அலசல்
Published:Updated:

“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது!” - சொல்கிறார் விக்கிரமராஜா

“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது!” - சொல்கிறார் விக்கிரமராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது!” - சொல்கிறார் விக்கிரமராஜா

“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது!” - சொல்கிறார் விக்கிரமராஜா

‘கோடி ரூபாய் ஊழல்... பெண் சகவாசம்... அடியாள் மிரட்டல்... விக்கிரமராஜாவுக்கு எதிராக வரிசை கட்டும் புகார்கள்’ என்ற தலைப்பில், 22-10-17 தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவரான விக்கிரமராஜா ‘நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி’யில் தாளாளராக இருந்தபோது பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக எழுந்த புகார் குறித்து எழுதி, அவரின் கருத்தையும் வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் விக்கிரமராஜா நம்மைத் தொடர்புகொண்டார்.

 ‘‘என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. 1,300 பேர் படித்துவந்த பள்ளியை, 4,500 பேர் படிக்கும் பள்ளியாக மாற்றினேன். புதிய கட்டடங்கள் கட்டினேன். புதிய சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்க, மாநில அரசிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்றும், ஆனால், அனுமதி வாங்கிய வகையில் பல லட்சங்கள் செலவானதாக நான் கணக்குக் காட்டியிருப்பதாகவும் புகார் கூறியிருக்கிறார்கள். அது தவறு. சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்குவதற்கான ‘தடையில்லா சான்றிதழ்’ இப்போதும் மாநில அரசிடம்தான் பெற வேண்டும். சங்க விதிகளுக்கு மாறாக நான் ரொக்கமாக வரவு - செலவு வைத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள். பழைமை வாய்ந்த நெல்லை நாடார் மகமை பரிபாலன சங்க விதிப்படி, 1000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக செலவு செய்யக்கூடாதுதான். ஆனால், இன்றைய விலைவாசியில், இந்த விதி எந்தளவுக்குப் பொருந்தும்?

“என் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது!” - சொல்கிறார் விக்கிரமராஜா

உதாரணத்துக்கு, கட்டுமானப் பொருள்கள் வாங்கும்போது, ரொக்கமாகக் கொடுத்தால் வியாபாரிகள் விலையைக் குறைக்கிறார்கள். எனவே, செலவைக் குறைக்க சில வரவு செலவுகளை ரொக்கமாக வைத்துக்கொண்டோம். அவற்றுக்கு முறையான ரசீதுகள் உள்ளன. மண் லோடு அடித்த லாரிகளின் எண்கள் போலியானவை என்கிறார்கள். மணல் வாங்குமிடத்தில் ஒரு பதிவெண் கொண்ட லாரிக்கு, குறிப்பிட்ட அளவில்தான் மணல் கொடுப்பார்கள். இந்த நடைமுறைப் பிரச்னையைச் சமாளிக்க, லாரி உரிமையாளர்கள் பதிவெண்களை மாற்றிக் கொடுத்திருக்கலாம்.

 தாளாளராக இருந்தாலும்கூட, நானே சுயமாக எந்தச் செலவையும் செய்துவிட முடியாது. சங்கத் தலைவர் பத்மநாபன், செயலாளர் சந்திரன் ஜெயபால் ஆகியோரும் கையெழுத்திட்டுத்தான் பணப் பரிமாற்றங்கள் செய்யமுடியும். அப்படியிருக்க, நான் எப்படி கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்க முடியும்? பள்ளியின் வரவு செலவுக் கணக்கை மாதம் ஒருமுறை கல்விக் கமிட்டியில் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கித்தான் செயல்பட்டுள்ளோம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்துக் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட்டு, பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பெண் சகவாசம் என என்மீது அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ளனர். பள்ளியின் அலுவலகத்திலிருந்து பார்த்தால், மெயின் கேட் தெரியும் அளவுக்கு அனைத்துமே கண்ணாடி மயமாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது யாராவது தவறு செய்ய முடியுமா? முறைகேடாக ட்ரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து, தனி வங்கிக் கணக்கு பராமரிக்க வேண்டும் என அவர்கள்தான் முயன்றனர். ‘தாளாளர் ஒப்புதல் இல்லாமல், தனி வங்கிக் கணக்கில் நாங்கள் பரிவர்த்தனை செய்ய முடியாது’ எனப் பள்ளியின் அலுவலக நிர்வாகிகள் மறுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்களை என்னோடு இணைத்துப் பேசி அவதூறு கிளப்புகிறார்கள்’’ என்றார், விக்கிரமராஜா.

- த.கதிரவன்