மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 53

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

பிலரின் முகம் இவ்வளவு கலக்கத்துடன் எப்பொழுதும் இருந்ததில்லை. முதிர்ந்தமரம் பட்டையை உதிர்ப்பதைப்போல அனுபவத்தை உதிர்த்தபடி வானத்தைப் பார்த்துச் செழித்திருக்கும் திருமுகம். தெளிவுகொண்ட அவரின் சொற்கள் எச்சூழலிலும் மனதைத் துவளவிடாதவை. ஆனால், இப்பொழுது பெருங்குழப்பம் அவருள் சூழ்ந்துள்ளது. சொற்களை விட்டு விலகி அமைதிகொண்டே நின்றார்.

சொற்களின் மீது தன் ஆசான் எவ்வளவு காதல்கொண்டவர் என்பதை அங்கவை அளவுக்கு உணர்ந்தவர் பறம்பில் வேறு யாருமில்லை. எழுதக்கற்கும் வரை உலகைச் சொற்களின் வழியாகப் பார்த்துப் பழகியவர்கள், எழுதக்கற்ற பின்தான் உலகை விழுங்கி நகரும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு என்பதை உணர்வார்கள். அவ்வாற்றலை உணர்த்திய ஆசான் சொற்களிடமிருந்து இவ்வளவு விலகி நிற்பதேன் எனக் காரணம் புரியாமல் திகைத்தாள் அங்கவை.

பிற்பகல் நேரத்தில், வேயப்பட்ட குடிலில் அவர்கள் அமர்ந்திருந்தனர். ஆசான் சொல்வதை அங்கவை எழுதிக்கொண்டிருந்தாள். மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச்சொல்கூட ஒருவரைக் காட்டிக்கொடுக்கும்; இன்னொருவரால் கண்டறியப்படும். குனிந்து எழுதிக்கொண்டிருந்த அங்கவை தலைநிமிரவில்லை. சொல்லப்பட்ட சொல்லின் வழியே ஆசானின் எண்ணத்துக்குள் போக முயன்றுகொண்டிருந்தாள். எழுத்தை விட்டு வெளியேதான் அங்கவையின் மனம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கபிலரும் அறிவார். இருவரும் தெரிந்தேதான் ஒளிந்துகொண்டிருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 53

குடிலின் மறைப்புக்குப் பின்னால் பறவையின் கீச்சொலி கேட்டது.  குனிந்து எழுதிக்கொண்டிருந்த அங்கவை நிமிர்ந்துபார்த்தாள். அவளால் குரலோசையைவைத்துப் பறவையைக் கணிக்க முடியவில்லை. மீண்டும் ஒருமுறை கீச்சொலி கேட்டது. கழுத்தை நீட்டிப்பார்த்தாள்; தெரியவில்லை.

“வெளிப்புறம் போனால்தான் கண்டறியமுடியும்” என்றார் கபிலர்.

ஆசான் சொல்லிமுடித்த கணத்தில் அவரது எண்ணத்தை அறிந்தாள் அங்கவை. எழுந்தவள் அப்படியே உட்கார்ந்தாள். கண் கலங்கியது. அவளால் எதுவும் பேசமுடியவில்லை.

“ஏன் போகாமல் உட்கார்ந்துவிட்டாய்?”

அங்கவையிடமிருந்து மறுமொழி வரவில்லை.

“இதைப்போல்தான் என்னாலும் போகமுடியவில்லை.”

சற்றே அமைதிக்குப்பின் மெல்லிய குரலில் கேட்டாள், “பறம்பிலிருந்துகொண்டு உங்களால் கண்டறிய முடியாத உண்மையென்ன ஆசானே?”

அவள் நிமிரவில்லை. கலங்கிய கண் ஆசானுக்குத் தெரியவேண்டாம் என நினைக்கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது.

“தேவவாக்கு விலங்கிற்காக இவ்வளவு பெரியமுயற்சி ஏன் செய்யப்பட்டது?”

தலைநிமிர்ந்து பார்த்தாள் அங்கவை.

“வைப்பூரும் அருகன்குடியும் எரிந்தபின் பாண்டியன் அடுத்து செய்யப்போவதென்ன?”

கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 53



“இதைப்போல எண்ணற்ற கேள்விகளுக்கான விடை பறம்பை விட்டு வெளியில் போனால்தான் கிடைக்கும். ஆனால், பாரியைப் பொறுத்தவரை இக்கேள்விகள் எதற்கும் விடை அறியவேண்டிய தேவையில்லை என்று கருதுகிறவன்.”

“உங்களைப் பொறுத்தவரை?”

“இக்கேள்விக்கான விடை பறம்பின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. இதை அறிதல் அவசியம்.”

“உங்களை நான் நன்கு அறிவேன்” என்று சொல்லிவிட்டு, சற்று இடைவெளியுடன் தொடர்ந்தாள், “கட்டாயம் என்று கருதியிருந்தால் நீங்கள் போயிருப்பீர்கள். போகாமல் இருக்க அதனினும் பெருங்காரணம் இருக்க வேண்டும்.”

வியப்போடு அங்கவையைப்  பார்த்தார் கபிலர். பார்க்கும்பொழுதே தலையசைத்துக் காரணம் உண்டு என்பதைத் தெரிவித்தார்.

“என்ன?” என்று அவள் கேட்கவில்லை. ஆசான் தன்னுள் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார். அவர் நினைக்கும் சொற்களின் மேல் கால்பதித்து நடந்து வரட்டும் என்று காத்திருந்தாள்.

“நான் வெளியிற் போவது பறம்புக்கு நல்லதல்ல.”

எதிர்பாராத சொல்லாக இருந்தது. இந்தச் சொல்லிற்குள் இருக்கும் ஆழம் புரியவில்லை. கண்களை உருட்டியபடி அவரைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

கபிலர் சொன்னார், “பறம்பின் உள்ளடுக்கு களைப்பற்றி, எவ்வியூரைப்பற்றி, பாரியைப்பற்றி, இங்குள்ள வாழ்வைப்பற்றி வேந்தர்களுக்கு எதுவும் தெரியாது. இரவில் கூத்துநிகழ்த்திச் செல்லும் பாணர்களின் பார்வையில்தான் அவர்கள் பறம்பைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வியந்ததை, அறிந்ததை, உணர்ந்ததைப் பாடித்திரிவதுதான் எனது தொழில். ஆனால், எனது வாழ்வு முழுக்க வியந்து, அறிந்து, உணர்ந்தவற்றைவிட, பறம்பில் நான் உணர்ந்தவைதாம் அதிகம். எனது மொழியே பறம்பின் மொழியாகிவிட்டது. எனது குரல் குறிஞ்சியின் குரலாகிவிட்டது. இனி நான் பாடும் ஒவ்வொரு பாடலும் பறம்பின் பாடல்தான். நான் என்னைப் பறம்பனாக உணர்ந்துவிட்டேன்” சொல்லி நிறுத்தினார் கபிலர். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 53

அங்கவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அதுதான் எனது அச்சத்திற்குக் காரணம்” கபிலரின் குரல் இறுகியது.

“பறம்பின் ஆற்றல் ஒவ்வொரு செடியிலும் கொடியிலும் மலையிலும் மடுவிலும் இருக்கிறது. நான் இங்குள்ள மனிதர்களைப் பாடாமல் இயற்கையை மட்டுமே பாடினாற்போதும், எதிரிகளுக்கு அதைவிடச் சிறந்த போர்க்குறிப்பு வேறொன்றும் இல்லை.”
அங்கவை உறைந்து நின்றிருந்தாள்.

“பறம்பின் வளமும் வாழ்வும் யாரையும் மயக்கி இழுக்கும். அவற்றோடு எனது சொல்லும் சேர்ந்தால் எழும் ஆபத்து அளவிட முடியாததாகி விடும். ஆசையின் நாக்குகள் பறம்பை நோக்கி என்றென்றும் நீள, நான் சொல் தந்துவிடக்கூடாது. அதனாலேயே நான் வெளியேறிப்போகத் துணிவற்று இருக்கிறேன்.”

