மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 54

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

ருபதாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்விது. முடிவுறாத மழைக்காலத்தின் நள்ளிரவு. மழவன்குடியினர் ஆடும் கூத்தில் நெருப்புப்பொறி பறந்தது. பின்பனி கவிழ்ந்தும் குளிர்நடுக்கம் யாருக்குமில்லை. எவ்வியூர் பெருமகிழ்வை அனுபவித்துக் கிறங்கிக்கிடந்தது. கூத்தும் குளிரும் ஒன்றினையொன்று இறுகத்தழுவி, ஒன்றின் மயக்கத்தை இன்னொன்றுக்கு ஊட்டி மகிழ்ந்தன. ஆனால், இவ்விரண்டையும்விடப் பெருமயக்கமொன்று ஏற்கனவே ஊரில் நிலைகொண்டிருந்தது.

சோமப்பூண்டு கிடைத்திருந்த நேரமது. ஊரே குடித்துக் குடித்துக் கிறங்கிக்கிடந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது. யார் விடுவார்கள்? ``இன்னும் பூண்டு கரையவேயில்லை” என்று சொல்லிச்சொல்லிக் குடித்தார்கள். நீர் முகந்த குளம் வற்றிவிடப்போகிறது என்று சொல்லியும் விடாது குடித்தார்கள். இந்நிலையில்தான் மழவன்குடி கூத்துக்கலைஞர்கள் ஊருக்கு வந்தார்கள்.

பாரிக்கு அப்பொழுது மணமாகவில்லை. மேலெல்லாம் இளமை துளிர்த்துக்கிடந்த காலம். சோமப்பூண்டில் சொக்கியவர்களுக்கு மழவன்குடிக்கூத்தும் வந்து சேர்ந்தது. மழவன்குடியை, கூத்திலே மயக்கும் குடி என்பார்கள். ஆனால், அவர்கள் மயக்க இங்கு யாரும் மிச்சமில்லை. எனவே  மழவன்குடியினரை எவ்வியூர் மயக்கியது. வந்தவர்களுக்கு முதலில் ஆளுக்கொரு  குவளையைக் கொடுத்தார்கள். அவ்வளவுதான், இடைவிடாது வாங்கிக் குடித்தார்கள். எப்பொழுதெல்லாம் தெளிவடைகிறார்களோ, அப்பொழுதெல்லாம் குடித்தார்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 54

எண்ணிலடங்காத மதுவகைகளை வாழ்வெல்லாம் குடிக்கிறோம். ஆனால், எந்தவொரு மதுவுக்கும் இத்தகு மயக்கம் கிடையாது. உள்ளிறங்கிய கணத்தில் தொடங்கும் கிறக்கத்தை எதிலும் உணரமுடியாது. கிறக்கத்தை அனுபவித்தபடியே முதுகெலும்பை முறுக்கி  ‘கிர்’ரென மேலேறுவது என்னவென்பதைக் குடிக்காமல் உணரமுடியாது; குடித்தால் உணரவே முடியாது. உணர்வின் எல்லைக்கு அப்பால் மனிதனை நிறுத்தும் மயக்கம் முதல்துளியிலேயே நிகழ்ந்துவிடும். முதல்மிடறு அடுத்ததையெல்லாம் மறக்கவைக்கும். எனவே, முதலிலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்.

சோமப்பூண்டின் கிறக்கங்கொண்டு கிடந்த மழவன்குடியினர், தங்களின் பறையைச் சூடேற்றவேயில்லை. வந்து ஒரு வாரமாகியும் அவர்களின் கால்கள் அடவுபிடிக்கவில்லை. அவர்களால் இந்த மதுமயக்கத்தை விட்டுப் பிரியமுடியவில்லை. எவ்வியூரிலுள்ள யாராலும் முடியாதது இவர்களால் எப்படி முடியும். ஏதுசெய்தும் ஆடுகளம் இறங்கமுடியாது எனக் கூட்டத்தின் தலைவன் முடிவுசெய்து, ``மறுமுறை வந்து ஆடுகிறோம்” எனச் சொல்லி, புறப்பட ஆயத்தமானான்.

