மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்

பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்

பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்

னிதர்களைப் பற்றிய கதைகள் அவர்களின் பிம்பம் மீதான அனுமானத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகின்றன. கதைகளால் நன்கறிந்த குறிப்பிட்ட ஒரு நபரை நேரில் பார்க்கும்போது, இப்படி இவரை நாம் அனுமானிக்கவில்லையே எனும் ஏமாற்றமும் கூடவே சேர்ந்துகொள்கிறது. எம்.ஜிசுரேஷை முதன்முதலாகச் சந்தித்தபோது அப்படியோர் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும்தான் அவரைப் பார்த்தேன். 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன். சென்னை, திருவல்லிக்கேணியிலிருக்கும் புதுப்புனல் பதிப்பக அலுவலகத்தில் அவருக்காகக் காத்திருந்தேன். எம்.ஜி.சுரேஷின் நூல்களுக்குப் பின்னால் அச்சிடப்பட்ட சில புகைப்படங்களில்,  ‘எழுதும் தோரணையில்’ மிக சீரியஸாக இருப்பார். அதைப் பார்த்து மிடுக்கும் கம்பீரமுமான, இறுக்கமான மனிதராக இருப்பாரென்றுதான் அனுமானித்து வைத்திருந்தேன். ஆனால், கொஞ்சம் குள்ளமான, பார்த்தவுடனேயே மெல்லிய நகை தோன்றுகிற மனிதரொருவர், பெண்கள் அணியும் தலைக்கவசம் ஒன்றைக் கையில் பிடித்தபடி உள்ளே நுழைந்தார். நான் எப்படி உரையாடலைத் தொடங்குவது எனும் யோசனையோடும் மிகுந்த பதற்றத்தோடுமிருந்தேன். அவர் பேச ஆரம்பித்த பிறகு என்னைவிடவும் அவருக்குத்தான் அதிக பதற்றமிருக்கும்போல என்று நினைத்துக்கொண்டேன். அப்படிப் பேசுவதுதான் அவருடைய இயல்பு. எது குறித்தோ மருட்சியோடிருப்பது போலவே பேசுவார். ஆனால், பேசப்பேச நகைச்சுவை ததும்பும் கதைகளால் சூழலை இணக்கமாக்கிவிடுவார்.    

பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்

எம்.ஜி.சுரேஷ், மதுரைக்காரர். வேலை காரணமாகச் சென்னைக்குக் குடிபெயர்ந்தவர். வறுமையான சூழலில் சிறுவயதிலேயே தந்தையை இழந்து குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், பிறகு 21 ஆண்டுகள் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். திரைப்படத் தணிக்கைக் குழுவிலும் நான்கு ஆண்டுகள் இருந்தார். சுரேஷின் ஆரம்பகாலக் கதைகள் வறுமையையும், பின்பு எழுதியவை அலுவலகக் கடைநிலை ஊழியர்கள் சந்திக்கின்ற சிக்கல்களையும், பிற கதைகள் சினிமாத் துறை அனுபவங்களையும், பிற்கால அறிவியல் புனைவுகள் அதிகற்பனைத்தன்மை கொண்ட கற்பனாவாத சமூகத்தையும் கட்டமைத்துள்ளமை, அவரது எழுத்தின் மீது அவரது வாழ்க்கை நிகழ்த்திய மாற்றங்கள். சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடிய சுயசரிதைத்தன்மை கொண்டதும் அதை மீறுவதற்கான பரிசோதனைக் கதை சொல்லல்களைக் கொண்டதுமான இரட்டைப் பண்பு கொண்ட ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ முதலான அவருடைய அனைத்துப் பரிசோதனை நாவல்களும், கோட்பாட்டு அறிமுக நூல்களும், பணி ஓய்வுக்குப் பிறகு எழுதப்பட்டவையே.

