
சந்திப்பு: வரவணை செந்தில்படம்: எல்.ராஜேந்திரன்
புலியின் குகைபோல் இருக்கிறது தொ.பரமசிவத்தின் அறை. கைக்கெட்டும் தூரத்தில் இரும்பில் சில அடுக்குகள் கொண்ட அலமாரியில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்கள்தான். அவரின் கட்டிலுக்கு எதிரே மாட்டப்பட்டிருக்கும் தொலைக்காட்சி, செய்திகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. தூங்கிய நேரம் போக, நண்பர்கள், மாணவர்கள் வந்தால் பேசிக்கொண்டிருக்கிறார். இல்லையெனில், அந்த டி.வி-யும் அது கொட்டும் செய்திகளும்தான் அவருக்குத் துணை. ரத்தநாள அடைப்பின் காரணமாகத் தொடை வரை கால் அகற்றப்பட்ட பின் பெரும்பாலும் அந்தக் கட்டிலில்தான் அவரின் பொழுதுகள் நகர்கின்றன.

எப்போது சந்தித்தாலும் தமிழ்ப் பண்பாடு குறித்தும் நாட்டார் தெய்வங்கள் குறித்தும் புதிதாக ஒரு தகவலையாவது அவரிடமிருந்து நாம் அறிந்து கொள்ளமுடியும். சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அவருடைய நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். ‘வண்டி மலைச்சி’ கோயிலுக்குப் போய் வந்ததாகச் சொன்னார். குறுக்கிட்ட தொ.ப, “அது வண்டி மலைச்சி அல்ல; பண்டி மலைச்சி. பண்டி என்றால், பெருத்த வயிறு. அந்த அம்மன் மலைத்துப் படுத்திருப்பதால் மலைச்சி. அந்த அம்மனின் பெயர் ‘பண்டி மலைச்சி’ ” என்று விளக்கம் சொன்னார். அந்தத் துல்லியம்தான் தொ.ப!
“பாளையங்கோட்டைதான் என் ஊர். ஸ்ரீவல்லப மங்கலம் என்கிற பெயரும் இந்த ஊருக்கு இருந்துள்ளது. என் அப்பாவும் அம்மாவும் இதே ஊர்தான். இங்குதான் வளர்ந்தேன். வாசிப்பு என்று தொடங்கும்போது பாளையங்கோட்டையைச் சொல்லியே ஆக வேண்டும். இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண் தெரியாதோருக்கும், காது கேளாதோருக்குமான பள்ளி இருந்தது. அவர்களுக்கும் கல்வியும் வாசிப்பும் தேவை என்கிற உணர்வு இருந்த இடத்திலிருந்து வளர்ந்தவன் நான். தி.மு.க சார்புள்ள, பெரியாரின் தாக்கமுள்ள குடும்பத்தில், வளரும் தலைமுறைக்கு இயற்கையாகவே வாசிக்கும் பழக்கம் வந்துவிடும். எனக்கும் அப்படியே வந்தது. தொடக்க நாள்களில் அன்றாடம் நாளிதழ்கள் வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் வளரும் காலத்தில் காங்கிரஸின் ஆதிக்கம், அதன்மீது எனக்கு ஒருவித எதிர்ப்புஉணர்வை விதைத்தது. எனவே, காங்கிரஸை விமர்சித்து வெளியாகும் தி.மு.க ஆதரவு இதழ்கள் எனக்குப் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின.

