Published:Updated:

வெள்ளி நிலம் - 24

வெள்ளி நிலம் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளி நிலம் - 24

ஜெயமோகன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப்பகுதியில் இருக்கும் ஒரு மடாலயத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அப்போது ஒரு மம்மி கிடைக்கிறது. அதைக் கடத்திச்செல்ல ஒரு கும்பல் வருகிறது. அதைப் பற்றி துப்பு துலக்க காவலர் பாண்டியன் தலைமையில் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் சிறுவன்  நோர்பாவும் களம் இறங்குகிறார்கள். பல இன்னல்களைத் தாண்டி திபெத்திய பௌத்த ஞானி மிலரேபா குகைக்குப் போகிறார்கள். அங்கு கிடைக்கும் ஒரு க்ளூவை வைத்து காட்மாண்டுவுக்கு வருகிறார்கள். அந்த நேரம் சீனாவுக்குக் கடத்தல் கும்பல் அனுப்பிய ரகசியச் செய்தியை வழிமறித்து, பதிவு செய்து அனுப்புகிறார்கள் நம் உளவுத்துறை அதிகாரிகள். அதன் ரகசியத்தை ஓரளவுக்கு ஊகிக்கும் நரேந்திர பிஸ்வாஸ் அதை முழுமையாகக் கண்டுபிடிக்க, ஜாக்கோங் மடாலயம் சென்று அங்குள்ள மூத்த புத்த பிட்சுவைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார்கள்...

க்கோங் மடாலயத்தின் தலைமைப் பிட்சுவின் அறைக்குள் பாண்டியனும் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸும் நோர்பாவும் நுழைந்தார்கள்.

நாக்போ, “நானும் வருவேன்” என்றது.

“நீ இங்கேயே நில்” என்றான் நோர்பா.

“கெட்ட நாய் என்னைக் கொன்றுவிடும்...” என்று நாக்போ அழுதது. “நான் இனிமேல் நல்ல நாயாக இருப்பேன். பன்றி இறைச்சி கேட்க மாட்டேன்... எப்போதும் வாலாட்டுவேன்” என்றது. 
“சரி, வா” என்றான் நோர்பா.

வெள்ளி நிலம் - 24

தலைமை பிட்சுவின் அருகே அவர்கள் அமர்ந்தனர். டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், முறைப்படி அவரை வணங்கினார். அவர், அவர்களைத் தலைதொட்டு வாழ்த்தினார். அவர்கள் பொதுவாகப் பேசிக்கொண்டார்கள்.

 “நாங்கள் அருள்கோரி வந்திருக்கிறோம். எங்களுடைய மனக்குறைகளைச் சொல்ல வந்தோம்” என்றார் டாக்டர். “இவர் நோயுற்றிருக்கிறார். உங்கள் அருளால் இவருடைய நோய் குணமாக வேண்டும்” என்றார்.
அப்போது, செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது. டாக்டர் அதை பார்த்ததும்  விரைவாகப் பேசினார். “ஆசிரியரே, நான் கேட்க வந்தது ஒன்றே. இந்தச் செய்தியைப் படியுங்கள். இது, உங்களுக்கு எவ்வகையிலேனும் பொருள்படுகிறதா என்று பாருங்கள்” என்று சொன்னார். அந்தச் செய்தி அடங்கிய காகிதத்தைக் காட்டினார்.

தலைமைப் பிட்சு, விரைவாக அதை வாசித்தார். “ஆம், இது ஒரு ரகசியச்செய்தி” என்றார். “இதன் பொருள், பௌத்த மதத்தில் இன்று இருக்கும் தொன்மையான தெய்வம் ஒன்றைத் திரும்ப எடுக்கப்போகிறார்கள். அந்தத் தெய்வம் எங்கோ மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.”

“எதற்காக அதைச் செய்கிறார்கள்? யார் செய்யக்கூடும்?” என்றான் பாண்டியன்.

“இளைஞரே, தெய்வங்கள் என்றால் என்ன? அவை வானத்திலா குடியிருக்கின்றன? இல்லை. அவை குடியிருப்பது இங்கு வாழும் மனிதர்களின் உள்ளத்தின் ஆழத்தில்” என்றார் தலைமைப் பிட்சு.

அவர் தொடர்ந்து சொன்னார். “மனித மனம் என்பது என்ன? அது, பல வகையான குறியீடுகளால் ஆனது. உங்கள் தமிழ்நாட்டில் பெண்கள் தாலி அணிந்துகொள்கிறார்கள் அல்லவா? அதை எவரேனும் பறித்துவிட்டால் எவ்வளவு கோபம் கொள்கிறார்கள்! ஏனென்றால், தாலி ஒரு குறியீடு. அது, அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையின் அடையாளம். ஒரு மங்கலச் சின்னம் அது.”

