
மதுமிதாஸ்ரீ - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா?
ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அவளது முகம் சற்று மங்கலாகத்தான் ஞாபகம் இருந்தது. ஆனால், பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆம் நிர்பயா!
அத்தனை கொடுமைகளுக்குப் பின்னர், நிர்பயா உயிர் பிழைத்திருந்தால் நிம்மதியாக வாழ்ந்திருப்பாளா?

சற்று முன்னர்தான் தற்கொலைக்கான மரண ஓலையை எழுதி முடித்தேன். கையில் பிளேடால் திமிங்கலம் ஒன்றை வரைந்துகொண்டு தற்கொலை செய்துகொள்ளலாமா எனத் தோன்றுகிறது. புளூவேல் கேம் விளையாடியதாக நம்பிவிடுவார்கள். எப்படியும், ஒரு பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை எந்த நியூஸ் சேனலும் அரசியலாக்காமல் காட்டப் போவதில்லை. இறந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என இரு நாள்களுக்கு நான்தான் ட்ரெண்ட்! யார் இறந்தாலும் இதைத் தவிர வேறு என்ன செய்துவிடப்போகிறீர்கள்? இடையில், யாரோ ஓர் அரசியல்வாதியின் குற்றங்கள் அம்பலப்படும் செய்திகள் வந்தால் என் கதை இன்னும் ஒரு வாரம் ஓடும் அவ்வளவுதான். இப்போது நான் இந்தப் பாலத்திலிருந்து கூவத்தை நோக்கி நடக்கவே யத்தனிக்கிறேன். யாராவது என்னைக் கவனிக்கிறீர்களா? என் பெயர் என்ன என்று தெரிந்துகொள்ள முற்பட்டால், நாளைய செய்தித்தாளையோ அல்லது அதற்கடுத்த நாள் செய்தித்தாளையோ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அப்படியும் உங்களுக்கு என் பெயரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால், அது எனக்கு ஓர் ஆறுதலான செய்திதான்.
நான் அமுதா. நீங்கள் இதைச் செய்தியாக வாசிக்கும் போது என் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டதாகப் பொய் சொல்லியிருக்கலாம். தகப்பன் பெயர் சிவப்பிரகாசம் என்று எப்படியும் செய்தித்தாள்களில் போடலாம். பி.இ. (ஐடி) இதுவே போதுமான ஆர்வத்தை உங்களுக்கு ஊட்டியிருக்கும். இருந்தாலும், மேலும் சில தகவல்கள்... என் சொந்த ஊர் காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கன்னிகாபுரம். ஆம், கவிஞர் முத்துக்குமாரின் சொந்த ஊர்தான்.
இது எல்லாம் ஐடென்டிட்டி ஆவதற்கு முன்பாகவே என் அரை நிர்வாணப் படம் நெட்டில் வந்து ஐடென்டிட்டி ஆனது.
இப்போது டூவீலரில் சென்றால் எல்லோரிடமும் ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பார்களே? ஒருவேளை என்னிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கேட்கும்போதோ அல்லது ஆதார் அட்டை கேட்கும்போதோ, சிரித்தபடி, “யோவ்... என்னைப் பார்த்ததில்லையா?” எனக் கேட்குமளவுக்குத் திமிர் இருந்திருந்தால் அல்லது பக்குவம் இருந்திருந்தால் இப்படி இங்கே நின்று கொண்டிருக்க மாட்டேன்.
பதின்வயது என்றால், பிக் பாஸ் வீட்டில் இருப்பதுபோல எப்போதும் பத்துக் கண்கள் நம்மை உற்று நோக்குவதாக எல்லோருக்குமே தோன்றும். ஆனால், இப்போதும் என்னை எல்லோரும் அப்படிப் பார்ப்பது வெறும் பிரமையா, ஏளனமா அல்லது இதுதான் யதார்த்தமா?
என் படங்களை லட்சக்கணக்கில் ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள். உலகம் ஒரு வட்டம் என்பதை குளோபலைசேஷனுக்குப் பின்னர் நான் ஒப்புக்கொண்டுவிட்டேன். இப்போது என் படங்கள் சுற்றிச் சுற்றி என்னையும் வந்து சேர்கிறது.
ஜஸ்ட் ஷேர் செய்து கடந்து செல்லும் இந்த உடல் அத்தனை அற்பமாகிப் போய்விட்டதா? இதை கலாசாரக் கோளாறு எனச் சொல்லி அரசியல் பேசக்கூட ஆசையாக உள்ளது. இறக்கப் போகிறவளுக்கு இதெல்லாம் எதற்கு? இன்று என் வருத்தமெல்லாம் யாருக்காக நிர்வாணமாக நின்றேனோ, அவனே இதற்கும் காரணமாகிவிட்டான், மன்னிச்சிடு கார்த்திக்!