சற்று முன்னே வந்து ஆசானின் கால்பற்றி அமர்ந்திருந்தாள் அங்கவை. அவளின்  தலையில் கைவைத்தபடி கபிலர் சொன்னார், “என்னை அறியாமலே எனது மொழி பறம்பைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இனி பறம்பை விட்டு என்னால் வெளிச்செல்ல முடியாது மகளே”

சொல்லிமுடிக்கும் முன் தொலைவில் யாரோ வருவது அறிந்து எழுந்து பார்க்க முனைந்தாள் அங்கவை. கலக்கத்திலிருந்து மீளமுடியாமல் கண்மூடித் திறந்தார் கபிலர். எதிர்வந்து நின்றான் பாரி.

முகம் முழுவதும் அப்படி ஒரு மகிழ்ச்சி. பூத்துக்குலுங்கும் மலர்போல் புன்னகைத்தபடி உள்ளே வந்த பாரி, அமர்ந்திருந்த கபிலரைக் கைபிடித்துத் தூக்கி  “வாருங்கள் போவோம்” என்று அழைத்தான்.

பாரியின் முகத்தில் இவ்வளவு மகிழ்வைப் பார்த்து நீண்டநாள்களாகிவிட்டன. கபிலரின் முகத்தில் அளவுகடந்த கவலையைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கவை, அதற்கு நேரெதிராக எல்லையில்லாத மகிழ்வோடு வந்துநிற்கும் தந்தையைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.

“வாருங்கள் வேகமாக” என்று கைபிடித்து இழுத்துச் சென்றான் பாரி. அங்கவையை வரச்சொல்லிக் கூறவில்லை; எனவே அவள் குடிலிலேயே நின்றுகொண்டாள். கபிலருக்குக் காரணம் எதுவும் விளங்கவில்லை. பார்த்துக் கொண்டிருந்த அங்கவை சிறிதுநேரங் கழித்துத்தான் யோசித்தாள், ‘கபிலரை மாளிகைக்கு அழைத்துச் செல்லாமல் காட்டுக்குள் ஏன் அழைத்துச் செல்கிறார். முக்கியமான வேட்டை ஏதாவது கிடைத்திருக்கும்’ என்று எண்ணியபடி இருந்தாள்.

பாரி உற்சாகம் குறையாமல் அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தார் கபிலர். “முகம் ஏன் இவ்வளவு கவலைகொண்டுள்ளது?” என்று கேட்டபடி முன் நடந்து சென்றான் பாரி.

“அளவற்ற மகிழ்வோடு இருக்கும் ஒருவனிடம் கவலையை எப்படிப் பகிர்ந்துகொள்வது?”

கபிலர் சொல்லற்றவரானார். மாறுபட்ட இரண்டு உணர்ச்சிகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவச் சட்டென மொழி கைகொடுப்பதில்லை. மொழி வலிமையற்று இருக்குமிடத்தில் நின்று பேசுவதுதான் புலவனின் ஆற்றல். ஆனால், அவ்வாற்றலை வெளிப்படுத்தும் மனநிலையில் கபிலர் இல்லை.

அமைதியாய் வரும் கபிலரைப் பார்த்துப் பாரி கேட்டான், “பகிர்ந்துகொள்ள முடியாத கவலையா?”

“இல்லை…” என்று சொல்லிபடி நடந்தார். ஆனால், தொடராமல் சொல் நின்றிருந்தது.

எவ்வியூரின் நாகப்பச்சை வேலியைக் கடந்து உட்காட்டுக்குள் நுழைந்தனர். செடிகொடிகளை விலக்கி முன்னே நடந்து கொண்டிருந்தான் பாரி.

மெல்லிய குரலில் கபிலர் பேசத் தொடங்கினார், “நாள்தவறாமல் கூத்து நடக்கிறதே, அவற்றில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தாயா?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 53

“கூத்துக்களத்தில் எவ்வளவோ நடக்கிறது. நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்?”

கபிலர் மீண்டும் அமைதியானார். அறியாமல் பேசுபவனல்ல பாரி. ஆனால், அறிந்தவனைப்போல அவன் பேச்சில்லை. என்ன சொல்வதென்று சிந்தித்தபடியே நடந்தார்.

