
ஓவியம்: கே.எம்.ஆதிமூலம்படங்கள்: பா.காளிமுத்து
ஞானக்கூத்தனின் நகைச்சுவை வெளிப்படும் கவிதைகளில் ஒன்று, ‘மேசை நடராசர்’ (1988). இந்த ஐம்பொன் நடராசர் சிற்பம் எங்கள் வீட்டில் இருந்தது; கவிதையில் வருவதுபோல் எழுதாத பேனா, மூக்குடைந்த கோணூசி, கழுத்து நீண்ட எண்ணெய்ப்புட்டி எல்லாம் சூழ அந்தச் சிற்பம் இருந்தது. `அவ்வை நடராசன் போல’ என்று கவிதையின் தலைப்பு பற்றி அவர் என்னிடம் சிரிப்புடன் சொன்னதும் நினைவிருக்கிறது (`கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்’ என்று, அந்தக் காலகட்டத்து மரபுக் கவிஞர்களைப் பற்றி எழுதியவராயிற்றே).

நாங்கள் மறைமலை நகரில் இருந்தபோது, காட்டாங்குளத்தூரில் மிகத் தேர்ந்த ஒரு சிற்பி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் பெயர் நினைவில் இல்லை. இந்த அற்புதமான நடராசர்; அதற்கு இணையான சிவகாமி; பின்னர் ஒரு காளிங்க நர்த்தனர் ஆகியவற்றை சிற்பி எங்களுக்கு வடித்துக்கொடுத்தார். சிற்பியின் சற்றுப் பெரிய குடிசை போன்ற பட்டறைக்கு, என் தந்தை என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். நடராசர் சமீபத்தில் இடம் மாறியதற்கு முன்பு வரை, மற்ற பொருள்களிடையே விடாமல் ஆடிக்கொண்டிருந்தார்.
நடராசர் இருந்த மேசை, மடக்கத்தக்க ஒரு ஸ்டீல் மேசை. இதில் நடராசர் குடியேறுவதற்கு முன்பு, என் பொருள்களை – பாடநூல்கள், எழுதுபொருள்கள் மற்றும் பிற – வைத்துக்கொள்ள எனக்கு அது தரப்பட்டது. நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். படிப்பில் கெட்டி இல்லை. இவன் என்ன ஆவானோ என்ற கவலை என் தந்தைக்கும் இருந்தது. நான் என் மேசையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அடிக்கடி துடைத்தேன். படிப்பு வராமல், ஆபீஸ் வேலைக்குப் பதிலாக ஹோட்டல் வேலைக்குப் போய்விடுவேன் என்று பயந்தாரோ என்னவோ, ‘இவன் டேபிள் துடைப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை’ என்று என் அம்மாவிடம் சொன்னார். எங்கள் குடும்பத்திடம் குறைந்தது முப்பது ஆண்டுகளாக இருந்த ஒரு பழைய டிரங்குப் பெட்டியை மேசைக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கொடுத்தார். நான் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன், ‘புரமோட்டட் வித் வார்னிங்’ என்ற கடிதத்துடன்.
சைக்கிள்
ஞானக்கூத்தன் 1971-ல் எழுதிய ‘சைக்கிள் கமலம்’ சில நினைவுகளைக் கிளறுகிறது. என் தந்தை சைக்கிள் ஓட்டி நான் பார்த்ததில்லை. ஒரு கெட்ட பழக்கத்தை நிறுத்துவதுபோல் சைக்கிள் ஓட்டுவதை அவர் நிறுத்தியதற்குக் காரணம் இருந்தது. சிறுவனாக இருந்தபோது, அவரது சொந்த ஊரான திருஇந்தளூரில் ஒரு எம்.எல்.ஏ-வின் கார்மீது மோதினாராம். அவருக்கு என்ன திட்டு, தண்டனை கிடைத்ததோ தெரியவில்லை, சைக்கிள் ஓட்டுவதை அதோடு நிறுத்தினார்.
