Published:Updated:

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - பாகம் 35

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - பாகம் 35

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - பாகம் 35

Published:Updated:

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - பாகம் 35

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - பாகம் 35

சுந்தர ராமசாமி - மனித மனதின் உள் அடுக்குகளில் பயணிக்கும் எழுத்தாளர்! கதை சொல்லிகளின் கதை - பாகம் 35
பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்
பாகம்-23- ஜி.நாகராஜன் பாகம்- 24-  பெண் படைப்பாளிகள் பாகம்-1 பாகம்-25 - பெண் படைப்பாளிகள் பாகம்-2
பாகம்- 26 - ஆ.மாதவன்  பாகம்-27 - ஜெயகாந்தன் பாகம்-28 - கிருத்திகா
பாகம்-29 தி.ஜானகிராமன் பாகம்-30- அசோகமித்திரன் பாகம்-31-

எம்.வி.வெங்கட்ராம்

பாகம்- 32- இந்திரா பார்த்தசாரதி பாகம்-33 - சார்வாகன்  பாகம் 34 - ந.முத்துசாமி

இளமைக்காலத்தில் என்னை மிகவும் வசீகரித்த படைப்பாளிகளில் முக்கியமானவர், சுந்தர ராமசாமி. காரணம், அந்த வயதில் இடதுபக்கம் திரும்பியிருந்தேன். என் வயதில் சுந்தர ராமசாமியும் தோழர் ஜீவாவால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான உறவில் இருந்தார் என்பதுதான். எழுத ஆரம்பித்தபோது, கம்யூனிஸ்ட்டுகளான ரகுநாதனும் விஜயபாஸ்கரனும் நடத்திய சாந்தி மற்றும் சரஸ்வதி இதழ்களிலேயே தன் சிறுகதைகளை வெளியிட்டு வந்தார்.

`முதலும் முடிவும்', `தண்ணீர்', `அக்கரைச் சீமையிலே', `பொறுக்கி வர்க்கம்', `கோயில் காளையும் உழவு மாடும்' ஆகிய ஆரம்பக்கதைகள் `சாந்தி' இதழிலும், `கைக்குழந்தை', `அகம்', `அடைக்கலம்', `செங்கமலமும் ஒரு சோப்பும்', `பிரசாதம்', `சன்னல்', `லவ்வு', `ஸ்டாம்பு ஆல்பம்', `கிடாரி', `சீதைமார்க் சீயக்காய்த்தூள்' ஆகிய கதைகளை `சரஸ்வதி'யிலும் எழுதினார். அந்த இரு இதழ்களும் நின்ற பிறகே `கல்கி', `எழுத்து', `தீபம்', `ஞானரதம்' போன்ற இதழ்களிலும் `காலச்சுவடு' என்ற சொந்தப் பத்திரிகையிலும் எழுதலானார்.

ஆரம்பகால வாசிப்பில் எனக்கு `சீதைமார்க் சீயக்காய்த்தூள்' மிக முக்கியமான கதையாகப் பட்டது. ஒரு கலைஞனின் கம்பீரத்தை, பணத்துக்கு அடிபணியாத கலைமேதைமையைக் கொண்டாடிய கதை அது.

நூறு ரூபாய் முன்பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார் குமாரவேலு பணிக்கர். ஒரு மாத காலத்தில் படத்தை முடித்துத் தந்துவிட வேண்டும் என்பது பேச்சு. சுப்பையா ஆசாரி ஒப்புக்கொண்டார்.

சரியான `சான்ஸ்’ அடித்துவிட்டது. சீதையின் முழு உருவப்படம் ஐந்நூறு ரூபாய். முன்பணம்  ரூபாய் நூறு வேறு. திருப்தியாக இருந்தால் மேலும் ஒரேயடியாக இருபது படத்துக்கு ஆர்டர்… அது சீதை மார்க் சீயக்காய்த்தூளுக்கான விளம்பரப் படம். சாமக்கிரியைகளைக் கையெடுத்து வணங்கிவிட்டு வேலையை ஆரம்பித்தார் சுப்பையா ஆசாரி.