“பாணர் கூட்டத்துக்குள் பாடத்தெரியாதவனும் இருக்கிறான். இசைக்கருவிகளை வாசிப்ப வர்களுக்கு நடுவில் அதில் பயிற்சியே இல்லாதவனும் உடன் வருகிறான்” என்று சொல்லிய கபிலர், சற்றே தயக்கத்தோடு சொன்னார், “கூத்து நடத்த வரும் பாணர் கூட்டத்தில் ஒற்றர்கள் நிறைய வருகிறார்கள்.”

முன் நடந்தபடி பாரி சொன்னான், “பறம்பு நாட்டை இவ்வழியின்றி வேறு எவ்வழியில் அவர்களால் வேவு பார்க்க முடியும். எனவே கூத்துக்கலைஞர்களோடு ஒற்றர்கள் எல்லாக் காலங்களிலும் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.”

“அதனால் ஆபத்து உருவாகி விடாதா?”

“தெய்வத்தின் உருவில் எதிரிவந்தால் வணங்கித்தானே ஆகவேண்டும்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 53



சொல்லால் சிதைவுற்றார் கபிலன். முன் நடந்து செல்லும் பாரியைப் பின்தொடர முடியவில்லை. வாழ்வின் பாதை அவ்வளவு செழிப்புற்றிருந்தது பாரிக்கு. செழிப்பேயானாலும் மறித்துக்கிடக்கும் கொடிகள் இடையூறுதானே? கபிலரின் கண்களுக்கு மறித்துக்கிடக்கும் கொடிகளே தென்பட்டன.

“கலைஞர்கள் என்ன செய்வார்கள்? அதிகாரத்துக்கு அஞ்சி அவர்களை உடனழைத்து வருகிறார்கள். ஒற்றர்களும் உடன்வருகிறார்கள் எனத் தெரிந்து தான் எம் வீரர்கள் பறம்புக்குள் அவர்களை அழைத்துவருகிறார்கள். பச்சைமலையின் எல்லா மடிப்பு களின் வழியேயும் ஒற்றர்களை எம் வீரர்கள் அழைத்து வந்திருக் கிறார்கள். அப்படியிருந்தும் எவ்வியூருக்குப் போகும் வழிக்குறிப்பைச் சொல்லப் பாண்டியனால் முடியவில்லை அல்லவா? காலம்பன் தன் முன்னோர்கள் சொன்ன குறிப்பின் வழியில்தானே வந்து சேர்ந்துள்ளான்.”

கபிலருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பாரி சொன்னான், “நாட்டைப் பிடிக்கும்முறையில் காட்டைப் பிடித்துவிட முடியாது. நாட்டில்தான் வழித்தடம் பாதையாக இருக்கிறது. காட்டின் வழி மரமாகவும் பாறையாகவும் அருவியாகவும்தான் இருக்கிறது. மூன்று கருங்காலி மரத்தினருகே ஒரு செங்கடம்பு இருக்குமேயானால் காலடி கவட்டைகொள்ளும்; அதாவது முச்சந்தி என்று பொருள். அது யாருக்குப் புரியும்? இயற்கையாக முளைக்காத வகையில் முளைத்துள்ள தாவரங்களை இயற்கையை அறிந்த ஒருவனால்தான் கண்டறிய முடியும். வண்டிச் சாலைபற்றிய மனித அறிவு சில தலைமுறைகளுக்குத்தான் சொந்தம். ஆனால், காட்டுப்பாதை பற்றிய மனித அறிவு எண்ணிலடங்காத தலைமுறைகளின் சேர்மானம். அது ஒற்றன் வந்துபோகும் ஒற்றைப்பயணத்தில் ஒருபோதும் அடைபடாது” பேசியபடி வேகங்குறையாமல் நடந்துசென்றான் பாரி.

கபிலர் பின்தொடர்ந்தார். வேந்தர்களின் வழியே அரசாட்சியின் இலக்கணங்களையும் வழிமுறைகளையும் அறிந்த வாழ்வு கபிலரின் வாழ்வு. அதற்கு நேர்மாறாக, குலச்சமூகத்தின் மனவோட்டத்தின் வழியே புரிந்துகொள்ளுதல் எளிய முயற்சியல்ல, ஆனாலும் விடாது முயன்றார் கபிலர்.