எண்பதுகளில் நாங்கள் மறைமலைநகரில் ஒரு எல்.ஐ.ஜி வகை வீட்டில் இருந்தபோது, என் தந்தை ஒரு சைக்கிள் வாங்கினார். அப்போதும் அவர் அதை ஓட்டியதாக நினைவில்லை. அந்த சைக்கிள் ஆறு மாதம், ஒரு வருடம்போல் எங்கள் வீட்டில் கிடந்தது. பிறகு அதை விற்றுவிட்டார்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, கவிதையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தக் கவிதையை வரிக்கு வரி விளக்கினார். எ.கா., “அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்” என்ற முதல் வரியிலேயே கவிதைசொல்லி, சிறுமி கமலத்திடம் மையல்கொண்டிருந்த ஒரு சிறுவன் என்பதையும் சைக்கிள் பழகக் கற்றுக்கொடுத்த ஆளிடம் பொறாமைப்பட்டான் (“அப்பா மாதிரி ஒருத்தன்” என்ற வசை) என்பதையும் நிறுவுகிறார். “கடுகுக்காக ஒரு தரம், மிளகுக்காக ஒரு தரம், கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க” கமலம் பலமுறை கடைக்கு சைக்கிளில் காற்றாய்ப் பறந்தது அவள் குடும்பத்தின் வறுமையைக் கூறுகிறது என்றார்.
“வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும் / வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும் / இறங்கிக்கொள்வாள் உடனடியாக” என்ற வரிகள் விவரிக்கும் சிறுமியின் மிதமிஞ்சிய எச்சரிக்கை, எம்.எல்.ஏ-வின் கார்மீது சைக்கிளை மோதிய சம்பவத்துடன் தொடர்புள்ளதோ என்று நினைக்கச் செய்கிறது.
“என்மேல் ஒருமுறை விட்டாள்” என்ற வரி ஆபாசமாக இருப்பதாக அந்தச் சமயத்தில் சில விமர்சகர்கள் பொருமினார்களாம்.
நீல பக்கெட்
1981-ல் ‘கரப்பானைப் பற்றிக்கொண்டது பல்லி’ என்று ஒரு கவிதையை எழுதினார். அதை எழுதிய சமயத்தில் எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அவருக்கு மிகவும் கவலையளிக்கும் அளவுக்கு எனக்குத் தீவிரக் காய்ச்சல். அப்போது இந்தக் கவிதையை எழுதியதாக, அதுவும் ஒரு chant-ஆக (ஜபம்) எழுதியதாக, என்னிடம் பல ஆண்டுகளுக்குப் பின்பு - அந்தக் கவிதையை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரிடம் காட்டியபோது - சொன்னார். கவிதைக்கும் காய்ச்சலுக்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியவில்லை. அது எப்படி ஜபமாகும் என்ற தர்க்கமும் பிடிபடவில்லை. இந்த விநோத ஒப்புமையில் அவரது வைதீக ஈடுபாட்டின் அடையாளம் தெரிகிறது. ஆனால், ஜபம் என்பதை வைதீகப் பொருளில் அவர் சொன்னது போல் தெரியவில்லை. அந்தக் கவிதை எந்தக் கடவுளுக்கான முறையீடும் அல்ல. எனவே, அவருடைய ஒப்புமை புதிராகவே இருக்கிறது.

கரப்பான் பூச்சியைப் பல்லி கொன்றதற்கு இடம் கொடுத்ததாக, ஒரு நீல பக்கெட்டைக் குறிப்பிடுகிறது கவிதை. அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் நீல பக்கெட் இருந்ததா என்று நினைவில்லை. ஒலிநயத்திற்காகவும் அது நீலமாக இருந்திருக்கலாம். ஆனால், நிஜத்தில் இருக்கும் பல பொருள்களும் மனிதர்களும் அவரது கவிதைகளில் உள்ளபடி இடம்பெற்றுள்ளன(ர்).
நாளை மறுநாள் ரயிலேறி...
என் தந்தைக்கு 1972-ல் திருமணம் ஆனது. அந்த ஆண்டு அவர் ‘பட்டிப் பூ’ என்ற கவிதையை எழுதினார். திருமணமான பின்பு சிறிது காலம் என் அம்மா மயிலாடுதுறையில் இருந்தபோது, விடுமுறை நாள்களில் என் தந்தை மயிலாடுதுறை செல்வார். அந்தச் சமயத்தில் எழுதிய கவிதை இது.
நாளை மறுநாள் ரயிலேறி — என்
வீட்டை அடைந்து பைவீசி
படுகைப் பக்கம் நான்போவேன் — என்
பட்டிப் பூவைப் பார்த்துவர
என்று முடியும் ‘பட்டிப் பூ’. இது என் அம்மாவைப் பற்றியது. ‘பிணத்திற்குப் போடும் பூவை ஏன் என்னுடன் ஒப்பிட்டீர்கள்?’ என்று தாம் கேட்டதையும் அதற்குக் கணவர் ‘எனக்குப் பிடித்த பூ என்று எழுதியிருப்பதை நீ கவனிக்கவில்லையே’ என்று சொன்னதையும் என் அம்மா சொல்லியிருக்கிறார்.
