அலசல்
Published:Updated:

ஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது?

ஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது?

சட்டமும் வழக்கும் என்ன சொல்கிறது?

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடக்க இருந்த ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு  ஆரம்பப் புள்ளியே வருமானவரித் துறை நடத்திய அதிரடி ரெய்டுகள்தான்.

வெட்ட வெளிச்சம்!

சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதை வாக்காளர்களுக்கு அளிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்ததாக அந்த ஆவணம் மூலம் தெரியவந்தது. இந்த ஆவணங்களைக் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி, தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித் துறை அனுப்பி வைத்தது. இதன் அடிப்படையில்தான் வாக்குப்பதிவுக்கு முன்பு தேர்தல் ரத்தானது. தேர்தல் வரலாற்றிலேயே தமிழகத்தில்தான் இரண்டாவது முறையாகப் பணப் பட்டுவாடா புகாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. (இதற்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்தானது.)

ஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது?

நடவடிக்கை இல்லை!

ஜனநாயகத்தை நிர்ணயிக்கும் வாக்குகளை விலை கொடுத்து வாங்கக் கூடிய கேலிக்கூத்து, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தொடர்கிறது. பணப் பட்டுவாடா புகார்கள் எழும்போதெல்லாம், ‘ஆதாரங்கள் கிடைக்காமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது’ எனத் தேர்தல் ஆணையம் கூறி வந்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

தேர்தல் ஆணையம் வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தபோது, “வருமானவரித் துறை ஆவணங்களின் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, பி.தங்கமணி ஆகியோர் மற்றும் வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி தினகரன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஏப்ரல் 21-ம் தேதி புகார் அளித்தார்” என்றனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, 171 B (bribing voters) என்ற பிரிவின் கீழ்  எப்.ஐ.ஆர்  பதிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்கொண்டு போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டப் பிரிவு என்ன சொல்கிறது?

இந்திய தண்டனைச் சட்டம் 171B (வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல்) என்ற பிரிவின்கீழ் ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால்,  அந்த வழக்கை நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். ஏனெனில் இது  Non Cognizable offences ஆக கருதப்படுகிறது. நீதிமன்றத்தின் வாரன்ட் இல்லாமல் ஒருவரைக் கைதும் செய்ய முடியாது. 

இதனால்தான், தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள் வரும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தச் சூழலில்தான், இந்தப் பிரிவை  Cognizable Offence-ன் கீழ் கொண்டு வர வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மத்திய அரசிடம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில்  CrPC (Amendment) Bill, 2012  என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. 

கடந்த ஜனவரி மாத நிலவரப்படி அசாம், குஜராத், அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்கள் ‘இந்தச் சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும்’ என்று சொல்லியிருக்கின்றன. ‘இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் ஜைதி வலியுறுத்தியிருந்தார். அப்படி சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஆர்.கே.நகர் தேர்தல் போல முறைகேடுகள் செய்யும் அரசியல்வாதிகள்மீது Cognizable Offence ஆக வழக்குப் பதிவு செய்ய முடியும்.  அப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த உடன், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே அவரைக் கைது செய்ய முடியும்.

நடவடிக்கை கோரி வழக்கு

பணப் பட்டுவாடா புகார் என்ன ஆனது? என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் பெற்ற வழக்கறிஞர் வைரக்கண்ணனிடம் கேட்டோம். “வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘எப்.ஐ.ஆர் போட வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன் பின்னர்தான் போலீஸார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கு நடந்த நீதிமன்றத்தில், இப்போது நீதிபதி பதவி காலியாக உள்ளது. எனவே, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் கொடுத்திருக்கிறேன். விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என நம்புகிறேன். குற்றம் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் அபிராமபுரம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். இது குறித்தும் வழக்கு விசாரணையின்போது முறையிட உள்ளேன்.” என்றார்.

முறையான விசாரணை இல்லை...

இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் பேசினோம். “இந்த விஷயத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்படி விசாரணை நடந்தால், நீதிமன்றத்தில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேர்தல் ஆணையம் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும். அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை கிடைக்கும். இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடப்பதாகத் தெரியவில்லை” என்றார். 

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, “இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கின்றன. அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆனால், 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸார் எப்.ஐ.ஆர் போட்டியிருக்கின்றனர். எந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவாகி இருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிய தண்டனை கிடைக்கும். ஆனால், இதில் போலீஸார் நடவடிக்கை எடுப்பது போலத் தெரியவில்லை” என்றார்.

ஆர்.கே.நகர்... 89 கோடிக்கு தண்டனை எப்போது?

‘ஊழல் தடுப்புச் சட்டத்தில் தண்டிக்கலாம்’

சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனிடம் பேசினோம். “லஞ்சம் (bribing) என்ற வார்த்தை வந்தாலே ஊழல் தடுப்புச்  சட்டத்தின்கீழ் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வழி இருக்கிறது.  வாக்காளர்களுக்கு ஒரு கட்சியின் வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்த கட்சியின் தரப்பிலோ பணம் கொடுத்தால், அதை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு வழக்காகப் பதிவு செய்யலாம். தேர்தலின் போது ஒரு வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்தாலே அவர் எம்.எல்.ஏ ஆகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுபவர் ஆகி விடுகிறார். எனவே, அவர் பொது ஊழியர் என்ற பிரிவில் வருகிறார். எனவேதான் ஊழல் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறேன்.

ஜனநாயகத்தில்  பணம் கொடுத்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலைமை இருக்கிறது. நரசிம்மராவ் ஆட்சியின் போது, அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது எம்.பி-யாக இருந்த சிபுசோரன் பணம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. ஆனால், பின்னர் இது நிரூபிக்கப்படவில்லை. Non Cognizable offences என்றால் நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்யமுடியாது. Cognizable offences என்றால், போலீஸ் அதிகாரிகள் தாமாகவே வழக்குப் பதிவு செய்யலாம். இதற்குத் தகுந்தாற்போல சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம். ஆனால், பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதுபோல,   இந்தப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.  இந்தப் பிரிவின் கீழ் தேர்தல் முறைகேடு கொண்டு வரப்பட்டு, ஒருவர்மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்த அரசியல்வாதிக்கு மூன்று வருடங்கள் தண்டனை கொடுக்க முடியும்” என்றார். 

எப்.ஐ.ஆர் போட்டதிலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களைச் சேர்க்கவில்லை எனச் சர்சை எழும்பி யிருக்கும் நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், இடைத் தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்.  ‘பணப் பட்டுவாடா வழக்கில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களைச் சேர்த்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும்வரை தேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது’ என  மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

86 கோடி பணம் சம்பந்தமாக உரியவர்களிடம் வருமானவரித் துறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான கணக்கை அவர்களால் சொல்ல முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கறுப்புப் பணத்தால் வெற்றி பெற இருந்தவர்களுக்குத்  தண்டனை எப்போது?

- கே.பாலசுப்பிரமணி