அவர் மனதிலேயே இருக்கிறாளே சீதை. பர்ணசாலையின் முன்னால் காலை மணி போட்டு, இடதுகையைத் தரையில் ஊன்றியபடி அமர்ந்திருக்கிறாள். உடம்பெல்லாம் அழகு, உடம்பெல்லாம் சோகம். ஒரு கட்டுத்தலை தோள் வழியாய் ஆலம் விழுது மாதிரி சரசரவெனக் கீழிறங்கி, பாம்புப் பத்தி போன்ற நுனி மயிர் புழுதியில் புரள்கிறது.

பென்சிலால் லேசாகக் கோடு போட ஆரம்பித்தார். போன பொழுது அவருக்குத் தெரியாது. இருட்டிவிட்டது. அவர் அதை உணரவே இல்லை. அவர்தான் விளக்குப்போட்டார். அதுவும் அவருக்குத் தெரியாது.

``இருந்தாலும் இப்படியும் ஒரு அப்பன் உண்டுமா உலகத்திலே? கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சுப்பம்மாள்.

அந்த வீட்டில் அவர்கள்தான் கணவனும் மனைவியும். அவர்கள்தான் குழந்தைகள். ஒருமாத காலம் படமே கதி எனக் கிடக்கிறார் சுப்பையா ஆசாரி. மனைவியைக்கூட இடையில் உள்ளே வர அனுமதிக்கவில்லை, முழுப் படத்தையும் வரைந்து முடித்த பிறகுதான் காட்டவேண்டும் என்று. ஒரு மாதமும் கடின உழைப்புத்தான். அந்தரங்கச் சுத்தியோடு வேலையில் முனைந்திருந்தார் அவர். மனதில் இருக்கும் உருவத்தை வர்ணத்துக்குள் அடக்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் சன்னம் சன்னமாக வேலைசெய்தார்.

படவேலை முடிந்ததும் அவரே அவளைப் பார்க்க அழைக்கிறார். சுப்பம்மாள் படத்தைப் பார்த்தாள் பார்த்துக்கொண்டே இருந்த அவள் முகத்தில் ஒரே பரவச உணர்ச்சி.

``எப்படி இருக்குது?” என்று கேட்டார் அவர். சுப்பம்மாள் பதில் சொல்லவில்லை. அவர் பக்கம் நெருங்கி ``உங்க வலதுகையைக் காட்டுங்களேன் பாப்பம்” என்றாள்.

வலதுகையை  அவள் முன்னால் விரித்தார். விரல்களைத் தொட்டபடியே ``இந்த விரலுக்குள் இருந்தா இந்தப் படம் வந்தது? இந்த விரலுக்கு என்ன விசேஷம்? நீளம் நீளமா இருக்குது. ஆயிரம் பேருக்கு இப்படி இருக்குதே” என்றாள் அவள்.

``விரலுக்குள்ளிருந்து அது வரலை. மனசுக்குள்ளிருந்து வந்தது” என்றார் அவர். ஆனால், சீயக்காய் கம்பெனி முதலாளிக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை.

``நான் சொல்றேனேன்னு வித்தியாசமா எடுத்துக்கிடப்படாது. படத்தைக் கொஞ்சம் `ரிப்பேர்’ பண்ணணும்.”

``ரிப்பேரா?”

``ஆமாம். லேசா ரிப்பேர் பண்ணணும். அப்படியே மேலாகக் கொஞ்சம் சாயத்தைப் பூசி கொஞ்சம் வாளிப்பா பண்ணுங்க.”

``வாளிப்பா?” 

``ஆமாம். கொஞ்சம் மதமதன்னு இருக்க வேண்டாம் சீதெ?”

``இப்பம் அதுக்கு என்ன அவசரமாம்? ராமரைப் பார்த்ததும் தனியா மதமதன்னு ஆயுட்டுப்போறா.”