“தெய்வங்களும் அதேபோல குறியீடுகள்தான். தெய்வங்கள் இன்னும் பலமடங்கு ஆழமான குறியீடுகள். மனிதர்கள், தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டுதான் ஒரு சமூகமாக ஆகிறார்கள். தெய்வங்களுக்காகத்தான் போராடுகிறார்கள். மக்கள் கூட்டம், தெய்வத்தின் பெயரால் மட்டுமே ஒருங்குதிரளும் என்பதுதான் வரலாறு” என்றார் தலைமைப் பிட்சு.

“ஆம், இப்போது புரிகிறது. இந்தத் தெய்வங்களை அடிப்படையாகக்கொண்டு எவரோ மக்களை ஒருங்குதிரட்ட முயல்கிறார்கள்!” என்றார் டாக்டர்.

“யார்?” என்றான் பாண்டியன்.

“யாருக்கு இந்தத் தெய்வங்கள் முக்கியமோ அவர்கள். இந்தத் தெய்வங்களைக் கண்டதுமே அவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்கள் கிளர்ந்து எழுவார்கள்” என்றார் தலைமைப் பிட்சு.

“யார் அவர்கள்?” என்று பாண்டியன் பதற்றமாகக் கேட்டான்.

“அவர்கள் இங்கே இல்லை. ஏனென்றால், பான் மதத்தின் தெய்வங்கள் எல்லாம் சீனாவிலிருந்து வந்தவை!”

“ஆம்! இப்போது புரிகிறது” என்றான் பாண்டியன். “சீனாவில், எவரோ ஒரு சமூகத்தை ஒன்றாகத் திரட்ட நினைக்கிறார்கள். அதற்காக அந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களைத் திரும்ப எடுக்கிறார்கள்.
அதற்காகத்தான் இந்தச் சதி. எவ்வளவு எளிமையான விஷயம். இது ஏன் தோன்றாமல் போயிற்று!”

அப்போது மீண்டும் செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது. டாக்டர் தலைவணங்கி, “உங்கள் அருளால் எங்கள் நோய்கள் குணமாகி, நாங்கள் மீண்டு எழ வேண்டும் ஆசிரியரே’’ என்றார்.

தலைமைப் பிட்சு அவர்களை வாழ்த்தினார். அவர்கள் வெளியே வந்தனர்.

“சீனாவுக்குள் ஒரு மக்கள் கிளர்ச்சி உருவாகப் போகிறதா?” என்று பாண்டியன் கேட்டான்.

வெள்ளி நிலம் - 24

“சீனா இன்று உலகிலேயே மிகப்பெரிய நாடு. ஆனால், அது ஒரே மொழி பேசும் மக்களால் ஆனது அல்ல. அதற்குள் 297 மொழிகள் உள்ளன. அங்கே 56 இனங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மங்கோலியா, மஞ்சூரியா போன்ற பல தனி நாடுகள் சேர்ந்ததுதான் இன்றைய சீனா. பழைய சீனச் சக்கரவர்த்தி அவற்றை ஒன்றாக்கி ஆட்சி செய்தார். இன்றைய சீன அரசு, ராணுவ பலத்தால் அவர்களை அடக்கி ஆள்கிறது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

``ஆம், அங்கே சர்வாதிகார ஆட்சி இருக்கிறது. தேர்தல் இல்லை. மக்கள், தங்கள் அரசைத் தேர்ந்தெடுக்க முடியாது” என்றான் பாண்டியன்.

“அங்கே, மாண்டரின் மொழி மட்டும்தான் ஆட்சி மொழி. மற்ற அத்தனை மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன. ஹான் சீன இனம் மட்டும்தான் ஆதிக்க சக்தி. பெய்ஜிங்கை தலைநகரமாகக்கொண்ட சீனப்பகுதி, மற்ற அத்தனை பகுதிகளையும் ஆட்சி செய்கிறது” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“அதோடு, அங்கே அத்தனை மத உரிமைகளும் தடை செய்யப்பட்டுள்ளன” என்று நோர்பா சொன்னான்.

“ஆகவே, அங்கே அதிருப்தி குமுறிக் கொண்டிருக்கிறது. அது, என்றேனும் வெடிக்கும் என அனைவருக்கும் தெரியும்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ். “அங்குள்ள மக்களுக்கு எந்த அடையாளமும் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறார்கள். ஆகவே, ஏதாவது ஓர் அடையாளம் வழியாக அவர்களை ஒன்றாகத் திரட்ட எவரோ முயல்கிறார்கள்.”

“மக்களாட்சி என்பதுதான் மிகச்சிறந்த அரசுமுறை. அனைவருக்கும் சமமான உரிமை என்பதுதான் உண்மையான ஜனநாயகம். அது இல்லாத நாடு அழியும்” என்றான் பாண்டியன்.  

