அலசல்
Published:Updated:

ஜூ.வி. நூலகம்: கங்கை தனி நதி அல்ல!

ஜூ.வி. நூலகம்:  கங்கை  தனி நதி அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூ.வி. நூலகம்: கங்கை தனி நதி அல்ல!

ஜூ.வி. நூலகம்: கங்கை தனி நதி அல்ல!

‘‘மருந்துகளை மருத்துவர்தான் கொடுக்க முடியும். ஆனால், சிறிய நோய்களுக்கு நம் வாழ்க்கையில் சோதித்துப் பார்த்த சிறிய மருந்துகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. இது என் கைமருந்து” - இந்து மதம் குறித்த தனது இத்தனை ஆண்டுகாலப் புரிதல் பற்றிய சிறு குறிப்புகளாக எழுதப்பட்ட பதில்களின் தொகுப்பான இந்தப் புத்தகத்துக்கு, ஜெயமோகன் தந்துள்ள முன்னோட்டம் இது.

ஜெயமோகனின் தேடுதல் எல்லைகளற்றது. எல்லா எல்லைகளையும் தாண்டியது. புனைவிலும்  அ-புனைவிலும் அவருக்கான பெரும் வாசகப் பரப்பை உருவாக்க அவரது தேடுதல்கள்தான் காரணம். மதம், அதுவும் குறிப்பாக இந்து மதம் குறித்த அவரது சிந்தனைத் தேடுதல்கள்தான் இந்தப் புத்தகம். இந்து மதத்தைத் ‘தொகை மதம்’ என்கிறார். கங்கை தனி நதி அல்ல, நதித் தொகை. அதுபோல, இந்து மதமும் சிந்தனைத் தொகை கொண்டது. மதம் என்பது தனி நிறுவனமாக இல்லை, இந்தியப் பண்பாடுதான் இந்து மதமென்னும் வடிவில் இங்கு உள்ளது என்கிறார். இந்து மெய்ஞானத்தை உருவ வழிபாட்டுக்குள் சுருக்க முடியாது என்பதும் அவரது நிலைப்பாடு. இதற்கு அவர் தேர்வு செய்த வார்த்தைதான் சிக்கலானது. அது, ‘கலாச்சார இந்து’.

ஜூ.வி. நூலகம்:  கங்கை  தனி நதி அல்ல!

இந்தச் சொல்லை முதன்முதலில் நேரு பயன்படுத்தினார் என்றும், க.நா.சு சொல்லிக்கொண்டார் என்றும், ‘நான் நாத்திகன், ஆனால் இந்து’ என்று ஜெயகாந்தன் சொன்னதையும் சொல்லி, ‘கலாச்சார இந்து’ என்ற வார்த்தை நிறுவப்படுகிறது. இந்தியப் பண்பாடுதான் இந்து மதம் என்னும் வடிவில் இருக்கிறது என்றால், இந்து மதத்துக்கு வெளியில் இருப்பவர்கள் இந்தியப் பண்பாடு கொண்டவர்கள் இல்லையா என்ற சிக்கலான கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் ஜெயமோகன் விடை சொல்லவில்லை. இது இந்துக்களுக்கு மட்டுமான நாடு என்று சொல்லிக் கிளம்பிவருபவர்கள் பற்றிய விமர்சனமும் இதில் இல்லை. இந்திய தேசியம் என்ற சொல்லுக்கு மாற்றாக லாகவமாகச் சொல்லப்படும் கலாசார தேசியம் குறித்தும் ஜெயமோகனின் பதில் இதில் இல்லை.

இங்குள்ள மார்க்ஸியர்கள், திராவிட இயக்கங்களைவிட மோசமாகப் பேசுகிறார்கள்; பிராமணக் குடும்பங்கள் தவிர மற்ற குடும்பங்களில் குடும்ப வன்முறை அதிகமாக இருக்கிறது; தொ.பரமசிவம் எளிய காழ்ப்புகள்கொண்ட அப்பாவி; சமஸ்கிருதத்துடன் உரையாடியதால்தான் தமிழ் இன்றைய வடிவை அடைந்தது; ஆங்கிலம் இல்லையேல் பாரதியும், புதுமைப்பித்தனும் இல்லை; சாதித் தீண்டாமை இந்து மதத்தால் உருவாக்கப்பட்டது அல்ல என்பன போன்ற கண்டுபிடிப்புகள் இந்தப் புத்தகத்தில் ஏராளமாக உள்ளன.

அவரின் குருநாதரான நித்ய சைதன்ய யதி சொன்னார்: மெய்யியலில் சிரிக்காமல் சொல்லப்படும் அனைத்தும் பொய்யே!

நற்றிணை பதிப்பகம்,
6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை.5

விலை: ரூ 200

- புத்தகன்