அலசல்
Published:Updated:

விரிவடையுமா கோவை விமான நிலையம்?

விரிவடையுமா கோவை விமான நிலையம்?
பிரீமியம் ஸ்டோரி
News
விரிவடையுமா கோவை விமான நிலையம்?

பூஜ்ஜியத்தில் தொடங்கும் 10 ஆண்டு திட்டம்!

‘கோவை சர்வதேச விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ - விமான நிலையச் சாலை இப்படிதான் வரவேற்கும். ஆனால், கோவையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றுக்கும் விமானப் போக்குவரத்துத் தொடர்ச்சியாக இல்லை. வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் சென்னை, பெங்களூரு, கொச்சி செல்ல வேண்டும். ‘சர்வதேச’ என்ற வார்த்தையை மட்டுமே தாங்கிநிற்கிறது விமான நிலையம்.கட்டமைப்பிலும், தரத்திலும் மிகமோசமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில்தான், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட விமான நிலைய விரிவாக்கப் பணி, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து இப்போது தொடங்கியுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர், முக்கியத் தொழில்நகரம் மற்றும் திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற ஏற்றுமதி நகரங்களை இணைக்கும் பெருநகரம் எனப் பல பெருமைகளைக் கொண்டிருந்தாலும், கோவை ஏர்போர்ட் அதன் வளர்ச்சி மற்றும்  தேவைக்கேற்ப விஸ்தரிக்கப்படவில்லை.

பெரிய அளவிலான சர்வதேச விமானங்கள், சரக்கு விமானங்கள் இறங்க வசதியில்லாத காரணத்தால், கோவையிலிருந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு விமானச் சேவைகள் இயக்கப்படவில்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளை அனுப்ப கார்கோ காம்ப்ளக்ஸ் இல்லை. இந்த வசதிகளைச் செய்துதருமாறு பல ஆண்டுகளாக தொழில் துறையினர் கோரிவந்தனர்.

விரிவடையுமா கோவை விமான நிலையம்?

விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு,  627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், தேர்வுசெய்த இடங்களை ஒப்படைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மிகக்குறைவான இழப்பீடு வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடங்கின.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகப் புதிய குழு ஒன்றை அமைத்து, இந்தத் திட்டத்தை மீண்டும் தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக, விமானப் போக்குவரத்துச் செயலாளர் ஆர்.என்.செளபே உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகளுடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

“விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யத் தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக நில உரிமையாளர்களுடன் பேசிவருகிறோம். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், நிலம் கையகப்படுத்தப்படும். இதற்காக, நில நிர்வாக ஆணையர் தலைமையில் விரைவில் குழு ஏற்படுத்தப்படும்” என்றார், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டாலும், இதில் இந்திய விமான நிலைய ஆணையம், மாவட்ட நிர்வாகம்,  நில நிர்வாக ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் நில உரிமையாளர்களும் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பணிகள் முதலிலிருந்து தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்துச் செயலாளர் ஆர்.என்.செளபேவிடம் பேசினோம். “கோவை மிகப்பெரிய ஹேப்பனிங் சிட்டியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம்மிக்க நகரமாகவும் விளங்குகிறது. இங்கு விமான நிலையத்தைச் சர்வதேச தரத்தில் உயர்த்துவது என்பது மிக அவசியம். ஆனால் நிலம் பெறுவதில் மாநில அரசைச் சார்ந்தே நாங்கள் இருக்கிறோம். நிலம் பெற்றுத்தராததால் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன. இது தொடர்பாக மாநில அரசுடன் பேசினோம். நிலம் கையகப்படுத்தலில் உள்ள பிரச்னைகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டன.

விரிவடையுமா கோவை விமான நிலையம்?

விமான நிலைய விரிவாக்கம் செய்வதில் உள்ள சிக்கலுக்கு நிலம் கையகப்படுத்துதல் மட்டுமே முதன்மையான காரணம். இதில் உள்ள சிக்கலைத் தவிர்க்க, கையகப்படுத்த வேண்டிய நிலங்களின் அளவைக் குறைத்திருக்கிறோம். முதலில், 600 ஏக்கர் நிலம் கேட்டிருந்தோம். இப்போது, 350 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் எனச் சொல்லியிருக்கிறோம். இதனால், நிதி ஒதுக்கீட்டில் இருந்துவந்த சிக்கல் தவிர்க்கப்படும். நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என நம்புகிறோம்.

