
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
கபிலர் மயக்கம் தெளிந்து எழுந்தபொழுது உதிரன் குடிலில் இல்லை. எப்பொழுதும் உடனிருக்கும் உதிரன் எங்கே போனான் என்று சிந்தித்தபடியே புறப்பட ஆயத்தமானார். பொழுது நண்பகலைக் கடந்திருந்தது. பாரியின் மாளிகையில் இருந்துதான் அவருக்கு உணவு வருகிறது. செய்திசொல்லி அனுப்பும் உதிரன் எங்கே போனான் என்பது தெரியாததால் அவ்வழி வந்த வீரனிடம் சொல்லி அனுப்பினார். சிறிதுநேரத்தில் உணவு வந்தது. உண்டு முடித்தார். உதிரன் இதுவரை தன்னிடம் சொல்லாமல் போனதில்லையே என எண்ணியபடியே கூத்துக்களம் நோக்கிப் புறப்பட்டார்.

கூத்துக்களத்தின் பாட்டாப்பிறையில் எந்நேரமும் பெரியவர்கள் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருப்பார்கள். கதையென்றால் அவை வெறுங்கதைகள் அல்ல; எல்லாம் கண்டுபிடிப்புகள். மின்னல் ஒளியில் மலரும் மலர் ஒன்று உள்ளது என்பதை அவர்கள் கபிலரிடம் சொன்னபொழுது அவரால் அதனைக் கற்பனை செய்யவே முடியவில்லை. அவர்கள் சொன்னார்கள், “மின்னல் ஒளிக்குத் தாழம்பூ மலரும்; எப்பொழுதும் அடிவயிற்றில் தொங்கும் குட்டியைக் கைவிடாத குரங்குகள் இடியோசை கேட்ட கணம் கைவிடும்” என்று.
குறிஞ்சியின் மக்கள் இயற்கையை அறிந்துள்ளவிதம் கணந்தோறும் வியப்பை உருவாக்கக் கூடியது. அவர்கள் புல்பூண்டு, யானை, புலி, பாறை, வேர் என எதைப்பற்றிப் பேசினாலும் எல்லாம் தலைமுறை தலைமுறையாய்ச் சேகரித்த அறிவின் சேர்மானமாய் இருக்கிறதே என வியந்தபடி உட்கார்ந்திருந்தார் கபிலர். நேற்றைய மயக்கமும் நான்கு நாள் கிறக்கமும் தெளியும்முன் பாட்டாப்பிறை பெருசுகள் மீண்டும் கிறக்கி மயக்கினர்.
“எங்கே தேக்கனைக் காணவில்லை?” எனக் கேட்டார் கபிலர்.

“பாழிநகர் வரை போயுள்ளான்; இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவான்” என்று சொன்னார் தேக்கனின் வயதொத்த பெரியவர். உடனிருந்த இன்னொருவர் சொன்னார், “வழக்கமாக மேல்மாடத்தில்தானே சந்திப்பீர்கள். நீங்கள் அங்கே போங்கள். அவன் வந்ததும் அனுப்பிவைக்கிறோம்.”
பதிலைக்கேட்ட கபிலர் மறுத்துத் தலையாட்டியபடியே கூறினார், “இல்லை, அங்கே போனால் குவளையைக் கையிலெடுக் காமல் பேச முடிவதில்லை. கையிலெடுத்தால் என்ன பேசினோம் என்பது நினைவில் தங்குவதில்லை. எனவே, அவரிடம் கேட்க வேண்டியதை இங்கு கேட்டுவிட்டுத்தான் மேல்மாடம் போவது என்ற முடிவோடு வந்துள்ளேன்” என்றார்.
பெரியவர்களுக்கு அவர் சொல்வது சரியென்றுதான் பட்டது. “சரி அவரிடம் என்ன கேட்கப்போகிறீர்கள்?”
“செம்மாஞ்சேரலுடன் நடந்த போரின் முடிவு மட்டுந்தான் எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போர் மூன்று நாள்கள் நடந்ததாகச் சொன்னார். முதலிரண்டு நாள்கள் என்ன நடந்தது என்று தெரியவேண்டும்.”
“அது தேக்கனுக்கே தெரியாதே. பின்னெப்படி உங்களுக்குச் சொல்லுவான்?” என்றார் பெரியவர்.