“சாயங்காலத்தில் கல்லூரி முடிச்சிட்டு மதுரையைச் சுத்த ஆரம்பிச்சுடுவேன். இப்படிப் போய் அப்படி வருவேன், அப்படிப் போய் இப்படி வருவேன். மதுரையைச் சுற்றுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அப்படி நேரம் கிடைத்தபோதெல்லாம் சுற்றியவன், இப்ப ஒரு சந்தேகம் தோணுச்சுன்னா அதைப் போக்கிக்கிறதுக்கு எழுந்து போய் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாமல் இருக்கிறதுதான் வருத்தமா இருக்கு. என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள்தான் என் உண்மையான நண்பன். முகத்துக்கு நேராக உண்மையைப் பேசுபவன்தான் உண்மையான நண்பன். அப்படிச் சொல்லுவதற்கு இன்றைய காலத்தில் புத்தகங்களைத் தவிர வேறு யாருமில்லை. அதேபோல் புதிய புதிய நண்பர்களைக் கொண்டுவந்து சேர்ப்பதும் புத்தகங்கள்தான். என்னிடம் நல்ல நல்ல நண்பர்களைப் புத்தகங்கள்தான் கொண்டுவந்து சேர்த்தன. குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடிச் செல்லும்போது அதை வைத்திருக்கும் நபர் நண்பராவார். அந்தப் புத்தகம் நம் மனதுக்கு மிக நெருக்கமாகிவிட்டால் அவரும் நெருக்கமான நண்பராக மாறிவிடுவார். வாசிப்பு குறித்து சரியாகச் சொல்வதாக இருந்தால், புத்தக வாசிப்பு என்பதே மனிதர்களை வாசிப்பதுதான். மனித உணர்வுகள் மேம்படுவதற்குப் புத்தக வாசிப்பு அவசியம். நாம் விலை கொடுத்துப் புத்தகங்களை வாங்குகிறோம்; படிக்கிறோம். ஆனால், பிரிவதற்கு மனமில்லாத நண்பர்களைப்போல சிலவற்றை மட்டும் வைத்துக்கொள்கிறோம். அப்படி என்னால் பிரிவதற்கு மனமில்லாத புத்தகங்களாக 3000 புத்தகங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் புத்தகங்கள் உண்டு.
ஆறாம் வகுப்பு மாணவனாக, பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர் பகுதியில் நுழைந்தேன். அந்தப் புத்தகத்தின் மதிப்பு தெரியாமல் வாசிக்கத் தொடங்கினேன். உண்மையில், விளையாட்டாக விரட்டிவந்த ஒருவரிடமிருந்து ஒளிந்துகொள்ளத்தான் அந்த நூலகத்துக்குள் ஓடினேன். ‘சிறுவர் பகுதி’ என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே போனவன் காமிக்ஸ்களும், படக்கதைகளும் இருப்பதைப் பார்த்து என் கைக்குச் சிக்கியதை உருவினேன். அது உலகின் மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று என அப்போது எனக்குத் தெரியாது. ‘டாம் மாமாவின் இருட்டறை’ என்கிற அந்தப் புத்தகம் மனித உரிமைகளில் எனக்கு ஆர்வம் ஏற்படச் செய்தது. உலகில் எங்கெல்லாம் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நம் பார்வை பட வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தது. அதன் பின்னர், நான் வாசித்த முக்கியமான புத்தகம் என்று சொன்னால் அது ஜிம் கார்பெட் எழுதிய ‘ஜங்கிள் லோர்’ என்கிற புத்தகம். அவரின் எழுத்தில் மயங்கி அவரின் அனைத்துப் புத்தகங்களையும் வாசித்து முடித்தேன். தற்பெருமை இல்லாத எழுத்தாளர் அவர். அதேபோல் எம்.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ மிகவும் முக்கியமான புத்தகம். புத்தகச் சேகரிப்பாளர்கள் கண்டிப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய நூல்.
