அலசல்
Published:Updated:

வணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்!

வணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்!

பிளானை மாற்றிய பின்னணி

‘1. உழைக்காமல் சேர்ந்த பணம்.
2. மனசாட்சியில்லாத மகிழ்ச்சி.
3. நன்னடத்தை இல்லாத அறிவு.
4. நேர்மையில்லாத வணிகம்.
5. மனிதாபிமானம் இல்லாத அறிவியல்.
6. தியாகம் இல்லாத மதம்.
7. கொள்கை இல்லாத அரசியல்

- உலகில் வன்முறையை ஏற்படுத்தும் ஏழு பெருந் தவறுகள்’ என்கிறார் மகாத்மா காந்தி.

காந்தி பெயரால் அழைக்கப்படும் கோவை காந்திபுரம் ஏரியாவில் திறக்கப்பட்ட புதிய பாலம், ஊழலின் ஊற்றுக் கண்! ‘‘மக்களைவிட வணிக நிறுவனங்கள்மீதுதான் ஆட்சியாளர்கள் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள்’’ எனக் கொந்தளிக்கிறது கோவை.

வணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்!

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்ட மேம்பாலத்தால் எந்தப் பயனும் இல்லை. வணிக நிறுவனங்கள் இடிபடாமலிருக்க, மேம்பாலத்தின் பிளானையே மாற்றிவிட்டார்கள். இதில் பெரும் தொகை கைமாறியிருக்கிறது’’ எனச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

‘கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும்’ என 2010-ல் அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இப்போது, 195 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. முதல் அடுக்குப் பாலத்தின் பணிகள் நிறைவடைந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-ம் தேதி திறந்துவைத்தார். கோவை பார்க் கேட்டிலிருந்து சத்தியமங்கலம் சாலையில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரையில் ஒரு மேம்பாலம்; 100 அடி சாலையிலிருந்து ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல் வரைக்கும் ஒரு மேம்பாலம் என இரண்டடுக்குப் பாலம் கட்டப்படுகிறது. இதில் சத்தி சாலை பாலத்தின் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ளது. இப்போது, 100 அடி சாலை மேம்பாலப் பணி நடந்துவருகிறது.

இந்தப் பாலத்தின் பிரச்னைகள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், வழக்கறிஞருமான லோகநாதன். “காந்திபுரத்தில் மூன்று பஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு பஸ் நிலையத்தைக்கூட இந்த மேம்பாலம் இணைக்கவில்லை. 21.3.2012 அன்று ஒரு பிளானை ஓகே செய்து, 99 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளனர். அதற்கான திட்டம், தி.மு.க ஆட்சியில் போடப்பட்டது. சத்தி சாலை மேம்பாலத்தில், சத்திய மங்கலத்திலிருந்து கோவை வரும் வாகனங்கள் பெரியார் சிலை சாலையில் இறங்கி, காந்திபுரம் பஸ் நிலையம் செல்ல ஏதுவாக ஓர் இறங்கு சாலை அமைந்துள்ளது. அதேபோல, 100 அடி சாலை மேம்பாலம், சத்தி சாலை மேம்பாலத்துக்குக் கீழே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிளான்படி பாலம் கட்டியிருந்தால், பிரச்னையே இல்லை. ஆனால், புதிய பிளான் வடிவமைத்து, இறங்கு சாலையைத் துண்டித்துவிட்டார்கள். 100 அடி சாலை மேம்பாலத்தை, சத்தி சாலை மேம்பாலத்துக்கு மேலே உயர்த்திவிட்டார்கள். இதன் உயரம் தரைமட்டத்திலிருந்து சுமார் 110 அடி இருக்கும். இவ்வளவு உயரத்தில் அமைக்கப்படும் பாலத்தில் பயணிப்பது அச்சுறுத்தல் மட்டுமல்ல ஆபத்தும்கூட. இந்தப் பாலங்களால் மக்களுக்குப் பயனுமில்லை. 

வணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்!

100 அடி சாலை மார்க்கமாக காந்திபுரம் வரவேண்டியவர்களோ, கணபதியிலிருந்து காந்திபுரம் வரவேண்டிய வர்களோ, இந்தப் பாலத்தை சீந்தக்கூட மாட்டார்கள். போக்கு வரத்து நெரிசல் அதிகரிக்குமே ஒழிய, குறையாது. பழைய பிளானில் இருக்கும் சுரங்கப்பாதையையும் இவர்கள் கட்டவில்லை. பிளானை மாற்றிய பின்னணியில் பெருந்தொகை கைமாறியிருக்க வாய்ப்புள்ளது. பல வணிக நிறுவனங்கள் இடிபடாமல் இருக்கவே பிளானை மாற்றியுள்ளனர்.

22.01.2014 அன்று 125 கோடி ரூபாய்க்கு ஒரு டெண்டர் விடப்பட்டு, அது கேன்சல் ஆகியுள்ளது. பிறகு, 11.07.2014 அன்று 146 கோடி ரூபாய்க்கு டெண்டர் இறுதியாகி பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் ‘195 கோடியில் கட்டப்பட்ட பாலம்’ என விளம்பரப்படுத்துவது ஏன்? மீதத்தொகை எங்கே? பச்சை நிற பெயின்ட் அடிக்க மட்டுமே 1.87 கோடி ரூபாய் செலவுசெய்துள்ளனர். டெண்டர் விடப்பட்ட பிறகு பிளானை மாற்றக்கூடாது” என்றார்.

தி.மு.க எம்.எல்.ஏ-வான கார்த்திக், “கலைஞர் ஆட்சியில் போட்ட திட்டம் என்பதால் அதை மாற்றியுள்ளனர். இதற்கு, அமைச்சர் வேலுமணிதான் பொறுப்பு” என்றார். 

வணிக நிறுவனங்களைக் காப்பாற்ற பயனில்லாத காந்திபுரம் பாலம்!

நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷிடம் பேசினோம். “பிளான்கள் மாறத்தான் செய்யும். இது பிசினஸ் ஏரியா. அதனால், சிட்டியைத் தொந்தரவு பண்ணாத வகையில், பாலத்தை அமைத்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், சுரங்கப்பாதை அமைக்கப்போவதாக மாநகராட்சி சொன்னதால், அதை கைவிட்டுவிட்டோம். அதற்கான தொகையில், இரண்டாவது அடுக்குப் பாலத்தின் நீளத்தைக் கூட்டியிருக்கிறோம். பெயின்ட் அடிக்க இவ்வளவு தொகை செலவாகியுள்ளதா எனத் தெரியவில்லை” என்றார் நிதானமாக.

- எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்