அருகில் இருந்தவர் சொன்னார், “அதோ வந்துகொண்டிருக்கிறாரே வாரிக்கையன். அவர்தான் அந்தப் போரை, பாரியோடு சேர்ந்து வழிநடத்தியவர். அவரிடம் கேளுங்கள் சொல்வார்” என்றார்.
சிறுதொலைவில் நடந்து வந்துகொண்டிருந்தார் வாரிக்கையன். தேக்கனைவிட வயதானவர். ஆனால், உடலமைப்பைவைத்து வயதினைக் கண்டறிந்துவிட முடிவதில்லை. கபிலர் பறம்புக்கு வந்த புதிதில் அது பெருங்குழப்பத்தை உருவாக்கியது. புரிந்துகொள்வது கடினமாகவும் இருந்தது. வேட்டூர் பழையனைவிட வயதில் மூத்தவர் இவர் என்று அறியவந்தபொழுது கபிலரால் நம்பமுடியவில்லை. சமதளமனிதர் களுக்கும் மலைமனிதர்களுக்கும் வயதானதைக் காட்டும் குறியீடாக இருப்பது நரைமுடி மட்டுமே. அதனைவைத்துதான் பொதுவான தன்மையோடு வயது முதிர்ந்தவர் எனத் துணியலாம். ஆனால், வயதின் காரணமாகப் பல் உதிர்ந்து பொக்கைவாய் ஆவதென்பது மலைமக்களிடம் இல்லாத ஒன்றாய் உள்ளது. கிழத்தன்மையும் பல்லுதிர்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக சமதளத்தில் பார்க்கப்படுகின்றன. ஆனால், இங்கு அப்படியல்ல.
சிறுவயதிலிருந்தே காய்கனிகளையும் மரப்பட்டைகளையும் கடித்திழுப்பது அன்றாட நடவடிக்கையாக இருப்பதால் முன்பற்கள் மிகக்கூர்மையாகவும் பலருக்கு ஒழுங்கற்ற தோற்றத்துடனும் இருக்கின்றன என்பது மட்டுமே கபிலரின் மனப்பதிவாக இருந்தது. ஆனால், பெரும்பாலோருக்குப் பற்கள் உதிர்வதில்லை. அப்படியே உதிர்ந்தாலும் ஒன்றிரண்டுதான் உதிர்கின்றனவே தவிர அத்தனை பற்களும் இல்லாத பொக்கைவாய் மனிதர்களைப் பறம்பில் இன்றுவரை கண்டதில்லை.
வாரிக்கையனை முதலில் பார்த்தபொழுது, அவர் தேக்கனைவிடவும் வேட்டூர் பழையனை விடவும் வயதில் மூத்தவர் என்பதைக் கபிலரால் நம்ப முடியாததற்குக் காரணம், தென்னங்காயைப் பல்லால் கடித்திழுத்தபடியே அவர் கபிலரோடு பேசிக்கொண்டிருந்தார் என்பதுதான்.
வாரிக்கையன் தளர்ந்த நடையில் மெதுவாக வந்து பாட்டாப்பிறையில் உட்கார்ந்தார். சின்னதாய் பெருமூச்சு வாங்கியது. சிறிதுநேரங்கழித்துப் பேச்சைத் தொடங்கிய கபிலர், செம்மாஞ்சேரலுடன் நடந்த போரைப்பற்றிய விவரத்தைக் கேட்டார்.
வாரிக்கையன் கால்மடக்கி உட்கார்ந்தார். “அது போரே அல்ல” என்றார்.
“மூன்றுநாள்கள் போர் நடந்ததாகத்தானே சொன்னார்கள்” என்றார் கபிலர்.
“நாம் போர் நடத்தியிருந்தால் மூன்று பொழுதுக்குள் அது முடிந்திருக்க வேண்டும். பறம்பின் தன்மை தெரியாமல் செம்மாஞ்சேரல் மொத்தப்படையையும் கொண்டுவந்து கழுவாரிக்காட்டிலே நிறுத்திவிட்டான். நம்மில் ஒரு வீரன்கூட அவனது கண்ணிற்படாமல் அவனது மொத்தப்படையையும் அழித்திருக்க முடியும். அவ்விட அமைப்பு அப்படி” என்றார்.