நான்கு மாதங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தால், அதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோவை, இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்கள், உலக அளவிலான முக்கிய நகரங்களோடும் இணைக்கப்படும்” என்றார்.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமெடுத்திருப்பது, தொழில் துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், உரிய இழப்பீடுக் கோரி தொடர் போராட்டங்களை நடத்திவரும் பொதுமக்களின்  கோரிக்கையையும் அரசு கனிவுடன் கவனிக்க வேண்டியது அவசியம்.

- ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்

‘‘விரிவாக்கம் செய்தால் தொழில்துறை விரிவடையும்!’’

மிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அகில இந்தியத் தொழில் சம்மேளன (CII) தமிழகப் பிரிவின் துணைத் தலைவரும், பொன்ப்யூர் நிறுவனத்தின் தலைவருமான எம்.பொன்னுசாமியுடன் பேசினோம்.

விரிவடையுமா கோவை விமான நிலையம்?

‘‘சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாகவே கோரிவருகிறோம். குறிப்பாக, கோவை விமான நிலையத்தை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றோம். கோவை விமான நிலையம் சிறிய அளவில் இருப்பதால், பெரிய அளவிலான சரக்கு விமானங்கள் இறங்க முடிவதில்லை. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் நகரங்களில் உற்பத்தியாகும் ஜவுளிகளை, கோவை விமான நிலையம் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவதில்லை. சென்னை, கொச்சி, பெங்களூருக்குக் கொண்டுசென்றுதான் அனுப்ப வேண்டியிருக்கிறது. இதனால் அதிகச் செலவும், காலதாமதமும் ஏற்படுகின்றன.

கோவை விமான நிலையம் சிறியதாக இருப்பதைக் காரணம்காட்டி, சர்வதேச விமானங்களும் இங்கு வருவதில்லை. இதனால், கோவையிலிருந்து அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ செல்ல வேண்டுமென்றால், சென்னைக்கோ, பெங்களூருவுக்கோதான் போகவேண்டியிருக்கிறது.

கோவை உள்பட அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்தால் மட்டுமே மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் பயன் கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து சொல்லி வந்ததன் விளைவாக, உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையின் செயலாளர் ராஜீவ் நயன் செளபே, இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டியின் தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா உடன், கடந்த ஜூன் மாதமே தமிழக முதல்வரைச் சந்தித்தார். இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அப்போது முடிவானது. கடந்த வாரத்தில் மீண்டும் அவர்கள் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள். ‘விமான நிலையங்களுக்குத் தேவையான நிலங்கள், வருகிற டிசம்பருக்குள் கையகப்படுத்தித் தரப்படும்’ என முதல்வர் உறுதியளித்ததுடன், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து உடனடியாக ஒரு கூட்டம் நடத்தும்படி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டம், கடந்த வாரம் கோவையில் நடந்தது.
 
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 200 ஏக்கரும், சென்னை விமான நிலையத்துக்கு 130 ஏக்கரும் தருவதாக தமிழக அரசு சொல்லியிருக்கிறது. சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையம் ‘க்ரீன் ஃபீல்டு’ விமான நிலையமாக அமையவிருக்கிறது.

இன்னும் சில மாதங்களுக்குள் விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்குத் தேவையான நிலம் கிடைத்துவிட்டால், விரிவாக்கம் செய்யும் வேலையை இரண்டே ஆண்டுகளில் ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனம் செய்து முடித்துவிடும். அதற்குத் தேவையான நிதி வசதி, அந்த நிறுவனத்தில் இருக்கிறது.

எனவே, இன்னும் இரண்டரை ஆண்டுகளில் கோவையில் சர்வதேசத் தரம் வாய்ந்த விமான நிலையம் உருவாவதுடன், தலைசிறந்த சரக்கு விமானப் போக்குவரத்து நிலையமாகவும் அது உருவாகும் என்று முழுமையாக நம்புகிறோம்’’ என்றார்.

- ஏ.ஆர்.குமார்