மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

முருகனும் வள்ளியும் கொடுத்த காதற்பரிசான  சோமப்பூண்டுப்பானத்தைப் பருகும் முன்னுரிமை காதலர்களுக்கே உரியது. எவ்வியூரின் தலைவனேயானாலும் அதற்குக் கட்டுப்பட்டவன்தான். நாள்தோறும் அதிகாலை சோமப்பூண்டு  போடப்பட்ட பெருந்தாழியில் நீரெடுத்து ஊற்றும் பணியை முதுபெண்கள் செய்வர். அந்நீரில் சோமப்பூண்டு  கொஞ்சங்கொஞ்சமாகக் கரைந்து, கலங்கி, மயக்கும் மணத்தோடு பானமாகத் திரண்டிருக்கும். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இணையர் இக்காதற்பரிசைக் கையிலேந்தி ஆட்டத்தைத் தொடங்கிவைப்பர். அதற்குப் பின்னர்தான் மற்றவர்களுக்குத் தரப்படும்.  சோமப்பூண்டு கிடைத்து இன்று ஐந்தாம் நாள். இன்றைய ஆட்டத்தை யார் தொடங்கப்போகிறார்கள் எனப் பலரும் காத்திருந்தபொழுது அரங்கினுள் நுழைந்தாள் அங்கவை; உடன்வந்தான் உதிரன்.

எவ்வியூர் முழுக்கத் தெரிந்த கதைதான் இது. கொற்றவைக்கூத்தின்பொழுது தீக்களி பூசிக்கொண்டு நெருப்பில் இறங்கி ஆடினாள் அங்கவை. தழலுக்குள் சுழலும் அந்தக் காதலிணையர்கள் யாரென அப்பொழுது ஊராருக்குத் தெரியவில்லை. ஆனால், பாரி பார்த்த கணமே அறிந்தான், சுடரும் நெருப்பில் சுற்றிச்சுழல்பவள் தன் மகளென. ஆனால், அங்கவையோடு இணைந்தாடும் ஆடவன் யார் என்பதுதான் பாரிக்குத் தெரியாமல் இருந்தது.

அதுவும் அடுத்த சிலநாள்களிலேயே தெரிந்துவிட்டது. பேரெலி வேட்டையின்பொழுதே உதிரன் பாரியிடம் சிக்கிவிட்டான்.  அவனது  உடல்மொழி  கண்டே உண்மையறிந்தான் பாரி.

இச்செய்தியை அறியும் முன்பே கபிலரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பினை உதிரனுக்குக் கொடுத்திருந்தான் பாரி. இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானது என ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு. பாரி தனது இயல்பின் வழியே  இணையருக்கான வழித்தடத்தைச் செப்பனிட்டுக் கொடுத்திருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

கபிலரிடம் பாடங்கேட்க எந்நேரமும் அவரின் குடிலில் அங்கவை இருந்தாள். அவருக்கு உதவிசெய்ய அங்கேயே இருந்தான் உதிரன். பெரும்புலவனின் சாட்சியாகச் செழித்து வளர்ந்தது காதல். யாருக்கு யார் பாடங் கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற குழப்பம் குடிலில் எப்பொழுதும் நிலவியது.

அங்கவையைப் போன்ற அறிவிற்சிறந்த மாணவிக்கும் உதிரனைப் போன்ற அழகுநிறைந்த வீரனுக்கும் இடையில் மொழிகற்றுத்தரும் புலவன் சிக்கியிருந்தான். பெரும்புலவனை உருட்டியும் மறைத்தும் விழுங்கியும் விளையாடும் விளையாட்டு காலநேரமின்றி நடந்துகொண்டிருந்தது.

அவர்கள் இருவரும் காதல்கொண்டுள்ளனர் என்று கபிலரும் அறிவார். ``எனது குடிலில் இருக்கும்பொழுது கல்வியறிதல் தாண்டி, சிறு கவனச்சிதறல்கூட அங்கவையிடம் இருந்ததில்லை. அதேபோலத்தான் உதிரனும். எனக்கான பணியைச் செய்வதைத்தவிர வேறெதிலும் ஈடுபாடின்றி விலகி நிற்பான்” என்று அவர்கள் இருவரைப்பற்றியும் பெருமையோடு மற்றவர்களிடம் கூறுவார் கபிலர். 