“பின்னர் ஏன் அழிக்கவில்லை? போர் ஏன் மூன்றுநாள்கள் நீடித்தது?”

“அப்பொழுதுதான் நாங்கள் முதன்முறையாக, திறல்கொண்ட குதிரைப்படையைக் கண்ணிற் பார்த்தோம்.”
யவனர்களுக்கு மிளகினை ஏற்றுமதி செய்து அதற்குக் கைம்மாறாக வலிமைமிகு குதிரைகளை வாங்கியது சேரர்கள்தாம். அதன் பின்தான் மற்ற இரு பேரரசுகளும் குதிரைகளை இறக்குமதி செய்யத் தொடங்கின என்பது கபிலருக்குத் தெரியும். ஆனால், பறம்பின் மக்கள் முதன்முறையாக செம்மாஞ்சேரனுடனான போரின்பொழுதுதான் குதிரைப்படையைப் பார்த்துள்ளனர் என்பது புதிய செய்தியாக இருந்தது.
குதிரைப்படையைப் பார்த்ததும் பாரி தாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டான். முன்களத்தில் நின்ற எனக்கு அவன் முடிவினை மாற்றியது தெரியாது. அவனிடமிருந்து குறிப்புச்சொல் எதுவும் எனக்கு வரவில்லை. நான் பாறையின் உச்சிமறைப்புகளில் சிறுபடையோடு நின்றுகொண்டிருந்தேன். பாரியிடமிருந்து எவ்வித ஓசையும் கேட்கவில்லை. செம்மாஞ்சேரலின் படை எங்களைக் கடந்து முன்னுக்குப் போய்க்கொண்டிருந்தது. நாங்கள் பாறையின் மேல் மறைப்புகளில் நின்றிருந்தோம்.
பாரி மொத்தப்படையையும் பின்னுக்கு நகர்த்தி உள்காடுகளுக்குள் போய்விட்டான். செம்மாஞ்சேரலும் தொடர்ந்து போய் க்கொண்டிருந்தான். அவனது குதிரைப்படை மிகவலிமையானது, எனவேதான் அவன் துணிந்து காடுகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தான்.
“குதிரைகள் ஒன்றுக்குக்கூட சேதாரம் ஆகக்கூடாது, அனைத்தும் பறம்புக்கு வேண்டும்” என்று கூறிவிட்டான் பாரி. திட்டத்தை அதற்குத் தகுந்தாற்போல் மற்றவர்கள் மாற்றிவிட்டார்கள். பாரி ஏன் படையைப் பின்னால் நகர்த்திப் போகிறான் என்று புரியாத குழப்பத்தில் நான் இருந்தேன்.
கழுவாரிக்காடு இப்புதிய திட்டத்துக்கு ஏற்ற இடமல்ல. குதிரையின் மீதுள்ள வீரர்களைத் தாக்கிக் குதிரையைக் கைப்பற்றுவதற்குப் பொருத்தமான இடம், இடப்புறம் இருந்த சருகுமலைக் குன்றுதான். எனவே செம்மாஞ்சேரலின் படையை அப்பக்கம் வரவைக்க வேண்டும் எனப் பாரி சிந்தித்துள்ளான்.
இது எதுவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பாறையின் உச்சி மறைப்பிலே காத்திருந்தோம். திடீரெனக் கூவல்குடியினரின் ஓசை கேட்கத் தொடங்கியது. அது பின்புறம் ஓடுவதற்கான குறிப்புச்சொல்லும் ஓசை. இந்த ஓசை ஏன் கேட்கிறது என்று சிறு தயக்கம் ஏற்பட்டது. ஆனால், போர்க்களத்தில் தயங்குவதற்கெல்லாம் இடமில்லை. சரியென, பாறையின் உச்சியிலிருந்து கீழிறங்கிப் பின்புறம் செல்லத் தொடங்கியபொழுதுதான் செம்மாஞ்சேரலின் வீரர்கள் எங்களைப் பார்த்தனர்.