நடுத்தர வர்க்க மனநிலையைப் பிரதிபலிக் கக்கூடிய அவருடைய சொந்த வாழ்க்கையின் சாயலாக இருந்த கதைகள், அசாதாரணமாக இல்லாமல் எளிமையானதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டன. சுரேஷிடம் ஒருவித நடுத்தரவர்க்க மனநிலை குடிகொண்டிருந்ததை அவருடைய கதைகள் காட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தன. பெரிய கலகப் பண்புகள் ஏதுமில்லாத நடுத்தர வர்க்கப் பொதுப்புத்தி சார்ந்த மனநிலையும், அதிலிருந்து கடப்பதற்கான எத்தனிப்புமாகிய இரண்டுக்குமிடையிலான ஊசலாட்டம் கொண்ட கதைகள்தான் அவருடைய பரிசோதனைப் புனைவுகள்.   ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலர்’,  ‘அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்’, ‘சிலந்தி’ முதலான பரிசோதனை நாவல்கள் எல்லாவற்றிலும் இத்தகைய எளிமையான கதைகளையும் அதை மீறுவதற்கான எத்தனிப்பாக முயற்சிக்கப்பட்ட அறிவியல் புனைவுக் கதைகளையும் ஒன்றோடொன்று பின்னப்பட்ட அடுக்காக வாசிக்கலாம்.புதிய நூற்றாண்டில் எழுதப்பட்ட எல்லா நாவல்களிலும் எம்.ஜி.சுரேஷின் புனைவு உத்தியாக இருந்தது இது. க்யூபிஸ நாவல், ஆட்டோஃபிக்‌ஷன் நாவல், தோற்ற மெய்ம்மை நாவல் என்றெல்லாம் அவரால் அடையாளப்படுத்தப்பட்ட பரிசோதனை நாவல்கள் அந்த அடையாளங்களுக்கு உகந்தவை அல்ல என்றாலும், தமிழ் ‘மெட்டாஃபிக்‌ஷன்’ வரலாற்றில் முன்னோடி முயற்சிகள் என்னும் வகையில் பொருட்படுத்திப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்களாக அவை இருக்கின்றன.

சுரேஷ்,சில திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். தங்கர்பச்சானின் ‘அழகி’ படத்தில் ஒரு காட்சி வரும்; அதில் கதாநாயகன் தன் முன்னாள் காதலியின் மகனைப் பள்ளியில் சேர்ப்பார். அப்போது தலைமை ஆசிரியர் சிறுவனின் பெயரைக் கேட்பார். படத்தில் அதுவரையிலும் வெளியில் தெரியாத அந்தப் பெயர் கதாநாயகனின் பெயராக இருக்கும். இதில், விசேஷம் என்னவென்றால் அந்தக் காட்சியில் தலைமை ஆசிரியராக வருபவர் எம்.ஜி.சுரேஷ். இப்படி ஒரு சில காட்சிகளில் அவர் நடித்திருக்கிறபோதும் அவை மனதில் பதிவதற்குக்கூட அவகாசம் கொடுக்காத மிகக் குறுகிய காட்சிகளாக அமைந்துவிட்டன. அவருக்குத் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவு இருந்தது. இனி மேல் எப்போதும் நிறைவேறவே முடியாத கனவு அது. எம்.ஜி.சுரேஷ் பல்கலைக்கழக வட்டாரங் களில் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று அறியப்பட்டிருக்கிறார். கல்விப் புலங்களால் அறியப்படுவது என்பது எல்லா எழுத்தாளருக்கும் வாய்த்துவிடுவதில்லை. எழுபதுகளிலிருந்து எழுதி வருகிற எழுத்தாளர் என்றபோதும் அவர் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது, ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலர்’ நாவலுக்குப் பிறகுதான். இந்த நாவல் அதிகம் கவனிக்கப்பட்ட எழுத்தாளராக, அதேசமயம் அதிகம் விமர்சிக்கப்பட்ட எழுத்தாளராக அவரை மாற்றியிருந்தது.  

பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்



‘பின் நவீனத்துவம் என்றால் என்ன’, ‘இஸங்கள் ஆயிரம்’ போன்ற கோட்பாட்டு அறிமுக நூல்கள் மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன. எம்.ஜி.சுரேஷின் கோட் பாட்டு அறிமுக நூல்களை மட்டுமே வாசித்துவிட்டு, பின்நவீனத்துவ ஆய்வுகள் நிகழ்த்திய டாக்டர் பட்ட ஆய்வேடுகளை நான் வாசித்திருக்கிறேன். இது மிகவும் வேடிக்கையானது. பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஆய்வுகளே வேடிக்கையானவைதானே!?
எம்.ஜி.சுரேஷின் அறிமுக நூலைத் தவிர வேறு எந்த நூலையும் வாசிக்கத் திராணியற்ற கையாளாகாத்தனத்துக்கு ஆய்வாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டுமே அல்லாது நான் சுரேஷைக் குறைகூற மாட்டேன். நவீன இலக்கியம் என்னும் பெயரில் அதரப் பழசானதுகளை இன்னும் பாடமாக வைத்திருக்கிற கல்வி நிறுவனங்களில், புதிய கோட்பாட்டு அறிமுகங்கள் உள்நுழைந்திரு ப்பதும் எம்.ஜி.சுரேஷ் வாசிக்கப்படுவதும் அவரளவில் பெரிய சாதனை.

நான் பல்கலைக்கழக டாக்டர் பட்டத்திற்கு ரமேஷ்-பிரேம் புனைவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அனுமதி கேட்டிருந்தேன். அனுமதி மறுக்கப்பட்டபோது, “எம்.ஜி.சுரேஷை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால் ஒப்புதல் கிடைக்குமா?” என்று கேட்டேன். கொஞ்சம் கோபத்தோடு வேடிக்கையாக எடுக்கப்பட்ட முடிவு அது. பிறகு, சுரேஷின் புனைவுகளைக் குறுக்கும் நெடுக்குமாக வாசித்துவிட்டு அவர் ‘கியூபிஸ நாவல்’, ‘ஆட்டோஃபிக்‌ஷன்’, ‘தோற்றமெய்ம்மை’ என்றெல்லாம் குறிப்பிட்டதைத் தர்க்கரீதியாக மறுத்து ஆய்வைச் சமர்ப்பித்திருந்தேன். அதற்குப் பிறகு, அவர் எழுதிய ‘தந்திர வாக்கியம்’ நாவலின் முதல் வரைவை எனக்கு அனுப்பி ஆலோசனை கேட்டார். அந்த நாவல் வெளியிடப்பட்ட பிறகு கட்டாயமாக அதற்கு ஏற்பாடு செய்கிற விமர்சனக் கூட்டத்தில் பேச வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். என்னுடைய அனுபவத்தில் தன்னுடைய புனைவுகள் பற்றிக் குறைகூறிய பிறகு எத்தனை எழுத்தாளர்களிடம் மீண்டும் பேச முடியும் என்று யோசித்தால், அச்சம்கூடிய சில துர்க்கனவுகள் மட்டுமே நினைவில் வந்து போகின்றன. 

‘எம்.ஜி.சுரேஷ், பின்நவீனத்துவத்தை ஒரு சிந்தனை அலையாக அல்லாமல், ஒருவகை புதிய மதமாகவே எடுத்துக்கொண்டார்’ என்பதாக அவருடைய அஞ்சலிக் குறிப்பில் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. வெகு சமயங்களில் சுரேஷ் பின்நவீனத்துவம் என்னும் வேதாளத்தை முதுகில் சுமந்துகொண்டு திரிபவரைப்போல நடந்துகொண்டார். தேனீர்க் கடையில் ஒரு தேனீர் சொல்வதுபோல, அவர் மிகச் சிக்கலான விவாதத்தைக் கோருகிற கலைச்சொற்களை எல்லாம் தனது பேச்சில் மிக அநாயாசமாக உதிர்த்துவிடுவார். கொட்டிக் கவிழ்த்தல், ரத்து செய்தல், பரிச்சய நீக்கம் செய்தல் போன்ற சொற்களை அவர் பேசும்போது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது யோசித்தால், முறைப்படியாக இன்று நான் வாசித்துக்கொண்டிருக்கிற கருத்தாக்கங்களுக்கு அன்று வித்திட்டவராக சுரேஷ் இருந்திருக்கிறார் என்பது நிதர்சனமாக இருக்கிறது.   

பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்

எம்.ஜி.சுரேஷ் இன்று நம்மிடையே இல்லை. ஒரு எழுத்தாளனின் மரணத்துக்கு வருந்த வேண்டுமா என்று கேட்டால், நான் இல்லையென்றுதான் சொல்வேன். குறிப்பிட்ட எழுத்தாளனைப் பற்றி வெகுகாலம் மறதியிலிருக்கிற சமூகம், அவனது மரணத்தின்போது அவனுடைய நினைவைத் திரும்பிப் பார்க்கிறது. இது கொண்டாட்டத்துக்குரியதுதானே தவிர, வருந்தத்தக்கதல்ல. எந்த வாசகனும் ஆசிரியனின் பௌதீக இருப்பை நினைவு கூர்ந்துகொண்டே அவனுடைய படைப்பை வாசிப்பதில்லை. ஒரு நாவலை வாசிக்கும்போது அந்த நாவலாசிரியனை ஞாபகம் வைத்துக்கொண்டால், அந்த ஞாபகம் திறந்த வாசிப்புக்கு வித்திடாத சுமையாக இருக்கும். ஆசிரியனின் உடம்பு அழிந்த பிறகும் அவனுடைய வாழ்வை நீட்டிக்கக்கூடிய வல்லமை இலக்கியத்துக்கு உண்டு.

சுரேஷ், சக எழுத்தாளர் என்பதைக் கடந்து நல்ல நண்பர். இனிமையாகப் பழகும் நண்பரொருவரை இழந்த சோகம் என்னுடையது. ஒரு நண்பரை இழப்பது என்பது நண்பரை மட்டும் இழப்பதல்ல. அவருடனான அனுபவங்களை இழப்பது. குறிப்பாக, அவருடனான உரையாடலை இழப்பது. அம்பத்தூர் புறநகர்ப் பகுதியிலிருக்கும் சுரேஷின் வீடு, நான் மிக அணுக்கமாக உணர்கிற நண்பர்களின் வீடுகளில் ஒன்று. எல்லாருடைய வீட்டிலும் அவ்வளவு அணுக்கமாக நம்மைப் பொருத்திக்கொள்ள முடியாது. சில நண்பர்களின் வீட்டில் யாரோ தலைக்கு மேலே அம்மிக் குழவியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு என்னை அச்சுறுத்துவது போன்ற உணர்வை அடைந்திருக்கிறேன்.  
எம்.ஜி.சுரேஷின் வீட்டுக்குள் அவ்வளவு அணுக்கமாக என்னைப் பொருத்திக்கொள்ள முடிந்தது என்றால் அதற்கு முழுமுதற் காரணம், சுரேஷின் மனைவி திருமதி நிர்மலா. 

செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு,  எழுதுகிறேன் - சிறுபத்திரிகை நடத்துகிறேன்-என்று சுற்றிக்கொண்டிருந்த ஒருவரைத் தன்னுடைய வருமானத்தின் மூலமாகவும் தன்னுடைய அக்கறையின் மூலமாகவும் இவ்வளவு காலமாகப் பாதுகாத்து வந்தவர் அவர். சுரேஷ் வீட்டிலிருக்க, அவர் வேலைக்குப் போனது பற்றிய துளியளவு கர்வம்கூட இல்லாத அன்பு அவருடையது. ஓர் எழுத்தாளனுக்கு இப்படி அக்கறையாகக் கவனித்துக்கொள்கிற துணை அமைவது ஆகப் பெரிய வரம். என்னுடைய கவலையெல்லாம் தன்னுடைய துணையாக வாழ்வின் பெரும்பகுதியில் உடன் வந்த ஒருவர் திடீரென இல்லாமல் போனது குறித்த இழப்பிலிருந்து அவர் மீள வேண்டும் என்பதுதான்.

சுரேஷுக்கு அவ்வளவு சரளமாக இணையத்தைக் கையாளத் தெரியாது. அதனால் சில மின்னூல்களை என்னிடம் தேடித் தரச் சொல்வார். சிங்கப்பூர் போவதற்கு முன் அவர் கடைசியாகக் கேட்டிருந்த நூல் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. தேடிச் சலித்து ஓய்ந்த ஓர் நாளில், அந்த நூலைக் கண்டுபிடித்தும் விட்டேன். ஆனால், அவரிடம் கொடுப்பதற்குத்தான் காலம் கடந்துவிட்டது. கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு எம்.ஜி.சுரேஷ் சென்றுவிட்டார்.

அவரது எழுத்துகள் நம்முடன்தான் இருக்கின்றன.