மேசை மின்விசிறி
1990-களில் ஒருமுறை நாங்கள் வீடு தேடிக்கொண்டிருந்தபோது, என் தந்தைக்கு ஒரு வீட்டுத் தரகர் கிடைத்தார். முதியவர். மிக வறுமையில் இருந்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வீட்டைப் பார்த்த பின்பு ஏதாவது பணம் கேட்பார். என் தந்தையும் கொடுப்பார், சில சமயம் மறுப்பார். அவர் பணம் வாங்காமல் லேசில் நகர மாட்டார். தெருவில் சும்மா எதிரே வந்தால்கூட பணம் கேட்பார் அந்தத் தரகர். சில மோசமான வீடுகளை எங்களிடம் தள்ளிவிடுவார். இளைஞராக இருந்தால் கேடி என்று சொல்லலாம். ‘அய்யர் கொடுத்த மின்விசிறி’ (1996) என்ற கவிதையில் இவரைப்பற்றி என் தந்தை சொல்கிறார்.
ஒருமுறை இந்தத் தரகர் என் தந்தையிடம் ஒரு புராதன மின்விசிறியை விற்க முயன்றார். என் தந்தையும் தரகரின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு அதை வாங்கினார். வீடுகள்போல் இதுவும் தள்ளிவிடல்தான். அது துருப்பிடித்த டேபிள் ஃபேன். ஓசையின்றி சுற்றத் தொடங்கி மெல்லக் குரல் எழுப்பிப் பிறகு பெரிய குரலில் பாட ஆரம்பித்துவிடும். இரவில் தூங்கும்போது இரைச்சலோடு ஆடிக்கொண்டே நகர்ந்து எங்கள் தலைமாட்டுக்கு அருகில் வந்துவிடும். நாங்கள் சத்தம் கேட்டு எழுந்து அதை இருந்த இடத்துக்கு நகர்த்திவைப்போம். எங்களுக்கு இந்த விசிறி நடத்திய டிராமா பெரிய நகைச்சுவை. “குடும்பம் முழுவதும் கூடி நின்று / விசிறியின் இரைச்சலைப் பெரிதும் ரசித்தது.” அதை நிறுத்தியதும் “எங்கும் நிசப்தம். வாழ்வில் அன்றுதான் / நிசப்தம் என்பதை உணர்வதுபோல” என்று முடிகிறது கவிதை. இப்போதும் டேபிள் ஃபேன் என்றால், எனக்கு இந்த மின்விசிறிதான் நினைவுக்கு வரும். அதைப் பல மாதங்கள் பயன்படுத்தினோம், பல ஆண்டுகளுக்குப் பின்பு யாருக்கோ சும்மா கொடுத்தோம்.
சுவருக்குள் கடல்
பாடும் மின்விசிறியை என் தந்தைக்கு விற்ற தரகர், எண்பதுகளின் இறுதியில் எங்களுக்குத் திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டைப் பார்த்துக் கொடுத்தார். ஓட்டு வீடு, நீளமான கூடம், சுவருக்குப் பதிலாக லாக்கப் மாதிரி கம்பிகள், சற்றுப் பெரிய சமையலறை, சின்னதாக ஒரு படுக்கையறை, கூரை இல்லாத தனிக் குளியலறை, மூன்று குடித்தனங்கள் பகிர்ந்துகொண்ட ஒரு கழிப்பறை. கூடத்தில் பிளைவுட் சுவர் போட்டுக்கொண்டோம்.

சமையலறைச் சுவரில் பெரும்பாலான நேரம் தண்ணீர் துளிர்த்துக்கொண்டிருந்தது. சுவைத்தால் உப்புக் கரித்தது. கான்கிரீட் கலவையில் உப்பு இருந்தால் இப்படி ஆகும் என்று சொன்னார்கள். ஞானக்கூத்தன் எழுதிய ‘சுவரில் சமுத்திரம்’ (2002) என்ற கவிதை இதிலிருந்துதான் வந்தது. கவிதையின் கடைசிப் பகுதி
சிமெண்டுக் கலவையில்
கடற்கரைப் பொடிமணல் சேர்ந்துவிட்டால்
சுவர்கள் கசியும். ஆனால்
தப்பில்லை என்றார் தரகர்.