பெரும்புலவனேயானாலும் காதலர்களின் விளையாட்டில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிய முடியாதுதானே. கபிலர் பார்ப்பதை மட்டுமே உண்மையென நம்பியிருந்தார். அவர் பார்க்காத பகுதியில்தான் உண்மையின் முழுமையிருக்கிறது என்பதை அவர் அறியவில்லை.

அவர்கள் இருவரும் காதல்கொள்கிறார்களா என்ற ஐயம் பலமுறை கபிலருக்கு வந்துள்ளது. ஏனென்றால், அவர்கள் இருவரும் தங்களுக்கு இடப்பட்ட பணியினைத்தவிர வேறெதையும் செய்வதில்லை என்று அவர் நம்பினார். கபிலரைக் கண்ணைக்கட்டி விளையாட்டுக் காட்டியதுதான் அவர்களின் காதல் செழித்திருந்ததன் அடையாளம்.

புலவன் மனங்களுக்குள் ஊடுருவத்தெரிந்தவன். அங்கவையின் கண்ணைப் பார்த்தே கதையைச்சொல்லும் ஆற்றல் கபிலருக்கு உண்டு. ஆனாலும் அவரால், இவர்கள் பேசிக்கொள்ளும் மொழியைப்

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

புரிந்துகொள்ளமுடியவில்லை. காரணம், அம்மொழி இயற்கையின் ஆதிரகசியங்களைக் கொண்டிருந்தது. அங்கவை தனது கூந்தலுக்குப் பூச்சூடி வருவதுதான் கபிலருக்குத் தெரிந்தது. ஆனால், விரியிதழ் மலர் சூடுவதற்கு ஒரு பொருள் உண்டு. கூம்புவடிவப் பூச்சூடினால் சொல்லும் செய்தி வேறொன்று. நான்கிதழ் மலர்சூடி வரும்போதெல்லாம் அங்கவையின் முகத்தில் இருக்கும் பூரிப்பு கபிலரால் உய்த்தறிய முடியாதது.

சமதளத்தில் மன்னர்கள் ஆநிரையைக் கவர வெட்சிப்பூ, மீட்கக் கரந்தைப்பூ, போருக்கு முனைய வஞ்சிப்பூ, தாக்கியோரை எதிர்க்கக் காஞ்சிப்பூ, வெற்றிக்கு வாகைப்பூ எனப் புறக்காரணங்களின் அடையாளங்களாகப் பூக்களைச் சூடிக்கொண்டனர்.

பூக்கள், செடிகொடிகளின் அக அடையாளம். கிளைகளுக்கும் தண்டுகளுக்கும் இலைகளுக்கும் இல்லாத வண்ணமும் வாசமும் பூக்களுக்கு இருப்பது அதனால்தான். குறிஞ்சி காதல் நிலம். அக்காதல் நிலத்தில் நிகழும் காதல் விளையாட்டுக்கு பூக்களைவிட சிறந்த தூதுவன் யாராக இருக்க முடியும். பூக்கள்தான் செய்தியைச் சொல்கின்றன; பூக்கள்தான் உயிரைக் கொல்கின்றன.

ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக, கூந்தலில் எப்பூவும் சூடாமல் வந்திருந்தாள் அங்கவை. மொழிப்பயிற்சியின் புதிய பாடத்தைத் தொடங்கும் நாள் அது. அங்கவை ஏதோ ஒரு மனச்சோர்வில் இருக்கிறாள் என்று கபிலர் புரிந்துகொண்டார். அதனால் புதிய பாடத்தைத் தொடங்கவில்லை. சிறிதுநேரம் உதிரன் வெளியே போய்வந்தான். அங்கவை உட்கார்ந்திருந்த இடத்தினருகே அத்திக்காய் இருந்தது. பாடம் முடிந்து அங்கவை போன பின்பே அதனைக் கபிலர் பார்த்தார். இது இங்கு எப்படி வந்தது எனக் குழம்பிய கபிலருக்கு அத்திக்காய் சொல்லும் செய்தி தெரியவில்லை.

அத்திக்காய் பூக்காமல் காய்ப்பது. வாழ்வின் ஒருகட்டத்தைத் தாவிக்கடப்பதன் அடையாளம் அது. அங்கவையும் உதிரனும் காதலின் அடுத்த கட்டத்தை அறிய ஆசைப்பட்டதன் வெளிப்பாடு அது. பூச்சூடாமல் அங்கவை வந்ததால் உதிரன் அத்திக்காய் கொடுத்துத் தனது எண்ணத்தைச் சொன்னானா? அல்லது பூச்சூடாமலே வந்தவள் அத்திக்காய் கொடுத்து அழைத்துவிட்டுப் போனாளா? யார் அறிவார்?

