சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

போர்க்களம்

வீதி வழியே சென்ற பைத்தியம்
தன் கையில் நீண்ட இறகொன்றை வைத்திருந்தான்.
இறகால் உன்னைக் குத்திக் கொன்றுவிடுவேன் என்று
எதிரே வருபவர்களை மிரட்டிக்கொண்டிருந்தான்.
வெயிலில் அவன் சாணை தீட்ட சாணை தீட்ட
மிகக் கூர்மையாகப் பளபளத்தது அந்த இறகு.
உண்மையில் இத்தனை மென்மையான வாளால்
கொலை செய்வதானால்
கொலை படுவதுகூட சுகந்தான் இல்லையா?
உயிர் போகாமல் கொலை செய்வது
காமத்தில் மட்டும்தான் சாத்தியம்.
போர்க்களத்தில் இல்லையே!
எங்கே என்னைக் குத்திக் கொல் பார்ப்போம் என்று
மார்பை விடைத்துக்கொண்டு நிற்கிறான் ஒரு துக்கிரி.
பைத்தியத்தின் கைகள் நடுங்குகின்றன.
அவனறியாமல் வாளைக் கீழே நழுவ விடுகிறான்.
காற்றில் மிதந்து மிதந்து இறங்கி வரும்
சமாதானத்தை ஏந்திக்கொள்ள
பூமி அவ்வளவு ஆசையாகக் காத்திருக்கிறது.

- கார்த்திக் திலகன்

சொல்வனம்

படிமம் 

அதோ ஒரு கல்
யுகம் யுகமாய் நதிக்கரையில்
அவ்வப்போது நீருடன் சல்லாபித்த ஒன்று.
கல்லினுள் நீரின் சலனங்கள்
நீரிலும் கல்லினது.
பாசி படர்ந்தாலும் கல் அதுவே
வற்றிச் சுருங்கினாலும் நதியே
பாசி என்பதோர் படிமம்

- தேவசீமா

இயந்திரப் பிடியில் சிக்கிய நூல் 

பன்னிரண்டு வருடங்கள்
புத்தகப்பை சுமந்த அவளின் முதுகுத்தண்டுக்கு
இனி பணியில்லை....

மதிய உணவுக்கூடையைக் கையிலெடுத்து
நூற்பாலை வாசனையை
நுகரச் சொன்னது
தந்தையின் திடீர் மரணம்.

ஒற்றை நூலென  உருமாறிவருகிறாள்
இரைச்சல் குவியும் இரவு ஷிப்ட்டினால்.

குடும்பத்தில் விழுந்த
ஓசோன் ஓட்டையை அடைக்கத்
திராணியற்றவள்மீது
மற்றுமொரு இடியாய்
நாள்தோறும்
ஆடையை ஊடுருவக் காத்திருக்கும்
எண்ணற்ற புற ஊதாக்கதிர்கள்.

சகித்துக்கொண்டு போவதன்றி
வேறென்ன வழியிருக்கிறது
எவரும் கண்டுகொள்ளாத
இயந்திரத்தில் சிக்கிய இத்துப்போன நூலுக்கு?

பணிமுடிந்து வெளியேறுகையில்
உதறிச்செல்லும்
தூசிகளைப் போல்
உதற மட்டுமே முடிகிறது
அன்றைய நாளின் அவமானங்களை.

- அயன் கேசவன்