நாங்கள் பின்புறமாகப் போவது தெரிந்ததும் குதிரைப்படையின் ஒரு பிரிவினை எங்களை நோக்கி ஏவினான் செம்மாஞ்சேரல். குதிரைகள் பாய்ந்து வந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது குதிரை ஓட்டம் என்றால் என்னவென்று. நாங்கள் உயிர்பிழைப்பதே பெரும்பாடாகி விட்டது. எப்பக்கம் திரும்பி ஓடினாலும் பாய்ந்து வந்துகொண்டிருந்தனர் சேர வீரர்கள். ஆளுயர ஈட்டியோடு நான்குகால் பாய்ச்சலில் வரும் வீரனிடம் எவ்வளவு நேரம் ஓடித்தப்பிக்க? பாறையின் மேல் இருந்திருந்தால் அவர்கள் அனைவரையும் ஒருபொழுதில் அழித்திருப்பேன். ஆனால், தந்தரையில் என்ன செய்யமுடியும்?
என்னிடமிருந்தவர்கள் மிகக்குறைந்த வீரர்களே. விரட்டிவந்தவர்கள் நான்குமடங்கு அதிக வீரர்கள். நாங்கள் யாரும் தப்பிப்பிழைக்கப் போவதில்லை என்றுதான் தோன்றியது. பாறையின் உச்சியில் பாதுகாப்பாய்த்தானே இருந்தோம். ஏன் கீழே இறங்கி ஓடவிட்டான் பாரி என்ற குழப்பம் வேறு மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. குதிரை வீரர்கள் மிக அருகில் வந்துவிட்டார்கள்.
அப்பொழுதுதான் சருகுமலையின் இடப்புறப் பிளவிலிருந்து கூவல்குடியினரின் குறிப்புச்சொல் ஓசை கேட்டது. அப்பக்கம் வரச்சொல்வது அறிந்து அதனை நோக்கி முடிந்தவரை வேகங்கொண்டு ஓடினோம்.
பிளவினை உயிரோடு தாண்டமுடியும் என்ற நம்பிக்கை அடுத்தடுத்த அடியில் குறைந்துகொண்டே வந்தது.
எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் குதிரைகள் வந்துகொண்டிருந்தன. அவை அருகில் வந்துவிட்டதை உணர்ந்தபொழுது நான் உன்னித் தவ்வினேன். அவை என்னைக் கடந்து தாவிப்பாய்ந்தன. கணநேரம் எனக்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரங்கழித்துதான் புரிந்தது, பாய்ந்து செல்லும் குதிரைகளின் மீது வீரர்கள் யாருமில்லை.

கடவின் இருபுறமிருந்தும் பறம்புவீரர்கள் குதிரையின் மீது அமர்ந்திருந்த எதிரிகளை வீழ்த்தி முடித்தனர். சிறிய காயம்கூட இன்றி குதிரைகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. இரண்டுநாள்களும் இப்படி வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்திப் பெரும்பகுதிக் குதிரைகளைக் கைப்பற்றினோம்.
இனி குதிரைகளைக் கைப்பற்ற முடியாது என்ற நிலையில்தான் தாக்குதல் போரினை நடத்தினான் பாரி. மூன்றாம் நாள் உச்சிப்பொழுதில் தொடங்கிய போர் மாலைக்குள் முடிவுக்கு வந்தது” என்றார் வாரிக்கையன்.
இத்தனை குதிரைகள் பறம்பில் இருப்பது எப்படி என்பது பறம்புக்கு வந்த நாளிலிருந்து கபிலரின் மனதிலிருந்த கேள்விதான். எதிர்பாராத நேரத்தில் விடை கிடைத்தது. வாரிக்கையன் செம்மாஞ்சேரலுடனான போரினைச் சொல்லி முடித்ததும் அருகிருந்த பெரியவர், கைப்பற்றிய குதிரைகளைக் காட்டின்தன்மைக்கு ஏற்ப எப்படியெல்லாம் பயிற்றுவித்தோம் என்பதையும், இத்தனை ஆண்டுகளில் குதிரைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததற்கான காரணத்தையும் விரிவாக விளக்கினார்.
எதிர்பாராத பல செய்திகள் கபிலருக்குக் கிடைத்தன. அவர் வாரிக்கையன் சொல்வதை முழுமையாகக் கேட்டு முடித்தார். நடந்ததைச் சொல்லி முடித்தபின் சிறிதுநேரத்தில் புதிய கேள்வி ஒன்று மேலெழுந்து வந்தது. “தேக்கன் ஏன் அப்போரில் கலந்துகொள்ளவில்லை?”
யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. கபிலர் போரை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்கிறார் என்றுதான் விளக்கமாகக் கூறினார்கள். ஆனால், சொல்லப்பட்ட பதிலுக்குள்ளிருந்து தாங்கள் சந்திக்க விரும்பாத ஒரு கேள்வி மேலெழும் என்று யாரும் நினைக்கவில்லை.
அனைவரும் சற்றே அமைதியாயினர். கபிலருக்குக் காரணம் புரியவில்லை. வாரிக்கையன் சொல்லட்டும் என்று மற்றவர்கள் காத்திருக்கிறார்களோ என்றுதான் முதலில் நினைத்தார். ஆனால், வாரிக்கையன் எதுவும் சொல்வதுபோல் இல்லை. அமைதியே நீடித்தது.
``உங்களின் வலதுகால் நடுவிரல் பிறக்கும்போதே இப்படித்தான் சிறுத்து மடங்கி இருந்ததா?” எனக் கேட்டார் எதிரில் இருந்த பெரியவர்.
அனைவரும் இந்த உண்மையைப் பகிர்ந்துகொள்ள மறுக்கின்றனர். அதனாலேயே வேறு ஒன்றைப்பற்றிப் பேச விருப்பப்பட்டு எனது விரலைப் பற்றுகின்றனர் எனக் கபிலருக்குத் தெரிந்தது. “விரலைப்பற்றிப் பின்னர் பேசுவோம், தேக்கன் ஏன் போரிலே ஈடுபடவில்லை?” என மீண்டும் கேட்டார்.
விரல்பற்றி விளக்கங்கேட்ட பெரியவர்தான் சொன்னார், “பூண்டுப்பானம் கிடைத்து ஊரே மகிழ்ந்திருக்கும்பொழுது அதனை நினைவுபடுத்த வேண்டாமே என்றுதான்…” சொல்லி வார்த்தையை முடிக்காமல் இழுத்தார்.
எல்லோர் மனதையும் கவலைகொள்ளச் செய்யும் கேள்வியாக இது இருக்கும் எனக் கபிலர் எதிர்பார்க்கவில்லை. அப்படியென்றால் வேண்டாம் என்று அவர் முடிவுக்குப் போகும்பொழுது வாரிக்கையன் தொடங்கினார், “காட்டை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது.”
இவ்விடம் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை கபிலர்.
“இந்த உண்மை நமக்குத்தெரியும். ஆனாலும், அவ்வப்போது இயற்கை நமக்குத் தாங்கமுடியாத துயரத்தைக் கொடுத்து இவ்வுண்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது” என்றார் வாரிக்கையன்.
கபிலர் சற்றே அதிர்ந்தபடி அவர் சொல்வதைக் கேட்டார். “தேக்கனின் மூன்று மகன்களும் உயிரோடு இருந்தனர்” என்று தொடங்கினார் வாரிக்கையன். தேக்கனுக்கு மகன்கள் இருந்ததையே கேள்விப்பட்டிராத கபிலருக்கு, வாரிக்கையன் கூறிய சொற்கள் நெஞ்சில் யானை மிதித்ததைப்போல் இருந்தது.
“மூத்தவன் இளவயதுக்காரன். மற்ற இருவரும் சிறுவர்கள். வழக்கம்போல் சிறுவர்கள் எவ்வியூரைச் சுற்றி எங்கும் விளையாடிக்கொண்டு திரிவார்கள். விளையாட்டில் வழிமாறிச் சென்றார்களா அல்லது தெரிந்தே சற்று உள்ளே போய் விளையாடுவோம் என்று போனார்களா என்பது விளங்கவில்லை.
சிறுவர்கள் இருவரும் அடுத்த குன்றைக் கடந்து கீழ்த்திசையில் இறங்கியிருக்கிறார்கள். தாகமெடுத்திருக்கிறது. நீரோடையில் நீர் அருந்திவிட்டு, கரையேறிச் சிறுதொலைவு போயிருக்கிறார்கள். நடுத்தரமான மரம் ஒன்றின் கீழ் இளைப்பாற அமர்ந்திருக்கிறார்கள்.
