மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200ஓவியம்: ராமமூர்த்தி

உறவு துளிர்விட ஓர் இனிய வழி!

உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மண்டபத்தில் ஒரு பெண் தன் குழந்தையிடம்  அருகிலிருந்த சிலரைக் காட்டி ஏதோ கூறி அனுப்பிவைத்தாள். அந்தக் குழந்தையும் சமர்த்தாகச் சென்று அவர்களிடம் பேசி, முத்தப் பரிசுடன் திரும்பினாள். மண்டபம் முழுக்க அந்தச் சுட்டியின் துறுதுறுப்பு அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தது. பிறகு, அவள் அம்மாவிடம் இதுபற்றிக் கேட்டேன். ``காதல் திருமணத்தால் அவரின் உறவுகள் தள்ளிப் போய்விட்டன. அதனால்தான் இதுபோன்ற விழாக்களில் என் குழந்தை மூலம் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறேன். அதில் பாதியளவு வெற்றியும் பெற்றுவிட்டேன். அவரின் முழு உறவுகளையும் என் குழந்தை மூலம் எங்களுடன் இணைந்து, மீண்டும் புதிய உறவு துளிர்விட முயற்சிக்கிறேன்'' என்றாள்.

விழாக்களில் குழந்தைகள் `செல்’லும் கையுமாகத் திரியும் இந்தக் காலத்தில் அவளுடைய உயர்ந்த எண்ணம் பாராட்டுக்குரியது.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி - 15

அனுபவங்கள் பேசுகின்றன!

ஹவுஸ் ஓனர்கள் ஜாக்கிரதை!

எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டினர், அவர்களது மேல் வீட்டை வாடகைக்குவிட்டிருந்தனர். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் திடீரென இரவோடு, இரவாக வீட்டு உரிமையாளரிடம் அட்வான்ஸை வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்கள்.

அடுத்த நாள் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தால், சசிக்க முடியாத அளவுக்குக் குப்பைக் கூளங்கள் குவிந்திருந்ததோடு, குளியல், கழிப்பறை எல்லாம் மிகவும் அசுத்தமாக இருந்தன. கிச்சன் மேடையில் சப்பாத்தி தேய்த்துத் தேய்த்து அப்படியே காய்ந்து போய் துடைக்கப்படாமல் கிடந்தது. ஹாலில் ஓரிடத்தில் டைல்ஸ் பெயர்ந்துபோய்க் கிடந்தது. இதைப் பார்த்த வீட்டு உரிமையாளர் அழுதேவிட்டார். இரண்டு வாரம் கஷ்டப்பட்டு அந்த வீட்டைச் சுத்தப்படுத்திச் சரி செய்தார். `நாகரிகம் கருதி வீட்டின் உள்ளே செல்லாமல் இருந்ததுதான் தவறோ?’ என்றும் வருந்தினார்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்

நம்மாலான உதவி!

ஒருநாள் தோழி வீட்டுக்குச் சென்றிருந்தேன். வாசலில் ஒரு கவரில் காய்கறி தோல், காம்புகள் ஆகியவற்றைப் போட்டுவைத்திருந்தாள். ``குப்பைத்தொட்டியில் போடாமல், இங்கு எதற்கு வைத்திருக்கிறாய்?’’ என்று கேட்டேன். ``பால்காரர் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அவர் வீட்டில் நிறைய மாடுகள் இருக்கின்றன. காய்கறி குப்பைகளை கவரில் போட்டுவைத்தால் அவர் வந்து எடுத்துச்சென்று மாடுகளுக்குக் கொடுப்பார். குப்பையோடு குப்பையாகப் போடுவதைவிட ஓர் உயிருக்கு உண்ணக்கொடுத்தால் நல்லதுதானே... அதனால் காய்கறி நறுக்கியதும் சோம்பேறித்தனப்படாமல் அதன் தோல்களையும், காம்புகளையும் தனியே எடுத்துவைத்துவிடுவேன்’’ என்றாள்.

வீட்டுக்கு அருகில் மாடு இருப்பவர்கள் இப்படிச் செய்யலாமே!

- பிரேமா சாந்தாராம், சென்னை - 110

அளவுக்கு மிஞ்சினால்...

என் தோழி ஒருத்தி தினமும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டாள். இதனால் தலைவலி, கண்வலியோடு சேர்த்து செல்போன்  இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற அளவுக்கு மன அழுத்தத்துக்கும் ஆளானாள்.  சமைக்கும்போதும் தூங்கும்போதும்கூட செல்போனே கதியென்று இருந்தவள் ஒருநாள் செல்போனைத் தொலைத்துவிட பித்துப்பிடித்தவள் போல அழத்தொடங்கிவிட்டாள். நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவளைச் சமாதானம் செய்ய முடியவில்லை. அவளுக்குப் புதிய செல்போனை வாங்கிக்கொடுத்தப் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்தாள். ஒருவேளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் இப்படி இழக்கும் நேரத்தில் வருந்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது. காணாமல்போன பொருள் பண இழப்பு மட்டுமல்ல. கூடவே பயத்தையும் சேர்த்துக்கொடுத்து, மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடும் என்பதைக் கவனத்தில்கொள்வோம் தோழிகளே!

- கவிதா, வாலாஜாப்பேட்டை.