செய்தி பாரிக்குச் சொல்லப்பட்டவுடன் விரைந்து அவ்விடம் வந்தான். ``மயக்குதல் பொதுவானது. அது மதுவுக்குமுண்டு, கலைக்குமுண்டு. நீ கலைஞன். சோமப்பூண்டு உன் சொற்களிலுமுண்டு என்பதை மறந்துவிட்டாயா? எதன் பொருட்டும் கலையும் கலைஞனும் தோற்கக் கூடாது. ஆடாமல் இந்நிலம் விட்டு அகலுதல் கலைக்கு இழுக்கல்லவா? பைங்குடத்தை ஆடுகளத்தின் நடுவில் வைத்து நிகழ்த்து உனதாட்டத்தை. ஆட்டம் முடியும் கணத்தில் உன் உடன்வந்தவர்களின் தலைக்கு ஒரு பானையை ஏந்தி இந்தப் பானத்தைக் கொண்டுசெல்லுங்கள்” என்றான்.

சொல்லிய கணம் தொடங்கியது ஆட்டம். பைங்குடத்தைச் சுற்றி மழவன்குடியினரின் கால்கள் சுழலத் தொடங்கிவிட்டன. அக்குடிப் பெண்களின் விழிகள் தவளைகளைப் போலத் தாவித்தாவிப் பைங்குடத்துக்குள் விழுந்தபடியிருந்தன. பாணன் பாடினான். ஒருவார காலம் தாங்கள் குடித்த குடியைப் பாடினான். ``வாழ்வெல்லாம் மதுவெனச் சொல்லிக் குடித்த எதுவும் மதுவன்று; புளித்த நுரை மூக்கடைக்காமல் மிதக்கவைக்கும் இவ்வரிய பானத்துக்கு என்ன பெயர்தான் சொல்வது பாரி?” எனக் கேட்டுத்தான் முதல்பாடலைப் பாடினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 54


``பறவைகள் உடலுக்கு வெளியேதான் இறக்கைகளை விரிக்கின்றன. ஆனால், இப்பழச்சாற்றைக் குடித்தால் உடலுக்குள்ளேயே இறக்கைகள் விரிகின்றன. பறக்கும்பொழுது மயங்குகிறோமா, மயங்கும்பொழுது பறக்கிறோமா? சொல் பாரி!

வானத்தில் பறப்பதும் நீரில் மிதப்பதும் அரிதல்ல, ஆனால், இவையிரண்டையும் தன்னுள் நிகழ்த்துவதுதான் அரிதினும் அரிது. அவ்வரிய பழச்சாற்றுக்குப் பெயரென்ன பாரி?

வற்றிய குளம்போல் நாக்கு இப்பானத்துக்காக ஏங்க, வயிறோ நிறைந்தகுளம்போல் பெருகிக்கிடக்கிறது. வயிறே உடைந்தாலும் வற்றிய நாக்கின் ஏக்கம் நீங்க மறுக்கிறதே, சொல்பாரி, நாங்கள் என்ன செய்ய?”

பாரியிடமும் பைங்குடத்து மதுவிடமும் வரிக்குவரி விளக்கங்கேட்டுப் பாடலைத் தொடங்கினான் பாணன். ஆனால், அதன்பிறகு அவன் பாடிய பாடல் எதுவும் யாருக்கும் நினைவில்லை. அவன் அப்பானத்தின் மயக்கத்தை, வீரியத்தை எப்படியாவது அறிய முற்பட்டு, முற்பட்டுத் தோல்வியடைந்து பாட்டை முடித்தான். “ஒரு மிடறு குடித்தால் அச்சுவையைத் துல்லியமாக என்னால் சொல்லிவிட முடியும், பாடும் எனக்கு மட்டும் அதற்கான அனுமதியைக் கொடு பாரி” என வேண்டினான்.

அரங்கு அதிரச் சிரித்தான் பாரி. “இந்த வாரம் முழுவதும் அதிகமாக அப்பானத்தைக் குடித்தது நீதான். முதல்துளியில் கண்டறியமுடியாத சுவையைக் கடலளவு குடித்தாலுங் கண்டறிய முடியாது. உனது நினைவைத்தோண்டிக் குடித்துப்பார், ஒருவேளை உனக்கு அது பிடிபடலாம்” என்றான்.

பாடுபவன் சொன்னான், “குவளையை வாயில் கவிழ்த்தும் வரைதான் நினைவு செல்கிறது, அதன்பின் நான் கவிழ்ந்துகிடப்பதுதான் தெரிகிறது” என்றான். 

