Published:Updated:

நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்

நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்

நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்

1988-ல் சுந்தர ராமசாமியைப் பார்க்க மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் வந்திருந்தார். அவர்கள் இருவரும் நெடுங்கால நண்பர்கள். அய்யப்ப பணிக்கர், நெய்யாற்றங்கரையில் அப்போது வசித்துவந்த மூத்த காந்தியரான ஜி.ராமச் சந்திரனைச் சந்திக்கச் செல்வதாகச் சொன்னார். சுந்தர ராமசாமியும் உடன் கிளம்பினார். நான் அப்போது அங்கிருந்தமையால்,  வருகிறீர்களா என்று சம்பிரதாயமாகக் கேட்கப்பட்டது. பாய்ந்து ஏறிக்கொண்டேன்.     

நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்

அவர்கள் பேசிக்கொண்டே சென்றதிலிருந்து, ராமச்சந்திரன் அவர்களைப் பற்றி ஒரு சித்திரம் எனக்குக் கிடைத்தது. ஆனால், அன்று இலக்கிய வெறி கொண்டிருந்தமையால், இலக்கியம் அல்லாத எதையும் போதுமான அளவு மூளையில் நிறுத்திக்கொள்ளவில்லை. ராமச்சந்திரன், சுதந்திரப் போராட்ட வீரர்; காந்தியை நேரில் அறிந்தவர்; நெய்யாற்றங் கரையில் ஓர் அறக்கட்டளையை நிறுவியிருக்கிறார் என்று மட்டும் பதிந்தது. 

அந்தச் சந்திப்பிலும் அப்போது நான் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ராமச்சந்திரன் ஓர் உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அய்யப்ப பணிக்கர் ஆரம்பத்தில் பேசினார். பின்னர் சுந்தர ராமசாமி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ராமச்சந்திரன் திடமான குரலில் பேராசிரியர்களைப்போல கருத்துகளை வகுத்துரைப்பவராகவும் பிறர் குரலை செவிகொடுத்துக் கேட்கும் வழக்கம் குறைந்தவராகவும் இருந்தார். மேடைப்பேச்சு போலவே அவருடைய உரையாடல் தோரணை இருந்தது. அவர்கள் பேசிய எதற்கும் எனக்கு முன்தொடர்ச்சி இருக்க வில்லை. ஆகவே, தெளிவாக எதுவும் நினைவில் இருக்கவில்லை. ராமச்சந்திரன் தமிழக அரசியலைப் பற்றியும் சூழியல் அழிவுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

அய்யப்ப பணிக்கர் அப்படியே திருவனந்தபுரம் கிளம்பினார். நானும் சுந்தர ராமசாமியும் காரில் திரும்பிவந்தோம். எனக்கு ராமச்சந்திரனைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது சுந்தர ராமசாமிக்குத் திகைப்பை உருவாக்கியது. “கேள்விப்பட்டதே இல்லியா? ஒண்ணுமே தெரியாதா? ஏன்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஏன் அந்த ஆச்சர்யம் என்று எனக்கும் புரியவில்லை.

ராமச்சந்திரனைப் பற்றி சுந்தர ராமசாமி சொன்னார். மிகப்பெரிய நாவல்களில்தான் அத்தகைய மாபெரும் கதாபாத்திரங்கள் வரும். சாந்திநிகேதனில் சி.எஃப். ஆண்ட்ரூஸின் மாணவராக இருந்தபோது, தன் 17 வயதில் ராமச்சந்திரன், காந்தியைச் சந்தித்தார். அதன்பின் தீவிரமான காந்தியப் பணியாளராக ஆனார். காந்தியப் பணிக்காக வந்த டாக்டர் சௌந்தரம் அவர்களைச் சந்தித்துக் காதல்கொண்டார். சௌந்தரம், புகழ்பெற்ற டி.வி.எஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம்வயதிலேயே விதவையான பின் குடும்பத்தை மீறி மருத்துவம் கற்க வந்து காந்தியப் பணியில் ஈடுபட்டவர். 

நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்



அவர்களின் காதல் சௌந்தரம் குடும்பத்தினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேந்தவர்கள். காந்தி, அவர்களை ஒரு வருடம் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந்திருக்கச் சொன்னார். அதன் பின்னரும் அவர்களால் ஒருவரை ஒருவர் காதலிக்க முடிந்தால், திருமணம் செய்துகொள்ளலாம் என்றார். அவ்வாறு ஓராண்டுப் பிரிவுக்குப் பின் அவர்கள் மேலும் நெருங்கினர். காந்தியின் வாழ்த்துகளுடன் திருமணம் செய்துகொண்டனர்.
 
சுதந்திரத்திற்குப் பின் ராமச்சந்திரன் கிராம நிர்மாணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அவரும் சௌந்தரமும் இணைந்து காந்தியப் பொருளியல் கல்விக்காக உருவாக்கிய அமைப்புதான் திண்டுக்கல் காந்தி கிராமம் என்னும் பல்கலைக்கழகம். உலகமெங்கும் காந்தியப் பொருளியல் சார்ந்த உரைகள் ஆற்றியிருக்கிறார். நூல்கள் எழுதியிருக்கிறார்.

இந்திய அரசில் உயரிய பதவிகள் பலவற்றை ராமச்சந்திரன் வகித்திருக்கிறார். ஆனால், பிடிவாதமான எளிய காந்திய வாழ்க்கைகொண்டிருந்தார். அனைத்திலும் ஒழுங்கு, தன்னலமே இல்லாத தனிவாழ்க்கை. காந்திய யுகத்தின் மிகச்சரியான மாதிரி அவர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி எவருமே சொல்லவில்லை. எந்த அரசியல், இலக்கிய, சமூகவியல் விவாதங்களிலும் அவர் பேசுபொருளாக இருக்கவில்லை. ஏனென்றால், என் தலைமுறையில் செய்தித்
தாள்களில் இடம்பெறாதவர்கள் ‘இல்லாதவர்கள்’ என்று கருதப்பட்டனர். சுந்தர ராமசாமி பெருமூச்சுவிட்டார். பின்பு தனக்குத்தானே சொன்னார்: “மிகப்பெரிய இதிகாசக் கதாநாயகர்களை மறந்திடறோம், சின்னச்சின்ன இலக்கியவாதி களைக்கூட ஞாபகம் வெச்சிருக்கோம்.”

நான் அவர் உள்ளே ஓடுவதென்ன என்று புரிந்துகொண்டேன். அன்று அவர் உள்ளம் ஏதோ ஒருவகையில் அவர் இல்லாத காலத்தை எண்ணத் தொடங்கி விட்டிருந்தது. “காலமே என்னை எங்கே கொண்டுசெல்கிறாய்? என் உணர்வுகளில் நான் குழம்பிச் சரிகிறேனே” என்பது போன்ற வரிகளை நிறைய எழுதிக் கொண்டிருந்தார். 

நத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்

இன்று யோசிக்கையில் இரண்டு வகையான உணர்வுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டார் எனத் தோன்றுகிறது. சுவடின்றி மறைவதுதான் உயர்ந்தது, கவித்துவமானது என அவர் ஜே.கிருஷ்ண மூர்த்தியிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார். ஆனால், வருங்காலத்திலும் தன் குரல் ஒலிப்பதைப் பற்றி அவருள் வாழ்ந்த கலைஞன் கனவு கண்டான். சுவடின்றி மறைந்தவர் என்று வரலாறு அவரை நினைவுகூர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் என ஒரு புன்னகையுடன் இன்று எண்ணிக்கொள்கிறேன்.

“சிலையை உடை, என் சிலையை உடை, கடலோரம் காலடிச்சுவடு’ என்னும் வரியை அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியால் தீவிரமாக ஆட்கொள்ளப்பட்டி ருந்தபோது எழுதியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் எழுத எழுந்தபோது, “என் கொடி பறக்கிறது அடிவானத்திற்கும் அப்பால்” என எழுதினார். இரண்டுமே அவருடைய ஆசைகள்தான். “பிறருக்கு நினைவுச்சின்னங்களைச் சமூகம் உருவாக்க வேண்டும், கலைஞன் தன் வாழ்நாளெல்லாம் செய்துகொண்டிருப்பது தனக்கான நினைவுச்சின்னங்களை மட்டுமே” என்ற அவருடைய வரியை நான் சொன்னேன். 