அகில்மரத்தின் முடிச்சிட்ட வேர்கள் வழித்தடத்தின் குறுக்கே இருந்தன. அவற்றைக் கவனமாகத் தாண்டிய பாரி, கபிலரின் கால்கள் தடுக்கிவிடாமல் இருக்க நின்று உதவினான்.

அவன் தோள்களைப் பிடித்தபடி வேர்தட்டாமல் கால்தூக்கிவைத்தார் கபிலர். “இதுவரை பறம்பின் மீதான எல்லாத் தாக்குதல்களுக்கும் பின்னே கூத்துக்கு வந்துபோன ஒற்றனே இருக்கிறான். எனது முதற்போருக்கே கூத்துக்களம்தான் காரணமாக அமைந்தது” என்றான் பாரி.

பாரி முதலில் நடத்திய போர் சேரனுக்கு எதிரானது. அப்போரில்தான் உதியஞ்சேரலின் தந்தை செம்மாஞ்சேரலின் தலையை வெட்டியெறிந்தான் என்பது பலரும் சொல்லக்கேட்டுள்ளார் கபிலர். ஆனால், அப்போர் ஒரு கூத்துக்களத்திலிருந்துதான் தொடங்கியது என்பது கேட்டறியாத ஒன்றாக இருந்தது.

தோள்மீது கிடந்த கபிலரின் கை சற்றே இறுக்கிப்பிடித்தது. தோழனின் மொழியை அறியாதவனா பாரி? கூத்துக்களத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 53

கதை வழக்கம்போல் முருகனிடமிருந்து தொடங்கியது. பாரி, முருகனின் பெயரை உச்சரித்தபடி முன் நடந்தான். கபிலருக்குத் தொடக்கமே வியப்பாக இருந்தது. இக்கதையில் முருகன் எப்படி வந்தான் என்று சிந்திக்கத் தொடங்கிய கணமே பாரி கேட்டான், “முருகன் தனது காதலின் பரிசாக எவ்விக்கு ஒரு பூண்டு கொடுத்தானே, அது என்ன தெரியுமா?”

கபிலர் விடையின்றி விழித்தார். நாக்கறுத்தான் புல் விளைந்துகிடந்த நிலத்தைக் கடந்தபொழுது நீலன் சொன்ன கதையது. தனைமயக்கி மூலிகையைக் கொடுத்தபடி கதையைத் தொடங்கி அவன் சொல்லிவந்தான். முருகனையும் வள்ளியையும் சந்தனவேங்கையில் அமைக்கப்பட்ட பரணில் தங்கவைத்து ஊர்வந்து சேர்ந்தான் எவ்வி. தனது கையில் இருந்த பூண்டு போன்ற ஒரு பொருளைப் பைங்குடத்தில் இட்டவுடன் அது சிறிதுசிறிதாகக் கரைந்தது. அந்நீர் பழச்சாறுபோல நுரைபொங்கியிருந்தது. அதனை அருந்தியவர்கள் வாழ்வில் அதுவரை காணாத சுகத்தைக் கண்டார்கள். மீண்டும் மீண்டும் வாங்கிப் பருகி, மயங்கிச் சரிந்தார்கள். அவர்கள் பருகியபொழுது சிந்தியதுளியின் வாசனையை நுகர்ந்தே மலையெங்கு மிருந்து பாம்புகள் அப்புதருக்கு வந்து சேர்ந்தன என்று நீலன் சொன்ன கதையைச் சொன்னார் கபிலர்.

கார்த்திகையின் கதையைச் சொல்வதற்காகச் சந்தனவேங்கையில் இருந்து மறுபகல் கீழிறங்கிய வள்ளி முருகனின் கதையைச் சொன்ன பாரி, இப்பொழுது எவ்வியின் வழியே மீதிக்கதையைத் தொடங்கினான்.