சிரித்து மகிழ்ந்தது கூட்டம். சுவையறிய முடியாமல், அறிந்த சுவையிடமிருந்து மனம் பிரியமுடியாமல் கலைஞன் படும்பாடே கலையாக நிகழ்ந்துகொண்டிருந்தது. இரவெல்லாம் பாடினான் பாணன். மதுவின் கிறக்கத்தை விஞ்சும் ஆட்டத்தை ஆடினர் ஆணும் பெண்ணும். பைங்குடம் நடுவில் இருப்பதால் அதன் வாடையை நுகர்ந்து சுழலும் ஆட்டத்தை இரவெல்லாம் பார்த்துக் களித்தனர் எவ்வியூர்க்காரர்கள்.

விடிய விடிய நிகழ்ந்தது ஆட்டம். விடிந்ததும் மழவன்குடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்கான பானையைத் தேர்வுசெய்தனர். மலை முழுவதும் தூக்கிச்செல்லவேண்டும் என்பது அவர்களின் நினைவிலேயே இல்லை. பானைக்குள் இருக்கப்போவது மட்டுமே அவர்களின் நினைவிலிருந்தது. அவர்கள் தேர்வுசெய்த பானை முழுவதும் பானம் நிரப்பப்பட்டது.

புறப்பட ஆயத்தமாகும்பொழுது பாரி சொன்னான், ``ஒரு மிடறுகூட இதனைக் குடிக்காமல் தூக்கிச்சென்றால் மட்டுமே உங்களின் இடம் வரை இதனைக் கொண்டுசெல்ல முடியும். எங்கேயாவது நின்று குடிப்போம் எனத் தொடங்கினால், அதன்பின் அத்தனை பானைகளும் தீர்ந்த பின்தான் அவ்விடம் விட்டு நீங்கள் அகல்வீர்கள்.”

சரியெனச் சொல்லி அவர்கள் புறப்பட்டனர். இதுவரை தாங்கள் பெற்ற பரிசினிலேயே மிகச்சிறந்த பரிசு இதுதான். இதனைத் தங்களின் குடிகள் இருக்குமிடம் வரை எப்படியாவது கொண்டுசேர்க்க வேண்டும் என்று முடிவுசெய்து அவர்கள் நடந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 54

மழவன்குடிக் கூட்டத்திலிருந்த மூன்றுபேர் சேர ஒற்றர்கள். அத்தனை பானைகளும் சேரனின் அரண்மனைக்குப் போய்ச்சேர்ந்தன. செம்மாஞ்சேரல் தன் அந்தப்புரப்பெண்களோடு மகிழ்ந்திருந்தபொழுதுதான், “உலகில் யாரும் அறிந்திராத பெருமயக்கத்தை உண்டாக்கும் மதுவகை ஒன்று பறம்பினில் இருக்கிறதாம். அதனை நமது ஒற்றர் கூட்டம் கொண்டுவந்து சேர்த்துள்ளது” எனச் செய்தி சொல்லப்பட்டது.

எறிந்த வேல்போல் காட்டம் உள்குத்தி நிற்கும் ஆற்றல் யவனத் தேறலுக்குத்தான் உண்டு. அதனை முதலில் அருந்தி மகிழ்ந்தவன் சேரன்தான். மிளகுக்கு ஈடாகக் கொண்டுவந்து இறக்கப்பட்ட அதிசிறந்த பொருள் அதுதான். அதன் பிறகுதான் யவனத்தேறல் பற்றி பாண்டியர்களும் சோழர்களும் அறியத் தொடங்கினர்.

இப்பொழுது மீண்டும் வரலாறு திரும்புகிறது. அதிசிறந்த மதுவகையொன்று சேரர்குடியை வந்தடைந்திருக்கிறது. ஆனால், இதனை யவனத்தேறலைவிடச் சிறந்ததெனச் சொல்லிவிட முடியுமா என்பதைக் குடித்துப்பார்த்துதானே முடிவுக்கு வரமுடியும்.