“இப்போது நாம் என்ன செய்வது?” என்று நோர்பா கேட்டான்.

“சாப்பிடலாமே?” என்றது நாக்போ.

``வாயை மூடு” என்றான் நோர்பா.

“வாயை மூடிக்கொண்டு எப்படிச் சாப்பிடுவது?” என நாக்போ முனகியது.

“பர்மிய பிட்சு சொன்னது நிகழவிருக்கிறது. இங்கே, ஏதோ பொருள் காணாமலாகப் போகிறது. என்ன அது? இங்கிருக்கும் அந்தப் பொருளுக்காகவே அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“இங்கே எவரும் வரவில்லை...” என்று பாண்டியன் சுற்றுமுற்றும் நோக்கியபடிச் சொன்னான்.

அப்போது, ஜம்பா அவர்களை நோக்கி வந்தான். அவன் வந்த விரைவிலேயே, அவனிடம் ஏதோ செய்தி இருப்பது தெரிந்தது. அவர்கள், அவனை வெட்டவெளியில் சந்திக்க விரும்பினர். அங்கே, ரகசிய ஒலிப்பதிவுக் கருவிகள் இருக்காது. ஆகவே, மடாலயத்தின் திறந்த முற்றத்துக்குச் சென்றார்கள்.

ஜம்பா அருகே வந்து, “சீனாவுக்குச் சென்ற செய்தி ஒன்றை மறித்திருக்கிறார்கள்” என்றான். அவன் தன் செல்பேசியைக் காட்டினான். அதில் ரகசிய எழுத்துகளில் அந்தச் செய்தி இருந்தது.

“இறந்தவர்களின் நிலம் எழுந்துவிட்டது. ஈராயிரம் ஆண்டு தனிமைகள் கலைக” என்று பாண்டியன் வாசித்தான்.

“என்ன பொருள் இதற்கு?” என்று நோர்பா கேட்டான்.

வெள்ளி நிலம் - 24

“தெரியவில்லை...” என்று டாக்டர் சொன்னார். ``இது தொடர்பே இல்லாத செய்தியாக இருக்கிறது.”

நாக்போ குரைத்தபடி தரையை முகர்ந்து கொண்டே ஓடியது. “அது எதையோ கண்டு விட்டது” என்றபடி நோர்பா அதன் பின்னால் ஓடினான்.

“நாக்போ என்ன... எங்கே செல்கிறாய்?” என்று நோர்பா கூவினான்.

“கெட்டவன்... கெட்டவன் இங்கே வந்திருக்கிறான்” என்று கூவியபடி நாக்போ ஓடியது. அது மடாலயத்தின் உள்ளறைகள் வழியாக ஓடியது. அவர்கள் அதன் பின்னால் ஓடினார்கள்.

“என்ன இது... நாய் ஏன் ஓடுகிறது?” என்று அங்கிருந்த பிட்சுக்கள் கேட்டனர்.

“தெரியவில்லை...’’ என்று பாண்டியன் சொன்னான்.

நாக்போ அங்கிருந்த ஓர் அறையின் கதவில் எம்பி எம்பிக் குதித்துப் பிறாண்டியது. அந்தக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

“இது எவருடைய அறை?” என்று பாண்டியன் கேட்டான்.

“இது, இங்குள்ள மூத்த பிட்சு ஜாம் யாங் இங்கே தங்கியிருந்தார்” என்று ஒரு பிட்சு பதில் சொன்னார்.

“தங்கியிருந்தார் என்றால்... அவர் எங்கே?” என்றான் பாண்டியன்.

பிட்சு தயங்கியபடி, “நாங்கள் அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவரை இன்று காலை முதல் காணவில்லை. எல்லா இடங்களிலும் தேடிவிட்டோம்” என்றார்.

“எங்கே சென்றார்?” என்று பாண்டியன் கேட்டான்.

“தெரியவில்லை. அவர் அப்படி எங்கும் செல்பவர் அல்ல. சென்ற 26 ஆண்டுகளில், அவர் ஒருமுறைகூட வெளியே சென்றதில்லை” என்றார் பிட்சு.

பாண்டியன், “இந்த அறையை உடைக்க வேண்டும்...” என்றான்.

ஜம்பா ரகசிய மொழியில், “இது நம் நாடு அல்ல... இது சீனா. நாம் எவரென்று தெரிந்தால்...” என்றான்.

“கதவை உடையுங்கள். இல்லாவிட்டால், பிட்சு ஜாம் யாங் உயிருடன் திரும்ப மாட்டார்” என்றான் பாண்டியன்.

பிட்சு, “எப்படி உடைப்பது?” என்றார்.