“அப்பூண்டினைப் பைங்குடத்தில் போட்டு நாட்கணக்கில் ஊரே குடித்துள்ளது. அதுவரை மனிதர்கள் அனுபவித்திராத மயக்கத்தையும் இன்பத்தையும் அப்பூண்டுப்பானம் கொடுத்துள்ளது. பைங்குடத்தில் நீர் தீரத்தீர மீண்டும் மீண்டும் நீரூற்றி அப்பானத்தை அருந்தியுள்ளனர். அப்பூண்டு சிறிது சிறிதாக நீரிற்கரைந்து மூன்று வாரங்களுக்குப் பின் முழுமுற்றாக நீருள் மறைந்துவிட்டது.

‘அது என்ன பூண்டு? அது எங்கே இருக்கிறது?’ எனக் கேட்பதற்காகவே அதன்பின் முருகன்வள்ளியைத் தேடிப் பலகாலம் அலைந்திருக்கிறான் எவ்வி. காலங்கள் ஓடியும் அவர்களைக் காணமுடியவில்லை. ஆனால், அந்தப் பூண்டுப்பானத்தை மறக்க முடியவில்லை. வாழ்வில் எப்பொழுதாவது அதுபோன்ற பானத்தை அருந்திவிட மாட்டோமா என்று எவ்வி மட்டுமல்ல, ஊரில் உள்ள ஆண், பெண் அனைவரும் ஏங்கிக் கிடந்துள்ளனர்.

எவ்வியூர் உருவாக்கப்பட்ட சிறிதுகாலத்திலேயே எவ்வி இறந்துவிட்டான். அதன்பின் ஒரு மழைக்காலம் முடியும்பொழுதுதான் இது நடந்துள்ளது. சோமக்கிழவி காட்டுக்குக் கிழங்குதேடிப் போயிருக்கிறாள். பகல் முழுவதும் அலைந்த களைப்பில் நாங்கில் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறியிருக்கிறாள். உச்சிப்பொழுது.  எங்கும் வெயில் தகித்துக்கிடந்திருக்கிறது. அவள் கண்பார்வைத்தொலைவில் பன்றிகளின் கூட்டமொன்று நிலத்தை அகழ்ந்து கிழங்குகளைத் தின்றுகொண்டிருந்திருக்கிறது.

நாங்கில்மரத்தின் அடிவாரம் உட்கார்ந்து இளைப்பாறியபடி இருந்திருக்கிறாள். சிறிதுநேரத்தில் எங்கோ இருந்து மணம் வீசியிருக்கிறது. மூக்கில் நுகர்ந்தபடி அப்படியே மயங்கிக் கண்செருகியிருக்கிறாள். அந்நறுமணம் அவளை மயக்கி உள்ளிழுத்திருக்கிறது. மயக்கம் தெளியமுடியாத ஆழத்துக்கு அவளை இட்டுச்சென்றுள்ளது. சட்டெனப் பொறிதட்டி மீண்டிருக்கிறாள்.

இது ஏற்கெனவே நுகர்ந்த மணம். ஆனால், எங்கே, எப்பொழுது என்றுதான் நினைவுக்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்த பொழுது, அது எவ்வி கொண்டுவந்து கலக்கிக்கொடுத்த அந்தப் பூண்டுப்பானத்தின் மணம் என்பது நினைவுக்கு வந்தது. நாட்கணக்கில் ஊரே உட்கார்ந்து குடித்துக் குடித்துத் தீர்த்தோமே அந்த மணம் என்பது நினைவுக்கு வந்த கணம் சோமக்கிழவிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அகமகிழ்ந்து எழுந்திருக்கும்பொழுது கண்களில் கண்ணீர் பெருகியது. அந்த மணத்தை மறுமுறை நுகரவேண்டுமென்று அவ்வளவு ஆசைப்பட்டான் எவ்வி! ஆனால், அவன் இப்பொழுது உயிரோடு இல்லை. ஓராண்டுக்கு முன்தான் இறந்தான். அவன் கொண்டுவந்து கொடுத்ததன் மூலம்தானே இம்மணத்தை நாம் நுகர்ந்தோம் என்று எண்ணியபடியே, எங்கிருந்து இம்மணம் வருகிறது எனத் தேடத் தொடங்கினாள். செடி, கொடி, மரம் என எல்லாவற்றையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தாள். எங்கிருந்து வருகிறதென அவளால் கண்டறிய முடியவில்லை.

