மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

ஸ்ரீதர்பாரதி

“மு
னை மழுங்கி, துருப்பிடித்து, குலைந்த மாட்டுக்கொட்டகைக் குவியலில் கிடக்கும் ஏர்க்கலப்பையைப்போல என் வாழ்க்கை. உழுதுண்டு உயர்வோடு வாழ்ந்த பெருங்குடியில் உதித்தவன். இன்று, அந்த மரபைத் தொலைத்துவிட்டு நிலமிழந்து ஏதிலியாய் கவிதையைப் பற்றிக்கொண்டு நிற்கிறேன். அழுத்தும் வாழ்வின் சுமைகளை எழுத்தில் இறக்கிவைக்கிறேன். கண்மாய்க் கரையில் கிடை நடத்திச் செல்லும் மேய்ப்பனை நிகர்த்தவன் நான். அவன் கரத்தில் ஆகாசம் பார்க்கும் தொரட்டிக் கம்பும் என் பேனாவும் வேறல்ல. மனம் முழுக்கப் பச்சையை நிறைத்து வைத்துக்கொண்டு நகரத்து வெம்மையில் குலைந்துகொண்டிருக்கும் என்னை, கவிதைதான் சாந்தப்படுத்துகிறது. சொல்லுழவு செய்து நான் விதைப்பவையெல்லாம் என் சந்ததிக்கான வரலாற்றின் விதை.” 

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்கள்ளக்குறிச்சியைப் பூர்வீகமாகக்கொண்ட ஸ்ரீதர்பாரதி, மதுரையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் பிரதிநிதியாகப் பணிபுரிகிறார். ‘செவ்வந்திகளை அன்பளிப்பவன்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இவரது இயற்பெயர் ஸ்ரீதர்.  ‘கருப்புவெள்ளைக் கல்வெட்டு’, ‘ஒரு கிராமத்தின் சித்திரம்’ ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. 

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

அ.ரோஸ்லின்

“உ
றவின் இறுக்கமும் விலகலுமான தருணங்களில் கசியும் வண்ணங்களே என் வார்த்தைகளுக்கு நிறம் பூசுகின்றன. தனக்கு வாய்ப்பதான வெளியில், இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு ஜீவனின் துயரையும் களிப்பையும் பாடிச்செல்லும் சிறு பறவை ஒன்றின் பாடல்களாக இவற்றை அடையாளம் காண்கிறேன். பெண்ணும், பெண் கடவுள்களும் நிறுவ முயலும் தங்களது சிறு அதிகாரத்தின் பரப்பை எழுதிச்செல்லும் எனது மொழி, இவ்வுலகின் ஆதி மனுஷியுடையது.”

 மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ரோஸ்லின், டி.வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘அழுகிய முதல் துளி’, ‘மஞ்சள் முத்தம்’, ‘மழை எனும் பெண்’ உள்ளிட்ட மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ‘காடறியாது பூக்கும் மலர்’ என்ற கவிதைத் தொகுப்பும், ‘பயணத்தின் மொழி’ என்ற கட்டுரைத் தொகுப்பும் விரைவில் வெளிவரவிருக்கிறது. 

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

ஜா.பிராங்க்ளின் குமார்

“இ
லக்கற்ற நாடோடிபோல நிலக்காட்சிகளைத் தேடியலைந்து அதன் மடிகளில் தோய்ந்து தொலைபவன் நான். நிலம்தான் என் கவிதைகளின் மூலப்பொருள். ஒரு புகைப்படக் கலைஞனாக என் கேமராவில் பதிவதை எழுத்தாகப் பெயர்த்ததன் பலன், நான் கவிஞன் என அறியப்படுகிறேன். மொழியின் பூடகத்தைப் புரிந்துகொள்வதிலேயே என் தேடல்கள் விரிகின்றன. இந்த நிலத்தின் வழி, அதன் தொன்மத்தையும், அதை சுவீகரித்து வாழும் குடிகளையும் என் கவிதைகளின் பாடுபொருளாக்குகிறேன். அவ்வகையில் என்னுடைய கவிதைகள், ஆதிமண்ணின் மீதான பயணக்குறிப்புகள்.”

மதுரையைச் சேர்ந்த ஜா.பிராங்க்ளின் குமார், புகைப்படக் கலைஞர். எல்.ஐ.சி முகவராகவும் இருக்கிறார். ‘இலையுதிர்க் காலத்தின் முதல் இலை’, ‘யூதாஸின் முத்தம்’ ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். விரைவில் இன்னொரு கவிதைத் தொகுப்பு வெளிவரவிருக்கிறது. இவரது இயற்பெயர், பிராங்க்ளின் சாம் ஜெபக்குமார்.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்

கடங்கநேரியான்

“உ
ண்மையில், இலக்கியம் என்பது அதிகாரத்திற்கு எதிர்த்திசையில் பயணிப்பது. என் உலகமும், அதன் மீதான தொன்மமும் என்னிடமிருந்து திருடப்படும் பொழுதில், அதை எதிர்த்துக் களமாட இயலாமையால், கவிதை எழுதுகிறேன். சிறுத்துக்கொண்டே போகிற வாழ்க்கையின் எல்லையில் நின்று எனக்கான உலகை என் கவிதைகள் சிருஷ்டிக்கின்றன.”

திருநெல்வேலி மாவட்டம், கடங்கநேரியைச் சேர்ந்த கடங்கநேரியான், மருத்துவ உபகரணங்கள் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகிறார். ‘நிராகரிப்பின் நதியில்’, ‘யாவும் சமீபித்திருக்கிறது’, ‘சொக்கப்பனை’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. ‘கூழாங்கற்கள்’ என்ற இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார். ‘கிடங்கு நரி’ என்ற நாவல் விரைவில் வெளிவரவிருக்கிறது. கடங்கநேரியானின் இயற்பெயர் அரிகர சுதன்.