அதற்குள் பாண்டியன், துப்பாக்கியால் அந்த பூட்டை சுட்டான். அது உடைந்ததும் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

உள்ளே அனைத்தும் ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தன. அறை நடுவே ஒரு புத்தர் சிலை. அதைச் சுற்றி பூஜை பொருள்கள். தோற்சுவடிகளும் பட்டில் எழுதப்பட்ட சுவடிகளும் இருந்தன. ஓர் இருக்கை காலியாக இருந்தது. தரையில் ஒரு மேலாடை விழுந்து கிடந்தது. இன்னொரு துணி அப்பால் கிடந்தது.

‘`அந்த புத்தர் அமர்ந்திருக்கும் விதத்தைப் பாருங்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“ஆம், அதே வடிவம்! அந்த மம்மி அமர்ந்திருந்த அதே முறை” என்றான் நோர்பா.

“பிட்சு ஜாம் யாங் கடத்தப்படவில்லை. அவர் கிளம்பிச் சென்றிருக்கிறார். அவர்தான் இங்கிருந்து முக்கியமான எதையோ கொண்டு சென்றிருக்கிறார்” என்றான் பாண்டியன்.

``எப்படித் தெரியும்?” என்றான் நோர்பா.

 “இந்த அறை இத்தனை ஒழுங்காக இருக்கிறது. ஆனால், அதோ பார்... அவருடைய ஆடைகள் சிதறிக் கிடக்கின்றன. அவர், அவசரமாக ஆடைகளை எடுத்துக் கட்டிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்” என்றான் பாண்டியன்.

“எங்கே? அவர் எங்கே சென்றார்?”  என்று நோர்பா கேட்டான்.

அங்கிருந்த ஓர் இளைய பிட்சு ஏதோ சொல்ல, இன்னொருவர் அவனை அடக்கினார்.

பாண்டியன் அந்த இளைய பிட்சுவிடம் “சொல்லுங்கள்... எதுவானாலும் சொல்லுங்கள்” என்றான்.

“இல்லை. நான் சொன்னால் ஆபத்து” என்றார் அவர்.

“சொல்லாவிட்டால் இந்தியாவுக்கு ஆபத்து. இந்தியா இல்லாவிட்டால், திபெத்திய பௌத்தமே அழிந்துவிடும். தலாய் லாமாவின் பெயரால் ஆணையிட்டுக் கேட்கிறேன். சொல்லுங்கள்” என்றார் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ்.

“அவர், இறந்தவர்களின் சமவெளிக்குச் சென்றிருக்கிறார்” என்றார் இளம்பிட்சு.

“எப்படித் தெரியும்?’ என்று பாண்டியன் கேட்டான்.

“அங்கே செல்வதற்கான வரை படத்தைத்தான் அவர் நேற்று இரவு என்னிடம் கேட்டார்” என்றார் இளம்பிட்சு.

“இறந்தவர்களின் சமவெளியா?” என்றான் பாண்டியன், “அதைத்தானே நம் செய்தியும் குறிப்பிட்டது!”

“எனக்குத் தெரியும்... கிளம்புவோம். நம் தேடல் முடிந்துவிட்டது” என்று டாக்டர் சொன்னார். அவர்கள் ஜம்பாவிடம், “உடனடியாகக் கிளம்ப வேண்டும்... இறந்தவர்களின் சமவெளிக்கு” என்றனர்.
ஜம்பா வெளியே விரைந்தான். அவர்கள் உடன் விரைந்து ஓடினர்.

(தொடரும்...)

வெள்ளி நிலம் - 24

சிலுவைப் போர்கள்

 மனிதர்கள், வரலாறு முழுக்க தெய்வங்களுக்காகப் போரிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அவற்றில் மிகப் பெரிய போர் என்பது சிலுவைப் போர்கள். யேசு கிறிஸ்து பிறந்த ஜெருசலேம் பகுதியை இஸ்லாமியர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். அதை மீட்பதற்காக, கிறித்தவ மதத்தின் தலைமை அமைப்பான கத்தோலிக்க திருச்சபை நடத்திய போர்தான், சிலுவைப் போர்.

பல ஆண்டுகாலம் இந்தப் போர் நடந்தது. கி.பி 1095 முதல் 1099 வரை முதல் சிலுவைப் போர் நடந்தது. கடைசியாக 1271 முதல் 1272 வரை ஏழாவது சிலுவைப் போர் நடந்தது. இந்தப் போரில், பல்லாயிரம் கத்தோலிக்கர்கள்  ஜெருசலேம் நோக்கிப் படை திரண்டு, சென்றுகொண்டே இருந்தார்கள். இவர்களில் சாதாரணமான மக்களும் அடங்குவர். இவ்வாறு ஜெருசலேமுக்குச் செல்வதும் அங்கே சாவதும் புனிதமான மதக்கடமை என்று கருதப்பட்டது. ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் வரை இப்போர்களில் உயிரிழந்தார்கள்.