அந்தப்புரப்பெண்களை விலக்கி விரைந்துவந்தான் செம்மாஞ்சேரல். பதினாறு பெரும்பானைகள் அவையின் நடுவே வைக்கப்பட்டிருந்தன. பானைகளை விட்டு சற்றுத்தள்ளி மழவன்குடிக் கலைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். அக்குழுவின் தலைவன் தலைதாழ்த்தியபடியே நின்றிருந்தான். ‘என் கூட்டத்தில் ஒற்றர்கள் இருப்பதால்தான் ஆட்டம் நிகழ்த்தாமல் மயக்கங்கொண்டே நாங்கள் புறப்படுகிறோம் என்று பாரியிடம் சொன்னேன். அவனோ, கலைஞன் தோற்கக்கூடாது என எம்மை ஆடவைத்து அப்பானத்தோடு பெரும்பரிசையும் கொடுத்து அனுப்பிவிட்டான். இனி இப்பானத்தின் ஒரு மிடறுகூட எங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை’ என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபொழுதுதான் செம்மாஞ்சேரல் முதல்மிடற்றினை அருந்தினான்.

அதன்பிறகு அவனது நினைவில் வேறெதுவும் இடம்பெறவில்லை. பானைகள் ஒவ்வொன்றாகக் கவிழ்த்து வைக்கப்பட்டன, அவனால் நம்பமுடியவில்லை. இதன் கிறக்கமும் மயக்கமும் என்னவென்பதை அறிய பலமுயற்சிகள் செய்தான். அரசவைப் பெரியோர்கள், வணிகர்கள், கடலோடிகள் எனப் பலருக்கும் அருந்தக் கொடுத்தான். ஆனால், யாருக்கும் ஒரு குவளைக்கு மேல் கொடுக்கவில்லை.  அவர்களோ மறுகுவளை கிடைக்காதா என்று நாள்கணக்கில் ஏங்கி நின்றனர்.

இதன் மயக்கம் எவ்வளவு பெரிய மனிதனையும் தாழப் பணியவைத்துவிடுகிறது என்பதை ஒவ்வொரு நாளும் அவன் உணர்ந்தான். ஆனால், இதுவென்ன என்பதை மட்டும் யாராலும் சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான் வடதேசத்து முனி ஒருவர் அவனது அரண்மனைக்கு வந்தார்.

செய்தி அவருக்கும் சொல்லப்பட்டது. “காட்டு மனிதர்கள் பல்வேறு மரப்பட்டைகளைக் கலந்து வடித்தெடுக்கும் மதுவகை வேறுபட்ட மயக்கத்தைத்தான் கொண்டிருக்கும். இதில் இவ்வளவு வியப்புற என்ன இருக்கிறது?” என்று சொல்லியபடி ஒரு குவளையை வாங்கிக் குடித்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 54


முகத்தில் எவ்வித மாற்றமும் தெரியாததால் அவையில் இருந்த பலரும் அவரைச் சற்றே வியப்போடு பார்த்தனர். முனிவரை இப்பானம் ஒன்றும் செய்துவிடவில்லை என்பதைப் போல முகக்குறிப்பு இருந்தது. செம்மாஞ்சேரனும் வியப்புற்று அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவரோ, “இன்னொரு குவளை கொடு” என்றார்.

ஊற்றிக்கொடுப்பவன் மன்னனைப் பார்த்தான். மன்னனைத்தவிர வேறு யாருக்கும் மறுகுவளை கொடுக்கப்படவில்லை.  செம்மாஞ்சேரன், முனிவரின் முகத்தை உற்றுப்பார்த்தான். அவர் அப்பானத்திடம் தன்னை இழந்துவிடவில்லை என்பது தெரிகிறது என்று எண்ணி மறுகுவளை தரச்சொன்னான்.

அதனையும் வாங்கிக் குடித்தார் முனி. அவரது முகத்தில் எந்தவித வியப்போ, மாற்றுதலோ தெரியவில்லை. ஆனால், எவ்வார்த்தையும் பேசவில்லை. “இன்னொரு குவளை கொடு” என்று மறுபடியும் கையை நீட்டினார். ஊற்றிக்கொடுப்பவன் அக்குவளையை வாங்கவே அச்சப்பட்டு மன்னனைப் பார்த்தான். மன்னனுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. ‘பாதிக்குவளை ஊற்றிக்கொடு’ என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது.

அப்படிச் சொல்வது தனக்கு அழகல்ல என்று அவனுக்குத் தோன்றியது. மழவன்குடித் தலைவன் தொலைவிலிருந்தபடி இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு குவளை முகந்துகொடுக்க இவ்வளவு தயங்கும் மனிதர்கள் வாழும் உலகில்தான் பாரியெனும் பெருங்கொடையாளனும் வாழ்கிறான் என்று எண்ணியபடி பாடல் ஒன்றை முணுமுணுத்தான். அதற்குள் செம்மாஞ்சேரல் கையசைப்பது தெரிந்தது.

