீளாமலே கேட்டான் சோழவேழன், “முடியுமா மகனே?”

“இதுநாள் வரை இவ்வினாவிற்கு  விடையின்றி இருந்தேன். இப்பொழுது அதனை அறிந்துவிட்டேன்”

“எப்படி?”

“நம்மையோ, நமது முயற்சியையோ இதுவரை பாரி அறியவில்லை. இனிமேல் அவன் அறியப்போவதேயில்லை. ஏனென்றால் அவனது முழுக்கவனமும் திசை திரும்பிவிட்டது.”

அவன் சொல்ல வருவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தான்.

 “ஏற்கெனவே அவமானப்பட்டு நிற்கும் சேரனும் புதிய அவமானத்தோடு நிற்கும் பாண்டியனும் இப்பொழுது ஒன்றிணைவார்கள். பறம்பின் கீழ்திசையிலிருந்தும் மேல்திசையிலிருந்தும் இவர்களின் படை நகரும். இருபெரும் பேரரசுகளின் தாக்குதலை முழுமூச்சோடு எதிர்த்து வலிமையோடு போர்புரிவான் பாரி” சொல்லி நிறுத்தினான் செங்கனச்சோழன். கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் சோழவேழன்.

தலைதிரும்பி கருவிழியை உருட்டியபடி சொன்னான், “ஆளரவமற்றுக் கிடக்கும் பறம்பின் வடதிசை மலைகளுக்கிடையே நம் படைகள் நகரும் ஓசையை அவன் உணரப்போவதேயில்லை.”

கண்ணிமைக்காமல் இருந்த சோழவேழன் அப்பொழுதுதான் தலைகுலுக்கி நினைவுமீண்டான். “நான் தாக்கப்போவது பறம்பின் தலைநகரையோ, பாரியையோ அல்ல” சொல்லியபடி இருக்கை விட்டு எழுந்தான் செங்கனச்சோழன்.

அவனுடைய சொற்களால் கட்டப்பட்டிருந்த சோழவேழனும் இழுபட்டு எழுந்து அவன் பின்னே சென்றான்.

“நாட்டை ஆள்பவர்கள் காட்டை ஆள நினைக்கும் மூடத்தனத்தை சேரனும் பாண்டியனும் செய்யட்டும். நான் ஆள்வதற்குப் பறம்பில் எதுவும் இல்லை. ஆனால், அடைவதற்கு ஒன்றிருக்கிறது. அதனை அடைவேன்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...