கார்த்திக்! இந்தப் பெயரைக் கேட்டாலே துறுதுறு எனச் சுற்றும் எண்பதுகளின் நாயகன் நினைவுக்கு வரலாம். இவன் கார்த்திக்தான். ஆனால் ‘ராஜபார்வை கமல்! கண் இல்லை எனப் பரிதாபப்பட்டதால் முதல் சந்திப்பிலேயே சப்பென அறைந்தவன்! மோதலில் தொடங்குவதெல்லாம் காதல் என்ற கான்செப்டில் சப்தமிட்டபடி அவனைச் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறேன். அவனை விரும்ப ஆயிரம் காரணங்கள் இருந்தன.
சென்னைக்கு அருகில் உள்ள ஒரு இன்ஜினீயரிங் கல்லூரியில்தான் நாங்கள் இருவரும் அந்தப் பயணத்தை ஆரம்பித்தோம். அவன் கல்லூரியின் சிஸ்டம் இன்ஜினீயர், நான் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறேன். ‘கண் இல்லாதவர் எப்படி சிஸ்டம் இன்ஜினீயர் என்று கேட்கிறீர்களா? அது உண்மை. என்னால் அவனைப்போல வாழ்க்கையை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் நீங்கள் யாரும் கவனிக்காத ஓர் இடத்தில் இப்படி நின்றுகொண்டிருக்கிறேன்.
முதலில் கார்த்திக் மீது நான் பரிதாபப்பட்டதாக அவன் நினைத்திருந்தான். அந்த நினைப்பே என் மீது அவனுக்குப் பரிதாபம் கொள்ளச்செய்தது. அதுவே காதலானது.
தன் பார்வையின்மையைக் காட்டிக் கொள்ளும் எதையும் அவன் செய்ததில்லை. கூலிங் கிளாஸ்தான் அணிவான். எப்போதும் புளூ டூத் காதில் இருக்கும். செல்போன், கம்ப்யூட்டர் என அனைத்தையும் வாய்ஸ் கமென்ட் மூலமாகவே இயக்கிவிடுவான். வகுப்பறையில் இருக்கும்போதே அடிக்கடி, ‘ஹாய் திஸ் ஈஸ் மெர்சி’ என வாய்ஸ் கால் ஒலி கேட்டபடி இருக்கும், பல சமயம் கட் செய்வான், சில சமயம் முணுமுணுப்பான். அந்த மெர்சி யார் என இன்று வரை தெரியாது. அவன்மீதான நம்பிக்கை இந்த அளவு இருக்க, ஒரு நாள் பீச்சின் கடல் சப்தத்துக்கு இடையே ‘இச்’சென்ற சப்தம் மட்டும் அவனைத் தொந்தரவு செய்திருந்ததை உணர முடிந்தது.
சென்னை பீச்! வேறு வழி இல்லை. ஆனால், அவன் அன்றுதான் மௌனம் உடைத்தான். ‘வழக்கமா பாய் ஃபிரெண்டுக்காகத்தான் பொண்ணுங்க நீட்டா டிரஸ் பண்ணி இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க இல்லை?’ எனக் கேட்டான். என் பதில் கடல் அலைகளின் சப்தத்தில் அவனுக்குள் செல்லவில்லை. எனக்குள்ளேயே சன்னமாக ஒலித்தது அது.
‘பசங்க பொண்ணுங்களை செமையா புகழ்வாங்க அமுதா. நீ ரொம்ப அன்லக்கியா? அப்படி ஃபீல் பண்றியா?’ எனக் கேட்டான்.
அவன் தோள்களில் சாய்ந்து பதில் பேசாமல் இருந்தேன். மௌனம் எல்லா நேரமும் சம்மதம் அல்ல என்று அவனும் அறிவான்.

வாய்ஸ் ரெககனிஷன் சாஃப்ட்வேர் போல, தொடுவதால் படத்தின் வடிவத்தை உணர்ந்து கொள்ளும் விதமாக சாதாரணப் படங்களையும், பிரெய்லி வடிவத்துக்கு செல்போனில் மாற்றும் செயலி... இதுதான் அவனுடைய அடுத்த டார்கெட் என்பதைப் பல நிறுவனங்களுக்கு ஏறி, இறங்கி விளக்கிக்கொண்டிருந்தான். அதற்காகப் பல பல படங்களை நாங்கள் தரவிறக்கம் செய்து, முயன்றுகொண்டிருந்தோம். சாலையைக் கடப்பதில் எப்போதும் கவனம் செலுத்தும் அவனிடம் அன்று நான்தான் கடைசியாக உரையாடினேன். கிட்டத்தட்ட புராஜெக்ட்டை வெற்றிகரமாக உருவாக்கிய நிலையில், ஹைதராபாத்தின் ஐடி நிறுவனம் ஒன்று கார்த்திக்கை இந்தச் செயலுக்காக ஒப்பந்த அழைப்பை விடுத்திருந்தது.