``நீர் ராமாயணத்துக்குள்ளேயே நின்னு பேசுதீரு. இந்த உலகத்துக்குக் கொஞ்சம் வாரும். இது விளம்பரத்துக்காக வைக்கப்போற படம். கொஞ்சம் `அட்ராக்‌ஷனா’ இருக்க வேண்டாமா? ராமனைவிட்டுப் பிரிந்திருக்கும் சீதையை வாளிப்பாக வரைந்து தர முடியாது'' என்று அந்தக் கலைஞன் உறுதியாக மறுக்கிறான்.

இந்தக் கதையில் அந்தக் கலைஞனின் கர்வம் என்னைப்போல பல இளைஞர்களை அன்று ஈர்த்தது. அநேகமாக சுந்தர ராமசாமி அவர்களின்  கலைப்பயணத்தில் இந்தக் கதையிலிருந்து ஒரு திசை மாற்றம் நடந்ததாகக்கொள்கிறேன்.

1963-ல் அவரது `பிரசாதம்'  தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில் இது பற்றி அவரே குறிப்பிடுகிறார்:

`1951-ல் எழுத ஆரம்பித்த நான், மனிதகுலத்தை உய்விக்கும் பெரும்பணியில் எனது தொண்டையும் செலுத்திவிட வேண்டும் என்ற ஆசையிலும், புதுமையிலும், புரட்சியிலும் அப்போது என் மனம்கொண்டிருந்த மோகத்தாலும் மார்க்சிய அரசியல்-இலக்கியக் கொள்கைகளைத் தழுவி, சுருதி சுத்தமான உலகம் மலர கனா கண்டு தத்துவம் திட்டம் சுமந்து பிறப்பித்த கதைகளில் சில, என் முதல் கதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. சும்மா தரையில் உட்கார்ந்து எழுதிய கதைகளும் அதில் உண்டு. 1956-ம் ஆண்டு உலக நிகழ்ச்சிகள், அன்று வரையிலும் மனவேதனையை அளித்துக்கொண்டிருந்த சந்தேகங்களைச் செம்மையாக ஊர்ஜிதம் செய்து என் முள்முடியைப் பிடுங்கி எறிந்துவிட்டன. இதன் பிறகு வாழ்க்கைக் கண்ணோட்டமும், அதன் ஒரு கிளையான கலைக்கொள்கைகளும் மாறுதலுற்றன. இந்த `இரண்டாவது மனநிலை’யில் எழுதிய கதைகள் இவை. இந்த இரண்டாவது மனநிலை, அவருடைய கம்யூனிஸ்ட் மனநிலையைச் சுய எள்ளலுடன் பார்க்கத் தொடங்கிவிடுகிறது.'

1950-களின் தொடக்கத்தில் சு.ரா, பிராமணச் சமூகத்தவராக இருந்தும் பொதுவுடமைச் சிந்தனையின் ஈடுபாட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட உழைக்கும்வர்க்கம் மீது பரிவுகொண்டவராக இருந்தார். தொடக்கத்தில் இந்த வர்க்கத்தின் துயரமான நிலைமைகளைப் பற்றிச் சிறுகதைகள் எழுதினார். `ஸ்டாலினுடைய எதேச்சாதிகாரத்தைப் பொதுவுடமைச் சித்தாந்தமாகக் கருதி அதைவிட்டு விலகினார். பொதுவுடமை இயக்கத்தைவிட்டு விலகிய பிறகு சு.ரா. படைத்த புனைகதைகள், பிரச்னைக்கு உரிய ஆழ்மனப் படிவங்களைக்கொள்ளத் தொடங்கின' என்று கணிக்கிறார் ஆய்வறிஞர் ராஜ் கௌதமன் (`சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்' நூலில்-அடையாளம் பதிப்பகம்)