காயை அறியாத கபிலர் காதலை எப்படி அறிவார்? கண்முன் நடக்கும் உரையாடலைக் கண்கொண்டுமட்டும் பார்த்துவிட முடியாது. ஏனென்றால், இது காதலின் உரையாடல். நிகழ்த்தப்பட்ட உரையாடலின் தொடர்ச்சி இப்பொழுது என்னவாக நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பது தெரியாததால்தான், அத்திமரம் பற்றிய பாடலை அங்கவைக்குச் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்தார் கபிலர். தனக்கும் பாடம் கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை அவருக்கு.

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

காதல் விளையாட்டில் இணையற்ற இணையரான அங்கவையும் உதிரனும் சோமப்பூண்டின் பானம் பருக அரங்கினில் நுழைந்தனர். அங்கவை வழக்கத்துக்கு மாறாக சற்றே நாணத்தோடு உள்ளே நுழைந்தாள். உதிரன் அமைதியான இயல்பைக் கொண்டவன். சிறுத்த கண்களைக் கொண்ட அவனது முக அமைப்பு யாரையும் மயக்கக்கூடியது. உதட்டோரம் இருக்கும் சிறுகுழி முகத்தில் எப்பொழுதும் ஒரு சிரிப்பு மலர்ந்திருப்பதைப் போலவே தோற்றம் தரும். மகிழ்வு நீங்காத அழகன் அவன். அவன் மயங்கிக்கிடக்கும் அழகி அவள்.

உள்நுழைந்த இருவரைப் பார்த்ததும் பழச்சாற்றை ஊற்றித்தரக் குவளையை எடுத்தாள் முதுமகள். ஆனால், அங்கவையோ அவள் எடுக்கும் குவளையைப் பார்க்காமல் சற்று தள்ளி எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு எதைப் பார்க்கிறாள் என முதுமகளும் திரும்பி அப்பக்கம் பார்த்தாள்.  நீர்கொண்டுவரும் பானை அவ்விடமிருந்தது. முதுமகள் கையிலேந்திய குவளையைக் கீழே வைத்துவிட்டு அப்பானையைப் பார்த்தபொழுது, உதிரன் பானையைக் கையிலெடுத்தான். முதுமகளுக்கு வியப்புத் தாங்கமுடியவில்லை.

``தொடங்கும்பொழுதே பானையிலா?’’ என்றாள்.

``ஆம், வேறு வழியில்லை. இப்பெருந்தாழியைத் தூக்கிச்செல்ல முடியாதல்லவா?” என்றான் உதிரன்.

முதுமகளால் சிரிப்பினை அடக்கமுடியவில்லை.

``நாங்கள் காதலர்களான பிறகு, முதன்முறையாக இப்பொழுதுதான் சோமப்பூண்டு கிடைத்திருக்கிறது. இச்சிறுகுவளையில் வாங்கி என்று தீர்க்க எமது கனவை?”

“இவ்வளவு ஆர்வங்கொண்ட நீங்கள் ஐந்து நாட்களாக ஏன் வரவில்லை?” என்று கேட்டாள் முதுமகள்.

உதிரன் சொன்னான். ``நான் கபிலருக்கு உதவியாளன். அவரை அருந்தச்செய்து மகிழ்விப்பதுதான் பாரி எனக்கு இட்டுள்ள கட்டளை. எழமுடியாத மயக்கங்கொண்டு அவர் துயிலும் நாளுக்காகக் காத்திருந்தோம். இன்றுதான் அது வாய்த்தது.”

பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அடுத்த இணையர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் நீலனும் மயிலாவும். சோமப்பூண்டு கிடைத்த  செய்தி பறம்புநாடு முழுவதும் பரவிவிட்டது. எல்லா ஊர்களிலிருக்கும் காதலர்களும் எவ்வியூர் புறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றனர்.  செய்தி வேட்டுவன் பாறைக்குப் போய்ச்சேர்ந்த கணத்தில் இவர்கள் புறப்பட்டு வந்துசேர்ந்துள்ளனர். அதனால்தான் ஐந்தாம் நாள் காலையிலே வர முடிந்தது. நீலனும் மயிலாவும் காதல்கொள்ளத் தொடங்கிய பிறகு முதன்முறையாக இப்பொழுதுதான் சோமப்பூண்டு கிடைத்துள்ளது. அரங்கினுள் முதலில் நுழைந்தான் நீலன், தொடர்ந்து மயிலா வந்தாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

மயிலாவைப் பார்த்ததும் முதுமகளுக்கு உள்ளுக்குள் சிறு அச்சம் எட்டிப்பார்த்தது. நீலன் அதிசிறந்த வீரனெனப் பறம்பெங்கும் அறியப்பட்டவன். அவனை வீழ்த்திய வல்லமைகொண்டவளைப்பற்றி அதைவிட அதிகமாக அனைவருக்கும் தெரியும்.