வேறு வழியேயில்லாமல், ‘அடுத்த குவளை ஊற்றிக்கொடு’ என்று மன்னன் சொன்னது யாவருக்கும் புரிந்தது. ஊற்றிக்கொடுப்பவன் குவளையை வாங்கிப் பானைக்குள் முகந்தான். கண்செருகியபடி இருந்த முனி இடக்கையால் தாடியைத் தடவி, கீழ்நீண்ட கடைமுடியை விரல்களால் உருட்டினான். அதைப் பார்த்த செம்மாஞ்சேரல் சொன்னான், “ஊற்றுவதை நிறுத்து.”

அரங்கு அதிர்ந்து பார்த்தது. ஊற்றுபவன் அப்படியே நிறுத்தினான். ஆனால், உள்செருகிய கண்களை முனிவன் திறக்கவேயில்லை.

“நீங்கள் இப்பானத்தால் மயங்கிவிட்டீர்கள். இனி உங்களால் இதனைக் கண்டறிய முடியாது.”

முனிவனின் முகத்தில் முழுமையான மயக்கம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. கண்திறக்காமல் தாடியின் கடைமுடியை இடக்கையால் சுருட்டியபடியே சொன்னார்.

“இதன் பெயரென்ன?”

மன்னனும் அவையோரும் அறிந்திருக்கவில்லை. மழவன்குடியையே எல்லோரும் பார்த்தனர். மழவன்குடித்தலைவன் முன்வந்து சற்றே மெல்லிய குரலில் சொன்னான், “சோமப்பூண்டிலிருந்து உருவாகும் பானம்.”

உதட்டோரம் மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினான் முனிவன்.

அவையோருக்குக் காரணம் புரிபடவில்லை. செம்மாஞ்சேரல் முனிவரையே பார்த்துக்கொண்டிருந்தான். முனிவர் வாய்திறந்து சொன்னார், “இதுதான் சோமபானம்.”

இதுவரை இப்பெயரை யாரும் கேள்விப்பட்டதில்லை. புதுப்பெயராக இருந்தது. அவையோர் அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்தனர்.

முனிவர் சொன்னார், ``தேவர்கள் மட்டுமே அருந்தும் பானம். இது கிடைக்காதா என்று ஆண்டாண்டுக் காலமாய்க் காத்திருப்போர் பலர். இதன் சக்தியை நீ அறியமாட்டாய். மகாசக்திகொண்டது. சொர்க்கம் என்ற பேருலகுக்கு மனிதனைக் கொண்டுசேர்ப்பது” முனிவர் பேசிக்கொண்டே இருக்க, மயக்கம் எல்லா வகையிலும் நிகழ்ந்துகொண்டிருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 54

``அரக்கர்களிடமிருந்து இதனை மீட்கும் போரினை, தேவர்கள் எல்லாக் காலங்களிலும் நடத்துகிறார்கள்.”

செம்மாஞ்சேரல் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்களுக்கு இப்பொழுது பானம் இருக்கும் ஒருசில பானைகள் தெரியவில்லை. தனது அரண்மனையெங்கும் அப்பானைகள் இருப்பதாகத் தெரிந்தது. மயக்கும் பேருலகத்தை அவன் அகக்கண்ணில் பார்க்கத்தொடங்கிவிட்டான் என்பதை முனிவன் உணரத்தொடங்கினான்.

அதன்பின் முனிவன் சொல்லும் எல்லாச் சொல்லிலும் சோமபானத்தின் மயக்கம் இருந்தது.

சோமப்பூண்டை எடுத்துக்கொண்டு எவ்வியூருக்குள் வரும் வரை வேகவேகமாகக் கதையைச் சொல்லிக்கொண்டு வந்தான் பாரி. ஆனால், சோமப்பூண்டு கண்டறியப்பட்டுவிட்ட செய்தி அதற்குள் ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது. பாரியும் கபிலரும் ஊருக்குள் நுழைவதற்குள் ஊரே கலைகட்டியிருந்தது.

