
ஜெயமோகன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில், பராமரிப்புப் பணி நடைபெறும்போது கிடைக்கும் மம்மி ஒன்றைக் கடத்திச்செல்ல சிலர் முயல்கிறார்கள். அதைத் துப்புதுலக்க வரும் காவல்துறை அதிகாரி பாண்டியனுடன் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் சேர்ந்து விசாரணைக்காக பூட்டான் செல்கிறார்கள். பல இன்னல்களைக் கடந்து, திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். அங்கும் எதிரிகள் துரத்தி வரவே அவர்களிடமிருந்து தப்பித்து ஹெலிகாப்டரின்மூலம் காட்மாண்டுவுக்கு வருகிறார்கள். அதே நேரம் லடாக்கில் இவர்கள் வேண்டுமென்றே தப்பவிட்டு வந்த சீன உளவாளி, சீனாவுக்கு அனுப்பிய ஏழு வரி ரகசியச் செய்தியை வழிமறித்து, பதிவுசெய்து அனுப்புகிறார்கள் நம் அதிகாரிகள். அதை டீகோட் செய்யும் முயற்சியில் பெருமளவு வெற்றிபெறுகிறார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். அதில் கிடைத்த தகவலின்படி திபெத்திலிருக்கும் ஜாக்கோங் மடாலயம் செல்லத் தயாராகிறார்கள்...
‘ஜாக்கோங் மடாலயம்’ , அதுவரை அவர்கள் பார்த்த மடாலயங்களிலேயே மிகப்பெரியது. அதை, ஒரு மடாலயம் என்றே அவனால் எண்ணமுடியவில்லை. அது, ஏராளமான கட்டடங்கள்கொண்ட மாபெரும் வளாகம். அவர்கள், மடாலயத்தின் முகப்பிலிருந்த ‘பார்க்கோர்’ என்னும் மிகப்பெரிய சதுக்கத்தை அடைந்தனர். அங்கிருந்து பார்த்தபோது, ‘U’ எழுத்தின் வடிவில் அமைந்த மடாலயம் தெரிந்தது. அதன் கூரை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது.அதன் பின்பக்கம் அலையலையாக எழுந்து நின்ற பனிமலைக்குக்கீழே, இன்னொரு சிறிய பனிமலைபோலத் தோன்றியது.

வெண்ணிற யானைக்கூட்டத்தின் காலடியில், ஒரு சிறிய வெள்ளை யானைக்குட்டி நின்றிருப்பதுபோல எனப் பாண்டியன் நினைத்தான். சதுக்கத்தின் நான்கு மூலைகளிலும் சாங்கோங் எனப்படும் கோபுரம் போன்ற அமைப்புகள் இருந்தன. அவற்றில், இரவும் பகலும் தூபம் புகைந்துகொண்டே இருக்கும். வெண்பனி மேலிருந்து பொழிந்துகொண்டிருக்க, அதன் நடுவே வெண்புகை கீழிருந்து மேலே சென்றது.
நோர்பா வியந்து அண்ணாந்து பார்த்தபடியே காரில் அமர்ந்திருந்தான். அவர்களை அழைத்துச்சென்ற கார், மிகப்பெரிய பயணியர் விடுதிமுன் நின்றது. வழிகாட்டி இறங்கிச்சென்று, அவர்களுக்கான தங்குமிடங்களை ஏற்பாடுசெய்தான். அவர்கள், பெட்டிகளுடன் இறங்கிச்சென்றனர்.
மிகக் கடுமையான குளிர். கனத்த கம்பளி ஆடைகளைக் கடந்தும் அந்தக் குளிர் நடுநடுங்கச்செய்தது. நேராகவே அவர்களை அறைக்குள் கொண்டுசென்றுவிட்டான் வழிகாட்டி. “ஓய்வெடுங்கள், நாளைக் காலை பார்க்கலாம்” என்று சொல்லி, தலைவணங்கி வெளியே சென்றான்.