சுவரை உற்றுப் பார்த்தேன்
சுவரில் சிக்கிய சமுத்திரம்
தப்பித்துக்கொள்ள உதவி கேட்கிறது.
மூக்குக் கண்ணாடி
என் தந்தை எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பார். தூங்கும்போதுதான் கழற்றிவைப்பார். 1986-ல் ‘திணை உலகம்’ என்ற பொதுத் தலைப்பிட்ட ஏழு கவிதைகளில் ‘மூக்குக் கண்ணாடி கீழே விழுந்தது’ என்று தொடங்கும் ஒரு கவிதை இருக்கிறது. இதை எழுதிய காலத்தில் அவர் பட்டையான கருப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடி அணிவார். அவர், ஜெயகாந்தன், சா.கந்தசாமி, ஆதிமூலம் ஆகியோர் கண்ணாடி, பெரிய நெற்றி, சிகை, கிருதா எல்லாம் சேர்ந்து ஒரே மாதிரித் தோற்றமளித்தார்கள்.
கண்ணாடி உடைந்த அழகை ரசிப்பதோடு கவிதை முடிகிறது –
உடைந்த கண்ணாடியை உற்றுப் பார்த்தேன்.
நன்றாய் இருந்தது உடைப்பு
சிலந்திப் பூச்சியின் படத்தைப்போல.
இருக்கும் பேனா
ஞானக்கூத்தன் பேனா பிரியர். பல வடிவமைப்புகளில் ஆறேழு மை பேனாக்கள் வைத்திருந்தார். அவர் மேஜையில் பல வடிவ நிப்புகளும் ‘எழுதாத பேனா’க்களும்கூட இருந்தன. எப்போதும் மை பேனாக்களைப் பயன்படுத்தினார். அவர் அன்பளித்த உலக்கை போன்ற ஒரு மை பேனாவைப் பள்ளியில் பயன்படுத்திக் கவனத்தை ஈர்த்தது நினைவிருக்கிறது. அவர் கொடுத்த பிரெஞ்சு வாட்டர்மேன் பேனாவை என் பள்ளிவயது மகன் பொக்கிஷமாக வைத்திருக்கிறான்.
ஞானக்கூத்தன், பேனா பற்றிச் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். இவற்றில் நன்றாக அறியப்பட்டது ‘இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்’ (1982). இழப்பின் வேதனை அதிலிருந்து விடுபடுதல், “எல்லாம் இறுதியில் பழகிப்போய்விடும்” என்ற செய்தி ஆகியவற்றைக்கொண்ட கவிதை இது. பிறகு கவிதை எழுதும் நிகழ்முறையைப் பற்றிய ‘சும்மா’ (1982) என்ற கவிதை. அதன் கடைசி வரிகள்
ஊற்றினேன் மையை மை மேல்
வந்தது குமிழிக் கூட்டம்
வெளியிலே விழுந்தடித்து
திருகினேன் இறுக்கி. அங்கே
கழுத்தில் பனித்தது மனத்தில் கண்டது.
2002-ம் ஆண்டு வாக்கில் எங்கள் வீட்டில் கணினி வாங்கினோம். அதன் இடைமுகத்தைப் பார்த்ததும் என் தந்தைக்கு ஆர்வம் வடிந்துவிட்டது. இதில் என்னால் வேலை செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம், பொடி எழுத்துகள். என் அம்மா விரைவில் கற்றுக்கொண்டு கணவரின் கவிதைகள், கட்டுரைகளையும் தம்முடைய புனைவுகளையும் தட்டச்சு செய்தார். நானும் செய்தேன். பின்னர் என் தந்தை தமது இறுதிக்காலத்தில் ஐபேடில் தாமே தட்டச்சு செய்து ஃபேஸ்புக்கில் புகைப்படங்களோடு இடுகைகள் வெளியிட்டார். அவர் கணினிப் பழகியிருந்தாலும் மீண்டும் பேனாவுக்குத் திரும்பிச் சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். அவரால் பேனாவைக் கைவிட முடிந்திருக்காது.
மேசை நடராசர்
மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல. கிங்கரர் அல்ல.
எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கறுத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக்கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பெங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி; மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்
ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்.
எனக்குத்தான் ஆச்சர்யம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறிவிடாமல்
ஆடிக்கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.
(1988)