கபிலருக்கு, பாரி சொல்லிவந்த கதையை முழுவதும் கேட்கவேண்டும் என்ற பேராவல் இருந்தது. அதைவிட அதிகமான ஆவலைக் கையிலிருந்த சோமப்பூண்டு ஏற்படுத்தியிருந்தது. கரைந்துபெருகும் அதன் சாறு அவரைச் சுண்டியிழுத்துக்கொண்டிருந்தது.

கபிலரின் கையில்தான் அது இருக்குமென்பதை எவ்வியூரிலுள்ள எல்லோரும் அறிந்திருந்தனர். ஊருக்குள் நுழைந்ததும் கபிலரைத் தோளிலே தூக்கி ஆடியது ஒரு கூட்டம். ஆட்டத்துக்கு இனிமேல்தான் வேலை என்று சொல்லி ஓடியது ஒரு கூட்டம். எங்குமிருந்து சாரிசாரியாக மக்கள் திரளத் தொடங்கினர். களைகட்டியது எவ்வியூர்.

பெருந்தாழி எனச் சொல்லப்படும் பெருவட்டப்பானையை எடுத்துவந்தனர். அதில் குடம்குடமாய் நீரூற்றினர். பானை எளிதில் நிரம்புவதாக இல்லை. அவ்வளவு நேரம்கூடப் பொறுத்திருக்க யாரும் ஆயத்தமாக இல்லை. கூச்சலும் குதியாட்டமுமாக சூழல் வேகங்கொண்டது. அதனினும் வேகமாகக் குடங்கள் வந்துகொண்டிருந்தன. நீர் நிரப்பி முடித்ததும் கபிலரைப் பார்த்துப் பெருமகிழ்வோடு பாரி சொன்னான், “சோமப்பூண்டை அதற்குள் போடுங்கள்.”

அதற்குப்பின் என்ன நடந்தது என்பது துண்டுதுண்டாகத்தான் நினைவிருக்கிறது. சோமப்பூண்டை உள்ளே போட்டவுடன் எழுந்த மணம் முதல் கிறக்கத்தை உண்டாக்கியது. இழுத்து மூச்சுவிட்டு மயங்கியபொழுது ஒருவர் மாற்றி ஒருவர் இடித்துக்கொண்டிருந்தது நினைவிலிருந்தது.

அதன்பின் மேல்மாடத்தில் கையில் குவளையோடு பாரி அருகில் இருந்தான். அப்பொழுது கபிலரின் கையிலும் குவளை இருந்தது. பாரியிடம் செம்மாஞ்சேரலின் கதையைக் கேட்டார். பாரியும் அதனைச் சொன்னான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 54


“சோமபானம் எங்களுக்கு வேண்டும். என்ன விலை கொடுத்தும் நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லி ஆட்களை அனுப்பினான் செம்மாஞ்சேரல். அது இயற்கை எங்களுக்கு வழங்கும் காதற்பரிசு. அதனை நாங்கள் கண்டறிய முடியாது. அதுவாகத்தான் எங்களைக் கண்டறியும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அது நிகழும் என்று சொல்லி அனுப்பினேன்’’ என்றான் பாரி.

கபிலர் நினைவு மீண்டபொழுது அவரது குடிலில் படுத்திருந்தார். பொழுது நண்பகலைக் கடந்திருந்தது. வெளிச்சத்தைப் பார்த்ததும் “விடிந்துவிட்டதா?” என்று கேட்டபடிதான் எழுந்தார். உடனிருந்த உதிரன் சொன்னான், “நண்பகல் கடந்துவிட்டது.”

“நான் எப்பொழுது குடிலுக்கு வந்தேன்?”

“நீங்கள் வரவில்லை. நான்தான் கொண்டுவந்து சேர்த்தேன்.”

அதன்பின் விளக்கம் கேட்க விரும்பவில்லை. “உணவு ஏற்பாடாகப் போகிறது. நீங்கள் தயாராகுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனான் உதிரன்.

கபிலரும் வேகவேகமாகத் தயாரானார். இன்றாவது முழுக்கதையையும் கேட்டுவிடவேண்டும் என்று பேரார்வங்கொண்டிருந்தார். புறப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது அவருக்கே புலப்பட்டது; பெருக்கெடுக்கும் ஆர்வத்துக்குக் கதையை மீறிய காரணம் ஊற்றப்படும் குவளையில் உண்டென்று.