நாக்போ, “நல்ல பசி என்றது” அதை எவரும் கண்டுகொள்ளவில்லை. “இது மட்டும் காதில் விழாதே” என அது முனகிக்கொண்டது.
அறை, மரத்தாலான சுவர்கள்கொண்டது. அங்கே, எல்லா கட்டடங்களுக்கும் இரட்டைச் சுவர்கள்தான். சுவர்களுக்கு நடுவே நாரும் பஞ்சும் வைக்கப்பட்டிருந்தன. ஆகவே, வெளிக்குளிர் உள்ளே வருவது குறையும். உள்ளே எரியும் கணப்பின் சூடும் வெளியேறாது.
அவர்கள், உடலைச் சூடாக்கிக் கொண்டிருக்கையில், பணியாளர்கள் உணவு கொண்டுவந்தார்கள். உணவை அடுப்பின்மேலேயே வைத்து, அப்படியே சூடாகக் கொண்டுவருவது அங்கே வழக்கம்.
நிலக்கரி அடுப்புமீது கெட்டிலில் இருந்த தேநீரை, கோப்பையில் ஊற்றினான் பாண்டியன். “வெண்ணெயா?” என்று குனிந்து பார்த்தான். சூட்டில் வெண்ணெய் உருகிக்கொண்டிருந்தது.
“ஆம், திபெத்திய வெண்ணெய்த் தேனீர் மிகப் பிரபலம். குளிருக்குத் தேவையான கொழுப்பை அளிக்கும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
பாண்டியன் அதைக் குடித்துப்பார்த்துவிட்டு, “சூப் போல இருக்கிறது” என்றான்.
``பழங்காலத்தில் பன்றிக்கொழுப்பைத்தான் போடுவார்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
இன்னொரு தட்டில் சூடான மோமோக்கள். ஒரு பெரிய பீங்கான் பானையில் சோறு இருந்தது.
“பழவாசனை வருகிறதே” என்றான் பாண்டியன்.
``கின்சின் பழச்சாறு சேர்த்த சோறு இங்கே பிரபலம்… சுவையானது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“இறைச்சி எங்கே?” என்று நாக்போ கேட்டது.
``இதோ இருக்கிறது, வேகவைத்த ஆட்டிறைச்சி. இது, திபெத்திய ரத்த கேக். ஆட்டு ரத்தத்தைக் காய்ச்சி, கெட்டியாக்கிச் செய்வது.”
“இனி, என்னிடம் எவரும் பேச வேண்டாம்” என்று நாக்கைக்கொண்டு வாயின் வெளிப் பகுதியை நக்கிக்கொண்டது நாக்போ. உணவு அளிக்கப்பட்டதும் கண்களை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
அவர்கள் அதைச் சாப்பிட்டு முடித்ததும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் “நாம் சற்று ஓய்வெடுக்கலாம். ஆனால், நாளையே நாம் இங்குள்ள தலைமை லாமாவைச் சந்திக்க வேண்டும்” என்றார்.
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் தன் கணிப்பொறியைத் திறந்து, மின்னஞ்சல்களைப் பார்த்தார்.
“என்ன செய்கிறீர்கள்?” எனப் பாண்டியன் கேட்டான்.

“எனக்கு மிக நெருக்கமான பௌத்த அறிஞர்களின் குழு ஒன்று உண்டு. அவர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்புகிறேன். அவர்கள் எவருக்காவது இதற்குப் பொருள் தெரிகிறதா என்று பார்க்கிறேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
சற்று நேரத்திலேயே பர்மா நாட்டுப் பிட்சு ஒருவர் தொடர்பில் வந்தார். டாக்டர், அவருடன் ஸ்கைப்பில் உரையாடினார்.