`அழைப்பு’ கதையிலிருந்து அவரது மூன்றாம் கட்டம் தொடங்குவதாகவும் இறுதிக்காலத்தில் அவர் எழுதிய கதைகள் நான்காம் கட்டம் எனவும் வகை பிரிப்பார் அரவிந்தன். சரி, அது ஆய்வாளர்கள் வேலை. என்னுடைய வாசிப்பில் அவரது ஆரம்பகாலக் கதைகள் கலைநுட்பமும் சற்றே பிரசாரமும் கலந்த படைப்புகளாக இருந்தன என்பேன். கலைத்தன்மையே இல்லாத பிரசாரம் என்று இப்போதும் என்னால் அவற்றை ஒதுக்கிவிட முடியவில்லை, அவரே ஒதுக்கினாலும்கூட.

உதாரணமாக, `தண்ணீர்' என்கிற 1953-ல் எழுதப்பட்ட `சாந்தி’யில் வெளியான கதையை எடுத்துப் பார்ப்போம்.

`ஒரு கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்னை பற்றிய கதை இது. அரசாங்கம் அணை கட்டியது. திறப்புவிழா நடத்தியது. பத்திரிகைகளில் புகைப்படங்கள் வந்தன. ஆனால், தண்ணீர் வரவில்லை. ஒருநாள் காலை ஊரில் பெரிய ரகளை. வரி பிரிக்க ஆள்கள் வந்தார்கள். தண்ணீர் வரி! ஏற்கெனவே ஓர் அணை இருந்தது. புதிய அணையும் கட்டி முடிந்தது. இப்போது அணைகள் இருக்கின்றன. ஆனால், தண்ணீர் இல்லை. தண்ணீர் வரி இருக்கிறது. சில இளைஞர்கள் வரி கொடுக்க மறுத்தார்கள், ஒரேயடியாகத் தர முடியாது என்று சாதித்தார்கள். இது ஒரு புதிய அனுபவம். இந்தக் காலத்தில் போக்கிரிகள் எங்கும் மலிந்துவிட்டார்கள். தண்ணீர் இல்லையென்றால், தண்ணீர் வரி இல்லை என்கிறார்கள். அக்கிரமம் அல்லவா இது? தேசத்துரோகம் அல்லவா? எனவே வரி பிரிப்பவர்கள் அவர்கள் வீட்டில் புகுந்து அரிய பெரிய பொக்கிஷங்களையெல்லாம் அள்ளி வெளியே போட்டார்கள். கிழிந்த சட்டை, ஒடிந்த குடை, மூன்று கால்கள் உள்ள முக்காலி, சட்டி, பானை இவற்றையெல்லாம் அவர்கள் ஏலம் போட்டார்கள். இப்படி, கட்டவேண்டிய வரியை போக்கிரிகள் வசூலித்தார்கள்.

அணை, ஊருக்கு வெகுதூரத்தில் இருக்கிறது. ஒருநாள் தூரத்து அணையில் தண்ணீர் கிடக்கிறது என்று மக்களுக்குத் தெரியவருகிறது. அதை விவசாயத்துக்குத் திறக்க வேண்டாம் என அரசாங்கம் ரகசியமாக முடிவுசெய்திருப்பது தெரியவருகிறது. சுசீந்திரம் கோயிலில் தெப்பத் திருவிழா நெருங்குகிறது. ஆனால், தெப்பத்தில் தண்ணீர் இல்லை. ஆகவே, கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்ட அடிப்படையில் ரகசியமாக திருவிழாவுக்கு முதல் நாள் ராத்திரி அணையைத் திறந்து கோயிலுக்கு விடுவது என்று முடிவாம்.