மாலையில் வழக்கம்போல் மேல்மாடத்துக்கு வந்து சேர்ந்தார் கபிலர். அவரின் வருகையை எதிர்பார்த்திருந்தான் பாரி. உடன் தேக்கனும் முடியனும் இருந்தனர். கபிலருடன் வந்த உதிரனை அனுப்பி, காலம்பனை அழைத்துவரச் சொன்னான் பாரி. உதிரனும் புறப்பட்டுப் போனான்.

கபிலர் வந்து உட்கார்ந்ததும் ஆர்வத்தோடு தொடங்கினார், “செம்மாஞ்சேரல் சோமபானம் கேட்டு ஆளனுப்பியதற்கு, நீ மறுமொழி சொல்லி அனுப்பினதாகக் கூறினாயே. அதன்பின் என்ன நடந்தது?”  

பாரி, கபிலரைப் பார்த்து மெல்லியதாய் ஒரு புன்முறுவல் உதிர்த்தான். கபிலருக்குக் காரணம் புரியவில்லை. “ஏன் விளக்கம் சொல்லாமல் சிரிக்கிறாய்?”

பாரி சொன்னான், “முழுக்கதையையும் நேற்று சொல்லிமுடித்தேன். நீங்கள் மறுபடி முதலிலிருந்து கேட்கிறீர்களே, அதுதான் சிரித்தேன்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 54

கபிலருக்குச் சற்றே வெட்கமாக இருந்தது. “முழுக்கதையையும் சொன்னாயா? நான்தான் நினைவு தவறிவிட்டேன் என நினைக்கிறேன்” என்று கூறி, மறுபடியும் கதைசொல்லச் சொன்னார்.

“பறம்பின் மறுமொழிகேட்ட செம்மாஞ்சேரல் பெருஞ்சினங்கொண்டான். சோமபானத்தைத் தங்களுக்குத் தர மறுக்கிறான் பாரி என்ற முடிவுக்குப் போனான். எதையாவது செய்து அதனைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணியவனுக்கு வடதேசத்து முனி பற்பல எடுத்துக்காட்டுகளைக்கூறி வெறியூட்டினான். சேரர்படை பறம்பின் மேற்குமுகடுகளை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியது.”

``கூட்டத்தின் குரல் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் மயங்கிக்கிடப்பவனுக்கு இவையெல்லாம் நினைவில் தங்காது. நினைவில் இவை இருக்கின்றன என்றால் நான் மயக்கங்கொள்ளவில்லை என்றுதானே பொருள். குவளையில் மது அருந்தியபடி பேசிக்கொண்டிருப்பது வாழ்வெல்லாம் உள்ள பழக்கம்தானே. இப்பொழுது மட்டும் ஏன் அந்தப் பழக்கத்தை முழுமைகொள்ள முடியவில்லை. நம்மால் மட்டும்தானா அல்லது யாராலும் முடியவில்லையா?” கேள்விகள் எழுந்தபடியே இருக்க புரண்டு படுத்தார் கபிலர்.

விழிப்புத்தட்டியது. கண்விழிக்க நினைத்தாலும் சிந்தனை விடுவதாக இல்லை. வெளியில் தெரியும் வெளிச்சத்தை உள்வாங்க முடியாமல் கண்கள் கூசித்திறந்தன. “நாம் எப்போது வந்து சேர்ந்தோம்?” என்று உதிரனிடம் கேட்டார் கபிலர்.

பதில்சொல்லத் தயங்கியபடி உதிரன் நின்றுகொண்டிருந்தான்.

“ஏன் பதில் சொல்லத் தயங்குகிறாய்?” என அவர் கேட்டுக்கொண்டிருந்தபொழுது பதில் என்னவென்று அவருக்கே புரிந்தது. அவர் மேல்மாடத்துக் கல்லிருக்கையில்தான் படுத்திருந்தார். வீடு திரும்பவேயில்லை.

மீண்டும் பகற்பொழுது கழிந்தது. குளித்துத் தயாராகி மாலைப்பொழுதில் மேல்மாடத்தை வந்தடைந்தார். ஆனால், இன்று கபிலர் வரும்முன்பே ஆட்டம் தொடங்கிவிட்டது. “காலம்பன்தான் தொடக்கிவைத்தான்” என்றான் பாரி.

“முடிக்கமுடியாத ஆட்டத்தை யார் தொடங்கினால் என்ன?” என்றார் கபிலர்.

“ஆட்டம் என்றால் அது முடியத்தான் வேண்டுமா?” எனக் கேட்டான் காலம்பன்.