மகிழ்ச்சியில் பதின்பருவத்தின் காதல் என்னென்ன சாகசங்கள் செய்யத் துணியுமோஅத்தனையும் மனதிற்குள் ராட்டினம் ஆடின. இருந்தும் எப்போதுமே இருவருக்குமான எல்லைகள் நிர்ணயித்திருந்தோம். கார்த்திக் ஹைதராபாத் கிளம்பிக்கொண்டிருந்தான். ‘கார்த்திக், நான் சில படங்கள் அனுப்பறேன். இந்த ஆப் வேலை செய்ய ஆரம்பிச்சதும், முதன் முதலில் இந்தப் படங்களைத்தான் நீ பார்க்கணும்’ என செல்போனில் சொன்னேன்.
கார்த்திக் எதையோ உணர்ந்தவனாக, ‘எப்படியும் என்னைக் கவுக்கலாம்னு முடிவு பண்ணிட்டே. அனுப்பு!’ என போனை வைத்த விநாடியிலேயே விதவிதமாக பல செல்ஃபிக்களை அனுப்பினேன்.
அப்படியே வாட்ஸ் அப் செய்துவிட்டு அம்மாவின் அழைப்பு நோக்கி ஓடினேன். மறுநாள் வரை கார்த்திக்கின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பதற்றத்தை அன்று காலையிலிருந்து அதிகமாக்கியது. கெட்ட கனவுகள் பொய்யாக வேண்டும் என்கிற பதற்றம் அது.
ஆம்புலன்ஸ், ஹாஸ்பிடல் எனக் கெட்ட கெட்ட கனவுகள் என்னை அடிக்கடி துரத்தினாலும், அது உண்மையென்பதுபோல கார்த்திக்கின் மரணம் மிகக் கொடூரமான ரோடு ஆக்ஸிடென்ட் வழி நிகழ்ந்த அன்றே இப்படி முடிவெடுத்திருக்கலாம். வாழ்க்கை குறித்த கார்த்திக்கின் வார்த்தைகள், போராட்டங்கள் குறித்த அவனது தியரிகள் என் இருப்பின் அவசியத்தை உணர்த்தின.
எனினும் பித்துப்பிடித்தவள்போல எந்த உணர்வும் இன்றி இரண்டு நாள்கள் இருட்டறையில் கழித்தேன். வீட்டில் இருந்தால் பிரச்னை என, தோழி அறையில் தங்கிக்கொண்டேன். மூன்றாவது நாள் செல்போன் ஃபிளாஷ். அதுதான் கடைசியாக நான் பார்த்த ஒளி. அதோடு உலகம் மட்டும்தான் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கார்த்திக் போல இல்லாமல் நான் பார்வை தெரிந்தும் அவற்றைக் கண்டுகொள்ளாதவளாக முயன்று பார்த்தேன். கார்த்திக் அசலானவன். அமுதா அப்படியில்லை என்பதே அசல்.
கார்த்திக்குக்கு நான் அனுப்பிய அரைகுறை படங்கள் அனைத்தும் நெட்டிசன்களால் பதிவேற்றம் ஆகியிருந்ததை வாட்ஸ் அப் வழியாகவே பார்க்க நேர்ந்தது. அண்ணனிடமிருந்து அழைப்பு வந்ததும், கூனிக்குறுகி போனை எடுத்தேன். ‘எங்கே இருக்கே, ஊட்டியா?’ எனக் கேட்டான். இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என போனை கட் செய்தேன். தொடர்ந்து அப்பா, அம்மா என என் குடும்பமும் சுற்றமும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் இப்போது தோழி அறையிலும் இல்லை. அம்மா நிச்சயம் அழுதிருப்பாள் என நினைத்தேன், வாட்ஸ் அப்பில் வசைபாடி அனுப்பியிருந்தாள். அப்பாவோ என் படங்களைத் தாங்கிய முகநூல் பதிவுகள் அனைத்தையும் அனுப்பி கேவலமாகப் பேசிக்கொண்டிருந்தார். வாட்ஸ் அப்பின் ஒரே வசதி, வருவதை வாங்கிக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் மட்டும் பேசிக்கொள்ளலாம்.