அரங்கினுள் நுழைந்ததும் சோமப்பூண்டின் மணம் நீலனின் மூக்கில் ஏறியது. சற்றே காரத்தன்மையோடு இருக்குமோ எனத் தோன்றிய கணத்தில் அதன் தன்மை வேறொன்றாகப்பட்டது. இதுவரை உணராததாக இருக்கிறதே என்று நினைக்கும்பொழுதே அவன் கிறக்கத்தில் மூழ்கத்தொடங்கினான். அருகிருந்த மயிலா அவனது முதுகைத்தட்டினாள். விழிப்பு வந்தவனைப்போல மணம்விலகி மீண்டான்.

அங்கவையும் உதிரனும் இதுவரை பருகவில்லையே தவிர ஐந்து நாள்களாக இவ்வாடையை நுகர்ந்து பழகிவிட்டனர். ஆனால், நீலனுக்கும் மயிலாவுக்கும் அப்படியல்ல, நுகர்வதே இவ்வளவு கிறக்கங்கொடுக்குமானால் அருந்தினால் என்னவாகும்?

கிறக்கம் விலக்கி ஊற்றிக்கொடுக்கும் முதுமகளின் அருகில் வந்தனர் இருவரும். இவர்கள் இருவரும் பானையைத்தான் தூக்குவார்கள் என நினைத்த முதுமகள் குவளையை ஓரத்தில் வைத்துவிட்டு இன்னொரு பானையை எடுத்தாள்.

நீலன் முதுமகளையே பார்த்துக்கொண்டிருந்தான். ``என்ன இப்படிப் பார்க்கிறாய்? பானையைத்தானே எதிர்பார்த்தாய்? அதைத்தான் எடுக்கிறேன்” என்றாள்.

நீலனோ, ``இல்லை, நாங்கள் பானையை எதிர்பார்த்து வரவில்லை” என்றான்.

“அப்புறம் எதை எதிர்பார்த்து வந்தீர்கள்? இவர்கள் இருவரைப்போல பெருந்தாழியைத் தூக்கிப் போகலாம் என நினைத்து வந்தீர்களா?” எனக் கேட்டபடி சிரித்தாள்.

உதிரனும் அங்கவையும் உடன் சிரித்தனர். நீலன் சொன்னான், “அவர்கள் காதல்கொண்டுள்ள இடம் எவ்வியூர். எனவே அவர்களால் பெருந்தாழியைத் தூக்கிச்சென்றுவிட முடியும். ஆனால், நாங்கள் வேட்டுவன் பாறைக்கல்லவா போக வேண்டும். அவ்வளவு தொலைவு எப்படித் தூக்கிச்செல்ல முடியும்?”

சற்றே வியப்போடு முதுமகள் கேட்டாள், “அப்படியென்றால் என்ன செய்யலாமென்று வந்துள்ளீர்கள்?’

முதுமகள் சொல்லிமுடிக்கும் முன்பே மயிலா சொன்னாள், “சோமப்பூண்டை எடுத்துச்செல்லலாம் என்று...”

அதிர்ந்த முதுமகள் சட்டென அருகிருந்து கம்பைத் தூக்கினாள். பாய்ந்துவந்து அந்தக் கம்பைப் பிடித்த மயிலா சொன்னாள், “இது காதற்பரிசு. முருகன் எவ்விக்குக் கொடுத்தது பருகும் நீரையல்ல, உருகும் பூண்டினை. கொடுத்ததும் பெற்றதும் காதலர்கள் செய்துகொண்ட செயல்; இடையில் முதுமகள்கள் ஏன் நுழைந்தீர்கள்?” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நீலனைப் பார்த்து, “விரைவாக அதனை எடு” என்றாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