பர்மிய பிட்சு, “பௌத்த மரபில் தூங்குபவர்கள் எழுவது என்பது மிகவும் அர்த்தம் உள்ளது. மலைகளில் இருந்த பல்வேறு தெய்வங்களையும் பேய்களையும் அடக்கித்தான் பௌத்தம் அங்கே நிறுவப்பட்டது. அந்தத் தெய்வங்களை பௌத்தம் அழிக்கவில்லை. அப்படி அழிப்பது இந்து மதத்திலும் பௌத்த மதத்திலும் சமண மதத்திலும் வழக்கமில்லை. அவற்றை உருமாற்றி, பௌத்த தெய்வங்களாக ஆக்கிவைத்திருக்கிறது. அந்தத் தெய்வங்களில் சிலவற்றை பௌத்தத்திலிருந்து திருப்பி, பழையபடி ஆக்கப்போகிறார்கள் என்று அர்த்தம்” என்றார் பர்மா நாட்டுப் பிட்சு.
“நானும் அதையே நினைத்தேன்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“அமர்ந்திருப்பவர்கள் எழுவது எளிது என்ற வரியில்தான் குறிப்பு உள்ளது. அந்தத் தெய்வங்கள், அமர்ந்த நிலையில் இருப்பவை…”
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், “நாங்கள் அந்தத் தெய்வம் என்ன என்று கண்டுபிடித்துவிட்டோம். அதன் பெயர், ஷென்ரோப் மிவோச்சே. அது, அமர்ந்தநிலையில்தான் உள்ளது. அது, இங்கே பௌத்த மதம் வருவதற்கு முன்னாலிருந்த தெய்வம். இங்கே, மூதாதையரை அமரச்செய்து புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.”
“சினம் கொண்டவர்களுக்கு மண் கவசம் என்று சொல்லப்பட்ட வரியும் முக்கியமானது. அதன் அர்த்தம் தெரியவில்லை…” என்றார் பர்மா நாட்டு பிட்சு. “ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. உடனே அந்த மடாலயத்தின் தலைவரைப் பாருங்கள். இதையெல்லாம் சொல்லுங்கள். அங்கே ஒரு தாக்குதல் நடக்கக்கூடும்…”
“தாக்குதலா?” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
“ஆம், ஏதாவது பொருளைக் கைப்பற்ற வருவார்கள். அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் பொருளாக இருக்கும் அது” என்றார் பர்மா நாட்டு பிட்சு.
“இவர்கள், நமக்கு உதவுவார்கள் என நினைக்கிறேன். சுதந்திர நாடாக இருந்த திபெத்தை, 1950-ல் சீனா கைப்பற்றியது. இங்கிருந்த பௌத்த மதத்தைத் தடைசெய்தது. அப்போது, இந்தியாதான் திபெத்திய பௌத்தத் துறவிகளுக்கு ஆதரவு அளித்தது. ஜவஹர்லால் நேரு திபெத்திலிருந்து வந்த அகதிகளுக்கு, இந்தியா முழுக்க நிலம் ஒதுக்கி வாழ்க்கை வசதி செய்து அளித்தார். அவர்களுக்கு, இந்தியக் குடியுரிமையும் அளிக்கப்பட்டது. திபெத்திய பௌத்தத்தின் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் இடத்தில்தான் தங்கியிருக்கிறார்” என்றார் டாக்டர்.
நாக்போ பலமாகக் குறட்டைவிட்டது.
டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் பாண்டியனிடம் சொன்னார். “இந்த ஜாக்கோங் மடாலயம் பழங்காலத்தில் மர்மங்களின் கோயில் என்று அழைக்கப்பட்டது. கி.பி ஏழாம் நூற்றாண்டில், திபெத்தை ஆண்ட சோஸ்ங்ஸ்டன் காம்போ மன்னரால் கட்டப்பட்டது. இங்கே, ஏற்கெனவே இருந்த பான் மதத்தின் கோயிலைத்தான் பௌத்த மடாலயமாக மன்னர் மாற்றினார். இந்த மடாலயத்தைக் கைப்பற்ற பான் மதத்தினர் பலமுறை போர் செய்திருக்கிறார்கள். அதைவிட ஆச்சர்யமான ஒன்று உண்டு. இந்த மடாலயத்தைத் தாக்கி அழிப்பதற்காகவே, சீனாவின் மங்கோலிய மன்னர்கள் திரும்பத்திரும்பப் படை எடுத்து வந்திருக்கிறார்கள். இதை இடித்துவிட்டு அவர்கள் செல்வார்கள். கொஞ்ச நாளில் திரும்பக் கட்டிவிடுவார்கள்.”