காற்று வீசும்பொழுது மிதந்துவரும் மணம், காற்று நிற்கவும் அறுபட்டுவிடுகிறது. சற்றுத் தொலைவிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தபடி அப்பக்கம் போகலாம் என நகர்ந்திருக்கிறாள். அவ்வளவு நேரம், கிழங்குகளை மண்கிளறி மேய்ந்துகொண்டிருந்த பன்றிக்கூட்டம் இப்பொழுது அவ்விடம் இல்லை. ஆனால், தேனீக்களும் வண்டுகளும் பெருங்கூட்டமாக வந்து அவ்விடம் மொய்க்கத் தொடங்கியுள்ளன. சோமக்கிழவி அருகில் போய்ப் பார்த்திருக்கிறாள். மண்ணுக்குள் கிழங்கு வடிவத்தில் ஏதோ இருந்திருக்கிறது. கையால் கிளறி அதனை எடுத்திருக்கிறாள். அந்தப் பூண்டின் மணம், எவ்வி கொண்டுவந்து நீரில் கலக்கி ஊரே குடித்த அந்த மணம். அதே வடிவப் பூண்டு.

பல ஆண்டுகளுக்குப்பின் அதனைக் கண்டறிந்த மகிழ்வில் ஓட்டோடி வந்து ஊரிலே கொடுத்திருக்கிறாள். பைங்குடத்தினில் அதனைப் போட்டிருக்கின்றனர். நீர் கலங்கிப் பழச்சாறாகி யிருக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவர் குடிக்கத் தொடங்கியுள்ளனர். ஊரே நாட்கணக்கில் குடித்திருந்திருக்கிறது. இப்பானம் கிடைக்காதா என்று எவ்வி எத்தனை முறை புலம்பியிருப்பான். அதனைக் குடித்த எல்லோருமே வாழ்வில் இன்னொரு முறை குடிக்கமாட்டோமா என்று புலம்பியபடிதானே இருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 53

சென்றமுறை முருகனை நினைத்து எல்லோரும் குடித்ததைப்போல இம்முறை எவ்வியை நினைத்து ஊரே குடித்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது. சோமக்கிழவி எவ்வியின் மனங்கவர்ந்தவளாம். எவ்வி அவளிடம் மட்டும் அது கிடைக்கும் இடத்தைச் சொல்லிச்சென்றுள்ளான் என்று பேசிச் சிரித்து நாட்கணக்கில் குடித்துள்ளனர். சிறிது சிறிதாகக் கரைந்த அப்பூண்டு முற்றிலும் மறைய ஒரு மாதம் ஆகியுள்ளது.

இன்றுவரை அந்தப்பூண்டு எந்தச் செடி அல்லது கொடியின் கீழ் விளைகிறது என்று யாருக்கும் தெரியாது. கிழங்குதேடும் பன்றி அகழ்ந்துபோட அந்தப்பூண்டு வெளிவருகிறது. அதன் வாசனை பட்டவுடன் பன்றி அந்நிலம் விட்டு அகன்றுவிடுகிறது. எங்குமிருக்கும் தேனீக்களும் வண்டுகளும் அதனை மொய்த்துக்கிடக்கின்றன. மாதக்கணக்கில் ஆனாலும் தேனீக்கள் அதனை மொய்ப்பதை நிறுத்தாது. காட்டில் அலைந்து திரியும் பறம்பு மக்களின் கண்களுக்கு அது எப்படியும் பட்டுவிடுகிறது. அதன்பின் எவ்வியூர் காலநேரமின்றி  மிதந்துகொண்டுதான் இருக்கும்.