புதிய சிந்தனைகளுடன் கோபக்கார இளைஞர்கள் திரள்கிறார்கள். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று இரவோடு இரவாகச் சென்று அணையின் மதகுகளைத் திறந்து எல்லோருடைய வயலுக்கும் தண்ணீரைப் பாய்ச்சிவிட்டு வந்துவிடுகிறார்கள். அரசக் குற்றமாச்சே? ஆகவே, அவர்களை வீடு வீடாகப் புகுந்து காவல்துறை அடித்து உதைத்துத் தூக்குகிறது. காவல்துறை வண்டியில் ஏற்றுகிறது. வண்டி ஊரைச் சுற்றிப் போகிறபோது, அடிபட்டு அவலநிலையில் இருந்த வேலப்பனின் கூட்டாளிகள் சிரமப்பட்டு எழுந்து, லாரியின் வலை வழியே தங்கள் வயல்களைப் பார்த்தார்கள். பூர்ண திருப்தியில், எக்களிப்புடன் தலையாட்டியவாறே, கதிர்கள் வீரவணக்கம் சொல்லி அவர்களை வழியனுப்பிவைத்தன' என்று கதை முடிகிறது.

இப்படித் தொடங்கிய `முற்போக்கு’ப் பயணம்தான் பிறகு தடம் மாறுகிறது. ஊரை விட்டுவிட்டுத் தனிநபர் உளவியலுக்குள் நுட்பமாகப் பயணிக்கிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் என்ன பகைமுரண் இருக்கிறது, என்பது கேள்வி.

சுமார் 75 கதைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, எனக்குப் பிடித்த `ரத்னாபாயின் ஆங்கிலம்’ என்கிற கதையைப் பார்ப்போம்.

டெல்லியில் இருந்த தன் உற்ற சிநேகிதியான அம்புஜம் ஸ்ரீனிவாசனுக்கு, வழக்கம்போல் ரத்னாபாய் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினாள். அதன் கடைசிப் பாராவை `அம்பு, இந்தப் பட்டுப்புடவையை நீ பார்த்தால் என் கையிலிருந்து அதைப் பிடுங்கி உன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு, `எனக்கு... ஐயோ எனக்கு!’ என்று குதிப்பாய். சந்தேகமே வேண்டாம். ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனை, `கலைஞன்' என்று நான் கூசாமல் அழைப்பேன். வண்ணக்கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன்தான்' என்று முடித்திருந்தாள். 

அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்க்கும்போது அதனுள் வினையின் விதைகளும் அடங்கியிருந்தன என்பதை ரத்னாபாய் ஊகித்திருக்கவில்லை. அம்புவிடமிருந்து வந்த பதிலில், `ரத்னா, உனது ஆங்கிலம்! எத்தனையோ தடவை அதை வியந்தாயிற்று! வியந்ததைச் சொல்லத் தெரியாமல் விழித்தாயிற்று! ஒன்றாய்த்தானே படித்தோம்... எங்கிருந்து கிடைத்தது உனக்கு மட்டும் இப்படி ஒரு பாஷை? கடிதங்கள் மனப்பாடம் செய்யப்படுவதுண்டோ? செய்கிறேன். சிலசமயம் மறுபாதியை அவர் திருப்பிச் சொல்கிறார். பரதநாட்டியம் மனக்கண்ணில் வருகிறது. உன் பாஷையின் நளினத்தை உணரும்போது. நானும் கல்லூரி ஆசிரியை, அதுவும் ஆங்கிலத்தில். நினைக்கவே வெட்கமாக இருக்கிறது.

ஆமாம்... அப்படி என்ன அதிசயம் அந்தப் புடவையில்? வாங்கி வை எனக்கும் ஒன்று. அதேமாதிரி, என் சக ஆசிரியைகளுக்கு இரண்டு. வெட்கப்படட்டும் அவர்களும் என எண்ணி உன் கடிதத்தைக் காட்டப்போக, பயப்படாதே. முழுவதுமல்ல சில பகுதிகளைத்தான். இப்படி ஒரு கோரிக்கை வந்து சேர்ந்தது. தொந்தரவுதான் உனக்கு' என்று எழுதியிருந்தாள்.