யாரைப் பார்க்கவும் அச்சம்... உடலை இரு ஆடைகள் கொண்டு போர்த்தியிருந்தேன். வெயிலுக்கு அணியும் டூவீலர் முகமூடியையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும், பார்க்கும் கண்கள் எல்லாம் என்னை ஸ்கேன் செய்வது போல அருவருப்பாகவே இருந்தாலும், உடல் என்பது இத்தனை அருவருக்கத்தக்கதா என உணர்ந்த நொடி! ‘ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் ஸ்லீப்பிங் பில்ஸ் இரண்டு வேளைக்கு மேல் தர மாட்டேன் அல்லது ‘தரவே மாட்டேன்’ என்று சொல்லும் மெடிக்கல்கள் பத்துப் பதினைந்து ஏறி, இதுவரை பன்னிரண்டுதான் சேர்ந்திருக்கிறது. இது போதுமானதா என்று தெரியாமல் சற்று முன்னர்தான் இவ்வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன்.
இப்போது இந்தப் பாலத்தில் கூவத்துக்கும் சாலைக்குமான வழியில் காலில் ஏதோ இடறியது. அந்த சப்தத்தைச் சேர்ந்தாற்போல கூவத்தில் ஏதோ பொத்தென விழுந்த சப்தமும் கேட்டது. அது நான்தானா என்று எனக்கே ஒரு சந்தேகம். நான் ஏன் அந்தக் கூவத்தில் விழவில்லை என்பதுபோல், அந்த மாய சப்தம் எனக்குள்ளே என்னைத் தூண்டுகிறதுபோல. இப்போது வரை என்னை நீங்கள் வெகு சுலபமாகக் கடந்துகொண்டிருக்கிறீர்கள். கார்த்திக்குக்கு உலகமே கரிசனம் காட்டும்போது அதை வெறுத்தான். அதே உலகம் எனக்கு ஏன் முற்றிலும் வேறாக இருக்கிறது.
ஆனாலும் கூவம் சரியான இடம்தான். இறந்த பின்னும் நான் யார் என என் உடல் தெரியாமல் இருக்கவே இப்போது கூவத்துக்குள் சாக முடிவெடுத்து நிற்கிறேன்.
வாட்ஸ் அப்பில் என்னைப் பற்றிய நாற்றத்தோடு ஒப்பிட்டால், கூவம் கொஞ்சம் தேவலாம்தான். இன்னும் நான்கடிக்குள் நான் மயங்கிவிழ வாய்ப்பிருக்கலாம் என நகர்ந்து கொண்டிருந்தபோது, காலில் ஏதோ தட்டுப்படுகிறது. கூவத்தில் குப்பைக்கா குறை? ஆனால், அது ஏதோ ஒரு முனகல் சப்தம்.
சட்டென நகர்ந்து கீழே பார்த்தேன். கை ஒன்று மேலே என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதிர்ச்சியில் ஓட முற்பட்டு பின் நிதானித்துப் பார்த்தேன். ஒரு சிறுவனின் கை. வேகமாக அந்தக் கையை இழுத்து மேலே தூக்கினேன். ஆறு வயது இருக்கலாம். முனகலில் இருந்தான். அருகில் யாரும் இல்லை. என் மீதிருந்த ஒவ்வொரு துணியாக எடுத்து அவன் சேற்றைத் துடைத்த போது அரை உயிராய் அவன் முனகல் அதிகமானது.
“அக்கா! அக்கா!” என்றான். கிட்டத்தட்ட எனக்கும் அவனின் நிலைதான். ஆனால், இப்போது என்னால் இறக்க முடியாது! அவனை மடியில் கிடத்தியபடி ``யார் நீ?” எனக் கேட்டேன்.
அனாதை இல்லத்திலிருந்து கடத்தி வரப்பட்டவன் என்பதையும், ஓரினச் சேர்க்கைக்காக வதைக்கப்பட்டு, கூவத்தில் தூக்கியெறியப்பட்டவன் என்பதையும் சொல்லத் தெரியாத பாஷைகளில் சொல்லிக்கொண்டிருந்தான். உடல் முழுவதும் காயங்களின் மீதான சேற்றின் ஏற்றத்தாழ்வுகள் என்னையும் பற்றிக்கொண்டது.
“அக்கா! பசிக்குது” என்றான். அவனைத் தூக்கிச் சுமந்தவாறு இப்போது நடக்கத் தொடங்குகிறேன்.
இப்போது சேறு துடைத்துப்போட்ட அந்த முகமூடி இல்லை. என் மார்பின் மீதான துப்பட்டாகூட இல்லை. ரோட்டுக்கடை ஒன்றில் நின்றோம், ஏற இறங்கப் பார்த்தாலும், என் கையில் காசில்லை எனத் தெரிந்தும் இரண்டு பரோட்டோக்களைத் தந்தார் காதர் பாய்.
அந்த ட்யூப்லைட் வெளிச்சத்தில் அவன் நெற்றியின் மீது ஒட்டிக்கொண்டிருந்த பிங்க் நிறச் சாயத்தைத் துடைத்தபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவன் வாய் திறந்து நிற்க, ``உன் பேர் என்ன?” எனக் கேட்டேன்.
“கார்த்திக்’’ என்றான்.