கே.உஸ்மான் என்கிற ஒருவர் நண்பரானார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் ஈத்தாலஜி என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய ‘நடத்தையியல்’ குறித்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் ‘மேன் மீட்ஸ் டாக்ஸ்’ என்கிற கொன்ராட் லோரன்ஸின் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. அதை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. இதுவும் கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம். இப்படியான என் வாசிப்புப் பழக்கம் எட்கர் தர்ஸ்டனிம் வந்ததுதான் மிகச் சிறந்த கட்டம். ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்கிற அவரின் புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசித்த பின்னரே சாதிகள் குறித்து வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
‘புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு. புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது’ என்று முன்பு ஒருமுறை நான் குறிப்பிட்டுள்ளேன். புத்தகங்களை நாம் சேமிப்பதே இல்லை. சைவம் தழைத்த மதுரையிலேயே திருவாசகம் இல்லை. கடைசியாக அதைச் சிதம்பரத்தில் கண்டுபிடிக்கும்படி ஆயிற்று. நாம் படிக்கும் புத்தகங்களில் முக்கியமானவை என்று கருதுபவற்றைச் சேமிக்கப் பழக வேண்டும் என்கிற எண்ணம், என் குருநாதர் சி.சு.மணியிடமிருந்து வந்தது. ஒரு நல்ல நண்பனை இழக்கச் சம்மதிப்போமா? புத்தகங்களையும் அப்படித்தான் நினைக்க வேண்டும்.
1976-ல் தொல்லியல் துறையில் ஒரு பயிற்சிக்குச் சென்றிருந்தேன். தொல்லியல் அறிஞர் நாகசாமி வகுப்பெடுத்தார். அந்த வகுப்பு எனக்குத் தொல்லியலில் மீது மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. தமிழகத் தொல்லியல் துறை சார்பில் ‘ஆவணம்’ என்ற வெளியீட்டைக் கடந்த 26 ஆண்டுகளாக வெளியிட்டு வருகின்றனர். அது ஒரு பொக்கிஷம். அது என்னிடம் இருக்கிறது. ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் திருக்குறளும் சிலப்பதிகாரமும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகங்கள் என்று சொல்வேன். சாம்பசிவம் பிள்ளை எழுதிய சித்த மருத்துவ அகராதியையும், விபுலானந்த அடிகளாரினால் எழுதி வெளியிடப்பட்ட ‘யாழ் நூல்’ ஆகிய இரண்டையும் என்னிடம் இருக்கும் நூல்களில் சிறந்தவையாகவும், மதிப்பு மிக்க நூலாகவும் கருதுகிறேன். காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்த சாம்பசிவம் தன் குழந்தைகளையும் இரண்டு மனைவிகளையும் இழந்தவர். தன் சொத்துகள், ஓய்வூதியப் பணம் ஆகியவற்றைக்கொண்டு இந்தச் சித்த மருத்துவ அகராதியைத் தொகுத்து முடித்தார். தமிழர்களின் தொன்மையான இசைக்கருவியான யாழின் பல்வேறு வடிவங்கள் குறித்தும் அதனைப் பற்றிய நுணுக்கமான குறிப்புகளும் கொண்டது யாழ் நூல். இதற்காக விபுலானந்த அடிகளார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பலமுறை அலைந்து திரிந்து ஆய்வுகளை மேற்கொண்டு எழுதினார். இவற்றை என்னுடைய சேகரிப்பில் சிறப்பான நூல்களாகச் சொல்லுவேன்.
‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ புத்தகத்தைப் படிப்பது, பல புத்தகங்களைப் படிப்பதற்குச் சமம். நான் இப்பேதுகூட ‘சில்க் ரூட்’ என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்
கொண்டிருக்கிறேன். ஆனால், இன்றைய என் உடல்நிலையில் புத்தக வாசிப்பு என்பது கடினமான வேலை. சில நண்பர்கள், ‘கிண்டில் வாங்கிக்கொள்ளுங்கள். அதில் ஆடியோ வடிவிலும் புத்தகங்களைக் கேட்கலாம்’ என்று சொன்னார்கள். ஆச்சர்யமாக இருந்தது. பாருங்களேன் இந்தப் புத்தகங்கள்தான் எப்படியாவது எந்த வடிவிலாவது மனிதர்களை வந்தடைகின்றன!”