பூண்டு கிடைத்துவிட்டாற்போதும், மிதக்கும் மயக்கத்தினூடே காதல் பொங்கி மேலெழத் தொடங்குகிறது. வள்ளிமுருகனின் காதலும் எவ்விசோமாவின் காதலும் ஒன்றினையொன்று விஞ்சி மேலெழுகின்றன. இப்பூண்டினை முதலிற் கண்டறிந்தது வள்ளியா முருகனா என்று பேச்சு தொடங்குகிறது. பூண்டின் சாறு இறங்க இறங்க வள்ளியும் முருகனும் இறங்கி ஆடுவர். நாள்கள் செல்லச்செல்ல எவ்வியா சோமாவா என்று பேச்சு போகிறது. ஆட்டமும் பாட்டுமாகப் பகலிரவு பாராமல் ஊரே மிதக்கிறது. காதலின் பரிசாக வள்ளி முருகன் இருவரும் எவ்விக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், தன் காதலிக்கு அதனைக் கொடுத்தது எவ்விதான். தன் காதலனின் நினைவாக அதனைக் கண்டறிந்தது சோமக்கிழவிதானே; எனவே அவளின் பெயரையே அதற்குச் சூட்டினர். அது சோமப்பூண்டு என்று அழைக்கப்பட்டது.

சோமப்பூண்டின் சாறுகுடித்து ஊரே மயங்கிக்கிடக்க, மயங்கிக்கிடப்பவனை, கிழவியின் பெயரைச்சொல்லி, சோம்பிக்கிடக்கிறான் என்று சொல்லிக்கொள்வர். எவ்வியூர்க்காரர்களுக்குத்தான் தெரியும், சோம்பல்முறிக்க மாதமாகும் என்று. முறிக்க முடியாத மயக்கத்தை முறிக்கும் ஆற்றல் எதற்கும் இல்லை. வள்ளியின் காதலும் சோமாவின் காதலும் இணைந்த மயக்கமல்லவா அது. முருகனும் எவ்வியுமே மீளமுடியாத கிறக்கமல்லவா அது. சோம்பிக்கிடக்கும் சுகம் வேறு எதில் வாய்க்கும்?”

கேள்வி எழுப்பியபடி உற்சாகம் பொங்கத் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தான் பாரி. கதையை நிறுத்திச்சொல்லாமல் இவ்வளவு வேகமாகச் சொல்லிக்கொண்டு ஓடுகிறானே என்ற பதற்றத்தில் பின்தொடர்ந்து கொண்டிருந்தார் கபிலர். கதை என்றாலே ஓட்டம் கூடும். அதுவும் வள்ளி முருகனின் கதை, அதுவும் வாழ்வில் காணாத பெருமயக்கத்தை உண்டாக்கும் கதை. ஓட்டம் கூடிக்கொண்டே இருந்தது. கபிலர் வேகங்கொள்ள கதைசொன்னால் போதும். கதையில் மயங்கும் கபிலருக்கு, மயக்கத்தின் கதையைச் சொன்னால் என்னவாகும்? அதுதான் இப்பொழுது நடந்தது. கபிலர் நடக்கவில்லை, ஓடிக்கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் இரு பெண்களும் ஒரு பெரியவரும் நின்றிருந்தனர். அவர்களை நோக்கித்தான் பாரி சென்றுகொண்டிருந்தான். ‘யார் அவர்கள்? அங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?’ என்று சிந்தித்தபடி பின்தொடர்ந்தார் கபிலர். அருகில் செல்லச் செல்ல அவர்களைச் சுற்றித் தேனீக்களும் வண்டுகளும் இடைவிடாமல் பறப்பது தெரிந்தது.

கபிலரின் முகத்தில் வியப்பு மெல்ல படரத்தொடங்கியது. பாரிக்குச் செய்தி சொல்லி அனுப்பி அவனது வருகைக்காகக் காத்திருந்தனர். பாரி அருகில் போய் மண்ணுள் கிடந்ததைக் கிளறி முழுமையாக மேலெடுத்தான்.

இதுவரை முகர்ந்திராத மணத்தை முகர்ந்தார் கபிலர். நாசிக்குள் ஏறிய கணம் உள்ளுக்குள் ஒரு கிறக்கம் உருவானது. சட்டெனத் தலையை மறுத்து ஆட்டி, பாரியின் அருகில் போனார். நின்றிருந்தவர்கள் கபிலரை வணங்கி விலகி நின்றனர். கபிலர் அவர்களை வணங்கி நின்றார்.

முருகனும் வள்ளியும் எவ்வியின் கைகளில் கொடுத்த சோமப்பூண்டை எடுத்துக் கபிலரின் கைகளில் கொடுத்தான் பாரி.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...