பூண்டினை எடுக்க தாழிநோக்கிப் பாய்ந்தான் நீலன். எங்கிருந்து அப்படியொரு குரல் வந்ததெனத் தெரியாது. அரங்கமே அதிரும்படி பெருங்குரல் கொடுத்தாள் முதுமகள். குரல் கேட்டதும் வெளியில் இருந்த வீரர்களும் மற்ற முதுமகள்களும் உள்ளே நுழைந்தனர்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது என யாருக்கும் புரியவில்லை. யாரையும் கட்டுக்கடங்காமல் செய்யும் ஆற்றல் இப்பூண்டுப்பானத்துக்கு உண்டு. அதன் மணம் உருவாக்கிய கிறக்கமே இவ்வளவு வெறிகொள்ளச் செய்கிறது. நிலைமையை எப்படிச் சமாளிக்க எனச் சிந்தித்த முதுமகள், சிக்கலைப் பெரிதாக்க வேண்டாம் என முடிவுசெய்து, சட்டெனக் குவளையை நீட்டியபடி, “முதலில் இதனைக் குடி, என்ன செய்யலாம் என்று பின்னர் முடிவுசெய்வோம்” என நீலனை நோக்கி நீட்டினாள்.

அவனது மூக்கிற்கு மிக அருகில் ஏந்திய குவளைக்குள்ளிருந்து மேலெழுந்த மயக்கம் மூக்கினுள் ஏறி உச்சந்தலையை முட்டியது. தனக்கும் நீலனுக்கும் நடந்துகொண்டிருந்த போராட்டத்தைக் கணநேரத்தில் நீலனுக்கும் சோமப்பூண்டுக்குமான போராட்டமாக மாற்றினாள் முதுமகள்.

சற்று தள்ளி இருந்த மயிலா, முதுமகளின் தந்திரத்தை உணர்ந்தபடி, “அதனை வாங்கிக் குடிக்காதே” என்று கத்தினாள். அவளது சொல் அவன் காதில் விழும்பொழுது பருகிய முதல்மிடறு தொண்டையைக் கடந்து கீழிறங்கிக்கொண்டிருந்தது. இனி அவனைக் கையாள்வது எளிது. அவனின்றி மயிலாவால் மட்டும் இந்த உரிமைப்போரை நடத்த முடியாது என முதுமகள் அறிவாள்.

முதுமகளுக்கு வேர்த்து அடங்கியது. கணநேரத்தில் சூழலே மாறத்தெரிந்ததே எனத் தவித்துப்போனாள். 

சினம் உச்சத்திலேறியபடி ஒரு பார்வை பார்த்தாள் மயிலா. அவளது பார்வையைப் பொருட்படுத்தாதது போல அப்பக்கம் திரும்பிக்கொண்டாள் முதுமகள். சற்று நேரங்கழித்துத்தான் மீண்டும் திரும்பினாள்.

பானையை ஏந்தியபடி அரங்கை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர் நீலனும் மயிலாவும். அவர்களுக்கு முன்பே அங்கவையும் உதிரனும் வெளியேறியிருந்தனர்.

வெ
டத்தப்பூவின் இலை எள்ளுச்செடியின் இலையைவிட மிகச்சிறியதாகவும் ஊசியாகவும் இருக்கும். செடியின் அளவும் சிறியதுதான். ஆனால், அதன் அதிசயிக்கத்தக்க சிறப்பு பூவினில் உள்ளது. அது அரும்பும்பொழுது ஒரு நிறத்தில் இருக்கும், அரும்பு விளைந்து மொட்டாகும்பொழுது ஒரு நிறம் கொள்ளும், மொட்டு பருத்து முகையாகும்பொழுது புது நிறத்தில் ஒளிரும். இதழ்விரிந்து மலரும்பொழுது வேறொரு நிறம்காணும். நான்கு நிறங்களில் பூத்து உதிரும்.

இதன் வியப்புறும்தன்மை இத்தோடு நின்று விடுவதில்லை. நான்கு நிலைகளில் நான்கு நிறங்களைக் காணும் வெடத்தப்பூ நான்கு தன்மையிலும் நான்கு சுவைகளை உடையதாகவும் இருக்கும். அச்சுவை நான்குவிதமான நறுமணங்களை வீசும்.

சின்னஞ்சிறு செடி ஒன்று நிறம், மணம், சுவை என அனைத்தையும் விதவிதமாய் வெளிப்படுத்தி இயற்கையின் குதூகலத்தை நிகழ்த்திக்காட்டும். தும்பிகளும் வண்டுகளும் வெடத்தப்பூவைக் கண்டு சற்றே குழப்பமடைகின்றன என்பார்கள். அக்குழப்பத்துக்குக் காரணம் நிறமா, மணமா, சுவையா எனத் தெரியாது. ஆனால், அது ஒரு வியப்புறு தாவரம்.