“இங்கே இருந்து ஏதோ அபாயம் முளைத்துவரும் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள்” என்றான் பாண்டியன்.
“அது என்ன என்று தெரிந்தால், நம் தேடல் முடியும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
அவர்கள் கனத்த மெத்தைகளை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினர். நார்போ மட்டும் சிறிய கண்ணாடிச் சன்னல் வழியாக வெளியே தெரிந்த இமயமலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். இளநீல நிறமாக அவை தெரிந்தன. அவற்றின்மேல் நீல நிறமான ஒளி அலையடித்தது.
மறுநாள் காலை, நாக்போ எழுந்து குரைக்கத் தொடங்கியது. அதைக்கேட்டு நோர்பா விழித்தெழுந்தான். “என்ன நாக்போ” என்றான்.
நாக்போ மோப்பம் பிடித்தபடி, “எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கே கெட்ட நாய்கள் உள்ளன” என்று சொன்னது.
“கெட்ட நாயா? பேசாமலிரு” என்றான் நார்போ.
நாக்போ பயத்துடன் முனகியபடியே இருந்தது. அதன் வால் அடிவயிற்றில் பதிந்திருந்தது.
அவர்கள் கிளம்பும்போது வழிகாட்டி வந்து, “தலைமை லாமாவைச் சந்திக்க அனுமதி வாங்கிவிட்டேன்; அவர் அதிகம் பேசமுடியாது. ஏனென்றால், அவர் இங்கே சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார். அவரை வேவுபார்க்கிறார்கள்” என்றான்.
அவர்கள், ஜாக்கோங் மடாலயத்தின் முகப்பை அடைந்தனர். அன்று அதிகாலை வீசிய கடுமையான காற்றில் பனித்திரை விலகியிருந்தது. ஜாக்கோங் மடாலயத்தின் முகடு, மூன்று கலசங்களைக்கொண்டது. அது, பொன் பூசப்பட்ட பித்தளையால் ஆனது. காலை ஒளியில் பொன்னிறம் மின்னியது.
நோர்பா அதை நோக்கித் தலைவணங்கினான்.
“எல்லாவற்றையும் வணங்குகிறார்கள் முட்டாள்கள்” என்று நாக்போ முனகிக்கொண்டது.
மடாலயம் மண்ணாலான அடிச்சுவர்கள்கொண்டது. அதன்மேல், மரத்தாலான இரண்டு அடுக்கு மாளிகைகள் இருந்தன. சிவப்பு நிறம் பூசப்பட்டவை. அவர்கள் சுற்றுலா பயணிகளைப்போல உள்ளே சென்றார்கள்.
உள்ளே, மிகப்பெரிய கூடங்களில் ஏராளமான புராதனமான டோங்காக்கள் இருந்தன. மரத்தில் செய்யப்பட்டுப் பொன் வண்ணம் பூசப்பட்ட புத்தர் சிலைகளும் போதிசத்வர் சிலைகளும் வரிசையாக அமர்ந்திருந்தன.
மடாலயத்தின் மைய அறையில் மூன்றடுக்குத் தாமரைமலர்மேல், பொன்னிறத்தில் புத்தர்சிலை இருந்தது. புத்தர் 14 வயது சிறுவனாக இருக்கும் ஒரு சிலை இன்னொரு வழிபாட்டுக்கூடத்தில் இருந்தது. அத்தனை சிலைகளும் ஆழ்ந்த அமைதியில் அரைக்கண் மூடியிருந்தன. “தூங்கும் குழந்தை புன்னகைப்பதுபோல இருக்கிறது” என்று பாண்டியன் நினைத்துக்கொண்டான்.