பொழுது மாலையைக் கடந்தும் அவர்கள் ஊர் திரும்பவில்லை. நேரமாக ஆக எங்களுக்கு ஐயம் கூடத் தொடங்கியது. இரவு, பந்தமேந்தி ஆளுக்கொரு புறம் தேடத் தொடங்கினோம். பூச்சிகள், விலங்குகள், பறவைகள், நாகங்கள் என எத்தனையோ வகையில் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம். ஆனாலும், இருவர் சேர்ந்து போனதால் எப்படியும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

இரவு முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. மறுநாள் காலை மீண்டும் பல குழுக்களாகப் பிரிந்து காடுகளுக்குள் போனோம். பொழுதுசொல்லிப் புறப்பட்டுப் போனோம். தேக்கன் ஒரு குழுவில் போனான். நான் ஒரு குழுவில் போனேன். பாரி ஒரு பக்கம் போனான். முடியன் ஒரு குழுவில் போனான். மறுநாள் நள்ளிரவு சொல்லிய பொழுதுக்கு எல்லாக்குழுக்களும் எவ்வியூர் திரும்பின. யாராலும் சிறுவர்களைக் கண்டறிய முடியவில்லை.
என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுதுதான், தேக்கனின் மூத்தமகன் ஊர்திரும்பவில்லை என்ற இன்னோர் உண்மை தெரியவந்தது. அவன் கீழ்த்திசை போன குழுவில் சென்றான். அப் பகுதியில்தான் ஏதோ ஆபத்து இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தோம். அனைவரும் அப்பகுதிக்குப் போகலாம் எனப் புறப்பட்ட பொழுதுதான் செம்மாஞ்சேரலின் படை புறப்பட்ட செய்தி வந்துசேர்ந்தது.
வேறு வழியில்லாமல் எங்கள் எல்லோரையும் போருக்கு அனுப்பிவைத்துவிட்டு, தேக்கன் மட்டும் சில வீரர்களோடு அத்திசை நோக்கிப் போனான். இரண்டு நாள்கள் தேடியிருக்கின்றனர். எதுவும் அறியமுடியவில்லை. குகைகள், பிளவுகள், பள்ளங்கள், பெருமரப் பொடவுகள், அடர்புதர்கள் என எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
நாளாக ஆக தேக்கனுக்கு நம்பிக்கை கூடத் தொடங்கியது. ஒருவேளை அவர்கள் இறந்திருப்பார்களேயானால் அந்த உடல்களைத் தின்னக் கழுகுகளும் இன்னபிற பறவைகளும் வட்டமிடத் தொடங்கியிருக்க வேண்டும். சிறுவர்கள் இருவரும் ஒரே நாளில்தான் தொலைந்துள்ளனர். எனவே இந்த மூன்று குன்றுகளைத் தாண்டி அவர்கள் போயிருக்க முடியாது. இப்பகுதியில் பறக்கும் பறவைகளைவைத்து நம்மால் எளிதில் கண்டறிந்துவிட முடியும். ஆனால், இங்கே ஊனுண்ணும் பறவை எதுவும் தென்படவில்லை. எனவே அவர்கள் இறக்கவில்லை; ஏதோ ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்ற முடிவுக்குப் போனான்.
என்ன ஆபத்து என்பதை ஊகிக்க முடியவில்லை. இம்மூன்று குன்றுகளில் பெரும்பாறைப் பிளவுகளோ, ஆற்றுப்பள்ளங்களோ எதுவுமில்லை. வேறெங்கு சிக்கியிருப்பார்கள் எனத் தெரியாமல் திகைத்தபொழுதுதான். நடுத்தரமான மரம் ஒன்றின் அடிவாரத்தில் மூவரும் கிடப்பதை வீரர்கள் பார்த்துள்ளனர். தொலைவில் அதனைப் பார்த்த வுடன் ஓசையெழுப்பி தேக்கனுக்குக் கூறியுள்ளனர்...”
கதையைச் சொல்லிக்கொண்டிருந்த வாரிக்கையன் வார்த்தைகளைத் தொடராமல் நிறுத்தினார். கேட்டுக்கொண்டிருந்த கபிலர் மூர்ச்சையானதுபோல் இருந்தார். “தேக்கன்தான் காடறிந்த பேராசான் என்பதைப் பறம்பே உணர்ந்த கணம் அதுதான்” என்றார்.