அதனால்தான் வெடத்தப்பூவைக் காதலர்களின் பூவாக வேளிர்குலம் கருதியது. மனித வாழ்வில் இத்தனை வண்ணங்களும் வாசனைகளும் கொண்ட காலமாக காதல்கொள்ளும் காலமே இருக்கிறது. பறம்பின்

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

காதலர்கள் வெடத்தப்பூவின் அருகில் அமர்ந்தே தங்களின் காதலைப் பரிமாறிக்கொள்கிறார்கள். வெடத்தப்பூவின் அருகில் அமர்ந்திருப்பவர்களை “வெடலைகள்” என்றும் அப்பருவத்தை “வெடலைப்பருவம்” என்றும் பறம்பின் மக்கள் அழைக்கின்றனர்.

மயக்கும் பழச்சாற்றைப் பானையோடு தூக்கிப்போன வெடலைகள் வெடத்தப்பூத் தேடியே அலைந்தனர். உதிரனும் அங்கவையும் எவ்வியூரின் கிழக்குப்பக்கச் சரிவில் வெடத்தப்பூவைக் கண்டு அவ்விடம் அமர்ந்தனர். ``நாம் அப்பக்கம் போகவேண்டாம்” எனச் சொல்லி வடபுறம் சென்ற நீலனும் மயிலாவும், சிற்றோடையின் ஓரம் அச்செடியைக் கண்டறிந்து அமர்ந்தனர்.

வெடத்தப்பூக்கள் சொல்லும் காதல்கதைகள்தாம் எத்தனை எத்தனை. காதல் கணந்தோறும் அழகினைச் சுவைக்கக் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம்தான் வெடத்தப்பூக்கள். குறிஞ்சி நிலமே காதல் நிலம்தான். அதிலும் வெடத்தப்பூ குறிஞ்சியின் குறியீடு. நீர்க்குமிழி, கதிரவனின் ஒளிபட்டுப் பலவண்ணங்களைக் குழைத்துக்காட்டுவதைப் போலத்தான் வெடத்தப்பூவும். அது, இயற்கை தனது எண்ணம்போல் நிறத்தையும் மணத்தையும் சுவையையும் விளையாடிப்பார்க்கும் வண்ணக்குமிழி.

வள்ளியும் முருகனும் வேங்கை மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருந்தபொழுது அருகிருந்த வெடத்தச்செடி அரும்புவிட்டிருந்தது. அரும்பின் நிறம் பச்சை. தேனை நுனிநாக்கில் தொடுவதைப்போன்றது அதன் சுவை. தொட்ட கணம் உடல் முழுவதும் பரவும். இச்சுவையும் அப்படித்தான். மணம் பரவி மூச்சுக்குழலுக்குள் சுழலச்சுழல மயங்கிக் கண்செருகத் தொடங்கும்.

முதலில் அந்த மணம் வள்ளி கூந்தலில் சூடியுள்ள பூவிலிருந்துதான் வருகிறதோ என நினைத்தானாம் முருகன். தோளிலே சாய்ந்திருந்த வள்ளிக்கோ முருகனின் தனித்த மணம் இதுதானோ என்று தோன்றியதாம். வள்ளியின் கூந்தலுக்குள்  அந்நறுமணம் தேட முருகன் முற்பட்டபொழுது, முருகனின் உடலுக்குள் அதனைத் தேடத் தொடங்கினாள் வள்ளி.

காதல் இப்படித்தான் தேடலில் தொடங்கி, தொலைவதில் முடிவடையும். அவர்கள் இருவரும் கண்டடையாமலே தொலைந்துபோயினர். இக்கதையை உதிரன் சொன்ன பொழுது அங்கவை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனாலும் அது முழுக்கதையல்ல என அவளுக்குத் தோன்றியது.

பச்சை நிறத்துக்கு ஒரு குணம் உண்டு. குறிஞ்சியின் அடிநிறம் பச்சை. நீர் எல்லா நிறமாகவும் மாறும். ஆனாலும் நீரின் நிறம் சருகுவெண்மை. அதுபோலத்தான் குறிஞ்சியின் நிறமும். காதல்கொள்ளத் தொடங்கும் காலத்தில் இளமை செழித்துக்கிடக்கும் பச்சையம்தான் உடலெங்கும் மிதந்துகொண்டிருக்கும்.