அவருக்கு ஒரு சிறு துணுக்குறுதல் ஏற்பட்டது. “எழுத்தாளனை ஏன் சமூகம் ஞாபகம் வெச்சுக்கிடணும்னு சொல்றோம்? ஏன் வெச்சுக்கலைன்னா கொந்தளிக்கிறோம்?” என்று அவர் கேட்டார். “வெறும் அகங்காரம்தானா அது?”

அன்று அதைப்பற்றி ஏதும் பேசவில்லை. அவர் அது அகங்காரம்தான் என்ற முடிவில் அந்நாள் முழுக்க இருந்தார் என நினைக்கிறேன். மறுநாள் காலத்தை வெல்லும் படைப்பைப் பற்றிக் கனவு காணத் தொடங்கிவிட்டிருப்பார். ஏனென்றால், அக்கனவுகள் இல்லை என்றால் இலக்கியவாதி செயல்பட முடியாது. 

நான் என்னும் அகங்காரம் இல்லையேல் இலக்கியம் இல்லை. இந்தப் பூமியின் மக்கள்தொகை பிரமாண்டமானது. இதன் நிகழ்வுவலை எண்ணிப்பார்க்கக்கூட முடியாதது. அனைத்தையும்விட ஒரு கணம் இருந்து மறுகணம் மறையும் இதன் தற்காலிகத்தன்மை பேதலிக்கவைப்பது. இதை நோக்கி ஒருவன் தன் எண்ணங்களை, கற்பனையை முன்வைக்க எழுகிறான் என்றால், அதுவே மிகப் பெரிய ஆணவம்தான்.

ஆகவே, இலக்கியம் அரைஅறிதல்தான். ஆணவம் இருக்கும் வரை முழுமையறிதல் சாத்தியமும் அல்ல. மெய்யறிதலில் அழிவது ஆணவமும்கூடத்தான். அதன்பின், அறிவில் அறிவென அமைவது மட்டுமே அவன் செய்யக்கூடுவதாக இருக்கும். இலக்கிய மேதைகள் ஆணவத்தால் அலைக்கழிக்கப்படும் ஞானிகள். தன்மைய நோக்கு என்னும் அடிப்படைப் பிழை கொண்ட மெய்ஞானமே இலக்கிய உண்மை என்பது. ஆகவே, எந்த இலக்கிய உண்மையும் அதற்கு நிகரான பிறவற்றால் சமன்செய்யப்பட்டுத்தான் முழுமை நோக்கிச் செல்ல முடியும்.

இலக்கியவாதியின் நான் என்பது எளிய லௌகீக ஆணவக்காரர்களின் தன்னுருவகம்போல எளியதும் சிறியதும் அல்ல என்பதே வேறுபாடு. அதிகாரமும் புகழும் பணமும் அளிக்கும் தன்முனைப்பு அல்ல அது.  தன்னைச் சூழ்ந்த சமூகமாகவே உணரும்போது எழுத்தாளன் அடையும் தன்னுணர்வு அது. தனக்கு முன்னும் பின்னும் என ஒரு மாபெரும் வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகித்துக்கொள்வதன் பெருமிதம் அது.

ஜெயகாந்தனிடம் ஏராளமாகப் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு உரையாடலிலும், முழுப்போதையிலும்கூட, வள்ளுவன் முதல் வள்ளலார் வரை வந்துகொண்டே இருப்பார்கள். பாரதியும் புதுமைப்பித்தனும் ஆர்.கே.கண்ணனும் எழுவார்கள். அவருடைய தந்தை பெயர் தண்டபாணிப் பிள்ளை என்பதை அவருக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பில் இருந்துதான் தெரிந்துகொண்டேன். 