“கேள்வி சரிதான், ஆனால், நான் ஆட்டத்துக்குள் வந்த பிறகுதான் இதற்கான விடையைச் சொல்ல முடியும்” என்றார்.

வீரனொருவன் நீட்டிய குவளையை வாங்கிய கபிலர் குடிக்காமல் கையில் பிடித்தபடியே பாரியிடம் கேட்டார், “இந்த ஆட்டத்தைப்பற்றிப் பின்னர் பேசுவோம். செம்மாஞ்சேரல் என்னதான் செய்தான்?”

வீரயுக நாயகன் வேள்பாரி - 54

பாரி வழக்கம்போல் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்? நேற்றும் முழுக்கதையையும் நீ சொன்னாயா?”

சிரித்தபடியே “ஆம்” என்று தலையாட்டினான்.

“கதைகேட்ட எனக்கு எதுவும் நினைவிலில்லை. கதைசொன்ன உனக்கு மட்டும் எப்படி நினைவிருக்கிறது?”

முன்பைவிடப் பெரும்சத்தத்தோடு சிரித்தான் பாரி.

கபிலருக்கு இதற்கான காரணமும் புரியவில்லை.

“கதைசொல்லி முடிக்கும் வரை குடிக்கக்கூடாது என எனது குவளையையும் வாங்கிக் குடிப்பவர் நீங்கள்தானே, அப்புறம் எனக்கு எப்படி மறக்கும்” என்றான்.

சிரிப்பில் உருண்டது மேல்மாடம். காலம்பன் காடதிரச் சிரித்தான். புரையேறித் தும்மல்கொண்டு மீண்டும் சிரித்தான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்தது. விடாமல் சிரித்தனர் எல்லோரும். பாரியின் கண்ணிலும் நீர் திரண்டது. இப்படி மகிழும் காலம்பனைக் காண இத்தனை நாளானதென நினைத்துத் திரண்ட நீரது.

குவளைகள் சில நொறுங்கியிருக்கலாம். ஆனால், தனது கால்பட்டு பானை ஒன்று சரிந்து விழுந்ததும் கண்விழித்தார் கபிலர். பக்கத்தில் படுத்திருந்த உதிரன் கண்விழித்தான். “பானை காலருகில் எப்படி வந்தது உதிரா?” எனக் கேட்டார்.

உதிரன் சொன்னான். “வீட்டில் உள்ளோர் அவ்விடம் வைத்துள்ளனர்.”

பதில் கேட்டுத் திடுக்கிட்டார் கபிலர். “நாம் இருப்பது…” சரி வேண்டாம் என முடிவுசெய்து விளக்கம் ஏதும் கேட்காமல் அவ்வீட்டை விட்டு எழுந்து நடந்தனர்.

தேக்கன்தான் நேற்று கதையைச் சொன்னான். அந்தப் போரின் முடிவு மட்டும் நினைவில் இருந்தது. “ஒளி சரியப்போகும் அந்தக் கடைசிப்பொழுதில் பாரியின் வாள்வீச்சு எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. இருதரப்பு வீரர்களும் நிகழ்வதை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, கணநேரத்தில் செம்மாஞ்சேரலின் தலையை இடப்புறக்காட்டை நோக்கி சீவிச்சரித்தான் வேள்பாரி.”

போர் தொடங்கி, நீண்ட தாக்குதலுக்குப்பின்தானே இது நடந்திருக்கும். ஆனால், அதுவெல்லாம் சொல்லாமல் இதனை மட்டும் ஏன் சொன்னார் தேக்கன் என்று தோன்றியது. தோன்றிய மறுகணமே, “அவர் முழுமையும் சொல்லியிருப்பார். நமக்குத்தான் நினைவில் தங்கவில்லை” என நினைத்தபடி நடந்தார் கபிலர்.

“ஆனால், செம்மாஞ்சேரலின் தலையைப் பாரி சீவி எறிந்தது மட்டும் எப்படி நினைவில் இருக்கிறது?” என்ற கேள்வி எழுந்தது.

சோமபானத்தின் மீளமுடியாத மயக்கத்தில் மூழ்கினாலும் அதனைக் கிழித்து நினைவின் ஆழத்துக்குள் இறங்கும் வல்லமை பாரியின் வாளுக்கு உண்டு என்று தோன்றியபொழுது மெய்சிலிர்த்தது கபிலருக்கு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...