அவ்வளவு நேரமும் அவள் சொன்னதைக் கவனித்துக்கொண்டிருந்த உதிரன் கேட்டான், ``காதலின் துளிர்ப்பருவம் பச்சை நிறத்தாலானதா?”

``ஆம்” என்றாள் அங்கவை.

யிலாவின் மடியினில் தலைவைத்து, சிற்றோடையில் கால்நீட்டிப் படுத்திருந்த நீலன் சொன்னான், ``வள்ளியையும் முருகனையும் ஒருசேர மயக்கியது வெடத்தப்பூ. அதனால்தான் கையில் இருந்த பூண்டினை எவ்வியிடம் கொடுத்தனுப்பிவிட்டனர். அப்பூண்டினைவிடப் பெருமயக்கத்தை வெடத்தப்பூ உருவாக்கியிருக்கும்.” அதனைக் கேட்டுக்கொண்டே நீலனின் தலைமுடியைக் கோதிய மயிலா சொன்னாள்,``நீரில் கரையும் பூண்டினைவிட, காற்றில் கரையும் பூவின் மயக்கம் எதிர்கொள்ள முடியாததாகத்தானே இருக்கும்.”

பதில்கேட்டு இளஞ்சிரிப்பை உதிர்த்தான் நீலன்.

``ஏன் சிரிக்கிறாய்?”

``மடியில் தலைவைத்து மயங்கிக் கிடப்பவனிடம் மயக்கத்தைப்பற்றிப் பேசுகிறாயே என்றுதான்.”

மடியோடு கிடந்தவனைக் கையோடு அள்ளினாள்.

நீலன் புரியாமல் அவளை உற்றுப் பார்த்தபடியிருந்தான்.

சிறிது நேரம் உற்றுப் பார்த்தபடியேயிருந்த மயிலா சொன்னாள், ``மயங்கிய ஒருவனின் கண்களில் இவ்வளவு துடிப்பு இருக்காது. அதுமட்டுமல்ல, மயங்கியவனின் கைகள் இந்த வேலையைச் செய்யாது.”

சட்டெனக் கையை விலக்கியபொழுது சிரிப்பு கொட்டியது. மகிழ்ந்து சிரித்தபடி நீலன் சொன்னான், ``பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும். காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்.”

எவ்வளவு மயங்கினாலும் உணர்வுப் புலன்கள் மயங்குவதில்லை என்பதை நீலன் சொல்லிக்கொண்டிருந்தபொழுது, மயங்காத மயக்கங்கொண்டிருந்த மயிலா கேட்டாள், ``மயங்கினாலும் முடியாத விளையாட்டா இது?”

``ஆம், மன அளவில் இது முடிவுறாதது. நீர் வற்றினாலும் ஓடையின் குணம் மாறாதல்லவா? காதலும் அப்படித்தான்.”

சொல்லும்பொழுது அவள் உடல் அவன்மீது சரிந்து கீழிறங்கியது. அவள் சொன்னாள், ``வெள்ளம் ஓடினாலும் ஓடையின் குணம் மாறாதுதானே?”

இதற்கு மேல் இருவராலும் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை, சிற்றோடையில் பெருவெள்ளம் ஓடியது.

“காதலின் நிறம் பச்சையா?” எனக் கேட்டான் உதிரன்.

``துளிரின் நிறம் பச்சை. செழிப்பின் நிறம் பச்சை. இயற்கையின் நிறம் பச்சை. எனவே காதலின் நிறமும் தொடக்கத்தில் பச்சைதான். பின்னர்தான் வெடத்தப்பூப்போல அதுவும் மாறுகிறது” என்றாள் அங்கவை.
``செடிகொடிகளைப்போல மனிதனும் நிறம் மாறுவானா?”

அங்கவை சொன்னாள், ``மனித உடலுக்கு நிறம்மாறத் தெரியாது. ஆனால், நிறத்தைச் சுரக்கத் தெரியும்.”

விடை இன்னும் வியப்பைக் கொடுத்தது, ஆனாலும் அவனது அறிவுக்கு எட்டாததாக அது இருந்தது. ``கபிலரின் மாணவியாய்க் காதலைச் சொல்லித்தர முயலாதே, காதலியாய் உடனிணைந்து கண்டறிய முயற்சி செய்.”

அவன் சொல்வது ‘சரி’தான் என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தாள்.