`தொந்தரவுதான்' என ரத்னாபாய் கடிதத்தைப் படித்து முடித்ததும் முணுமுணுத்தாள். ``அம்பு, என் கண்ணே... நீ நினைப்பதைவிடவும் பெரிய தொந்தரவு” என்று கற்பனையில் அம்புவின் வாட்டசாட்டமான முழு உருவத்தையும் இடதுகைவிரல் நுனிகளால் அடிக்கு ஒரு தரம் மூக்குக்கண்ணாடியின் இரு ஓரங்களையும் தொட்டு அசைத்துக்கொள்ளும் அவளுடைய தன்னுணர்வற்றச் செய்கையோடு கண்முன் நிறுத்திச் சொன்னாள்.

ஆனால், உண்மை என்னவென்றால் அவளிடம் பணமே இல்லை. குடிகாரக் கணவனிடம் கேட்டு வாங்க முடியவில்லை. தன் கை வளையல்களை  அடமானம் வைத்து, சேலைகள் வாங்கித் தோழிக்கு அனுப்ப முடிவுசெய்கிறாள். வங்கிக்குப் போனால் அன்று வங்கிக்கடன் கிடையாது என்கிறார்கள். `சரி, கடன் சொல்லி ஜவுளிக்கடையில் வாங்கிக்கொள்ளலாம்' எனச் செல்கிறாள்.

கடைப்பையன்கள் முன்னால் வந்து நின்றதும், ``அன்று நான் எடுத்துக்கொண்டு போன மாதிரி சேலை வேண்டும்” என்றாள். அவள் மனம் குறுகுறுத்தது. `கடவுளே, எதற்காக இப்படி நான் சொல்கிறேன்? எனக்கும் புத்தி பேதலித்துவிட்டதா!' என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். பையன்கள் விழிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவராய் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போனார்கள். ``யார்ரா அன்னிக்குக் கொடுத்தது?” என்று முதலாளி அதட்ட ஆரம்பித்தார்.

`நான் எடுக்காத சேலையை எப்படி இவர்கள் காட்ட முடியும்? இதற்கு மேலும் இவர்களைத் தண்டிப்பது என்னைப் போன்ற ஒரு ஸ்திரீக்கு அழகல்ல’ என்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் நினைத்துக்கொண்டே, ``நல்லதா எதையாவது காட்டுங்கப்பா?” என்றாள்.

`எனக்கு புத்தி பேதலித்துவிட்டது. கற்பனையே நிஜம் என நம்ப ஆரம்பிக்கிறேனா?’ பையன்கள் பட்டுச்சேலையை எடுத்துவர அறைக்குள் சென்றார்கள். உண்மையில் அப்படி எழுதியிருக்கவேண்டிய அவசியமில்லை. அதிலும் `என் அருமை அம்புவுக்கு' என்று ரத்னாபாய் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். அகஸ்மாத்தாய்ப் படிக்க நேர்ந்தது அந்த ஆங்கிலக் கவிதையை. அற்புதமான கவிதை. ஒவ்வொரு வார்த்தையும் வைரத்தோடில் கற்கள் பதித்த மாதிரி இருந்தது. அதில் சில வார்த்தைகள் ரத்னாவிடம் ஏதோ விதமான மயக்கத்தை ஏற்படுத்திற்று. அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பட்டாடையை வர்ணித்தால் வர்ணனை மிக அற்புதமாய் அமையும் என்று அவளுக்குத் தோன்றிற்று. அந்த வர்ணனையை அன்றே – அப்போதே – அம்புவுக்கு எழுதுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