வழிகாட்டி அவர்களை வெவ்வேறு கூடங்கள் வழியாக அழைத்துச்சென்றான். அங்கே இருந்த மனிதர்களைவிட 100 மடங்கு புத்தர்சிலைகள் இருந்தன. புத்தர்களால் ஆன பெருங்கூட்டம் என்று நோர்பா நினைத்தான்.

நாக்போ முனகி அழுதுகொண்டே வந்தது. “என்ன ஆயிற்று உனக்கு?” என்றான் நார்போ.
“கெட்ட நாய் இங்கே இருக்கிறது” என்று நாக்போ சொன்னது.
வழிகாட்டி அவர்களைத் தலைமை லாமாவின் அறைக்குமுன் கொண்டுசென்றான். “உள்ளே இருக்கும் வெள்ளைக்காரப் பயணிகள் வெளியே வந்ததும் நீங்கள் உள்ளே செல்லுங்கள். உள்ளே சீன அரசின் ரகசிய ஒலிப்பதிவுக் கருவிகள் உள்ளன. நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சரியாக 6 மணிக்கு அவை செயலிழக்கும். உடனே, இங்கே உள்ள அவர்களின் ஒற்றர்கள் அதைச் சரிசெய்வார்கள். சரியானதும் உங்கள் செல்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வரும். அந்த இடைவெளியில் பேசி முடித்துவிடுங்கள். அவருக்கும் அது தெரியும்” என்றான்.
அப்போது நாக்போ பரிதாபமாக அழுதது. நோர்பா பார்த்தபோது, நாக்போ வாலை அடிவயிற்றில் ஒட்டிவைத்து, அப்படியே தரையோடு படுத்துவிட்டது. அதன் பார்வை போன திசையில், ஒரு குட்டிநாய் வந்தது. அதன் உடம்பு முழுவதும் முடி. வாலும் தலையும் ஒன்றுபோலவே இருந்தன. கண்கள் மிகப் பெரியவை. திபெத்தில் உள்ள பூதங்களின் ஓவியங்களில் உள்ளவைபோல.
“அது, லாஸா என்ற நாய். இங்கே, திபெத்தில் உருவாக்கப்பட்டது. அதை இங்கே லாமாக்கள் வளர்ப்பார்கள். பயங்கரமான காவல் நாய். புலியைக்கூட எதிர்த்து நிற்கும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.
லாஸா நாய், நாக்போவைப் பார்த்ததும் நாக்போ கண்களை மூடிக்கொண்டு நடுங்கியது. அதன் வால் மட்டும் ஆடிக்கொண்டிருந்தது.
வெள்ளைக்காரர்கள் வெளியே வந்தார்கள். “உள்ளே செல்வோம்” என்றார் டாக்டர். அவர்கள் உள்ளே சென்றார்கள்.
(தொடரும்...)

லாசா நாய் Lhasa Apso
திபெத்தின் தலைநகரான லாஸாவில் உருவாக்கப்பட்ட நாய் இனம் இது. உடம்பெல்லாம் முடி இருக்கும். முகம் முடியால் மூடப்பட்டிருக்கும். வால் தலைபோலவே எழுந்து நிற்கும். முடி போர்வைபோல உடம்பை மூடித் தொங்கும். கண்கள் மிகப் பெரியவை. நெல்லிக்காய்போல இருக்கும். ஆப்ஸோ என்ற வார்த்தைக்கு, நீண்ட தாடி என்று திபெத்திய மொழியில் அர்த்தம். லாஸா மிக அன்பான நாய். எளிதில் பழக்கலாம். ஆனால், காவலில் மிகக் கடுமையானது. எந்த எதிரியாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும். கடுமையான குளிர் நாடுகளிலேயே இதை வளர்க்க முடியும்.