உதிரனின் ஆர்வம் சற்றே வேகங்கொண்டிருந்தது. ``மனித உடலுக்குள் வண்ணங்கள் சுரப்பதை அறிய வழியுண்டா?’’

``எத்தனையோ வழிகளுண்டு, ஒவ்வொரு உடலுக்குத்தகுந்து அது மாறும், மலரும்.”

உதிரனின் முகத்தில் வியப்பே தெரிந்தது. எப்படி அவனுக்கு விளங்கவைப்பது எனச் சிந்தித்த அங்கவை, சற்றே நெருங்கி உதிரனின் கன்னத்தை இரு கைகளாலும் அள்ளிப்பிடித்தாள். அவளது உள்ளங்கையின் குளுமை உச்சந்தலைக்கு ஏறியது.

சிந்தனையின் வழியே அறிய எவ்வளவு முயன்றாலும் பிடிபடாத காதல், சின்னத் தொடுதலில் எல்லாவற்றையும் அறியச் செய்துவிடுகிறது. அங்கவை,  உதிரனைத் தொடுதல் ஒன்றும் புதிதல்ல; ஆனால், காதலின் ஆழம் காணும் உரையாடலின் நடுவே உதிரனை அள்ளியெடுக்கும் பொழுது அவன் உடலும் அறிவும் ஒன்றாய்க் கிளர்ந்தெழுந்தன. உடல்முழுவதும் பூத்து அடங்கியது உதிரனுக்கு.

கைகளில் ஏந்திய உதிரனின் முகத்தை உற்றுப்பார்த்தபடி அங்கவை சொன்னாள், “காதல் மலரத் தொடங்குங்கணம் உன் கண்களின் நரம்புகளில் பச்சைநிறம் ஓடி மறைகிறது.”

இப்படியொரு விளக்கத்தை எதிர்பார்க்க வில்லை. காதலின் தொடக்க நிறம் பச்சை என்று அதனால்தான் சொன்னாளா என்று  எண்ணியபடி அங்கவையின் கன்னம் ஏந்தத் தன் கைகளை அருகில் கொண்டுசென்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 55

உதிரனின் கன்னத்திலிருந்து கைவிலக்கி, தன்னைநோக்கி வரும் அவனுடைய இரு கைகளையும் இறுகப்பற்றினாள் அங்கவை. உதிரனுக்குப் புரியவில்லை.

பிடித்த கைகளின் முனையில் சிறியதாய் உதடுகுவித்து முத்தங்கொடுத்தாள். இருவருக்குமான நெருக்கத்துக்கிடையில் காற்று புகமுடியாமல் தவித்தது. அதனைவிட அதிகத் தவிப்போடு அவள் சொன்னாள், “காமம் நுழையும் கணம் உனது விரல்களின் அடிநகம் நீலங்கொண்டு கறுக்கிறது.”

மயக்கத்தில் மூழ்கிய உதிரன் காதல் விலக்கி, சட்டெனத் தன் விரல்களின் அடிநகம் பார்க்கத் தோன்றியது. ஆனால், அவளோ அவற்றைத் தனது மார்போடு அணைத்துப் பிடித்தாள். உதிரனின் கண்கள் சுழன்று மூழ்கின.

நாணங்கொள்ளச் செய்யும்படி அவனை உற்றுப்பார்த்த அங்கவை சொன்னாள், “காமம் தழைக்கும் இக்கணம் உனது முகத்தில் மஞ்சள் பூத்துக் கலைகிறது.”

மீண்டும் அவன் தன் தரைக்கு இறங்கினான். அவளது சொல்லுக்கும் செயலுக்கும் நடுவில் உயிர் உழன்றது. காதலை இணைந்து பருகலாம். ஆனால், இணைந்து பயிலக்கூடாது என அவனுக்குத் தோன்றியபொழுது அங்கவை தொடர்ந்தாள், “காமம் பொங்கிப் பூக்கும் கணம்…” சொல்லி நிறுத்தினாள்.

கிறங்கிய உதிரனுக்கு மூச்சு நிற்பதுபோல் இருந்தது. சற்றே உயிர்பெற்று, மயங்கிய குரலில் கேட்டான் “சொல், என்ன நிறம்?”

சற்றே விட்டு விலகி, அவனது கன்னத்தில் ஓர் அடி அடித்துவிட்டுச் சொன்னாள், “பார்க்காததை எப்படியடா சொல்ல முடியும்?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...