``பொல்லாத பொறிதான் அது” என்று ரத்னாபாய் முணுமுணுத்தாள். ``அது சரி, எடுக்காத சேலையை எடுத்ததாக நான் ஏன் சொல்கிறேன். எதற்காக? ரத்னா சொல்லு எதற்காக?” என்று ரத்னா கேட்டுக்கொண்டாள். சேலைகளை கவுன்டரில் பரப்பிவிட்டார்கள். ``எதைத் தேர்ந்தெடுப்பது? அம்பு, உனக்கு எது பிடிக்கும்? உன் சிநேகிதிகளுக்கு எது பிடிக்கும்? உன் சிநேகிதி ஆங்கிலத்தில் ஒரு மேதை. ஒப்புக்கொள்கிறோம். ஆனால், புடவை தேர்ந்தெடுப்பதில் அவள் ஓர் அசடு என்று அவர்கள் உன்னிடம் சொல்லும்படி ஆகுமா? அல்லது ஆங்கிலத்தில் வெளிப்பட்ட ருசி புடவைத் தேர்வில் அழுத்தம் பெறுகிறது என்பார்களா? பின்வாக்கியத்தை அவர்கள் சொல்லவேண்டுமெனில் நான் தேர்ந்தெடுக்கவேண்டிய சேலை எது? எனக்கு ஏன் இன்று ஆங்கில வார்த்தைகள் அதி அற்புதமாய் ஓடிவருகின்றன? அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுவதற்கான வேளை நெருங்கிவிட்டதா?” - மூன்று சேலைகளைத் தேர்ந்தெடுத்தாள் ரத்னாபாய்.

புதன்கிழமை காலையில் மீதிப்பணம் தந்து எடுத்துக்கொள்வதாய்  கடைமுதலாளியிடம் சொல்லி, சிறிது முன்பணமும் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

அன்று இரவு ரத்னாபாய் அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அதன் கடைசி பாராவில் `சேலைகள் எடுத்து அனுப்பிவிட்டேன். உனக்கும் உன் சிநேகிதிகளுக்கும். நீயும் உன் சிநேகிதிகளும் அதைக் கட்டிக்கொண்டு கல்லூரி முன்னால் (அதன் வெளிச்சுவர், கல்லால் எழுப்பப்பட்டது) நிற்பதாய் கற்பனையும் பண்ணியாயிற்று. ஒன்று சொல்லிவிடுகிறேன். நீ உன் சேலைக்குப் பணம் அனுப்பினால், எனக்குக் கெட்ட கோபம் வரும். எனக்குத் தரவேண்டியது உன் புகைப்படம், அந்தப் புடவையில். ஐயோ! என் சிநேகிதிக்கு என்னால் நஷ்டம் என்று இளைத்துப்போய்விடாதே. இங்கு பிள்ளைகள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வலிக்கும் குறைவில்லை' என்று எழுதியிருந்தாள்.

தான் எழுதிய கடிதத்தை ஏழெட்டுத் தடவை படித்துப்பார்த்தாள் ரத்னா. அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ``பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி” என்றாள். ``இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள். மீண்டும் கண்ணாடி முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடிதத்தைப் படித்தாள்.

புதன்கிழமைக் காலையில் பேங்குக்குப் போகவேண்டும் என்ற சிரத்தையே ரத்னாபாய்க்கு ஏற்படவில்லை.

இந்தக் கதையை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்களா என்ன? சுந்தர ராமசாமியின் அற்புதமான படைப்புகளில் இதுவும் ஒன்று. அவருடைய சிறுகதைகளில் வரும் குழந்தைகள் அத்தனை அசலான குழந்தைகளாக இருப்பார்கள். `ஸ்டாம்பு ஆல்பம்', `நாடார் சார்', `பக்கத்தில் வந்த அப்பா', `சன்னல்' போன்ற கதைகள் உதாரணம்.

அவருடைய `அழைப்பு', `போதை', `வாசனை' போன்ற கதைகள் சாதிய மனப்பாங்கின் வெளிப்பாடுகள். அவருடைய பிற படைப்புகளின் உயரத்தோடு ஒப்பிடும்போது இந்தக் கதைகள் கருத்தியல்ரீதியாக சறுக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனத்தில் நியாயமும் உண்டு. ஆனால், இவை அல்ல சுந்தர ராமசாமி அவர்களின் அடையாளமான சிறுகதைகள்.