கபிலருக்கு விளங்கவில்லை.
சற்று மூச்சுவாங்கியபடி வாரிக்கையன் தொடர்ந்தார், “மகன்கள் மூவரும் ஒரு மர அடிவாரத்தில் கிடப்பதைப் பார்த்தவுடன் யாராக இருந்தாலும் ஓடிப்போய்த் தூக்கியிருப்போம். ஆனால், தொலைவிலிருந்து பார்த்த கணமே தேக்கன் கொடுத்த முதல் குரல், ‘யாரும் அருகில் போகாதே’ என்பதுதான். வீரர்கள் அப்படி அப்படியே நின்றுள்ளனர்.
தேக்கன் மிகத்தள்ளி நின்று அம்மரத்தையே பார்த்துள்ளான். காற்றில் சற்றே வீச்சம் ஏறியிருந்தது. அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை முடிவுசெய்துள்ளான். இறந்தவர்களின் உடலைக் காட்டுயிரினங்கள் பொழுதுக்குள் இல்லாமல் செய்துவிடும். ஆனால், இவ்வுடல்களை எதுவும் ஒன்றும் செய்யவில்லையே, ஏன்?
தந்தை என்பதை மறந்து மறுகணமே தேக்கனாய் நின்றுள்ளான். கண்ணீர் மேலேற இடந்தராமல் காரணங்களையே சிந்தித்துள்ளான். அதனையும் மீறிச் சில வீரர்கள் அருகிற்செல்ல முனைந்தபொழுது கடுங்கோபத்தோடு தடுத்துள்ளான். தேக்கன் மட்டுமன்று, எவ்வியூரில் இருக்கும் யாரும் நம்பமுடியாத உண்மை ஒன்று வெளிவரத் தொடங்கியது.
அங்கு நின்றிருந்தது ஆட்கொல்லி மரம். பலா இலைபோல விரிந்த இலையுடையது. அதன் முனைமுழுவதும் சுனைசுனையாய் இருக்கும். மெல்லிய முள்ளினைப் போன்ற அச்சுனை காற்றிலே உதிர்ந்து கொண்டே யிருக்கும். யாராவது அருகில்போனால் அச்சுனை உடலிலே படும். பட்டவுடன் அரிப்பெடுக்கும். நாம் கையை வைத்துத் தேய்ப்போம். தேய்த்தவுடன் அது உள்ளே போய்க் குருதியில் கலக்கும். அந்தச் சுனையின் நஞ்சு கொடுமையிலும் கொடுமையானது. கணநேரத்தில் மூர்ச்சையாகும்.
அதன் கிளையில் எந்தவொரு பறவையும் அமராது. தப்பித்தவறி ஏதாவதொரு பறவை அமர்ந்தால், அமர்ந்த கணமே செத்து விழுந்துவிடும். உற்றுப்பார்த்தால்தான் அதன் எலும்புகள் இலைகளுக்கு இடையே சிக்கியிருப்பது தெரியும். இக்கொடிய மரம் பறம்பில் எங்கெங்கு இருக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம். சிறுவயதிலிருந்தே அவ்விடத்தைச் சொல்லியே குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால், எங்கள் யாராலும் அறிய முடியாத உண்மை என்னவென்றால், எவ்வியூரின் மிக அருகில், இரண்டாம் குன்றில் ஆட்கொல்லிமரமொன்று இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதுதான்.

பறவைகள் எதுவும் இம்மரத்தில் தங்குவதில்லை என்பதால் இதன் விதைகள் எளிதில் பரவுவதில்லை. ஏற்கெனவே இருக்கும் மரத்தைச் சுற்றித்தான் மற்றொரு மரம் முளைக்கத் தொடங்கும். பறம்புமலையில் எட்டு இடங்களில் ஆட்கொல்லி மரங்கள் உண்டு. ஆனால், எவ்விதத் தொடர்புமில்லாமல் தனித்த மரமொன்று இவ்விடம் எப்படி முளைத்தது என்பது இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை. அதன் ஒற்றை விதை இவ்விடம் எப்படி வந்துசேர்ந்தது என்பது பெரும் வினா. நீரோட்டப்பாதையல்ல இது. எனவே நீர் அடித்துவந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு விலங்கோ பறவையோ அதன் கனியை உண்ணக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால்தான் அதன் விதை இவ்விடம் வந்திருக்க வேண்டும். இவையெல்லாம் தேக்கன் தொடர்ந்து எங்களிடம் சொல்லியது. அவன் மரணத்தின் துயரை மரத்தை வெல்லும் அறிவாக மாற்ற முயன்றுகொண்டிருந்தான்.”