உண்மையில் இந்தத் தொடர்ச்சி என்பது எழுத்தாளன் உருவாக்குவதுதான். இந்த இல்லத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொன்றுக்குப் பாய்ந்து அவன் தன் வலையை நெய்துகொண்டே இருக்கிறான். தான் எந்த இலக்கிய, மெய்யியல் மரபின் தொடர்ச்சி என ஏதேனும் ஒருவகையில் அறிவிக்கை செய்யாத பெரும் படைப்பாளிகள் எவருமில்லை.

மானுட சிந்தனை என்பது கீழே விழுந்த நீர்போல சிதறிப் பரவும் ஓர் அராஜக வடிவமாகவே இருக்க முடியும். அதில், ஒரு வடிவ ஒழுங்கை உருவாக்குபவன் எழுத்தாளன்தான். தொடர்ச்சியை, தர்க்கபூர்வமான பரிணாமத்தை அவன் கட்டமைக்கிறான். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப்போல்... எனப் பட்டியலிடுபவன் ஒரு வரலாற்றை உருவாக்கி நவீனத் தமிழனுக்கு அளித்துவிட்டுச் சென்று விட்டான். அது என்றுமிருக்க வேண்டும் என அவன் விழைவான், அக்குரலாக தானும் நிலைகொள்ள வேண்டும் என்றும்.

ஆகவே, காலத்தில் நிலைகொள்ள வேண்டும் என்பது எழுத்தாளனின் மிகைவிருப்பம் அல்ல, அவன் செய்யவந்த கடமையே அதுதான். காலத்தைக் கட்டி எழுப்புதல். வரலாறு பண்பாடு என அதை உருவாக்கித் தலைமுறைகளுக்கு அளித்தல். இன்று வரை வந்துசேர்ந்த படைப்பாளிகளே நம்முடைய பண்பாட்டின் நேற்று. அவர்களிடமிருந்து பெற்று, தான் முன்னெடுப்பதை நாளையோர் கைக்கொள்ள வேண்டும் என விழைவதே இலக்கியவாதியை எழுதச் செய்யும் ஆற்றல். நாமறிந்த நேற்று என்பது கம்பனும் சேக்கிழாரும் உருவாக்கியது. நாளை நம் கொடிவழியினர் அறியப்போகும் வரலாறென்பது இன்று இலக்கியவாதிகளால், சிந்தனையாளர்களால் அமைக்கப்படுகிறது.

ராமச்சந்திரன்கள் மறைவதுதான் இயல்பு. இப்புவியில் வேர்கொண்டு எழுந்து வான்சூடி நின்ற மாமரங்கள் அனைத்தும் ஆயுள் முடிந்து மண்ணில் மட்கி மறைந்துள்ளன. அவ்வியல்புக்கு எதிரான செயல்பாடே இலக்கியம். அது காலச்சமர். நான் என் சொல்லில் ராமச்சந்திரனை அடுத்த ஆயிரம் தலைமுறைகள் நினைக்கும்படிச் செய்தேன் என்றால், எழுத்தாளனாக என் கடமையில் வென்றவன் ஆவேன்.

இரட்டைவால் குருவி குறித்து ஒரு குழந்தைக் கதை உண்டு. அது கிளையில் அமர்ந்து தன் வாலை ஆட்டும்போது தலையும் ஆடும். காட்சியும் ஆடும். ‘நான் வாலை ஆட்டினால் இந்த உலகமே ஆடுமே’ என்று அது எண்ணிக்கொள்ளுமாம். அந்த இரட்டைவால் குருவியைப் பார்த்து உலகியல் மட்டுமே அறிந்தவர்கள் சிரிக்கக்கூடும். ஆனால், கடவுள் குனிந்து பார்த்து அன்புடன் புன்னகைப்பார். அவர் அதை இங்கே அனுப்பியதே அப்படி உலகை ஆட்டுவிப்பதற்காகத்தான். இவ்வுலகை எவரேனும் எவ்வகையிலேனும் ஆட்டுவிக்க முடியுமென்றால், அப்படித்தான் இயலும்.