மனித மனதின் உள் அடுக்குகளில் பயணம் செய்தாலும் அவற்றுக்கான புறக்காரணிகளைச் சொல்லாமல் அவர் விட்டதில்லை என்றே சொல்ல வேண்டும். ஏராளமான இளம் படைப்பாளிகளை தன்னுடைய கறாரான விமர்சனங்களால் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. தரத்தையும் அறத்தையும் தன் படைப்புகளிலும் நேர்காணல்களிலும் இறுதிவரை வலியுறுத்தியவர். அவர் வலியுறுத்திய அறத்தையும் தரத்தையும் இன்று ஆய்வறிஞர் ராஜ் கௌதமன் கட்டுடைத்துப் பார்க்கிறார்.

ஒரு வாசகன் என்ற முறையில் சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இன்றைக்கும் என்னை வசீகரித்துக்கொண்டே இருக்கின்றன. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமிக்குப் பிறகு சுந்தர ராமசாமி என்னை ஆகர்ஷித்த படைப்பாளி.

நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோயில் என்ற கிராமத்தில், 1931 மே மாதம் 30-ம் தேதி பிறந்தார். பசுவய்யா என்கிற பேரில் கவிதைகள் எழுதியுள்ளார். தன் சமகால எழுத்தாளர்கள் பலரைப் பற்றியும் `நினைவோடை' என்கிற பேரில் தன்னுடைய நட்பையும் மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார். இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார். இடையில் சில ஆண்டுகள் எழுதாமல் இருந்தார். பிறகு `பல்லக்குத் தூக்கிகள்' என்கிற தொகுப்பின் மூலம் அந்த மௌனத்தைக் கடந்து வந்தார். `காலச்சுவடு' என்கிற இலக்கிய காலாண்டு இதழைத் தொடங்கினார். அவருடைய மகன் கண்ணன், இப்போது அந்த இதழை மாத இதழாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

``சிறுகதையைப் படைக்க வேண்டும் என்ற அவா இருந்தால், யாரும் அந்தத் திறனை வளர்த்துக்கொள்ளலாம்; அதற்கான வழிமுறைகளை, சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளலாம். சிறுகதையையே படிக்காமல் யாராலும் சிறுகதையை உருவாக்கிவிட முடியாது. அநேகமாக, எனக்குத் தெரிந்த வரை சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் சிறந்த சிறுகதை வாசகர்களும்கூட. அதுபோல் சிறுகதை எழுதுபவர்கள் சிறுகதையை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் கிடையாது. நாவல்கள் படிக்க வேண்டும். கவிதைகள் படிக்க வேண்டும். ஆராய்ச்சி நூல்களைப் படிக்க வேண்டும். சினிமா பற்றிப் படிக்க வேண்டும். வாழ்க்கைக்குச் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

எது சாத்தியமோ, எது அவனது அறிவுக்கு எட்டுமோ, என்னென்ன விஷயங்கள் சூழல் இன்று புரிந்துகொள்ள முடியுமோ அந்த விஷயங்கள் எல்லாம் படிக்கவேண்டிய ஒரு கட்டாயம் உருவாகிவிட்டது. நாம் படைக்கப்போவது சிறுகதைதானே, எனவே சிறுகதைகளை மட்டும் படித்து வந்தால்போதும் என்று நம் படிப்பைச் சுருக்கிக்கொண்டால் காலத்தையொட்டிய படைப்புகளைத் தர முடியாமல் தேய்ந்துபோவதற்கு வழிவகுக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், கதைகள் வேறு சிறுகதைகள் வேறு. இது என் தனிப்பட்ட நம்பிக்கை. கதைகளை எழுதிக்கொண்டிருப்பவர்களை `கதாசிரியர்' என்று ஏற்றுக்கொள்வேனே தவிர, `சிறுகதை ஆசிரியர்' என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். ”

இப்படி இளம் படைப்பாளிகளுக்கு நிறைய சொல்லிச் சென்றவர் சு.ரா. அவர் மீது விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனாலும் அவர் நான் சந்தித்த, பழகிய, வாசித்த முழுமையான ஒரு படைப்பாளி.

(இந்தத் தொடரின் முதல் பாகம், முற்றிற்று.)