வாரிக்கையன் இறுதிப்பகுதியை ஏன் வேகவேகமாகச் சொன்னார் என்பது கபிலருக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. பாட்டாப்பிறை நோக்கி தேக்கன் வந்துகொண்டிருந்தார். இயல்பாய் ஏதோவொன்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருப் பதைப்போலக் காட்டிக் கொள்ள, பெரியவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தனர். வேகமாக வந்த தேக்கன் பாட்டாப்பிறையில் ஏறி அமர்ந்தார்.
கலங்கிப்போயிருந்த கபிலர் அகத்தையும் முகத்தையும் மாற்றப் பெரிதும் முயன்றார். தேக்கனிடம் இதுவரை கேட்காத கேள்வியைக் கேட்டு, பேச்சினை வேறுபக்கம் கொண்டுசெல்ல வேண்டும் என்று தோன்றியது. அமைதி நீடிப்பதை விரும்பவில்லை. ஆனால், எதைக் கேட்பதென்று தெரியவில்லை. தேக்கனின் கால்களைப் பார்த்தார் கபிலர். எல்லா விரல்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன. ஏன் இந்த எண்ணம் தோன்றியது எனத் தன்னையே இகழ்ந்துகொண்டார். மற்றவர்களும் பேசாததால் அமைதி நீடித்தது.
நீண்டநாள் கேட்க நினைத்த கேள்வி ஒன்று சட்டென கபிலருக்கு நினைவுக்கு வந்தது. தேக்கனைப் பார்த்துக் கேட்டார், “பாரி முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தான் என்று பாணர்கள் சமதள மக்களிடம் பாடித் திரிகிறார்களே, அது உண்மையா?”
பாட்டாப்பிறையில் இருந்த யாருக்கும் இதுபற்றித் தெரியவில்லை. ஒரு பெரியவர் மட்டும் சொன்னார், “அவன் கொல்லிக்காட்டு விதையவே கொடுத்தவனப்பா. தேரெல்லாம் ஒரு பொருட்டா?” என்று மட்டும் எதிர்க்கேள்வி கேட்டார். ஆனால், கபிலர் கேட்டதற்கான பதில் வரவில்லை.

தேக்கனுக்கு இதென்ன கேள்வி என்று பட்டது. `படர வழியின்றி ஒரு கொடி இருந்தால், அதற்கு வழியமைக்கும் வேலையை எல்லோரும்தானே செய்வார்கள். இதனைப் பெரியதாய் பாணர்கள் பாடுவதற்கு என்ன இருக்கிறது?’ என நினைத்தார்.
‘சரி பாரியிடமே கேட்டுவிடுவோம்’ என்று கபிலரை அழைத்துக்கொண்டு வேகவேகமாக மேல்மாடத்துக்கு வந்தார் தேக்கன். வேகத்துக்குக் காரணம், தவழுங்கொடி மட்டுமன்று, தளும்பும் குவளையும்தான். அங்கே காலம்பனும் பாரியும் இருந்தனர். கபிலரின் வருகைக்காக, தொடங்காமல் காத்திருந்தனர். நுழைந்ததும் கபிலர் சொன்னார், “குவளையை ஏந்தும்முன் எனக்கொரு விடை தெரியவேண்டும்!”
கபிலரிடமிருந்து அவ்வளவு அவசரமாக முன்வரும் கேள்வியை எதிர்கொள்ளும் ஆவல் பாரியின் முகத்திலே தெரிந்தது.
கபிலர் கேட்டார், “நீ முல்லைக்கொடிக்குத் தேரைக் கொடுத்தாய் என்று பாணர்கள் பாடுகிறார்களே, அது உண்மையா?”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...